மரபுரிமை பற்றிய பாரம்பரிய உரையாடல்கள் மரபுரிமைகளை இயற்கை மரபுரிமை, பண்பாட்டு மரபுரிமை என்று பாகம்பிரித்துக் கொள்ளும். ஆனால் அண்மைய பத்தாண்டுகளில் மரபுரிமை பற்றிய கற்கைப்புலம் பெருவிரிவு கண்டுள்ளதுடன் உள்ளடக்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அது மேலும் செழுமை பெற்றுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு மரபுரிமைப் புலத்தின் சாத்திய எல்லைகளை அகலித்துவிட்டுள்ளது. அவ்வகையில் உருவான புதிய சாத்தியமும், பாகமுமாக எண்மிய மரபுரிமை (digital heritage) அமைகிறது. எண்மிய மரபுரிமை என்பது பண்பாட்டு மரபுரிமை மற்றும் இயற்கை மரபுரிமையை புரிந்துகொள்ளல், பாதுகாத்தலில் எண்மியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மூலமாக உருவாக்கப்படும் மரபுரிமையாகும். சிலபோதிலது எண்மிய பண்பாட்டு மரபுரிமை (digital cultural heritage), எண்மிய இயற்கை மரபுரிமை (digital natural heritage) எனவும் இரண்டாகப் பிரித்து நோக்கப்படுவதுமுண்டு. “இது பண்பாடு, கல்வி, அறிவியல் மற்றும் நிர்வாக வளங்கள் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் மற்றும் பிற வகையான தகவல்களை எண்மிய முறையில் உருவாக்குகிறது அல்லது எண்மிய வடிவத்தில் இருக்கும் தொடர் மின்னணு (Analogy/ analog) ஆதாரங்களாக மாற்றுகிறது” என யுனெஸ்கோ எண்மியத் தொழில்நுட்பம் பற்றிப் பேசுகிறது.
எண்மியமாக்கல் (digitations) மூலமாக பார்த்தல் – தொடுதல் ஆகிய பண்புகளுடைய பௌதீக மரபுரிமை மற்றும் தொட்டுணரமுடியா மரபுரிமைகள், அவற்றிலிருந்து வேறுபட்ட புதிய யதார்த்தத்தினை நோக்கிப் பெயர்க்கப்படுகின்றன. இதனை ‘மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality) என்பார்கள். அவ்வகையில் ‘மெய்நிகர் யதார்த்தம்’ என்பது முற்றிலும் எண்மியம் (digital) மற்றும் கணினியால் (computer) உருவாக்கப்பட்ட, முப்பரிமாண அனுபவச் சூழலாகும். அது உருவாக்கும் சூழலின் ‘மெய்மைத்தன்மையானது’, மெய்மைக்கு எவ்வளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மேலும் உட்பிரிவுகளுடையதாகும். மேற்படி ‘மெய்நிகர் யதார்த்தப்’ பின்னணியில் ‘மெய்நிகர் மரபுரிமை’ (virtual heritage) என்ற பதப் பிரயோகமும் எண்மிய மரபுரிமை என்பதையொட்டிப் பிரயோகிக்கப்படுகிறது. மரபுரிமையை மெய்நிகராக்குவது என்பது மரபுரிமையை எண்மிய முறையில் உருவகப்படுத்துவது மற்றும் கணினி வரைகலைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. ‘மெய்நிகர் யதார்த்த’ படிமவாக்கத் (Virtual reality (VR) imaging) தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி பண்பாட்டுச் சான்றுகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், மீள் உருவாக்குதல், பிரதிநிதித்துவஞ் செய்தல், எண்மிய மறு செயலாக்கம் செய்தல் மற்றும் அவற்றைக் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை எளிதாக்குவது மெய்நிகர் மரபுரிமையின் செயல்பாடுகள் ஆகும் என ரூசோ கூறுகிறார்.
அவ்வகையில் நிலவுருக்கள், அகழ்வாய்வுப் புலங்கள், இடங்கள், நினைவுருக்கள், கலைவெளிப்பாடுகள், சுவடிகள் மற்றும் மூலச்சுவடிகள் முதலிய பலவற்றையும் எண்மியத் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாத்து பிரதிநிதித்துவப்படுத்தி அடுத்துவரும் தலைமுறைகளிடம் கையளிக்கும் செயற்பாட்டை எண்மியச் செயற்பாடுகள் புரிகின்றன. அதுமட்டுமின்றி காலம் – இடம் சார்ந்த அனைத்து வரையறைகளைக் கடப்பதன் மூலமாக அவை எல்லை கடந்த அல்லது தேசங்கடந்த பரிமாணத்தை எடுக்கின்றன. அவற்றைக் காண்பதற்கான அல்லது நுகர்வதற்கான எல்லைகளை அவை அகலித்துவிடுகின்றன.
அதேசமயம் எண்மிய மரபுரிமைச் செயற்பாடு கல்வியூட்டலுக்கான ஒரு வழிமுறையாக பல்வேறு துறைசார் ஒழுக்கங்களால் இன்று பயன்படுத்தப்படுகிறது. நிக்கோனவாவும், புறுகோவாவும் படிமம் (image) என்பதைத் தாண்டி எண்மியம் உருவாக்கும் காட்சியனுபவம் முன்னெப்போதையும் விடப் பல வகையில் முன்னேற்றகரமானது என்பார்கள். கைபேசி தொடக்கம் அருங்காட்சியகம் வரை எண்மிய மரபுரிமை பூச்சியவெளி (cyber space) அமர்ந்து பயணஞ் செய்கிறது. மெய்நிகர் அரும்பொருளகம் (Virtual Museum), மெய்நிகர் காட்சிக்கூடங்கள் (Virtual galleries) முதலான புதியவகை அருங்காட்சியகங்களை, கலைக்கூடங்களை அவை தாபிக்கின்றன.
விண்வெளி அகழ்வாய்வுத் தொழில்நுட்பம் (Space archaeological technology), ஆளில்லா வான்வழி வாகனம் (Unmanned aerial vehicles) ஊடு கதிர்வீச்சு (Laser Scanning), மெய்நிகர் யதார்த்த மற்றும் அதிகபட்ச யதார்த்தத் தொழில்நுட்பம் (Virtual and Augmented Reality), முப்பரிமாண மாதிரியுரு (3D Modeling), புவியியல் தகவல் முறைமை (Geographic Information systems) முதலான பலவேறுபட்ட தொழில்நுட்பங்கள் எண்மியவாக்கப் படிமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் மரபுரிமைப் பயில்களமானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு செயற்பாட்டுப் புலங்களில் எண்மியவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில இலக்குகளை நோக்கி முன்னேறியுள்ளமை முக்கியமானது. இந்தவகையில் ஈழத் தமிழர்களால் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனத்தின் பங்கு இச் செயற்பாட்டுக் களத்தில் முக்கியமானது. 1981 இல் எரித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் பின்னணியில் ‘எரிக்க முடியாத நூலகத்தை கட்டுதல்’ என்ற எண்ணப் பிரகாரம் அது எண்மியப் பரப்பில் விரிந்துள்ள நூல்வெளி இவ்வகையில் முக்கியமானது. குறிப்பாக அது திறந்துவிட்டுள்ள (சன) திரள் மூலங்களுடாக (crowd sourcing) சுவடிகளைத் திரட்டல் என்ற கூட்டுச் செயற்பாட்டு தொழிலாற்று மாதிரி முக்கியமானது. இந்த வகையான மாதிரிகளை ஈழத்தமிழர்கள் வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால் முக்கியமானது அதில் தொழில்முறைத் தன்மை பேணப்படவேண்டும். ஈழத்தமிழர்களிடம் விரவியுள்ள தொழிலின்மைசாரா (amateurism) பண்புகளோடு தொழிற்படக்கூடாது. ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்’ என்ற முரட்டுத்தனமும், தலைக்கனமும் எம்மை எங்கும் கொண்டு சேர்க்காது.
பண்பாட்டுப் படுகொலைகளை (cultural genocide) தொடர்ச்சியாக சந்திக்கின்ற, அதிலும் குறிப்பாக சுய பண்பாட்டுப் படுகொலைகளை (self cultural genocide) தமக்குத் தாமே நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகமான தமிழர்கள், இன்னும் சரியான அர்த்தத்தில் அரசியற் தலைவர்களற்ற, புலமையாளர்கள், சமய பண்பாட்டுத் தலைமைகள் வறுமையுற்ற சமூகத்தில் அவர்கள் இழந்துகொண்டிருக்கும் மிக முக்கியமான வரலாற்றுப் பண்பாட்டு ஆதாரமும், முதலீடுமான மரபுரிமையின் அனைத்துக் களங்கள் மீதும் எண்மியச் செயற்பாடு தேவைப்படுகிறது. வாக்குச் சீட்டு அரசியல்வாதிகள், நோயுற்ற கல்வி – புலமைக் களங்கள், சமய அடிப்படைவாதிகளை வழிபடாத சமூக செயற்பாட்டாளர்களின் தலைமுறை ஒன்று பேரேழுச்சி பெறவேண்டும். அவர்கள் இத்தகைய திரள் மூலவர்களாக (crowd sources) செயற்பட்டு மரபுரிமையை எண்மியப்படுத்துஞ் செயற்பாட்டில் தொழில்முறைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். இதனை கலாசார உத்தியோகத்தர்களுடாகச் செய்யலாம் என்ற ஆலோசனை சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே தரப்பட்டாலும் அரச உத்தியோகத்தில் உயரக்கதிரைகளில் அமர்ந்திருக்கும் எம்மில் பலர் மற்றவர்கள் சொல்வதைக் செவிமடுப்பது என்பது எமது பதவியின் தகுதிக்கு இழுக்கானது எனக் கருதுவதால் நேரடியாக அல்லது தந்திரமாக அத்தகைய ஆலோசனைகளை உதாசீனஞ் செய்தல் ஊடாக மரபுரிமைகளை பாதுகாக்காதுவிடும் பெரும்பணியில் ஈடுபடுகிறோம். தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற பண்பாட்டுப் படுகொலைகளுக்கு நிகரான பண்பாட்டுப் படுகொலையை தமிழ் சமூகமே செய்துகொண்டிருக்கிறது என்ற முரணை நாம் அறியாமலா இருக்கின்றோம்?
இந்தவகையில் சமூக பண்பாட்டு முக்கியத்துவமுடைய அனைத்து விடயங்களும் அவசரமாக எண்மியநிலைப்படுத்தப்படவேண்டும். பொதுக் கட்டடங்கள், சமயக்கட்டுமானங்கள், வீடுகள், நிலப்பரப்புக்கள், நீர்முனைகள், தாவரங்கள், பண்டிகைகள், சடங்குகள், பாவனைப் பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள் – வர்ணத் தீட்டல்கள், ஆற்றுகைகள், எழுத்துக்கள், அச்சிடப்பட்டவைகள், ஒளிப்படங்கள், வாழ்க்கைமுறை, ஆடைகள் – ஆபரணங்கள், போக்குவரத்து முறைகள் வாய்மொழி விடயங்கள், நினைவுச் சின்னங்கள், யுத்தச் சுவடுகள் என்பவற்றை ஒன்றும்விடாமல் எண்மியப்படுத்த வேண்டும். நேற்றிலிருந்து இன்றுவரை, இன்றிலிருந்து நாளைக்கும் எனத் தொடர்ந்து இது நிகழவேண்டும்.
எண்மிய ஆக்கமே இறுதி இலக்கு என்பதல்ல. எமது சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் கொண்டுள்ள மரபுரிமை சார்ந்த அசிரத்தையின் காரணமாக மீந்திருக்கும் சில மரபுரிமைகளது வாழ்க்கைக் காலமும் கேள்விக்குறியாகியுள்ள நேரத்தில் எண்மிய மரபுரிமைச் செயற்பாடு அவசரமும் அவசியமுமாகியுள்ளது. உண்மையான சமூக,பண்பாட்டு அக்கறையுள்ள மனிதர்கள் ஓரியக்கம்போல இந்தச் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும். இத்தகைய செயற்பாடுகளை பயன்படுத்தி எந்தவகையான அரசியலைச் செய்யலாம்? எப்படி மதக்கலவரங்களைத் தூண்டலாம் என நினையாத செயற்பாட்டளர்கள் எமக்கு வேண்டும். குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இரண்டாவது ‘மண் சுமந்தமேனியர்’ நாடகம் (1985) இயக்கச் சண்டைகளின் முதற்கால கட்ட அதிருப்தியை அடிப்படையாகக் கொண்டது. அந் நாடகத்தின் கருவிசையாக றிச்சேட் வாக்னரின் ‘மனிதர் எனும் ஓரினம் எழுந்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றட்டும்” என்ற கவிதை வரி திரும்பத் திரும்ப இடம்பெறும். இக்கட்டுரையை முடிக்கும் தறுவாயிலும் மனதில் அக்கவிதையே எழுந்து வருகிறது.
தொடரும்.