பதார்த்த சூடாமணி
Arts
12 நிமிட வாசிப்பு

பதார்த்த சூடாமணி

March 20, 2023 | Ezhuna

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படி நூல் எழுதப்பெற்றதாக அறியமுடிகின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற நூலாகையால் இலங்கை, இந்திய நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவுவகைகள், குறிப்பாக மிளகாய், புகையிலை, கொய்யா என்பவை பற்றியும் இந்நூலில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

யாழ்ப்பாணத்து செகராசசேகரமன்னன் காலத்தில் ஆக்கப்பெற்ற இரசவர்க்கம் என்னும் நூல் முழுமையாக இன்னமும் கிடைக்கவில்லை என்பதை ஏற்கனவே அறியத்தந்துள்ளேன். அதேசமயம் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப்பொருள்களின் குணங்கள் குறித்துப்பேசும் பதார்த்த குணம் என்னும் பழம்பெரும் நூலும் கிடைக்கவில்லை. எனினும் பதார்த்த குணம் என்னும் நூலில் இருந்து கிடைத்த பாடல்களை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் பதார்த்த சூடாமணி என்னும் நூலும் இந்தியாவில் பதார்த்தகுண விளக்கம், பதார்த்தகுண சிந்தாமணி ஆகிய நூல்களும் பிற்காலத்தவரால் ஆக்கப்பெற்றன. இவை பிற்காலத்தில் ஆக்கப்பெற்றுள்ளன என்பதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போரால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய் (chili pepper), பறங்கிப்பூசணி (pumpkin), உருளைக்கிழங்கு (potato), தக்காளிப்பழம் (tomato) உட்பட பல்வேறு உணவுவகைகள் மேற்படி நூல்களில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இன்று தமிழ் மக்களின் உணவுத்தயாரிப்புகளில் தவறாமல் இடம்பிடித்துக்கொள்ளும் மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வத்தாளங்கிழங்கு என்பவற்றின் பெயரைக்கூடப் பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவற்றைத்தவிர கோவா, புறொக்கோலி, கரட், பீற்ரூட், கோலிபுளவர், லீக்ஸ் என்பவையும் எமக்கு அந்நியரால் அறிமுகப்படுத்தப்பட்டவையே என்பதை அவற்றின் பெயர்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

பதார்த்த சூடாமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் கவிதை வடிவிலான பதார்த்த சூடாமணியில் கூறப்பட்டுள்ள உணவுகளின் குணங்கள் பற்றி இத்தொடரில் ஆராயப்படுகின்றது. அவசியமான இடங்களில் பிற தமிழ் மருத்துவ நூல்களில்   இருந்தும் ஒருசில பாடல்கள் தரப்படுகின்றன.

குங்குமப்பூ

உலகின் அதிக விலைகூடிய சுவையூட்டி என்னும் பெயர்பெற்றது குங்குமப்பூ. அதேசமயம் உலக வரலாற்றில் பெருமளவில் கலப்படம் பண்ணப்படும் ஓர் உணவுப்பொருள் என்னும் அவப்பெயரும் இதற்கு உரியதாகிவிட்டது. காரணம் அதன் பெறுமதியே என்பதை எவரும் ஊகித்துக் கொள்ளமுடியும்.

சுரம்தாகம் வரட்சி மேகம் சொல்கண்ணோய் இருமல் மூச்சு
அருமூலம் சயத்தினோடுள் ளவியல்கண் முற்று மாற்றும்
உரமல நன்றாய்ப் போக்கும் உயர்ந்த குங்குமப்பூ மேவும்
தரமிலாக் குணம் ஈதென்று சாற்றினர் சீற்ற மில்லார்

                                                                                                   பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: காய்ச்சல், தேகவரட்சி, கண்ணோய், இருமல், ஆஸ்த்மா, காசரோகம் என்பவற்றை முழுமையாகக் குணமடைய வைக்கும். மலத்தைப்போக்கும். உயர்தரமான குங்குமப்பூவின் குணங்கள் இவையென ஆன்றோர் கூறிவைத்துள்ளனர்.

விந்துநட்டம் தாகமண்டம் மேகசலம் சூலை கபம்
உந்துசுரம் பித்தம்கால் உச்சிவலி-முந்துகண்ணில்
தங்கும்அப் பூவோடுறுநோய் சத்திஇவை நீங்கவென்றால்
குங்குமப்பூ ஓர் இதழைக் கொள்

                                                                                       பதார்த்தகுணசிந்தாமணி

இதன் பொருள்: விந்திழப்பு, தாகம், சலரோகம், சூலை, சளிக்கட்டு, காய்ச்சல், பித்தம், கால்வலி, உச்சிவலி, கண்ணில்பூ, வாந்தி என்பவை தீரவேண்டுமென்றால் குங்குமப்பூவில் ஓர் இழையைக்கொள்வாயாக.

குங்குமப் பூவைக்கண்டாற் கூறுகொண்ட பீநசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் – பொங்கு
மதுரடோடந் தொலையு மாதர் கருப்ப
உதிரதோடங்களறு மோர்

              பதார்த்தகுணவிளக்கம்

இதன் பொருள்: பீனிச நோய், காது நோய், சலரோகம், சர்க்கரை நோய் மற்றும் பெண்களின் கர்ப்ப இரத்தம் தொடர்பான நோய்களுக்குக் குங்குமப்பூ மருந்தாகப் பயன்படும்.

குங்குமப்பூ

மேலதிகவிபரம்: ஆறு அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை உயரமான உருண்டைவடிவிலான கிழங்கில் இருந்து தோன்றும் ஆறு முதல் பத்து வரையிலான இலைகளும் ஒன்று அல்லது இரண்டு ஊதாநிறப்பூக்களும் கொண்ட ஒரு தாவரத்தில் இருந்து குங்குமப்பூ  பெறப்படுகிறது.    

தெற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக்கொண்ட இந்தத்தாவரம் இன்று ஈரான், ஸ்பெயின், இந்தியா, ஒஸ்திரியா, பிரான்ஸ், கிரேக்கம், இங்கிலாந்து, துருக்கி, ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. உலகில் சந்தைப்படுத்தப்படும் குங்குமப்பூவில் எண்பது சதவீதத்துக்கும் கூடுதலான பங்கு ஈரானில் விளைகின்றது.

உலகிலேயே அதி விலைகூடிய சுவையூட்டி (spice) குங்குமப்பூ. குங்குமப்பூவின் தரத்தின் அடிப்படையிலேயே அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான குங்குமப்பூ ஒரு இறாத்தல் (454 கிராம்)  3000 அமெரிக்க டொலர் முதல் 5000 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஓரளவு தரமான குங்குமப்பூ ஒரு கிராம் 8 டொலருக்கு வாங்கமுடியும். இதன்படி கணக்குப் பார்த்தால் இன்று ஒரு கிராம் குங்குமப்பூவின் விலை 2600 இலங்கை ரூபாவாகும். இது இந்தியக்காசில் 650 ரூபா. யாராவது குறைந்த விலையில் குங்குமப்பூ தர முன்வந்தால் தர முன்வந்தால் அது போலிக் குங்குமப்பூ என்பதை உடனடியாகப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு ஏன் இந்த விலை என்ற கேள்விக்கு விடையளிப்பதற்கு குங்குமப்பூ எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குவது அவசியமாகின்றது.

குங்குமப்பூ என்பது  தனிப்பூ அல்ல. பூவின் உள்ளே சிவந்த நூலிழை போன்ற  மூன்று கிளைகளையுடைய சூல்முடி (பெண்குறி) காணப்படும். இந்த ‘ஸ்ரிக்மா’ (stigma) எனப்படும் சூல்முடியே  குங்குமப்பூ என்னும் பெயரில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியமாகும்.

ஒரு அவுன்ஸ் குங்குமப்பூ தயாரிப்பதற்கு ஏறத்தாழ 14000 ஸ்ரிக்மாக்கள் தேவைப்படும். இதன்படி ஒரு இறாத்தல் குங்குமப்பூ தயாரிப்பதற்கு 75000 மலர்களில் இருந்து குங்குமப்பூவின் ஸ்ரிக்மாக்களைக் கைகளினால் பிரித்தெடுக்கவேண்டும். இந்த மனித உழைப்புக்கான செலவை ஓரளவு ஊகித்துக் கொள்ளமுடியும். அத்தோடு வருடத்துக்கு ஒரு கிழமை மாத்திரமே இந்தத்தாவரத்தில் பூக்கள் பூக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எங்காவது குறைந்தவிலையில் குங்குமப்பூ கிடைக்கிறது என்றால் அதை உடனே வாங்கிவிடாதீர்கள். அநேகமாக அது போலியாகத்தான் இருக்கமுடியும்.

உலகவரலாற்றில் குங்குமப்பூ

அசிரியா என்பது இன்றைய சிரியா, ஈரான் ,ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் சிறுசிறு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு புராதன சாம்ராச்சியம். கிறிஸ்துவுக்கு முன் ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்டமன்னன் அஷுர்பனிப்பால். அந்தக் காலத்திலேயே ஒரு நூலகத்தை உருவாக்கிப் பிற்காலச் சந்ததியினருக்கு விட்டுச்சென்ற மகத்தான மன்னன் இவன். இவனது நூலகத்தில் இருந்த நூல் ஒன்று தாவர அகராதியாகும். இந்த அகராதியில் குங்குமப்பூவும் இடம் பெற்றுள்ளது.

காஷ்மீர்-மக்கள்-குங்குமப்பூ-பயிரிட-மரபுவழி-முறை

பண்டைய ரோமாபுரியில் குளியலுக்கு நறுமணம் கொடுக்கக் குங்குமப்பூ பயன்படுத்தப்பெற்றது. இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியின் அந்தப்புரப் பெண்மணிகள் தமது  கூந்தலுக்குச் சாயமூட்ட  குங்குமப்பூவைப் பயன்படுத்தியதாகவும் அதனால் சமையலுக்கு குங்குமப்பூ கிடைக்காமல் போகலாம் என நினைத்த மன்னன் அந்தப்புரப்பெண்கள் குங்குமப்பூவை அழகுசாதனமாகப் பயன்படுத்தத் தடைவிதித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

அராபியரின் மருத்துவத்தில் இடம்பிடித்த குங்குமப்பூ அவர்களால் 8 ஆம் ,9ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பெற்றது. Saffron என்னும் இதன் ஆங்கிலப் பெயர் as-zaffran என்னும் அரபுச்சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

குங்குமப்பூவின் மருத்துவப்பயன்பாடு

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதன் மூலம் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டுமே. ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஜீன்ஸ் எனப்படும் பரம்பரை அலகுகள் மட்டுமே. ஒரு ஆபிரிக்க நாட்டுக் கறுப்பினத் தம்பதியருக்கு வெள்ளைத்தோலும் நீலக்கண்ணும் உடைய பிள்ளை பிறக்கமுடியுமா? அப்படி ஒன்று பிறந்தாலும் அது அவர்களுடைய குழந்தைதான் என்று உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

உண்மையில் சுத்தமான குங்குமப்பூ அளவுக்கு மீறிச்சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக்கூடும். சாதாரணமாக கடைகளில் குங்குமப்பூ என்ற பெயரில் குறைந்தவிலையில் கிடைப்பது சிவப்புச்சாயம் ஏற்றப்பட்ட தேங்காய்ப்பூ போன்ற போலிகள் என்பதால் இந்தப் போலிக்குங்குமப்பூ பெரிய தாக்கம் எதனையும் தோற்றுவிப்பதில்லை.

ஆஸ்த்மா, இருமல், சளிக்கட்டு, நித்திரைக்குறைவு, வாய்வு, சூதகவலி, அறளைநோய் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு குங்குமப்பூ மருந்தாகப் பயன்படுகிறது. ஆண்களில் துரித விந்துவெளியேற்றம் (premature ejaculation), மலட்டுத்தன்மை ஆகியவற்றைப் போக்கவும். இது உதவும்.

அல்சைமர் (Alzheimer) எனப்படும் அறளை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் குங்குமப்பூ 15 மில்லி கிராம் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் எடுத்துவருவது நல்லபலனைத் தருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் உடற்பருமனைக் குறைக்கும் அற்புத மருந்தாகவும் குங்குமப்பூ பிரபலம் அடைந்துள்ளது. மனச்சோர்வு பசியுணர்வு என்பவற்றைக் குறைப்பதற்கு குங்குமப்பூ பெரிதும் உதவுகின்றது. பசியைக் குறைத்து சாப்பிடும் உணவின் அளவைக் குறைப்பதன் மூலமே உடற்பருமனைக் குறைக்க குங்குமப்பூ உதவுகின்றது.

 கொவிட்-19 நோயாளிகளின் கடுமையான சுவாச நோய்க்குறிகுணங்கள் மற்றும் கொவிட்-19க்குப் பிந்தைய பிரச்சினைகள் என்பவற்றைச் சமாளிக்கவும் தனிமைப்படுத்தலின் போது ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கூடிய மருந்துப்பொருள்களின் தயாரிப்புகளில் குங்குமப்பூவின் இரசாயன உள்ளடக்கங்கள் சேர்க்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சமையலில் குங்குமப்பூ

குங்குமப்பூவை நேரடியாக உணவில் சேர்ப்பதனால் போதிய பலனைப் பெறமுடியாது. குங்குமப்பூவை ஒரு உலோக கரண்டியினால் மசிக்கவும். சுடுநீரில் அல்லது பாலில் 30 நிமிடங்களுக்கு குங்குமப்பூவை ஊறவிட்ட பின்னர் ஊறவைத்த பாலை அல்லது நீரை உணவில் சேர்க்கலாம். குங்குமப்பூவைப் பயன்படுத்தும்போது மரத்தாலான சட்டி ,அகப்பை என்பவற்றைப் பாவிக்கவேண்டாம். குங்குமப்பூச் சாயம் அவற்றில் உறிஞ்சப்பட்டுவிடும்.

ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவைப் பொடிசெய்து இரண்டு கோப்பை சுடுநீரில் ஊறவைக்கவும். தண்ணீர் குளிர்ந்ததும் அதனை ஐஸ் கியூப் தட்டுக்களில் (ice cube trays) ஊற்றி குளிர் சாதனப்பெட்டியில் உறைய வைக்கவும். குங்குமப்பூ ஒரு விரல் பிடி அளவுக்கு (pinch) பதிலாக உறைந்த ஐஸ் கியூப்களை ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் ஈரப்பதனும் இல்லாத இடத்தில் குங்குமப்பூவை சேமித்து வைக்கவேண்டும்.

குங்குமப்பூ என்னும் பெயரில் சந்தைக்குவரும் போலிகள்

குங்குமப்பூவின் பயன்பாடுகள் காரணமாகவும் அதற்குக் கொடுக்கப்படும் விலை காரணமாகவும் கலப்படங்களும் குங்குமப்பூ என்னும் பெயரில் போலித்தயாரிப்புகளும் சந்தைக்கு வருவது இன்று நேற்றல்ல பலநூறு வருடங்களுக்கு முன்பிருந்தே நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வாகும். முந்தைய காலங்களில் ஐரோப்பாவில் குங்குமப்பூவில் கலப்படம் செய்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் கொடூரமானவை.

பிரான்சில், 1550 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம்  திகதி இரண்டாம் ஹென்றி மன்னரின் ஆணைப்படி, கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூ பறிமுதல் செய்வதும் எரிக்கப்படுவதும் மற்றும் குற்றவாளிகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவதும் சட்டமாக்கப்பட்டது.  ஜேர்மனியில் 1444 இல், ஜொப்ஸ்ட் ஃபைண்டெக்கர் (Jobst Findeker) என்பவர் அவர் வைத்திருந்த கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவுடன் சேர்த்து எரிக்கப்பட்டார். 1456 ஆம் ஆண்டில், குங்குமப்பூவில் கலப்படம் செய்து பிடிபட்ட சிக்கிய ஹான்ஸ் கோல்பெலே (Hans Kolbele), லியன்ஹார்ட் ஃப்ரே (Lienhart Frey) என்போருடன் மற்றும் ஒரு பெண்ணும் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

இன்று கலப்படம் செய்வோருக்கு அத்தகைய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. குங்குமப்பூச் சந்தையில் கலப்படமும் போலித்தயாரிப்புகளும் பெருகிவிட்டன. இந்தியாவில் குங்குமப்பூ என்னும் பெயரில் விற்பனை செய்யப்படுபவற்றில் 52 சதவீதமே தரமான குங்குமப்பூ என்ற உண்மையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 30 சதவீதமானவை தரம் குறைந்தவை என்பதும் 17 சதவீதமானவை கலப்படம் செய்யப்பட்டவை என்பதும் அறியப்பட்டுள்ளது.

“குங்குமப்பூ” என்ற பெயரில் விற்கப்படும் பல்வேறு வகையான போலிப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. சோளப்பொத்தியின் தும்புகள், துருவிய தேங்காய்ப்பூ போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில தாவரப் பொருட்களுக்குச் செயற்கை சாயம் ஊட்டி அவற்றைக் குங்குமப்பூ என்று சந்தைப்படுத்துவது அல்லது சிறிதளவு அசல் குங்குமப்பூவுடன் கலந்து விடுவது கலப்படம் செய்வோரது பொதுவான நடைமுறையாகும். சில சமயங்களில் மோசடி செய்பவர்கள் தங்கள் குங்குமப்பூவின் அசல் சூல் முடிகளுக்குப் (stigma) பதிலாக அவற்றின் கீழ் உள்ள வெண்ணிற சூல்தண்டுகளுக்கு (style) சிவப்புச் சாயம் அடித்து குங்குமப்பூ என்று நுகர்வோருக்கு விற்கிறார்கள்.

போலிகளை இனங்கண்டு கொள்வது எப்படி?

உண்மையான குங்குமப்பூவைத் தண்ணீரில் போட்டால் அது ஒருபோதும் உடனடியாகத் தண்ணீருக்குள் அமிழ்ந்துவிடாது மிதந்துகொண்டிருக்கும். இழைகள் விரைவாகக் கீழே படிந்துவிட்டால் அது உண்மையான குங்குமப்பூ அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

தண்ணீரில் சேர்க்கப்பட்ட குங்குமப்பூ தனக்குரிய சிவப்பு நிறத்தை உடனடியாக விட்டுவிடாது. இதனால் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட தண்ணீர் முதலில் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறும். பின்னர் நேரம் செல்லச்செல்ல ஒறேஞ்ச்  நிறத்துக்கு மாறும். நீங்கள் வாங்கிய குங்குமப்பூவைத் தண்ணீரில் போட்டவுடன் தண்ணீர் சிவப்பு நிறத்துக்கு மாறினால் நீங்கள் வாங்கியது சிவப்புச் சாயம் ஊட்டப்பெற்ற போலிக் குங்குமப்பூ என்பதை அறிந்து கொள்ளலாம்.

Saffron என்பது இதன் ஆங்கிலப் பெயர். Crocus sativus என்பது குங்குமப்பூவின் தாவரவியற்பெயர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11999 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்