இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு
Arts
25 நிமிட வாசிப்பு

இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு

December 26, 2024 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கிலம்  : ஜயதேவ உயன்கொட

இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை (State Power) கைப்பற்றுவதற்காக இலங்கையின் உயர்குழுக்களிடையே நிகழ்ந்த போட்டி கவனிப்புக்குரியது. அத்தோடு சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்து இலங்கையின் அரசியலையும் பாராளுமன்றத்தின் வரலாற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ள முடியும்.

காலனித்துவ இலங்கையில் 1910 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் அடிப்படையில் சட்டசபைக்குப் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் தேர்தல் முறை முதல் முதலாக அறிமுகமாயிற்று. அதன் பின்னர் 1931 இல் வயது வந்த ஆண், பெண் இருபாலாருக்கும் வாக்குரிமை வழங்குதல் என்ற சர்வசன வாக்குரிமை அறிமுகமாயிற்று. இவ்விரு ஆண்டுகளும் பாராளுமன்ற முறை இலங்கையில் உருவாகுவதற்கான அடித்தளத்தை அமைத்த திருப்பு முனையான ஆண்டுகளாகும். 1910 ற்கும் 1947 ற்கும் இடையில் பரிணாமம் பெற்ற சட்ட சபைகளை முந்து பாராளுமன்றமுறை (Proto Parliamentary System) என அழைத்தல் பொருத்தமுடையது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட சட்டசபைகள் காலனிய அரசின் (Colonial State) நிறுவனங்கள் ஆகவே இருந்தன. இலங்கையின் அன்றைய வாக்காளர்களும் சுதந்திரமான பிரஜைகள் என்ற நிலையில் இருக்கவில்லை. அக்காலத்தில் அரசியல் இறைமையுடைய அரசியல் சமூகம் என ஒன்று இலங்கையில் இருக்கவில்லை. 1947 இல் உருவாக்கப்பட்டதே முறைப்படியான பாராளுமன்றமாகும். இப்பாராளுமன்றத்தின் முன்னோடியாக 1931 இல் உருவாக்கப்பட்ட சட்டசபை (State Council) அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய பாராளுமன்றம் 1972 வரை நிலைத்திருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில் அப்பாராளுமன்றத்தை காலனித்துவ நீக்கம் செய்தல் (Decolonisation) நிகழ்ச்சி நிரலின்படி மீள அமைக்க வேண்டும்; தேசிய விடுதலையின் சின்னமாக புதியதொரு பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற விவாதம் அக்காலத்தில் நடைபெற்றது.

1970 தொடக்கம் பாராளுமன்றத்தின் இயல்பும் கட்டமைப்பும் அதன் அதிகாரங்களும் காலத்துக்குக் காலம் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் மாறத்தொடங்கின. இத்திருத்தங்கள் செய்யப்பட்ட முறையை அவதானிக்கும் போது பல்வேறு குழுக்களினதும் தனிநபர்களினதும் நலன்கள் தொடர்புபட்டிருந்ததைக் காணமுடியும். வெவ்வேறு அதிகாரக் கூட்டுகளின் (Power Blocks) கருத்தியல் அக்கறைகளும், குழுநலன்கள், வர்க்கக் கூட்டணிகள் (Class Alliances) அரசியல் உயர் குழுக்கள் (Political Elites) என்பனவற்றின் நலன்களும் வெளிப்பட்டன. சில தனிநபர்களான அரசியல் தலைவர்களுடைய சுயவேட்கைகளும் அரசியல் யாப்புத் திருத்தங்களில் வெளிப்பட்டன. அத்தோடு நாட்டில்  நல்லாட்சியொன்று அமைதல் வேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்ப்புகளும் இத்திருத்தங்ளின் போது இடையிடையே வெளிப்பட்டன.

சோல்பரி அரசியல் யாப்பு

இலங்கையின் பாராளுமன்ற அரசாங்கம் பிரித்தானியாவின் ‘வெஸ்ட்மினிஸ்ரர்’ மாதிரியில் வடிவமைக்கப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பை வரைந்தவர்கள் இம்மாதிரியில் சிற்சில திருத்தங்களை மட்டுமே செய்தனர். பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்ர் மாதிரி மூன்று விசேட சிறப்புக் கூறுகளைக் கொண்டது. முதலாவதாக பிரித்தானியாவில் இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் (Bicameral Legislature) இருந்தது. அது அந்நாட்டின் வர்க்க அமைப்பைப் பிரதிபலிப்பதாக இருந்தது. ஒரு சபை சாதாரண மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் சபையாகவும், இன்னொரு சபை செல்வந்தர்களான உயர்குழுவைப் பிரதிநிதித்துவம் செய்யும் சபையாகவும் இருந்தது. முதலாவது சபை பொதுமக்கள் சபை (House of Commons) என்ற பொருத்தமான பெயரைப் பெற்றது.  இரண்டாவது சபை பிரபுக்கள் சபை (House of Lords) எனப்பட்டது. முதலாவது சபை பொது மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபையாகும். மேற்சபை என்றும் அழைக்கப்படும் பிரபுக்கள் சபை மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையன்று. அச்சபை உறுப்பினர் தேர்தல் மூலம் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுபவர்களும் அல்ல. பிரித்தானிய அரசின் தலைவரான மகாராணி/அரசர் என்ற நிறுவனமும் பாராளுமன்றத்தின் ஓர் அங்கமாகும். பிரித்தானியாவின் ஜனநாயகப் புரட்சி நீண்டகால வரலாற்றை உடையது. அந்நீண்ட வரலாற்றில் எச்சந்தர்ப்பத்திலும் முடியாட்சியை (Monarchy) ஒழிப்பதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை. மூன்றாவதாக மந்திரிசபை (Cabinet) பாராளுமன்றத்தின் ஓர் அங்கமாகவே உள்ளது. நிருவாக அதிகாரங்களையுடைய மந்திரி சபையின் உறுப்பினர்களாக இருக்கும் அமைச்சர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருப்பதால் பிரித்தானியாவின் நிருவாகத்துறையும் சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்தின் அங்கமாகவே உள்ளது. மந்திரிசபை கூட்டாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியதாய் (Accountable) உள்ளது.

மேற்குறிப்பிட்ட கூறுகளையுடைய பிரித்தானிய மாதிரியைப் பின்பற்றி இலங்கையின் பாராளுமன்றமும் இருசபைகளைக் கொண்டதாய் அமைந்தது. இலங்கையின் அரசுத்தலைவராக பிரித்தானிய மகாராணி விளங்கினார். இலங்கைப் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் சனப் பிரதிநிதிகள் சபை (House of Representatives), செனெற் சபை (Senate) எனப்பெயரிட்டு அழைக்கப்பட்டன. இரண்டாம் சபையான மேற்சபையின் செனேற் என்ற பெயர் வெஸ்ட்மினிஸ்டர் மரபைச் சார்ந்த பெயர் அன்று. அது ரோமானியக் குடியரசு (Roman Republicanism) மரபைச் சார்ந்த பெயராகும். ஆயினும் இப்பெயர் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டவாளர்களால் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்படவில்லை.

இவ்வாறிருக்க, இலங்கையின் பாராளுமன்றமுறை பிரித்தானிய மாதிரியில் இருந்து ஒரு முக்கிய அம்சத்தில் வேறுபட்டதாக இருந்தது. சோல்பரி அரசியல் யாப்பு பாராளுமன்றத்தின் சட்டவாக்க இறைமையின் மீது (Legislative Sovereignty) மட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இரண்டு சர்ச்சைகள்

இலங்கையின் பாராளுமன்றம் பற்றிய இரண்டு பிரதான சர்ச்சைகள் எழுந்தன. முதலாவது சர்ச்சை பாராளுமன்றத்தின் சட்டவாக்க இறைமையின் மீது மட்டுப்பாடுகளை விதித்ததும், சிறுபான்மையினர் உரிமைகளின் பாதுகாப்புக்கு எனவும் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின் 29 (2) பிரிவு பற்றியதாகும். இலங்கையின் பாராளுமன்றத்தின் மீது இவ்வாறு அதன் சட்டவாக்க இறைமையை மட்டுப்படுத்தியமை இலங்கை மக்களின்  விடுதலைக்கான விருப்பை நிறைவு செய்ததென்று கொள்ள முடியாது. காலனி ஆட்சியின் அடிமைத்தனம் நீங்கவில்லை என்பதையல்லவா இது குறிக்கின்றது என வாதிடப்பட்டது. இச் சர்சையின் சாரம் வருமாறு: ‘பாராளுமன்றத்திற்கு முழுமையான சட்டவாக்க இறைமை வழங்கப்படவில்லையென்றால், இலங்கைத் தேசம் (Nation)’ முழுமையான சுதந்திரம் உடையது எனக் கூற முடியுமா? இலங்கை சுதந்திரமடைந்த சிறிது காலத்திற்கு முன்பாகவே பாராளுமன்றம் இனத்துவப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism) என்ற பாதையில் பயணிக்கத் தொடங்கியமை, இரண்டாவது சர்ச்சையை தோற்றுவித்தது.

முதலாவது சர்ச்சையைக் கிளப்பி அதை முன்னெடுத்தவர்கள் இலங்கையின் இடதுசாரிகளும் சிங்களத் தேசியவாதிகளுமாவர். சட்டவாக்க இறைமை இல்லாத பாராளுமன்றம் ஒன்றையே 1948 இன் அரசியல் சுதந்திரம் இலங்கைக்கு வழங்கியது; ஆகையால் அது முழுமையான சுதந்திரம் அன்று என இடதுசாரிகளும் சிங்கள தேசியவாதிகளும் வாதிட்டனர். சிங்கள தேசியவாதிகளும் இடதுசாரிகளும் பாராளுமன்றத்தின் சட்டவாக்க இறைமையை மட்டுப்படுத்தும் 29 (2) பிரிவை நீக்க வேண்டும் எனக் கோரினர். அத்தோடு திருப்தியடையாதவர்களாய், இலங்கையை பொதுநலவாயத்திற்கு உட்பட்ட குடியரசாகவும் ஆக்க வேண்டும் எனவும் இவ்விருசாராரும் கோரினர். இவ்விருசாராரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் வேறுபட்டனவாக இருந்த போதும் இவ்விடயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாக விளங்கினர். 1953 இல் பௌத்த விசாரணைக்குழு அறிக்கையும் இதனை முக்கிய சிபாரிசாகக் குறிப்பிட்டது.

இடதுசாரிகளின் குடியரசுக் கோரிக்கையில், பிரஞ்சுக் குடியரசினதும், சோஷசலித் தத்துவத்தினதும் கூறுகள் எதிரொலித்தன. இலங்கையின் அரசியல் சமூகம் சுதந்திரம், சமத்துவம் என்ற இலட்சியங்களின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என்பது அவர்களது கருத்தாகவிருந்தது. லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரான கொல்வின் ஆர்.டி. சில்வா சட்டப்புரட்சி ஒன்றின் மூலமே 29 (2) பிரிவை நீக்குதல் சாத்தியம் எனவும், குடியரசாக இலங்கையை மாற்றி அரசியல் யாப்புச் சபை (Constituent Assembly) ஒன்றை மக்கள் ஆணை மூலம் உருவாக்கிப் புதிய அரசியல் யாப்பை வரைதல் வேண்டும் எனவும் விளக்கம் அளித்தார்.

தேசியவாத, சோஷலிசக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்னும் மூன்று கட்சிகளுக்கும் பிரிவு 29 (2) இனை திருத்துவதற்கும், இயற்கையைக் குடியரசாக மாற்றுவதற்குமான அரிய வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு கிடைத்தது. அக்கட்சிகளுடைய கூட்டணி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று அவ்வாண்டு ஆட்சியமைத்தது. ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது. பின்னாளில் இடம்பெற்ற நிகழ்வுகள் இதை உறுதி செய்தன.

பெரும்பான்மைவாத பாராளுமன்றமுறை

பெரும்பான்மையின் ஆட்சி (Majority Rule) என்னும் தத்துவம் பாராளுமன்ற முறையின் உள்ளார்ந்த பலவீனங்களில் ஒன்று. பெரும்பான்மையின் ஆட்சி பெரும்பான்மைவாதம் (Majoritarianism) எனப்படும். இலங்கை போன்ற பன்மைத்துவச் சமூகங்களிற்கு (Ethnically Plural Societies) பெரும்பான்மைவாதப் பாராளுமன்றமுறை பொருத்தமற்றது என்பது அரசியல் அறிஞர் கருத்து. பாராளுமன்றமுறையின் கீழ் ஜனநாயகம் தழைக்க வேண்டுமாயின் ஆட்சியாளர்கள் பெரும்பான்மைவாதம் என்ற ஆயுதத்தை சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான கருவியாக உபயோகிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். ஆயின் இலங்கையின் ஆளும் குழுக்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் பெரும்பான்மைவாதப் பாதையில் பயணிக்கத் தொடங்கினர். பாராளுமன்றமுறை நாடுகளில் ஜனநாயகம் செயற்படும் முறை பற்றிய ஒப்பீட்டாய்வை மேற்கொண்ட அரன்ட் லிஜ்பார்ட் (Arend Lijphart) என்னும் அரசியல் அறிஞர் பாராளுமன்ற முறையின் பெரும்பான்மை ஆட்சியின் தீங்கான விளைவுகளை எடுத்துக்காட்டியுள்ளார். பல இனத்துவக்குழுக்கள் வாழும் பன்மைச் சமூகங்களில் ஒரு பெரும்பான்மைப் பலமுடைய இனக்குழுமம் சட்ட சபையைத் தனது கருவியாக மாற்றுவது மட்டுமல்லாது, நாட்டின் முழு ஜனநாயக அரசு முறையையும் பெரும்பான்மை இனக்குழுமத்தின் நலன்களைப் பேணுவதற்குரிய கருவியாக மாற்றி விடுகிறது என்பதை அவர் விளக்கிக் கூறியுள்ளார். அவ்வாறான நிலைமையில் சிறுபான்மை இனக்குழுமங்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்படுகின்றன என்பதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

தேர்தல் முறையும் பாராளுமன்றமும் சார்ந்த அரசியல் கட்டமைப்புகளில் ஆழமாக வேர் பதிக்கும் பெரும்பான்மைவாதம், இனத்துவப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism) என உருமாற்றம் பெறுகின்றது. இலங்கை இனத்துவப் பெரும்பான்மைவாதத்தின் காரணமாக ஜனநாயகப் பாதையில் இருந்து விலகிச் சென்ற நாடுகளிற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

1949 இல் இலங்கையின் பாராளுமன்றம் இலங்கையின் குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை பற்றிய திருத்தச் சட்டங்களை இயற்றியது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டு கழிந்தவுடனேயே கொண்டுவரப்பட்ட நீதியற்ற இச்சட்டவாக்கங்களைத் தொடர்ந்து இலங்கை ஜனநாயக வழிவிலகல் பாதையில் நீண்டதூரம் பயணித்து விட்டது. இதன் விளைவாக இலங்கையின் பாராளுமன்றம் இனத்துவப் பெரும்பான்மைவாதம் என்ற பொறிக்குள் வீழ்ந்தது. 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1972 அரசியல் யாப்பு சிறுபான்மையினரின் நலன்களுக்குப் பாதகமான அம்சங்களைப் புகுத்தியது. 1950 களின் முற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் இனத்துவப் பெரும்பான்மைவாத அடிச்சுவட்டில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் பயணித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் எதிரிகளான கட்சிகளும் இனத்துவப் பெரும்பான்மைவாதத்தில் தமக்குள்ள உறுதியான பற்றுதலையும், அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தீவிர விருப்பையும் வெளிப்படுத்தின.

1972 இன் குடியரசு அரசியல் யாப்பு

1972 இன் குடியரசு அரசியல் யாப்பு முன்னைய சோல்பரி அரசியல் யாப்பைக் குடியரசுத் தத்துவங்களிற்கு (Principles of republicanism) அமையத் திருத்தம் செய்து புதிய யாப்பை உருவாக்கியது. இப்புதிய யாப்பு இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக முறையின் பரிணாம வளர்ச்சி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இப்புதிய யாப்பு இலங்கையில் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையில் சில உருத்திரிபுகளை ஏற்படுத்தியது. இது முன்னையதைவிட பெரும் தீங்கானதாக அமைந்தது. 1972, 1978 ஆகிய இரு ஆண்டுகளிலும் நடைமுறைக்கு வந்த இரு அரசியல் யாப்புகளும் பாராளுமன்றமுறையை உருமாற்றிச் சிதைத்தன எனலாம்.

அரசியல் உயர்குழுக்கள் அரசியல் யாப்புகளைப் புதிதாகக் கொண்டுவரும் போது தமது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்கான குறிப்பிட்டதொரு அரசியல் கருத்தியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுவதுண்டு. 1972 இலும் 1978 இலும் அரசியல் யாப்புகள் புதிதாக நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்ட போது இருவேறு உயர்குழுக்கள் அவற்றைச் செயற்படுத்தின. அவ்விரு உயர்குழுக்களிடமும் தாராண்மைவாத பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது மிகுந்த அவநம்பிக்கையிருந்தது. தாராண்மைவாத பாராளுமன்றமுறை தமது சுய அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்கு உதவப்போவதில்லை என அவை கருதியதால் எழுந்த அவநம்பிக்கை இதுவெனலாம். அவர்களின் இந்த அவநம்பிக்கைக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.

1972 இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் சிங்கள தேசியவாதிகளும் சோஷலிஸ்டுகளும் பழமைப் பாங்கிலான பாராளுமன்ற ஜனநாயகத்தை வெறுத்தனர். அப்பழைமையான பாராளுமன்றமுறை ‘லொக்’ என்னும் 17 ஆம் நூற்றாண்டின் அரசியல் ஞானியின் தாராண்மைவாதத் தத்துவங்களின்படி (Liberal Principles) முன்வைக்கப்பட்டது. லொக், அரசு பொது மக்களின் வாழ்க்கையில் தலையீடு செய்யக்கூடாது; குறைந்தளவு பணிகளை ஆற்றும் அரசாக (Minimum Government) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சோல்பரி அரசியல் யாப்பு மாதிரிக்கு எதிரான வாதங்களையும் கண்டனங்களையும் வெளிப்படுத்திய வண்ணம் இருந்த தேசியவாதிகளும் சோஷலிஸ்டுகளும் 1972 இல் ஆட்சியைக் கைப்பற்றியபோது தமது செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துணிந்தனர். 1972 அரசியல் யாப்பை வரைந்த சோஷலிஸ்டுகளும் தேசியவாதிகளும் ”பொதுமக்கள் இறைமை” (Popular Sovereignty) என்பதன் அப்படையில் அரசியல் யாப்பை மீள்வரைதல் செய்ய வேண்டும் என முடிவுசெய்தனர். அவர்களின் அரசியல், கருத்தியல் இலக்குகள் சோஷலிசமும் தேசியவாதமுமாக அமைந்தன. 1992 அரசியல் யாப்பு இலங்கையை ஒரு ‘குடியரசு’ எனப் பிரகடனம் செய்தது; அதனை இறைமையுடைய குடியரசு எனவும், சோஷலிசக்குடியரசு எனவும் (Sovereign Socialist republic) பிரகடனம் செய்தது. இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தை ஒழித்து அதனிடத்தில் ‘தேசிய அரசுப் பேரவை’ (National State Assembly) என்ற பெயரில் ஒரு சபையை மட்டும் உடைய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. தேசிய அரசுப் பேரவை என்ற பெயரை அவர்கள் எங்கேயிருந்து பெற்றார்கள்? பிரஞ்சுப் புரட்சியின் பின்னர் 1789 இல் அமைக்கப்பட்ட பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் பெயர் தேசிய அரசுப் பேரவை ஆகும் என்ற செய்தி எமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரிப் பாராளுமன்ற முறையில் இருந்து விலகிச் சென்று பிரான்சு தேசத்தின் குடியரசுப் பாராளுமன்ற மாதிரியை (French Parliamentary Model) தழுவிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் இருந்ததை இப்பெயரிடுதல் எடுத்துக் காட்டியது. அத்தோடு பிரஞ்சுக் குடியரசுப் பாராளுமன்ற மாதிரியுடன் சோஷலிச அரசியல் யாப்பு அம்சங்களையும் கலந்த முறையொன்றை இலங்கைக்குள் புகுத்துவதற்கு இவ் அரசியல் யாப்பை வரைந்த செல்வாக்குமிக்க நபர்கள் விரும்பினார்கள் என்பது தெரிய வருகிறது.

1972 அரசியல் யாப்பை வரைந்தவர்கள் பாராளுமன்றம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது? அதன் பணிகள் யாவை? என்பன பற்றிய குறிப்பிட்டதொரு கருத்தியல் நோக்கைக் கொண்டிருந்தனர். அவர்களின் கருத்தியல் அணுகுமுறையைக் கருவிவாத அணுகுமுறை (Instrumentalist Approach) எனலாம். சோஷலிச அரசியல் சொல்லாடலில் இருந்து கடன் பெற்ற ‘The supreme instrument of state power’ என்ற தொடரால் தேசிய அரசுப் பேரவையை அரசியல் யாப்பு வருணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு, அதிகாரத்தின் அதிஉயர் கருவி என்ற பொருள் உடைய இச்சொற்தொடர் வெளிப்படுத்தும் செய்திகள் முக்கியம் வாய்ந்தவை. தேசிய அரசுப் பேரவையிடம் (NSA) சட்ட ஆக்கம், நிர்வாகம், நீதி ஆகிய அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டன. சோல்பரி அரசியல் யாப்புப் போன்றில்லாமல், 1972 இன் குடியரசு அரசியல் யாப்பின் பாராளுமன்றம் அதிஉயர் (Supreme) சட்ட ஆக்க அதிகாரம் உடையது என அறிவிக்கப்பட்டது. அதன் சட்ட ஆக்க நியாயாதிக்கத்தை நீதிமன்றங்கள் உட்பட எவராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாதது எனக் குறிப்பிடப்பட்டது.

”No authority, institution or person, including the judiciary had the power or jurisdiction to inquire into, pronounce upon, or in any manner call into question the validity of any law passed by the NSA” எனக் குறிப்பிடப்படும் அரசியல் யாப்புப் பிரிவை மேற்கோள் காட்டும் ஜயதேவ உயன்கொட அவர்கள் இப்பிரிவு சோல்பரி அரசியல் யாப்பை வரைந்தவர்கள் முகத்தில் ஓங்கி அடிப்பது போல் அமைந்தது எனக் குறிப்பிடுகிறார். பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை நீதிமன்றங்கள் மீளாய்வு செய்யலாம் (Judicial Review of Legislation) என்னும் விதி சோல்பரி அரசியல் யாப்பில் உள்ளமைந்து இருந்தது. இதனைப் பயன்படுத்தி முன்னைய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட பாரபட்சமான சட்ட ஆக்கத்தை தமிழ்ச்சிறுபான்மை இனத்துப் பிரஜைகள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடிந்தது. பாராளுமன்றத்தின் சட்டவாக்க மேலாண்மையை (Legislative Supremacy) நிறுவியதன் மூலம் எவராலும் பாராளுமன்றச் சட்டங்களைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்ற நிலை உருவானது. ஆயினும் அரசியல் யாப்பை வரைந்தவர்கள் பாராளுமன்றத்தின் நிறுவனச் சுயாதீனத்தை (Institutional Autonomy) இல்லாமல் செய்தனர். அரசாங்கத்தின் அரசியல் தலைமையின் கையில் ஒரு கருவியாக (Instrument) பாராளுமன்றம் ஆக்கப்பட்டது.

இதன் விளைவு யாது? அரசின் செல்வாக்குள்ள ஒரு பிரிவினர் பாராளுமன்றத்தை சோஷலிச மாற்றத்திற்கான பிரதான கருவியாக உபயோகிப்பதற்கு விரும்பினர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் பாராளுமன்றம் அளவற்ற அதிகாரங்களை உடைய நிறுவனம் ஆக்கப்பட்டது. அப்பாராளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்த வாக்காளர்களை வலுவுடையவர்கள் ஆக்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தை அரசாங்கத்திடமும் ஆட்சியில் அமர்ந்திருந்த உயர்குழுவிடமும் ஒப்படைத்து தாம் விரும்பிய இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அதிகாரத்தை அரசியல் யாப்பு வழங்கியது.  

மேற்கண்டவாறு 1972 அரசியல் யாப்புச் சில தாராண்மை மறுப்பு (illiberal) இயல்புகளை இலங்கையின் அரசியல் யாப்பில் புகுத்தியது. இத்தாராண்மை மறுப்புக் கூறுகளை யாப்பினை வரைந்தவர்கள் பிரான்ஸ் நாட்டின் குடியரசுவாதத்தில் இருந்தும் சோஷலிச அரசியல் யாப்புச் சிந்தனையில் இருந்தும் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1978 இன் இரண்டாவது குடியரசு யாப்பு 1972 அரசியல் யாப்பு தொடக்கி வைத்த வழியில் ஒருபடி முன்னே சென்று பிரான்சு நாட்டின்  ‘டி கால் பாணி’ (De Gaulle) சர்வாதிகார முறைகள் சிலவற்றை இலங்கையின் அரசியல் யாப்பில் சேர்த்துக் கொண்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரது சட்ட ஆலோசகர் குழுவும் பாராளுமன்றத்தை அதிகாரமற்ற ஒரு சபையாகவும், தலைவருக்குப் பணிந்து சேவகம் செய்யும் ஒரு நிறுவனமாகவும் மாற்றினர். 1978 அரசியல் யாப்பின் சிற்பி எனக் கருதப்படும் ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது அரசியல் யாப்புத் திட்டத்திற்கு ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை’ (An Executive Presidential System) எனப்பெயரிட்டார். அவர் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையில் இருந்து விலகி நிர்வாகத்துறையையும் சட்ட ஆக்கத்துறையையும் ஒன்றாக இணைத்தார். இதன் மூலம் பாராளுமன்றமுறையின் உள்ளார்ந்த பண்பாக இருந்த அதிகாரங்களின் பிரிப்பு (Separation of Powers) என்பதை இல்லாது ஒழித்தார். 1978 அரசியல் யாப்பு மூலம் பாராளுமன்றம், மந்திரிசபை என்ற இரண்டு நிறுவனங்களையும் ஒரு தனிநபரான தனது முழுமையான மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். அவரே அரசுத் தலைவராகவும், அரசாங்கத் தலைவராகவும், ஆளும் அரசியல் கட்சியின் தலைவராகவும் விளங்கினார். அரசுத்தலைவர், அரசாங்கத் தலைவர், ஆளும் கட்சித் தலைவர் என்ற நிலையில் அவரது தனிநபர் சர்வாதிகாரம் ஆரம்பித்தது. 1978 அரசியல் யாப்பின் அரசியல் யாப்பு மாற்றம், இலங்கை அரசின் நிருவாகத்துறை (Executive Branch of the Legislature), சட்ட ஆக்கத்துறை மீது மேலாதிக்கம் செய்யும் போக்கை உச்ச நிலைக்கு எடுத்துச் சென்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவை அடுத்துப் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளான தனிநபர்களின் தனிப்பட்ட சர்வாதிகார நிகழ்ச்சி நிரலின்படி பாராளுமன்றத்தைத் தரம் தாழ்த்தும் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் யாப்பு நிருவாகத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான உறவுகளைத் தலைகீழாக மாற்றியது. பாராளுமன்றத்தைவிட ஜனாதிபதி அதிகாரம் கூடியவராக ஆக்கப்பட்டார். இந்த உறவு தொடர்பில் 2015-2019 காலத்தில் (யஹ பாலன காலய – நல்லாட்சி அரசாங்க காலம்) 19 ஆவது திருத்தம் மூலம் தற்காலிக மாற்றம் கொண்டுவரப்பட்டது.

சீர்திருத்த முயற்சிகள் தோல்வியடைதல்

1978 இன் அரசியல் யாப்பு இலங்கையில் ஜனாதிபதிமுறையை உருவாக்கியது. அதனை மீளவும் பாராளுமன்றத்தை மையப்படுத்திய மந்திரிசபை அரசாங்கமாக (Parliament – Centric Cabinet Government) மாற்றிப் பழைய நிலைக்கு மீட்டுச் செல்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, சிலர் திருத்தங்களைச் செய்து 1972 இன் யாப்புக்கு ஒத்ததான யாப்பு முறையைப் புகுத்தலாம் என்ற மாற்று யோசனையை முன்வைத்தனர். 1994 ஆம் ஆண்டில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன கூட்டுச் சேர்ந்து அமைத்த மக்கள் முன்னணி (People’s Alliance) அரசாங்கம் 1972 இன் பாராளுமன்ற அரசாங்கமுறைக்குத் திரும்புவோம் என்ற வாக்குறுதியை முதன் முதலாக வழங்கியது. ஆனால் மக்கள் முன்னணி (PA) அரசாங்கம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மதத்தைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி இதற்குச் சம்மதிக்காதபடியால் 1995 – 2001 காலத்தில் 1978 அரசியல் யாப்பு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் குறிப்பாக 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதிமுறையைக் கடுமையாக விமர்சித்து வந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர்களும், இடதுசாரிகளும் ஜனாதிபதிமுறையின் பாதுகாவலர்களாக மாறினர். அவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழிக்கக் கூடாது என்ற கருத்துடையவர்களாக மாறினர். 2005 – 2014 காலத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்னும் முயற்சியில் அதிதீவிரம் காட்டினர். பொதுசன அபிப்பிராயமும் ஜனாதிபதி முறையின் ஒழிப்புக்குச் சாதகமாக மாறியது.

  1. சர்வாதிகார ஆட்சி
  2. அதிகாரத் துஸ்பிரயோகம், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்மை (Impunity)
  3. கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) அலட்சியப்படுத்தப்படுதல்
  4. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இன்மை
  5. அரசியல் அதிகாரத்தைத் தனிநபர்மயப்படுத்தும் பேராசையால் ஆட்சியாளர் உந்தப்படுதல்
  6. மக்கள் மீதான ஒடுக்குமுறையை சாதாரணமான விடயமாக்குதல் (Normalization of Repression)

ஆகிய தீங்குகள் ஜனாதிபதி முறையின் கீழ் அதிகரித்துச் சென்றதால் பொதுமக்களும் அம்முறையை வெறுத்தனர். ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கு பொதுமக்கள் ஆதரவு பெருகியது.

அரசியலில் சீர்திருத்தம் வேண்டிய பல்வேறு பிரிவினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியில் 2015 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராயினர். இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் பிரிந்து சென்ற குழுக்களும் இணைந்தன. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ‘ஜஹபாலனய’ (நல்லாட்சி) அரசாங்கத்தின் அரசியல் உயர்குழுக்கள் ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிப்பது பற்றி ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. ஒரு பிரிவினர் பாராளுமன்ற மந்திரிசபை முறையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினர்; இன்னொரு பிரிவினர் ஜனாதிபதி முறையில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தால் போதும் என்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதினர். ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கக் கூடாது எனக் கருதியவர்கள் பாராளுமன்ற மந்திரிசபைக்குத் திரும்பினால் அரசியல் உறுதியற்றநிலை ஏற்படும் என்றும், அம்முறையின் கீழ் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய தலைமைத்துவத்தை வழங்க முடியாதெனவும் கூறினர். ஜனாதிபதியின் தலைமைத்துவம் தேசிய இறைமையின் அடையாளமாகும் எனவும் இப்பிரிவினர் கருதினர்.

ஜனாதிபதிமுறை தொடர வேண்டும் என்று வாதிட்டவர்களிடையே தூய பாராளுமன்ற மந்திரிசபை பற்றிய நம்பிக்கையின்மையும் விமர்சனமும் இருந்தது. அவர்கள், அம்முறை அரசாங்கம் பலவீனமானது; இலங்கைச் சிறுபான்மை இனங்களின் கிளர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான சக்தி பாராளுமன்ற அரசாங்கத்தின் தலைமையிடம் இருக்காது எனக் கருதினர். இலங்கையின் பாதுகாப்புத் தேவைகள் முக்கியமானவை; பாராளுமன்றத்தின் அரசியல் பலத்திலும் ஆதரவிலும் தங்கியிருக்கத் தேவையில்லாத ஜனாதிபதியினால் மட்டுமே தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரு பிரிவினருக்கிடையிலும் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் விளைவாக 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் விளைவாக பாராளுமன்ற முறையினதும் ஜனாதிபதி முறையினதும் கலப்பான முறை அரசாங்க முறை (A Hybrid Parliamentary Presidential Government) நடைமுறைக்கு வந்தது. 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட சீர்திருத்தங்கள் காலப்போக்கில் பாராளுமன்ற மந்திரிசபை முறையைப் பலப்படுத்த உதவியிருக்கும். ஆனால் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு பழைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு இலங்கை 2019 ஆம் ஆண்டில் திரும்பியது.

20 ஆவது திருத்தத்திற்குப் பிந்திய காலப் பாராளுமன்றம்

2019 இல் அரசியல் யாப்புக்கான அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டவுடன் மிக விரைவாகவே இலங்கையின் அரசியலமைப்புமுறை 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்த சர்வாதிகார ஜனாதிபதிமுறை என்ற வடிவத்திற்கு மீண்டும் சென்றது. 19 ஆவது திருத்தம் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானதும் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தம் முன்னைய 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்திற்கு வழங்கிய சுயாதீனத்தை இல்லாமல் செய்து அதனை ஜனாதிபதி என்ற தனிநபரின் கருவியாக மாற்றியது. இஸ்லாமியத் தீவிரவாதம், தேசத்தின் பாதுகாப்பு என்னும் இரு விடயங்களையும் மையப்படுத்திய தேர்தல் பிரசாரத்தின் மூலம் தனது தனிப்பட்ட அதிகார ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ஜனாதிபதி, தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர் தாமே என்ற எண்ணத்துடன் செயற்படத் தொடங்கினார். சட்டவாக்க அதிகாரம், நிருவாக அதிகாரம், நீதி அதிகாரம் என்ற மூன்றையும் கையகப்படுத்தித் தமது கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் கொண்டு வந்தார். 2020 மார்ச் மாதம் ‘கொவிட்’ தொற்று நோய் பரவிய போது நிருவாகத்துறை, பாராளுமன்றத்தைப் பொருட்படுத்தத் தேவையற்ற ஒரு நிறுவனமாகக் கருதி அதனை அலட்சியப்படுத்தியது. இக்காலத்தில் இலங்கை நிருவாகச் சர்வாதிகாரத்தினை நோக்கிய பாதையின் புதிய திருப்பத்தை அடைந்தது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரித்துச் செல்லச் செல்ல பாராளுமன்ற ஜனநாயகம் நலிவடைந்து சென்றதை 1978 முதல் இன்று வரையான அரசியல் வரலாறு உணர்த்தியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதிமுறை இரண்டு வகை உபாயங்களின் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பலப்படுத்திப் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து வந்துள்ளது. முதலாவது உபாயம் பாராளுமன்றத்தைச் செயல்வலுவற்ற நிறுவனமாக்கி அதனை நிருவாகத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் ஆகும். இரண்டாவது உபாயம் பாராளுமன்றத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உடையதாக்கி, அதனை மேற்தோற்றத்தில் பலமுடைய நிறுவனம் போல் காட்டுவதும், அந்நிறுவனத்தை ஜனாதிபதியின் கைக்கருவியாக மாற்றுவதும் ஆகும். பாராளுமன்றத்தில் ஆளும் அரசியல் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடையதாகும் போது இலங்கையில் பாராளமன்ற ஜனநாயகம் நலிவடைந்து சென்றதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

தனிப்பட்ட சுயநல நிகழ்ச்சி நிரலை முன்வைத்துச் செயற்பட்ட அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துப் பாராளுமன்ற ஜனநாயகத்தை நலிவடையச் செய்தனர். தமது அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உடையதாக இருந்த போது, அவர்களின் அகங்காரப் போக்குடைய அரசியல் இலக்குகளை அவர்களால் அடைய முடிந்தது. இதனைக் கடந்த கால வரலாறும், நிகழ்கால வரலாறும் உணர்த்தியுள்ளது. தம்மை இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியுடையவர்கள் எனக் கருதிய இத்தலைவர்கள் பாராளுமன்றம் என்ற நிறுவனத்தைத் தமது கைப்பொம்மையாக ஆக்கினர். பாராளுமன்றத்தைப் பலாத்கார வழிகளில் பணியவைத்து இலங்கையின் அரசு முறையை ஜனநாயக மறுப்புச், சர்வாதிகார, வல்லாட்சிப் (illiberal, authoritarian and autocratic) பாதையில் எடுத்துச் சென்றனர். இத்தலைவர்களின் பலாத்காரத்திற்குப் பலியான பாராளுமன்றம் தனது அதிகாரங்களையும், கடமைகளையும், பொறுப்புகளையும் துறந்து நிருவாகத் துறைக்கு சேவகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பாராளுமன்றத்தின் சட்ட ஆக்க அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டது.

பாராளுமன்றம் அறுதிப் பெரும்பான்மையற்றதாக உறுதியற்ற நிலையில் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் வீரியத்துடன் மீள் உயிர்ப்புப் பெற்றதையும் கடந்த கால வரலாறு உணர்த்தியுள்ளது. ஆயினும் அறுதிப் பெரும்பான்மைப் பலமற்ற அரசாங்கங்களால் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இது ஒரு முரண்பாடான நிலையைத் (Paradoxical Situation) தோற்றுவித்துள்ளது. ஆகையால் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீளக் கொண்டுவரும் அரசியல் இலக்கை அடையும் நோக்குடன் சீர்திருத்தவாத அரசியல் சக்தியொன்று உதயமாக வேண்டும். அவ்வரசியல் சக்தி ஒரே சமயத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதோடு ஜனாதிபதிப் பதவியையும் கைப்பற்றுதல் வேண்டும். அப்போதுதான் சட்ட ஆக்கத்துறையும் நிருவாகத்துறையும் ஒத்துழைப்போடு செயற்பட முடியும். அவ்வேளை அரசுத்தலைவர் (Head of the State) என்னும் பதவியில் உள்ள தலைவர், தன்னிடமுள்ள எல்லையற்ற அரச அதிகாரங்களையும் சலுகைகளையும் துறந்து பொது மக்களின் நன்மை கருதி பாராளமன்ற ஜனநாயகமுறையை மீளக் கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும்.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீள் உயிர்ப்பித்தல் என்பது புதுவகையான சட்டப்புரட்சி (A New Type of Legal Revolution) மூலமே சாத்தியமாகும்.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களின் ‘Parliament and Parliamentary Democracy in Sri Lanka : A Brief Political History’ என்னும் தலைப்பிலான கட்டுரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2021 யூன் 30 திகதிய Ground Views இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரையின் தழுவலாக்கமாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது. 


ஒலிவடிவில் கேட்க

4030 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்