மெய்யியல் மரபு : ஆசீவகம்
Arts
15 நிமிட வாசிப்பு

மெய்யியல் மரபு : ஆசீவகம்

February 26, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

தெற்காசிய மரபிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும், பிறபகுதிகளிற் தோன்றி இந்தியத்துணைக் கண்டத்திற் பரவிய மெய்யியல் மரபுகளையும், தன்னகத்தே உருவான மெய்யியல் மரபுகளையும் ஆவணமாக்கி வைத்துள்ள ஒரே தெற்காசிய மொழி தமிழ் என்பதில் யாதொரு ஐயப்பாடும் எழுதலுக்கு வாய்ப்பில்லை. தமிழ்மொழி, நீண்ட வலாற்றுத் தொடர்பையும் சமயநிலைப் பயன்பாடு மற்றும் அறிவுப்புலத் தொடர்பையும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே பெற்றுவந்துள்ளமையால் அதுவொரு மெய்யியல்தளமாக அமைந்துள்ளது எனலாம். அவ்வாறான மெய்யியற் கருத்துக்களின் தாக்கம் இன்றளவும் தமிழ் மக்களது வாழ்வியலிலே பல்வேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளமை இன்றும் காணக்கூடியதாகின்றது. அவ்வகையில் தமிழரின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதும் உயர்ந்த சிந்தனை மரபினை உடையதுமாகத் தோன்றிய சமயமே ஆசீவக சமயமாகும். இச்சமயம் குறித்தும் இதன் தோற்றுவாய் குறித்தும் முழுமையாக அறிய இயலாமல் உள்ளபோதும் பிறமொழிகள் யாவற்றைக் காட்டிலும் தமிழிலேயே இச்சமயக் கருத்துக்கள் குறித்தான செய்திகள் மிகுந்து காணப்படுகின்றது. ஆதலால் இவ்வாய்வினை மேற்கொள்ள வேண்டிய தேவை என்பது தமிழின் மெய்யியல் வளத்தினை அறிதலுக்கும் பெரிதும் பயனுடையதாக அமையும். அவ்வகையில் இவ் ஆசீவகச் சமயம் குறித்து காணப்படும் செய்திகளை ஆராயும்முன் அச்சமயத்தின் பரவலாக்கத்திலும் அதன் மெய்யியற் கட்டமைவிலும் பெரும்பாங்காற்றியோர் குறித்து ஆராய்தல் இன்றியமையாததாகும். 

Image 3

மற்கலி கோசாலர்

இவரது கோட்பாடு ஊழியல் எனப்படும் நியதிக் கோட்பாடாகும். இவர் உலகில் நிகழும் நன்மையும் தீமையும் முன்னமே முடிவு செய்யப்பட்டவை. அவற்றை மாற்றுதலோ துன்பத்திலிருந்து விடுபடுதலோ இயலாத செயல். மனிதமுயற்சியால் ஒன்றுமே நிகழப்போவதில்லை. துன்பம் நிறைந்ததே உலக வாழ்வு என்னும் கொள்கையினராவார். இவர் புத்தரோடும் மகாவீரரோடும் சமகாலத்தில் வாழ்ந்தவராவர். மகாவீரருடன் ஒன்றாகவே சிலகாலம் வாழ்ந்துள்ளார். பின்னர் இவர்களுக்கு இடையேயான கொள்கை முரணால் அவரைப் பிரிந்து தனித்து நின்றார் என்பர். இவர் பாண் மரபினரென்றும் ஆதலால் இசையிலும் ஆடலிலும் அதிக ஈடுபாடுடையவர் என்றும் குறிப்பிடுவர். பௌத்தமும் சமணமும் துறவு நிலையில் இசையினையும் ஆடலினையும் கடுமையாக எதிர்க்க ஆசீவகம் அவற்றை வளர்த்து வழிபாட்டு நிலைக்குக் கொண்டு சென்றமையினை இவரது வாழ்க்கைக் குறிப்புகளாலும், மதுரைக்காஞ்சியாலும், அரச்சலூர் கல்வெட்டுக்களாலும் அறியலாம். இவர் கடுமையான துறவு நெறியினை மேற்கொண்டவராவார். அறிஞர் பலரும் இவரை மகதநாட்டினர் என்பர். க. நெடுஞ்செழியன் இவரைத் தமிழ்நாட்டினர் என்பார். இவர் ஒன்பான் கோட்பாடுகளைக் கொண்டு எழுதிய ஒன்கதிர் (நவகதிர்) எனும் ஆசீவக நூல் மற்கலிநூல் என அழைக்கப்பட்டமையை மணிமேகலையால் அறியலாம். ஆயினும் இன்று அந்நூல் கிட்டிட்டிலது. இவர் குறித்தான செய்திகள் யாவையும் ஆசீவகத்திற்கு எதிர்நிலையிலுள்ளோர் கூறிய செய்திகளாகும். இவர் தனது இறுதிக்காலத்தில் நாடு முழுதும் பயணம் மேற்கொள்ளும் ஆறு துறவிகளான சாணாதர், காலந்தர், கணியாரர், அச்சிதன், அக்கிலேசாயனா, அச்சுத கோமாய புத்தர் என்போருடன் கூடி அம்மெய்யியலைச் சமயமாக வெளிப்படுத்தினார் என்று கூறுவர். அக்காலகட்டத்தில் அவர் தனது மாணவியான ஆலகாலா என்போரது வீட்டில் தங்கியிருந்தே எட்டு உறுதிப்பொருள்கள் குறித்துக் கூறினார் என்பர்.

பக்குடகச்சாயனா (பக்குடுக்கை நன்கணியர்)

புறநானூற்றின் நூற்றுத் தொன்னூற்று நான்காம் பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியாரே பக்குடகச்சாயனார் என க. நெடுஞ்செழியன் குறிப்பிடுவார். சமண சமயத்து நூலான பகவதி சூத்திரம், மற்கலி கோசாலர் தம் காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அறுவருடன் இணைந்து தமது மெய்யியற் கருத்துக்களை உருவாக்கியதாகக் குறிப்பிடுகின்றது. அவர்கள் சாணாதர், காலந்தர், கணியாரர், அச்சிதன், அச்சுத கோமாய புத்தர், அக்கிலேசாயனா என்போராவர். இவர்களுள் கணியாரர் என்பவரே கணியரான பக்குடுக்கை நன்கணியராவார். கணியர் என்போர் வானியல் அறிவு நிறையப்பெற்றோராவர். இவர்களில் சிறந்தோரை நன்கணியர் என்பதனால் இவர் நன்கணியரானார். சங்கப்புலவரில் மற்றொரு கணியரான கணியன் பூங்குன்றனாரும் ஆசீவக மரபினைச் சேர்ந்தவரே என்பதினை யாவரும் அறிவர். இவரே இந்திய மெய்யியல் மரபில் முதன்முதலாக அணுவியல் கோட்பாட்டினை உருவாக்கியவர் என்பர். இவரது புறப்பாடலும் கடவுள் மறுப்புக் கொள்கையும் கருமமறுப்புக் கொள்கையும் உடையதாகவும் உலகியற் பொது நோக்குடையதாகவும் காணப்படுகின்றது. இன்பம்-துன்பம் என்னும் எதிர்மறைப் பொருட்களின் செயற்பாட்டால் உலகியலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் படைப்பில் மேற்கொள்வதினை மறுப்பதாக இப்பாடல் அமைகின்றது. இவரே மணிமேகலை சுட்டும் ஆசீவகர்களுக்குரியதான நிலம், நீர், தீ, காற்று, உயிர், இன்பம், துன்பம் என்னும் ஏழுவகைப் பொருள்களை அணுக்களாகக் கொண்டு தமது அணுவியல் கோட்பாட்டினை வகைமை செய்தவராகக் கூறுவர். இருள், காலம் முதலியவற்றைப் பொருட்களாகக் கொள்ளாதவிடத்தே இவரின் அணுவியற்சார் பார்வையின் உயர்வை உணரலாம்.

பூரணகாயபர்

நீலகேசி பூரணரையே ஆசீவகத்தின் தலைவராகக் கொண்டு வாதம் செய்வதன் வழி ஆசீவகக் கோட்பாட்டில் பூரணரின் முதன்மையிணை அறியலாம். வேத எதிர்ப்பாளரான பூரணர், வைதிகத்தின் கர்மாக் கோட்பாட்டினை எதிர்த்தார் ஆதலால் இவரது கோட்பாடு ‘அக்கிரிய வாதம்’ எனப்பட்டது. அதாவது காரணம் இல்லமல் காரியம் நிகழ்வதில்லை. ஒருவரது செயலின் அடிப்படையிலேயோ பாவ, புண்ணிய அடிப்படையிலேயோ அவரது நற்பிறப்புகளும் தீயபிறப்புக்களும் அமைகின்றன என்பது கர்மக்கோட்பாடாகும். இதனை எதிர்த்து யாவும் தற்செயல் நிகழ்வாகவே நிகழ்வன என்பதான கோட்பாட்டினையுடையவர் பூரணர்.

பூரணரே அபிசாதிக் கொள்கை என்று அழைக்கப்படும் வண்ணக் கோட்பாட்டினை உருவாக்கியவராவார். இவ்வண்ணக் கோட்பாட்டின்படி:

  1. கரும்பிறப்பு 
  2. கருநீலப்பிறப்பு 
  3. பசும்பிறப்பு
  4. செம்பிறப்பு 
  5. பொன்பிறப்பு 
  6. வெண்பிறப்பு 
  7. கழிவெண்பிறப்பு 

என உலகில் தோன்றும் உயிர்களைப் பகுப்பர். இப்பிறப்புக்களில் பிறந்தே உயிரானது கழிவெண்பிறப்பில் வீடடையும் என்ற கோட்பாட்டினை வகுத்தவர் பூரணர். இப் பூரணர் உறையூரில் தோன்றியவராகவே இருத்தல் வேண்டும். ஆசீவகக் கட்டமைவில் இவரது கரும எதிப்புக் கோட்பாடும் தற்செயலிக்கோட்பாடும் கலந்தே உருக்கொண்டனவெனலாம். உறையூரிலே இவர் தொடங்கிய மடம் தொடர்ந்து இவரது பெயரைக் கொண்டே இவரது மரபைப் பின்பற்றும் சீடர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். அதனால்தான் ஆசீவகத்தின் சார்புடையோராகப் பூரணரை நீலகேசி தேர்வு செய்கின்றார். பூரணர், அவருக்குப்பின் இளம்பூரணர் என்பதாக இம்மரபு தொடர்ந்திருக்க வேண்டும். 

“குக்குட மாநகர் நின்ரு கொடிமினிற்
றக்கதிற் றான் போய்ச் சமதண்டம் புக்காள்”

என நீலகேசி பூரணரை உறையூர் மடத்திற்குரியவராகக் காட்டுகிறார். 

புகளூர்க் கல்வெட்டிலுள்ள செங்காயபன், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையிலுள்ள மூதாஅமணன் செங்காயபன், மாறுகால் தலைக் கல்வெட்டிலுள்ள “வெண் காசியபன் கொடுப்பித்த கல்கஞ்சணம்” என்பனவான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பூரணரைத் தமிழகத்தார் எனக்கொள்ளுவார் க. நெடுஞ்செழியன்.

ஊழ் கொள்கை

ஏதும் மனித முயற்சியால் நிகழ்வதல்ல. எல்லாம் முன்னமே முடிவு செய்யப்பட்டன. அதன் வழிப்பட்டே அந்நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதனை நியதி ஊழ் முறை என்னும் பெயரால் வழங்கினர். இல்லது தோன்றா, உள்ளன மறையா என்பதன்வழி எவ்வளவுதான் முயற்சித்தாலும் இல்லாததொன்றினை உருவாக்கலும் உள்ளதை முற்றிலும் அழித்தலும் இயலாது. ஒரு உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு நூல்கண்டு ஒன்றினை நீளவிட்டால் அது எவ்வளவு நீளம் உள்ளதோ அவ்வளவு நீளம் நீளமுடியும். அதுபோல் ஊழின் போக்கு எப்படியுள்ளதோ அவைபோலவே மனிதச் செயல்களும் அமையும். அனைத்து மனிதர்களும் பாகுபாடற்ற நிலையில் ஊழினுக்கும், தற்செயலுக்கும், தமக்கேயுரிய இயல்பிற்கும் கட்டுப்பட்டவர்கள். உயிர்கள் மண்டல நெறியில் எண்பத்து நான்கு இலட்சம் மகாகல்ப ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் பிறந்து இன்பதுன்பங்களில் உழன்று அதன்பிறகே வீடுபேற்றினை அடைய முடியும். சிலப்பதிகாரம் ஊழின் வழிச் செல்லும் மனித வாழ்வை விளக்குவதில் சிறப்புப் பெறுகின்றது. கர்மாக் கோட்பாட்டினை ஆசீவகர்கள் ஏற்கவில்லை. ஆதலால் இவர்களைக் ‘காரணம் வேண்டக் கடவுட் குழாம்’ என அழைத்தனர். பழந்தமிழ் மக்களின் எண்ணங்களில் தோன்றிய கருத்தே ஊழ்க் கருத்தும் கருமக் (வினை) கருத்துமாகும். இது ஆரியரின் வருக்கைக்கு முன்பே இம்மண்ணில் தோன்றி நிலவி பரவியதெனலாம். ஏனினில், தொடக்ககால ஆரியரின் மறைகளில் ஊழ் குறித்தோ வினை குறித்தோவான கருத்தியல்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்,

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே”

என்ற நூற்பாவில் பாலதாணையின் வழி தலைவனும் தலைவியும் சந்தித்ததாகக் கூறியுள்ளமை ஊழின் செல்வாக்கினை உணர்த்துகிறது. அதுபோலவே தொல்காப்பியக் களவியலில் தோழி கூற்று இடம் பெறும் ‘தலைவரு விழும’ என்ற நூற்பாவில் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்துத் துயருறும் தாயின் நிலையினை மாற்ற தோழி, உழுவலன்பின் பொருட்டே தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றதாகக் கூறுவார். உழுவலன்பென்பது ஊழின்வழி ஏற்பட்ட அன்பினாலாகும். ஆசீவகம் தொடர்பான செய்திகளைக் கூறும் சங்கப்பாடல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியர் முதலான நூல்களிலும் மனிதமுயற்சியின் முதன்மை குறித்து ஆசீவகரின் சிந்தனை என்பது ஏதுமற்ற நிலையினையுடையமையினைக் குறிப்பதாகவே உள்ளது. ஆனால், ‘மனிதர்கள் முயலாமல் சோம்பி இருத்தல் வேண்டும்’ என்ற கருத்தினையும் ஆசீவகம் ஏற்கவில்லை. முயற்சியும் முயற்சியின்மையும் ஊழின்வழி ஏற்படுவனவே. அதன்வழி, ‘முயலுவோர் முயலுவர் முயலாதார் முயலாதுவிடுவர்’ என்பதாக அமையும். இவற்றில் கவனிக்க வேண்டியது யாதெனில் ஆசீவகக் கோட்பாடுகள் மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது; ஏற்றத்தாழ்வுகளை ஆசீவக மெய்யியல் ஏற்றதில்லை; பிற அவைதீக சமயங்களிற் பல ஏற்றுள்ளன என்பதாகும். 

இயல்புக் (சுபாவம்) கோட்பாடு

தனிமனிதர் ஒவ்வொருவரும் ஒரு சுபாவத்தினைப் பெற்றுள்ளனர். அவ்வியல்பே அவர்களின் பண்புகளை அமைக்கின்றன. அப்பண்புகளின் அடிப்படையிலேயே அவரது நிகழ்வுகள் அமைகின்றன. குதிரையின் இயல்பு விரைந்து ஓடுவது. அதற்காக அது எப்பொழுதும் ஓடிக்கொண்டிருப்பதில்லை. தேவை ஏற்படும்பொழுது அதன் இயல்பு வெளிப்படும். தேவை ஏற்பட்டாலும் எருமையினால் குதிரையளவு விரைவாக ஓடுதல் இயலாது. ஏனெனில், அதனது இயல்பு அதுவல்ல. அதனதியல்பு பொறுமையும் குளத்தில் களித்தலுமாம். பொருட்கள் தங்கள் இயல்பினை வெளிப்படுத்தக் கூடியன. அவ்வியல்புகள் செயற்பாடுகளால் வெளிப்படுவன. முள் கூர்மையுடையது என்னும் அதனதியல்பு குத்தும் செயலால் வெளிப்படக் கூடியது. அதுபோலவே குதிரையும்-விரைவும் அமையும். அதனை உணராமல் நீலகேசி,

“ஓட்டும் குதிரையும் ஒன்றே எனின் குதிரை
ஊட்டும் பொழுதொடு தான் புல் உண்ணும் போழ்தின் கால்
நாட்டிய வீதி அதிசயத்தை நீ எமக்குக்
காட்டி உரைப்பின் நின் காட்சியைக் கோடும்
கடவுள் குழாத்தார்-தம் காழ்ப்பு எலாம் கோடும்”
(நீலகேசி. 699)

எனக்கூறுதலின் வழி விரைவின் அடையாளமாகக் குதிரை காட்டப்பட்டதன் மூலம் புல்லுண்ணும் போதும் கொட்டடியிற் கட்டப்பட்ட போதும் அதனது வேகம் எங்கே எனக் கேட்பது பொருந்தாததாகின்றது. தேவையேற்படின் குதிரையிடம் விரைவு உண்டாகும். அழுதல் ஒருவனின் இயல்பானால் தேவைப்படும் பொழுது அழுவான். அதற்காக எப்பொழுதும் அழுதுகொண்டிருக்கமாட்டான். கோவலனின் இயல்பு காப்பியத்தை எவ்வகையில் நடத்தியது என்பதினைச் சிலப்பதிகாரத்திற் காணலாம். இயல்பைத்தாண்டி மனித முயற்சிகள் செயல்படுவனவாகா. இயல்பு, ஊழின் வழி இணைத்து செல்லக் கூடியதாகும். இதனை நாம் சிலப்பதிகாரத்தால் அறியலாம். 

தற்செயல்

தற்செயல் நிகழ்வுகள் ஆசீவகத்தில் முதன்மை பெறுவனவாகின்றன. தேவை என்பது தற்செயலுக்கான எதிர்மறைப் பண்பாகும். தேவையைச் தற்செயல் நிறைவு செய்கின்றது எனக் கருதவும் இடமுண்டு. சிலம்பை நல்விலைக்கு விற்றல் வேண்டும் என்ற பொருளீட்டற் தேவை கோவலனைத் தற்செலயாகச் சந்தித்த பொற்கொல்லனிடம் பேசச் செய்தது. தேவையற்ற நிலையிலும் தற்செயல் நிகழும். மாதவியின் மாலையை வாங்க வேண்டும் என்னும் தேவை கோவலனுக்கு இல்லை. ஆயினும் வேண்டினார். ஏனெனில், எதனையும் ‘பட்டெனச்’ செய்யும் அவனது இயல்பு தற்செயல் நிகழ்வால் அவனைத்தூண்டி மாலையை வாங்கச் செய்தது. தற்செயல் என்பது தேவை, தேவையற்ற என்ற இரண்டு நிலைகளிலும் வினையாற்றக் கூடியது. ஆனால், ஒருமாற்றத்தினை நோக்கி நகர்த்தக் கூடியது. 

ஆசீவகத்தின் அணுக் கொள்கை

இந்திய மெய்யியல் மரபில் அணுவைக் குறித்து முதன்முதலில் மிகுதியும் கவனமெடுத்த மரபாக விளங்குவது ஆசீவகமேயாகும். ஆசீவகத்தின் அளவிற்கு மற்ற மரபுகள் அணுவினைக் கருதவில்லை எனலாம். இனி ஆசீவகம் கூறும் அணுவியற் சிந்தனைகளைக் காணலாம். 

  1. அணுக்கள் தேவையின் பொருட்டு ஒன்றுடனொன்று இணைந்து செயற்பட்டு பிறகு தனித்தனியாகப் பிரியும் தன்மையுடையன.
  2. அணுக்கள் ஒன்றினிலொன்று இணையும். ஆனால் ஒன்றினில் ஒன்று உட்புகாது. ஒரு அணுவானது மற்றொரு அணுவாக மாறுதலடையாது. ஓரணு இரண்டாகப் பிரிவதுமில்லை.
  3. அணுக்கள் தனது நிலையிலிருந்து மாறாமல் பிற அணுக்களுடன் சேர்க்கையுற்றுப் பொருட்களை உருவாக்குகின்றன. 
  4. அணுக்கள் சேர்க்கையுறும் பொழுது குறிப்பிட்ட விழுக்காட்டு முறையின் அடிப்படையிற் சேர்க்கை உருவாகின்றது. அவை 1, 3/4, 3/2, 1/4 என்பனவான விழுக்காட்டில் சேர்க்கை உறுவதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. சில நூல்கள் 4: 3: 2: 1 என்ற அளவைக் குறிக்கின்றன. இரண்டும் விழுக்காட்டினடிப்படையால் ஒரே அளவைகள்தான்.
  5.  நான்கு வகையான முதன்மை அணுக்களாக நிலம், நீர், தீ, காற்று என்பனவற்றை மணிமேகலையும் மற்ற நூல்களும் குறிப்பிடுகின்றன. அவற்றுடன் உயிர், இன்பம், துன்பம் என்பனவுமாக அணுக்கள் ஏழு என மணிமேகலை குறிப்பிடுகின்றது. 
  6. எந்த அணு அதிக விழுக்காட்டிலுள்ளதோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும். சான்றாக நில அணு 1, நீர் அணு 3/4, தீ அணு 1/2 , காற்றணு 1/4 எனக் கொண்டால் நில அணுவின் தன்மையே மேலோங்கி நிற்கும். 
  7. அணுக்களின் குணமும் இயல்பும் முறையே பால், சீர் என வழங்கப்பெறும். 

நில அணுவின் பால் திண்மையும், சீர் பணிந்தமையும் ஆகும்.
நீர் அணுவின் பால் தணுப்பும் சுவையும், சீர் கீழ்நோக்கியதாகும்.
தீ அணுவின் பால் எரித்தலும், சீர் மேல்நோக்கியதாகும்.
காற்றணுவின் பால் அணுதலும் வீசுதலும், சீர் விலங்கு சீராகும்.

  1. இன்பமும் துன்பமும் சேர்த்து அணுக்கள் ஏழு என்னும் மரபினை உருவாக்கியவர் பக்குடுக்கை நன்கணியாரேயாவார்.

என்றவாறாக ஆசீவகத்தின் அணுக்கள் குறித்த சிந்தனைகளைப் பிற சமய நூல்களின் வழி அறிய முடிகின்றது.

அவிசலித நித்தியத்துவம் (நிலைப்பேறு)

உலகில் பொருட்கள் தோன்றுவதுமில்லை அழிவதுமில்லை; உள்ளது கெடா இல்லாதன தோன்றா என்னும் கொள்கையினையுடையது ஆசீவகம். அழிவற்றிருப்பதே பொருட்களின் இயல்பாகும். பொருட்கள் எங்கும் நிறைந்ததாகவே காணப்படக் கூடியது. காரியங்களுக்கான காரணங்கள் தேவையில்லையாம். இதனை, 

“இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய்
சொல்லாயே நெய் சுடராய்ச் சுட்டிடும் ஆறு என்றேனுக்கு
அல்லாந்து அயிர்த்து ஓடி ஆழ் மிதப்புச் சொல்லுதியால்
எல்லாம் ஒன்று ஒன்றிற்கு இடங்கொடா அன்றே
இழிவு உயர்ச்சிக் காரணமும் இல்லாதாய் அன்றே” (நீலகேசி.698)

என்றமையால் அறியலாம். பொருள்கள் யாவும் மிதத்தலும் மூழ்கலும் என்னும் தன்மையினையுடையன. ஆசீவகர்களின் அவிசலித நித்தியத்துவம், காலம் என்னும் ஒரு பொருள் இல்லை என்பனவாக பொருள்களின் நிலைப்பேறு குறித்துக் கூறுதலினைக் காணலாம். 

சதுவா நியதங்கள் (நாற் கொள்கைகள்)

ஆசீவகர்களின் ஊழ்க் கொள்கையின் செயற்பாட்டு முறையினை விளக்கக் கூடியனவாக சதுவா நியதங்கள் என்னும் இந்நூற் கோட்பாடு அமைந்துள்ளது. 

  1. ஊழின் வழி ஒரு நிகழ்வு நிகழ வேண்டுமென்றிருந்தால் எப்படியும் நிகழும். அதனை யாராலும் தடுத்தலியலாது. 
  2. எப்படி நிகழ வேண்டும் என எழுத்து முறை செய்யப்பட்டதோ அப்படியே நிகழும். 
  3. எந்த அளவு நிகழவேண்டுமோ அதே அளவே நிகழும். 
  4. எவ்வளவு கால அளவிற்குள் நிகழவேண்டுமோ அதே கால வரைவினுக்குள் நிகழும். 

இதனை,

1. ஆவதாம் (ஆவது ஆகும்)

பிறந்த பெண்குழவி அரிவைப் பருவத்தினை அடையும்.

2. ஆந்துணையாம் (ஆகும் அளவு ஆகும்)

அப்பெண்குழவி வளர்க்கக் கூடிய முறையில் நன்கு பேணி வளர்க்கப்பட்டால், அரிவைப் பருவத்தினை அடையும். 

3. ஆம் காலத் தாம் (ஆகும் பொழுது ஆகும்)

ஒவ்வொரு பொருளும் இத்துணை அளவே வளர்ச்சியடையும் என்பது நியதி. அவ்வகையில் அரிவைப் பருவத்திற்குரிய வளர்ச்சியை அக்குழவி அடையும். 

4. ஆம் காலத் தாம் (ஆகும் பொழுது ஆகும்)

ஒரு நிகழ்வானது நிகழும் காலத்தில் மாத்திரமே நிகழும் என்பது இக்கோட்பாடாகும். பன்னிரண்டு வயதில் ஒரு பெண்மகவு அரிவைப் பருவத்தை அடையும் எனின் அப்பன்னிரண்டு வயதிலேயே அரிவைப் பருவத்தினை அடையும். 

என கால அளவுகளாக நோக்கலாம்.

இவ்வாறான எண்ணப் போக்குகள் யாவும் தமிழர் மரபினுக்கே உரியதாகும். இதனை இலக்கிய, இலக்கண வழக்கிலும் நாட்டார் வழக்கிலும் இன்றுவரை காணலாம். ‘ஆண்டு மீறிப் பிள்ளை வரம் கேட்கப்போன கதை’ என்பனவானவை, இக்கோட்பாடுகள் தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தமையினைக் காட்டுவனவாக அமைகின்றன. 

வீடுபேறு

‘உலகில் உள்ள உயிர்களின் எண்ணிக்கை கூடுதலும் இல்லை; குறைதலும் இல்லை’ என்னும் கொள்கையினை உடையோர் ஆசீவகர். அவர்கள் வீடுபேற்றினை இருநிலைகளில் கொண்டுள்ளனர்; மண்டல நெறி என்பதுவும் செம்போக்கு நெறி என்பதுவுமே அவை. மண்டல நெறியில் வண்ணக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு உயிர் 84 இலட்சம் மகாகல்ப ஆண்டுகள் மீண்டும் மீண்டும் பிறந்து துன்ப-இன்ப நிலைகளை மாறிமாறி அடைந்து 84 இலட்சம் மகாகல்ப ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், இயல்பாகவே வீடுபேற்றினை அடைந்துவிடும். செம்போக்கு நெறியில் கழிவெண்பிறப்பில் வீடு பேறடையும் உயிரானது மீண்டும் பிறக்காது. ஆனால் மண்டலநெறியில் வீடுபேறடையும் உயிர், உலகில் உயிர்களின் சமநிலையினைப் பேணுதற் பொருட்டு மீண்டும் பிறத்தலுக்கு வாய்ப்பு உண்டு. சமணர்கள், பெண்களுக்கு வீடுபேறில்லை என்பர். ஆனால் ஆசீவகர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வீடுபேற்றில் வேறுபாடில்லை என்பர். 

தாழியிற் கவிழ்த்தல்

Image 1

தாழியிற் கவிழ்த்தல் என்பது இறந்தோரைத் தாழியில் அமர்ந்த நிலையில் வைத்துப் புதைத்தலாகும். மணிமேகலை எரித்தல், புதைத்தல் ஆகிய வழமைகளோடு தாழியிற் கவிழ்த்தலையும் குறிப்பிடுகின்றது. தமிழர் மரபில் துறவிகளை இக்காலத்திலும் எரித்தல் வழமையில்லை. அவர்களைப் புதைப்பதனையே மரபாகக் கொண்டிருக்கின்றனர். இன்றும் கொங்குப் பகுதியில் புதைத்தலைக் ‘குகைவைத்தல்’ என்று குறிப்பிடுகின்றனர். இக்குகை வைத்தல் என்பது வளைவான ஒரு பொருளினுக்குள் குகை போன்ற ஒன்றினுக்குள் வைத்துப் புதைத்தலைக் குறிப்பதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் தாழியிற் கவிழ்த்தல் என்பது நடைமுறையில் இருந்துள்ளதெனலாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தபோது அவனுக்கான தாழியைச் செய்யும் குயவனை நோக்கிப் பாடுவதாக, ‘கலஞ்செய்கோவே கலஞ்செய் கோவே’ (புறம்.228) எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ளதைக் காணலாம். ‘வெளிமான்’ என்ற மன்னன் மாண்டபோது பெருஞ்சித்திரனார் பாடிய ‘கவிசெந் தாழிக்குவிபுறத் திருந்த’ (புறம்.238) எனத் தொடங்கும் பாடலும் பண்டைத்தமிழரின் தாழியிற் கவிழ்க்கும் மரபினை விளக்குவதாக உள்ளதைக் காணலாம். இன்றும் கொடுமணல், ஆதிச்சநல்லூர் முதலான பண்டைய தொல்லியற்தளங்களில் பெரும்பாலும் கிடைக்கக் கூடியவைகளாகத் தாழிகளே உள்ளன. இத்தாழிகளில் மனித எச்சங்களே கிடைக்கின்றன. இத்தொல்பழங்கால இடுகாடுகள் யாவும் பயனற்ற இடங்களில் தேர்வு செய்யப்பட்டமையால் இன்றும் நமக்குக் காணக்கூடியதாக உள்ளன. இல்லையென்றால் அழிந்து போயிருக்கும். மணிமேகலை கூறுதலின்வழி இறந்தோரை இடுதலும் எரித்தலும் தாழியில் கவிழ்த்தலும் ஒரே இடத்தில் அமைந்தமையினை அறியலாம். பௌத்தமும் சமணமும் பெரிதும் இறந்தோரை எரித்தலையே வழமையாகக் கொண்டிருக்க ஆசீவகம் இறந்தோரைத் தாழியிற் புதைத்தலை வழமையாகக் கொண்டுள்ளமையினைக் காணலாம். ஆசீவகத்துறவிகள் தாழியிலே இருந்து தவமியற்றி தாழியிலேயே மடித்தனரெனலாம். பிறகு அத்தாழியோடே அவர்களைப் புதைத்திருப்பார்கள். 

Image 2

“தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை – யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டனெ னின்மாட்டோர் கல்”

என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்திணையியல் 60 ஆம் நூற்பாவின் உரையில், காட்சி என்னும் துறைக்குக் காட்டிய மேற்கோளின்வழி இதனை அறியலாம். இவ்வாறே வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ்சோழன் முதலானோரும் தாழியிற் கவிழ்க்கப்பட்டிருப்பர். இலங்கையில் ஆசீவகர்கள் தாழியிற் கவிழ்க்கும் வழமையினையே கொண்டிருந்தனர். பௌத்தப் பரவலுக்குப் பின்னரும் ஐயனார் வழிபாட்டில் இன்றளவும் தாழியில் விளக்கேற்றி மறைவாக வழிபடும் வழிபாட்டினை பண்டைய வழமையின் எச்சமாகவே கருதலாம். 

அபிசாதிக்கொள்கை (நிறக்கோட்பாடு)

ஆசீவகர்கள் பிறப்பின் அடிப்படையிலானதொரு நிறக் கோட்பாட்டினைக் கொண்டிருந்தனர். அதனை அபிசாதிக் கொள்கை எனவும் அழைத்தனர். கரும் பிறப்பு, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண்பிறப்பு என்னும் அறுவகைப் பிறப்பினையும் மனிதர்கள் அடைவார்கள் என்றும் கழிவெண் பிறப்பு என்னும் பிறப்பில் பிறந்தோர் வீடுபேற்றினை அடைவார்கள் என்றும் மணிமேகலை கூறுகின்றது. இந்நிறக் கோட்பாட்டினை உருவாக்கியவர் பூரணர் என்றும் கூறுவர். இவ்வண்ணப்படிநிலையில் உயிர்களின் வகைப்பாட்டினைப் இனிவரும் பகுதிகளில் காணலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்