இடப்பெயர்களும் - கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாடும்
Arts
12 நிமிட வாசிப்பு

இடப்பெயர்களும் – கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாடும்

January 21, 2025 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

பெயராய்வின் (Onomastics) பிரதானமானதொரு கிளையாக இடப்பெயராய்வு (Toponymy) காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கிடையேயான வரலாறு, பண்பாடு மற்றும் மொழியியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நுணுக்கமான ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரமான சகவாழ்வு, வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரை கிழக்கிலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரிய அசைவுகளின் இன்னுமொரு பக்கமாகும்.

வரலாற்றுப் பின்னணி

இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மூலங்களுடன் இலங்கை வரலாற்றில் இணைகின்றனர். இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சமூகங்களின் வழித்தோன்றல்களாகவும், மத்தியகிழக்கு, இந்தியத் துணைக்கண்டம், பாரசீகம், தூரகிழக்காசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று பல்வகைப்பட்ட வர்த்தக, வெகுமக்கள் சமூகத்தின் பின்னணிகளைக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் பொதுவாக வணிக சமூகமாக அறியப்பட்டாலும். இலங்கையின் கிழக்குப் பகுதியில் அவர்களில் கணிசமான அளவினர் விவசாயத்தையும், மீன்பிடி, நெசவு போன்ற தொழிற்துறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வியல்பு இலங்கையின் பிற பகுதிகளை விட இலங்கை முஸ்லிம்கள் செறிந்து வாழும் கீழைக்கரையில் அதிகமாகக் காணப்படுகின்றது. அதனால் தமிழ் பேசும் சமூகங்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு தனித்துவமான கலாசார அடையாளத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழ் பேசுகிறார்கள், சமயமொழியாக அரபு, உருது போன்றவை பயிலப்பட்டாலும், வீட்டு மொழியாகவும் கல்வி மொழியாகவும் தமிழைப் பயன்படுத்துகின்றனர். இது இந்நிலப்பரப்பில் முஸ்லிம்களை மேலும் நெருக்கமாக ஒருங்கிணைக்கிறது. இத்தொடர்பு, இரு சமூகங்களும் இணைந்து வாழும் பகுதிகளிலுள்ள இடப்பெயர்களிலும் முக்கியமாகப் பிரதிபலிக்கிறது.

இடப்பெயர்கள் (Place Names)

ஒரு பிரதேசத்தின் மிகப்பழமையான சொற்களின் பட்டியலிலும், அப்பகுதியில் அதிகம் புழங்கப்பட்ட சொற்களின் பட்டியலிலும் அவ்வூரின் பெயர் முதன்மையாக இடம்பெறும். இவ்வூர்ப்பெயரகள், இடப்பெயர்கள் என்பன பெருமக்கள் திரளின் அங்கீகாரத்தைப் பெற்றவையாகக் காணப்படுகின்றன. பலரும் அவற்றின் பூர்வீகம் தெரியாமலேயே பயன்படுத்திவருகின்றனர். பெரும்பாலான இடப்பெயர்கள் இயல்பாக தோற்றியுள்ளன. மேலும் மரபாக பேணப்பட்டுவரும் ஒரு பாரம்பரியச் சொத்தாகவும் இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இடப்பெயர்களை Time Capsule of local history என்றும் Fossil remains past என்றும் நாச்சிமுத்து குறிப்பிடுகின்றார். இடப்பெயர்கள் பழமையான சொற்களையும் கைவிடப்பட்ட மொழியியல் நடைமுறைகளையும் பேணிவைத்திருக்கின்றன என்று de Lanerolle குறிப்பிடுகின்றார் (de Lanerolle, J. D. 1930). “names of places are conservative of the archaic forms of a living language” (Kulasuriya, A. S. 1995).

“தொல்பொருளாய்வில் காணப்படாததும் வரலாற்றுச் சான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியற் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன” என அறிஞர் F.T .Waniwright குறிப்பிடுகிறார். இந்திய அறிஞரான எஸ்.வி. இராமசுவாமி ஐயர், “வரலாறு மௌனமாகும் போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்” (Where history is silent, place names might speak) என்று கூறுகின்றார். இக் கூற்றுகள் இடப்பெயராய்வின் பயன்பாட்டு முக்கியத்துவத்தை எளிதாக விளக்குகின்றன.

இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள இடப்பெயர்களின் அமைப்பு பொதுவாக தரைத்தோற்ற விளக்கத்தை பின்னொட்டாகவும், இடத்தின் சிறப்புக்கூறினை முன்னொட்டாகவும் கொண்டு காணப்படுகின்றது. இடப்பெயர்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் தரைத்தோற்ற விளக்கங்களுடான விபரிப்பாகவே பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கட்டுரை இடப்பெயர்களின் பண்பாட்டு ஒத்திசைவை அணுக முயல்கின்றது

இலங்கையின் கீழைக்கரையைப் பொறுத்தவரை தரைத்தோற்ற அமைப்பும் இனங்களின் பரவலும் கொத்தணி கொத்தணிகளாக காணப்படுகின்றன. ஒரு முஸ்லிம் கிராமத்தைச் சூழ தமிழ்க் கிராமங்களும், ஒரு தமிழ்க் கிராமத்தை அண்டி முஸ்லிம் கிராமங்களுமான ஒரு சங்கிலித் தொடர்பாகக் காணப்படுகின்றன. இத்தொடர்பு பண்பாட்டுக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மிக ஏதுவாக அமைந்துள்ளதோடு, சமூக பண்பாட்டுக் கூறுகளின் தனித்துவங்களை கரைந்துவிடாது பேணிக்கொள்வதிலும் பங்குவகித்துள்ளது.

இடப்பெயர்களின் வகைகள்:

  1. மக்கள் குடியிருப்புகள், ஊர்கள், நகரங்கள், கிராமங்களின் பெயர்கள்.
  2. வீதிகள், தெருக்கள், ஒழுங்கைகளின் பெயர்கள்.
  3. சந்திகள், மக்கள் கூடுமிடங்களின் பெயர்கள்.
  4. ஆறுகள், வாய்கால்களின் பெயர்கள், அவற்றிலுள்ள இறக்கங்களின் பெயர்கள்.
  5. குளங்கள், நீர்த்தேக்கங்களின் பெயர்கள்.
  6. மலைகள், குன்றுகளின் பெயர்கள்.
  7. வயல்கள், புல்வெளிகள், கண்டங்கள், தோட்டங்களின் பெயர்கள்.
  8. வீடுகள், வளவுகள், காணிகளின் பெயர்கள்.

கிழக்கிலங்கை இடப்பெயர்களின் இயல்புகளாக பின்வருவனவற்றை அவதானிக்கலாம்:

1. கீழைக்கரையின் பெரும்பாலான பிரதேசங்களின் இடப்பெயர்கள் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. கர்ணபரம்பரைக் கதைகளே பல இடப்பெயர் மூலங்களுக்கான ஆதாரங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக மட்டக்களப்பு என்ற பெயரின் பெயர்க்காரணியாக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன ‘மட்டமான’ களப்பாக காணப்படுகின்றமையும், ‘மட்டு’ என்ற தேனைக் குறிக்கும் பதத்தை மூலமாக கொண்டு தேன் விற்பனை நடைபெற்ற இடம் என்பதாகவும், மட்டைகள் ஊறவைக்கப் பயன்படும் ஆழம் குறைந்த களப்பு ‘மட்டைக்களப்பு’ என்றும், களப்பின் எல்லையாக ‘மட்டு’ காணப்படும் இடத்திற்கு ‘மட்டுக்களப்பு’ என்றும் குறிப்பிடுவதாக தமிழ்க் கர்ணபரம்பரைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சிங்கள மூலங்கள் சில ‘மட’ என்ற சேற்றைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு சேற்றுக்களப்பு என்ற அர்த்தத்தில், பெயர்க் காரணத்தின் மூலத்தைக் குறிப்பிடுகின்றன.

2. கிழக்கிலங்கை இடப்பெயர்களில் பெரும்பாலானவை தமிழ்மொழியில் உள்ளன. சில இடப்பெயர்களிற்கு சிங்கள மூலங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இலங்கையின் இடப்பெயர்களில் பல, மும்மொழிகளிலும் வெவ்வேறு வடிவங்களிலும் உச்சரிக்கப்படும் மரபும் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழில் மட்டக்களப்பு என்றும், சிங்களத்தில் மடகளப்புவ என்றும், ஆங்கிலத்தில் பெட்டிக்கலோ என்றும் அழைக்கப்படுகின்றது. அவ்வாறே ஆவணங்களிலும் பயன்படுகின்றது.

3. பிற பிரதேசங்களைப் போன்று இங்கும் இருமொழி இணைந்த பெயர்களும் காணப்படுகின்றன. உதாரணமாக ஒலுவில் – ஒலு – தாமரை (சிங்களம்), வில் – குளம் (தமிழ்) 

4. சில பெயர்களின் பெயர்க்காரணம், மொழி என்பவை பூரணமாக அறியப்படாதவையாகக் காணப்படுகின்றன. ஆனாலும் அப்பெயர்கள் காலாகாலமாக அவ்வாறே பயன்படுகின்றன.

முஸ்லிம் இடப்பெயர்களில் தமிழ் மொழியின் தாக்கம்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களின் இடப்பெயர்களின் இயல்புகளாக பின்வருவற்றை அவதானிக்கலாம்:

1. தமிழ் இடப்பெயர்களின் பொதுவான இடப்பெயர் பாரம்பரியத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றமை.

தமிழ், சிங்கள மொழிகளில் அமைந்த இடப்பெயர்களில் பொதுவாக பெயரின் பின்னொட்டாக (Postfix) பிரதேசத்தின் புவியியல்சார் விளக்கம் போன்ற பொதுக் கூறுகள் இடம்பெறுகின்றன, பின்னொட்டாக குறித்த பிரதேசத்தின் சிறப்பியல்பு (Specifics) அல்லது அதனோடிணைந்த காரணங்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆறு, ஊர், கல், களப்பு, காடு, காமம், கிரி, குடா, குளம், திடல், தீவு, துறை, தோட்டம், பிட்டி, வட்டை, வத்தை, வெளி, வில், முனை, மூலை, ஆலை, கட்டு, கடவை, குடியிருப்பு, குறிச்சி, கோட்டை, கோவில், சேரி, நகர், நாடு, பள்ளி, வாய்க்கால் போன்ற பின்னொட்டுகளை குறிப்பிடலாம்

எடுத்துக்காட்டாக – கல்முனைக்குடி, மருதமுனை, சம்மாந்துறை, கற்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பெயர்களில் சிறப்புக்கூறு முன்னொட்டாகவும் தரைத்தோற்ற விளக்கம் பின்னொட்டாகவும் காணப்படுகின்றன.

2. மொழியியல் ஒருங்கிணைப்பு (Linguistic Integration).

கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் தமிழ்ப் பிரயோகத்தின் அடிப்படையில், பெரும்பாலான இலங்கை முஸ்லிம் இடப்பெயர்கள் தமிழில் வழங்கப்படுகின்றன. இது இஸ்லாமிய பண்பாட்டு அடையாளங்களை தமிழ் மொழியியல் வடிவங்களுடன் தடைகளின்றி கலக்க வழிவகுத்துள்ளது.

எடுத்துக்காட்டாக – மாவடிப்பள்ளி, பள்ளிக்குடியிருப்பு, தைக்காநகர், மீராநகர், பக்கீர்சேனை, ஆலிம்சேனை, மேட்டுத்தைக்கா போன்ற பெயர்களில் இஸ்லாமிய பண்பாட்டம்சங்கள் தமிழ்ச் சொற்களுடன் இணைத்துப் பயிலப்படுகின்றன.

3. ஆட்பெயர்கள் இடப்பெயர்களாதல்.

இஸ்லாமிய மார்க்க உபன்யாசிகள், மற்றும் பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் பல முஸ்லிம் குடியிருப்புகளின் ஆரம்பகாலத் தோற்றத்தோடு தொடர்புபட்டிருக்கின்றன. அவ்வாறான பெரியார்களின் பெயர்கள் கண்ணியத்தின் நிமித்தம் இவர்கள் வாழ்ந்த இடங்களையொட்டி அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் அவர்களின் ஆட்பெயர்களாக கணிக்கடும் அளவிற்கு பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் அவ்விடங்கள் அப்பெயர்களைக் கொண்டே அழைக்கப்படலாயிற்று.

எடுத்துக்காட்டாக – வீரையடியப்பா, குருந்தையடியப்பா, மலுக்கான்பிட்டி, இப்றாஹிம்பிட்டி.

4. பாரம்பரிய இடங்களின் பெயர்களின் மரபு பேணப்படுகின்றமை.

பல பொதுவான இடங்களின் பெயர்கள் இயற்கை சார்ந்ததாகவும், தூய தமிழ்ப்பெயர்களாகவும் காணப்படுகின்றன. இவை காலவோட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மாற்றங்களின் போதும் மாற்றமுறாமல் அவ்வாறே பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக – மஞ்சந்தொடுவாய், சாளம்பைக்கேணி, விளினையடி, மட்டக்களப்புத்தரவை, பயினன்ட ஆறு, பள்ளாறு, சாவாறு, களியோடை, அரசடி, ஆலையடி, சாய்ந்தமருது, மருதமுனை, அல்லிமுலைச்சந்தி, கைகாட்டி, கருவாட்டுக்கல், கல்லரிச்சல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

5. புதிய பெயர்களில் இஸ்லாமிய பண்பாட்டு அடையாளங்கள் காணப்படுதல்.

ஹிஜ்றாபுரம், ஹிஜ்றாநகர், ஆலம்நகர், இஸ்மாயில்புரம், மஜீட்புரம், அமீரலிபுரம், இஸ்லாமாபாத் போன்ற பெயர்களில் முஸ்லிம் ஆட்பெயர்களும், பண்பாட்டுச் சொற்களும் இடம்பெற்றுள்ளன.

கிழக்கிலங்கை இடப்பெயர்களில் முஸ்லிம் பாரம்பரியத் தாக்கங்கள்

கிழக்கிலங்கை வரலாற்றுக் கரண்பரம்பரைக் கதைகளின்படி நிலவும் பிரபலமான தொன்மங்களிலொன்றாக முக்குவர்கள் திமிலர்களை வென்றகதை கூறப்படுகின்றது.

“கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்குவர்கள் கி. பி. 5 ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்தில் இருந்து சாதிப் பிரச்சினை காரணமாகத் துரத்தப்பட்டனர் என்பர். அவர்கள் மட்டக்களப்பு பகுதியில் புகலிடம்தேட முற்பட்டபோது, அங்கு ஆரம்ப காலத்தில் வாழ்ந்த வேடுவரும் தமிழரும் முக்குவர்களின் வருகையை எதிர்த்தனர். அச்சந்தர்ப்பத்தில் முக்குவர்கள் புத்தளத்தில் நிகழ்ந்ததுபோல, வங்கக் கடலில் இருந்து ஓர் அபாயத்தில் நின்று தப்பி கரைகண்ட அறாபிய முஸ்லிம்களிடம் உதவி பெற்றனர். அதற்கு கைம்மாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்குமாறு கேட்டனர். அறாபியர் முக்குவப் பெண்களை மணந்து தமது இரத்த உறவைப் பலப்படுத்தினர். இதன் மூலமும் முஸ்லிம்கள் கிழக்கில் பரவலாயினர்.” (றமீஸ் அ. 1997:239)

இக்கதையில் முக்குவர்கள் பட்டாணியர்களின் உதவி பெற்று திமிலர்களை வென்றதாகக் கூறப்படுகின்றது. இக்கதை பல இடப்பெயர்களின் தோற்றத்திற்கு காரணமாகக் கூறப்படுகின்றது.

  1. சத்துருக்கொண்டான் – பட்டாணியர்கள் திமிலர்களின் தலைவனை கொன்ற இடம்.
  2. ஏறாவூர் – எதிரிப்படைகள் ஏறிவர முடியாத வண்ணம் படைகளை குடியமர்த்திய இடம்.
  3. வந்தாறுமூலை – திமிலர்களை வென்றதன் பின்னர் படைகள் ஓய்வெடுத்த இடம்.

இடப்பெயர்களும் முஸ்லிம் தாய்வழிக்குடிகளும்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான பண்பாட்டம்சங்களில் ஒன்றான தாய்வழிக்குடிமரபில் சிலகுடிகள் இடங்களின் பெயர்களைச் சுட்டுவனவாக அமைகின்றன: 

  1. கொஸ்கொடகுடி அல்லது கொசுக்குட்டான்குடி – கொஸ்கொட பிரதேசத்தையும்
  2. மடத்தடிக்குடி – அம்பலத்தடியையும்
  3. ஜாவாக்குடி – ஜாவா (சாவகம்) தேசத்தையும்
  4. மாந்தறாகுடி – மாந்திராவ எனும் பாணக முறையையும்
  5. மலையாளத்து லெவ்வைகுடி – கேரளப்பகுதியையும் 

குறிக்கின்றன.

இடப்பெயர்கள், குலப்பெயர்களில் இடம்பெறுகின்றமை முஸ்லிம்களின் பரந்துபட்ட பிரதேசத் தொடர்புகளை விளக்க உதவுகின்றது.

இடப்பெயர்களும் நாட்டார் இலக்கியமும்

இடப்பெயர்களின் தொன்மையையும் அவற்றின் நெடுங்காலப் பயன்பாட்டினையும் நாட்டார் கவிகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாட்டை நாட்டார் கவிகளைத் தவிர்த்து நோக்கமுடியாது. அது அவர்களின் வாழ்வியலில் சகல கூறுகளிலும் விரவிக்காணப்பட்ட கலையாக இருந்துள்ளது.

அக்கரைப்பற்றிலையோ
அங்கு கரவாகிலையோ
சம்மாந்துறையிலையோ என்ர
துங்கவண்டார் தங்குறது

வில்லுக்கரத்தையில
வெள்ளமாடொண்டு பூட்டி
தட்டி விடுகா மச்சான்
சம்மாந்துறை போய்வருவம்

இற்காமத்தில் வாழும்
இறசூல் அவுலியாவே
கொடி பறக்கும் சீமானே – ஒரு
கொழந்த முகம் தந்திருவாய்

மலுக்கம்புட்டிக்கு
மாடு கொண்டு போற மச்சான்
காரமுள்ளு தச்சிராம
கலந்தரப்பா உன்காவல்

கொண்டவட்டான் புட்டியில
கோடி மாடு கட்டக்கொள
சட்டிபான சொரண்டித்திண்ட
சண்டியனார் வாராருகா

அப்பஞ்சுடும் காத்தாங்குடி
அவலிடிக்கும் காரதீவு
முட்டி இடுக்கும் சம்மாந்துறையார்
முகப்பழக்கம் நிந்தவூரார்

சம்மாந்துறையாரே
சங்க கெட்ட ஊராரே
வெயிலேறித்தண்ண வாக்க – ஒங்கட
வேதமென்ன சிங்களமோ

வந்தாரை வாழவைக்கும்
வாழ்மனையார பொங்க வைக்கும்
சிங்கார மட்டக்களப்பாம்
சம்மாந்துறை

போறாருகா வன்னியனார்
பொத்துவில்லப் பாப்பமுண்டு
மாயமருந்தால கள்ளி
மயக்கிறாளோ நானறியேன்

பட்டியடிப்புட்டி
பால்தயிரு கனத்த இடம்
நெய்யுருக்கி ஊத்துறாக – என்ட
நேசக்கிளி போயிருக்காம்

சம்மாந்துறையிருந்து
சம்மந்தி வந்திருக்கா
பாயெடுத்துப் போடுபுள்ள – நம்மட
பாவனையப் பாத்திரட்டும்

இவ்வாறு பல்வேறு நாட்டார் கவிகளிகளில் இடப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை அக்கால மக்களின் கிளைமொழிகளையும், பாரம்பரிய பண்பாடுகளையும், இடத்தொடர்புகளையும் விளக்குகின்றன. சில இடங்களின் பழைய பெயர்கள் இந் நாட்டுக்கவிகளில் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இவைதவிர பழமொழிகளிகளிலும் இடப்பெயர்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:

‘மக்கம் தப்பினா மருதமுனை’
‘காகமில்லாத ஊருமில்ல காத்தான்குடியார் இல்லாத இடமுமில்ல’
‘சம்மாந்துறையான் ஓடுற மாட்டில இறைச்சி எடுப்பான்’
‘எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே புத்தளம் போனாலும் புத்தியோடு போ’
‘மட்டக்களப்பார் பாயில ஒட்டவைப்பார்’

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவைதவிர காணிகள், வீடுகள் என்பன ஆட்பெயரோடு இணைத்து வழங்கப்படும் பழக்கமும் முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக – வன்னியா வளவு, வாத்தியார் வளவு, சாஹீல்ஹமீத் சதுக்கம், இல்மாலெவ்வை சதுக்கம் போன்றவற்றையும்,

இல்லங்களின் பெயராக – மாஜிதா மன்ஸில், ஹதா மஹால், இஸமாயில் லொட்ஜ் போன்ற மஹால், மன்ஸில் என்ற பின்னொட்டுகளுடைய வீடுகளின் முகவரிப் பெயர்களையும் குறிப்பிடலாம்.

தற்கால இடப்பெயர்களின் பரிணாமமும் இடப்பெயர்களின் பாரம்பரிய காப்பகப்படுத்தலில் உள்ள சவால்களும்

நவீன நிர்வாக மற்றும் அரசியல் மாற்றங்கள் மற்றும் பண்பாட்டுப் படிமலர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், சிந்தனைப்பள்ளிகளின் கொள்கைத்தாக்கங்கள், தூய்மைவாதப்போக்குகள், பிரிவினைவாதம் என்பன சில சந்தர்ப்பங்களில் பரஸ்பரமாகப் பகிரப்பட்டுவரும் பாரம்பரியத்திற்கு அச்சுறுத்தலாகவும் காணப்படுகின்றன. அரசியல் நோக்கங்களுக்காக இடங்களுக்குப் பெயர்மாற்றும் முயற்சிகள், இலங்கை இடப்பெயர்களில் பொதிந்துள்ள பன்முக கலாசார மரபை நீர்த்துப்போகச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

முடிவுரை

இலங்கை முஸ்லிம்களின் இடப்பெயர் கலாசாரம், தமிழ் மக்களுடனான அவர்களின் வரலாற்று, மொழியியல் மற்றும் கலாசார கூட்டுவாழ்வுக்கு ஒரு சான்றாகும். இது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் பரஸ்பரம் பகிரப்பட்ட பாரம்பரிய மேன்மையையும் பிரதிபலிக்கிறது.

இவ்வாறான இடப்பெயர் மரபுகளை புரிந்துகொள்வது, தீவில் இந்த சமூகங்களின் இணக்கமான சகவாழ்வு மற்றும் பண்பாட்டுச் செல்வாக்குகள் தொடர்பான நுண்ணிய தகவல்களை (Micro Information) வழங்குகின்றன. ஒவ்வொரு இடப்பெயருக்கும் ஒவ்வொரு பண்பாட்டுப் பின்புலங்களிலிருந்தும் பல்வேறு மூலங்கள் இயம்பப்படுகின்றன. ஒவ்வொரு மூலங்களிலிருந்தும் நாம் பெறக்கூடிய தரவுகளை அறிவு மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதே இடப்பெயராய்வின் பயனுள்ள நோக்கமாக கருதமுடியும்.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இடப்பெயர் பண்பாடு தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட வேண்டியதாகும். இடப்பெயர்களை ஊர்ப்பெயர்களாக மாத்திரமன்றி, நீர்நிலைகள், மலைகள், காடுகள், வயல்கள், வீதிகள், கட்டிடங்கள், வீடுகளின் பெயர்கள் என ஒவ்வொரு இடத்தின் பெயர்ப்பண்பாடாகவும் மேலும் நுணுக்கமாக ஆராயும்போது இன்னும் பல தனித்துவமான பண்பாட்டம்சங்களைக் கண்டு கொள்ளமுடியும்.

சில இடப்பெயர்கள்:

காத்தான்குடி, கல்முனைக்குடி, ஹயாத்துநபிக்குடி, ஏறாவூர், நிந்தவூர், மீராநகர், ஹிஜ்றாநகர், அக்கரைப்பற்று, வரிப்பத்தான்சேனை, அட்டாளைச்சேனை, இசங்கனிச்சேனை, பசறிச்சேனை, அட்டப்பளம், வாழைச்சேனை, பாலமுனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பக்கீர்சேனை, மாவடிப்பள்ளி, மீனோடைக்கட்டு, கோணாவத்தை, பள்ளிக்குடியிருப்பு, தைக்காநகர், ஹீசைனியாபுரம், சின்னப்பாலமுனை, உல்லை, ஏத்தாளக்குளம்,கொட்டக்கட்டையடி, பெரியகுளம், குடுவில், நல்லதண்ணிமலை, சம்மாந்துறை, மலுக்கம்பிட்டி, பட்டடியடிப்பிட்டி, பாவட்டந்தீவு, முச்சந்திமக்காம், மக்காமடி, வட்டிவிட்டி, வேகாமம், வளத்தாப்பிட்டி, வங்களாவடி, கிளிவெட்டி, கள்ளியம்பத்தை, சேனைவட்டை, சேவுகப்பத்து, செட்டிடவட்டை, அம்பலத்தாறு, கரவாகு, மாளிகைக்காடு, ஒலுவில், இறக்காமம், கொண்டவட்டான், நைனாகாடு, ஓட்டமாவடி, சம்புமடு, செந்நெல்கிராமம், மஜீட்புரம், இஸ்மாயில்புரம், அமீரலிபுரம், அஷ்ரப்நகர், இஸ்மாயில்புரம், ஹிஜ்றாநகர், ஆலிம்சேனை, ஆலிம்நகர், தைக்காநகர், முஹம்மதியாபுரம், றசாக்மௌலானா நகர், ஜலால்தீன் சதுக்கம், ஹிதாயாபுரம், களப்புக்கட்டு, மீராகேணி, மீராவோடை, உப்போடை, மஞ்சந்தொடுவாய், காங்கேயனோடை, சாளம்பைக்கேணி, சவளக்கடை, கல்லரிச்சல், மட்டக்களப்புத்தரவை, உடங்கா, மலையடிக்கிராமம், விளினையடி, மணற்சேனை, நற்பிட்டிமுனை, கருவாட்டுக்கல், விளினையடி, அரசடி, புளியடி, ஆலையடி, வம்மியடி, வேகாமம், கூழாவடி, ஹிஜ்றாசந்தி, அல்லிமுல்லைச் சந்தி, கைகாட்டிச்சந்தி, பூமரத்தடிச்சந்தி, கொண்டவட்டான்.

உசாத்துணை

  1. Kularatnam, K. (1999). Tamil place names on Ceylon outside The Northern & Eastern Provinces.
  2. De Lanerolle, J. D. (1930). Place Names of Ceylon. The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 31(83), 510-527.
  3. Kulasuriya, A. S. (1995). Place Name study in Sri Lanka some Issues and perspectives. Journal of the Royal Asiatic Society of Sri Lanka, 131-154.
  4. Jameel, S. H. M. (1997). Muslims of Ampara district.
  5. காதர். எம்.எல்.ஏ, 1997. வரலாற்றுப் பாரம்பரியம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
  6. மருதூர் ஏ மஜீட்,1995. மட்டக்களப்பிலிருந்து மத்தியகிழக்கு வரை
  7. நடராஜா.எப்.எக்ஸ்.சி,1998. மட்டக்களப்பு மான்மியம், இரண்டாம் பதிப்பு
  8. வெல்லவூர் கோபால், 2005. மட்டக்களப்பு வரலாறு – ஓர் அறிமுகம்

ஒலிவடிவில் கேட்க

2574 பார்வைகள்

About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்