ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார
அரசறிவியல் கலைக்களஞ்சியம் என்னும் இப்புதிய தொடரின் முதலாவது கட்டுரையாக பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் என்னும் இக்கட்டுரை அமைகிறது. இவ்விரு அரசு முறைகளையும் ஒப்பீட்டு முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் 7 திறவுச் சொற்களுக்கான (Key Words) விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- ஜனநாயக அரசாங்க முறைகள் (Democratic Regime Types)
- பாராளுமன்றமுறை (Parliamentarism)
- தூய ஜனாதிபதிமுறை (Pure – Presidentialism)
- பாதியான ஜனாதிபதிமுறை (Semi – Presidentialism)
- பிரதமர் – ஜனாதிபதிமுறை (Premier – Presidentialism)
- ஜனாதிபதி பாராளுமன்றமுறை (President – Parliamentarism)
- ஜனாதிபதி முறையும் சர்வாதிகாரமும்
இத்திறவுச் சொற்களின் தேர்வுக்கு V.K. நாணயக்கார அவர்கள் எழுதிய ‘In Search of a New Constitution’ (2016) என்ற நூலினை ஆதாரமாகக் கொண்டுள்ளோம். இத் திறவுச்சொற்கள் பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்னும் இரு அரசாங்க முறைகள் பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் சார்ந்த கலைச் சொற்களாகும். இத்திறவுச் சொற்கள்/ கலைச்சொற்கள் முதற் பார்வையில் வாசகர்கள் சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; இதுவென்ன சொற்சிலம்பம் என வாசகர்கள் அலுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஜனாதிபதி முறை, பாராளுமன்ற முறை என்பனவற்றின் ஆய்வுகள் பல்கிப் பெருகியுள்ளன. இம்முறைகள் பற்றிய வெவ்வேறு மாதிரிகள் (Different Models) பற்றிய விளக்கங்கள் பல ஆய்வாளர்களால் கடந்த 50 ஆண்டு காலத்தில் எழுதப்பட்டன. இவ்வாறான நவீன ஆய்வுகளில் எடுத்துக்கூறப்பட்ட கருத்துகளை விளங்கிக் கொள்வதற்கு உதவக் கூடிய வகையில் முக்கிய எண்ணக்கருக்கள் விளக்கப்பட்டுள்ளன.
1. ஜனநாயக அரசாங்க முறைகள் (Democratic Regime Types)
உலகின் ஜனநாயக நாடுகளில் இரண்டு பிரதான அரசாங்க முறை மாதிரிகள் (Regime Types) இருந்து வருகின்றன. அவற்றை பாராளுமன்ற முறை, ஜனாதிபதி முறை என்று பெயரிட்டு அழைப்பர். ஐக்கிய இராச்சியத்திலும் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பாராளுமன்ற முறை இருந்து வருகிறது. இவற்றுள் எம்முறை சிறந்தது என்ற விவாதம் அரசியல் கோட்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெற்று வந்துள்ளது. மேலே தரப்பட்ட இரண்டு முறைகளோடு கலப்பு முறை (Hybrid System) என்னும் மூன்றாவது வகையும் ஜனநாயக நாடுகளில் உருவாகியிருப்பது 20 ஆம் நூற்றாண்டில் அடையாளம் காணப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் Maurice Duverger என்னும் பிரஞ்சு தேசத்து அறிஞர் கலப்பு முறையைப் ‘பாதி – ஜனாதிபதிமுறை’ (Semi-Presidential) என அழைக்கலாம் என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தார். பிரான்ஸ் நாட்டில் உருவான ஐந்தாம் குடியரசின் அடிப்படை இயல்புகளை விளக்குவதற்கு ‘Semi Presidential’ என்ற சொல் பொருத்தமுடையது என Duverger கருதினார். 1970 இற்குப் பிற்பட்ட காலத்தில் ஜனாதிபதி முறைக்குள் காணப்படும் உப பிரிவுகள் பற்றிய பல விவாதங்கள் இடம்பெற்றன எனவும் V.K. நாணயக்கார குறிப்பிடுகிறார். 1992 இல் Shugart and Carey என்போரால் எழுதப்பட்ட ‘Assemblies: Constitutional Design and Electoral Dynamics’ – Cambridge University Press என்னும் நூலில் பிரதமர் – ஜனாதிபதி முறை, ஜனாதிபதி – பாராளுமன்றமுறை என்ற இரு வகைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் பற்றி விளக்கிக் கூறினர். இவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் லிபரல் ஜனநாயக நாடுகளில் (Liberal Democracies) பின்வரும் நான்கு வகையான அரசாங்க மாதிரிகள் (Models) செயற்பாட்டில் உள்ளன எனக் கூறலாம். இம்மாதிரிகளின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே தரப்பட்டுள்ளன.
அ) பாராளுமன்றமுறை (Parliamentarism)
ஆ) தூய ஜனாதிபதிமுறை (Pure Presidentialism)
இ) பிரதமர் – ஜனாதிபதிமுறை (Premier – Presidentialism)
ஈ) ஜனாதிபதி – பாராளுமன்றமுறை (President – Parliamentarism)
ஒவ்வொரு முறை பற்றியும் அடுத்து நோக்குவோம்.
2. பாராளுமன்றமுறை (Parliamentarism)
அரன்ட் லிஜ்பாட் (Arend Lijphart) என்னும் டச்சு தேசத்து அரசியல் விஞ்ஞானி பாராளுமன்ற ஜனநாயக முறையில் இருவகைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார். அவையாவன:
- வெஸ்ட் மினிஸ்டர் முறை : இது பிரித்தானியாவின் அரசாங்க முறையாகும்.
- இணக்க முறை (Consensus System) : இது ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் முறையாகும். குறிப்பாக இரண்டாம் உலக யுத்த முடிவில் ஜேர்மனியில் உருவாகிய பாராளுமன்ற முறையாக இது விளங்குகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் பின்னர் இம்முறை பின்பற்றப்பட்டது.
முதலாவதான வெஸ்ட்மினிஸ்டர் முறை (Westminster System) ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற முறையைக் குறிப்பிடுகிறது. அந்நாட்டின் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் பெயரை இம்முறையின் பெயராக அழைக்கும் மரபு ஏற்பட்டது. இம்முறையை ஐரோப்பிய நாடுகளும், பொதுநலவாய நாடுகளும், முன்னாள் பொதுநலவாய நாடுகளும் பின்பற்றலாயின. முதலில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கனடாவின் மாகாணங்கள் இம்முறை அரசாங்கத்தை உருவாக்கின. பின்னர் அவுஸ்திரேலியா, இந்தியா, அயர்லாந்துக் குடியரசு, ஜமெய்க்கா, மலேசியா, மால்ட்டா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அரசியல் யாப்புகள் பாராளுமன்ற முறையைப் பின்பற்றி வரையப்பட்டன. இம்முறையில் பாராளுமன்ற விவாதங்கள் அரசியல் எதிரிகளுக்கு இடையிலானவையாக (Adversarial Style of Debate) அமைவதோடு இவ்விவாதங்கள் யாவரும் கூடியிருக்கும் பொது அவையில் (Plenary) நடைபெறும் என V.K நாணயக்கார குறிப்பிடுகிறார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஜேர்மனியின் சமஷ்டிக் குடியரசில் இரண்டாவதான இணக்க முறை மாதிரி (Consensus Model) பாராளுமன்ற அரசாங்கமுறை வடிவம் பெற்றது.
இணக்க முறை மாதிரியின் முக்கிய இயல்புகளை V.K. நாணயக்கார சுட்டிக் காட்டுகிறார்:
- இணக்க முறையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் விகிதாசாரமுறையில் அமைந்திருக்கும். ‘Proportional System’ என இது ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
- வெஸ்ட்மினிஸ்டர் முறை போல் அல்லாமல் தேர்தலில் கட்சிகளின் பட்டியல் முறையில் (Party List System) வாக்காளர்கள் தம் வாக்குகளைச் செலுத்துவர்.
- இம்முறையில் பாராளுமன்றத்தின் குழுக்கள் நிலை விவாதம் முக்கியமானது. ‘Plenary Chamber’ என்னும் பொது அவையை விட குழுக்களில் நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவையாக அமைகின்றன.
இணக்க முறையின் முன்னோடியாக மேற்கு ஜேர்மன் விளங்குவதால் இது ‘மேற்கு ஜேர்மன் மாதிரி’ (West German Model) என அழைக்கப்படுகிறது.
இலங்கையின் 1947 அரசியல் யாப்பு பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் முறைப் பாராளுமன்ற அரசாங்க முறையை இலங்கையில் புகுத்தியது. V.K. நாணயக்கார அவர்களின் ஒப்பீட்டு முறை ஆராய்வு, எமது நாட்டுத் தமிழ் மாணவர்கள், இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றை புதிய கோணத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது. இணக்க முறையில் பாராளுமன்ற முறை பற்றி அவர் தரும் மேலதிக தகவல்கள் பின்வருவன:
- நெதர்லாந்து, சுவீடன், சுவிற்சர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புகள், சட்ட சபைக்குப் பொறுப்புக் கூறும் அரசாங்கத்தைக் (Responsible Government) கொண்டுள்ளன. ஆயினும் இந்நாடுகளில் அமைச்சர்கள் பாராளுமன்றமாகிய சட்ட சபையில் உறுப்பினர்களாக இருக்க முடியாது என்ற விதி பின்பற்றப்படுகிறது. அமைச்சராக ஒருவர் பதவியேற்றதும், அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தல் வேண்டும்.
- அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத போதும், பாராளுமன்றத்தின் வாதங்களில் பங்குபற்றலாம். ஆயினும் அவர்கள் பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது.
- சுவிற்சர்லாந்து பாராளுமன்றமுறை இணக்க முறையின் தூய வடிவத்திற்கு (Purest Example of Consensus System) உதாரணமாகக் குறிப்பிடப்படுவதுண்டு.
வெஸ்ட்மினிஸ்டர் முறை, ஜேர்மனியின் இணக்க முறை என்ற இரண்டிற்கும் பொதுவான பாராளுமன்ற முறையின் பொதுத்தன்மைகள் சில முக்கியமானவை:
- பாராளுமன்ற முறையில் அரசாங்கத்தின் நிர்வாகத்துறை (Executive Branch) சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்துடன் பிணைப்புடையதாக இருக்கும். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்தே அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இரண்டாவதாக, நிர்வாகத்துறையான அமைச்சரவை பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியதாக இருக்கும்.
- மேற்குறித்த காரணத்தால் பாராளுமன்றமுறை அரசாங்கத்தில் நிர்வாகத்துறையும் சட்ட ஆக்கத்துறையும் வேறு வேறாகப் பிரிக்கப்படாமல், பிணைக்கப்பட்டுள்ளன. வேறு வார்த்தையில் கூறுவதானால் அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) பாராளுமன்ற முறையின் உள்ளார்ந்த பண்பாக இருப்பதில்லை.
- பாராளுமன்ற முறையில் நிர்வாகத்துறை, சட்ட ஆக்கத்துறையை விடப் படிநிலையில் தாழ்ந்த நிலையில் (Hierarchically Subordinated) வைக்கப்பட்டுள்ளது எனலாம்.
- பாராளுமன்ற முறையில் அரசுத் தலைவர் (Head of State), அரசாங்கத்தின் தலைவர் (Head of Government) என்ற இரண்டு பதிவிகளுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடு இருக்கும். அரசாங்கத்தின் தலைவராக பிரதமரே விளங்குவார். அரசுத் தலைவர் ஒரு பெயரளவிலான தலைவராக (Figure Head) இருப்பார். அவர் சம்பிரதாய முறையான கடமைகளை ஆற்றுபவராக இருப்பார். சில நாடுகளில் அரசுத் தலைவராக அரசர்/ இராணியார் இருப்பார். வேறு சில நாடுகளில் ஜனாதிபதி இருப்பார்.
- பாராளுமன்ற முறையின் பிரதம நிர்வாகியான பிரதமரும் அவரது மந்திரி சபையும் பாராளுமன்றத்தில் கிடைக்கும் பெரும்பான்னமைப் பலத்தில் தங்கியுள்ளமையால், பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
- அரசியல் யாப்பில் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் (Term) 4 அல்லது 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டிருப்பதுண்டு. ஆயினும் எச்சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் அரசாங்கம் பதவியிழக்கலாம்.
- பிரதமர், நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் உள்ள கட்சியால் பிரதமர் தெரிவு செய்யப்படுவார்.
3. தூய ஜனாதிபதிமுறை
பாராளுமன்றமுறையில் சட்டசபைக்கான உறுப்பினர்களை வாக்காளர்கள் தெரிவு செய்வதையும், தேர்தலின் முடிவில் சட்ட சபையில் (பாராளுமன்றத்தில்) பெரும்பான்மைப் பலமுள்ள கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவதையும் காண்கிறோம். இவ்வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும், பிரதமர் தெரிவும் ஒரே ஒரு தேர்தல் மூலம் நடைபெறுவதைக் காண முடிகிறது. ஜனாதிபதி முறை இதற்கு முற்றிலும் வேறானது. ஜனாதிபதிமுறையில் அப்பதவியை வகிப்பவர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சட்ட சபையோடு தொடர்பற்றவர்; சுதந்திரமானவர். இவ்வாறே சட்டசபையும் ஜனாதிபதியில் இருந்து வேறுபட்ட சுதந்திரமான அமைப்பாகும். நிறைவேற்றுத்துறை (Executive Branch), சட்டவாக்கத்துறை (Legislative Branch) என்ற இரண்டும் வெவ்வேறானவை என்ற அதிகாரப்பிரிப்பு (Separation of Powers) தத்துவத்தின் அடிப்படையில் அமைவதே ஜனாதிபதி முறையாகும்.
மேற்குறித்த பிரதான வேறுபாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி முறையின் மிக முக்கியமான பண்புகள் சிலவற்றை அடையாளம் காண முடியும். அவையாவன:
- பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர் (Chief Executive) மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார் (Popular Election of the Chief Executive).
- ஜனாதிபதி பதவிக்காலம், சட்ட சபையின் பதவிக்காலம் என்பன வெவ்வேறானவை. ஜனாதிபதி சட்டசபையைக் கலைக்க முடியாது. அவ்வாறே சட்ட சபையினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்ய முடியாது.
- மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அமைச்சர்களைத் தெரிவு செய்து நியமிக்கிறார். அமைச்சரவையில் எத்தனை பேர் இருக்க வேண்டும் யார் யாரை எப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்.
- ஜனாதிபதி, பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர். ஆயினும் அரசியல் யாப்பு, சில சட்டவாக்க அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
மேலே கூறியவற்றை ஜனாதிபதி முறையொன்றின் அடிப்படை இயல்புகளாக நாம் கருதலாம்.
ஐக்கிய அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மெக்சிக்கோ என்பனவும் தென் அமெரிக்கா நாடுகள் பலவும் ஜனாதிபதி முறைக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என V.K. நாணயக்கார அவர்கள் தம் நூலில் (பக். 356) குறிப்பிடுகிறார். மேற்குறித்த நாடுகளின் ஜனாதிபதிகள் ‘One Person Executive’ ஆகச் செயற்படும் நிலையையும் காணலாம். ஆதலால் ஜனாதிபதி முறையின் பிரதான பண்புகளில் ஒன்றாக ‘ஒரு நபர் நிர்வாகி’ என்னும் இப்பண்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜனாதிபதிமுறை எங்கே, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற வினாவை எழுப்பும் (பக். 356) V.K. நாணயக்கார அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதிமுறை தோன்றிய வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக் காட்டி, பதிலளிக்கிறார்.
அமெரிக்கா, பிரித்தானியாவின் காலனியாக இருந்து வந்தது. பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடிச் சுதந்திரத்தைப் பெற்ற அமெரிக்கர்கள் தமக்கெனப் புதிதாக ஒரு அரசியல் யாப்பை வரைந்த போது பிரித்தானிய அரசு முறையின் தீய கூறுகள் தம்நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கக் கூடாது என உறுதி பூண்டனர். முடியாட்சிமுறை தீங்கானது என உணர்ந்த அமெரிக்கர்கள் தம் நாட்டை ‘குடியரசு’ (Republic) என அறிவித்தனர். குடிமக்களான வாக்காளர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவரே நாட்டின் பிரதம நிர்வாகியாக (Chief Executive) இருக்க வேண்டும் என அமெரிக்காவின் அரசியல் யாப்பை வரைந்தவர்கள் முடிவு செய்தனர். ஜனாதிபதிமுறை அங்கு தோற்றம் பெற்ற வரலாற்றுப் பின்னணி இதுவேயாகும். சட்ட ஆக்கத்துறையிலிருந்து (காங்கிரஸ்) வேறுபட்ட நிர்வாகத்துறையின் தலைவராக ஜனாதிபதி இருப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் பயனாக அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) என்னும் தத்துவம் அமெரிக்க அரசியல் யாப்பின் அடிப்படையாக அமைந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை தென் அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.
ஜனாதிபதி முறையின் இன்னொரு அடிப்படைப் பண்பு, ஜனாதிபதித் தேர்தல் வேறு காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்தல் வேறு என்பதாகும். மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி காங்கிரசுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவரல்ல என்ற அரசியல் யாப்பு மரபும் அங்கு உருவானது.
இதுவரை கூறிய விளக்கங்களின்படி ஜனாதிபதி முறையின் அடிப்படைப் பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
- அரசின் தலைவர் (Head of State), அரசாங்கத்தின் தலைவர் (Head Of Government) என்ற இரண்டும் ஜனாதிபதி என்ற பதவி நிலையில் ஒருங்கிணைகின்றன.
- மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர் (Chief Executive) ஆவர்.
- காங்கிரஸ், பாராளுமன்றம், அசெம்பிளி என வெவ்வேறு பெயர்களால் வெவ்வேறு நாடுகளில் அழைக்கப்படும் சட்ட ஆக்கத்துறையின் பதவிக்காலம் (Term of Office) ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இருந்து வேறானது.
- ஜனாதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் சட்ட ஆக்கத்துறையினால் நீக்க முடியாது. அவ்வாறே ஜனாதிபதியும் சட்ட ஆக்கத்துறையைக் கலைக்க முடியாது.
- அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) என்னும் தத்துவத்தின்படி அரசின் இவ்விரு அங்கங்களும் (Organs of the State) அமைக்கப்பட்டுள்ளன.
- ஜனாதிபதி தனித்துவமான அதிகாரங்களை உடையவர்; சுயாதீனமாகச் செயற்படுகிறார்.
- ‘Impeachment’ என்னும் பதவி நீக்க முறை மூலம் ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியுமாயினும், அவர் செயல்திறனற்றவர் அல்லது மக்களின் ஆதரவை இழந்து விட்டார் என்பதற்காக (Incompetence or unpopularity) அவரைப் பதவி நீக்கம் செய்தல் முடியாது.
- நிர்வாகத்துறை தனிநபர் ஒருவரால் இயக்கப்படுகிறது (Executive branch is unipersonal). அமைச்சர்கள் ஜனாதிபதியின் விருப்பின்படி எவ்வேளையிலும் பதவி நீக்கம் செய்யப்படலாம் (Cabinet members serve at the pleasure of the president and can be removed at any time).
தொடரும்.