பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் - பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 2

November 24, 2024 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார

4. பாதி – ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை

பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகைளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் ‘பாதி – ஜனாதிபதி அரசாங்க முறை’ (Semi – Presidentialism) என்ற சொல்லை 1980 இல் அறிமுகம் செய்தார். இவர் கருத்தைப் பின்பற்றி M.S. Shugart என்பவர் ‘Semi – Presidential Systems : Dual Executive and Mixed Authority Patterns’ என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பாதி – ஜனாதிபதி முறை பற்றிய ஒரு வரைவிலக்கணத்தைக் கூறினார். அவரது வரைவிலக்கணத்தில் பாதி – ஜனாதிபதிமுறையின் முக்கிய இயல்புகள் மூன்று எடுத்துக்காட்டப்பட்டன. அவையாவன:

  1. ஜனாதிபதி நேரடியாக நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
  2. ஜனாதிபதியிடம் குறிப்பிடத்தக்க அளவு அதிகாரம் அரசியல் யாப்பின் படி வழங்கப்பட்டிருக்கும்.
  3. அதேவேளை பிரதமரும் அவரது அமைச்சரவையும் செயற்பாட்டில் இருக்கும். பிரதமரும் அமைச்சரவையும் சட்டசபைக்கு (Assembly) பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பர்; சட்டசபையின் பெரும்பான்மைப் பலமும் நம்பிக்கையும் இருக்கும் வரை அவர்கள் பதவியில் இருப்பர்.

Shugart அவர்களின் கட்டுரையில் குறிப்பிடப்படும் இரட்டை நிர்வாக அதிகாரம் (Dual Executive) என்ற தொடர் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதி, பிரதமர் என்ற இரு பதவிநிலையினரிடம் பிரிபட்டுத் தெளிவற்ற நிலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறது. அதிகாரம் கலப்புற்ற வடிவில் (Mixed Authority) இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

1990 க்குப் பின்னர் சோவியத் யூனியன் உடைவுற்ற போது, அங்கு பாதி – ஜனாதிபதிமுறை நடைமுறைக்கு வந்தது. ஆர்மீனியா, அஜர்பையான், பெலாரஸ், பல்கேரியா, குரோசியா, ஜோர்ஜியா, உக்ரெய்ன், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பல நாடுகளில் பாதி – ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்டது. இந்நாடுகளில் பெரும்பாலானவை சர்வாதிகாரப் போக்குடைய ஜனாதிபதிகளை ஆட்சியில் அமர்த்தும் போக்குடையனவாகக் காணப்பட்டன. 1993 இல் ரஷ்யாவை ‘மீதகு ஜனாதிபதி’ (Super – Presidential) முறையைக் கொண்ட நாடு என அழைக்கும் நிலை உருவானது. பாதி – ஜனாதிபதிமுறையின் முக்கிய இயல்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

  1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
  2. ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என்ற இரண்டினதும் கலப்புக் காணப்படும்.
  3. ஜனாதிபதி அரசின் தலைவராக இருப்பார். வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகளை அவரே மேற்கொள்வார்.
  4. பிரதமர் அமைச்சுகளைத் தம் பொறுப்பில் வைத்திருந்து அமைச்சர்களூடாக நிர்வாகத்தை இயக்குபவராக இருப்பார். அவர் சட்ட சபையில் பெரும்பான்மைப் பலம் உடையவராக இருத்தல் வேண்டும்.
  5. இம்முறையில் ஜனாதிபதி மேலாதிக்கம் உடையவராக இருக்கலாம்; அல்லது பிரதமர் மேலாதிக்கம் உடையவராகவும் இருக்கலாம்.
  6. ஜனாதிபதி ஒரு கட்சியால் தெரிவு செய்யப்பட்டவராகவும், பிரதமர் வேறொரு கட்சியினால் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருக்கும் நிலை தோன்றும் போது, இருவருக்கும் இடையிலான முட்டிமோதல் (Tensed Cohabitation) நிலை காணப்படும்.

5. பிரதமர் – ஜனாதிபதி அரசாங்க முறை

பிரதமர் – ஜனாதிபதி அரசாங்கமுறை (Premier Presidential) என்னும் ஒரு வகையை சில ஜனநாயக அரசாங்க முறைகளில் காண முடிகிறது. ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இந்த வகை அரசாங்க முறை (Regime Type) காணப்படுகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறையின் பொது இயல்புகள் பின்வருவன:

  1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
  2. ஜனாதிபதி குறிப்பிடத்தக்க அளவு அதிகாரங்களையுடையவராகக் காணப்படுகிறார்.
  3. நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் நிறைவேற்றுப் பணிகளை (Executive Functions) ஆற்றுபவராக இருக்கிறார். அவரும் அவரது அமைச்சர்களும் சட்ட ஆக்கத்துறையின் (Assembly) பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை நடத்துவர்.

இம்முறையில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இருக்கிறாரேயாயினும், அவரது ஆட்சியை ஜனாதிபதி ஆட்சி (Presidential) என்று கூறுவதற்குத் தேவையான வேறு சில கூறுகள் காணப்படுவதில்லை.

குறிப்பாக மந்திரிசபை முழுமையாக (Exclusively) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியதாக உள்ளது. மந்திரி சபையினரை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியாது. ஆயினும் ஜனாதிபதி வெறுமனே சடங்கியல் அதிகாரங்களை மட்டும் உடையவர் என்றும் கூற முடியாதுள்ளது. அதேவேளை இந்த அரசாங்க முறையை முழுமையான பாராளுமன்ற முறையென்றும் கூற முடியாது. இதனாலேயே பிரதமர் – ஜனாதிபதி (Premier Presidential) என்ற பெயர் அடையாளம் தேவைப்படுகிறது.

ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டவராக இருந்த போதும் அவரைப் பிரதம நிர்வாகி (Chief Executive) என அழைக்க முடியவில்லை. அவர் பிரதமர் என்ற நிர்வாகியோடு நிர்வாகத்துறை செய்யும் இன்னொரு நபராகவே காணப்படுகிறார். பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக (Head Of Government) இருப்பதும் ஜனாதிபதியை உயர்பீடத்தில் வைத்து மதிக்கத் தடையாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி அமைச்சர் ஒருவரையோ அல்லது பிரதமரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது. ஆனால் சட்ட ஆக்கத்துறையான ‘அசெம்பிளியால்’ (Assembly) அமைச்சர் ஒருவரையோ பிரதமரையோ பதவி நீக்க முடியும். இக்காரணத்தால் பிரான்சில் ஜனாதிபதியின் அரசியல் கட்சியைச் சாராத ஒருவர் பிரதமர் பதவியை வகிக்கும் சந்தர்ப்பங்களில் பிரஞ்சு ஜனாதிபதி பலம் குறைந்தவராக ஆக்கப்படுகிறார். பிரான்ஸ் அரசாங்க முறையை இலங்கையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் ஜனாதிபதியின் மேலாதிக்கம் (Dominance) வெளிப்படையாகவே தெரிகிறது. அரசியல் யாப்பின் உறுப்புரை 30, இலங்கையின் அரசுத் தலைவர் (Head of State) ஜனாதிபதி என்பதைக் கூறுகிறது. அமைச்சர்களின் நியமனம், பதவிநீக்கம் என்பனவற்றில் இலங்கை ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களை உடையவராக இருக்கிறார். பிரான்சிலும் இலங்கையிலும் ஜனாதிபதி, பிரதமர் என்ற இருவரது இரட்டை ஆட்சி (Diarchy) உள்ளது என்ற வெளித்தோற்ற ஒற்றுமையைக் கொண்டு, அவை இரண்டையும் ஒத்த இயல்புடையன எனக் கூறுதல் முடியாது. இலங்கை ஜனாதிபதி – பாராளுமன்றமுறை (President – Parliamentarism) என்ற வகையைச் சேர்ந்தது என்பதையே ஜே.ஆர். ஜயவர்த்தன முதல் ரணில் விக்கிரமசிங்க வரையான ஜனாதிபதிகளின் ஆட்சிக்கால வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

6. ஜனாதிபதி – பாராளுமன்றமுறை

‘ஜனாதிபதி – பாராளுமன்றமுறை’ (President – Parliamentarism) என்னும் இப்பெயர் ஜனாதிபதியின் முதன்மையையும், அவரது அதிகாரத்தையும் உணர்த்துவதாக உள்ளது. ஜனாதிபதியின் முதன்மையைக் கொண்டதும், மந்திரிசபை பாராளுமன்றத்தோடு பிணைப்புடையதாயும், பாராளுமன்றத்தில் தங்கியிருப்பதுமான இம்முறையின் முக்கிய இயல்புகள் பின்வருவன :

  1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
  2. ஜனாதிபதி மந்திரிசபை உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். அவர்களைப் பதவிநீக்கம் செய்யவும், அவருக்கு அதிகாரம் உள்ளது.
  3. மந்திரிசபை பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்கும் வரை பதவியில் தொடரலாம்.
  4. ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்திடும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.
  5. ஜனாதிபதிக்குச் சட்டங்களை ­ஆக்கும் அதிகாரமும் (Legislative Powers) உள்ளது.

ஈகுவடோர், மொசாம்பிக், நமிபியா, பெரு, கொரியா – 1961, இலங்கை ஆகிய நாடுகளில் ஜனாதிபதி – பாராளுமன்றமுறை நடைமுறையில் இருப்பதாக V.K. நாணயக்கார அவர்கள் குறிப்பிடுகின்றார் (பக். 366).

7. ஜனாதிபதிமுறையும் சர்வாதிகாரமும்

சில்லு முறிந்த வண்டி போன்று ஜனாதிபதிமுறை ஓட முடியாமல் நின்று விடும் (Breakdown) ஆபத்து உள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலை இராணுவச் சதிப்புரட்சிகளும், ‘அரகலய’ போன்ற அரசியல் நெருக்கடிகளும் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றன. இத்தகைய நெருக்கடி நிலை பாராளுமன்றமுறை நாடுகளை விட ஜனாதிபதிமுறை நாடுகளில் அடிக்கடி ஏற்படுகின்றன. மூன்றாம் உலகின் ஜனாதிபதிமுறை உள்ள நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள், ஜனநாயகமல்லாத (Non-Democratic) முறைகள் மூலம் தீர்வு செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் பாராளுமன்றமுறை உள்ள நாடுகளில் இவ்வாறான அரசியல் நெருக்கடிகள் ஜனநாயக வழிமுறைகளில் தீர்வு செய்யப்படுகின்றன.

பொதுவாக ஜனாதிபதி முறையின் முரண்பாடுகள் அரசாங்கத்தின் அங்கங்களிற்கிடையே அல்லது துறைகளிற்கிடையே ஏற்படும் முரண்பாட்டால் (Inter Branch Conflicts) ஏற்படுகின்றன. முரண்பாடுகள் முற்றிய நிலையில் அரசியல் நெருக்கடி (Political Crisis) தீவிரமடையும். பாராளுமன்ற முறையில் இது போன்ற நெருக்கடிகள் ஏற்படும் போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பிரதம நிர்வாகியான பிரதமரும் அவரது மந்திரிசபையும் பதவியிழக்கச் செய்யப்படலாம். பிரதமரின் கட்சியில் உள்ளவர்களே பிரிந்து எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அவரது அரசாங்கத்தைத் தோற்கடிக்கலாம். ஜனாதிபதி ஒருவரை அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற்ற முடியாது. பாராளுமன்றமுறை நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது. இதனால் அம்முறையின் கீழ் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றுவதற்கான சாத்தியம் ஒப்பீட்டளவில் குறைவு.

பாராளுமன்ற முறையில் சட்டங்களை இயற்றுதல் சுமுகமாக நடந்தேறுகிறது. சட்ட ஆக்கத்துறையும் நிர்வாகத்துறையும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய் இருப்பதே இதற்குரிய காரணமாகும். ஜனாதிபதி முறையில், ஜனாதிபதிக்கு எதிரான கட்சி சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உடையதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டங்களை இயற்றுவதில் இழுபறிநிலை ஏற்படும். ஐக்கிய அமெரிக்காவில் பில்கிளிங்டன் ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க காங்கிரஸ் குடியரசுக் கட்சி (Republican Party) பெரும்பான்மைப் பலம் கொண்டிருந்தது. இதனால் பில்கிளிங்டன் தாம் விரும்பிய கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் காங்கிரஸின் ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. மேற்குறித்தவாறாக ஜனாதிபதிமுறையையும் பாராளுமன்ற முறையையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் V.K. நாணயக்கார அவர்கள் ஜனாதிபதிமுறை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது (பக். 363-364) எனக் குறிப்பிடுகிறார். பாராளுமன்ற முறையின் சாதகமான கூறுகளை அவர் தொகுத்துக் கூறுகிறார் (பக் 364-365). அவரது கருத்துகளை பின்வருமாறு எமது வார்த்தைகளில் கூறியுள்ளோம்.

  1. பாராளுமன்ற முறையில் நிர்வாகத்துறையும் சட்ட ஆக்கத்துறையும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இக்காரணத்தால் பாராளுமன்றமுறை மக்களின் தேவைகளுக்கு நிவாரணம் தரும் முறையில் விரைந்து  செயலாற்றும் ஆற்றல் உடையதாக (Dynamic and Responsible) இருக்கின்றது எனக் கூறப்படுகிறது.
  2. பாராளுமன்றமுறை நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது (Flexible). ஆட்சி அதிகாரத்தினை உடைய தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை இழக்கும் போது ஆட்சி மாற்றம் இலகுவாக நடைபெறுகின்றது.
  3. பாராளுமன்றமுறையில் சட்ட ஆக்க அதிகாரமும், நிறைவேற்று அதிகாரமும் (Executive Power) பிரித்து வேறாக்கப்படுவதில்லை. இதனால் அம்முறையில் பொறுப்புக்கூறல் (Accountability) ஓரிடத்தில் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. பிரதம நிர்வாகியாகிய பிரதமர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள வேண்டியவராக இருப்பார். ஜனாதிபதி முறையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவராக உள்ளார்.
  4. பாராளுமன்ற முறையில் சட்டங்களை இயற்றுதல் சுமுகமான முறையில் நடந்தேறுகிறது. நிர்வாத்துறையான மந்திரிசபை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் சட்டங்கள் தடைகளின்றி நிறைவேற்றப்படுகின்றன. ஜனாதிபதிமுறை நிறைவேற்றுத்துறை மேலாதிக்கம் (Executive Dominance) என்னும் இயல்பினை உடையது. இதனால் அம்முறை அரசாங்கத்தின் பிறதுறைகளைக் கட்டுப்படுத்தி அரச யந்திரம் (State Apparatus) முழுவதையும் தனிநபர் ஒருவரின் அதிகாரத்திற்கு உட்படுத்தும் தன்மை உடையது.

சுருங்கக்கூறின் ஜனாதிபதிமுறையை விடப் பாராளுமன்றமுறை மேலானது. அம்முறையில் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

V.K. நாணயக்கார 

‘In Search of a New Sri Lankan Constitution’ என்னும் நுலின் ஆசிரியர் V.K. நாணயக்கார இலங்கை நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியான (1960-1964) இவர் 1967 முதல் 37 ஆண்டுகள் இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றினார். சூழலியல் திட்ட அமைச்சின் செயலாளர் (The Project Ministry of Environment), வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம மந்திரியின் செயலாளர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர். ஐக்கிய அமெரிக்காவின் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் Public and International Affairs துறையில் முதுகலைமாணி (MPIA) பட்டத்தை 1980 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்னர் இவர் பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 


ஒலிவடிவில் கேட்க

975 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (18)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)