ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் - ஓர் அறிமுகம்
Arts
11 நிமிட வாசிப்பு

ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் – ஓர் அறிமுகம்

November 6, 2024 | Ezhuna

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

ஈழத்து மரபு வழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி – வடமோடி சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி, கரகம், காவடி என அது பன்முகப்பட்டது. இவற்றில் சில அழிந்து விட்டன. சில கால ஓட்டத்தோடு நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டுக் கலப்புகளும் அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இம் மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன.

இந்தப் பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென தனியான அழகியலையும் அமைப்பையும் வெளிப்பாட்டுத் திறன்களையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. பொதுவாக இக் கலைகளின் தனித்துவங்கள் பற்றியும் கால ஓட்டத்தினூடே இம் மரபுவழி ஆற்றுகைக் கலைகள் மாறியும் வளர்ந்தும் வந்துள்ளமை பற்றியும், இந்த மாற்றத்தில் அரசியல், சமூக, பண்பாடு வகித்த பாத்திரம் பற்றியும், அத்தோடு அது மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்கள் பற்றியும், அதன் செயற்பாடுகள்  பற்றியும் அறிவது அவற்றின் இருப்பைத் தக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதனை மேலும் வளர்த்துச் செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்

இப் பல்வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் பற்றியும், அவை கலை உலகில் ஏற்கப்பட்டமை பற்றியும், அதனால் அந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், இனி அவை எவ்வாறு செல்ல வேண்டும் என்பது பற்றியும் என் அவதானிப்புகளைக் கூறுவதாக இக்கட்டுரைத் தொடர் அமையும்.

வேலைப்பளு ஒருபுறமும், முன்னர் போல வேகமாகச் சிந்திக்கவும் எழுதவும் முடியாத முதுமை நிலை ஒரு புறமுமாக நின்று என்னை இழுத்தடிக்க வைத்தன. எழுநாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் செய்து முடிப்பது சிரமமாக இருந்தது. தொடர் நச்சரிப்புகள் தொல்லையாக இருந்தாலும் இன்னொரு புறம் சுகமாகவும் இருந்தது. அவர்களும் விடாப்பிடியாக நின்றனர். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இப்போது இத்தொடரை ஆரம்பிக்கிறேன். 

நானும் ஆற்றுகைக் கலைகளும்

ஆற்றுகைக் கலைகளில் எனது ஈடுபாடு எனது ஐந்தாவது வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. மரபுவழி ஆற்றுகைகளான சடங்கு ஆற்றுகைகளையும் சிறுகலை ஆற்றுகைகளையும் பெரும் கலைகளான கூத்து ஆற்றுகைளையும் மிகச் சிறு வயதில் பார்த்து வளரும் சந்தர்ப்பத்தினை எனக்கு இயற்கை அளித்திருக்கிறது. எனது 15 ஆவது வயதிலேயே பாடசாலையில் ஆரம்பித்த எனது கூத்து ஆற்றுகை எனது 80 வயது வரை கடந்த 65 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. அந்த ஆற்றுகை அனுபவங்கள் காலம் தோறும் என்னைப் பதப்படுத்தி வந்துள்ளன. ஆற்றுகையாளனாக வளர்ந்த நான், எழுத்தாளனாகவும் ஆராய்ச்சியாளனாகவும் வளர்ந்தது இன்னொரு கதை. ஆற்றுகையும் ஆய்வும் ஒன்றாக என்னுடன் தொடர்ந்து வந்துள்ளன என்பதையும், ஒன்றை ஒன்று பலப்படுத்தி வந்துள்ளது என்பதையும் இப்போது உணர்கிறேன்.

எனது முதலாவது கூத்துப் பற்றிய கட்டுரை ‘தேனருவி’ இதழிலே ‘கூத்தின் தேக்க நிலை’ என்ற பெயரில் வந்ததாக ஞாபகம். 1966 தினகரன் விழா மலரிலே ‘கிராமியக் கதைகளை மையமாகக் கொண்டு புதிய கூத்துகளை எழுதுதல்’ என்ற கட்டுரை வெளிவந்தது. கூத்தின் தேக்கமும் அது வேண்டி நின்ற மாற்றமும் என் இளம் வயதிலேயே மனதில் ஊன்றிவிட்டன போலும். பின்னர் அதனை ஆய்வுப் பொருளாக ஆராயவும் ஆராய்ந்த முடிவுகளை மாணவர்களுக்குக் கற்பிக்கவும், முடிவுகளை வைத்துக்கொண்டு புதிய திசையில் புதிய ஆற்றுகைகளை நோக்கிப் பயணிக்கவும் நான் முயன்றேன்.

எனது இன்றைய நிலை

ஆரம்ப காலத்திலும் இடைக்காலத்திலும் பிற்பகுதியிலும் எழுதிய எழுத்துகளை திருப்பிப் படித்துப் பார்த்து புதிதாக எழுதும் போது அது சிலவேளை தன் வரலாற்றுக் கூற்றுகளைப் பெற்று விடுவதுமுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் என்னால் எழுதப்பட்ட ஆற்றுகைக் கலைகள் பற்றிய, விசேடமாக கூத்து பற்றிய கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் நான் மீண்டும் திரும்புதல் சுவாரசியமானதாகும். கடந்த 60 வருட காலங்களாக ஆட்சி செய்த கோட்பாடுகளிலும் கூத்துகள் பற்றிய பார்வையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டதுடன் புதிய கொள்கைகளும் தோன்றிவிட்டன. ஆற்றுகைகளையும் அதன் அடியாக எழுந்த பேராற்றுகைகளான கூத்துகளையும் புதிதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

1960 களிலேயே கூத்தில் ஏற்பட்ட செம்மையாக்கத்தை, புத்தாக்கத்தை விமர்சனம் செய்கின்ற புதிய போக்குகளும் உருவாகிவிட்டன. அச் செம்மையாக்கங்களின் மீது ‘காலனிய நீக்கம் பெறாதவை’, ‘காலனித்துவத்தின் பாதிப்புக்கு உள்ளானவை’ போன்ற குற்றச்சாட்டுகளும் ஒரு சிலரால் சுமத்தப்படுகின்றன.

கூத்து மீது ஒரு தேசிய பார்வையும் கலந்துள்ளது. கூத்து ஈழத் தமிழரின் கலை  அடையாளம்; அந்தக் கலை அடையாளத்தை மரபு தவறாது பேண வேண்டும் என்று வாதிடும்  வாதங்களும் வந்துள்ளன. இவை அடிப்படை வாதத்திற்கும் சாராம்ச வாதத்திற்கும் எம்மை இட்டுச் செல்லும். ஆற்றுகையின் தன்மை பன்முகப்பட்டது. கூத்துகளின் தன்மைகளும் பன்முகப்பட்டவை என பன்முகப் பார்வை ஒன்றும் அதன் மீது வைக்கப்படுகின்றது.

கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகத்தில் அது பட்டப் படிப்பிற்குரிய பாடநெறியாகி, அதனால் வந்த சாதக – பாதக அம்சங்களையும் அது பெற்றிருக்கிறது. சிறப்பாக கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர், அது பற்றி பல விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.

இவை யாவும் என்னைச் செதுக்கியுள்ளன.

மரபுவழிக் கலை ஆய்வின் புதிய போக்குகள்

பழையனவற்றிற்குப் புதிய பொருள் கொடுத்தலும் புதியன புனைதலும் இன்றைய தேவையாக அறியப்படுகிறது. கூத்தினை அதன் சமூகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஒரு கொள்கையும், அதனை ஒரு கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற மறு கொள்கையும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆற்றுகைகளையும் கூத்துகளையும் வெறுமனே சமூகப் பின்னணியிலோ சமயப் பின்னணியிலோ ஆராயாமல், அது உருவாகும் பொருளாதார அடித்தளத்தில் வைத்து ஆராய்ந்தால் அதனை மேலும் புரிந்துகொள்ள முடியும் என்ற சிந்தனைகளும் தோன்றியுள்ளன.

இப்படி புதியன புனைவோரை அல்லது கூத்து பற்றி புதிய கருத்துகளை கூறுவோரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

  1. இலட்சியவாதிகள்
  2. பொருள் முதல் வாதிகள்
  3. தேசியவாதிகள்
  4. மரபுவாதிகள்

மரபுவாதிகள் இன்று வரை கூத்து என்பது மாறாது வந்துள்ளது; எனவே அதன் மரபு பேணப்பட வேண்டும் என்று வாதிக்கிறார்கள். மரபு என்பது என்னவென்று தெளிவான அபிப்பிராயம் அவர்களிடம் காணப்படவில்லை. மரபு என்பது மாறாப் பண்புடையது, அசைக்க முடியாதது, நிலைபேறானது என்ற கருத்தியல் அவர்களிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது. அவர்கள் இப்படிக் கூறிக் கொண்டிருக்கையிலேயே கூத்து ஆற்றுகைகள் மாறிக் கொண்டிருப்பதுதான் இன்றைய யதார்த்தம்.

நமது சமூகம் பல படிநிலை சமூக அமைப்புகளையும் பல படிநிலைப் பொருளாதார அமைப்புகளையும் கொண்ட ஒரு சமனற்ற பொருளாதார, சமூக, பண்பாட்டு அமைப்புடைய சமூகமாகும். எனவே, இந்தச் சமனற்ற வளர்ச்சி போக்கு கூத்துகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்; இந்தச் சமனற்ற வளர்ச்சி நிலையினை ஆற்றுகைகளிலும் காணலாம். உதாரணமாக, மிக வசதியற்ற கிராமத்தில் இருக்கும் ஒரு கோயில் சடங்கிற்கும் மிக வசதி உள்ள கிராமத்தில் நடைபெறும் கோயில் சடங்கிற்கும் இடையே ஆற்றுகை முறையில் பாரிய வேறுபாடுகள் உண்டு; கூத்துகளும் இவ்வாறே. ஏழைகளைக் கொண்ட கிராமச் சமூகம் போடும் கூத்திற்கும் வசதி பெற்றவர்களைக் கொண்ட கிராமச் சமூகம் போடும் கூத்திற்கும் இடையே அளிக்கை முறையிலும், ஒப்பனை முறையிலும் அதிக வேறுபாடு இருப்பது உண்டு. இது எல்லாம் கூத்தாய்வில் இதுவரை இடம்பெறவில்லை.

ஆற்றுகையை அல்லது கூத்தினை ஒரு சமூக ஆற்றுகையாக அல்லது ஒரு சமூகக் கூத்தாக இனம் கண்டு, அது பலர் சேர்ந்து உருவாக்கிய ஒன்று என்கிற புனைவுகள் ஆய்வு உலகில் அதிகம் இடம் பெறுகின்றன. கிளிப்பிள்ளை வாய்பாடாகச் சிலரது கட்டுரைகளில் இவை காணப்படுகின்றன. அது ஒருவகையில் உண்மையாயினும் முழு உண்மை அன்று.

கூத்துப் பாடியவர்களும், புலவர்களும், அதனைப் பழக்கியவர்களும் ஓரளவு கல்வி அறிவுள்ள அண்ணாவிமார்களே. இங்கே கூத்தினை உருவாக்கியோர், பழக்கியோர் அறிவிலும் கூத்து ஆற்றுகையிலும் அதிகாரம் மிகுந்தவர்கள். அங்கும் ஒரு அதிகாரம் இருப்பதைக் காணுகிறோம். கூத்தை இலட்சியமயப்படுத்துவோர் இவற்றை நுணுகி நோக்காமல், “கூத்து உருவாக்கம் அதிகாரம் இல்லாதது; உள்ளூர்க் கலைகளின் பண்பு அது” எனப் புனைகிறார்கள். உள்ளூர்க் கலைகளை ஒரு மனோரதியப் பாங்கில் அணுகுகிறார்கள். இவற்றில் இன்னும் நுணுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஈழத்துத் தமிழ்ச் சமூகம் சமயக் குழுக்களாகவும் சாதிக் குழுக்களாகவும் பிரிந்து இருக்கின்ற துர்பாக்கிய நிலை இன்றும் நிலவுகிறது. இது அந்தச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டுமானக் கருத்தியலை பொறுத்த விஷயம். ஆற்றுகைகள் சாதிக் குழுக்களாலும் சமயக் குழுக்களாலும் தாக்கம் பெறுவது கூட இன்னும் ஆராயப்படவில்லை; அல்லது ஆராயத் தயங்குகிறார்கள். இன்றுவரை இது பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. கிராமத்திலே சாதி கலந்து கூத்தாடக் கூடாது என்ற பழைய கொள்கையே இன்றும் நின்று நிலவுகிறது. சில கூத்துகள் அந்தந்த சாதிகளின் அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. இன்ன இன்ன கூத்துக்களை இன்ன இன்ன சாதி மட்டுமே ஆட வேண்டும் என்ற மரபுவழி விதிமுறைகள் கூடக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனால் கூத்து சாதி அமைப்பைப் பேணும் கூத்தாக இருப்பதனையும் காணுகிறோம். கிராமக் கூத்துகளில் இன்னும் ஆண்களோடு பெண்கள் ஆடும் முறை ஏற்படவேயில்லை; பெண்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

ஆற்றுகைகளோ கூத்துகளோ வரலாற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு இன்னும் பெரிதாக ஆராயப்படவில்லை. வரலாற்றுப் பின்னணியில் ஒரு பொருளை வைத்துப் பார்க்கின்ற பொழுது, அது பல இணைப்புகளின் வழியாக வளர்ந்து வந்த ஒன்றாகத் தெரியவரும்; அதன் பரிணாம வளர்ச்சி தென்படும்; அதன் சிக்கலான தன்மையும் தென்படும். பண்பாடு வளர்வதும் இவ்வாறே.

மனித உறவுகளாலும் சமூக உறவுகளாலும் பிரிந்து கிடக்கின்ற சமூகங்கள் ஒன்று கலக்கின்ற பொழுது பண்பாட்டுக் கலப்புகள் ஏற்படுகின்றன. இப் பண்பாட்டுக் கலப்புகள் சிலவேளைகளில் ஏற்கனவே இருந்த பண்பாட்டுக்கு ஒரு புதிய வலிமையையும் உத்வேகத்தையும் கொடுத்து விடும். அவற்றை நாங்கள் ஆற்றுகைகளிலும் கூத்துகளிலும் காணுகிறோம். பண்பாட்டுக் கலப்பு கூத்துகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் நுணுக்கமாகப் பார்க்கப்படவில்லை.

கூத்தை அல்லது ஏதாவது ஒரு கலையை ஆற்றுகை செய்யும் ஆற்றுகையாளனது அல்லது ஆற்றுகையாளர்களது தனி உளவியல் அல்லது சமூக உளவியல் மிக முக்கியமானதாகும். மரபுவழிக் கலைகளில், சிறப்பாக கூத்தில், பெண் வேடமிட்டு ஆடுபவரின் தனி உளவியல், அவரோடு ஆண் வேடமிட்டு ஆடுகின்றவர்களின் தனி உளவியல், அவரை ஆட்டுகின்ற அண்ணாவியாருடைய தனி உளவியல், அண்ணாவியாருக்கு உதவியாக நின்று கூத்தை இயக்குகின்ற கொப்பி பார்ப்போர், பிற்பாட்டுக்காரர், தாளம் போடுவோர், பார்வையாளர்கள் என அனைவரின் உளவியல் என்பன இன்னும் ஆராயப்படாத விஷயங்களாகவே இருக்கின்றன.

ஒரு ஆற்றுகையை அணுகும் முறைகள், அலசும் முறைகள் இன்று கோட்பாடுகளாக மாறியுள்ளன. மொழியியல் அறிஞரான சசூர், மொழி தொடர்பு கொள்ளும் முறை பற்றி விளக்குகிறார். மொழி ஒரு குறியீடு; ஒரு சொல். அதாவது ‘மரம்’ என்ற சொல்லை ஒரு பொருள் கொண்டு சொல்பவன் கூறும்போது, கேட்போன் சொல்பவன் நினைத்த ‘மரம்’ என்ற பொருளையே அப்படியே நினைப்பான் என்று இல்லை. கேட்போனின் மனதில் உருவாக்கப்படும் ‘மரம்’ வேறொன்றாக இருக்கும்; கேட்போன் தனது அனுபவத்திற்கேற்ப அந்தச் சொல்லை உள்வாங்கிக் கொள்வான். இதைத் தான் தொடர்பாடலில் அனுப்புபவர், பெறுபவர் எனக் கூறுவார்கள். சொல்வோன் சரியாகப் பொருளைச் சொன்னாலும், கேட்போன் அதை அறியாவிடின், அதனைத் தொடர்பாடல் சிக்கல் என்பர். இந்தச் சிக்கலை ஏற்படுத்துவதில் பண்பாடு தொடக்கம், பல காரணிகள் இடம் பெறும்.

ஆற்றுகையிலோ அல்லது கூத்திலோ வரும் தெய்வமாடுபவனும் அல்லது கூத்துக்காரனும், ஒரு கட்டுச் சொல்லும் போது அல்லது ஒரு பாட்டைப் பாடும் போது, சம்பந்தப்பட்ட ஆற்றுகையாளர்கள் தாம் உணர்ந்து சொல்வதை, கேட்போன் அல்லது பார்ப்போர் அப்படியே உள்வாங்குகிறார்களா என்பது இன்னும் ஆராயப்படவில்லை. இது ஒரு கள ஆய்வு ஆகும். இவ்வகையில் இன்னும் கூத்தில் தொடர்பாடல் பின்னணி ஆராயப்படவேயில்லை.

கூத்தின் ஆராயப்படாத சில பகுதிகள் இவை ஆகும்.

குறியீடுகள் பற்றிய ஆய்வு இன்று பெரும் ஆய்வாகக் கிளம்பியுள்ளது; இதனை ‘செமியாட்டிக்’ என அழைப்பர். கூத்தில் வரும் உடை, ஒப்பனை, முடிகள், ஆபரணங்கள், கூத்து அசைவங்கள் எனும் குறியீடுகள் எப்படி பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பது இன்னும் ஆராயப்படாத விஷயமாகவே உள்ளது.

இவ்வாறே, கூத்தின் அரசியலும் கூத்தின் நிலமானிய விழுமியங்களும் பெரிதாகவோ, நுணுக்கமாகவோ ஆராயப்படவில்லை. இன்று ஆய்வுத்துறையில் பல்துறைச் சங்க ஆய்வு முறை முக்கிய ஆய்வு முறையாகக் கருதப்படுகிறது. சமயத்தையோ, மொழியையோ, ஒரு கலைப் படைப்பையோ தனியே சமயம் பற்றியதாக, அல்லது மொழி பற்றியதாக அல்லது கலை வடிவம் பற்றியதாக ஆராய்வதை விடுத்து, இன்றைய புதிய சிந்தனைகளான மானிடவியல், சமூகவியல், அமைப்பியல், பின்னமைப்பியல், விளிம்பு நிலை மக்களாய்வு, உளப்பகுப்பாய்வு, அது சிறுகதையாடலா பெருங்கதையாடலா என்னும் உரையாடல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அணுகும் போது, எடுத்துக்கொண்ட பொருளின் முழுத் தன்மையையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, மேடையில் ஒரு பொருளை வைத்து ஒரு பொட்டு ஒளியை அதன் மீது செலுத்தினால் அதன் ஒரு பக்கம் மாத்திரமே தெரியும். நான்கு பக்கங்களிலிருந்தும் மேலே இருந்தும் ஐந்து ஒளிப் பொட்டுகளை செலுத்திப் பார்க்கும் போது, அந்தப் பொருளின் சகல பரிமாணங்களும் தெரியவரும் அல்லவா? இத்தகைய பல்துறை அணுகுமுறையை இணைத்து ஆராயும் ஆய்வுகள் கூத்துகளிலும் அதிகமாக வரவில்லை என்றே தோன்றுகிறது. இதுவரை வெளிவந்த மரபுவழிக் கலைகள், கூத்து ஆற்றுகைகள் குறித்த பெரும் ஆய்வுகளும் கூட, அதிகமாக விவரிப்பும் விவரணமுமாகவே அமைந்துள்ளன.

ஆற்றுகைக் கலைகளின் ஆய்வில் இன்றும் நின்று நிலவும் இன்னொரு பெரிய இடைவெளி அதன் இசையும் ஆடலும் அளவுப் பிரமாணத்திற்கமைய ஆராயப்படாமையேயாகும். அண்மைக்காலமாக இதில் ஓரிரு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் உட்கொண்டு, என்னுடைய கட்டுரைத் தொடர் அமைய இருக்கிறது.

முடிவுரை

இத் தொடரின் போக்கை திட்டவட்டமாக இப்போது என்னால் அடையாளப்படுத்த முடியாவிடினும் மாதந்தோறும் நான் எழுதவிருக்கும் கட்டுரைகள் அதன் போக்கைத் தீர்மானிக்கும் என நம்பலாம். இந்தக் கட்டுரைகள் பொதுவாக மரபுவழி ஆற்றுகைகளை, சிறப்பாகக் கூத்துகளை அறிமுகப்படுத்துவதாகவும்; அது சம்பந்தமான வாத, பிரதி வாதங்களைக் கூறுவதாகவும்; ஆற்றுகைகளின் அடுத்த கட்ட நகர்வைக் குறித்த சில சிந்தனைகளை முன் வைப்பதாகவும் அமையும் என நம்புகிறேன்.


ஒலிவடிவில் கேட்க

3445 பார்வைகள்

About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை – 1985, மௌனகுருவின் மூன்று நாடகங்கள் – 1985, தப்பி வந்த தாடி ஆடு – 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் – 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் – 1992, சங்காரம் – ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) – 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு – 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் – நீலாவணன் – 1994, கலை இலக்கிய கட்டுரைகள் – 1997, சக்தி பிறக்குது – நாடகம் – 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் – 1997, ஈழத்து நாடக அரங்கு – 2 ஆம் திருத்திய பதிப்பு – 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல் – 2010, கூத்து யாத்திரை – 2021, கூத்தே உன் பன்மை அழகு – 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (9)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)