முதுமை, மூத்தோர் சொல், முடிவிலாத்துயர்: மௌன விசும்பல்கள்
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

முதுமை, மூத்தோர் சொல், முடிவிலாத்துயர்: மௌன விசும்பல்கள்

January 26, 2025 | Ezhuna

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கை போன்ற நாடுகளில், குறிப்பாகப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் சில அவசியமான அசைவியக்கங்கள் கவனம் பெறாமல் போய்விடுவதுண்டு. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. போர் ஏற்படுத்திய இழப்புகளும் அழிவும், அது விட்டுச் சென்ற விடயங்களும் உடனடியாகக் கவனத்தை வேண்டுவனவாய் உள்ளன. ஆனால் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகம் இதுவரைக் கவனங் குவிக்காதுவிட்ட விடயங்களிலும் கவனம் குவித்தாக வேண்டும். அவ்வாறு கவனத்தை வேண்டுவோர் நமது சமூகங்களில் வாழும் மூத்தோராவர். கடந்த இரண்டு தசாப்த காலத்தில் அவர்களது சவால்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளனவேயன்றிக் குறையவில்லை. முதலில் போரும், இடப்பெயர்வும் அதுசார் சவால்களும் அதைத் தொடர்ந்து போரின் பின்னரான நிலை, கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என மூத்தோருக்கான சவால்கள் பல்கிப் பெருகியுள்ளதோடு பல்பரிமாணமுடையதாய் மாறியுள்ளன.

முதுமை என்பது உயிரியல், உளவியல், சமூகம், கலாசாரம், பொருளாதாரம், மருத்துவம், அரசியல் அம்சங்களை உள்ளடக்கிய மிகவும் மாறுபட்ட, சிக்கலான மற்றும் பல அடுக்கு செயல்முறையாகும். 1900 ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக உயர்ந்துள்ள ஆயுட்கால வியத்தகு வளர்ச்சியால் உலகெங்கிலும் உள்ள முதியவர்கள் பலன்களை அனுபவிக்கின்றனர். தற்போது உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 72 வயதை நெருங்குகிறது. அதே நேரத்தில், வயதான மக்கள்தொகையால் ஏற்படும் புதிய சவால்களை மூத்தவர்கள் எதிர்கொள்கின்றனர். அதிகரித்த சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் என்பன அவற்றில் சில.

சமூகக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவுகளால் சமூகப் பொது இயக்கம் என்ற வெளிச்சத்தில் இருந்து மெதுமெதுவாக அகற்றப்பட்டோராக முதியோர் மாற்றப்படுகிறார்கள். சமூகத்தின் ‘மங்கலான’ உறுப்பினர்களாக அவர்கள் இருக்க நேர்கிறது. இதனால் சமூகத்தின் செயற்றிறன் மிக்க இயக்கத்தில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இலங்கையின் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பானது, வயதானவர்களின் சமூக சேர்க்கையை அதிகரிப்பதற்கும் அவர்கள் குறித்த எதிர்மறையான பொதுமக்களின் எண்ணங்களை அகற்றுவதற்கும் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறியத் தவறியுள்ளன. முதுமையின் சமூக யதார்த்தம் தொடர்ந்தும் புதுப்பிக்கப்படாது விடாப்பிடியாக இருப்பது போல் தெரிகிறது, அதே சமயம் முதுமை பற்றிய புதிய கண்ணோட்டங்களும், முதுமையை நோக்கிய புதிய மனப்பான்மைகளும் இன்னும் சமூகப் பொதுமையாகவில்லை.

இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சில போக்குகளை இக்கட்டுரை ஆராய விளைகிறது. முதற்கட்ட ஆய்வுகள் கொரோனா பெருந்தொற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டவை. இரண்டாம் கட்ட ஆய்வுகள் கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. நிறைவான கள ஆய்வுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டவை. இவை மூன்றுக்கும் இடையில் மிகவும் தெளிவான வேறுபாடுகள் இருந்தபோதும் அவற்றுக்கிடையில் சில முக்கியமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் இக்கட்டுரை நோக்குகிறது.

சமூகத்தின் உள்ளும் புறமும்

“ஊரில ஆக்களோட இருந்தம். இப்ப கட்டடங்களோட இருக்கிறம். ஊரில என்டா, கோயில், திருவிழா, தீபாவளி எல்லாத்திலயும் இனசனத்தோட சந்தோசமா இருப்பம். இது நகரந்தானே. எல்லாம் கொஞ்சம் அந்நியந்தான்.”

“இடப்பெயர்வோட எல்லாம் மாறிப்போச்சு, கனஆக்கள் போயிட்டினம், வேற ஆக்கள் வந்திருக்கினம். ஊரில இருக்கிறன் என்று பெயர்தான், ஆனால் அவசரத்திற்கு குரல்கொடுக்க யாருமில்லை.”

இரண்டு மூத்தோரின் கருத்துகள் இவை. தலைநகரிலும் ஊர்களிலும் முதியோரைத் தனிமை வாட்டுகிறது. இது சமூகமாக நாம் முதியோரை அந்நியப்படுத்துகிறோமா என்ற வினாவை எழுப்புகிறது. உண்மை என்னவெனில் சமூகத்தின் தன்மை தொடர்ச்சியாக மாறிவந்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமூகக் கட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ இல்லை. ஆனால் சமூகம் குறித்த தாங்கள் வாழ்ந்த காலத்து நினைவுகளுடன் முதியோர் சமூகம் குறித்த எதிர்பார்ப்பை நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒரு சமூகம் எப்போதுமே இருப்பது, நல்ல விஷயம் என்று உணரப்படுகிறது. ஏனெனில் தனிநபர்கள் கடினமான காலங்களில் மற்றவர்களை நம்பியிருக்க முடியும். சோகமான தருணங்களில், ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள், தங்கள் கடமையை உணர்ந்து, எந்தவித சந்தேகமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவார்கள். எனவே ஒரு சமூகம் என்பது வெதுவெதுப்பான, வசதியான இடமாக கருதப்படுகிறது. அது கனமழையில் நாம் அடைக்கலமான கூரையைப் போன்றது; உறைபனி நாளில் கைகளை அரவணைக்கும் நெருப்பிடம் போன்றது.

எவ்வாறு தனிநபர்கள் மற்றவர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்வது, பொதுவான அடையாளத்தை உருவாக்குவது, கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் சக குடியிருப்பாளர்களுக்கு நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டுவது? ஒரு தனிப்பட்ட (வீடு, குடும்பம்) என்ற சட்டகத்தை விட, ‘கூட்டு வாழ்க்கை’யின் ஒரு பகுதியாக மக்கள் பொதுவான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றை சமூகமே தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. இன்று அந்த வகிபாகம் சமூகத்திடம் இல்லை. தனிமனித நலன்சார், நவதாராண்மைவாத சிந்தனை மரபு வேரூன்றத் தொடங்கியுள்ள இலங்கையில் ‘சமூகப் பிராணி’ என்ற உணர்வற்றுக் குழந்தைகள் வளர்க்கின்றன. சமூகங்களும் தனித்தனித் தீவுகளைக் கொண்ட மனிதர்களையே உருவாக்கியுள்ளன.

இன்றும் கொழும்பில் வாழும் பெரும்பாலான முதியவர்கள், ஊர்களில் இருந்து அடுக்குமாடிகளில் வசிக்க வந்தவர்கள். அவர்களுக்கு தமக்கருகில் வசிப்போரின் பெயர்கள் தெரியாது. அர்த்தமுள்ள சமூகத் தொடர்புகள் இல்லை. ‘காலை வணக்கம்’, ‘நன்றி’ போன்ற சில சொற்களுக்குள் உரையாடலும் ஊடாட்டமும் மட்டுப்படுகிறது. எனவே ஒரே சூழலில் வாழ்ந்தாலும் அவர்கள் சமூகமாக இல்லை. இது மூத்தோருக்கு பாரிய சவாலாகிறது. ‘அண்டை வீட்டார்’ என்று யாரும் இல்லை. இதை ஏற்றுக் கொண்டு அதற்காகத் தம்மைத் தகவமைப்பது மூத்தோருக்குக் கடினமானதாக இருக்கிறது. ஏனெனில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்போர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் வழக்கமாகப் பார்ப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அண்டை வீட்டாராக இருக்க வேண்டிய அவசியம் குறைவு. அண்டை வீட்டாரின் இந்த தொடர்பின்மை, ‘நெருக்கடியான காலங்களில்’ மூத்தோருக்கு மிகவும் வருத்தமளித்திருக்கிறது.

“எமது பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்கள் விருப்பப்படியே நாம் கொழும்பில் இருக்கிறோம். கொரோனா தொடங்கிய காலத்தில் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டோம். ஊரில் இருந்திருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இக்காலத்திலேயே நாம் நமது பக்கத்து வீட்டுக்காரரை அறிந்தோம்; நெருக்கமானோம். பரஸ்பர உதவிகள் செய்தோம். இந்த நெருக்கம் பொருளாதார நெருக்கடி காலத்தில் இன்னும் அதிகமானது. கொழும்பில் இத்தனை ஆண்டுகால சீவியத்தில் சமூகமாக உணர்ந்தது இந்தக் காலத்திலதான்.”

கொழும்பில் வசிக்கும் மூத்த தம்பதியினரின் கூற்று இது. இந்தக் கருத்தைக் கொழும்பின் அடுக்குமாடிகளில் குடியிருக்கும் பல மூத்தோர் பிரதிபலிக்கிறார்கள். நெருக்கடிகள் ஏற்படுத்தும் சவால்கள் தவிர்க்கவியலாமல், சமூக இணைவை உருவாக்குகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைக் கொஞ்ச நேரம் நம்பிக்கையாக அனுப்பிவைக்கக் கூடிய ஒரு இடமாக இந்த மூத்தோரின் வீடுகள் மாறின. இது மூத்தோருக்கான சமூகப் பெறுமானத்தை மீண்டும் உருவாக்கியது. மறுபுறம் மூத்தோரின் உளநலன் சார் மேம்பாட்டுக்கு இது பங்களித்தது.

“ஊரில இருந்ததால, கொரோனா காலத்தில பெரிசா பிரச்சனை இருக்கல்ல. நாங்களும் எங்கட பாடும் தான். ஆனால் அவசரத்திற்கு ஆரும் வரமாட்டினம். என்ர அக்கா, கொழும்பில இருக்கிறா, அவாவுக்கு பக்கதில இருக்கிற ஆக்கள் நல்ல உதவி. மருந்து, ஆஸ்பத்திரிக்கு எல்லாம் சரியான வசதி. இங்க அந்த வசதி இல்லை. வருத்தம் வந்தா எங்கட பாடு கஷ்டந்தான்”.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மூத்த தம்பதியினரின் எண்ணப்பதிவுகள் இவை. பாரிய நெருக்கடிகளை அவர்கள் எதிர்நோக்காவிட்டாலும், மருத்துவம் சார் சவால்களை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள். இது யாழ்ப்பாண வாழ் மூத்தோரின் பிரதான கவலையாக உள்ளது. அதேவேளை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மூத்தோரை அரவணைக்கும் சமூகம் இப்போதில்லை என்பது அவர்களின் இன்னொரு கவலையாக இருக்கிறது. குறிப்பாக அரச அலுவலகங்களிலோ, மருத்துவமனைகளிலோ, வங்கிகளிலோ, பொது இடங்களிலோ தமது வயதுக்கான மரியாதை கிடைப்பதில்லை என்பது பெரும்பாலான யாழ்ப்பாண மூத்தோரின் விசனமாக இருக்கிறது. தமது உடையின் அடிப்படையில் தம்மை எடை போடுவது, ஊர் சார்ந்து ஊகிப்பது போன்றன எரிச்சலூட்டுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பு வாழ் மூத்தோர்களின் அனுபவங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. பொது இடங்களில் தமக்குக் கிடைக்கும் மரியாதை குறித்து அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். கொழும்பு போன்ற பல்சமூகச் சூழல் தனிமனிதர்களை எடைபோடுவது குறைவு என்பதால், மூத்தோருக்கான மரியாதை திருப்தியளிப்பதாக இருப்பதாகவே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அதேவேளை சிங்கள மொழியைப் பேசத் தெரியாமை ஒரு தடையாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாக ஓய்வூதியம் போன்ற அலுவல்களில் சிங்களம் பேசத் தெரிந்திருத்தல் கட்டாயமானது என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றும், பொருளாதார நெருக்கடியும் சமூகமாக வாழ வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கிறது என்பது ஆறுதலான செய்தி. ஆனால் இப்போது ‘வழமை திரும்பியுள்ள நிலையில்’, அதே சமூக உணர்வு தொடர்ந்தும் நிலவுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியானது, குறிப்பாக வயதானவர்களுக்கு, வறுமை மற்றும் சமூகப் பொருளாதாரச் சிதைவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் போராட வேண்டிய தேவையை உருவாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி ஊதிப் பெருப்பித்த சமூகத்தின் சிதைவு மற்றும் சமூக ஆதரவின் இழப்பு ஆகியன அச்சவுணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, வன்முறை குறித்த அச்சங்கள் மூத்தோரிடம் அதிகரித்துள்ளது. இதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். மூத்தோரின் கதைகளில் இருந்து அவர்கள் கடந்த காலத்தின் ஏக்கம் கொண்டவர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக சமூக ஈடுபாடு கொண்ட செயற்பாடுகள் மற்றும் ‘சமூக மூலதனமயமாக்கல்’ செயல்முறைகளின் சரிவு காரணமாக அவர்களின் சமூகம் காலப்போக்கில் மாறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த ஏக்கத்தின் கருப்பொருளாக “அது ஒருபோதும் அப்படி இருந்ததில்லை” என்ற சொற்பிரயோகத்தைப் பலர் பயன்படுத்தினர். கடந்த காலங்களில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். சமகாலத்தில் இந்த சமூக மூலதனத்தின் வடிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. சமூக நம்பிக்கையின்மை காரணமாக மக்கள் இணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட ‘தனியாக இயங்குவதை’ விரும்புகின்றனர். அதேவேளை ‘தடித்த-வலுவான’ சமூக உறவுகள் ‘மெல்லிய-வழுவழுப்பான’ உறவுகளால் இடம்பெயர்ந்துள்ளன. இதில் கூட்டு முயற்சிகள் இல்லை. தனிமனித மேம்பாடே முக்கியமாகிறது. 

சமூகத்தின் வலுவான உணர்வின் அவசியத்தைப் பகிர்ந்து கொண்ட பல மூத்தோர் தம் சமூக உணர்வில் தங்கள் தொழிலாளர் வர்க்க உணர்வின் வகிபாகத்தை முன்னிலைப்படுத்தினர். அரச அலுவல்களில், தொழிற்சாலைகளில், விவசாயத்தில், பாடசாலைகளில் என பலவற்றில் பணிபுரிவோர் தமது சமூகமயமாக்கலையும் அதன் நல்ல பலன்களையும் பிரதிபலித்தனர். புதிய தாராளமயம் மற்றும் சிக்கன நிலைமைகளின் கீழ் மறைந்துவிட்ட தங்கள் கடந்தகால தொழிலாள வர்க்க சமூகத்தைப் பற்றி முதியவர்கள் மிகவும் அன்புடன் பேசினார்கள். அவர்கள் காலச்சக்கரத்தில் திரும்பிச் சென்று அந்த மகிழ்ச்சியான நாட்களை மீண்டும் வாழ விரும்பினார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பெரும்பாலான மூத்தோர் தங்கள் சமூகம், ‘இட சமூகம்’, ‘குடும்ப சமூகம்’ ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, இறந்துவிட்டதாக நம்புகிறார்கள். அவர்களிடம் ஏக்கத்தின் மேலாதிக்க உணர்வு தெளிவாகத் தெரிகிறது, முதியவர்கள் கடந்த காலத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள், அதில் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் வேலை மற்றும் நுகர்வு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படாமல் ஆதரவை வழங்கினர். ஆனால் இந்தநிலை இன்றில்லை. வேலையும் நுகர்வும் பொருளாதாரமுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியுடையதாக மாறியுள்ள சமூகத்தின் வருந்தத்தக்க மறைவை அவர்கள் துயரத்துடன் ஏற்க வேண்டும். மேலதிகமாக இன்று உறவுகளில் சரிசெய்ய முடியாத முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க துயரத்தையும் விரக்தியையும் மூத்தோருக்கு ஏற்படுத்துகிறது.

நுகர்வைக் கையாளல்: நவீனத்துவ சவால்

“எங்கட தேவையள் சரியான குறைவு. தேவையில்லாத எல்லாச் சமான்களையும் பிள்ளையள் வாங்கிப் போட்டிருக்கினம். நாங்கள் பாவிக்கிறதில்ல. சும்மா கிடக்குது. வாங்கேக்கயே சொன்னனான். அவை கேட்கயில்லை.”

“ஏராளமான சாமானை பிள்ளையள் வாங்கிப் போட்டிருக்கிதுகள். இதைப் பராமரிக்கிறதே பெரிய வேலை. தாங்கள் வரேக்க பாவிக்க எண்டுதான் வாங்கினவ. அவை இப்ப வாறதும் இல்லை. நான்தான் போய் பாக்கிறன். கடல்காத்துக்கு எல்லாம் பழுதாகுது.”

“பெரிய விலையுயர்ந்த போனை மகன் வாங்கி அனுப்பினவன். இவர் அதை வெளியே கொண்டு போறதில்லை. துலைஞ்சு போயிடும் என்று பயம். என்னத்துக்கடா இவ்வளவு காசுக்கு போன் அனுப்பினனீ எண்டு கேட்டா, மரியாதை முக்கியம் என்று மகன் சொல்லுறான். அவசரத்துக்கு உதவாத சாமானால என்ன மரியாதை.”

இவை சில மூத்தோரின் பிரதிபலிப்புகள். இதே போன்ற எண்ண வெளிப்பாடுகளை பலரிடம் கேட்க முடிந்தது. இது இரண்டு விடயங்களை மையப்படுத்துகிறது. முதலாவது, மூத்தோர் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற எண்ணப்பாங்கு பெரும்பாலும் எல்லோரிடமும் வெளிப்பட்டது. குறிப்பாக மாறுகின்ற காலத்துடன் தமது கருத்துக்கு யாரும் செவிசாய்ப்பதில்லை என்ற குறை முக்கியமானதாகிறது. அதேவேளை தமது சொல்லுக்கான மதிப்பு இல்லாதபோது அது சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கிறது என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

இதனோடு தொடர்புடைய இரண்டாவது விடயம், பிள்ளைகளின் செயல்களுக்கான மூத்தோரின் கருத்துகளுக்குக் கிடைக்கும் எதிர்வினை. “அது அந்தக்காலம்”, “இப்ப இப்படித்தான்”, “உங்களுக்கு இப்ப உலகத்தில என்ன நடக்குதென்டே தெரியாது” போன்ற சொல்லாடல்களின் தொகுதியாக அது இருக்கிறது. இவை ஒருபுறம் மூத்தோரைக் காலங்கடந்தவராகக் காண்கிற அதேவேளை அவர்களுக்கு நவீனத்துவத்துடன் தகவமைக்கத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டாகவும் விரிகிறது. இது முக்கியமான ஒரு விடயமாகும்.

இன்றைய புதிய தாராளவாதம் நுகர்வைக் கோருகிறது. மக்கள் பொருட்களை உட்கொள்ள வேண்டும். நவதாராளவாதப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக, நவதாராளவாதக் குடிமக்கள் உண்மையான தேவையைப் பற்றி சிந்திக்காமல் அல்லது கருத்தில் கொள்ளாமல், எல்லையற்ற முறையில் பொருட்களை வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புக்கு இளையதலைமுறை பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மூத்த தலைமுறையின் வாழ்வனுபவம் அவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ளாது. மூத்தோரின் மாறுபட்ட சமூகமயமாக்கல் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்கள் அதைத் தடுக்கும். மூத்தோர் இளைய நுகர்வோரின் செயல்களைப் புரிந்துகொள்ளப் போராடுகிறார்கள். குறிப்பாக பொருட்களை தொடர்ந்து வாங்குவது, கடன்பட்ட நிலை போன்றன அவர்களுக்கு அசாதாரணமாகத் தெரிகின்றன. நுகர்வோர் வாதத்தின்படி இந்த மூத்தோரே அசாதாரணமானவர்கள். இயல்பான குறைவான தேவையுடைய வாழ்வென்பது கொடூரமானது என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே வசதி என்பது அனைத்துப் பொருட்களையும் கொள்வனவு செய்வதே என்று பொதுப்புத்தி மனநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான நுகர்வுப் பண்பாட்டுக்குப் பலியாவதற்கு எதிராக மூத்தோர் போராடுகின்றனர். ‘மாற்று வாழ்க்கை’ முறையின் சாத்தியங்களை எடுத்துச் சொல்லியபடியே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடிவதில்லை. ஏனெனில் பிள்ளைகள் தற்போதைய ‘கலாசார எந்திரத்தில்’ சிக்கியவர்கள். அவர்கள் ஒவ்வொரு நபரையும் இலாபப் பொருளாக மாற்ற முயலும் ‘காட்டேரிகளால்’ தாக்கப்பட்டு, ஊடகங்களால் சிறைப்பிடிக்கபட்ட சிந்தனைகளால் வழிநடத்தப்படுபவர்கள். அதிகரித்த மகிழ்ச்சி மற்றும் பிரபல்யத்தின் மீதான அவா போன்ற காரணங்களுக்காக நவீன ஃபேஷன்கள் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க அவர்களை கவர்ந்திழுக்க இயலுமாகிறது. ஆனால் மூத்தோர் தங்கள் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை, மேலும் அவர்கள் ‘சமூக மறதி’யால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் மாற்று வாழ்க்கை முறைகளை நினைவுபடுத்துகிறார்கள். அதில் பொருட்கள் மக்களை ஆதிக்கம் செலுத்தவில்லை. முதியவர்களிடம் வடிவமைப்பாளர், ‘ப்ராண்ட்’ போன்றவற்றின் அடிப்படையில் ஆடைகளை வாங்குவதற்கான உந்துதல் இல்லை. ஏனெனில் அவர்கள் சமூக அங்கீகாரத்தைப் பெற, நாகரீகமான அடையாளங்களை உருவாக்க முற்படுவதில்லை. பொருட்கள், தாங்கள் யார் என்பதை வடிவமைப்பதில்லை; தங்களது அடையாளத்தையும் அந்தஸ்தையும் அவை பாதிக்காது என்பதை உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள். தற்கால நுகர்வு வடிவங்களுக்கு எதிராக மூத்தோர் காட்டும் எதிர்ப்பை அவர்களின் சமூகமயமாக்கல் மூலம் விளக்க முடியும். ஏனெனில் அவர்கள் சிறிய பணம் மற்றும் சில பொருட்கள் இருந்த வேறு உலகில் வளர்ந்தார்கள். இதனால் நவீனத்துவத்தின் சவாலை மூத்தோர் எதிர்கொள்கிறார்கள்.

“ஊரில வீட்டைத் திருத்திப் போட்டு, பூட்டி வைச்சிருக்கிறம். இங்கே தேவையில்லாம பெரிய வீட்டை மகள் வாங்கி விட்டிருக்கிறாள். நாங்கள் இரண்டு பேர். எங்களுக்கேன் மூன்றறை வீடு. ஊரில போய் இருந்திருக்கலாம். இப்ப அடிக்கடி போய் யாழ்ப்பாண வீட்டைப் பார்த்திட்டு வாறது. ஏல்லா இடமும் கள்ளர் பயமும் தானே. வயது போகப் பராமரிக்கிறது சரியான கஷ்டம்.”

கொழும்பில் வசிக்கும் ஒரு முதிய தம்பதியின் குமுறல் இது. இது கொழும்புவாழ் மூத்தோர் பலரின் – பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்போர் – பொதுவான அபிப்பிராயமாகும். இதுவும் நுகர்வோடு தொடர்புடையதே. பிள்ளைகள் பலர் கொழும்பில் வீடு வைத்திருப்பதை ஒரு ‘ஸ்டேட்டஸ்’ ஆகப் பார்க்கிறார்கள். ஆனால் அது அவர்களது பெற்றோருக்கு புதிய சவால்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை. 

முதுமையும் நவதாராளவாத நெருக்கடியும்

பரந்த சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகள் தொடர்பாக மூத்தோரின் சமூக – பொருளாதார அனுபவங்கள், நவதாராளவாதத்தின் புதிய கட்டம் எவ்வாறானதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கடந்த காலத்தின் தாராளமயம் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் தொடர்புடையதாக இருந்த போதிலும், சமகால சகாப்தத்தில் அதன் ‘பொது நன்மை’ மற்றும் ‘பொது மக்கள்’ பற்றிய கருத்துகள் முறையாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

சோசலிசம் அனைவருக்கும் சாதகமாக இருந்த காலப்பகுதியில் தாராண்மைவாதம், பொருளாதாரத்தின் சக்தியையும் செல்வாக்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது, நாடுகளை கடனின் அளவு அதிகரித்தது. குறிப்பாக நலன்புரிச் செலவுகளே பொருளாதாரத்தைச் சீரழிகின்றன என்ற பொய்யைக் கட்டமைத்தது. ‘நவீன தாராளவாத முன்னோடிகள்’ சோசலிசக் கருத்துகளும், சமூகநல அரசும் பொருளாதார வளர்ச்சிக்கும் செல்வக் கொள்முதலுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருப்பதால், சமகால சமூகத்திற்கு இனி பொருந்தாது என்று அறிவித்தனர். புதிய போட்டி உலகில், எல்லா மக்களும் வெற்றி பெற முடியாது; அவர்களின் திறமைகளை திறம்படப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று கூறினர்.

இதன் மூலம் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் செல்வாக்குச் செலுத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து (அரசு) முறையாகப் பறிக்கப்பட்டது. அது கட்டுப்படுத்த முடியாத, திறந்த சக்திகளிடம் மாற்றாக வழங்கப்பட்டது. உலகளாவிய சந்தைகள், தலையீடு இல்லாமல் உலகளாவிய பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியும் என்று கருதப்பட்டது. ‘பொருளாதார சுதந்திரம்’ என்பது இந்தப் புதிய தாராளவாதத்தின் மையமாக இருந்தது. இதன்படி அரச அதிகாரத்தை திரும்பப் பெறுவதும் மற்றும் அரச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை (சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட) மறுகட்டமைப்பதும் அவசியம்.

இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. புதிய தாராளவாதிகள் இந்தப் புதிய பொருளாதார மாதிரி செல்வத்தை இன்னும் சமமாக விநியோகிக்க அனுமதிக்கும் எனக் கூறினர். ஏனெனில் அது பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு மாற்றப்படுகிறது; வறுமையை நீக்குகிறது; அனைத்து மக்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை வழங்குகிறது; நியாயமான தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கான சுயாட்சியை உள்ளடக்குகிறது; இப்படியாக புதிய தாராளமயம், மக்களின் மீட்பராக மாறும் என்று தொடர்ச்சியாகச் சொன்னார்கள். 

சமூகக் கொள்கைகள் சமூகப் பிற்போக்குத்தனமாகக் கருதப்பட்டதால், பாதுகாப்பின்மையிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதில் அரசின் பங்கு கருதப்படவில்லை. சுய – பொறுப்பிற்கான இந்தக் கோட்பாட்டு மாற்றம், ஒரு ‘நலன் – எதிர்ப்புக்’ கதையாடலை உருவாக்க வழிவகுத்தது; உதவி மற்றும் அரசின் தலையீட்டின் கூட்டு வடிவங்கள் மீதான தாக்குதலைச் செயற்படுத்தியது. புதிய தாராளமயம் மற்றும் அதன் பின்னரான சிக்கன நிலைமைகள், நாட்டில் உள்ள அனைவரையும் பாதித்த போதும் மூத்தோரே இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில் நன்மைகள் மற்றும் அரச உதவி வடிவங்கள் சந்தைச் சக்திகளுடன் மறுசீரமைக்கப்பட்டன. இதற்கு தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதாரம் இரண்டிற்கும் இலாபகரமான வழியில் பங்களிக்கும் தனிநபர்களின் திறனே அளவுகோலாக இருந்தது. 

பலன்களை வழங்குதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றின் பின்னால் மாறிவரும் தத்துவம், தகுதியுடையோர் மற்றும் தகுதியற்ற நலன் கோருபவர்களின் புதிய வகைகளை உருவாக்கியது. பிந்தையது பொதுச் சுமையாகக் கருதப்பட்டது. எனவே புதிய தப்பெண்ணங்கள் உருவாக்கப்பட்டன. நன்மைகளைப் பெற்றாலும், சமூகத்திற்கு எதையும் திருப்பித்தராதவர்கள் நேர்மையற்றவர்களாகவும் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்பட்டனர். ஏனெனில் அவர்கள் அத்தகைய கஷ்டங்களைத் தடுக்க தங்கள் தொழில் முனைவோர் திறன்களைப் பயன்படுத்தவில்லை. தகுதியற்ற நலன் பெறுபவர் ஒரு தோல்வியுற்ற நவதாராளவாத பாடமாக இருந்தார். அரசு, நலனுக்கான குறைப்பு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. தனிநபர்கள் தனிப்பட்ட கஷ்டங்களுக்காக தங்கள் சொந்தப் பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பலன்களின் கூட்டு வடிவங்கள் பெருகிய முறையில் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் நலன்புரி ஏற்பாடுகள், குறிப்பாக சுகாதாரம், அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. அதையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மூத்தோரின் வளமான எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

நிறைவுக் குறிப்புகள்

முதுமை குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் அவசியம். முதுமையை வெறும் உடல்நலக் குறைவின் அடிப்படையில் வரையறுக்க முடியாது. சமுதாயத்திற்கு முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது முதல் படி. மக்கள்தொகை முதுமை என்பது பூமியில் உள்ள ஒவ்வொரு சமூகமும் எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான சவால்களில் ஒன்றாகும். ஆனால் பதில்கள் பெரும்பாலும் முதுமையில் கவனம் செலுத்தும் புதிய துறைகளின் வளர்ச்சி அல்லது உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பின் ஒருங்கிணைப்பு போன்ற அதிகாரத்துவ மாற்றங்களில் கவனம் செலுத்துகின்றன. எவ்வாறாயினும், இச் சிக்கலான சவாலானது, வரையறையின்படி, கட்டமைப்புத் தீர்வின் திறனுக்கு அப்பாற்பட்டது.  புதிய கலாசாரத்தை உருவாக்குவதற்கான பணியில் இறங்குவதே வளமான முதுமையாதலை (Healthy Ageing) நோக்கி நகர உதவமுடியும்.

இதற்கு முதற்கட்டமாக சிலவற்றில் நாம் கவனம் குவிக்கலாம்:

  1. தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
  2. உடல் திறன், உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பலவீனம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகைகளை மேற்கொள்ளல்.
  3. வயது முதிர்ச்சியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்கொள்ள, முதியவர்கள் மற்றும் மக்களிடையே நீண்டகாலம் வாழ்வது பற்றிய அறிவையும் புரிதலையும் மேம்படுத்துதல்.
  4. மூத்தோர் தங்கள் திறனைப் பூர்த்தி செய்யக்கூடிய சூழலை உருவாக்குதல்.
  5. மறதியின் அபாயத்தைக் குறைக்க மற்றும் தாமதப்படுத்த அல்லது தடுக்க முயற்சியெடுத்தல். 

ஆரோக்கியம், பங்கேற்பு மற்றும் பாதுகாப்பிற்கான வாய்ப்புகளை உயர்த்துவதன் மூலம் ஆரோக்கியமான முதுமையைச் சாத்தியமாக்கவியலும். ஆரோக்கியமான முதுமையின் பல்வேறு அம்சங்களுக்கிடையில், வலுவான தொடர்புகள் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இது பலப்படுத்தப்படலாம். ஒருங்கிணைந்த அணுகுமுறையை எடுத்துக்கொள்வது என்பது ஆரோக்கியமான கொள்கை மற்றும் மருத்துவ சேவைகளின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்கும் செயல்களைக் குறிக்கிறது. இந்தக் கூட்டு நடவடிக்கை ஆரோக்கியமான முதுமையின் கண்ணோட்டங்களுக்கிடையில் உள்ள உறவுகளை மதிக்கிறது. எல்லா நேரங்களிலும் அனைவருக்கும் அணுகலை அனுமதிக்கிறது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்