நாற்பது வருடங்களாகத் தான் சூழல் பாதுகாப்பு எனும் விவகாரம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நவ காலனித்துவப் பிரயோகத்துடன், விடுதலை பெற்ற தேசங்களில் தொடர்ந்து மேற்கொண்டு, எமது வளங்களைத் கபளீகரம் செய்வதனை முறியடிக்கும் வகையில் சுயசார்புப் பொருளாதாரம் முன்னெடுக்கப்படலாயிற்று. உலக மூலதன மேலாதிக்கம் வலுப்பெற்ற எண்பதாம் ஆண்டுகளில், நவ காலனித்துவத் தேசங்களால் திறந்த பொருளாதார முறைமை ஊடாகக் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் எமது பிராந்தியக் அபகரிப்புகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டியேற்பட்டது. முன்னதாக ஏகாதிபத்திய முகாமுக்குப் போட்டியாக சமத்துவ உலகம் படைக்கும் முனைப்புடன் சோவியத் யூனியன் இயங்கிய சூழலில் முன்னெடுக்கப்பட்ட எழுபதாம் ஆண்டுகளின் சுயசார்புப் பொருளாதாரம் வீறுடன் முன்னேற இயலுமாக இருந்தது. மீண்டும், சுயசார்பு மீளெழுச்சி பெற இயலாத வண்ணம் உலகமயமாதல் அறிமுகமாயிற்று. இறுதித் தசாப்தத்தில் சோவியத் யூனியன் தகர்ந்ததுடன் சோசலிச முகாமும் இல்லாமல் போனபோது கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் கண்கடையற்ற ‘அபிவிருத்திகளைத்’ திணித்து மேற்கொண்ட சுரண்டலின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைதல் உலகப் பிரச்சனையாகத் தீவிரம் பெறலாயிற்று; அதன் உக்கிரத்தை மட்டுப்படுத்திச் சீவராசிகள் வாழத்தக்க மண்டலமாக, தொடர்ந்து இந்தப் பூமியைப் பேணும் வகையில் சூழல் பாதுகாப்பை மேற்கொள்ளும் இயக்கங்கள் மேலெழுந்தன. மிக அதிக சுற்றாடல் மாசுபடுத்தலை ஏற்படுத்தும் அமெரிக்கா அதற்கான மாற்று நடவடிக்கைகளில் நாட்டம் செலுத்தாதது மட்டுமன்றி சர்வதேச நிறுவனங்கள் வாயிலாக உலகுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டையும் வழங்க மறுத்து வருகிறது.
இந்தக் காலப்பகுதியில் மக்கள் சீனமும் துரித விருத்திக்குரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்த காரணங்களால் அங்கும் சுற்றாடல் சிதைவுகள் வலுத்ததுண்டு. அவற்றைச் சுட்டிக் காட்டும் சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் குரலை மதித்து, உடனுக்குடன் சீர்செய்யும் பணிகள் சீனாவில் முன்னெடுக்கப்பட்டு, ஐ.நா வுக்குரிய சுற்றாடல் பாதுகாப்பு அமையத்தின் பாராட்டுதலையும் அந்த நாடு பெற்றுக்கொண்டுள்ளது; மட்டுமன்றி, சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்துக்கான தனது பங்கையும் மக்கள் சீனம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. முதலாளித்துவ அபகரிப்புக் கொள்கை நடைமுறை என்பவற்றில் இருந்து வேறுபட்ட வகையில் சோசலிசக் கட்டுமான விருத்திக்கு இருந்தாக வேண்டிய சமூகப் பொறுப்புணர்வை இந்த அம்சம் காட்டி நிற்கிறது!
இந்தப் பூவுலக இயக்கத்தினூடாக உருவாகி மடிந்த பல்லாயிரம் உயிரினங்களில் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர் பரிணமிப்பின் ஒரு வடிவமாகத் தோற்றம் பெற்ற மனிதக் கூட்டம் முந்திய ஒவ்வொரு படிமுறை விருத்தியிலும் உயிரிகள் வாழத் தகுதி பெறும் ஆற்றலில் பெற்று வந்த சாதக அம்சங்களை வளர்த்தெடுத்ததன் பேறாக அதியுச்ச வாய்ப்புகளை எட்டியிருந்தது; இயற்கை அனுமதித்த வரையறைக்குள் இயங்குவதைக் கடந்து அதனை மாற்றிச் சூழலைத் தனக்கு வாலாயமாக்கும் திறன் மனுக்குலத்துக்கு வாய்த்தது. அதன் உச்சப் பெறுமானமாகிய விஞ்ஞான – தொழில்நுட்ப விருத்தியின் அதியுன்னத வளர்ச்சியில் முதலாளித்துவ வாழ்நிலையை எட்டிய மனிதர் கூட்டம் இயற்கையை வென்றதான மமதையுடன் இயங்க முற்பட்ட போது அதன் எதிர்வினைக்கு இன்று முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. சோசலிச முன்னெடுப்பிலும் கூட மானுட மேன்மை குறித்து முன்னதாக நிறையப் பேசப்பட்டதுண்டு; இயற்கையின் சீற்றத்தைக் கற்றுக் கொண்டவுடன் முதலாளித்துவத்தின் லாப வெறி போல ஆவலாதிப் படாமல், இயற்கை விதிகளை அனுசரித்தவாறு வளவாழ்வு விருத்திகளைப் பெருக்கும் நடைமுறைகளுக்கு சோசலிச முன்னெடுப்பு இணக்கம் காட்டத் தயங்கவில்லை!
அவ்வக் காலங்களின் சூழமைவில் வாழ்வியல் தேவைகளை வெற்றி கொண்டு விருத்தி செய்ய ஏற்ற கோட்பாடுகளைப் புதிது புதிதாக உருவாக்கிப் பிரயோகித்துச் சாதித்ததன் வாயிலாகவே மனுக்குலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டடைய இயலுமாயிற்று. ஒரு இடத்துக்கு, குறித்தவொரு காலத்தில் பொருத்தப்பாடாக அமைந்த கோட்பாடு ஒன்று இன்னொரு காலத்தில், வேறொரு இடத்துக்கும் கூடப் பொருந்த வாய்ப்புண்டு; அதனைக் கையேற்றுத் தமக்கானதாகப் பிரயோகிக்க எவரும் பின்னடிப்பதில்லை. அதேவேளை, கால – தேசிய நிலவரப் பொருத்தப்பாட்டினைப் புரிந்து கொள்ளாத செயற்பாட்டில் கையாளப்படுவதிலுள்ள இடர்பாடுகளையும் மனங்கொண்டே இயங்குவர். எந்தவொரு கோட்பாடும் கால – தேச புறநிலையின் குறித்த நிலவரத்துக்குப் பொருத்தப்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாகக் கையாளப்படுகையிலேயே சாதனை நிகழ்த்த உதவத்தக்கதாக ஆகும்.
ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமையைத் தகர்த்து எல்லோரும் எல்லாமும் பெற ஏற்ற சமத்துவ நெறியை வெற்றிகொள்வதற்கு வழிகாட்டும் மார்க்சிசம் – லெனினிசம் – மா ஓ சேதுங் சிந்தனையைக் கையேற்று இயங்குகின்ற நாமும் நமக்கென்றோர் விருத்திக்கு உரிய கோட்பாடாக அதனை வளர்த்தெடுத்துள்ளோம். எமது சமூக அடித்தளம் வர்க்கப் பிளவடைந்து ஏற்பட்ட ஒன்றல்ல; சமத்துவ நெறியுடன் அமைந்த திணைகளை விவசாயப் பெருக்க வாய்ப்பின் பேறாக, மருதத் திணை மேலாதிக்கம் தகர்த்து, அதிகாரப் படிநிலைப் பிளவுக்கு உரியதாக மாற்றியதன் விளைவாக விருத்தி பெற்று வளர்ந்த இன்றைய வாழ்நிலை எட்டப்பட்டுள்ளது. ஆதிக்கம் பெற்ற திணை தன்னை மேலாதிக்கச் சாதியாகப் புனிதப்படுத்த உதவுகிற பிராமணருக்குக் காணி – நிலம் வழங்கித் தனக்கு இணையான அதிகாரத் தளத்தில் அமர்த்திக் கொண்டுள்ளது.
இத்தகைய சாதிய மேலாதிக்கக் கருத்தியலை முறியடித்தவாறு சமூக அதிகாரப் படிநிலைப் பேதங்களைத் தகர்க்க இயலுமாக உள்ள எமக்கான பிரத்தியேகத் தன்மை குறித்த புரிதலுடன் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்கு மா ஓ சேதுங் சிந்தனை வழிகாட்டியுள்ளது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குரிய கோட்பாடான மார்க்சியத்தை அதனுடன் இணைத்து விடுதலைத் தேசியப் புரட்சிக்கான சுயநிர்ணயக் கோட்டாக விருந்து செய்து வளர்த்தெடுத்துப் பிரயோகித்த லெனினிசம் வந்தமையவில்லையெனில், சமூக மாற்றச் செல்நெறி பயனற்றுக் காய்ந்து உறைநிலை அடைந்திருக்கும். தேசிய விடுதலையைச் சோசலிசம் நோக்கி முன்னெடுப்பதே ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் குறிக்கோளை முழுநிறைவாக வென்றெடுப்பதாக அமையும் என்பதற்கு அமைவாக சீனப் புரட்சியை வழிநடாத்திய மா ஓ சேதுங் சிந்தனை கைவரப்பெறவில்லை எனில், இன்றைய சகாப்தத்துக்கான மார்க்சிஸ – லெனினிஸமும் பயனற்ற உறங்கு நிலைக்கு ஆளாகி இருக்கும். மா ஓ சேதுங் சிந்தனை வழிக்காட்டலுடன் இயங்கி வந்த ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம் வகுத்தளித்துள்ள கோட்பாடு விருத்திகள் எமக்கான இன்றைய இயங்கு தளத்தை வடிவப்படுத்துகின்றன.
காலனித்துவம் – சாதியம் – நவ ஏகாதிபத்தியம்
நூறு வருடங்களின் முன்னர் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் அமைப்பு இயங்கத் தொடங்கித் தனது முதலாவது மாநாட்டை கீரிமலையில் (1925) சுவாமி விபுலானந்தர் தலைமையின் கீழ் நடாத்தி இருந்தது. அதன் குறிக்கோள்களில் ஒன்றாக இடம்பெற்ற சாதி அமைப்புமுறை தகர்க்கப்பட வேண்டும் என்பது அதனது பிரதான இலட்சியமான பூரண விடுதலைத் தேசிய நாட்டத்தின் அடிப்படை அம்சமாக அமைந்திருந்தது. அதன் காரணமாக, முப்பதாம் ஆண்டுகளில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எனப் பரிணமித்த அந்த அமைப்பினர் சமூக மாற்றத்தை உள்ளடக்கிய தேசிய விடுதலையை வெற்றிகொள்ள வழிகாட்டும் மார்க்சியத்தை வரித்துக் கொண்டனர்; 1934 ஆம் ஆண்டு உதயமான இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் மார்க்சிய அமைப்புமாகிய ‘இலங்கை சமசமாஜக் கட்சியில்’ அவர்களில் அநேகர் இணைந்து இயங்கியதுடன் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை இடையீடின்றி முன்னெடுத்து வந்தனர்.
டொனமூர் அரசியல் அமைப்பின் அடிப்படையில் சர்வஜன வாக்குரிமை நடைமுறைப்பட்டமை, அனைவர்க்குமான கல்விப் பரவலாக்கம், மரவரிச் சட்டம் போன்றன ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும், மார்க்சியர்களது தொடர் செயற்பாடுகளும் காரணமாக அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படத் தொடங்கிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ தோற்றம் பெற்றது. அது உதயமான சமகாலத்தில் (1944) சமசமாஜக் கட்சித் தலைமை ட்ரொட்ஸ்கிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகக் காட்டிய போது கட்சிக்குள் இயங்கிய ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் சார்பானவர்கள் முரண்பாட்டை வெளிப்படுத்தினர்; உட்கட்சி விவாதமாகக் கையாளுவதை விடுத்து சோவியத் சார்பானவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தால், இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி என இயங்கத் தொடங்கினர். இருபது வருடங்களின் பின்னர் 1964 புதிய கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. லெனின் மறைவை (1924) அடுத்து சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுத் தனது மரணம் (1953) வரை அந்தப் பதவியை வகித்திருந்த ஸ்டாலினை வன்மையாகக் கண்டித்து கட்சியின் இருபதாவது மாநாடு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஸ்டாலினை நிராகரித்துப் புதிய தலைமை முன்வைத்த கருத்துகள் மார்க்சியத்தைத் திரிபுபடுத்துவதாக விமர்சித்த உறுப்பினர்களும் உட்கட்சி விவாதமின்றியே கட்சியைவிட்டு 1964 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்டோர் (புரட்சிகர) இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி என இயங்கினர்; இந்த அணி மா ஓ சேதுங் சிந்தனையை வரித்துக் கொண்ட காரணத்தால் ஊடகங்கள் ‘சீனச் சார்பு’ என இவர்களை அடையாளப்படுத்தியதோடு தாய்க் கட்சியைச் ‘சோவியத் சார்பு’ எனக் குறிப்பிட்டனர்.
இத்தகைய பிளவுகளைச் சந்தித்த போதிலும் அனைத்துப் பிரிவினரும் தத்தமது கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கு அமைவாகச் சாதி அமைப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த காரணத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மார்க்சியக் கருத்தியல் தாக்கமே வலுவுடன் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் திராவிடர் இயக்கக் கருத்தியல் வீச்சினால் உந்தப்பட்டவர்கள் கூடக் களத்தில் முழு மூச்சாகச் சாதியத்துக்கு எதிராக மார்க்சிய அணிகள் இயங்குகிற காரணத்தால் மார்க்சியர்களாக (அல்லது அதன் ஆதரவாளர்களாக) மாற்றம் பெற்றனர்.
இந்தியாவில் வீறுமிக்க தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பல்வேறு அணிகள் முன்னெடுத்ததைப் போல இலங்கையில் இருக்கவில்லை; தாராளவாத அரைப் பிராமணிய – முதலாளித்துவ அணியிடம் சுதந்திரத்தைக் கையளித்துப் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய போது தரகு முதலாளி வர்க்க ஐ.தே.க. விடம் இலங்கைச் ‘சுதந்திரம்’ வழங்கப்பட்டிருந்தது. பூரண விடுதலைக்காக முப்பதாம் ஆண்டுகள் முதலாகச் குரல் எழுப்பி வந்த மார்க்சியர்களுக்கு வெகுஜனத் தளத்தில் ஆதரவு பெருக்கத்தக்க வாய்ப்பு பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டும்; அரைச்சுதந்திரத்தை அர்த்தபூர்வமான விடுதலையாக மாற்றுவதற்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலெழுந்து வந்த வரலாற்றுப் போக்கில் வெகுஜன எழுச்சிகள் சாத்தியப்பட்ட போதிலும் அதனைப் பிளவுபடுத்தி சிங்களத் தேசியமாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் (S.L.F.P ), தமிழ்த் தேசியமாகத் தமிழரசுக் கட்சியும் மடை மாற்றிக் கொண்டன. மார்க்சியர்கள் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதில் முழு ஈடுபாட்டுடன் இருந்த அளவுக்கு வரலாற்று மாற்றப்போக்குகளைப் புரிந்து கொண்டு தேசியப் பிரச்சினை குறித்த ஈடுபாட்டை ஏற்படுத்தத் தவறினர்.
இலங்கையைப் பூரண குடியரசாக 1972 இல் கூட்டரசாங்கம் பிரகடனப்படுத்திய அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தத் தவறியதாகக் குற்றம் சாட்டிய தமிழரசுக் கட்சி ‘பேரினவாத எதிர்ப்பு’ என்ற போர்வையில் ஏகாதிபத்தியச் சுயநிர்ணயத்துக்கான பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியது. சுதந்திர இலங்கையின் தரகு முதலாளித்துவ ஐ.தே.க. அரசில் அங்கம் வகித்த கொங்கிரஸ் கட்சியில் இருந்து 1949 ஆம் ஆண்டு பிளவடைந்து உருவான தமிழரசுக் கட்சி 1964 வரை ஐ.தே.க. இனை ஆதரிக்கவில்லை. பின்னர் 1965 முதல் ஏற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் மந்திரப் பதவியைப் பெற்றுக்கொண்ட அந்தக் கட்சியிடம் காணப்பட்ட குறைந்தபட்ச இனத்தேசிய விடுதலைப் பண்பும் நீர்த்துப்போய், பூரண ஏகாதிபத்தியச் சார்பு வலுத்தபோது தரகு முதலாளித்துவப் பண்பை வெளிப்படுத்திக் கொண்டது. ஒத்த பண்புத் திணை – வர்க்கக் குணாம்சம் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டரசாங்கத்துக்கு (1970 – 1977) எதிராக தமிழரசு – காங்கிரஸ் கட்சிகளின் இணைவிலான ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ உதயமானது.
இடதுசாரிக் கூட்டரசாங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருந்த போதிலும் பேரினவாதச் சாய்வைப் பெற்றிருந்தது. இருப்பினும் பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்ததில்லை. சிங்களத் தேசிய விடுதலைக்கான அவர்களது நடைமுறைகளைப் பேரினவாத முன்னெடுப்பாகக் காட்டி பிரிவினைவாத அரசியலைத் தொடக்கிய கூட்டணியினர், பின்னர் பேரினவாத யுத்தத்தை முடுக்கிவிட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணக்க அரசியலை முன்னெடுத்தனர்.
ஏகாதிபத்திய நீடிப்புக்கு வாய்ப்பை வழங்குகின்ற அடித்தளமாகிய பேரினவாத இருப்பைத் தகர்க்கும் வகையில் விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுக்கத் தவறிய சிங்களத் தேசியம், ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியத்தை விடவும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சத்தை அதிகம் வெளிப்படுத்தி வந்துள்ளது. மேலாதிக்க தேசிய நாட்டம் அதனிடம் முனைப்படையவில்லை. தமிழ்த் தேசிய நலனையும் இணைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பை தமிழ் இடதுசாரிகள் முன்னெடுக்கத் தவறிய காரணத்தால், ஈழத்தமிழர் பெரும்பாலும் ஏகாதிபத்திய சார்பினர் என்ற பதிவு வலுப்பெற்றது. ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் வகுத்த அரசியல் செல்நெறிக்குள் அகப்பட்ட இனத் தேசியங்கள் இன்று இலங்கையை ஏகாதிபத்தியத் திணைக்கு முண்டுகொடுக்கும் பிரதான முனையாக மாற்றிவிட்டுள்ளன. மேலாதிக்கத் தமிழ்த் தேசிய முன்னெடுப்பு தலைமைச் சக்தியாவதற்கு இடமளித்த காரணத்தால் புலிப்பயம் காட்டியே சிங்களத் தேசியம் தனது இறைமை – சுயாதிபத்தியம் என்பவற்றைப் பலியிட்டு பணிய வைக்கப்படுகின்ற சூழ்நிலை!
இடதுசாரி அரசாங்கம் ஒன்று ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுள்ள பெரும்பான்மை மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பழைய தவறுகளின் தடங்களில் இனத் தேசியங்களைப் பயணிக்க வைக்கும் ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் இன்னமும் இயங்கு நிலையிலுள்ளது. பொருளாதார – அரசியல் பின்னடைவுகளைக் கண்டுவரும் ஏகாதிபத்தியத் திணையானது தனது இருப்பைப் பேணுவதற்கு ஊடக வலையமைப்பைக் கையாளும் மேலாதிக்க வலுவுடன் உள்ளது. அதன் பக்கத் துணையுடன் ஏகாதிபத்தியப் பொருளாதாரச் சுரண்டலைத் தடையின்றி முன்னெடுக்கவும் அதன் வாயிலாக அரசியல் மேலாண்மையை மீட்டெடுக்கவும் இந்திய – இலங்கைத் தளத்தைப் பயன்படுத்தும் ஏகாதிபத்தியத்துக்கான வாய்ப்பு அற்றுப் போய்விடவில்லை. மிகப் பலவீனப்பட்ட சமூக – பெருளாதார – பண்பாட்டு அடித்தளமுள்ள இந்தியாவில் ஏகாதிபத்தியத்தால் பதியமிடப்பட்டு வளர்க்கப்படும் பெருமுதலாளித்துவம் இந்தியாவை எதிர்கால ஏகாதிபத்தியத் திணையின் தலைமைக் கேந்திரமாக மாற்றும் சக்தியாகி வருகிறது. இப்போதே தனித்துவம் உணர்த்தும் இந்திய அரசைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்தியப் பெரு முதலாளித்துவத் தளத்தில் சிற்சில சலசலப்புகளை ஏகாதிபத்தியத் திணை ஏற்படுத்திய போதிலும், இரு தரப்பினரின் நலன்களும் இந்திய – இலங்கை முனையை மேலாதிக்கத் தரப்புக்குச் சாதகமாக்கும் திசை நோக்கியே இட்டுச் செல்கிறது.
சொந்தப் பலத்தில் முன்னேறி வந்த ஏகாதிபத்தியம் வீழ்ச்சியுறும் போது அதனால் பதியமிடப்படும் புதிய ஏகாதிபத்திய முனை அதனையும் தாக்குப் பிடித்துத் தனக்கான விருத்தியையும் கண்டுகொள்ள இயலும் என்ற நம்பிக்கையை எந்த அடிப்படையில் பெற்றிருக்கிறது? ஊடக அரக்கனால் விருத்தி செய்யப்படுகிற காலனித்துல மனப்பாங்கு, ஆண்டாண்டு காலம் பழகிப் போன சாதிய உணர்வு என்பன நவ ஏகாதிபத்தியத்தின் மிகப் பலமான ஒரு அச்சு!
சாதி ஒழிப்பு: மேலாதிக்க நாட்டம்
நிறவாதம், மதவாதம், இனத் தேசியவாதம், பிரதேச வாதம், பாலின வாதம் போன்றவற்றையும் ஊடக அரக்கன் தூண்டு விசையாக்கிப் பிளவுபடுத்துகிற காரணத்தாலும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய மக்கள் சக்தி தமக்குள் மோத வேண்டி ஏற்படுகிறது; பொது எதிரியான ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர் முனை பலப்படுத்தப்பட இயலாத நெருக்கடியை விடுதலைத் தேசிய சக்திகள் முகங்கொள்ள நேர்கிறது. இத்தகைய பலதரப்பட்ட பேதங்களை ஏகாதிபத்தியம் தான் உருவாக்கிக் கொள்கிறது எனச் சொல்லிட இயலாது. முதலாளித்துவம் ஐரோப்பாவில் எழுச்சி கொள்ளத்தொடங்கி போது நாடு காண் வீரர்கள் சாதனைப் பயண நாட்டத்துடனும் முனைந்து அமெரிக்க, அவுஸ்ரேலிய ‘புதிய கண்டங்களை’க் கண்டுபிடித்தனர். அவற்றின் பூர்வகுடிகளில் மிகப் பெரும்பாலோரைக் கொன்று குவித்து அவற்றைக் காலனித்துவப்படுத்திய முதலாளித்துவம், ஆபிரிக்காவில் இருந்து கறுப்பின மக்களைக் கடத்திச் சென்று உரிமைகளற்ற உழைக்கும் கூட்டம் என ஆக்கியிருந்தது. மூலதன வாய்ப்புடன் ஏனைய திணைகளை ஆக்கிரமித்துக் காலனிகளாக்கிய ஐரோப்பியத் திணை வெள்ளையராகிய தாம் உயர் வர்ணத்தார் என்றும், ஏனைய ‘நிறத்தோர்’ தாழ்ந்த வர்ணத்தவர் என்றும் உருவாக்கிய வர்ண (நிற) வாதம் அன்றைய உலகுக்கொரு புதுமை. அதற்கு முன்னர் வெள்ளை என்பது மேன்மைமிக்கது என்றோ கறுப்பு புனிதமற்றது என்றோ எந்தவொரு சமூகமும் கற்பிதம் செய்ததில்லை; அதற்கான பொருளுற்பத்தி அடிப்படை ஏதும் ஏற்படவில்லை.
மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு சில நூற்றாண்டு தொடர்ச்சியில் நாடோடிகளாக இந்தியாவினுள் நுழைந்தவாறிருந்த ஆரியர்கள் வர்ண வேறுபாடு பற்றிய புரிதலைப் பதிவு செய்திருந்தனர். பிரவேசித்த நாட்டு மக்களின் நிறம் தம்மிலிருந்து வேறுபட்டு இருந்த உணர்வு சார்ந்த வர்ண அடையாளம் அது. ஐந்து நுற்றாண்டுகளின் முன்னர் ‘புதிய கண்டங்களுக்கு’ உரிய பூர்வ குடிமக்களை ‘செவ்விந்தியர்கள்’, ‘கறுப்பர்கள்’ என அடையாளப்படுத்திய ஆக்கிரமிப்பு மனப்பாங்கு ஆரியர்களிடம் ஏற்படுவதற்கு, உரிய அளவில் அவர்கள் மேம்பட்டவர்களாக இருக்கவில்லை. நாடோடி இன மரபுக் குழுக்கள் என்ற வகையில் தமக்கான தனித்துவ உணர்வைக் கொண்டிருந்தனர். வளமான நிலப்பரப்புத் தொடர்ந்தும் நாடோடி வாழ்வின் இடப்பெயர்வை அவசியப்படுத்தாத போது நிலையான விவசாயிகளாக மாறுவதற்கு முற்பட்டனர். பல நூறு வருடங்களாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்தோருடன் கலந்து ஏற்றத்தாழ்வு வாழ் முறையை வந்தடைந்த போது வர்ணக் கோட்பாடு சாதியாக மாறுவதில் அவர்களுக்கான பங்கைவிடவும், முன்னரே உயர் பண்பாட்டை எட்டிய பிரதேசவாசிகளுக்கு (குறிப்பாகத் திராவிடர்களுக்கு) உரிய கருத்தியலுக்கு அதிக பங்கு உண்டு. ஆரிய – திராவிட கலப்படைந்த பிராமண குலத்தவரே ரிக் வேத இலக்கியத்துக்குரிய பத்தாவது மண்டலத்தின் சாதியக் கருத்தியலை வடிவமைத்தனர். பிராமணியத்தால் பலம் பெற்ற முதல் பேரரசும் கூட திராவிடருக்கு உரியதே!
ஆயினும், காலனித்துவ காலத்தில் ஆங்கில அரசுடன் ஒட்டுண்ணியாகப் பொருந்திய சில பிராமண மேலாதிக்கச் சுரண்டலாளர்கள் புதிய ஆக்கிரமிப்பாளராக அதிகாரம் செலுத்திய ஐரோப்பியர்களான ‘ஆரியர்களுடன்’ தம்மை அடையாளப்படுத்தியதுடன், நவீன வரலாற்றில் புதுமை படைக்கும் ஐரோப்பியர் போலவே முன்னரும் ஆரியர்களது வருகையின் பின்னரே இந்தியாவுக்கான வரலாறு தொடங்கியது என்ற புனைவுகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். மூலதன வாய்ப்புடன் ஆக்கிரமிப்பாளர்களான காலனித்துவ சக்தி முன்னதாக விவசாய வாய்ப்புடன் மேலாதிக்கச் சாதியாகியிருந்த பிராமணியத்துடன் கூட்டமைத்துக் கொண்டனர்.
அதேவேளை தமிழகத்தில் அரசாங்க உத்தியோகங்களையும் அதற்குரிய ஆங்கிலக் கல்வியையும் அதிகம் பெற்றிருந்த பிராமணரல்லாத நிலப்பிரபுத்துவச் சாதிகளிடம் ‘திராவிட’ மேலாண்மையை விதைக்கும் வேலையையும் ஏகாதிபத்தியவாதிகள் கையாண்டனர். இவ்வாறு சொல்கிற போது திராவிடர்களுக்கு உரியதாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதியுயர் பண்பாட்டுக்கு உரிய சிந்துவெளி நகரங்களைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டிய தொல்லியலாளர்களையோ, ஆரிய – திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றிய கண்டுபிடிப்பைச் சாத்தியப்படுத்திய மொழியியலாளர்களையோ ‘பிரித்தாளும் இராஜதந்திரத்துக்கு’ உரியவர்கள் என முத்திரை குத்துவதாக எண்ண வேண்டியதில்லை. அத்தகைய ஆய்வு முடிவுகள் காலனிய மனப்பாங்குக்கு உரியவனாக, அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனை வலியுறுத்துவது மிக அவசியம்.
பிராமணியத்துடன் கூட்டமைத்த ஏகாதிபத்தியம் பிராமண எதிர்ப்பு அணிக்குத் தூபமிடுவதனையும் கனகச்சிதமாக முன்னெடுத்தது. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுமையிலும் திராவிடர் பரவுகை சாத்தியப்பட்டு இருந்தது; ‘ஆரியர் ஆக்கிரமிப்பால்’ தென்னிந்தியாவில் மட்டும் திராவிடர் ஒதுங்க நேர்ந்தது என்பதாக பிரசாரப்படுத்துவதற்கு இந்த ஆய்வு முடிகள் பயன்படுத்தப்பட்டன. ஆரிய – திராவிடக் கலப்பில், திராவிடக் கருத்தியல் செல்வாக்கை முனைப்புடன் கொண்டிருந்த, மிக அதிகமாகத் திராவிடரை உடைய பிராமணக்குலங்களே மேலதிக்கம் புரிந்து சாதிய வாழ்முறையை ஏற்படுத்தின என்ற உண்மை மறைக்கப்படலாயிற்று. மார்க்சிய வரலாற்று அறிஞர்கள் இதனை வெளிப்படுத்திய போதிலும் பின்னரான சமூக முரண்பாட்டு மோதல்கள் ஆரிய – திராவிட மோதல்களாகவே காட்டப்பட்டு வரக்காண்கின்றோம்.
அதே போன்றே சாதிய வாழ்முறைக்கான கருத்தியலைப் பிராமணர்கள் வடிவமைத்ததை மறைத்து பிராமணியத்தால் உருவாக்கப்பட்டதே சாதி வாழ்முறை என்ற கற்பிதமும் கோலோச்சி வரக் காண்கிறோம். தனது சொந்த வாழ்வில் அதிக ஒடுக்கு முறையை அனுபவித்த அம்பேத்கர் ‘பிராமணியத்துக்குரிய இந்து மதத்தை அழித்தால் சாதி ஒழியும்’ எனக் கூறும் அனுபவவாதத் தவறுக்கு ஆளானார். அவரது எழுச்சிக்கு அடிகோலிய மஹத் குளப் போராட்ட வரலாற்றை முழு அளவில் ஆய்வுக்கு உட்படுத்திய ஆனந் டெல்டும்ப்டே அம்பேத்கரது இயக்க வீச்சின் பலம், பலவீனங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி உள்ளார் (ஆனந் டெல்டும்ப்டே, ‘மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்’, தமிழில்: கமலாலயன். நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை. 2018). அனைத்துச் சாதியினரையும் ஒன்றிணைத்துச் சாதியத்துக்கு எதிரான போராட்டம் வளர்ந்து வரும் வாய்ப்பு அவரால் மறுக்கப்பட்டு அம்பேத்கரது தனிவழி இயங்கு முறை மஹர் சாதிக்குள் மட்டுப்பட்ட வரலாறு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை ஆனந் டெல்டும்ப்டே தெளிவுறக் காட்டி உள்ளார். நூலின் மிகப் பெரும்பாலான பகுதியில் அம்பேத்கரின் பலமான அம்சங்கள், சாதனைகள் என்பவற்றை எடுத்துரைத்த பின்னர், மிகக் குறைந்த பக்கங்களில் மக்கள் விடுதலைப் போராட்ட மார்க்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் தலித் இயக்கம் எவ்வாறு தொடக்கம் பெற்று வளர்ந்தது என்பதனையே ஆனந் டெல்டும்ப்டே காட்டி இருந்தார். அந்த விமரிசனத்தை ஏற்க மறுத்து நூலும் நுலாசிரியரும் புறக்கணிப்புக்கு உள்ளான துயரம் ஏற்பட்டுள்ளது.
சாதிய இழிவுபடுத்தல்களுக்கு எதிராக அம்பேத்கர் போரிட்ட வழிமுறை சாதி அமைப்பைத் தகர்க்க உதவவில்லை எனும் விமரிசனத்தை ஏற்க இயலாது இருப்பது ஏன்? விமரிசனத்துக்குரிய விடயங்களைக் கவனம் கொண்டு அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் இல்லாமலாக்குவதற்கு முனையாமல் சாதி ஒழிப்பே முதன்மைப் பணி என வலியுறுத்துவது ஏன்? பெரியாரியம் முன்னிறுத்தும் பிராமணிய எதிர்ப்பு, அம்பேத்கரிய வழியில் இந்து மதத்தை இல்லாமலாக்குதல் என்பவற்றினூடாக, அவை எதிர்வு கூறும் சாதி ஒழிந்து போவதாக அல்லாமல் சாதியப் பிளவாக்கம் மிகமோசமாக வலுப்பட்டு வந்துள்ளது என்பதே மெய்.
சாதி பேதத்தை உறுதிப்படுத்தப் பிராமணியத்தால் இயலாத வகையில் அம்பலப்பட்டுள்ள சூழலில் சாதியச் சழக்குகளை வளர்த்து மக்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதனை அம்பேத்கரியமும் பெரியாரியமும் நிதர்சனமாக்கி வருகிறது எனும் உண்மை கண்டு கொள்ளப்படாதது ஏன்? தத்தமது சாதி மேலாதிக்கங்களை வெற்றிகொள்ள முயலும் சக்திகள் தெரிந்தோ தெரியாமலோ ‘சாதி ஒழிப்பு’ பற்றிப் பேசி வருகின்றார்கள் என்பதனைச் சமத்துவம் படைக்க முயலும் புதிய தலைமுறையினர் புரிந்து கொள்வர்!
சாதிகள் இடையே சமத்துவமும் விடுதலைத் தேசியமும்
மக்கள் விடுதலைக்காகப் போராடும் சக்திகளைப் பிளவுபடுத்தும் நோக்குடன் காலனித்துவம் கையாண்ட நடைமுறைகள் காரணமாக பெரியாரும் அம்பேத்கரும் தத்தமது செயற்பாடுகளை எல்லைப்படுத்த வேண்டியவர்களாக இருந்தனர். இன்றைய சூழலில் தங்களை மதிப்பீடு செய்யும் போது எழும் விமரிசனங்களை அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். இருவருமே பூரண சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே. முப்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ ஒழிப்பு என்பவற்றுடன் இணைந்தே பிராமணியத் தகர்ப்பு இயக்கத்தை பெரியார் முன்னெடுத்தார். அரச ஒடுக்குமுறை இயக்கத்தை முடக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்த போது முந்திய இரு குறிக்கோள்களைப் பின்போட்டு பிராமணிய எதிர்ப்பைப் பெரியார் முனைப்பாக்க வேண்டியவரானார் என்பதை மனங்கொள்வது அவசியம்.
இலங்கையில் இனப் பிளவாக்கத்தைப் ‘பிளவுபடுத்தி ஆளும் ஏகாதிபத்திய உத்தி’ என நடைமுறைப்படுத்திய காரணத்தால் இங்கே மார்க்சியர்கள் தேசிய இனப் பிரச்சினையைக் கையாள்வதில் தவறிழைத்தனர். சாதியத் தளம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கையாளுகைக்கு உரியதாக இல்லாத காரணத்தால் முப்பதாம் ஆண்டுகள் முதலாகச் சாதி அமைப்புக்கு எதிராக அனைத்துச் சாதிப்பிரிவினரும் ஒன்றுபட்டுப் போராடுவது சாத்தியப்பட்டது. அதன் உச்சமாக ஒக்ரோபர் 21 எழுச்சி 1966 ஆம் ஆண்டு இடம்பெறுவது சாத்தியமாகியது. அதன் நீட்சியாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்ட அலையானது, கலை – இலக்கியத்தளத்தில் ‘மக்கள் இலக்கியம்’ என்பதற்குரிய கோட்பாட்டு உருவாக்கத்தை மேற்கொள்ளப் பேராசிரியர் க. கைலாசபதியை வழிப்படுத்தியது. அரசியல் புலத்தில் ‘உழைக்கும் மக்கள் தலைமையில் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்தலில் நான்காம் கட்டப் போராட்டம்’ எனும் கே.ஏ. சுப்பிரமணியத்தின் கோட்பாடு தனிவகைத் தளத்துக்குரியது. இரண்டினதும் இணைப்பில் திணை அரசியல் எனும் புதிய கோட்பாடு மார்க்சியச் சிந்தனை முறைக்குப் புதிய பாய்ச்சலை வழங்கி வருகிறது. இவை குறித்துத் தொடர்ந்து உரையாடுவோம்!