மேலைக் கடலில் பிளாஸ்டிக் கப்பலும் வடகடலில் பேருந்துகளும்
Arts
10 நிமிட வாசிப்பு

மேலைக் கடலில் பிளாஸ்டிக் கப்பலும் வடகடலில் பேருந்துகளும்

March 8, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

2021 மே 20 தொடக்கம், யூன் மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை கொரோனாப் பாதிப்புகளை தவிர்த்து இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தங்கள், பல விவாதங்களையும் விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளன. அவையாவன X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இலங்கையின் வடகடலில் இறக்கப்பட்ட பேருந்துகள் (பழைய அலுமினிய பஸ் வண்டிகள்) பற்றியனவாகும்.  

x-press-pearl

இவ்விரு நிகழ்வுகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல மட்டங்களில் விவாதங்களை தூண்டியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை இந்த இரு நிகழ்வுகளும் மேலோட்டமாக வெறும் உணர்வு சார்ந்து மட்டும் விவாதிக்கப்பட்டுவரும் நிலைமை நிலவுகிறது. இவ்விவாதத்தின் ஆரம்பப் புள்ளி மே 20, 2021 அன்று இலங்கையின் மேற்கு கரையில் கொழும்பு-நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தாகும். X-Press Pearl என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இந்தக்கப்பல் 2021 மாசி மாதம் கடல்சார் வணிக நடவடிக்கைக்காக கடலில் இறக்கப்பட்டபோது ஏற்பட்ட தீ விபத்து, பாரிய கடல்-இயற்கைவள அழிப்புக்கு வழிகோலியுள்ளது.

அடுத்ததாக, ஆனி 11, 2021 அன்று இலங்கை மீன்பிடி அமைச்சு, இலங்கையின் கடல் பிரதேசத்தில் மீன் வளங்களை அபிவிருத்தி செய்யும் “நோக்கில்” உபயோகத்துக்கு உதவாத அலுமினியப் பகுதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட பேருந்துகளை இலங்கையின் வடகடலில் இறக்கியுள்ள செயலாகும்.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தானது, மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் டொலர் மீதான ஆசையும், அவர்களின் திறமையும், நேர்மையுமற்ற ஆட்சி செய்தலுக்கு உதாரணமான நிகழ்வாக தென்னிலங்கை மக்களினால் கருதப்படுகின்றது. அதேவேளை, ‘தமிழர்களின் கடல்’ பிரதேசத்தை சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்க மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வாக இந்த தீ விபத்து தமிழ் பேசும் மக்களிடையே பிரசாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ”தமிழ்த்தேசியம்” சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுமே இக்கருத்தை பிரசாரம் செய்கின்றன.

அத்துடன் இந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்திய அரசு, இலங்கையின்  உள்ளக அரசியலில் தலையிட வேண்டுமென்ற கூக்குரல்களும்  “தமிழ்த்தேசியம்” சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் இவர்களிடமிருந்து கேட்கிறது. இதற்கு எதிராக “குரல்கொடுக்கும் ” இலங்கை அரசுக்கு சார்பான “தமிழ்த் தேசிய” எதிர்ப்பாளர்கள், இலங்கை அரசுக்கும், அது செய்து வரும் கடலியல் அரசியலுக்கும், எந்தவித நியாயத்தன்மையும்,  அடித்தளமும் இல்லாமல் முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

MT-New-Diamond-location

இந்த இரு பகுதியினருமே, தற்போது ஈ.பி.டி.பி -அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு இணங்க, வடமாராட்சி கடலில் இறக்கப்பட்டுள்ள ‘பஸ்களை’ முன்னிறுத்தியும் அதன் சாதக  பாதங்களையும் விவாதித்து வருகின்றார்கள். அரச சார்பான-“தமிழ்த் தேசிய” எதிர்ப்பாளர்கள், பேருந்துகளை கடலில் இறக்கியமையானது தமிழ் மக்களின் மீன்பிடி வளங்களை காப்பாறுவதற்காவே என்று வாதிடுகின்றார்கள். இதை எதிர்ப்பவர்கள், “தமிழர்களுக்கு எதிரான துரோகச் ” செயலென இதை வர்ணிக்கின்றனர். கடந்த வருட (2020) இறுதியிலும் இந்த வருட(2021) ஆரம்பத்திலும்  திருகோணமலையின் ஆழ்கடல் பிரதேசத்தில் இதேபோலவே 40 பேருந்துகள் போடப்பட்டன. அந்தச்சந்தர்ப்பத்தில் இந்த இருபகுதியும் அது பற்றி எதுவும் பேசியதாக பதிவுகள் இல்லை.

MT New Diamond Fire

அது போலவே புரட்டாதி 3, 2020 அன்று  MT New Diamond கப்பலில் தீப்பிடித்து  கிழக்குமாகாணக் கடற்பிரதேசத்தில் பாரிய கடல்வள அழிவு ஏற்படும் நிலை உருவாகியது. அப்போதும் கூட  இவர்கள் எவரும் அலட்டிக் கொண்டதாக பதிவுகளில்லை. இந்த இரு பகுதியினரின் கரிசனையும் கடல் வளம் பற்றியதோ அல்லது அதுசார்ந்த வாழ்வியலைக் கொண்ட மக்கள் பற்றியதோ அல்ல. மாறாக, இந்த இரு பகுதியினரினதும் கரிசனையானது தமது அரசியல் மற்றும் அதிகாரம் சார்ந்த இருப்பு பற்றியதே. குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய அரசியல் – மற்றும் அதிகாரம் சார்ந்த போக்குகளே இவர்களுக்கு இடையிலான முரண்பாடாகும்.

இவ்விரு நிகழ்வுகளையும் வழமை போலவே வெறும் ‘உணர்ச்சி’ சார்ந்து விவாதிப்போமாகில் அதனால் பாரிய பாதிப்புகளை சந்திக்கப்போவது  இலங்கையில் வாழும் அனைத்து  மக்களுமே! இன்று எமக்கு தேவை, மேற்கூறப்பட்ட விடயங்கள் பற்றிய ஆழமான- விஞ்ஞான ரீதியான அறிவும் –ஆய்வுகளுமாகும். இந்த ‘உணர்ச்சி’ சார்ந்த விவாதங்களுக்கப்பால், சர்வதேச ரீதியாக இலங்கையின் கடல் பிரதேசம் மற்றும் அதன் கடல்வளம் பற்றிய விவாதமாகும். ஏனெனில், கடலியல் Oceanology/ Oceanography, கடல் புவியியல் / Marine Geology மற்றும் கடல்சார் உயிரியல்/Marine Biology சார்ந்த விடயங்கள், உலக மட்டத்திலான சமூக ஆர்வலர்களிடையே மிக முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.    

இந்த சிறு பதிவின் நோக்கம் மேற்படி இரு நிகழ்வுகள் பற்றிய சிறிதேனும் விஞ்ஞான ரீதியினாலான சில தரவுகளை பதிவதுவேயாகும்.

X-Press Pearl அனர்த்தம்

Jebel Ali துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், மே 11.2021 அன்று ஹமாட் துறைமுக பிரதேசத்தில் பயணிக்கும் வேளை Nitric Acid கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகளை கப்பல் சிப்பந்திகள் கண்டனர். அதனால் கொல்கலன்களை  டோகா – ஹமாட்  துறைமுகத்தில் இறக்க அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோலவே, இந்திய Hazira Port -துறைமுகத்திலும் அதிகாரிகள் கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே திட்டமிட்ட முறையில் கப்பலானது இலங்கையை நோக்கிப் பயணித்தது. மே 20, 2021 அன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 நோட்டிகல் (17km) மைல்களுக்கு அப்பால் X-Press Pearl கப்பலில் இருந்த Nitric Acid கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகள் காரணமாக தீப்பற்றிக்கொண்டது. X-Press Pearl கப்பல் தீப்பற்றும்போது அதில்1486 சரக்கு கொள்கலன்கள் (Containers)  காணப்பட்டன. அவற்றில் 81 கொள்கலன்கள் நச்சுத்தன்மையான பொருட்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தன. மேலும் 25 தொன் Nitric Acid காணப்பட்டன. அத்துடன் ஒவ்வொன்றும் 26000 kg உள்ளடக்கத்தை கொண்ட மூன்று கொள்கலன்களில் Plastic Pellets/ பிளாஸ்டிக் துகள்கள்/மணிகள் இருந்தன. கப்பலை இயக்குவதற்காக பயன்படும் டீசல் மற்றும் 333 தொன் எடைகொண்ட பலவகை எண்ணெய் வகைப்  பொருட்கள் கப்பலின் இயந்திர பகுதிக்கு அருகாமையில் இருந்த பாரிய கலன்களில் நிரப்பப்பட்டிருந்தன.

கப்பல் விபத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் :

பெரும்பாலும் இரும்பினால் உருவாக்கப்படும் கப்பலானது கடலில் மூழ்கும் போது குறுகியகால மற்றும் நீண்டகால பாதிப்புகளை கடல்சார் இயற்கைக்கு ஏற்படுத்துமென்பதில் எந்தவித ஐயமுமில்லை. அதேவேளை, சில நூறு வருடங்கள் அவதானிப்பின் அடிப்படையில் இரும்பு / உருக்கு போன்ற உலோகங்களை கடலானது வெகுவிரைவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும். அத்துடன் இரும்பு போன்ற உலோகங்கள் இயல்பாகவே நீண்டகாலப்போக்கில் கடலின் தன்மைக்கேற்ப இயைபாக்கம் அடைந்து கொள்வன.

The spread of plastics and oil in Sri Lanka from the wreck of X-Press Pearl

அதேவேளை கரையிலிருந்து 17 கிலோமீற்றர் தூரத்திலும், 22 மீற்றர் ஆழத்திலும் எரிந்து போய் மீதமாகவுள்ள X-Press Pearl கப்பலை பகுதி பகுதியாக வெட்டி அகற்ற முடியும். இதற்கு இன்றுள்ள நவீன கடல்சார் தொழில்நுட்பவியல்  உதவும். ஆகவே, ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விட  கப்பலின் உலோக பாகங்கள்  மேலதிகமாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயினால், 333 தொன் எரிபொருட்களும், 81 பெட்டகங்களில் இருந்த நச்சுப் பொருட்களும், 25 தொன் Nitric Acid மற்றும் 78000 kg Plastic Pellets/ பிளாஸ்டிக் துகள்களுமே பாரிய இயற்கை அழிவை ஏற்படுத்தவல்லன.

கப்பலில் கொண்டுவரப்பட்ட கொள்கலன்கள் (Containers) பலவற்றின் உள்ளடக்கம் சிறு உருண்டைகள்/ மணிகள்போல் ஆக்கப்பட்ட பெருந்தொகை பிளாஸ்டிக் துகள்களாகும். கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் தலைமன்னார் கரையோரம் தொடக்கம் இலங்கையின் தென் பிரதேசமான தங்கல்ல வரையான கரைகளில் மிதந்து ஒதுங்குகின்றன. இந்த கடற்பிரதேசத்துக்கு இடைப்பட்ட பகுதியில் பிடிக்கப்படும் மீன்களின் கன்னப் பூக்கள், வாய்ப்பகுதி மற்றும் இரைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன் இந்த பிளாஸ்ட்டிக் துகள்கள் கப்பலிலிருந்து வெளியேறி நீரினுள் அமிழக்கூடிய எண்ணெய் வகைகளுடன் கலந்து, கப்பலை சுற்றிய பிரதேசத்தில் பரந்துள்ளதெனக் கூறப்படுகிறது.

இது உண்மையானால், பல்லாயிரம் கிலோ மீற்றர் பரப்பளவு கடலடித்தள தாவரங்கள் உட்பட பலவகை உயிரினங்களுக்கும் நீண்ட காலத்துக்கு பாதிப்பை இது ஏற்படுத்தும். ஏற்கனவே  இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 25 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளன. அவற்றின் உள் உறுப்புகளில் எண்ணெயுடன் கலந்த நச்சுப்பொருட்கள் படிந்திருப்பது தற்காலிக – மேலோட்டமான ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கப்பல்களின் எரிபொருள் கழிவுகள் புகையாக ஒருபகுதி வளிமண்டலத்தில் வெளியேறும். மறுபகுதி நீரடிக் குழாய்கள் ஊடாக கடலில் அகற்றப்படும். இக் கழிவின் உள்ளடக்கம் Nitrogen Monoxide and Sulfur Dioxide எனப்படும் நச்சுகளாகும். இவ்விரு கழிவுப் பொருட்களும் உப்பு நீருடன் கலக்கும்போது Nitric Acid and Sulfuric Acid ஆக மாற்றமடையும். இம் மாற்றம் கடலில் நிகழும். இந்த நச்சு பொருட்கள் கடலின் மேல்மட்டத்தில் வாழும் உயிரிகளையும், கொஞ்சம் கொஞ்சமாக கரையோரங்களை அடைந்து கரையோர உயிரிகளையும் பாதிப்படைய வைக்கும்.

ஏற்கனவே, கொழும்பு துறைமுக பிரதேசம் இவ்வகைக் கழிவுகளால் நிரம்பியுள்ளன. இந்தக் கப்பல் தீயினால்  கொள்கலன்களில் இருந்த 25 தொன் Nitric Acid இல், எரிந்து போனவை தவிர மீதமானதும், எரிந்த பின் மிஞ்சிய கழிவுகளும் கடலில் கலந்துள்ளன.  

அடுத்து, கப்பலின் தாங்கிகளிலிருந்த கிட்டத்தட்ட 333 தொன் அல்லது 34,000 லீட்டர் பலவகையான எண்ணெய் வகைகளும் பாரிய அழிவை நீண்டகாலத்துக்கு நிகழ்த்தப்போகின்றன. இதில் அடர்த்தி கூடிய எண்ணெய்களும், எரிந்து அல்லது சூடேறி இறுகிய எரிபொருளும் கடலடித்தளத்தையும், டீசல் மிதந்து வந்து கரையோரங்களையும் பாதித்துள்ளன.

இலங்கை அரச அதிகாரிகள் இந்த எண்ணெய்கள் கப்பலை விட்டு வெளியேறவில்லை எனக் கூறிவருகின்றனர். ஆனாலும், சுயாதீனத் தகவல்கள் மற்றும் கரையோர மக்கள் சார்ந்து செயற்படும் சமூக அரசியல் அமைப்புகளின் தகவல்களின் படி, கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த முயன்று, அது  மூழ்கிப்போன அன்றே பெருமளவிலான எண்ணெய், கப்பலில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டதெனத் தெரியவருகிறது. இந்த வகை எண்ணெயானது கடலடித் தளத்தில் படிந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பரவலடையும்.

இதன் மூலம் உயிரிகளை அழிப்பது மட்டுமல்லாமல் தாவரங்களும் அழிந்து போகும். எரிபொருள் எண்ணெய்கள் எவ்வாறு கடலைப் பாதிக்கும் என்பதனை, 1910 இல் California கடலில் நடந்த, Lakeview Gusher Number One, விபத்து தொடக்கம் 2010 இல் மெக்சிகோ குடாவில் நடந்த Deepwater Horizon விபத்துகளை ஆய்வு செய்ததன் மூலம் விபரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ் ஆய்வுகளின்படி, கடல் வழமைக்கு திரும்புவதற்கு நூறு வருடங்களுக்கு மேலாகலாம். இது, இன்று பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மேல் கடலுக்கும் பொருந்தும்.

இன்றுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள அழிவை ஓரளவுக்கேனும் சீர்செய்ய பெரும் மூலதனம் தேவைப்படும். இதை எரிந்துபோன கப்பல் நிறுவனம் மற்றும் அதன் காப்புறுதி நிறுவனமும் செய்ய வேண்டுமென்பது சர்வதேச சட்டமாகும். ஆனால், இலங்கை அரசானது, பணத்தை தன்னிடம் தருமாறும், தாமே கடலைச் சுத்தம் செய்துகொள்ளுவோம் என்னும் அடிப்படையில் கப்பல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரியவருகிறது.

இன்றுள்ள நிதி நெருக்கடியில் சில நூறு மில்லியன் டொலர் கையில் கிடைப்பதென்பது இலங்கை அரசாங்கத்துக்கு பெரிய வரப்பிரசாதம்தான். ஆனால், சரியான முறையில் சுத்தப்படுத்தப்பட்ட கடல் தாய், நீண்டகால போக்கில் சில ஆயிரம் மில்லியன் டொலரை அள்ளிக்கொடுப்பாள் என்பதே பேருண்மை. குறுகிய பொருளாதார இலாபமும் – அரசியல் நோக்கமும் எந்த வகையிலும் இலங்கை மக்களை வாழவைக்கப் போவதில்லை.

குறிப்பு : இக் கட்டுரையின் இரண்டாவது பகுதி  இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஆணையின்படி, வட கடலில் போடப்பட்ட பேரூந்துகள் பற்றிய விடயம் பேசுபொருளாகிறது. (2021)


ஒலிவடிவில் கேட்க

11778 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)