மலையகத்தின் அடுத்த கட்டத்திற்கான உரிமைக்கோரிக்கை குரல்களை எழுப்பியவர்கள் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரே. இவர்களது தூரத்துக் கனவு இலங்கையில் இருந்து வெள்ளையர்களை துரத்தியடித்த பின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஏற்படுத்தி சோசலிச அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதாக இருந்தபோதும் அவர்கள் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்துக்கு பின்னால் கணிசமான பங்களிப்பை செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட இருந்த சிறு முதலாளித்துவத்தின் வளர்ச்சி காரணமாக சிறு முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகியிருந்தது. இவர்கள் கொச்சையான ஆங்கிலத்தைப் பேசி, ஆங்கிலேயர்கள் போல் கோட்டும் சூட்டும் அணிந்து கொண்டு, ஆங்கிலேயரின் அடிவருடிகளாக இருந்து கொண்டு தொழிலாளர்களை சுரண்டி பணம் குவித்தனர். ஆங்கிலமோகம் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் ஆங்கில கல்வி கற்பிக்க இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்தனர். அவ்விதம் ஆங்கிலம் படிக்கச் சென்ற அவர்களில் சிலர் வெறுமனே ஆங்கிலம் மட்டுமே படித்துவிட்டு வராமல் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் என்பவற்றுடன் சேர்த்து இடதுசாரிக் கொள்கைகளையும் கற்றுக்கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.
அவர்களில் லெஸ்லி குணவர்த்தன, பிலிப் குணவர்த்தன, என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, ரொபர்ட் குணவர்த்தன ஆகியோர் இணைந்து இலங்கையின் முதல் இடதுசாரி அமைப்பான இலங்கை சமசமாஜக் கட்சியை 1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தோற்றுவித்தார்கள். அவர்களது அமைப்பு பிரகடனத்தின் மூலம் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது, உற்பத்தித் துறைகளை தேசியமயப்படுத்துவது, இன, மத, குல மற்றும் ஆண்=பெண் பால் ரீதியான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் போன்றன பிரதான நோக்கங்களாக இருந்தன.
இதுவரை (1930) காணப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் மத்திய மலைநாட்டின் பெருந்தோட்டத் தொழிலாளர்களை புறக்கணித்து நகர்ப்புற தொழிலாளர்களை மாத்திரமே முக்கியமாகக்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஒரு பெரும் குறைபாடு என அவர்கள் கருதினார்கள். அதற்குக் காரணம் தலைநகரை மையமாகக் கொண்ட தொழில்துறைகள் அனைத்துமே பெருந்தோட்டத்துறையில் உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றில் தங்கியிருப்பதாக இருந்தன. ஆகவே தொழிற்சங்க நடவடிக்கைகளின் மையப்புள்ளி மத்திய மலைநாட்டின் தேயிலை உற்பத்தியை மையமாகக் கொண்ட தொழிலாளர்களைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டுமென்று அவர்கள் கருதினார்கள். இந்தச் சிந்தனையின் விளைவாக 1930 களில் நடுப்பகுதியில் மத்திய மலைநாட்டின் பெருந்தோட்டங்களை நோக்கி தமது தீவிரவாத தொழிற்சங்க அமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார்கள்.
1930 தசாப்தங்களை அடுத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிராக உருவாவதை அவதானித்த அரசாங்கம் அவற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எல்லாத் தொழிற்சங்கங்களும் , தொழிற்சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1935 ஆம் ஆண்டில் 14 ஆம் இலக்க தொழிற்சங்கப் பதிவுகள் கட்டளைச்சட்டம் என்ற பெயரில் இந்தச்சட்டம் அரசாங்க சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதலாவது சங்கம் துரைமார்கள் சங்கமாகவே இருந்தது. அதனைத்தொடர்ந்து 1937 ஆம் ஆண்டளவில் அகில இலங்கை தலைமை கங்காணிமார் சங்கம் 648 அங்கத்தினர்களுடன் பதிவு செய்யப்பட்டது. நடேசய்யரை தலைமையாகக் கொண்ட அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற சங்கம் 1940 ஜனவரி 19ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு தொழிற்சங்கமாக பெருந்தோட்ட கணக்குப்பிள்ளைகளின் தொழிற்சங்கம் காணப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்தத்தொழிற்சங்கத்தின் தலைமையகம் நாவலப்பிட்டியில் அமைந்ததுடன் மலையகமெங்கும் பதினாறு கிளை அலுவலகங்களும் அமைக்கப்பட்டன. இதன் முதலாவது தலைவராக ஆர். எஸ். வேலுவும் உப தலைவராக எம். சுப்பையாவும் செயற்பட்டனர். இந்தச்சங்கத்தின் முதலாவது பேராளர் மாநாடு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் 1957ஆம் ஆண்டு அட்டன் ஸ்ரீ பாத கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. (அதன் செயற் குழுவினரை படத்தில் காணலாம்)
இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற தொழிற்சங்கங்களில் லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியது என்ற வகையில் முக்கிய வகிபாகத்தைப் பெற்றுக்கொண்டது. 1939 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சங்கத்தில் அவ்வாண்டு இறுதியிலேயே 8000 அங்கத்தவர்கள் சேர்ந்திருந்தனர். தொழிற்சங்கத்தின் செயலாளர்களாக வேர்னன் குணசேகர மற்றும் பி. எம். வேலுச்சாமியும் செயற்பட்டார்கள். இதன் தலைவராக எஸ். என். பொன்னையா தெரிவுசெய்யப்பட்டார். லங்கா சமசமாஜக் கட்சியும் அதன் தொழிற்சங்கமும் இணைந்து அதன் ஆரம்ப கட்டத்திலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 33 சதவீதமாக அதிகரித்தல், பத்து சீட்டு முறைமையை இல்லாதொழித்தல், கங்காணிக்கான தலைக்குரிய பென்சுக் காசு கொடுப்பனவு, ரேசன் கார்ட் முறை போன்றவற்றை ஒழித்தல், பென்சன் முறையை ஏற்படுத்துதல், வேலையற்றோருக்கான காப்புறுதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட்டது.
இத்தகைய சூழ்நிலைகளில் 1936 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை அரசாங்க சபைக்கான பொதுத்தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் போட்டியிட்ட என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தன ஆகிய இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்க சபைக்கு தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் வெற்றி பெறுவதற்கு பெருந்தோட்ட இந்திய வம்சாவளி கூலித் தொழிலாளர்களின் வாக்குகளே கணிசமான அளவுக்கு பங்களிப்புச் செய்தன. இது தொடர்பில் அரசாங்கசபையில் உரை நிகழ்த்தும் போது என். எம். பெரேரா பின்வருமாறு குறிப்பிட்டார்:- “எனக்கு கிடைத்த ஓட்டுகளில் ஒரு தனி ஓட்டை தானும் நான் தோட்டத்துரைமார்களிடமிருந்து பெறவில்லை என்பதைத் திட்டவட்டமாக என்னால் கூற முடியும். மறுபுறம் தோட்டத் துரைமார்கள் அனைவருமே எனக்கு எதிராகப் போட்டியிட்ட எதிர் வேட்பாளருக்கு தமது ஓட்டைப் போட்டதுடன் தொழிலாளர்களையும் அப்படியே செய்ய வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தினர். இருந்தாலும் வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை யாருக்குப் போட வேண்டும் என்பதில் தீர்மானமாகவே இருந்தார்கள்”
1930 களின் அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்த நிலைமையிலிருந்து ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக தேயிலையின் விலை ஒரு இறாத்தலுக்கு 42 சதத்திலிருந்து 76 சதமாகவும் இறப்பரின் விலை 12 சதத்திலிருந்து 49 சதமாகவும் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் படிப்படியாக அதிகரித்தன. வர்த்தக வருமானங்களும் கணிசமாக அதிகரித்த போதும் அவற்றினால் ஏற்பட்ட எந்த நன்மைகளும் தொழிலாளர்களை சென்றடையவில்லை.
இவற்றை சுட்டிக்காட்டிய தொழிற்சங்கங்கள், தொழிலாளருக்கான சம்பள உயர்வையும் வாழ்க்கைத் தர உயர்வையும் கோரி தமது கோரிக்கைகளை முன்வைத்தன. எனினும் அவை தொடர்பில் அரசாங்கமும் துரைமார்களும் எந்தவிதமான அக்கறையும் காட்டியதாகத் தெரியவில்லை இதனைத்தொடர்ந்து பல தோட்டங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய அளவில் தாக்குதல்களும் கலகங்களும் உருவாகத் தொடங்கின. முதல்முறையாக தோட்டத்துரைமார்களும் உரிமையாளர்களும் தோட்டத் தொழிலாளர்களின் ஸ்தாபனப்படுத்துதல் தொடர்பாகவும் அவர்களின் எழுச்சி தொடர்பிலும் பயமும் பீதியும் அடைந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்காகவும் அதனை காலனித்துவ செயலாளருக்கு அனுப்பி, தகுந்த நடவடிக்கை எடுக்க கோருவதற்காகவும் துரைமார் சங்கத்தினால் விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் பிரகாரம் பின்வரும் காரணங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை மேற்படி விசாரணைக்குழு தயாரித்து 1940 ஜூன் எட்டாம் திகதி காலனித்துவ செயலாளரிடம் கையளித்தது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கை பெருந்தோட்டப் பகுதிகளில் இடதுசாரி தொழிற்சங்களை அனுமதித்தமை காரணமாக பல்வேறு வன்முறைகளும் தாக்குதல்களும் அதிகரித்து வந்திருக்கின்றன. அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. 1939 ஜனவரி 10 ஆம் திகதி முல்லோயா தோட்டத்தில் பெரிய கலவரம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதனை கட்டுப்படுத்த பொலிசார் அழைக்கப்பட்ட போதும் அவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. பொலிசாரின் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் ரம்படை தோட்டத்தில் 600 தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து கத்தி, கம்பு, தடிகளுடன் தோட்டத்துரையையும் அவருடைய பங்களாவையும் தாக்கியதில் தோட்டத்துரை கல்லடி பட்டு படுகாயமடைந்தார். அதே மாதத்தில் வெளிஓயா குழு தோட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட கலவரத்திலும் தாக்குதலிலும் தோட்டத்து கன்டக்டர் காயமடைந்துள்ளார். மே மாதத்தில் நேஸ்பி தோட்டத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே மாதத்தில் நீட்வூட் தோட்டத்தில் தொழிலாளர்கள் கலகம் விளைவிக்க முற்பட்டபோது பொலிசாருக்கும் தொழிலாளிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஒரு பொலிஸ்காரர் கடும் காயமும் மேலும் சில பொலிஸ்காரர்கள் சிறிய காயங்களுக்கும் உட்பட்டனர். அதே மாதத்தில் வேவல் ஹேன என்ற தோட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர் ஒன்று கூடி கலவரம் ஏற்படுத்த முற்பட்டபோது 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே மாதத்தில் ஊவா ரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கங்காணி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே மாதத்தில் வேவஸ்ஸ என்ற தோட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது அந்த தோட்டத்துரையை தோட்டத்திலிருந்து வெளியேறும்படி தொழிலாளர்கள் வலியுறுத்தினர். அதேசமயம் தோட்டத்துரைக்கும் அவரது மனைவிக்கும் தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது என பொலிசார் தெரிவித்தனர். அதே மாதத்தில் சென் அண்ட்ரூவ்ஸ் என்ற தோட்டத்தில் தோட்டத்துரையின் மீது நடத்திய தாக்குதலில் அவரது ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொரு கையிலும் காயம் ஏற்பட்டது.
தோட்டத்துரைமாரின் பார்வையிலும் பொலிசாரின் பார்வையிலும் மேற்படி சம்பவங்கள் கலவரங்கள் ஆகவும் தோட்டத்துரைமாருக்கு எதிரான தாக்குதல்களாகவும் இருந்தபோதும் தொழிற்சங்கங்களின் பார்வையில் இவை வெறும் தொழிற்சங்க நடவடிக்கைகளாகவே இருந்தன. மறுபுறம் இவை தோட்டப்புறங்களில் இடதுசாரி தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் முற்றிலும் தாபனப்படுத்துவிட்டதனை அறிவிக்கும் பறைசாற்றுதல்களாக இருந்தன என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.
தொடரும்.