நாகசிவன், நாகவிய, நாகப்ப சவிய ஆகியவை பற்றிக் குறிப்பிடும் பண்டகிரிய கல்வெட்டு
Arts
13 நிமிட வாசிப்பு

நாகசிவன், நாகவிய, நாகப்ப சவிய ஆகியவை பற்றிக் குறிப்பிடும் பண்டகிரிய கல்வெட்டு

August 13, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அம்பாந்தோட்டை நகரிலிருந்து திஸமஹராமைக்கு செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பள்ளேமலல சந்தியிலிருந்து வட மேற்கு நோக்கிச் செல்லும் வீதியில் உள்ள யஹன்கல மலைப் பகுதியிலிருந்து வடக்குப் பக்கமாக மேலும் 5 கி.மீ தூரத்தில் உள்ள பண்டகிரிய குளத்தின் அருகில் பண்டகிரிய மலைப்பகுதி அமைந்துள்ளது.

பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் பண்டகிரிய மலையில் பெளத்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் தென்னிலங்கையில் மாகம எனும் இராச்சியத்தை அமைத்த மகாநாகன் காலத்தில் இம்மலையில் வழிபாட்டுத்தலங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் புராதன ஆலய இடிபாடுகள் காணப்படுகின்றன. இம்மலையில் 5 கற்சுனைகளும் அமைந்துள்ளன.

பண்டகிரிய மலைப்பகுதியில் இயற்கையாக அமைந்த 10 கற்குகைகள் காணப்படுகின்றன. இம்மலையில் உள்ள பாறையில் மொத்தமாக 5 கல்வெட்டுகள்  பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 3 பிராமிக் கல்வெட்டுகளும், 6 ஆம் நூற்றாண்டிற்குரிய 2 கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டில் நாகன், சிவன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டை ஆய்வாளரான எட்வேர்ட் முல்லர் முதன் முதலில் ஆராய்ந்தார். 1883 இல் முல்லர் இக்கல்வெட்டின் விபரங்களை தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். இது மிகவும் நீளமான ஓர் கல்வெட்டு எனவும், இங்கிருந்த ஒரு தூண் கல்வெட்டை கொழும்பு தொல் பொருட்காட்சிச் சாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் தனது நூலில் கூறியுள்ளார். 

இக் கல்வெட்டில் நாகவிய என்னுமிடத்தைச் சேர்ந்த அபக்கமெனு அப, மகாகம என்னுமிடத்தைச் சேர்ந்த நாகசிவன், நாகப்ப சவிய என்னுமிடத்தைச் சேர்ந்த கசபா மற்றும் சிலர் மலையிலிருந்த தூபிக்கு செல்ல மலையில் படிகள் அமைத்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம் இப்பிரதேசத்தில் நாக வழிபாடு சிறப்புற்று விளங்கியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. மேலும் இப்பகுதியில் நாக விய, நாகப்ப சவிய ஆகிய நாக வழிபாடு நிலவிய இடங்கள் பற்றியும் நாக, சிவ வழிபாடு மேற்கொண்ட நாகசிவன் என்பவன் பற்றியும் அறியக் கூடியதாக உள்ளது.4

vihara
board
rock
inscription
pond

 நாகர் கல்லில் உள்ள மடாலயத்திற்கு சிவன் வழங்கிய மானியங்கள் பற்றிக் குறிப்பிடும் உத்தகந்தர கல்வெட்டுகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடலை ஒட்டி கிரிந்த என்னுமிடம் அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்கில் 6 கி.மீ தொலைவில் உத்தகந்தர  மலைப்பாறைகள் அமைந்துள்ளன. உத்தகந்தர மலையில் உள்ள குகைகளில் 2 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் பொ.ஆ.மு. 250 இல் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு கற்குகைகளிலும் கற்புருவங்கள் செதுக்கப்பட்டு அவற்றின் கீழே கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

உத்தகந்தர மலைப்பகுதியில் ஓர் பாறைக் கல்வெட்டும் காணப்படுகிறது. இது பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. உத்தகந்தர ரஜமஹா விகாரையின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஓர் மலைப் பாறையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. 5 அடி நீளம், 2 அடி அகலத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் சிவன், நாகர்கல்லு எனும் சொற்கள் காணப்படுகின்றன. கல்வெட்டின் வாசகங்கள் பின்வருமாறு,

சித்தம். வஹபஹலஹ வாசிய அமெத பஹிஜயஹ புத்த சிவயம  நாகரகலக  மஹா விஹரஹி பிகுசகஹடஎக ச தக கஹவன தினே அட்ட நசிக பணதமி கஹவனஹி வெத க  நிய அரிய வச க  ரண ச  வமேவ பரிசஹ.

இவ் வாசகங்களின் பொருள்: வெற்றி, வஹபஹளவில் வசிக்கும் அமைச்சர் பஹிஜயவின் புத்திரனான அமைச்சர் சிவன், நாகர்கல்லில் உள்ள மடாலயத்தின் பிக்கு சமூகத்திற்கு நூறு கஹபணத்தை வழங்கினான். இந்தப் பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை, ஆலயத்தில் ஆரியவாச விழாவை நடத்தும் துறவிகளுக்கு பானங்கள் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்தக் கல்வெட்டின் படி எடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை.

இக்கல்வெட்டின் மூலம் கிரிந்த பகுதியில் நாகர்கல் எனும் ஓர் ஊர் இருந்தமையும், இப்பகுதியை சிவன் எனும் அமைச்சர் பரிபாலித்து வந்தமையும் தெரிய வருகிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாக வழிபாடு நிலவியமையால் இவ்விடத்திற்கு நாகர்கல் எனும் பெயர் உண்டாக்கியிருக்கலாம்.  

மகாநாகன் பற்றிக் கூறும் ரன்ன வாடிகல கல்வெட்டு

அம்பாந்தோட்டையில் இருந்து தங்காலைக்கு செல்லும் வீதியில் உள்ள ரன்ன சந்தியிலிருந்து தங்காலைப் பக்கமாக மேலும் 3 கி.மீ தூரத்தில் வாடிகல என்னுமிடம் இது அமைந்துள்ளது. இங்கு பாதையின் அருகில் உள்ள மகாநாக விகாரையில் உள்ள தூபியின் பின்பக்கம் உள்ள மலைப்பாறையில் 3 பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகள் பற்றிய விபரங்களை ஆராய்ந்து அவை பற் றிய விபரங்களை கல்வெட்டு ஆய்வாளர் கலாநிதி எட்வேர்ட் முல்லர் 1883 இல் பதிவு செய்தார். இவற்றில் ஒரு கல்வெட்டில் மகாநாகன் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பெளத்த சமயத்திற்கு மதம் மாறுவதற்கு முன்பு இந்து சமய வழிபாட்டில் ஈடுபட்ட மாகாநாகன் தென்னிலங்கையில் பல நாக வழிபாட்டுத் தலங்களை அமைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் பண்டைய நாக வழிபாடு நிலவிய இடங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். நாகர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டின் விபரம் பின்வருமாறு.

சமயுடகமகே……தசகரிஹி செடகுபரே கரிஹி கே கட மகாநாக தவிக பற அசடி ….. படலகே தஹி க ……… பற ரஹிரி பலகெதஹி கரிஹக மகாதிவி செட்ட அசதி ஹ தொ கரி.

vadikala vihara
inscription 2

பெருமகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் ஊருமுத்த கல்வெட்டு

மாத்தறை நகரின் வடக்கில் சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள ஊருமுத்த என்னுமிடத்தில் ஒரு பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்குகை காணப்படுகின்றது. இது மாத்தறை மாவட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு பிராமிக் கல்வெட்டாகும். மாத்தறை நகரிலிருந்து வடக்கு நோக்கி முலடியான என்னுமிடத்திற்கு செல்லும் வீதியில், 25 கி.மீ தூரத்தில் உள்ள மாக்கந்துர சந்தியிலிருந்து வடமேற்குப் பக்கமாக மேலும் 5 கி.மீ சென்றதும் ஊருமுத்த சந்தியை அடையலாம். இங்கிருந்து மேலும் வடக்குப் பக்கமாக மலைப்பாறைகள் மிகுந்த பகுதியூடாக ஒரு கி.மீ வரை நடந்து சென்றால் பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் கற்குகையைக் காணலாம்.

கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் இக்கற்குகையில் பண்டார தெய்வத்தின் குகைக் கோயில் அமைந்துள்ளது. பண்டார என்பவர் இப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் எனக் கூறப்படுகின்றது. இத் தெய்வத்தின் உருவச்சிலை குகையின் முன்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பன்னிரு கைகளையுடைய முருகனின் உருவமும் இங்கு காணப்படுகின்றது. முருகன் மிகவும் வித்தியாசமாக காளையில் அமர்ந்திருக்கின்றார். இவற்றைத்தவிர ஓர் யக்ஷ தெய்வத்தின் உருவமும் இக் குகையில் காணப்படுகின்றது. பண்டார தெய்வத்தின் பின்பக்கம் யக்ஷ தெய்வத்தின் உருவம் காணப்படுகின்றது.

இங்கு பொறிக்கப்பட்டிருக்கும் பிராமிக் கல்வெட்டு இரண்டு வரிகளில் காணப்படுகின்றது. மேல் வரியில் மூன்று எழுத்துகளும், கீழ் வரியில் ஆறு எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் “பருமக நாக” என எழுதப்பட்டுள்ளது. இது பெருமகன் நாகன் எனப் பொருள்படும். கல்வெட்டில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு,  

ஹ.. லேனே..

பருமக நாக..

இக்குகை இப்பகுதியை பரிபாலனம் செய்த, நாக வழிபாடு செய்த நாகன் எனும் பெயருடைய தலைவன் பயன்படுத்திய குகை என்பது கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.

uoorumutha
uoorumutha temple

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்