கறவை மாடுகளின் நலன் (welfare) தொடர்பான அவதானிப்புகள்: இலங்கை நிலைப்பாடு
Arts
10 நிமிட வாசிப்பு

கறவை மாடுகளின் நலன் (welfare) தொடர்பான அவதானிப்புகள்: இலங்கை நிலைப்பாடு

October 21, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின்  நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் உள்ளதோடு இன்னும் இந்தச் சட்டத்தின் படிதான் விலங்கு நலன் மற்றும் அவற்றின் மீறல் தொடர்பான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது மிகப் பெரும் விலங்கு உரிமை மீறல் தொடர்பாக 100/- ரூபா வரையான தண்டப் பணமே அறவிடப்படுகிறது. அரச கால்நடை வைத்தியராக அடிக்கடி ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு விலங்குகளின்  பயணம்  தொடர்பாக அனுமதி வழங்கும் அதேவேளை, அவை தொடர்பான மீறல் வழக்குகளில் சாட்சியாளராகவும் இருப்பதால், மிகப்பெரிய விலங்கு நலன் மீறல்களின் போதும் வெறும் 100 ரூபாய் தண்டத்துடன் பலர் தப்புவதைக் கண்டிருக்கிறேன்.

நவீன விலங்கு நலன் தொடர்பான எண்ணக்கருக்களுடன் உருவாகியுள்ள  புதிய  விலங்கு நலச் சட்டம் நீண்ட காலமாக சமர்ப்பிக்கப்படாத நிலையே உள்ளது. இதன் உள்ளடக்கத்தில் விலங்குகளை சரியாகக் கவனிக்காமல் புறக்கணித்தல், பொருத்தமற்ற விலங்கு வீடுகள், உணவு – தண்ணீர் போன்ற அடிப்படை நலன்களை புறக்கணிக்கின்றமைக்கு வழங்கப்படும் கடும் தண்டனைகளோடு விலங்குகளின் பிரயாணம், இறைச்சிக்கு கொல்லுதல், சிகிச்சையளித்தல், வேலைக்குப் பாவித்தல், இராட்சத கறவை மாட்டுப் பண்ணைகள், விலங்கு விற்பனை போன்றவற்றை நெறிப்படுத்தும் விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. மாடுகள் போன்ற பண்ணை விலங்குகள் மாத்திரமன்றி செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள், வளர்ப்பு யானைகள் போன்ற விலங்குகள் தொடர்பாகவும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்படும் போது இலட்சக் கணக்கில் தண்டம் மற்றும் சிறைத் தண்டனைகளும் வழங்கப்படும் வகையில்தான் இந்த திருத்தச் சட்டம் உள்ளது. இது நடைமுறைக்கு வரும் போது இலங்கையில் விலங்கு நலன் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படலாம்.

livestock

கறவை மாடுகளின் நலன் என்பதை, கறவை மாடுகள் தமது உடற் தொழிலியல், மனநலம் மற்றும் இயல்புகளை சரியாக தாம் வாழும் சூழலில் சுதந்திரமாக வெளிப்படுத்துதல் எனக் கூறலாம். இது முறையான இருப்பிடம், உணவு ஊட்டம், நோய்க் காப்பு/ மருத்துவ வசதிகள், இயல்புகளை சரிவர வெளிப்படுத்துதல் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.

கறவை மாடுகளில் விலங்குநலன் தொடர்பான கூறுகள்

1. இருப்பிடம் தொடர்பான விடயங்கள் (Housing)

சுத்தமான மற்றும் போதிய இடைவெளியுடனான இருப்பிடம் அவசியமாகிறது. மாடுகள் படுத்திருக்கும் நிலம் சிதைவடையாததாகவும் வழுக்கி விழாத வகையிலும் அமைய வேண்டும் (முறையற்ற நிலத்தால் காயமடைதல் மற்றும் நொண்டும் நிலை தோன்றும்). கீழ் நிலம் சீராக இருப்பதோடு உமி, வைக்கோல், இறப்பர் மெத்தைகள் போன்றவற்றால் நிரப்பப்பட்டிருந்தால் கால்நடைகள் பாதிப்படைவது தடுக்கப்படும். மேலும் மழை, வெய்யில், குளிர் பாதிக்காத வகையில் இருப்பிடம் மேலே மறைக்கப்பட்டதாக அமைய வேண்டும். அவை உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக நடமாடவும் தமது இயல்புகளை எந்தவித இடையூறும் இன்றியும் வெளிப்படுத்தும் வகையிலும்  அமைய வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் வடக்கு இலங்கையில் ஏற்பட்ட குளிருடனான மழைச் சூழலில்  எந்தவித மறைப்பும் இல்லாத திறந்த வெளியில் கட்டப்பட்ட பல கால்நடைகள் குளிர் அழுத்தம் (Cold shock) காரணமாக இறந்திருந்தன. மேலும் வருடாந்தம் பல கால்நடைகள் வெப்ப அயர்ச்சி (Heat stroke) காரணமாக இறப்பதுடன் சினைப்படுதல் தாமதமடைதல் மற்றும்  கருச்சிதைவுக்கும் உள்ளாகின்றன.

சுகாதாரமற்ற இருப்பிடம் மற்றும் சூழல் பல தொற்று நோய்கள் மற்றும் இலையான், நுளம்பு போன்றவற்றின் பெருக்கத்துக்கு காரணமாக அமைகிறது. காற்றோட்டமற்ற இருப்பிடங்கள் சுவாச நோய்த் தொற்றுக்கு காரணமாக அமைகிறது. மிக நெரிசலாக கால்நடைகளை வைத்திருப்பது இலகுவாக நோய்கள் தொற்ற ஏதுவாக அமைவதுடன் அவற்றின் மன அழுத்தம் (stress) அதிகரிக்க வாய்ப்பையும் தருகிறது.

2. உணவூட்டல் தொடர்பான விடயங்கள் (Feeding)

மாடுகளுக்கு புரதம், மாப்பொருள், கொழுப்பு, விற்றமின், கனியுப்புகளுடன் கூடிய சமச்சீரான உணவு (Balanced diet) போதியளவு வழங்கப்பட வேண்டும். குடிநீர் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். இலங்கையில் மாடுகளுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வைக்கப்படுவது மிக மிகக் குறைவே. வறட்சியான காலத்தில் அவை உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவற்றின் உடற் தொழிற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் பல அசௌகரியங்களுக்கும் உள்ளாகின்றன. பருவ மழை பெய்யும் மற்றும் நெற்பயிர் செய்யும் காலத்தில் மேய்ச்சலின்றி பல கறவை மாடுகள் பாதிக்கப்படுவதுடன் அவற்றின் உடல் நிலைச் சுட்டெண் (BCS – Body Condition Score) குறைவடைகிறது. இதனால் பல நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகும் தன்மையும் தோன்றுகிறது.

feeding

3. கால்நடைச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு வசதிகள்

சில முக்கிய நோய்கள் வராமலிருக்க உயிர்ப்பாதுகாப்பு முறைகள் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் அவசியமாகின்றன. இவற்றை முறையாகச் செய்யாத பண்ணையாளர்கள் அவர்கள் வளர்க்கும் கறவை மாடுகளின் உரிமையை மீறுகின்றனர். பலர் நோய்ப்பட்ட கால்நடைகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதில்லை. குடற்புழு நீக்க மருந்துகள் வழங்குவதில்லை. தடுப்பூசி வழங்க அனுமதிப்பதில்லை. வருமானத்தை மாத்திரம் பெறுவதோடு சிகிச்சைகள், மருந்துகள் கிடைக்க வழி செய்வதில்லை.

treatment

4. வேதனை தரக்கூடிய நடைமுறைகள் (Painful Procedures)

கொம்பு நீக்கம், குறிசுடல், நலம் தட்டுதல் போன்ற வேதனை தரத்தக்க நடைமுறைகளில் விலங்குகளின் நலன் பேணப்படுவதில்லை. வேதனையைத் குறைக்கும் நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. இறைச்சிக்கு கொண்டு செல்லும் கால்நடைகளின் உடல், உள நலன்கள் பெரியளவில் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. நீண்ட தூரம் நடக்க வைக்கப்படுகின்றன. வாகனங்களில் அதிக நெருக்கடியில் அவை கொண்டு செல்லப்படுகின்றன. கொண்டு செல்லும் வாகனங்களில் தண்ணீரோ உணவோ இருப்பதில்லை. அவை படுத்திருக்கும் பகுதிகளில் வைக்கோல், உமி போன்ற பொருட்கள் இருப்பதில்லை. அவை அதனால் காயமுறுகின்றன. முறையற்ற விதத்தில் வேதனை தரத்தக்க விதத்தில் அவை பழைய முறையில் கொல்லப்படுகின்றன. இறந்த விலங்குகள், கொல்லப்படும் முறைகள் ஏனைய கால்நடைகள் பார்க்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

5. இயல்புகளை வெளிப்படுத்தும் தன்மைகள்

கறவை மாடுகள் சமூக விலங்குகள் (Social Animals). ஏனைய விலங்குகளுடன் தொடர்பைப் பேண விரும்புபவை. அதற்கு சரியான இடைவெளி அவசியம். ஏனைய விலங்குகளுடன் சுதந்திரமாக படுத்திருக்க வழி ஏற்படுத்த வகை செய்யப்படுவதுடன் தாய்ப் பசு கன்றுடன் உணர்வுகளைப் பரிமாறும் வகையிலும் இடவசதி இருக்க வேண்டும். நவீன கறவை மாடு வளர்ப்பில், குறிப்பாக மேலை நாடுகளில் (இலங்கையில் அம்பேவல போன்ற நவீன பண்ணைகளில்) கன்று பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரிக்கும் நடைமுறையும், ஆண் கன்றுகள் பிறந்ததும் இறைச்சிக்குக் கொல்லப்படுவதும் நடைமுறையில் இருப்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

பல இடங்களில் ஒரு மாடு இன்னொரு மாட்டுடன் பிணைத்து விடப்படுகின்றது. மாடுகள் தொடர்ச்சியாகக் கட்டி வைக்கப்படுகின்றன. நெருக்கமாக அடைத்து வைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாடுகளின் இயல்பான நடத்தைகள் வெளிப்படுவதைத் தடுக்கின்றன.

6. அதிகரித்த கால்நடைகள்

இலங்கையின் சமய, கலாசார நிலை காரணமாக மாடுகள் பரந்தளவில் இறைச்சிக்கு வெட்டப்படுவதில்லை. இது அதிகரித்த மாடுகளின் எண்ணிக்கைக்கு காரணமாக அமைகிறது. அதிகரித்த மாடுகளின் எண்ணிக்கை உணவு மற்றும் இருப்பிடப் போட்டியை ஏற்படுத்துகிறது. இது ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுக்கு காரணமாக அமைகிறது. பல விலங்குகளின் நோய் நிலை கவனிக்கப்படாது, சிகிச்சை கிடைக்காமல் கைவிடப்படுகின்றன. உற்பத்தியற்ற விலங்குகள் பெருகுவதால் செலவும் அதிகம் ஏற்படுகிறது. இவை வீதியில் விடப்படுவதால் விபத்துகளில் சிக்குகின்றன. இதனால் மனித மற்றும் விலங்குகளின் விபத்துகள் அதிகரிக்கின்றன. பல விலங்குகள் விபத்துகளினால் அங்கவீனமடைகின்றன.

7. பால் கறத்தல் மற்றும் பாலுற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள்

தவறான பால் கறக்கும் முறைகளால் முலைச் சுரப்பி பாதிக்கப்படுகின்றது. இதனால் பாலுற்பத்தி குறைவதோடு மாடுகள் வேதனைக்கும் உள்ளாகின்றன. சுத்தமின்மையால் மடியழற்சி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. மாடுகளின் கறவையை நிறுத்தி, அடுத்த சினைப்பருவம் மற்றும் பால் உற்பத்திச் சக்கரத்துக்குள் நுழைய முன், முலைச் சுரப்பிக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். இதனை பால் வற்றுக் காலம் என்பர். இந்த நடைமுறையை பல பண்ணையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் மாடுகளின் உற்பத்தி குறைவதோடு முலைச் சுரப்பிகளும் பாதிப்படைகின்றன. கறவை மாடுகளை பால் கறக்கும் இயந்திரமாக மட்டும் பார்க்காமல், அவற்றைச் சக உயிரியாகச் சிந்திக்கும் நிலை வந்தால்தான் இதற்கு தீர்வு வரும். குறித்தளவு பண்ணைகளில் பால் உற்பத்தியை தூண்டும் ஓமோனான ‘ஒக்சிடோசின்’ தொடர்ச்சியாகப் பாவிக்கப்படுகிறது. இது மாடுகளின் உடற் தொழிற்பாட்டை கடுமையாகப் பாதிப்பதோடு சினைப்படுதலில் சிக்கலையும் தோற்றுவிக்கிறது.

milking

8. களவு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள்

இலங்கையில் அண்மைக் காலத்தில் மாடுகளைக் கடத்தல், களவாடல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடத்தப்படும் மாடுகள் இறைச்சிக்கு அறுக்கப்படுகின்றன. கன்றுகள், பெரிய மாடுகள் என்று பாராமல் களவுச் செயற்பாடும் அறுவையும் இடம்பெறுகிறது. இந்த மாதிரியான செயற்பாடுகளைத் தடுக்க, இறுக்கமான சட்ட நடவடிக்கையும் தண்டனையும் அவசியமாகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் மாடுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் ‘சென்சார்கள்’ மற்றும் இரசாயன குறிகாட்டிகள் மூலம் அறியப்பட்டு அவற்றின் நலன் பேணப்படுகிறது. சென்சார்கள் மூலம் களவெடுத்தல்  போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க முடியும்.

மாடு வளர்ப்பின் போது இலாபத்தை மட்டும் பார்க்காமல் அவற்றை சக உயிர்களாக மதிக்க வேண்டும். விலங்கு நலனுக்குரிய, காலத்துக்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதோடு தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். அதேவேளை, உருவாக்கப்படும் சட்டங்கள் கால்நடை வளர்ப்பின் அடிப்படைகளை பாதிக்காத வகையிலும் அமைய வேண்டும்.


ஒலிவடிவில் கேட்க

2756 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)