பொதுவசதிகள் துறையின் கீழ் உள்ளடங்கும் ஒரு பிரதான வசதிச் சேவையாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கல் என்பன இருந்து வருகின்றன. நாட்டின் அனைத்துப் பிரதான பொருளாதார உற்பத்தி மூலங்களையும் இயக்கும் சக்தி வளங்களாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வளங்கள் இருந்து வருகின்றன. நீர் மின்வலுவும் எரிபொருள் வலுவும் இணைந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதுடன் மாற்றுச்சக்தி வளங்களான காற்றாலைகள் மற்றும் சூரியப்படல்கள் மூலமும் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. மின்சார வளங்களில் நீர்வலு மூலமான மின்னுற்பத்தி என்பது இலங்கையின் நிலைத்திருப்பிற்கான நீர் மூலமாக இருந்து வருவதுடன், செலவுச் சுருக்கமான முறையில் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான உத்தமமான வள மூலமாகவும் இருந்து வருகிறது. எரிபொருள் மூலம் சக்தி பிறப்பிப்பதற்காக நிலக்கரி, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன.
எரிபொருளின் அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிதிச் செலவீனம் அதிகமாக இருப்பதால், பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுகின்றது. ஆகவே, இலங்கை 2030ஆம் ஆண்டிற்குள் தனது மின்சாரத் தேவையின் 70 சதவீதத்தை மாற்றுச் சக்திவளங்களில் இருந்து பெறவேண்டும் எனும் சக்தி தன்னிறைவுத் திட்டத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. மேலும், 2050க்குள் காபன் சமநிலையை அடையும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது. இலங்கையின் பசுமைப் போர்வையை 32%ஆகப் பேணுவதன் மூலம் காற்று மாசடைதலை 14.5%இனால் குறைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் மொத்த மின்சார நுகர்வு வருடத்துக்கு 388.4GH ஆகவும், கிழக்கு மாகாணத்தின் மின்சார நுகர்வு வருடத்துக்கு 804.2GH ஆகவும் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் 11 சேவை வழங்கும் நிலையங்களுக்கூடாக 396,595 உள்ளூர்ப் பாவனையாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 27 சேவை வழங்கும் நிலையங்களுக்கூடாக 593,270 உள்ளூர்ப் பாவனையாளர்களும் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை வகைப்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது, உள்ளூர்ப் பாவனையாளர்களுக்காக வடக்கு மாகாணத்தில் 267.5GH மின்சாரமும், கிழக்கு மாகாணத்தில் 519.3GH மின்சாரமும் பயன்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் மத நிறுவனங்களின் பாவனைக்காக வருடாந்தம் 8GH மின்சாரமும், கிழக்கு மாகாணத்தில் 4.1GH மின்சாரமும் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தக நிலையங்களின் மூலம் கிழக்கு மாகாணத்தில் 63GH மின்சாரமும், வடமாகாணத்தில் 97.6GH மின்சாரமும் வருடாந்தம் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்க நிறுவனங்களால் வடமாகாணத்தில் 1.9GH மின்சாரமும், கிழக்கு மாகாணத்தில் 1GH மின்சாரமும் பயன்படுத்தப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 99.8 சதவீதமான மக்களும், மட்டக்களப்பில் 99.8 சதவீதமான மக்களும் மின்சார இணைப்பைப் பெற்றுள்ளனர். உள்ளூர் மின்சாரத் திட்டத்திலிருந்து ஒரு சதவீதமான மின்சாரத் தேவையும், மாற்றுச் சக்திவள மூலங்களான சூரிய மின்கலம், இயற்கைவாயு, காற்றாலைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் என்பவற்றிலிருந்து 32 சதவீதமான மின்சாரத் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றது. மாற்றுச் சக்திவளப் பாவனையை அதிகரிக்கக்கூடிய வளங்களும் வாய்ப்புகளும் இம்மாகாணத்தில் அதிகளவில் காணப்படும்போதிலும், இம்மாகாணத்தில் மாற்றுச் சக்திவள மூலங்களிலிருந்து பத்து சதவீதமான மின்சாரமே பெறப்படுகிறது. எரிசக்தி வளங்களைப் பொறுத்தளவில், இலங்கையில் 57.7 சதவீதமானவர்கள் தங்கள் சமையல் தேவைகளுக்காக விறகினைப் பயன்படுத்துவதுடன், 40 சதவீதமானவர்கள் சமையல் எரிவாயுவையும், 1.4 சதவீதமானவர்கள் மண்ணெண்ணையையும், ஒரு சதவீதமானவர்கள் ஏனைய மாற்று வளங்களையும் பயன்படுத்துகின்றனர். வடக்கு மாகாணத்தில் 67.6 சதவீதமானவர்களும், கிழக்கு மாகாணத்தில் 49.2 சதவீதமானவர்களும் சமையல் தேவைகளுக்காக விறகைப் பயன்படுத்தி வருகின்றனர். சமையல் எரிவாயுவினை வடக்கு மாகாணத்தில் 28.6 சதவீதமானவர்களும், கிழக்கு மாகாணத்தில் 47.2 சதவீதமானவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மண்ணெண்ணையை வடமாகாணத்தில் 2.9 சதவீதமானவர்களும், கிழக்கு மாகாணத்தில் 2.4 சதவீதமானவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
விறகுப் பாவனையை அதிகம் நம்பியுள்ள இவ்விரு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணத்தில் 56 சதவீதத்தினரும், வடமாகாணத்தில் 44 சதவீதத்தினரும் சேகரிக்கப்படாத விறகினைப் பயன்படுத்தி வருகின்றனர். சேகரித்து வைத்துப் பயன்படுத்தும் விறகுகள் என்ற முறைமையின் கீழ் வடக்கு மாகாணத்தில் 56 சதவீதமானவர்களும் கிழக்கு மாகாணத்தில் 44 சதவீதமானவர்களும் விறகினைப் பயன்படுத்தி வருகின்றனர். வடமாகாணத்தில் 27 சதவீதமானவர்களும், கிழக்கு மாகாணத்தில் 20 சதவீதமானவர்களும் தமது சொந்த வளவுகளில் பெற்றுக்கொள்ளும் விறகினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தவகையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சக்திவளப் பயன்பாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகளும் வளங்களும் பயன்படுத்தப்படாதிருப்பதை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இலங்கையின் மொத்தப் பசுமைப் போர்வை 27 சதவீதம் ஆகும். இதில் 90 சதவீதமான காடுகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் காணப்படுவதால், விறகின் பாவனையை அதிகரிப்பதன் மூலம் மின்சாரம் மற்றும் எரிவாயுவின் தேவையைக் குறைத்துக் கொள்வதுடன், நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் யுத்தத்துக்குப் பிந்திய கால அபிவிருத்தித்திட்டங்களின் பயனாக, மரநடுகை மூலம் நீண்டகாலம் பயன்தரும் மரங்கள் நடப்பட்டு வருவதால், காடாக்கத்தின் செறிவு அதிகரித்து வருகின்றது. எனினும் இதிலிருந்து கிடைக்கும் விறகினை, ‘கரி பிடிக்கிறது’ என்ற காரணத்துக்காகப் பலரும் பயன்படுத்துவதில்லை. இதனால் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சனச்செறிவுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பாளருக்கு அவசியமாகவுள்ள எரிவாயுவினை, இப்போது தமது சூழலில் காடுகளைக் கொண்ட கிராம மக்களும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது சாத்தியமான வள வீணடிப்பாக அமைகிறது.
இலங்கை மின்சார சபையினால் சூரிய மின்சக்தியைக் கொள்வனவு செய்யமுடியாதுள்ளதால், வருடத்தில் பத்து மாதங்கள் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூழல்கொண்ட இந்த இரு மாகாணங்களிலும், அதன் உற்பத்தி தடைப்படுவதாக பலரும் குறைகூறி வருகின்றனர். சிறியளவில் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் பலர் தயாராகவிருக்கும் நிலையிலும், மின் கட்டமைப்புகளில் காணப்படும் தகமையின்மை காரணமாக, இத்துறைசார்ந்த ஊக்க முயற்சிகள் போதிய பலனைத் தரவில்லை எனலாம். சூரிய மின்கல உற்பத்தி மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய 3 அவத்தை மின்பிறப்பாக்கிகள் அவசியமாகவுள்ளது. புதிதாக இதனைச் செய்ய, மின்மாற்றிகளைப் பொருத்த முடியாத நிலை இப்போதைய மின் கட்டமைப்பில் காணப்படுகிறது. இணைப்புக் கேபிள்கள் இல்லையெனவும் மின்பிறப்பாக்கிகளை இறக்குமதி செய்யமுடியவில்லை எனவும் சிறுபிள்ளைத்தனமாகக் காரணம் கூறப்படுகின்றது. தேசிய கொள்கையில் கூறப்பட்டுள்ள 70 சதவீத மாற்றுவலு உருவாக்கத்துக்கேற்ப உள்ளகக் கட்டமைப்பிலும் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆரம்பத்தில் வங்கிகளின் நிதியின் மூலம் சூரிய மின்படல்களை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்த பலர், அப்போதிருந்த போட்டியற்ற சூழல் காரணமாக அதற்கான இணைப்பை இலகுவாகப் பெற்றுக்கொண்டனர். ஆனால், முதலீட்டுத் தொழிலாக இதனைச் செய்வதற்கு பல்வேறு தனியார் முதலீட்டாளர்களும் புலம்பெயர்ந்தவர்களும் தயாராகியுள்ள இன்றைய நிலையில், வடக்கு – கிழக்கில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படாமை, அம் முன்னெடுப்புகளைச் சாத்தியமற்றதாக்கியுள்ளன.

காற்றாலைகள் மூலம் இலங்கையில் மேலதிகமாக மின்சாரத்தை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 3867 மெகாவாட் மின்சாரத்தினை உத்தரவாதப்படுத்தும் திட்டத்தின் கீழ் 100 மெகாவாட் திறன்கொண்ட 19 காற்றாலைகள் திட்டம், 134 மெகாவாட் திறன்கொண்ட 26 காற்றாலைகள் திட்டம், 35 கிலோமீற்றர் நீளமான மின்கடத்துப் பாதைகள், 220 கிலோவாட் துணைமின் நிலையத்திற்கான திட்டம் போன்றன பேண்தகு சக்திவள அதிகார சபையினால் தயார் செய்யப்பட்டன. பூநகரியில் காற்றாலைப் பூங்காத்திட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், மாற்றுக்கொள்கைகளுடன் மீள்-வடிவமைப்புச் செய்யப்படுவதற்காக அது தற்போது இடைநிறுத்தப்பட்டு, புதிய ஒப்பந்தம் தயார்செய்யப்பட்டு வருகின்றது. இதனால் இதற்கெனச் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்டுள்ளன. இது தேசிய குறிக்கோளை அடைவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தவிர, பூநகரி வேரவில் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள 204 மெகாவாட் உற்பத்தி செய்யும் 35 காற்றாலைகள் திட்டமும், அனுமதிபெறும் கட்டத்தில், சாத்தியவள ஆய்வு என்ற அடிப்படையில் மட்டும் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நிதிமூலம் எதுவும் இனங்காணப்படாத நிலையில், இத்திட்டமானது நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லக்கூடும்.
வலுச்சக்தி மூலமான பெற்றோலியம்
வலுசக்தி மூலங்களில் ஒன்றாகக் காணப்படும் பெற்றோலியம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரில் நுகரப்படும் ஒரு பிரதான வலுச்சக்தி வளமாகக் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் மன்னார்க் கடல் பகுதியில் பெற்றோலிய வளம் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், அதனைப் பயன்படுத்தும்போது ஏற்படும் உற்பத்திச் செலவுகள் காரணமாக, அது பொருளாதார ரீதியாக குறைவான பயனுடையதாகவே இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. இதனால், இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக கருத்திட்ட மட்டத்திலேயே இருக்கின்றன. பெற்றோலிய வளத்தினைக் கொள்வனவு செய்து வழங்கும் பிரதான பணியை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமே மேற்கொண்டு வந்தது. இப்பணியை இப்போது இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனம் (IOC) மற்றும் சீனாவின் ‘Sinopec’ போன்ற நிறுவனங்களும் செய்துவருகின்றன. கொவிட் நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு இந்த நிறுவனங்களின் நுழைவுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழே மட்டக்களப்பில் 37 எரிபொருள் முகவர்களும், அம்பாறையில் 52 எரிபொருள் முகவர்களும், திருகோணமலையில் 19 எரிபொருள் முகவர்களும் செயற்படுகின்றனர். இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் (IOC) அம்பாறையில் 4 முகவர்களும், மட்டக்களப்பில் ஒருவரும், திருகோணமலையில் 5 முகவர்களும் செயற்படுகின்றனர். வடக்கு மாகாணத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 36 முகவர்களும், கிளிநொச்சியில் 9 முகவர்களும், முல்லைத்தீவில் 9 முகவர்களும், வவுனியாவில் 10 முகவர்களும், மன்னாரில் 12 முகவர்களுமாக மொத்தமாக 76 முகவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் (IOC) யாழ்ப்பாணத்தில் 2 முகவர்களும், கிளிநொச்சியில் ஒருவரும், வவுனியாவில் 2 முகவர்களும், மன்னாரில் ஒருவரும், முல்லைத்தீவில் ஒருவருமாக மொத்தம் 7 முகவர்கள் செயற்படுகின்றனர்.
இவற்றினூடாக பெற்றோல், 92 Octane, 95 சிறப்புப்பெற்றோல், ஆட்டோ டீசல் என்பனவும் மண்ணெண்ணையும் விற்பனை செய்யப்படுகின்றன. வாகனங்களை இயக்குவதற்காக இவ்விரு மாகாணங்களிலும் பெற்றோலியப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பிரதான துறைமுகத்திலிருந்து மிகத் தூரத்திலிருக்கும் இவ்விரு மாகாணங்களிலும் போக்குவரத்துச் செலவு காரணமாக பொருள்களின் விற்பனை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. யுத்தத்துக்கு முந்தைய காலப்பகுதியில் கிளிநொச்சியில் எண்ணெய்க்குதம் செயற்பட்டது. அது இப்போது முழுமையாகக் கைவிடப்பட்டுவிட்டது. வடமாகாணத்துக்குரிய பிரதான வழங்கல் எண்ணெய்க்குதம் இப்போது அனுராதபுரத்திலேயே செயற்படுகிறது. அங்கிருந்து பவுசர்கள் மூலம் மட்டுமே தரை வழியாக எரிபொருள்களை எடுத்து வருவதால், அடிக்கடி வீதிவிபத்துகள் ஏற்பட்டு எரிபொருள் இழப்பும் ஏற்படுகிறது. முன்னர் புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்டபோது இருந்த பாதுகாப்பு, இப்போது இந்த விநியோகத்தில் இல்லாமல் போய்விட்டது. சிறிய எண்ணிக்கையில் அதிகளவிலான பவுசர்கள் மூலம் விநியோகம் இடம்பெறுவதால் விற்பனை விலையும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் புகையிரதம் மூலம் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுவதுடன், திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதத்திலிருந்தும் விநியோகம் இடம்பெறுகிறது. எனினும் இதன் முழுநிலைப் பயன்பாடு இப்போது இடம்பெறுவதில்லை. நேரடியாக திருகோணமலைக்கு கப்பல்களில் எரிபொருள் எடுத்துவந்து சேமித்தால்தான் அதன் உத்தமப் பயன்பாடு உச்சமாக அமையும். மாறாக கொழும்புத் துறைமுகம் மூலமே இப்போது இந்த வழங்கற் சேவை இடம்பெறுவதனால், போக்குவரத்துப் பரிமாற்றச் செலவீனத்தை உள்ளடக்கிய விலையையே கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மன்னாரைத் தவிர வேறு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் காணப்படாமையால் கடற்றொழில் சார்ந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் மேலதிக சிரமங்கள் ஏற்படுகின்றன. கிராமத்துக்கு மத்தியிலுள்ள விநியோக நிலையங்களிலிருந்தே கடற்கரைக்கு எரிபொருள்களை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளதால், மீனவர்களுக்கு இதுவொரு மேலதிகத் தொழிற் சுமையாக இருந்து வருகிறது.
இவ்விரு மாகாணங்களில், மாற்றுச் சக்தி வளங்களில் அதிக வாய்ப்பும் வளங்களுமுள்ள வலுச்சக்தி மூலமாக காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி ஆகிய இரண்டும் காணப்படுகின்றன. இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் பயன்படும் காற்றானது நேரடியாக வடமாகாணத்தின் மன்னார் – யாழ்ப்பாணம் வரை வீசுவதனால், இக்காற்றின் பயன்பாட்டைக்கொண்டு காற்றாலைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. காற்றாலைகள் நிறுவப்படும் கரையோரப்பரப்புகள் அதிக சனச்செறிவைக் கொண்டிருக்காததும், காடுகளை அண்மித்ததாகக் காணப்படுவதும் இந்த முதலீட்டு முயற்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. சமூகப் பாதிப்புகளைக் குறைத்துக்கொண்டு தேசிய நன்மை தரும் இவ்வாறான திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியது நாட்டின் நலன்கருதும் அவசரத் தேவையாகவுள்ளது.

இலங்கையின் மின் விநியோகக் கட்டமைப்புகள், ஆரம்பம் முதலே நீர் மின் சக்தி, பெற்றோலியம், நிலக்கரி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு நிறுவப்பட்டுள்ளதால், சூரிய மின்கலம் மூலம் மின்சார உற்பத்தியைச் செய்வது இங்கு சிரமமானதாக உள்ளது எனலாம். ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் தேசிய கட்டமைப்பிலிருந்து வரக்கூடிய மின்சாரத்தை வழங்கல் செய்வதற்கேற்ற Kw செயற்றிறனைக் கொண்டவையாகவே இருக்கின்றன. இந்தக் கட்டமைப்புச் சூழலில், புதிதாக சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தியை மேற்கொள்ளும் செயற்பாட்டில், மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்யக்கூடிய உபமின் பரிமாற்று நிலையங்களின் (Grid Station) செயற்திறன் அளவு குறைவாக இருப்பது, பிரதான பிரச்சினையாக உள்ளது. மின்சாரத்தைச் சேமித்துவைத்துப் பயன்படுத்தமுடியாத நிலைமையில், அதனை பிறிதொரு வழங்கல் சேவைக்கு பரிமாற்றம் செய்தல் வேண்டும். சூரிய மின் உற்பத்தியானது பகல் பொழுதில்தான் உச்ச அளவில் இடம்பெறுகிறது. அதன் பயன்பாடு பகலைவிட இரவில்தான் அதிகளவில் நிகழ்கின்றது. இதனால் இந்த உள்ளீட்டு – வெளியீட்டுப் பொறிமுறையில் நினைத்த நேரத்தில் மாற்றங்களைச் செய்துகொள்ள முடியாதுள்ளது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கேற்ற வகையில் உபமின் பரிமாற்று நிலையம் ஒன்றை மேலதிகமாக அமைத்துக் கொள்வதன் மூலம்தான், மின்மாற்றிகளின் தொகையை அதிகரிக்கலாம் என்பதனால், சூரிய சக்தியின் வினைத்திறனை உயர்த்துவதில் இதன் தேவைப்பாடு அவசியமாகியுள்ளது. காற்றாலைகளும் தமது மின்னுற்பத்தியை, நேரடியாக அமைக்கப்படும் தனியான வழங்கல் கட்டமைப்பின் மூலம், அனுராதபுரத்திலுள்ள மின் பரிமாற்று நிலையத்துக்கு வழங்கித்தான் தமது செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்தவகையில், இவ்விரு உற்பத்தி முயற்சிகளிலும் அதிகளவான வாய்ப்புகள் காணப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில், இவற்றை முழுமையாகச் செய்வதற்கு, சாத்தியமான கட்டமைப்பு விரிவாக்கமானது திட்டமிடப்பட்டு, வளங்கள் உத்தமமாக்கப்படல் வேண்டும்.