யாழ்ப்பாணத்தில் பத்து ஆண்டுகள் மிஷன் பணியை நிறைவு செய்த மருத்துவர் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்பியமையை 1858.07.24 அன்று வெளிவந்த நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கிறீன் இந்தியாவிலிருந்து திரும்பியதாக செய்தி வெளியிட்டது என்று கடந்தவாரம் பார்த்தோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவரை இந்தியாவிலிருந்து திரும்பியதாகப் பத்திரிகை குறிப்பிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு.
யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கென்று அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் தமது மிஷன் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் இந்தியாவுக்குத்தான் வந்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் செயற்படுவதற்கு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பத்தில் அனுமதிக்காததால் யாழ்ப்பாணத்திற்கு வந்து மிஷன் பணியை ஆற்றினார்கள்.
அன்று ஈழமும்(Ceylon), இந்தியாவும் சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தன; ஈழம் என்பது இந்தியப் பெருநிலப்பரப்பின் ஓர் அங்கமாக பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி நிருவாகத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. தற்போதும் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க இலங்கை மிஷன் (American Ceylon Mission) தென்னிந்திய திருச்சபையின் (Church of South India) நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. யாழ்ப்பாணம் என்பது இந்திய கலாசாரத்துக்கும் செல்வாக்கிற்கும் உட்பட்ட நிலம். எனவே மேற்கூறிய காரணங்களால் யாழ்ப்பாணத்தில் 11 வருடங்கள் மருத்துவராகக் கடமையாற்றி அமெரிக்கா சென்றவரை இந்தியாவிலிருந்து சென்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருக்கலாம்.
கிறீனிடம் மிளிர்ந்த சான்றாண்மை
மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த போது யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ முறையே மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. மேலைத்தேச மருத்துவத்தை அறிமுகப்படுத்த வந்த கிறீன் யாழ்ப்பாணத்தில் பன்னெடுங்காலமாக மருத்துவப் பணி செய்து வந்த சித்தமருத்துவர்களைப் பற்றியும், அவர்களது மருத்துவமுறையைப் (உள்நாட்டு வைத்தியம்) பற்றியும் பின்வரும் கருத்தைக் கொண்டிருந்தார்.
“மேலைத்தேச ஆங்கில மருத்துவத்தைப் பரப்புவதற்கு வருகின்ற மருத்துவ மிசனரிகள் உள்நாட்டில் பின்பற்றப்படும் கீழைத்தேச வைத்தியமுறையைப்பற்றி ஆராய்தல் வேண்டும். அத்துடன் சுதேச வைத்தியர்களையும் (Native Physicians) அறிந்திருத்தல் வேண்டும். அவர்களுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதுடன் தேவைப்படும் போது ஆலோசனை செய்தல் வேண்டும். சுதேச வைத்தியர்களுடன் வெளிப்படையான தொடர்பாடலைப் பேணுவதுடன் தாராளமனதுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு சுதேச வைத்தியர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் போது மருத்துவ மிஷனரிகள் தாம் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்காமல் சுதேச வைத்தியவர்கள் தங்களது மருத்துவமுறையையும் அனுபவத்தையும் பகிரும் போது பொறுமையாகக் கேட்க வேண்டும்.”
கிறீன் சுதேச மருத்துவர்களுக்கும் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் கொடுத்த உயர்ந்த இடத்தை, முக்கியத்துவத்தை அவரது மொழிபெயர்ப்பு நூல்களில் வழங்கிய சொற்கள் மூலமூம் அறிந்து கொள்ளலாம். கிறீன் 1872 இல் மொழிபெயர்த்து வெளியிட்ட மனுஷவங்காதிபாதம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பில் வைத்தியர் என்ற சொல்லுக்குப் பதிலாக பண்டிதர் என்ற பதத்தை வழங்கியதை இங்கே பார்க்கலாம்.
“மனுஷவங்காதிபாதம்: இது கிறே, ஓர்ணர், ஸ்மிது, வில்சன் என்ற பண்டிதருடைய நூல்களிலிருந்து தனல் வி சப்மன் வைத்தியனால் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்க லங்கை மிஷனைச் சேர்ந்த சமுல் பி கிறீன் வைத்தியனால் நடத்தித் திருத்தப்பட்டது”
கிறீன் ஆங்கில மருத்துவ நூலாசிரியர்களை பண்டிதர் என்றும் தன்னை வைத்தியன் என்று குறிப்பிடுவதும் நோக்கற்பாலது.
கிறித்துவத்தை கிறித்துவினது நற்செய்தியை எடுத்துச் சென்று கீழைத்தேசத்தில் அறிவிக்க வேண்டும் என்பது அமெரிக்க மிஷனரிகளது நோக்காக இருந்த போதிலும் பிற இனத்தவர்களது கலாசாரங்களை மதிக்கும் பண்பும் ஏற்றுக்கொள்ளும் தாராள மனப்பான்மையும் கல்வியை, மருத்துவ அறிவியலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உயர் மனப்பாங்கும் 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க மருத்துவ மிஷனரியான கிறீனிடம் காணப்பட்டது.
மேனாட்டவர்களின் வருகையின் பின் நமது நாட்டவர்களின் நடையுடை பாவனைகள் மாற்றமடைந்தன. தேசிய உணர்வு அற்றவர்களாக மேனாட்டவர்களைப் பின்பற்றும் தமிழர்களின் நிலை கண்டு வருந்திய அமெரிக்கரான கிறீனது உள்ளக் கிடக்கை பின்வருமாறு இருந்தது.
“வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும் தலைப்பாகை தொப்பியாகவும் தாவரபோசனம் மாமிச போசனமாகவும் குடிசை வீடாகவும் மாறுவதாகவே நான் கருதுகின்றேன். கிறித்துவர்களாகாமல் தேசியத்தை இழப்பவர்களையே நான் காண்கின்றேன். ஐரோப்பியர்களின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களைக் காண்பதிலும் கிறித்துவ இந்துக்களைக் காணவே விரும்புகின்றேன்.”
கிறீன் தமிழில் மருத்துவம் கற்பித்தமைக்கான காரணம்!
கிறீன் 1848 ஆம் ஆண்டு மானிப்பாயில் மேலைத்தேச மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்த போது ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. கிறீன் தமிழிற் புலமை பெற்று மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்கியும் ஆங்கில மருத்துவ நூல்களை மொழிபெயர்த்தும் வந்தார். இருப்பினும் 10 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. 1855 ஆண்டளவில் மாணவர்கள் தமிழில் குறிப்புக்களை எடுக்க ஆரம்பித்தபோதும் தமிழ் போதனா மொழியாகவில்லை.
மேலைத்தேச மருத்துவத்தின் நன்மையை எல்லா மக்களும் அனுபவிக்க வேண்டும். என்று விரும்பிய கிறீன் தமிழிலே மருத்துவத்தை கற்பிக்க விரும்பினார். கிறீனது விருப்பம் இவ்வாறிருந்தது:
”நோயுற்றவரிடமிருந்து அழைப்பு வரும்போது குதிரையையும் வண்டியையும் எதிர்பாராமல் அதிகம் பணத்தை நினையாமல் தேசிய உடையில் கால்நடையாகச் சென்று சேவைசெய்வதற்கு உடன்படும் வைத்தியர்களை உருவாக்கலாமென நான் எதிர்பார்க்கின்றேன். ”
ஆங்கில மொழி மூலம் கிறீனிடம் படித்து மருத்துவர்களானவர்கள் கிராமத்தை விட்டு விலகி தூர இடங்களுக்கு அரசாங்க மருத்துவர்களாகச் சென்றனர். சிலர் மருத்துவசேவையையே விட்டு விலகி பிரித்தானிய சிவில் சேவையிலும் இணைந்து கொண்டனர். இவ்வாறு அதிக ஊதியம் கருதி தனது மாணவர்கள் அரச உத்தியோகத்தை நாடி வெளியிடங்களுக்குச் செல்வதும் மருத்துவத் தொழிலை விட்டு விலகி அரச உத்தியோகத்தை நாடுவதும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் கிறீனுக்குக் கவலையை ஏற்படுத்தியது. இதனால் கிறீன் போதனா மொழியாகத் தமிழை மாற்ற விரும்பினார்.
கிறீனிடம் மருத்துவம் பயின்ற 4 ஆவது அணி (1855 – 1858) மாணவர்களுக்குத் தமிழ்மொழி மூலம் ஆங்கில மருத்துவத்தைக் கற்பதில் ஆர்வம் இருக்கவில்லை. மேலும் அவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் தொழிலையே விரும்பினர். மாணவர்களிடம் காணப்பட்ட சலனத்தை உணர்ந்து, அவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து, தாம் மருத்துவர்களாக விரும்புகிறார்களா அல்லது வேறு தொழிலுக்குச் செல்ல விரும்புகிறார்களா என்பதையிட்டு ஒரு தீர்மானத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். விடுமுறையின் பின் மாணவர்கள் மருத்துவத் தொழிலைத் தொடர சம்மதம் தெரிவித்தனர். கிறீன் ஆங்கிலமொழி மூலம் போதனையைத் தொடர்ந்தார்.
1859 இல் நிதிசேகரித்த மருத்துவர் கிறீனும் 2021 இல் நிதிவழங்கிய பேராசிரியர் ஜீவேந்திரா மார்ட்டினும்
1858 இல் அமெரிக்கா திரும்பிய கிறீன் மானிப்பாயிலிருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்யவும் மொழிபெயர்த்த மருத்துவ நூல்களை அச்சிடவும் ஏற்படும் செலவுகளுக்காக 1000 அமெரிக்க டொலரை திரட்டுவதற்கு விரும்பி விண்ணப்பக் கடிதம் ஒன்றைத் தயாரித்தார். 1859 இல் இதனை அச்சடித்து அதன் பிரதிகளை அமெரிக்காவிலிருக்கும் தாராள மனம் படைத்த தனவந்தர்களிடம் சேர்ப்பித்தார். கிறீனது இந்த விண்ணப்பக் கடிதத்திலே அமெரிக்காவிலிருந்த முன்னணி பேராசிரியர்களும் சத்திரசிகிச்சை வல்லுநர்களும் மதகுருமாரும் கையொப்பமிட்டிருந்தனர். போஸ்ரனிலும் நியூயோர்க்கிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
கிறீனோடு தொடர்புடைய யாழ்ப்பாண மருத்துவ வரலாற்றில் ஏறத்தாழ 160 வருடங்களுக்குப் பின்னர் இதே போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவரும் ஹாவர்ட் மருத்துவக் கல்லூரியின் உணர்வழியியல் பேராசிரியருமான (Professor of Anaesthesia) மருத்துவர் ஜீவேந்திரா மார்ட்டின், M.D. அவர்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். கிறீனது மொழிபெயர்ப்பு நூல்களின் மூல அச்சுப் பிரதிகளைப் பார்வையிடுதற்காக யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அவர்கள் பேராசிரியர் மார்ட்டினுடன் என்னையும் வட்டுக்கோட்டையிலிருந்த ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
நூறு வருடங்களுக்கு முன் கிறீன் மொழிபெயர்த்த மருத்துவ நூல்களின் அச்சுப் பிரதிகளின் நகல்களை நாம் மீள நூலாக்கியிருந்தோம். இவற்றின் ஒரு தொகுதியை 2021 இல் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தமைக்காக பேராசிரியர் மார்ட்டின் அவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையிலமைந்துள்ள மருத்துவ அருங்காட்சியக அபிவிருத்திக்காக 1000 அமெரிக்க டொலரை அன்பளிப்பாக சருவதேச மருத்துவக்குழு (IMHO-USA) ஊடாக வழங்கியிருந்தார்.
தொடரும்.