வடக்கின் பொருளாதார மறுமலர்ச்சி : அரசு, தனியார், புலம்பெயர்ந்தோரின் போதாமை
Arts
16 நிமிட வாசிப்பு

வடக்கின் பொருளாதார மறுமலர்ச்சி : அரசு, தனியார், புலம்பெயர்ந்தோரின் போதாமை 

July 26, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

பல தசாப்தங்களைக் காவுகொண்டு 2009 இல் முடிவுக்கு வந்த இனப்போர் முடிந்து 7 வருடங்களாகியும் வடக்கின் பணியுருவாக்க முயற்சிகள் இன்னும் விவசாயம் மற்றும் பாரம்பரியத் தொழில்களோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. இது சிலருக்கு  “ஏதோ எம் பங்கிற்கு செய்கிறோம்” என்ற எண்ணத்தையும்; இன்னும் சிலருக்கோ போருக்கு முன்னான இலட்சியக் கற்பனா பூமியைத் தாம் நிறுவிவிடப் போகிறோம் என்ற துடிப்பையும் கொடுக்கலாம். என்ன இருந்தாலும் விவசாயம், கைத்தொழில்கள் மட்டும் போதாது. இலட்சிய பூமி மீதான காதல் எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. கிராமியச் சூழலின் ஏகாந்த வாழ்வு எனக்கும் பிடிக்கும். நித்திய ஒளியும், தெளிந்த தண்ணீரும் கூடிய இயற்கையால் வளப்படுத்தப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஆனந்தம் தரக்கூடியது தான். கத்தரி, வெண்டி, வெங்காயம், உள்ளி, பாகற்காய், உருளைக் கிழங்கு, மாம்பழத்துடன் ஒரு குளிரூட்டப்பட்ட பங்களா எனக்கும் விருப்பமானதே. வை-ஃபை, கேபிள் ரி.வி., அவசர மின்பிறப்பாக்கி, மினுங்கும் சமையலறை, மைக்கிரோவேவ், ஹலோஜென் வெதுப்பி, சுடு நீர், பவர் ஷவர், ஃப்ளஷிங் ரொய்லெட் ஆகியன இருப்பின், அதைவிட வேறென்ன வேண்டும்?

யாழ்ப்பாணக் கிணறு

என் மனச்சாட்சிக்கு எட்டாத தூரத்தில் கொலை செய்யப்பட்டு கழுவித் துடைத்துப் பொதிசெய்யப்பட்ட கோழியை அல்லது ஆட்டிறைச்சியை கீல்ஸ் அல்லது கார்கில்ஸ் அங்காடியிலிருந்து ஒரு சிறுதூர சைக்கிள் ஓட்டத்தில் பெற்றுவிடலாம். என்னைவிடத் துணிந்த ஒருவரைக் கொண்டு பனையேறிப் பனம்பழத்தைப் பிடுங்கவோ அல்லது தாகம் தீர்க்கும் காலைப் பதநீர் அல்லது மாலைக் கள்ளையோ விரும்பிய வகையில் பெற்றும் கொள்ளலாம். மடியில் கொஞ்ச குழந்தைகளுடன் இவ்வீடு எனது சொர்க்கமாகிவிடும். துர்ப்பாக்கியமாக இந்த இலட்சிய, கிராமிய வாழ்வு மிகவும் செலவு நிறைந்தது.

கவிஞரும் மகாத்மா காந்தியின் சிநேகிதியுமான சரோஜினி நாயுடு ஒரு தடவை காந்தியிடம் “உங்களை வறுமையில் வைத்திருக்கவென நாங்கள் நாளொன்றுக்கு எவ்வளவு செலவு செய்கிறோமென்பது உங்களுக்குத் தெரியுமா?” எனக் கடிந்து கொண்டார். ஒரு சாதாரண சிறிய விவசாயிக்கு, இலட்சிய வாழ்வு மிகவும் அன்னியமான ஒன்று. அது கடினமான, நிலையற்ற, வரும்படியற்ற ஒன்று. காலநிலை, கிருமிகள், நோய் நொடி, கந்துவட்டிக்காரர், குத்தகைக்காரர், அரசியல்வாதிகள் எனப் பலரின் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர் விவசாயிகள். பலவகையான உணவு மோகங்களும் அவர்களைப் பாதிக்கின்றன.

சமீபத்தில் ஒரு விவசாயி நண்பர் இப்படியான பாதிப்புக்குள்ளாகிப் பெரு நஷ்டமடைந்தார். இயற்கை விவசாய முறை மூலம் அவர் உற்பத்தி செய்த மரக்கறி, அவற்றைக் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரியால் தீர்மானிக்கப்பட்ட அளவை (size) விடப் பெரிதாகிவிட்டது. இதனால் அவ் வியாபாரியின் தட்டில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இம்மரக்கறியை வைக்கமுடியாமல் போய்விட்டது. இதனால் அவரது மரக்கறி வீதியோர மலிவு விற்பனைக் கடையை அடைந்து மிகவும் நட்டத்தில் விற்கப்பட நேர்ந்தது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் மூன்று முக்கியப் பொருளாதாரத் துறைகளை இனம் காட்டுகின்றன. 1). சேவைகள் (கணக்காளர் முதல் Zumba போதனையாளர் வரை) : தொழில்துறைகளை விட 3.3 மடங்கு திறன்மிக்கது. 2). தொழில் துறை (பண்ட உற்பத்தி) : விவசாயத்தை விட 3.0 மடங்கு திறன்மிக்கது. ஒப்பீட்டளவில் ஒரு கணக்காளரைப் போல் வருமானமீட்ட விவசாயி ஒருவர் 3.3 நாட்கள் கடினமாக உழைக்கவேண்டியிருக்கிறது. இதனால் விவசாயத்தால் பெறப்படும் வருமானம், தொழில் துறைகள் மற்றும் சேவைகள் துறைகளை விடவும் மிக மிகக் குறைவானது.

விவசாயம் எமது நாட்டின் முதுகெலும்பு என்பதை நான் மறுக்கவில்லை என்பதோடு அது மதிக்கப்பட வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். முதாலாவதாக, நாம் உண்ணும் உணவைத் தருவது விவசாயமென்பதால் அது முக்கியமானது. அடுத்தது நாம் உற்பத்தி செய்யாத உணவுகளைப் பெரும் செலவில் நாம் இறக்குமதி செய்தாக வேண்டும். அது மட்டுமல்லாது இவ்வகையான சிறு வருமானங்களில் தங்கியிருக்கும் பலருக்கு அது வாழ்வூதியமளிக்கிறது. இத் தொழில் பலரது தேர்வல்ல, மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. கப்பலில் வைக்கப்பட்டிருக்கும் ‘வாழ்வுப் படகுகள்’ (lifeboats) விருப்பினால் அங்கு வைக்கப்படுவதில்லை. தத்தளிக்கும் உயிர்களைக் காப்பாற்றுவதே அவற்றின் தேவை. சந்தர்ப்பம் கிடைத்ததும் அதிலிருந்தும் இறங்கிக் கொள்வதே முதற் கடமை. அப்படி இறங்கிக்கொள்ளாவிட்டால் அவரது வாழ்நாள் முழுவதும் அப்படகிலேயே கழியும்.

எம்மில் பலர் தொழில் முகவர்களல்லர். இலண்டனிலோ, நியூ யோர்க்கிலோ, கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ வாழ்ந்தாலும் அவர்கள் நேரடியாகப் பணிகளை உருவாக்குவதில்லை. பெரும்பாலானோர் ஏனையோர் உருவாக்கிய தொழில் துறைகளில்தான் பணிகளைப் பெற முயற்சிக்கிறார்கள். தமக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தை அவர்கள் இறுகப்பிடித்துக் கொள்கிறார்கள். போர் முடிந்து ஏழு வருடங்களாகியும் வடக்கில் வேலைகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே உள்ளன.

பெப்ரவரி 2017 இல் கொழும்பின் பிரகாசமான ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில் ‘யாழ். தீனித் திருவிழா (Jaffna Food Festival – JFF)’ ஒன்றை நடத்தியது. என் வாழ்வில் நான் அருந்திய மிகச் சிறந்த கள்ளு இங்கு தான் கிடைத்தது. நான் முதலில் அருந்திய கள், முல்லைத்தீவில், சைக்கிள் ஒன்றின் பிற்புறத்தில் கட்டப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலத்தில் தெருவோரத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டிருந்தது. இது ஒரு சட்டபூர்வமற்ற நடைமுறைபோல் தோற்றமளித்தாலும் வடக்கில் கள் இறக்குபவரிடமிருந்து கள் விற்பவருக்கு கள்ளைக் கொண்டு சேர்க்கும் இந்நடைமுறை மிகவும் சாதாரணமென்பதைப் பிறகு அறிந்துகொண்டேன். ஆனால் யாழ்ப்பாணத் தீனித் திருவிழாவில் தீனிகளும் பானங்களும் காட்சிப்படுததப்பட்டிருந்த விதம் மிகவும் மெச்சத்தக்க ஒன்று. ஆனால் யாழ்ப்பாணத்துப் பொருட்களுக்கு இவ் அதிஷ்டம் கிட்டவில்லை. பாரம்பரியக் கைவினைப் பொருட்களும் தீனிகளும் ஏமாற்றம் தருபனவாக இருந்தன.

வட மாகாணத் தொழில் முகவர்களை ஊக்குவிப்பதற்காக மார்ச் 2017 இல் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (Export Development Board – EDB) யாழ். கச்சேரிக்கு வந்திருந்தது. வடக்கில் தொழில் முனைவோர் எப்படியான பண்டங்களை உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதைக் காட்சிப்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்கள், உறையவைக்கப்பட்ட மீன், கடற்தாழை, தயிர், நெய் ஆகியவற்றை அதிகாரிகள் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அடுத்த ஏப்ரல் மாதத்தில், சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இதே கச்சேரி வளாகத்தில் கைவினைப் பொருட்கள், சிற்றுண்டிகள் போன்ற பண்டங்களை மேலும் பெரிய அளவில் காட்சிப்படுத்தினார்கள். இந்தத் தடவை தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கொண்டாடும் முகமாக இப்பண்டங்களை விற்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இங்கு நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தானே வடிவமைத்து கடற் சிப்பிகளில் உருவாக்கிய வான்கோழிகளை தலா ரூ. 250 இற்கு விற்றார். அவருடைய திறமையும் துணிச்சலும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. இருப்பினும் இப்படியான பொருட்களின் விற்பனையால் அவர் பணக்காரியாகிவிடப் போவதோ அல்லது அலைகளைத் தாண்டி அவளது தீவுக்கு வேலை தேடி ஆட்களைக் கொண்டுவரப் போவதோ இல்லை. பெருந்தொகையான வருமானத்தைச் சம்பாதிக்கவேண்டுமானால் இவரைப் போல் கூர்மையான கண்களையும், ஸ்திரமான கைகளையும் கொண்ட பெண்களுக்கு வேலை கொடுத்து எலெக்ரோனிக் பண்டங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முன்வருவதே நாம் செய்யவேண்டிய பணி. வடக்கின் நம்பிக்கை விவசாயமும் கைவினைப் பொருட்களும் மட்டுமே என யாழ் தீனித் திருவிழா மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை போன்றவை காட்ட முயற்சிக்கலாம். பாரம்பரியத் தொழில்களால் மட்டுமே வடக்கில் மீளெழுச்சி ஏற்பட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வடக்கின் முன்னேற்றத்திற்கான சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டுவரக்கூடியவை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளே. சிறந்த வருமானத்தைப் பெறும் கட்டடக் கலைஞர், மென்பொருள் எந்திரிகள் முதல் வறுமையில் வாடும் தெருக்கூட்டுபவர்கள் வரை சேவைத் துறையில் அடங்குகிறார்கள். கணிசமான சம்பளம் கொடுக்கப்படுவதுடன் பணியாளர்களை நன்றாக நடத்தி சிறப்பாக நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் முதல் வியர்வையைக் காசாக்கும் தொழில்கள் வரை உற்பத்தித்துறையில் அடங்குகின்றன.

வீதியோரக் கள் விற்பனை – முல்லைத்தீவு

வறுமையில் உழலவைக்கும் தோட்டி வேலைகளை விட அதிக வருவாய் தரும் சிறந்த வேலைகளே எமக்குத் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாதா மாதம் ஸ்திரமான வருமானத்தைத் தரும் பணிகள் தான் வடக்கில் பெரும்பாலானவர்களின் பைகளை நிரப்ப வல்லன. வடக்கின் பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்யவல்ல இவ்வகையான பணிகளே உழைப்பவரின் கைகளில் காசைத் திணிக்கும் என்ற நெறிமுறையை அப்போதுதான் மக்கள் உணர்ந்து கொள்வார்கள். வரலாற்றின் இன்றைய தருணத்தில் இப்படியான சிறந்த பணியுற்பத்திக்கான சந்தர்ப்பங்கள் வடக்கில் மிகவும் அரிதாக இருப்பதாகவே தெரிகிறது. பல தசாப்தப் போரினால் தனிமைப்படுத்தப்பட்ட  வடக்கின் பூர்வீகத் தொழில் முனைவோருக்கு இப்படியான சிறந்த பணிகளை உருவாக்குவதற்கான அனுபவமோ அல்லது அவற்றுக்கான சந்தைகளை அடையும் ஆற்றலோ இல்லை. இந்தவிடத்தில் அனுபவமும் குறிப்பாக சந்தைகளைக் கண்டறியும் திறனும், கூடவே பண பலமும் புலம்பெயர்ந்தோரிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடந்த இரணடு வருடங்களில் கொழும்பைத் தளமாகக் கொண்ட தொழில் முனைவோர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவியிருக்கிறார். ஆடைத் தொழிலில் அவருக்கு முன்னனுபவம் எதுவும் இல்லாதிருந்துங்கூட உள்ளூர்ப் பெண்களுக்கு வேலை வழங்குவதற்காக தனது சமூகக் கடமையாக இதைச் செய்திருக்கிறார். அதிநவீன எந்திரங்களைக் கொண்ட இவ்வாலையில் ஒரே நேரத்தில் சில நூறு பேர் வரை பயிற்சியிலோ பணியிலோ ஈடுபடலாம். இருப்பினும் அதன் உற்பத்தித் திறனுக்கேற்ற தேவைகள் இல்லாமையால், ஏனோ தானோ என்று இயங்கிக்கொண்டிருக்கிறது. போதுமான சந்தைப் பரிச்சயமுள்ள ஒரு கொழும்பு வாழ் தொழில் முனைவராலேயே தன் உற்பத்திகளுக்கான சந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் புதிதாக ஆரம்பிக்கும் வடக்கு வியாபாரியின் நிலை என்னவாக இருக்கும்? எப்படியாவது வடக்கின் தொழில் முனைவோர், உற்பத்தியில் தமது சாகசங்களைக் காட்டுவர் என்ற நம்பிக்கை இருந்தாலும் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. இப்போதைக்கு இப்படியான சந்தர்ப்பங்கள் தெற்கில் ஏற்கெனவே இயங்கு நிலையுலிருக்கும் நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மூலமாகவே கொண்டுவரப்பட முடியும். ஏற்கெனவே தங்களுக்கான சந்தைகளை ஏற்படுத்தி வைத்திருக்கும், நுகர்வோர் தளங்களை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களால் மட்டுமே நல்ல வேலைகளையும் உற்பத்தி செய்ய முடியும்.

தமக்கு அரச உத்தியோகங்கள் வேண்டுமென்று கோரி சில வேலையற்ற பட்டதாரிகள் மார்ச் 2017 இல், யாழ். கச்சேரி முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றைப் பல வாரங்களுக்கு நடத்தினார்கள். போராட்டம் நடத்தும், ஓரளவு ஆங்கிலம் பேசக்கூடிய மூவரிடம் “ஏன் நீங்கள் அரசாங்க வேலைகளைக் கோருகிறீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் : அரச வேலைகள் (1) பாதுகாப்பானவை (2) இலகுவானவை (3) ஓய்வூதியம் தருபவை (4) நல்ல சீதனம் பெற்றுத் தருபவை! அது மட்டுமல்ல, அரசாங்கத்திடம் போதுமானளவு வெற்றிடங்கள் இருக்கின்றன எனவும் அவற்றை வேண்டுமென்றே தமக்குத் தர அரசாங்கம் மறுக்கிறது எனவும் அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள். இவ் வேலைகளை அரசாங்கம் மந்திரித்துக் கொடுக்கிறது என அவர்கள் நம்புகிறார்கள் எனவே நம்பவேண்டியிருக்கிறது.

சிப்பியில் வான்கோழி

அரச புள்ளி விபரங்களின்படி, கடந்த 10 வருடங்களில் அரச உத்தியோகங்கள் 40% ஆல் உயர்ந்திருக்கின்றன. அதே வேளை, இதே காலத்தில் நாட்டின் சனத்தொகை 6% ஆல் மட்டுமே அதிகரித்திருக்கிறது. நாட்டின் சனத்தொகையில் 6 மடங்குகளால் அரச உத்தியோகங்கள் அதிகரிக்குமாயின் இது நிச்சயம் ஒரு வெடிக்கப்போகும் குமிழேயாகும். அப்படி வெடிக்காவிட்டால் அது அமுக்கப்பட்டு சிறிதாக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு 25 வயதுப் பட்டதாரி அடுத்த சில தசாப்தங்களுக்கு அரச வேலையொன்றைத் தேடி ஓடுவாராகில் அரச உத்தியோகம் நிச்சயம் பாதுகாப்பற்ற ஒன்றுதான்.

இப்பட்டதாரிகள் கச்சேரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாளொன்றில் தான் கச்சேரிக்கு உள்ளே ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் தனது கைவினைக் காட்சிப்படுத்தலைச் செய்திருந்தது. ஆர்ப்பாட்டக்காரரை ஒருவாறு விலத்திக்கொண்டு நான் உள்ளே சென்று பண்டங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை வந்தது. “வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் வேலையில்லாப் பட்டதாரிகள் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திப் பண்டங்களைப் பார்த்திருப்பார்களா?” அனைத்து பாரம்பரியப் பண்டங்களையும் பார்த்த பின்னர் தான், ஏன் இந்தப் பட்டதாரிகள் அரச உத்தியோகத்திற்காக அலைகிறார்கள் என்பது ஓரளவு துலங்கியது.

யாழ்ப்பாணத்தில் ஆடைத் தொழிற்சாலை

வடக்கின் பொருளாதார மறுமலர்ச்சி தனியார் துறை மூலம் தான் உருவாக்கப்பட வேண்டும். நல்ல வேலைகளைத் துரிதமாகக் குறுகிய காலத்தில் வடக்கினால் உற்பத்தி செய்துவிட முடியாது. தெற்கிலுள்ள ஸ்திரமான நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் மூலமாக இங்கு கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவோ மட்டுமே இப்போதைக்கு இவ்வேலைகள் வடக்கிற்குக் கொண்டுவரப்பட முடியும். யாழ்ப்பாணத்திற்கோ அல்லது வடக்கிற்கோ வராமல், நிறுவனங்களால் அதிக இலாபத்தை ஈட்டவோ அல்லது குறைந்த நட்டத்தை ஈட்டவோ முடியும். உடனடி இலாபத்தினாலும் குறுங்கால வருவாயாலும் ஈர்க்கப்படாத தொழில் முகவர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். செழிப்புப் பரவலாக்கப்படும்போது ஸ்திரம் நிலைகொள்கிறது. இதுவே சாதாரண பிரஜைகளுக்கும் தொழில்முனைவோருக்கும் ஏன் நாட்டிற்கும் செழிப்பையும் ஸ்திரத்தையும் கொண்டுவரும்.

போர் முடிவுற்று ஏழு வருடங்கள் பொறுமையோடு காத்திருக்கும் வடக்கிற்கு இவ்வேலைகள் விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும். வேலைகளை உருவாக்குவது அரசின் வேலை அல்ல. தனியார் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலமும், புலம்பெயர்ந்தோரது முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமுமே வடக்கில் நிலையான பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். தனியார் துறையினதும், ஊருடனும் உறவுடனும் பிணைப்பைப் பேண விரும்பும் புலம்பெயர்ந்தோரினதும் பொறுப்புணர்வு மூலமே இதைச் சாதிக்க முடியும். இதுவரை, சில தவிர்ப்புகளுடன் அரசாங்கமும், தனியார் துறையும், புலம் பெயர்ந்தோரும் மிகவும் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றனர்.

இக்கட்டுரை ஏப்ரல் 18, 2017 இல் லங்கா பிசினஸ் ஒன்லைன் பத்திரிகையில் வெளிவந்தது.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4199 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)