ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல
‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய அக்கட்டுரையைத் தழுவி இத் தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் வடிவமைக்கப்பட்ட பாராளுமன்றம் காலனிய ஆட்சிக்காலத்தில் (1833-1948) பரிணாமம் பெற்றதையும், சுதந்திரத்தின் பின்னர் அதன் கட்டமைப்பு அதிகாரங்கள் அந்தஸ்து என்பன மாற்றமுற்றதையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

அறிமுகம்
மக்களின் இறைமையின் பாகமாக அமையும் சட்டவாக்க அதிகாரத்தை (Legislative Power) பிரயோகிப்பதற்கான அரசின் அங்கமாக இலங்கையின் பாராளுமன்றம் விளங்குகிறது. மக்களால் ஜனநாயகமுறையில் பொதுத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைவதே பாராளுமன்றமாகும். மக்களிடம் உறையும் சட்வாக்க அதிகாரம் பாராளுமன்றத்தின் ஊடாகச் செயற்படுத்தப்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் அரசியல் யாப்புக்கான திருத்தங்களை மேற்கொள்ளும் போது, சர்வசன வாக்கெடுப்பின் மூலம் (Referendum) மக்களிடம் நேரடியான சம்மதத்தைப் பெறுவதும் உண்டு. இதனைவிட, அவசரகால நிலைமையின் (Emergency) கீழ் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதான ஏற்பாடு அரசியல் யாப்பில் உள்ளது (உறுப்புரை 155).
அரசியல் யாப்பு மாகாண சபைகளுக்கும் சட்ட ஆக்க அதிகாரங்கள் சிலவற்றைப் பகிர்ந்தளித்துள்ளது. இவ்வாறான விதிவிலக்குகளைத் தவிர்த்து இலங்கையின் அரசியல் யாப்பின்படி சட்ட ஆக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் பிரதான அங்கமாக (Primary Legislative Organ of the State) பாராளுமன்றம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றமுறை அரசின் தாயகமாக பிரித்தானியா விளங்குகிறது. பாராளுமன்றங்கள் நவீன அரசுகளில் ஜனநாயகமுறையில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றன. இவை, தனித்துவமான அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்டவையாகும். ஜனநாயகமுறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவ சபை என்ற வகையில், பாராளுமன்றத்தின் பிரதான கடமையும் பொறுப்பும், மக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு கருத்துகளையும் பிரதிபலிக்கும் சபையாக விளங்குவதோடு, மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் அரங்காகவும், மக்கள் யாவருக்கும் சேவையாற்றும் சபையாகவும் விளங்குவதேயாகும். அரசியல் யாப்பின்படி பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் பிரதானமான அதிகாரம், சட்டங்களை இயற்றுதலும், சட்டங்களை இரத்து செய்தலும் (Repeal Laws), அரசியல் யாப்புக்கான திருத்தங்களைக் கொண்டு வருதலும் ஆகும். பாராளுமன்றத்தின் இன்னொரு பிரதான பணியும், அதிகாரமும் மந்திரிசபையை பொறுப்புக்கூற வைத்தலாகும். நிர்வாக அதிகாரத்தை பிரயோகிக்கும் மந்திரிசபையைப் பாராளுமன்றம் மேற்பார்வை செய்து கட்டுப்படுத்துகிறது. பாராளுமன்றம் அரசாங்கக் கொள்கைகளையும் இயற்றப்படும் சட்டங்களையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்கிறது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தைப் பதவியிழக்கச் செய்கிறது. அரசாங்கத்தை இவ்வாறு பதவியிழக்கச் செய்தல், நம்பிக்கையை வாபஸ் பெறுதல் (Confidence Withdrawal) என்னும் அதிகாரப் பிரயோகமாகும். ஜனாதிபதியின் மீது குற்றச்சாட்டு நடவடிக்கையை (Impeachment) மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது (உறுப்புரை 38,48). இதனைவிடப் பாராளுமன்றம் அரசாங்க நிதியின் காப்பாளன் (Custodian of Public Finance) என்னும் வகிபாகத்தையும் பெறுவதால், அதன் அனுமதியும் அங்கீகாரமுமின்றி நிர்வாகத்துறை பொதுநிதிக்குப் பணத்தைத் திரட்டவோ அல்லது அந்நிதியில் இருந்து செலவுகளைச் செய்யவோ முடியாது.
இலங்கையின் பாராளுமன்றத்தின் தோற்ற மூலமாக 1833 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் குறிப்பிடலாம். காலனிய அரசாங்கத்தின் ஆளுநருக்கு சட்ட ஆக்கம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு அவ்வாண்டில் ஏற்படுத்தப்பட்ட சபையினை ‘முந்து சட்டசபை’ (Proto-Legislature) என அழைத்தல் பொருத்தமானது. காலப்போக்கில் படிப்படியான மாற்றங்கள் மூலம் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் பயனாக இன்றைய நிலைக்குப் பாராளுமன்றம் மாற்றமுற்றது. இந்த வரலாற்று வளர்ச்சி படிப்படியானதாக அமைந்த போதும், இடையிடையே சடுதியான திருப்பங்களாக அமைந்த மாற்றங்களும் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றில் ஏற்பட்டன. இச்சபையின் பெயரும் காலத்திற்குக் காலம் மாற்றம்பெற்று வந்துள்ளது.
- சட்டசபை (Legislative Council): 1833 முதல் 1931 வரை
- அரசுச்சபை அல்லது ஸ்டேற் கவுன்சில் (State Council): 1931 முதல் 1946 வரை
- பாராளுமன்றம் (சனப்பிரதிநிதிகள் சபை, செனெற் என்று இரு சபைகள் கொண்டது): 1946/7 முதல் 1971/2 வரை
- தேசிய அரசுப்பேரவை (National State Assembly): 1972 முதல் 1978 வரை
- பாராளுமன்றம் (Parliament): 1978 இல் மீண்டும் பெற்றுக்கொண்ட இப்பெயர் இன்றுவரை தொடர்கிறது.
பாராளுமன்றம் என்ற நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சி பிரித்தானியாவின் காலனியாக இலங்கை இருந்த காலத்தில் ஏற்பட்டது. காலனியாட்சிக் காலத்திலேயே அதன் படிமுறை வளர்ச்சி அமைந்ததால், பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறைமையின் மரபுகளும், வழமைகளும் இலங்கையின் பாராளுமன்ற நடைமுறைகளில் பின்பற்றப்படுவதைக் காணலாம். வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறைமையைப் பின்பற்றும் சில பொதுநல அமைப்பு நாடுகளின் பாராளுமன்றங்களுடனும் இலங்கையின் பாராளுமன்றம் சில பொதுவான இயல்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக பாராளுமன்றச் சிறப்புரிமைகள் (Parliamentary Privileges) என்னும் விடயத்தில் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் பொதுநல அமைப்பு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது. இலங்கையின் பாராளுமன்றம் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறையில் இருந்து வேறுபட்ட அமைப்பியல் அம்சங்களை 1972 க்குப் பிந்திய வரலாற்றில் உள்வாங்கிக் கொண்டது.
- 1972 இல் இலங்கை குடியரசு ஆனது.
- 1978 இல் ஜனாதிபதிமுறை (Presidentialism) ஏற்படுத்தப்பட்டது.
- 19 ஆவது அரசியல் யாப்புத்திருத்தம் அரசியல் யாப்பில் முக்கியமான அமைப்பியல் மாற்றங்களை ஏற்படுத்தி, பாராளுமன்றத்தின் அரசியல் யாப்பு அந்தஸ்தை முன்னரிலும் உயர்த்துவதாக அமைந்தது.
19 ஆவது திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் முக்கியத்துவத்தினை 2017 ஆம் ஆண்டின் அரசியல் சட்டச்சிக்கல் (Constitutional Crisis) எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அவ்வாண்டில் ஜனாதிபதி சிறிசேன பதவியிலிருந்த அரசாங்கத்தைப் பதவிநீக்கம் செய்து பாராளுமன்றத்தையும் கலைத்து விடுவதற்கு செய்த முயற்சியை பாராளுமன்றம் எதிர்த்து வெற்றிகண்டது. அவ்வெதிர்ப்புக்கும், வெற்றிக்கும் பாராளுமன்றத்தின் ‘நம்பிக்கை’, ‘பொறுப்பு’ என்னும் இரு தத்துவங்கள் (Twin Principles of Confidence and Responsibility) ஆதாரமாக அமைந்தனவெனலாம்.
பிரித்தானியாவின் காலனியாக இலங்கை இருந்தமையால், இலங்கைப் பாராளுமன்றம் வெஸ்ட்மினிஸ்டர் முறையின் மரபுகளதும் வழங்கங்களினதும் செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. ஆயினும் 1972, 1978 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு மாற்றங்கள், இலங்கையில் வெஸ்ட்மினிஸ்டர் முறையில் இருந்து வேறுபட்ட அமைப்பியல் அம்சங்களைப் புகுத்தியுள்ளன. தற்போதுள்ள முறையில் மேலும் திருத்தங்கள் தேவையா என்ற விவாதம் இன்றுவரை (2019 வரை) தொடர்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை (Executive Presidential System) ஒழிக்கப்படுமானால், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அந்தஸ்திலும் அதன் அதிகாரங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். பாராளுமன்றமுறையில் மந்திரிசபை முதன்மை பெறும். இக்காரணத்தால் பாராளுமன்றமும் அரசியல் நடவடிக்கையின் குவிமையமாக மாற்றமுறும். நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுவார். ஜனாதிபதி அவ்விதம் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருக்கும் போது பாராளுமன்றம் நாட்டின் அரசு அதிகாரத்தின் (State Power) மூலமாக மாறும். அதன் அதிகாரங்கள் அதிகாரப் பிரிப்பு (Separation of Powers), அடிப்படை மனித உரிமைகள் என்பனவற்றால் மட்டுமே எல்லைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். அவ்வாறான பெருமாற்றம் பற்றி ஆலோசிக்கப்படுவதாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படப்போகும் மாற்றத்தின் விளைவுகள் பற்றி விழிப்புடையவர்களாக இருத்தல் அவசியம்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் பரிணாம வளர்ச்சி
இலங்கையின் இன்றைய அரசியல் நிறுவனங்களுக்கு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது. அரசின் தலைவர் (Head of State), நீதி விசாரணைக்கான பல்வேறு அமைப்புகள், உள்ளூராட்சிமன்றம் (Local Government) ஆகியனவற்றுக்கு காலனியத்துக்கு முந்திய கால (Pre Colonial Past) வரலாறும் உள்ளது. ஆயினும் முடிமன்னரின் அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தும் சட்டசபை (Legislature) என்னும் நிறுவனத்திற்கு காலனியத்திற்கு முந்திய வரலாறு கிடையாது. மக்கள் சமூகமாக அல்லது ஒரு குழுவாக, மன்னர்களின் சட்ட ஆக்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. நவீன காலத்திற்கும் பண்டைய காலத்திற்கும் உள்ள இந்த வேறுபாட்டை இரு எண்ணக்கருக்களின் துணையுடன் விளக்கிப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, காலனித்துவத்திற்கு முந்திய காலத்தில் சட்டம் என்ற கருத்தாக்கம் (The Concept of Law) வேறுபட்டதாக இருந்தது. இரண்டாவதாக, பண்டைய முடியாட்சியில் (Monarchy) அரசனின்/அரசியின் அதிகாரத்தின் இயல்பு வேறுபட்டதாக இருந்தது. பண்டைநாளில் சட்டத்தின் பிரதான தோற்றுவாயாக வழமைகள் (Customs) அமைந்தன. அவை மக்களால் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்ட வழமைகளாகும். பண்டை நாட்களில், சட்டத்தை இயற்றுவதால், வழமைகள் கூட மாற்றப்பட்டன என்பது உண்மையே. ஆயினும் அக்காலத்தில் சட்டத்தை இயற்றுபவர் அரசர்/அரசியாகவே இருந்தார். இலங்கையின் வரலாற்றில் முடிமன்னர் விரிந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தனர் ஆயினும் அவர்களால் சர்வ அதிகாரமும் படைத்தவர்களாக இருக்கமுடியவில்லை. காரணம் அவர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் அறக்கருத்துகள் (Moral Principles) இருந்தன. அவ் அறக்கருத்துகள் சமயத்தை ஆதாரமாகக் கொண்டிருந்தன. இவ்வாறு சமயத்தின் ஆதாரத்தில் அமைந்த அறக்கருத்துகள், வழமைகள் ஊடாக அரச அதிகாரத்தைக் கட்டுப்படுத்தின. இவ்வழமைகள் சட்ட ஆக்கத்தின் மீது கட்டுப்பாட்டை விதித்தன. இக்காரணத்தால் பண்டைய நாளில் சட்டசபை அல்லது சட்ட மன்றம் (Legislature) என்ற நிறுவனம் தோன்ற வேண்டிய தேவை எழவில்லை. இலங்கையைப் பிரித்தானியாவுடன் ஒப்பிடும் போது இவ்வேறுபாடு தெளிவாகப் புலப்படுகிறது. பிரித்தானியாவில் அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றம் உருவானது. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியின் தோற்ற மூலம் இதுவேயாகும். ஆகையால் பாராளுமன்றம் என்ற கருத்து, இலங்கையின் வரலாற்றில் நவீன காலத்திற்குரிய புதிய அம்சமாகும்.
1833 ஆம் ஆண்டின் கோல்புறூக் கமெரன் சீர்திருத்தங்கள் இலங்கையில் நவீன அரசாங்கம் (Modern Government) தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தன என இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1833 இல் முதன்முதலாக சட்டசபை (Legislative Council) என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இச்சட்டசபை அதிகாரமற்ற, பலமற்ற சபையாக இருந்ததெனினும் இச்சபையை நிறுவியமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அக்காலத்தில் பிரித்தானியாவில் நிலவிய லிபரல் தத்துவங்களான பிரதிநிதித்துவம், பொறுப்புக்கூறல் (Liberal Principles of Representation and Accountability) என்பனவற்றின் அடிப்படையில் இவ்வரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் எதிர்காலத்தில் சுயாட்சியை (Self Government) நோக்கிய நகர்வு ஏற்படும்; அதற்கு அடிப்படையான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு (Institutional Development) சட்டசபை முதற்படியாக அமையும் என கோல்புறூக் கமெரன் குழு கருதியதெனலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சட்டசபை என்ற நிறுவனம் ஒரு நூற்றாண்டு காலத்தில் பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சி பெற்றது. சட்டசபையின் அதிகாரங்கள் கூட்டப்பட்டன. அதன் உறுப்பினர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சட்டசபையின் உறுப்பினர்களில் பெரும்பான்மையினராக காலனிய அரசாங்க அதிகாரிகள் இருந்தனர். காலப்போக்கில் சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்ட உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் (Non Officials) எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உத்தியோகப்பற்றற்றோர் எண்ணிக்கை, உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விடக் கூடிய அளவில் காணப்பட்டது. தோட்டத்துறை, வர்த்தகம் முதலிய பொருளாதார நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் நாட்டின் வெவ்வேறு இனக்குழுமங்களையும் சமயப் பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் (Unofficial Members) என நியமனம் செய்யப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் சட்டசபைக்கு தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும் சொத்துடையவர்களும் படித்தவர்களுமான ஒரு சிறு விகிதாசாரத்தினரே பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக இருந்தனர். 1920களில் சட்டசபை மாதிரி (Legislative Council Model) பயனற்ற ஒன்றாக மாறியிருந்தது. அச்சபையில் அரசாங்க அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களும் இருந்தனர். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டோர் 1920களில் பெரும்பான்மையினராக இருந்தனர். அரசாங்கத்தின் அலுவல்களைக் கொண்டியக்குவதற்கு சட்டசபையின் சம்மதம் (Consent) காலனிய அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டது. ஆயினும் சட்டசபையின் உத்தியோகத்தர்கள் அல்லாத அங்கத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பவர்களாக இருக்கவில்லை. அதிகாரமற்றவர்களான இவர்களுக்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கான தூண்டுதலும் இருக்கவில்லை. இதனால் அரசாங்கத்தின் அலுவல்களைக் கொண்டியக்குவதற்கு சட்டசபை ஒரு தடையாக இருப்பதை அரசாங்கம் உணர்ந்தது. சட்டசபை மாதிரி பொருத்தமற்றதாக ஆகியதன் பின்னணி இதுவே.
டொனமூர் அரசியலமைப்பு
1931 இன் டொனமூர் அரசியலமைப்பு, 1920 கள் காலத்து சட்டசபை மாதிரியில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட நிறுவனமான அரசுக்கவுன்சில் (State Council) என்னும் சபையை உருவாக்கியது. ஸ்டேட் கவுன்சில் சட்ட ஆக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் (Executive Power) என்ற இருவகை அதிகாரங்களையும் கொண்ட சபையாகும். இச்சபைக்குப் பிரதிநிதிகள் பிரதேசவாரியான தேர்தல் தொகுதிகளில் (Territorial Constituencies) இருந்து தெரிவு செய்யப்பட்டனர். 1931 இல் 21 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பொதுத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டசபைக்கு அரசாங்கக் கொள்கை வகுத்தலில் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சட்டசபை உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் முக்கியமான அரசாங்கத்துறையொன்று பொறுப்பாக வழங்கப்பட்டது. குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டார். இக்குழுக்களின் தலைவர்களும், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மூவரும் கொண்ட சபை, மந்திரிகள் சபை (Board of Ministers) எனப் பெயர்பெற்றது. டொனமூர் ஆணைக்குழு முற்போக்குச் சிந்தனையுடையவர்களைக் கொண்ட குழுவாகும். அக்குழு இலங்கையை பொறுப்பாட்சியை நோக்கிய முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான அடித்தளத்தை அமைத்தது. பிரித்தானியாவின் வெள்ளையர் குடியேற்றக் காலனிகள் (Settler Colonies) தவிர்ந்த பிற காலனிகள் எவற்றிலும் பிரித்தானியா செய்ய முன்வராத சர்வசன வாக்குரிமை (Universal Franchise) என்னும் பரிசோதனை முயற்சியை 1931 இல் இலங்கையில் ஆரம்பித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வாகும்.
சோல்பரி அரசியலமைப்பு
1947 இல் சோல்பரி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சோல்பரி அரசியல் அமைப்பு செயற்பாட்டில் இருந்தது. இவ்வரசியல் யாப்பு இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தை (Bicameral Parliament) அறிமுகம் செய்தது.
மரபுவழிப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் அமைந்த இப்பாராளுமன்றத்தின் கீழ்ச்சபை (Lower House) சனப்பிரதிநிதிகள் சபை (House of Representatives) எனப் பெயர்பெற்றது. இச்சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். செனற் சபை (Senate) என அழைக்கப்பட்ட மேற்சபையில் அரைப்பங்கினர் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும், மீதி அரைப்பங்கினர் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பின்படி பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் யாப்பின் 29 ஆவது பிரிவு, இலங்கையின் இன, மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டும் முறையில் அமையும் சட்டங்கள், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதற்கு தடையாக அமைந்தது. சோல்பரி அரசியல் யாப்பில் சிறுபான்மையினருக்கான காப்பாக விதிக்கப்பட்டிருந்த 29 ஆவது பிரிவின் கட்டுப்பாடுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. 1948 இல் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண இறைமை (Sovereignty) வழங்கப்படவில்லை; இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என அரசியல்வாதிகள் சிலரால் விளக்கம் கொடுக்கப்பட்டது. இது தவறான சட்ட விளக்கமாகும். ஆயினும் இத்தவறான சட்டவிளக்கத்தின் படியான அரசியல் பிரச்சாரம் 1960 களில் பிரித்தானியாவுடன் உள்ள தொடர்புகளை முழுமையாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்ற அரசியல் கோரிக்கையாக வடிவம் பெற்றது. 1970 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில், இலங்கையைக் குடியரசாக மாற்றும் புதிய அரசியல் யாப்பை வரைவதற்கான மக்களாணையை, சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெற்றுக் கொண்டது. 1972 ஆம் ஆண்டில் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இவ்வரசியல் யாப்பின்படியான பாராளுமன்றம் ஒரு சபையைக் கொண்டதாக (Unicameral Legislature) அமைந்தது. அப்பாராளுமன்றத்தின் பெயர் தேசிய அரசுப் பேரவை என அழைக்கப்பட்டது. முன்னைய அரசியல் யாப்பில் காணப்பட்டது போன்று 1972 அரசியல் யாப்பில் பாராளுமன்றத்தின் இறைமை மீதான கட்டுப்பாடுகள் எவையும் இருக்கவில்லை. இவ்வரசியல் யாப்பு பாராளுமன்றத்தின் இறைமை என்னும் தத்துவத்தை (Doctrine of Parliamentary Sovereignty) இலங்கையின் அரசியல் யாப்பில் உட்புகுத்தியது.
பாராளுமன்றத்தை தடையற்ற சட்டவாக்க அதிகாரம் உடைய நிறுவனமாக மாற்றி, இலங்கையில் சோஷலிச பொருளாதாரத்தையும், சோஷலிச சமுதாயத்தையும் கட்டமைப்பதற்கான கருவியாக அதனை உபயோகிக்க முடியும் என ஐக்கிய முன்னணி அரசாங்கம் திட்டமிட்டது. ஆயினும் அவ்வரசாங்கத்தின் திட்டம் குறுகிய காலத்திற்குள் தலைகீழாக மாற்றப்பட்டது. 1977 நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தோடு மக்களாணையைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரச நிறுவனக் கட்டமைப்பில் பெருமாற்றத்தை 1978 அரசியல் யாப்பு மூலம் புகுத்தியது. 1978 அரசியல் யாப்பு இலங்கையில் பகுதியளவிலான ஜனாதிபதிமுறை அரசினை (Semi – Presidential State) நிறுவியது. இம்முறையின் கீழ் பாராளுமன்றம் நிருவாகத்துறைக்குக் கீழ்ப்பட்டதான சட்ட ஆக்கத்துறையாக மாறியது.
1978 இன் ஜனாதிபதிமுறை
ஜனாதிபதிமுறை 1978 இல் இலங்கையில் புகுத்தப்பட்டதால் பாராளுமன்றத்தின் அதிகாரம், அந்தஸ்து என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்வதற்கு, பகுதியளவிலான ஜனாதிபதிமுறை என்னும் மாதிரியின் (Semi-Presidential Model) இயல்புகளை அறிந்து கொள்ளுதல் பயனுடையது. ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை தூய ஜனாதிபதிமுறை (Pure Presidentialism) எனப்படுகிறது. பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரண்டில் இருந்தும் வேறுபட்ட அரசாங்க மாதிரியாக, இலங்கையின் ஜனாதிபதிமுறை அமைந்தது. இது, 1958 இல் பிரான்ஸ் தேசத்தில் ஜெனரல் சார்ள்ஸ் டி கால் (General Charles De Gaulle) இனால் புகுத்தப்பட்ட அரசியல் யாப்பு மாதிரியைப் பின்பற்றியது. இதனை ‘Gaullist Model’ என அழைப்பர். ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் இம்மாதிரியிலான அரசாங்கமுறை இலங்கைக்கு அவசியமானது என 1966 இல் குறிப்பிட்டார். பிரஞ்சு மாதிரியினால் கவரப்பட்ட ஜே.ஆர். ஜயவர்த்தன, பின்காலனிய சமூகமான இலங்கை பொருளாதாரத்துறையில் வளர்ச்சியடைய வேண்டுமானால் பிரஞ்சு மாதிரி அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். அம்முறையின் சிறப்பம்சங்களாக அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
- ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (Fixed Term) பதவியிலிருப்பார். தெரிவு செய்யப்பட்டதிலிருந்து அக்காலம் முடியும்வரை அவரால் பதவியைத் தொடர முடியும்.
- ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்படாதவராக சுதந்திரமாக இயங்குவார்.
- ஜனாதிபதி மக்களாணையை (Mandate) நேரடியாகத் தேர்தலின் மூலம் பெற்றவராக இருப்பார்.
இம்மூன்று காரணங்களினாலும் ஜனாதிபதி பலமும் உறுதியும் மிக்க நிருவாகத்தையுடைய (Strong and Stable Executive Government) அரசாங்கத்தை நிறுவி, பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாட்டை வழிநடத்த முடியும்.
பாராளுமன்றமுறையில் மந்திரிசபையும் பிரதமரும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை நடத்த வேண்டியிருப்பதால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்காக பல விட்டுக்கொடுப்புகளையும் சமரசங்களையும் செய்ய வேண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெகுஜன ஆதரவு இல்லாத திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்வருவதில்லை. துணிச்சலான முடிவெடுக்கும் தலைமையைப் பாராளுமன்ற முறையினால் உருவாக்க முடியாது என்ற வாதத்தை ஜே.ஆர். ஜயவர்த்தன முன்வைத்தார். 1970-72 காலத்தில் அரசியல் யாப்புச் சபையில் ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதிமுறையை முன்மொழிந்தபோது, அவரது கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்க அதற்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டார். டட்லி சேனநாயக்க பாராளுமன்ற ஜனநாயகமுறையே இலங்கைக்கு ஏற்புடைய அரசாங்கமுறை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகள் கழிந்தபின் ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி முறையை 1978 இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. 1978 அரசியல் யாப்பின் படியான, பகுதியளவிலான ஜனாதிபதிமுறையின் (Semi – Presidential System) சிறப்பியல்புகளாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.
- ஜனாதிபதி குறிப்பிட்ட கால எல்லைக்குள் பதவி வகிப்பவராகவும், நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருப்பார்.
- பிரதமரும் மந்திரிசபையும் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு சொல்ல வேண்டி இருத்தல் (A Prime Minister and Cabinet Accountable to the Legislature).
இந்த மாதிரியில் ஜனாதிபதி அரசின் தலைவராக (Head of State) விளங்குகிறார். அவர் வெறும் பெயரளவிலான அரசுத் தலைவர் அல்லர் என்பதும், அவருக்கு பல அதிகாரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அரசுத்தலைவர் என்பதோடு அரசாங்கத்தின் தலைவராகவும் (Head of Government) விளங்குகிறார்.
தொடரும்.