“கடவுளின் வடிவம் (திருப்பாச்சிலாராமத்தில் உறையும் சிவபெருமான்) இங்கு தாயாக, இறுதியாகக் கைவிடும் தாயாக, நோக்கப்படுகிறது. இது பக்தி உணர்வுக்கு மையமானது. அதுவும் , சுந்தரர் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுவேன் என்று பயமுறுத்தவேறு செய்கிறார். தெய்வீக அன்புக்கு எதிர் வினை புரியும் சமயத்திலேயே தெய்வீகக் கருணையின்மையை சொல்லுகிறார். (வெண்டி டோனிகர், ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு)” தமிழாக்கம் : க.பூரணச் சந்திரன், எதிர் வெளியீடு.2016).
வெண்டி டோனிகரின் மேற்படி கருத்துக்கு அடிப்படையாக உள்ளது கீழ்வரும் சுந்தரரின் இப்பாடல்
“அன்னையே என்னேன், அத்தனே என்னேன், அடிகளே அமையும் என்றிருந்தேன். என்னையும் ஒருவன் உளென்று கருதி, இறையிறை திருவருள் காட்டாய் அன்னமாம் பொய்கை சூழ் தரு பாச்சிளாச்சிரமத்து உறை அடிகள் பின்னயே அடியார்க் கருள் செய்வதாகில் இவர் அல்லாதில்லையோ பிரானார்”
தமிழகப் பக்திப் பேரியக்கம் வீறு கொள்ளத் தொடங்கியிருந்த காலச்சூழலில் (எட்டாம் நூற்றாண்டில்) ‘உனைக் கைவிட்டு விடுவேன்’ எனச் சுந்தரர் வன்தொண்டராக சிவனைப் பயமுறுத்துவதனைப் புரிந்துகொள்ள இயலும்; உண்மையில் அதற்கு அவசியம் இன்றி, இறை ஆதரவு பின்னர் கிடைக்க உள்ளது. நீடித்து ஆட்கொள்ளப்பட்டவராக வாழ இருப்பதனைப் பொதுமக்களுக்கு உணர்த்துவதற்கான உத்தி இது. முன்னதாக, அரச பரிவாரத்தினர் மற்றும் நிலக்கிழார்கள் அல்லது வணிகர்கள் போன்ற ஆட்சி அதிகாரத்தை உடைய சமூக சக்திகளுக்கு உரிய மேன்மக்கள் என்போருக்கானதாகயேற்பட்ட போது மதங்களும் கடவுளர்களும் இருக்க இயலுமாய் இருந்தன.
காரைக்கால் அம்மையார் சிவனை முன்னுறுத்தி தொடக்கியிருந்த பக்தி நெறியானது பேரியக்கமாக படர்ந்து, பரவும் நிலை அடிநிலையில் உள்ள உழைக்கும் மக்களும் ஏற்றுக் கட்டுப்பட்டு ஒழுக வேண்டிய பரம் பொருளாக (முழு முதல் கடவுள் அந்தஸ்துக்கு) சிவனை உயர்த்தி வைக்கவேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டிருந்தது.
இதுபற்றி வெண்டி டோனிகர் இவ்வாறு கூறுவார்: “குறித்த குழு என்று சொல்வதைவிட, பக்தி ஒரு பொதுவான மதவாழ்க்கைமுறை அல்லது இயக்கம் என்று சொல்லலாம். அது ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. எவரையும் சேர்த்துக்கொள்ளும் – உள்ளடக்கும் தன்மையையும், அதே சமயம் பறையர்களுக்கும் பெண்களுக்கும் எதிரான மனப்பான்மையையும் கொண்டிருந்தது. அது உண்டாக்கிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் வன்முறை மதங்களுக்கு இடையிலான வெறுப்புக்கும் வித்திட்டது” (பக்கம் 405).
ஒடுக்கப்பட்ட சாதிகளாக, நிலத்துடன் பிணைக்கப்பட்ட உழைக்கும் மக்கள் திரளினர் இழிவுபடுத்தப்படுவதற்கு வழி கோலிய, பக்தி இயக்கத்தை நந்தனார் போன்ற ஒடுக்குமுறைக்கு ஆட்பட உள்ள சாதிகளின் பிரதிநிதிகள் ஆதரித்துப் பங்கேற்று, வலுப்படுத்தியது ஏன்? பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க உள்ள புதிய மத எழுச்சிக்கு காரைக்கால் அம்மையார் அடிகோலியமையை எவ்வாறு விளக்கம் கொள்வது?
நிலமெனும் நல்லாள் ஆணாதிக்கத்துக்கு ஆட்படுத்தப்படல்
பண்பாட்டுப் புரட்சி வாயிலாக நிகழ்ந்தேறிய சமூக மாற்றம் ஒன்றை தொடக்கிவைத்த பிரதிநிதியாக காரைக்கால் அம்மையார் துலங்கினார். பக்திக் கோட்பாடு ஏற்கெனவே வடஇந்தியாவில் வடிவப்படுத்தப்பட்டிருந்தது.
பௌத்தம் வெளிப்படுத்தியிருந்த அந்தக்கோட்பாட்டை இந்து மத உருவாக்கத்தின் பொருட்டாக பகவத்கீதை தனக்குரியதாக வரித்துக்கொண்டு, வைணவ மத உருவாக்கத்தை தொடக்கி வைத்தது. பல்வேறு இனமரபுக்குழுவினர்களிடம் காணப்பட்ட நாராயணன், வாசுதேவன், கிருஷ்ணன் போன்ற வழிபாடுகளை ரிக்வேத விஷ்ணுவோடு இணைத்து ஒரு மதத்துக்கு உரிய பரம்பொருளாக விஷ்ணுவைக் காட்டும் வைணவ மத எழுச்சி கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அங்கே, வீறு கொள்ளத் தொடங்கியது. புதிய இன மரபுக்குழுக்களின் கடவுளர்களை இணைத்து இந்து மதமாக பரிணமித்து அடைந்த இந்த வரலாற்று மாற்றப்போக்கினை சுவிதா ஜேஸ்வால் “வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் நூலில் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
பயங்கரத்தின் வடிவமான கடவுளாக ரிக் வேதம் காட்டியிருந்த சிவன் சைவநெறி எனும் புதிய மதத்துக்கான பெருங் கடவுளாக பரிணமிப்பதற்கு உரிய தொடக்கத்தை காரைக்கால் அம்மையார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார். சுடலைக் காவலனாக ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறத்தில் உறைபவர் ரிக்வேத சிவன்; ஓரளவு ஏற்புடைய கடவுளாக ரிக்வேதத்தில் அங்கீகரிக்கப்பட்ட உருத்திரனுடன் ஒன்றுகலக்கப்பட்ட சிவன், முழுமுதல் கடவுளாக வெளிப்படுவதற்குப் பல்வேறு இனமரபுக்குழுக்களுக்கு உரிய பாசுபதம், காளாமுகம், காபாலிகம், மாவிரதம், வாமம், பைரவம் ஆகிய மதங்களது மூலவர்களுடன் ஒன்று கலக்கப்பட வேண்டியிருந்தது. அந்தப் பணியைக் கையேற்றதோடு பல்வேறு இடங்களின் தலங்களுக்கும் சென்று அனைத்து மக்களும் ஏற்று துதிக்கும் வகையிலான பாசுரங்களை சிவன் மீது பாடிய காரைக்கால் அம்மையார் பக்திக் கோட்பாட்டை இயக்கச் செயல்பாட்டுக்குரியதான வடிவத்தில் விரிவாக்கினார். சுடலைப் பொடி பூசிக் கூத்தனாக நர்த்தனம் இடும் கடவுளெனெச் சிவனைப் பாடிப் பரவியதன் வாயிலாக, மேன்மக்களிடம் இருந்த கடவுள் கோட்பாட்டை அடிநிலை மக்களது ஏற்புக்கு உரியதாக்கினார். தமிழில் பெரிதும் போற்றப்பட்ட முருக வழிபாட்டுக்கு மேலானவராக சிவன் வெளிப்பட்டார். ரிக்வேதம் காட்டியிருந்த உமையின் வடிவமாக, கொற்றவை இணைக்கப்பட்டதில் கொற்றவை மைந்தனான முருகன் சிவ மைந்தன் ஆனார். சிவனின் மூர்த்தமே முருகன் எனக்கொள்ளத்தக்க இடைவெளிகளும் அமையும் வகையில், மேலாதிக்கத் தெய்வமாக இருந்த முருகன், அடிநிலை மக்களும் பக்தி செலுத்த இயன்ற சிவனாகப் பரிணமித்தார். எங்கெங்கொ இருந்தெல்லாம் வந்த கடவுளரின் சங்கமம் என்று இல்லாமல் ‘தமிழ்க் கடவுள் சிவன்’ என்று மொழிப்பற்றுடன் மத இணைவு சாத்தியப்பட்டது.
சுடலைக்காவலன் எனத்தக்க சிவன் இவ்வகையில் தமிழ்கடவுளாக்கப்பட்டு பல்லோரும் ஏற்றுப் பணியும் மாற்றம் வந்தமைந்தமை முன்னர் இருந்து இயங்கி வந்த தமிழியலின் (எமக்கான சமூக இயக்கப்போக்குக்குரிய மொழியியல் வெளிப்பாட்டின்) தொடர்ச்சி என்பது கவனிப்புக்குரியது. வீரயுகத் தமிழகத்தின் கொற்றவை வழிபாடு போர்க்களங்களில் பெரும் எடுப்பாக இடம் பெற்றமையை வீரயுகப் பாடல்கள் எடுத்துக்காட்டியிருந்தன. வாள் வெட்டில் குடல் வெளிப்பட்டுச் சரிந்த வீரரின் குடல்களை மாலையாகப் போட்டு வெறியாட்டு நிகழ்த்தும் பேய் மகளிரே கொற்றவைக்கான பூசகர்கள். இந்தக் களம் சிவனுக்கு மடைமாற்றப்பட்டது. வெறியாட்டு சிவ நடனம் ஆக, பூசகர்கள் பிராமணர்கள் ஆகினர்.
வெற்றி பெற்ற பிற திணைகளுக்குரிய நிலங்களை அபகரித்ததன் வாயிலாக, நில உரிமையாளர் என உருவாகிய கிழார்கள் – வென்றடக்கப்பட்டு உழைப்பாளர்களாக ஆக்கப்பட்டோர் என்ற பொருள் உற்பத்தி உறவு தோற்றம் பெற்ற வீரயுகத்தின் (சங்க கால இலக்கியம் என அறியப்படும் இலக்கியப் பரப்புக்குரியதான) புறப்பாடல்கள் மேற்படி கொற்றவை வழிபாட்டையும் அதனை நிகழ்த்தும் பேய் மகளிரின் வகிபாகத்தையும் வெளிப்படுத்தி நிற்பன. கொற்றவையோ, கொற்றவை மைந்தனாக வழிபடப்பட்ட முருகனோ சிறு நில உடமை பெற்றிருந்த கிழார்களுக்கான கடவுளர்களாக இயக்கம் கொள்ளப் போதுமானவர்கள்; அடிநிலை மக்களும் ஏற்றுப்போற்ற வேண்டிய தனிப்பெருங் கடவுளருக்கான சமூக நியதி அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. பக்திப் பேரியக்கத்தின் வாயிலாக முழு முதற் கடவுளின் கீழ் பெருநிலப்பரப்புக்குச் சொந்தக்காரர்களாகும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான தனிப்பெரும் கடவுள் அவசியப்பட்டபோது கொற்றவை – பேய் மகளிர் என்போர் பெற்றிருந்த இடம் சிவன் – பிராமணர் என்ற புதிய சக்திகளிடம் கையளிக்கப்பட வேண்டியிருந்தது. இந்த மாற்றப்போக்கின் அடிப்படைகளையும் வளர்ச்சி நிலைகளையும் பேராசிரியர் க.கைலாசபதி “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” எனும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.
கொற்றவையே அத்தகைய தனிப்பெரும் கடவுளாக ஆக்கப்படின் பேய் மகளிர் தொடர்ந்தும் பூசகர்களாக நீடிக்கவேண்டி இருந்திருக்கும். பெரும் நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டு இயங்கும் ஆணாதிக்கச் சமூக மாறுதல் ஏற்பட்ட சூழலில் பெண்ணுக்கான அந்த ஆன்மிகத் தலைமை ஏற்புடையதாக இருக்கவில்லை. அத்தகைய பெண் உரிமைகளைக் கைகழுவிவிடும் மாற்றத்தைச் சாத்தியப்படுத்திய வகிபாகம் காரணமாக காரைக்கால் அம்மையார் பெரும் கொண்டாட்டத்துடன் ஏற்றிப்போற்றப்படலானார்.
திணை வாழ்வின் சமத்துவ நெறியைத் தகர்த்து எறிவதற்கு வழிகோலிய மருதத்திணை மேலாதிக்கப் போரில் ஆணின் வீரம் போற்றப்படும். இலக்கியமாக புறப்பாடல்கள் அமையப்பெற்றன; அவற்றுக்கான முக்கியத்துவம் அளவுக்கு காதல் உறவை எடுத்துரைக்கும் அகப்பாடல்களும் கவனிப்புக்கு உரியனவாக உள்ளன. அத்தகைய அகப்பாடல் ஆணுக்குரிய பரத்தமை உறவை அங்கீகரித்த அதே வேளை ‘ஒருத்திக்கு ஒருவன்’ எனும் கற்பு நெறி தவறாத வாழ்வை பெண்ணுக்குரியதாக கட்டாயப்படுத்தியிருந்தது. தனக்கான தனியுடமையைத் தனது வாரிசுக்குக் கை மாற்றி வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு தன் மனைவி கற்பு நெறி தவறாது இருப்பது அவசியம் என்ற ஆணாதிக்கத்தின் தேவையை அகப்பாடல்கள் நிறைவேற்றித் தருகின்றன. வீரயுகத்தில் தொடங்கப்பட்ட ஆணுக்குரியதான அந்த மேலாதிக்க நாட்டத்தின் அதிஉச்ச அதிகார மேலாண்மை பக்திப் பேரியக்கத்தின் வாயிலாக எட்டப்பட்ட சமூக மாற்றத்தின்போது மேலும் வலுப்பெற்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், சிறு நிலப்பரப்பின் உடமையாளராக மாறும் வாய்ப்பைப் பெற்ற போது காதலின் பேரில் பெண் மீதான தனது ஆக்கிரமிப்பை தொடக்கிவைதிருந்த ஆண் மேலாதிக்கமானது பெரு நிலப்பிரபுத்துவ விருத்தியை எட்டியபோது முழுமைப்பட்ட பெண் ஒடுக்குமுறைக்கு உரிய கருத்தியல்களை பக்திப் பேரியக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டது. அதற்கான வாய்ப்பை தொடக்கி வைப்பவராக ஒரு பெண் ஆளுமை வந்தமைந்தவுடன் அவருக்கான அதீத புகழுரைகள் ஊடாகவே ‘நிலம் எனும் நல்லாள்’ (நிலம் – ‘நல்லாள் எனும் பெண்மை’ என்பவை) மீதான தமது ஆக்கிரமிப்பின் கருத்தியல் மேலாண்மையை மேலும் இறுக்கமுடையதாக்கி உறுதிப்படுத்தினர்.
மேலாதிக்க மாற்றம்: வடக்கும் தெற்கும்
சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது சுரண்டும் வர்க்கம் மேற்கொண்ட ஒடுக்குமுறைக்கும் முந்திய முதன்மையான ஒடுக்குமுறை வடிவம் பெண்கள் மீதான ஆண்களின் ஒடுக்குமுறை மேலாதிக்கத்தால் ஏற்பட்டிருந்தது என – “குடும்பம் – தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலில் ஏங்கல்ஸ் எடுத்துரைத்திருந்தார். வர்க்க ஒடுக்குமுறைக்கான அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவி ஏற்படும் முன்னர், குலத்தலைவர் ஆட்சிக்கு உரிய அரை – அரசு ஏற்பட்டிருந்த காலத்தில் பெண்கள் மீதான ஆண் ஒடுக்கு முறை தொடங்கிவிட்டமையை ஏங்கல்ஸ் அந்த நூலில் காட்டியுள்ளார்.
நான்கு திணைகளிடையே சமத்துவ ஊடாட்டம் நிலவிய வேளிர்களது ஆட்சிக்குரிய தமிழகத்தின் ‘அரை–அரசு’ நிதர்சனமாக இருந்த முன் வீரயுக காலத்தில் ஏனைய சமூகங்களில் நிலவிய அளவிலான ஆணாதிக்கம் இங்கே வலுப்பெற்றிருக்கவில்லை; மேலாதிக்க யுத்த முன்னெடுப்புக்குரிய வீரயுக உச்ச நிலையில் பெண் ஒடுக்குமுறைக்கான வலுவான கருத்தியல் அவசியப்பட்ட காரணத்தாலேயே அகம், புறம் என்ற பகுப்புச் சார்ந்த தமிழிலக்கியத் தொடக்கம் வடிவம் பெற வேண்டியிருந்தது. கணத்தலைவர்களது ஆட்சி நிலவிய வட இந்திய அரை – அரசுக் காலத்தில் ஏனைய சமூகங்களைப் போன்றே ஆணாதிக்கத் தொடக்கம் அங்கே ஏற்பட்டிருந்தது. பிராமண மதம் அப்போதிலிருந்தே பெண் ஒடுக்குமுறைக்கான கருத்தியலை வடிவமைக்கத் தொடங்கியிருந்தது. வணிக சக்தியின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த ஏற்ற பேரரசு உருவாக்கம் வட இந்தியாவில் சாத்தியப்பட்ட கி. மு. ஆறாம் நூற்றாண்டில் அந்த மேலாதிக்கத்தின் கருத்தியல் கட்டமைப்புகளாகத் திகழ்ந்த சமணம், பெளத்தம் ஆகியன பெண்களை இரண்டாந்தர ஆன்ம ஈடேற்றக் கன்மப் பலன் உடையோர் என காட்டியிருந்தன.
இக்கால வணிக எழுச்சியுடன் வட இந்தியாவில் நகர் உருவாக்கம் ஏற்படும் முன்னரே பாரிய அளவிலான விவசாய விருத்திக்கு முந்தியதான வணிக எழுச்சி சாத்தியப்பட்டிருந்தமை குறித்தும் நகர் உருவாக்கத்தில் முன்னதாகவே தமிழகம் வீறு கொள்ளத் தொடங்கிவிட்டது என்பது பற்றியும் பேசி வந்துள்ளோம். அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே விவசாய விருத்தி பாரிய அளவில் ஏற்பட்டிருந்தது. மிகப்பெரும் பண்பாட்டு எழுச்சிக்குரிய சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்த பின்னர் சிந்துவெளிப் பண்பாட்டின் வணிக சக்தியினரும் விவசாய முன்னெடுப்பாளர்களும் சிதறல் அடைந்து புலப்பெயர்வுக்கு உள்ளாகினர்.
அதற்கான தளமாக அமைந்து அந்த வீழ்ச்சிக்கான காரணங்களில் முதன்மையாக அமைந்த பெருமெடுப்பிலான விவசாயச் செயலொழுங்குகளும் பின்னர் அங்கே கைவிடப்பட்டிருந்தன.கி.மு. 1000 ஆம் ஆண்டளவில் அதன் தொடர்ச்சியாக அமைந்த திராவிட மற்றும் ஏனைய பூர்வ குடியினருடன் நாடோடிகளாக இந்தியாவினுள் நுழைந்த ஆரிய இனமரபுக்குழுக்கள் உடன்பட்ட வாழ்வியல் – பண்பாட்டு ஒருமையை மேற்கொள்ளத் தொடங்கினர். முந்திய நாடோடிப் போர்க்குணத்தில் முன்னேற்றம் அடைந்த பிரிவினருடன் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதனைக் கைவிட்டு நிலையான வாழ்வுக்குரிய விவசாய வாழ்முறையின் அமைதிக்கு மாறிய ஆரியர்கள் சுதேசிகளின் விருத்திபெற்ற பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்கினர். சிந்துவெளித் தொடர்ச்சியான ஆகமச் சிந்தனைகளும் நாடோடி வாழ்வியலின் வழிபாட்டு இலக்கியத் தொகுதியான ரிக் வேதமும் இணைந்த பிராமண மதம் உருப்பெறத் தொடங்கியது; ரிக் வேத மந்திர உச்சாடனம் மேலோங்கித் தெரிந்ததில் ‘வைதிக நெறி’ என அடையாளம் பெற்ற போதிலும் திராவிடப் பண்பாட்டு மேலாண்மையே பிராமண மதத்தைப் பெரிதும் கட்டமைத்திருந்தது. இந்தப் புதிய சக்தி உருப்பெற்ற கி.மு.1000 ஆம் ஆண்டளவில் இருந்தே, இணைப்புற்ற இந்த சமூக சக்தி ஏனைய நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துக் குல (கண) தலைமை ஆட்சியை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த மேலாதிக்கத் தரப்பாருக்கான வர்த்தக முன்னெடுப்பின் வாயிலாக செழுமையடைந்த வணிகச் சமூக சக்தியானது விவசாய சமூக சக்தியை மீறிய, மேலாதிக்கத்தைப் பெறத்தக்க வளர்ச்சியை எட்டிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிராமணமதம் வலுவிழந்து அவைதிக மதங்கள் மேலோங்கத் தொடங்கின. அவைதிக மதங்களும் சிந்துவெளிச் சிந்தனைத் தொடர்ச்சிக்கு உரியன என்பது கவனிப்புக்குரியது.
சிந்துவெளி பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னர் நகர நாகரிக மேலெழுச்சி
தமிழகத்திலேயே முன்னதாக சாத்தியப்பட்ட போதிலும் திணை வாழ்வியலின் சமத்துவ நியதி இங்கு நிலவியதன் காரணமாக, அண்மைக் காலம் வரை இந்த உண்மை புதையுண்டு காணாமல் போயிருந்தது. இதனை வெளிப்படுத்த உதவிய கீழடியின் தொல்லியல் ஆய்வுக்களம், ஆசீவகம் எனும் சமத்துவ ஊடாட்டத்துக்கான வணிகக் கருத்தியல் சார்ந்த மதச் சிந்தனையின் முழுமைப் பரிமாணங்களைக் கண்டறிய உதவியது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வணிக மேலெழுச்சி சாத்தியப்பட்டபோது, திணைகளிடையேயான சமத்துவப் பரிமாற்றமாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் போன்று இல்லாமல் மேலாதிக்க வணிகச் சக்தியாக மேலாண்மை எட்டப்பட்டிருந்தமையால் ஆசீவக மதமும் நீண்ட நெடுங் காலத்துக்குக் காணாமல் ஆக்கப்பட்டது. அதனிடத்தை வணிக மேலாதிக்கக் கருத்தியலுக்கு உரிய சமணம், பௌத்தம் ஆகிய அவைதிக மதங்கள் பெற்றுக்கொண்டன. இவை குறித்து ஏற்கனவே பார்த்து வந்துள்ளோம்.
சமணம், பௌத்தம் ஆகியவற்றை விடவும் கூடுதலான அறிவியல் நோக்கு, அறிவுத் தேடல், சமத்துவப் பண்பு என்பவற்றை ஆசீவகம் கொண்டிருக்க வாய்த்தமைக்கான சமூக – பண்பாட்டுக் காரணிகளையும் அது காணாமல் ஆகி ஏனைய மதங்களில் கரந்துறைந்து தொடர நேர்ந்தமை பற்றியும் பார்த்து வந்துள்ளோம். வட இந்தியாவில் திராவிட – ஆரிய மொழிக் கூட்டத்தார் ஒன்றுபட்டு உருப்பெற்ற சமூக சக்தியின் மேலாதிக்க அரசியல் இயங்கிய சம காலத்தில் கூடுதல் வீச்சுடன் திணை வாழ்வியலின் சமத்துவ நெறிக்குரிய வரலாறு படைக்கும் ஆற்றல் தமிழகத்தில் விருத்தி பெற்று வந்துள்ளது. வணிகக் கருத்தியலுக்கு உரிய மேலாதிக்கவாத மதங்களான சமணமும் பௌத்தமும் தமிழின் வாயிலாக மேலும் விருத்தியை எட்டியதைப்போலவே, விவசாயச் சமூக சக்தியின் (திணையின்) மேலாதிக்கத்துக்கு உரிய பிராமணக் கருத்தியலை உள்வாங்கிய தமிழகம் அதன் வாயிலாக கட்டமைத்த சாதியத்துக்கான உள்ளடக்கப் பரிமாணங்களைப் புதிய வளர்ச்சி நோக்கி விருத்தி செய்தது.
குலக்கடவுளர் இணைவின் பரம்பொருள் – முழுமுதற் கடவுளாக ஆகுதல்
இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவடைந்த கிரேக்க, ரோம் சமூகங்களில் முதல் ஏற்றதாழ்வுச் சமூக அமைப்புக்கான ஆண்டான் அடிமை, வர்க்கங்கள் நிலவிய காலம் பல கடவுளர் வழிபாட்டை உடையதாக இயங்கியது. ஏற்கனவே யூத மதம் வாயிலாக ஒரு கடவுள் கோட்பாட்டை வந்தடைந்த செமிட்டிக் இனத்துக்குரிய கிறிஸ்துவமதம் ஐரோப்பிய சமூகங்களின் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு உரியதாக வரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட பின்னர், பலவேறு இனமரபுக் குழுக்களின் தொடர்ச்சியாக நீடித்த பல கடவுளர் வழிபாடு இல்லாமல் ஆக்கப்பட்டது. பெரும் நிலவுடமையாளரான நிலப்பிரபு ஒரு கடவுளின் பிரதிநிதியாக அமைய, அவரது நிலத்துடன் பிணைக்கப்பட்ட பண்ணையடிமைகள் அவருக்கான ஒற்றைக் கடவுளை ஏற்று ஒரு தேவாலயத்தில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியிருப்பது பெரும் பண்ணைக்கு அவசியப்படும் பொருள் உற்பத்தி உறவுப் பிணைப்பு ஆகும்.
வர்க்கங்களாகப் பிளவுறாமல் திணை மேலாதிக்கம் பெற்ற இன மரபுக்குழுவும் வென்றடக்கப்பட்ட இன மரபுக்குழுக்களும் சாதிகளாக்கப்பட்ட எமது சமூகத்தில் ஒற்றைக் கடவுள் அவசியப்படவில்லை. அந்த ‘ஒரு கடவுள்’ போன்றதான இடத்தை அனைவரும் ஏற்றாக வேண்டிய பரம்பொருள் (முழு முதற் கடவுள்) இங்கே பெற்றுள்ளார். இணைக்கப்படுகின்ற சமூகங்களின் ஊடாட்டத்துக்குரிய பல்வேறு இனமரபுக்குழுக்களைச் சேர்ந்த கடவுளர்களது ஒன்றிணைவில் உருவானவரே சாதியச் சமூகத்தின் பரம்பொருள் என்பதனைக் கவனம் கொள்வோம்.
அதே வேளை, சாதி வேறுபாட்டின் விலக்கலுடன் (உரிமை மறுப்புச் சார்ந்து) தொலைவுக்கு உரியவர்களாக ஆக்கப்படுபவர்களான இடைநிலை, ஒடுக்கப்படும் சாதிகள் தத்தமக்கு உரிய கடவுள் வழிபாட்டைத் தொடர்வதற்கு அனுமதித்தாக வேண்டிய வாழ்முறை எமக்கு உரியதாக அமைந்தது. வர்க்கப் பிளவடைந்த சமூகத்தில் சுரண்டப்படுகிற வர்க்கப்பிரிவினரின் தனிப்பட்ட பண்பாட்டுத் தொடர்ச்சி அனுமதிக்கப்பட்டதில்லை. முழுச் சமூக சக்தியின் (திணை) மேலாதிக்கம் வாயிலாக சாதிகளாக இனமரபுக்குழுக்கள் மாற்றப்பட்டபோது தத்தமது பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணியவாறு, தமக்கான சாதிச் சமயத்தைப் பின்பற்றியவாறே, நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான மேலாதிக்க பெற்ற முழுமுதற் கடவுளுக்கு கட்டுப்பட்டவாறாக ஒழுகும் (பண்பாட்டு மேலாதிக்க ஏற்பைக் கடைப்பிடிக்கும்) பிரத்தியேக நிலை சாதியச் சமூத்துக்கு உரியது.
வேறுபட்டதான இந்தப் பண்பாட்டுத் தளத்துக்கு அடிப்படையாக உள்ள பொருள் உற்பத்தி உறவு, அதற்குரித்தான முழுமைப் பரிமாணங்களுடன் கவனம் கொள்ளப்படுதல் அவசியம். இவற்றை விளக்கம் கொள்ள உதவுவதாக மார்க்சியம் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் மார்க்சியச் சிந்தனை முறையை வகுத்தளித்தனர். நூற்றாண்டுக்கு மேலாக, கூர்மையான வர்க்கப்போராட்ட உலைக்களத்தில் ஐரோப்பா புதிய வரலாறு படைக்கும் சாதனையை மேற்கொண்டவாறு இருந்த சூழலில் அதன் தலைமைச் சக்தி என உள்ள அரசியல் முகத்தைச் சரியான திசைமுகப்படுத்தலுக்கு ஆட்படுத்தும் அவசியம் இருந்தது. விட்டுக் கொடுக்காத போராட்டங்களை இடையீடு இன்றி முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று சமத்துவ சமூகம் படைக்கும் எனக் கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்ட மார்க்கியம், உலகத்துயர்களை களைந்தெறியும் என விடுதலைநாடும் சக்திகளால் கண்டுணரப்பட்டு கையேற்றுப் பிரயோகிக்கப்படுவதாக பின்னரானது உலக வரலாறு!
மார்க்சியம் என்பது வெறும் தத்துவ வியாக்கியானம் அல்ல. எந்தவொரு நாட்டிலும் பிரயோகித்துத் தமது நாடு எதிர்நோக்கிய இடர்களைக் களைந்தெறியும் வண்ணம் விடுதலை நாடிச் சமத்துவ உலகம் படைப்பதை நோக்கி முன்னேற இயலும் என 1917இல் லெனின் தலைமையிலான ரஷ்ய ஒக்டோபர் புரட்சி, மாவோ தலைமையிலான (1949ல் வெற்றிகொள்ளப்பட்ட) சீனப் புரட்சி போன்றவை எடுத்துக்காட்டியிருந்தன. பூரண வளர் நிலையின் முதலாளித்துவ உச்சங்களைத் தொட்ட தேசங்களிலேயே பாட்டாளி வர்க்கப் புரட்சி கனியும் என்று காத்திராமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்கவேண்டியிருந்த ரஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை உடையது லெனினியம். பாட்டாளி வர்க்கம் அரசியல் அரங்கில் தீர்க்கமாக அடி எடுத்து வைக்காத, விவசாயப்புரட்சி எனும் சாராம்சத்துடன் திகழ்ந்த தேசிய விடுதலைப்புரட்சியை சோசலிசம் படைக்கும் கொம்யூனிஸ்ட் செயல் ஒழுங்குக்கு உரியதாக்கும் சாதனையை மாவோ சேதுங் சிந்தனை ஏற்படுத்தித் தந்துள்ளது.
லெனினிசம், மாவோ சிந்தனை எனப் பரிணமித்த மார்க்சியத்தின் பிரயோகம் என்பது கால– தேச–நிலவரங்கள் கவனம் கொள்ளப்பட்டுச் செயல்படுதல் எனும் அடித்தளம் உடையது.மார்க்சியம்– லெனினிசம் – மாவோ சேதுங் சிந்தனையைக் கையேற்று குறிப்பான சூழலின் புற நிலை ஆய்வை மேற்கொள்ள வேண்டும்!
ரஷ்யப் பாதையிலா, சீன வழிமுறையிலா, கியூபப் பாணியிலா எமது புரட்சியை முன்னெடுப்பது என்ற விவாதங்களில் மூழ்கியபடி இருந்த காரணத்தால் எமக்கானது வர்க்கப் பிளவுறாமல் முழுச் சமூக சக்தியான திணை மேலாதிக்கம் வாயிலான இனமரபுக்குழுக்கள் சாதிகளாக ஆக்கப்பட்ட தனிவகைச் சமூக அமைப்பு கொண்டது எனும் புற நிலையைப் புரிதல் கொள்ளாமல் இருந்துள்ளோம். வர்க்கப்புரட்சிக்கு சாதி வேறுபாடு குந்தகம் செய்கிற ஒன்று எனக் கருதிச் சாதி விவகாரங்களையே விவாதப்பொருளாக ஆகவிடாமல் ‘வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுப் புனிதம்’ பேணி வந்துள்ளோம்.
‘இது சாதிச் சமூகம், இங்கே உங்களது வர்க்கப்போராட்டப் கோட்பாடு செல்லுபடி அற்றது’ என இயங்கும் அடையாள அரசியலாளர்களும் தீர்வு எட்ட இயலாதவை முடக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். திணை அரசியல் செயல் ஒழுங்குக்கு உரிய எமக்கான பிரத்தியேக வரலாற்றுச் செல்நெறியில் வர்க்கப்போராட்டக் கோட்பாட்டை எவ்வகையில் கவனம் கொள்ள இயலும் ?
தொடரும்.