யுவராஜன் நாகனின் கொள்ளுப் பேரன் இளவரசன் நாகன் பற்றிக் குறிப்பிடும் படர்கல் மலைக் கல்வெட்டு
Arts
14 நிமிட வாசிப்பு

யுவராஜன் நாகனின் கொள்ளுப் பேரன் இளவரசன் நாகன் பற்றிக் குறிப்பிடும் படர்கல் மலைக் கல்வெட்டு

August 23, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மலைகள் நிறைந்த ஓர் இடம் காணப்படுகிறது. இது படர்கல் மலைப் பகுதி எனப் பெயர் பெற்றுள்ளது. செங்கலடியில் இருந்து மகா ஓயாவுக்குச் செல்லும் வீதியில் உள்ள மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கத்தில் 23 கி.மீ தூரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் படர்கல் மலைப் பிரதேசம் அமைந்துள்ளது.

மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாக படர்கல் மலையை நோக்கிச் செல்லும் பாதையில் ஆனைவிழுந்தமடு, வேப்ப வெட்டுவான் ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றை அடுத்து குமுக்கட்டு ஆறு, முந்தெனி ஆறு, கல்வான் ஆறு ஆகியவை ஓடுகின்றன. இவ் ஆறுகளைக் கடந்தவுடன் ஒரு நாற்சந்தி உள்ளது. அங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதை ஈரளக்குளம், இலுக்குப் பொத்தானை ஆகிய கிராமங்களுக்குச் செல்கிறது. மேற்கு நோக்கிச் செல்லும் பாதையே படர்கல் மலைக்குச் செல்லும் பாதையாகும்.

இங்கிருந்து சற்று தூரம் சென்றதும் வயல் வெளிகளுக்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு மலைத்தொடர் அழகாகத் தெரிகிறது. இம்மலைத் தொடரில் பல மலைகள் காணப்படுகின்றன. கார் மலை, புறாக்குஞ்சு மலை, வெள்ளைக்கல் மலை, ஏரச்சல் ஆறு மலை, புளுட்டுமான் ஓடை மலை, கொட்டடி மலை, கெவர் மலை, அரக்கர் மூலை மலையுச்சி, படிவெட்டின மலை ஆகிய மலைகள் மிக அழகாகத் தெரிகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அழகுமிக்க இடங்களில் இப்பகுதி முக்கியமானது.

இவ்விடத்தில் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள் பரந்து காணப்படுகின்றன. இங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் போது இன்னுமோர் ஆறு குறுக்கிடுகிறது. அதுதான் லாவணை ஆறு. இவ்வாற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் பாதையின் இடது பக்கம் ஒரு குளம் காணப்படுகிறது. இது நவுண்டலியாமடு குளம் என அழைக்கப்படுகிறது.

குளத்தைக் கடந்து செல்லும் போது மூன்று சிற்றாறுகள் பாதையின் குறுக்கே ஓடுகின்றன. முதலாவது சில்லுக்கொடி ஆறு. அடுத்தது புளுட்டுமான் ஓடை ஆறு. மூன்றாவது குடாவலைக்கண்டி ஆறு. இச் சிற்றாறுகளைக் கடந்தவுடன் ஒரு காடு காணப்படுகிறது. இடது பக்கம் வயல் வெளிகளும், வலது பக்கம் காடும், மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இக்காட்டைக் கடந்து மேலும் மேற்கு நோக்கி சென்றதும் புளுட்டுமான் ஓடை மலையும் புளுட்டுமான் ஓடைக் குளமும் காணப்படுகின்றன.

செங்கலடி – மகாஓயா பிரதான வீதியில் உள்ள மாவடி ஓடை சந்தியில் இருந்து ஆரம்பிக்கும் 19 கி.மீ தூரமுள்ள மேற்குப் பக்கப் பாதை இக்குளத்துடன் முடிவடைகிறது. புளுட்டுமான் ஓடை மலையும், குளமும் இயற்கை அழகுடன் கண்களுக்கு அழகிய காட்சிகளாகத் தெரிகின்றன.

இக்குளத்தின் அருகில் குமாரர் எனும் முருகப் பெருமானின் சிறிய காட்டுக் கோயில் உள்ளது. இங்குள்ள மரத்தின் அருகில் ஒரு கொட்டில் அமைக்கப்பட்டு அதில் பழமைவாய்ந்த இரும்பு வேலாயுதங்கள் சிலவும், கத்திகள் சிலவும் வைக்கப்பட்டு அவற்றிற்குத் துணிகள் சுற்றப்பட்டுள்ளன. மரத்தின் அடிப்பகுதியில் பிள்ளையார் கற்கள் சிலவும் காணப்படுகின்றன. புளுட்டுமான் ஓடை குளத்திற்கும், இப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கும் காவலாக இருக்கும் இக்குமாரர் கோயில் பண்டைய காலம் முதல் இப்பகுதியில் வாழ்ந்து வந்த வேடர் சமூகத்தவர்களாலும், விவசாயிகளாலும், இக்காட்டுப் பகுதிக்கு விறகு வெட்ட வருபவர்களாலும் வழிபடப்பட்டு வருகிறது.

குளத்தின் வலது கரையோரமாக ஒரு ஒற்றையடிப்பாதை மேற்குப் பக்கமாக காட்டுப்பகுதிக்கு செல்கிறது. இரண்டு பக்கங்களிலும் மலைகள் நிறைந்த இக்காட்டுப் பாதையில் சுமார் 4 கி.மீ தூரத்தில் பாதையை ஊடறுத்து காணப்படும் பாறை வழியாக ஒரு சிற்றோடை ஓடுகிறது. இப்பாதையில் பல இடங்களில் காட்டு யானைகளின் எச்சங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்விடத்தின் வலது பக்கம் காணப்படும் மலைகள் நிறைந்த காடுதான் படர்கல் மலைப் பகுதியாகும்.

இங்குதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாகச் சிற்றரசர்கள், மற்றும் முனிவர்கள் பயன்படுத்திய குகைத்தளங்களும் அவர்கள் பொறித்த கல்வெட்டுகளும் உள்ளன. இக்கல்வெட்டுகளில் பல முக்கிய விடயங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்து காட்டுக்குள் சுமார் 300 மீற்றர் தூரத்தில் ஒரு சிறிய செங்கல் திடல் காணப்படுகிறது. இது ஓர் பழமை வாய்ந்த தூபியின் எச்சம் என யூகிக்கக் கூடியதாக உள்ளது. அத்திடலின் மத்தியில் சுமார் 6 அடி ஆழமான ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. புதையல் திருடர்கள் தமது கைவரிசையை இங்கே காட்டியுள்ளனர். இவ்விடத்தில் கற்தூண்களின் உடைந்த துண்டுகள் சிலவும், ஒரு ஆசனக்கல்லும் காணப்படுகின்றன.  

அப்பகுதியில் அகலமான செங்கட்டிகள் பல பரவிக் கிடக்கின்றன. ஒரு செங்கட்டியில் சிதைந்த எழுத்துகள் தெரிகின்றன. இன்னுமோர் செங்கட்டியில் திரிசூலம் போன்ற கோடு காணப்படுகிறது. இதை வேறு கோணத்தில் பார்த்தால் ‘ர, ஜ’ எனும் இரண்டு பிராமி எழுத்துகள் பொறித்தது போலத் தெரிகிறது.

இங்கிருந்து முன்னோக்கி மேலும் 200 மீற்றர் தூரம் சென்றதும் கற்பாறைகள் நிறைந்த ஓர் இடம் காணப்படுகிது. இங்கு இயற்கையாக அமைந்திருந்த கற்பாறைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்ட பல குகைகளைக் காணக் கூடியதாக இருந்தது. இங்கு மொத்தமாக மூன்று பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

முதலாவதாகக் காணப்பட்ட கற்குகை 10 அடி உயரமானது. இதில் மிக நேர்த்தியாக கற்புருவம் வெட்டப்பட்டு, அதன் கீழே பிராமி எழுத்துகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இது சுவாமி மகா தீசனின் மகன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டாகும்.

2000 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த முனிவர்கள் நாகத்தை தாம் வாழ்ந்த கற்குகைகளில் வைத்து வழிபட்டவர்களாவர். தந்தைக்குப் பின் மகன் தந்தையின் குகைகளைப் பயன்படுத்தி வந்த காலப்பகுதியில் பெளத்த சமயம் பரவியது. அப்போது அம்மதத்தின் மீது பற்றுக் கொண்டு, அதில் ஈர்க்கப்பட்டு பெளத்த மதத்தை ஏற்றுக் கொண்ட போது தாம் வாழ்ந்த கற்குகைகளை பிக்குகள் பயன்படுத்துவதற்காகப் பெளத்த சங்கத்திற்குத் தானமாகக் கொடுத்துள்ளனர்.

2000 வருடங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் குகைகளில் வாழ்ந்த அல்லது அவற்றைப் பயன்படுத்திய முனிவர்கள் தமிழ் மொழி பேசியவர்களாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலப் பகுதியில் நாக வழிபாடுகளை மேற்கொண்டவர்கள் தமிழர்கள் என பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இக்குகையைத் தானம் செய்த முனிவர் மகா தீசனின் மகன் பெளத்த தர்மத்தை ஏற்றுக் கொண்ட ஓர் தமிழ்ப் பெளத்தனாக இருக்க வேண்டும். இலங்கையில் 15 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்த தமிழ்ப் பெளத்தர்களின் முன்னோடிகளாக இவர்கள் இருந்துள்ளனர்.

இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட பாறையின் பின்பக்கமும், வலது பக்கமும் கற்புருவம் வெட்டப்பட்ட மேலும் சில கற்குகைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து பாறை இடுக்குகள் வழியாக மேல் நோக்கிச் சென்றதும் இன்னுமோர் கற்குகையைக் காணலாம். இது சுமார் 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட பெரிய குகையாகும்.

இக்குகையிலும் ஓர் பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரியில் பொறிக்கப்பட்ட நீண்ட கல்வெட்டாகும். இதில் மொத்தமாக 48 எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகள் அனைத்தும் தெளிவாக, வாசிக்கக்கூடிய வகையில் காணப்பட்டன.

இக்கல்வெட்டில் “யுவராஜா நாக புத அய அபய அண அபய புத அய திச அய திச புத திச அய நாகக தெசஹய லேனே மணம திச என எழுதப்பட்டு எழுத்துகளின் முடிவில் சுவாஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இது “யுவராஜன் நாகனின் மகன் இளவரசன் அபயன், அவனின் மகனான இளவரசன் தீசன், அவனின் மகனான தீசன், இளவரசன் நாகனின் குகை” எனப் பொருள்படும். இக்கல்வெட்டின் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த யுவராஜன் நாகனின் மூன்று தலைமுறை இளவரசர்கள் பற்றியும், இவர்கள் நாக வழிபாடு செய்தமை பற்றியும் தெரிய வருகிறது.

இங்கிருந்து மேல் நோக்கிச் செல்லும் போது சற்று உயரமான ஒரு பெரிய பாறை காணப்படுகிறது. அதன் மேலே ஏறிச் சென்றபோது அதன் வலது பக்கம் ஒரு கற்குகையும், இடது பக்கம் ஒரு கற்குகையும் காணப்படுகின்றன. இரண்டு குகைகளிலும் கற்புருவம் வெட்டப்பட்டிருந்தது. இடது பக்கக் குகையில் மட்டும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்தது.

படர்கல்மலைப் பகுதியில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் மூலம் இரண்டு விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது. ஒன்று பண்டைய காலத்தில் இப்பகுதியில் நாக வழிபாடு செய்த நாக மன்னர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்துள்ளனர். நாகர் என்போர் தமிழர்கள் தான் என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார். இரண்டாவது இப்பகுதியில் நாக வழிபாடு செய்த நாக மன்னர்களும், அவர்களின் சந்ததியினரும் பெளத்த மதம் இலங்கையில் அறிமுகமான போது பெளத்த சமயத்தை ஏற்றுக் கொண்டு, தமிழ்ப் பெளத்தர்களாக மாறியுள்ளனர் என்பதே அவ்விடயங்களாகும். 

உபராஜன் நாகன் பற்றிக் கூறும் குசலான மலைக்  கல்வெட்டு 

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செங்கலடிச் சந்தியில் இருந்து  மகா ஓயாவிற்குச் செல்லும் வீதியில் 13 கி.மீ தொலைவில் கரடியனாறு எனும் பழந்தமிழ் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் வடமேற்கில் 3 கி.மீ தூரத்தில் குசலான மலை அமைந்துள்ளது. இம்மலை உச்சியில் தான் மிகப் பண்டைய காலத்து வேல் கோயில் அமைந்திருந்தது.

குசலான் மலைத்தொடரில் நான்கு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இம்மலைத் தொடரின் பின்பக்கம் வேப்பவெட்டுவான் எனும் கிராமம் உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்காக நீண்டு காணப்படும் இம்மலைத் தொடரில் முதலாவதாக நாம் காண்பது முருகன் கோயில் அமைந்துள்ள மலைக் குன்றாகும். இதன் பின்பக்கம் உள்ள குன்றே இங்குள்ள நான்கு குன்றுகளில் உயரமானதாகும். உயரமான இக் குன்றுக்கு இடதுபக்கம் மூன்றாவது குன்று அமைந்துள்ளது. நான்காவது குன்று முருகன் கோயில் அமைந்துள்ள குன்றின் வலது பக்கம் காணப்படுகிறது.

மிகப்பண்டைய காலம் முதல் வேடர்கள் வாழ்ந்துவந்த பிந்தென்னைக் காட்டுப் பகுதியின் கிழக்குப் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்பகுதி விளங்கியது. இங்கு வேடர்கள் பெருமளவில் வசித்து வந்தனர். ஓமுனகல, ஹேனனேகல, நுவரகல, கொக்காகல போன்ற மலைத் தொடர்களிலும், இதன் கிழக்குப் பகுதியிலுள்ள மலைக் குன்றுகளிலும் வேடர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இம்மலைக் குன்றுகளில் குசலான் மலையும், கரடியனாற்றுக் குளத்தை ஒட்டிய மலைக்குன்றுகளும் அடங்குகின்றன. குசலன், கரடியன் எனும் வேடர் தலைவர்கள் இம்மலைக் குன்றுகளில் உள்ள கற்குகைகளில் வசித்து வந்ததாகவும், இதன் காரணமாக இம்மலைகளும் குசலான் மலை, கரடியனாறு எனப் பெயர் பெற்றதாகவும் இப்பகுதியிலுள்ள மூத்தவர்கள் கூறுகின்றனர்.

கரடியனாறு குளம் பெரிதாக்கப்படுவதற்கு முன்னரே செங்கலடியிலிருந்து மகா ஓயாவிற்குச் செல்லும் காட்டுப்பாதை 1830 ஆம் ஆண்டளவில் திருத்தியமைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் கரடியனாறுப் பகுதியில் தமிழ் மக்கள் விவசாயம் செய்வதில் ஈடுபட்டனர். கரடியனாறு குளத்தின் அருகிலும் குசலான் மலை அடிவாரத்திலும் நெற்களனிகள் உருவாகின. இக்காலப்பகுதியில் இங்கு விவசாயம் செய்து வந்த மக்கள் குசலான் மலை உச்சியில் வேல் வழிபாட்டினதும், நாக வழிபாட்டினதும் எச்சங்கள் இருப்பதைக் கண்டு தாமும் வேல் வழிபாடு, நாக வழிபாடு போன்றவற்றை மேற்கொண்டனர். தாம் அறுவடை செய்த நெல்லை நாக தம்பிரானுக்கும், முருகப்பெருமானுக்கும் படைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

வேல் வழிபாட்டின் எச்சங்கள் காணப்பட்ட மலையின் சமதரைப் பகுதியில் இரும்பு வேலொன்றைப் பதித்து வணங்கி வந்தனர். வேலாயுதத்தின் பின்பக்கம் இருந்த கற்குகையில் நாக வழிபாட்டின் எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் நாகநாதருக்கு பூஜை செய்து வழிபட்டனர். மலையடிவாரத்தில் மலைக்குச் செல்லும் பாதை தொடங்கும் இடத்தில் இருந்த மரத்தின் கீழ் பிள்ளையார் கல் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு கொத்துப்பந்தல் அமைத்து பொங்கல் வைத்துப் பூஜை செய்து வந்தனர். 2000 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த நாகர்களாலும், வேடர்களாலும் வழிபடப்பட்டு வந்த நாக வழிபாடும், வேல் வழிபாடும் மீண்டும் குசலான் மலையில் ஆரம்பமானது.

குசலான் மலை சுமார் 250 அடி உயரமான தட்டையான அமைப்பையுடைய மலைக்குன்றாகும். சுமார் 200 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்ட இம்மலையில் பத்துக்கும் மேற்பட்ட கற்குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் ஆதித் தமிழர்களான நாகர் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன.

இக்குகைகளில் இவர்களால் பொறிக்கப்பட்ட ஏழு பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் திசன், பெருமகன், தேவ கூத்தன், அபயன், நாகன், சுதசனன், கூத்தன், சுதினன், சமனன், கஹபதி போன்ற ஆதித் தமிழ்ப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்த குகைகளில் வாழ்ந்த ஆதித் தமிழர்கள் தமது குலதெய்வ வழிபாடு நிலவிய குகைகளையும், தாம் வாழ்ந்த குகைளையும் பெளத்த சங்கத்தாருக்கு தானம் அளித்த செய்தியை பிராமி எழுத்துகள் மூலம் கல்வெட்டாகப் பொறித்துள்ளனர்.

படர்கல் மலைப் பகுதியில் வாழ்ந்த உபராஜன் நாகன், அவனின் மகன் அபயன், அவனின் மகன் தீசன் ஆகியோர் பற்றிய ஒரு கல்வெட்டு குசலான் மலையிலும் காணப்படுகின்றது. இவர்கள் பயன்படுத்திய சுதர்ஷன எனும் கற்குகை சங்கத்தாருக்கு வழங்கப்பட்டமை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. படர்கல் மலையின் கிழக்கில் சுமார் 15 கி.மீ தூரத்தில் குசலான் மலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குசலான் மலைப்பகுதியில் முனிவர்கள் இருந்தமை பற்றி இங்குள்ள நான்கு பிராமிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சுவாமி பூசபூதியன், சுவாமி கூத்தன், சுவாமி தேவகூத்தன், சுவாமி சுத்தினன் ஆகிய நான்கு சுவாமிகள் அல்லது முனிவர்கள் நான்கு குகைகளைப் பயன்படுத்தியமை பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் தங்கள் குகைகளை பெளத்த சங்கத்திற்கு தானம் கொடுத்துள்ளனர்.

பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் கதிர்காமம், சந்தணகாமம் ஆகிய இராச்சியங்களை ஆட்சிசெய்த கதிர்காமச் சத்திரிய மன்னர்களில் ஒருவன் குசலான் மலைப்பகுதியை ஆட்சி செய்தமை பற்றிய குறிப்புகள் இங்குள்ள குகை ஒன்றில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் புனித போதிமர நடுகை விழாவிற்கு இவர்களை தேவநம்பிய தீஸன் அனுராதபுரத்திற்கு அழைத்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் கூறியுள்ளார். இப் பாண்டிய – சத்திரிய மன்னர்கள் நாக, முருக வழிபாடுகளை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இளையவனாகிய மகாநாகன் என்பவனின் குகை பற்றியே இங்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,

உபராஜ நாக புதே ரஜ அபயே நம தச புதே கமனி திசே நம தென கரிதே சுதசன சகச 

இதன் பொருள் ஆங்கிலத்தில் “The son of Uparaja Naga [was] King Abaya by name. His son is Gamini Tissa by name. [The cave named] Sudassana founded by him, [is given]to the Sangha.” என்பதாகும். இது தமிழில், உபராஜன் நாகனின் மகனான அபயன் எனும் பெயருடைய மன்னன். இவனது மகன் காமினிதீசன் எனும் பெயருடையவன். இவனால் உருவாக்கப்பட்ட சுதர்சன எனும் பெயருடைய குகை சங்கத்தாருக்கு வழங்கப்பட்டது எனப் பொருள்படுகிறது. 

இக்கல்வெட்டுகள் மூலம் குசலான் மலையில் வேடர்களுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆட்சி நிலவியமை பற்றியும், இவர்களால் நாக வழிபாடு பேணப்பட்டிருந்தமை பற்றியும் தெரியவருகிறது. இதற்குச் சான்றாக குசலான் மலையில் ஓர் நாகக்கல்லையும் காணக்கூடியதாக உள்ளது.

இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் ஒர் பெரிய கற்குகை அமைந்துள்ளது. சுமார் 20 அடி உயரமும், 25 அடி நீளமும் கொண்ட இக் குகையின் மேற்பகுதியிலுள்ள பாறை ஓர் நாகம் படமெடுத்துப் படுத்திருப்பதைப் போலக் காணப்படுகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் இது நாக கன்னியின் வடிவம் எனப் போற்றி இவ்விடத்தில் நாககன்னிக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்குகையில் சுமார் 10 அடி உயரமான பிரமாண்டமான புற்றுக் காணப்படுகிறது.

குசலான் மலையில் பல புராதன தொல்பொருட் சின்னங்கள் காணப்படுகின்றன. மலையடிவாரத்திலிருக்கும் பிள்ளையார் கோயிலிலிருந்து மலை உச்சிக்கு ஏறும் பாதை தொடங்குகிறது. இவ்விடத்திலிருந்து ஏறுவதற்கு மலையில் இரும்புக் கம்பி கட்டப்பட்டுள்ளது. அதை அடுத்து மலை ஏறுவதற்கு கற்பாறையில் சுமார் 70 படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்து பாறையில் ஓர் வட்டமான குழி காணப்படுகிறது. இக் குழி உரல் எனக் கூறப்படுகிறது. அடுத்ததாக ஓர் நாகக்கல் காணப்படுகிறது. நாகக்கல் இருக்கும் இடத்திற்கு வலது பக்கம் சிறிது தூரத்தில் ஓர் தூர்ந்து போன நீர்ச்சுனை உள்ளது. இதில் சிறிதளவே நீர் காணப்படுகிறது. இதனை அடுத்து ஓர் சிறிய நீர்ச்சுனையில் நீர்தேங்கி நிற்கிறது.

இந்நீர்ச்சுனைகளின் வலதுபக்கத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முன்பக்கம், சற்றுப் பள்ளத்தில், அழகிய, நீர் நிரம்பிய ஓர் நீர்ச்சுனை உள்ளது. உகந்தை மலையில் வள்ளி அம்மன் கோயிலின் முன்பக்கம் ஆழமான, அழகிய நீர்ச்சுனை உள்ளது போல இங்கும் அமைந்துள்ளது. கோயிலுக்கு பின் பக்கம் ஓர் கற்குகை காணப்படுகிறது. இக்கற்குகையின் மேல் பக்கம் நீர் வழிந்தோடுவதற்காக கற்பீலி செதுக்கப்பட்டுள்ளது. இக்குகையின் கீழே ஓர் பாம்பு புற்றும் அதன் அருகில் நாகநாதருக்கு ஓர் பரிவாரக் கோயிலும் காணப்படுகின்றன. இது தவிர நீர்ச்சுனையின் வலதுபக்கம் கீழே ஓர் கற்குகை உள்ளது.

தூர்ந்து போன நீர்ச்சுனையின் மேற்குப்பக்கம் சற்று உயரமான மலைக் குன்று அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு மேலும் சில படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குன்றின் வலதுபக்கம் உள்ள உயரமான மேட்டுப் பகுதியில் ஓர் புராதன கட்டிடம் அமைந்திருந்தமைக்குச் சான்றாக பண்டைய செங்கட்டிகள் பல நிறைந்து காணப்படுகின்றன. இதன் அருகில் பாறைமீது ‘ஓம்’ எனும் வடிவம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

படிகளின் இடதுபக்கம் மலை சமதரையாகக் காணப்படுகிறது. இங்கு 9 அங்குல ஆழத்தில் ஒரு அடி சதுரவடிவமுள்ள ஓர் குழி வெட்டப்பட்டு, அதனுள்ளே 8 அங்குல சதுர வடிவமுள்ள இன்னுமோர் குழி வெட்டப்பட்டுள்ளது. இது வைப்புத்திரவியங்கள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குழியாகும். புதையல் திருடர்களால் இதிலிருந்த திரவியங்கள் எடுக்கப்பட்டுவிட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனருகிலும் ஓர் பழமைவாய்ந்த கட்டிடம் இருந்ததற்கு அடையாளமாக செங்கட்டிகள் சிதறிக் காணப்படுகின்றன. இம்மலைக் குன்றின் பின்பக்கமே சில கற்குகைகளும் பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

உயரமான மலைக்குன்றின் இடது பக்கம் காணப்படும் மலைக் குன்றின் முன்பாக ஓர் சிறிய பாறைத்தொடர் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவற்றிற்கிடையில் ஓர் பள்ளமான சமதரை உள்ளது. இச் சமதரையில் ஓர் புராதன கட்டிடம் இருந்தமைக்குச் சான்றாக 5 அடி உயரமான பத்து கற்தூண்கள் காணப்படுகின்றன. கற்தூண்களுக்கு  அருகில் ஓர் குகை உள்ளது. இம்மலைக் குன்றின் பின்பக்கம் மேலும் சில குகைகளும், அவற்றின் மேலே பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள ஓர் குகையின் கீழே சில புராதன செங்கட்டிகள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.

இங்கு காணப்படும் கருங்கற் தூண்களுக்கு அருகில் மேலும் சில தூண்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. தூண்களை நிறுத்தப் பயன்படும் குழிக்கல் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அருகில் உள்ள தட்டையான பாறை மீது பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலும் ஓர் குகை உள்ளது. இம்மலைக் குன்றின் பின்பக்கம் இறங்குவதற்கு சுமார் 20 படிகள் வரை வெட்டப்பட்டுள்ளன. படிகளின் கீழே மேலும் ஓர் கற்குகை காணப்படுகிறது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5122 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (8)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)