இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது.
பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே அரசியல் தீர்வாக முன்வைக்க முனைகின்றது. சிங்கள தேசத்திலுள்ள பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவும் இதனையே ஆதரிக்க முற்படுகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இது விடயத்தில் இந்தியாவிற்கு பின்னாலேயே நிற்கமுனைகின்றது.
13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்ட, சுயாதீனமில்லாத மாகாணசபை முறையை சிபார்சுசெய்வதால் அது அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்கப்போவதில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் இலக்கும் வழிவரைபடமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற உரையாடல் இன்றைய சூழலில் அவசியமாகின்றது. இக் கட்டுரையாளர் இதுபற்றி தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கின்றார். இக் கருத்துக்கள் முடிந்த முடிவுகளல்ல. இவை அனைத்தும் பரிசோதனைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை.
முதலில் தமிழ் மக்களுக்கான அரசியல் இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இதற்கு இனப்பிரச்சினை என்றால் என்ன? என்பது பற்றி போதிய தெளிவு அவசியமானதாகும். இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதே! அதாவது தேசம் அல்லது தேசிய இனத்தின் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதே! இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்ற சிங்கள மக்களின் ஏகோபித்த கருத்து நிலையை நடைமுறைப்படுத்துவதற்காகவே அவை அழிக்கப்படுகின்றன. ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதனூடாக சிங்கள மக்களிடம் மட்டும் உள்ள அரசியல் அதிகாரமும் இவ்வழிப்புக்கு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்களை ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் இறைமையும் அதன் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான அரசஅதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இக்கட்டமைப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டிக்கட்டமைப்பாக இருத்தல் வேண்டும்.
அரசியல் தீர்விற்கு அரசியல் யாப்புச்சட்டவடிவம் கொடுக்கின்ற போது அதில் முதலாவதாக தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் பேணக்கூடிய வகையில் வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும். இதில் எந்த விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள முடியாது. இதில் முஸ்லீம் மக்களின் நிலை என்ன என்பது தொடர்பாக அவர்களுடன் பேசித் தீர்க்கலாம். அவர்களது தனி அதிகார அலகுக்கோரிக்கையையும் சாதகமாகப் பரிசீலிக்கலாம். முஸ்லீம்கள் சம்மதிக்கவில்லையாயின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைத்து இவ்வதிகார அலகினை உருவாக்குதல் வேண்டும். முஸ்லீம்கள் இணங்கவில்லை என்பதற்காக இணைப்பைக் கைவிடுவதற்கு அரசியல் தலைமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. துரதிர்ஷ்டவசமாக இந்த மாற்று யோசனை பற்றிய உரையாடலுக்குக் கூட சம்பந்தன் தலைமை இன்னமும் தயாராகவில்லை. அவர்கள் எப்படியாவது வடக்கு, கிழக்கு பிரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர்.
இது விடயத்தில் “தமிழ் பேசும் மக்கள்” என்ற செல்லரித்துப் போன கருத்து நிலை துளி கூட உதவப் போவதில்லை. இக்கருத்து நிலை முஸ்லீம் அரசியலைக் கொச்சைப்படுத்துகின்றது. முஸ்லீம்கள் இக்கருத்து நிலைக்குள் வருவதற்கு தயாராக இல்லை என்பதை வரலாற்று ரீதியாகவே வெளிப்படுத்தியுள்ளனர். மாறாக மதத்தை அடிப்படையாகக் கொண்ட தனியான இனமாகவே தங்களை வெளிப்படுத்த முனைகின்றனர். மறுபக்கத்தில் இக்கருத்து நிலை தமிழ் அரசியலுக்கு கைவிலங்காகி குறிப்பாக கிழக்கு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கட்டிப்போடுகின்றது. தமிழ் மக்களுக்குப் பொறுப்பையும் முஸ்லீம் மக்களுக்கு பொறுப்பின்மையையும் விதிக்கின்றது.
இரண்டாவது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சட்டவரைபில் தெளிவாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் இதற்கு பிறப்பாலேயே உரித்துடையவர்கள் என்பதற்கப்பால் 100 வருடங்களுக்கு மேற்பட்ட இன அழிப்பினால் தமிழ் மக்கள் ஐம்பது வருடங்கள் பின்தங்கி நிற்கின்றனர். இந்த இடைவெளியை நிரப்புவதற்கும் இவ்வதிகாரங்கள் தேவையானதாகும்.
மூன்றாவது மத்திய அரசில் ஒரு தேசிய இனமாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். மத்திய அரசின் அதிகாரக்கட்டமைப்பு பன்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் போதே இது சாத்தியமாக இருக்கும். மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக் கொண்டு எந்த அதிகாரப்பகிர்வை வழங்கினாலும் அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.
நான்காவது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் மக்களின் அனுமதியில்லாமல் சட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க முடியாத பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குத் தேவையான விடயங்களைக் கொண்டுவருவதற்கும் பொறிமுறைகள் இருத்தல் வேண்டும். தமிழ் மாநில அரசின் சம்மதம், இரட்டை வாக்கெடுப்பு முறை போன்ற பொறிமுறைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
இனி இந்த இலக்கினை அடைவதற்கான வழிவரைபடத்தைப் பார்ப்போம். இந்த வழிவரைபடத்தில் அடங்க வேண்டிய முதலாவது விடயம் தமிழ் மக்களினது அரசியல் இலக்கிற்கான நியாயப்பாடுகளை புலமை ரீதியிலும், தர்க்க ரீதியாகவும் தொகுத்து தாயக மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாக்குவதாகும். துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல், ஆயுதப் போராட்ட ரீதியாக வளர்ந்த அளவிற்கு அரசியல் புலமை ரீதியாக வளரவில்லை அதாவது தமிழ் அரசியல் நியாயப்பாடுகளுக்கு போதியளவு புலமைப்பின்பலம் கொடுக்கப்படவில்லை. இதனால் தான் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் , தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் தமிழ் மக்களை “சிறுபான்மை இனம்” என விளிக்கின்றனர். தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்றால் அவர்களுக்கு சோல்பரி யாப்பின் 29 ஆவது பிரிவு போதுமே! எதற்கு சமஸ்டியும் தனிநாடும். தவிர இனப்பிரச்சினை என்றால் என்ன? என்ற தெளிவு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட போதியளவு இல்லை. மக்களுக்கு அறவே இல்லை எனக் கூறலாம்.
இந்தத் தொகுப்பில் இன அழிப்பின் வரலாறு, தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் உள்ளடக்கம், அதற்கான நியாயப்பாடுகள், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சர்வதேச அனுபங்கள் என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.
இரண்டாவது தமிழ் மக்களினது அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக்கூடிய தேசிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புதலாகும். தமிழ் மக்களுக்கு இன்று தேவையானது தேர்தல்களில் கூத்தடிக்கும் அரசியல் கட்சிகளல்ல. மாறாக மேற்கூறிய தேசிய அரசியல் இயக்கமே! இந்த அரசியல் இயக்கம் மக்கள் அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும் கொண்டதாக இருக்கலாம், ஆனால் மக்கள் அமைப்புக்களே மேலாதிக்கம் செலுத்துவதாக இருத்தல் வேண்டும். இந்தத் தேசிய அரசியல் இயக்கம் அதில் இணைந்து கொண்ட மக்கள் அமைப்புக்கள் ஐக்கிய முன்னணிக்குள் வருகின்ற போதும் , அரசியல் கட்சிகள் ஐக்கிய முன்னணிக்குள் வருகின்ற போதும் தான் பலமாக இருக்கும்.
தமிழ் மக்கள் பேரவை இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அங்கு பொது அமைப்புகளின் ஐக்கிய முன்னணி உருவாக்கப்படவில்லை. சில தனி நபர்களே கட்சி சாராதவர்களாக அங்கம் வகித்தனர். இவர்களுக்கு அப்பால் அரசியல் கட்சிகளே ஐக்கிய முன்னணியாக இயங்கின. உள்ளூராட்சிச்சபைத்தேர்தல் வந்ததும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. தமிழ் மக்கள் பேரவை சிதைவடைந்தது. இதைச் சிதைத்ததில் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகிய நால்வருக்கும் பங்குண்டு. சிதைப்பின் அளவில் மட்டும் பங்குகள் வேறுபடலாம்.
தேசிய அரசியல் இயக்கத்திற்கு அரசியல் கட்சிகள் தலைமை தாங்கக் கூடாது. கட்சி அரசியலினாலும் தேர்தல் அரசியலினாலும் ஏற்படும் முரண்பாடுகள் அந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும். மேற்கூறியதுபோல தமிழ் மக்கள் பேரவைக்கு அதுவே நடந்தது.
இந்தத் தேசிய அரசியல் இயக்கம் தெளிவான அரசியல் இலக்கு, வலுவான அடிப்படைக் கொள்கைகள், நீண்டகால குறுகியகால வேலைத்திட்டங்கள், வலுவான அமைப்புப் பொறிமுறை , வினைத்திறன் மிக்க வலுவான செயற்பாட்டாளர்கள், அர்ப்பணமும் தியாகமும் மிக்க தலைமை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
மூன்றாவது தமிழ் மக்கள் ஒரு சிறிய தேசிய இனம். அது தனது அக ஆற்றலை மட்டும் வைத்துக்கொண்டு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அடிப்படை சக்திகளாக இருப்பவர்கள் தாயக மக்களும் அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் மக்களுமாவர், சேமிப்புச் சக்திகளாக இருப்பவர்கள் மலையகத் தமிழ் மக்கள், தமிழக தமிழ் மக்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித் தமிழர்களாவர். நட்புச் சக்திகளாக இருப்பவர்கள் தமிழக முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர்.
இந்த அடிப்படைச் சக்திகளையும், சேமிப்புச் சக்திகளையும் , நட்புச் சக்திகளையும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் கீழ் அணிதிரட்ட வேண்டும். இதற்கு நிலம்- புலம்- தமிழகம் இடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும். உலகத் தமிழர்களை இணைப்பதற்கு உலகத்தமிழ்த் தேசியவாதம் ஒன்றைக் கட்டியெழுப்பலாமா? என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். இதன்மூலம் ஈழத் தமிழர்களின் விவகாரத்தை உலகத் தமிழர்களின் பொது விவகாரமாக மாற்ற வேண்டும்.
உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு. தமிழ் மக்களுக்கு சார்பாக சர்வதேச அரசியலைத் திருப்புவதற்கு மிகவும் அவசியமாகும். இதற்கு தமிழ் அரசியல் ஜனநாயக விழுமியங்களை அதிகளவில் உள்வாங்க வேண்டும். சர்வதேச அபிப்பிராயம் ஜனநாயக நீதிக் கோட்பாட்டின் கீழ்தான் கட்டியெழுப்பப்படுகின்றது.
நான்காவது இலங்கைத் தீவை மையமாக வைத்து நிகழும் புவிசார் அரசியலில் தமிழ் மக்களும் கௌரவமான பங்காளிகளாக மாறுவதாகும். இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் கேந்திர இடத்தில் இருக்கின்றது. இது மட்டுமல்ல தமிழகமும் கேந்திர இடத்தில் தான் இருக்கின்றது. இந்த இரண்டு கேந்திரப் பலமும் இணையும் போது தமிழ் மக்களின் கேந்திரப்பலம் உச்சமாகும்.
ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தமிழ்த்தரப்பிற்கு பேரம்பேசும் பலத்தைக் கொடுத்தது. அதன்வழி புவிசார் அரசியலிலும் கௌரவமான பங்கைக் கொடுத்தது. வல்லரசுகள் தமிழ் மக்களின் விவகாரத்தைக் கைவிட்டுவிட்டு இலங்கை விவகாரத்தை அணுகமுடியாத நிலை இருந்தது. தற்போது சீனாவின் அதிகரித்த பிரசன்னம் தமிழ் மக்களுக்கு பேரம் பேசும் பலத்தைக் கொடுத்துள்ளது. இன்று அமெரிக்க – இந்திய -மேற்குலக அணி தமிழ் மக்கள் என்ற கருவியைப் பயன்படுத்தாமல் இலங்கை அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ் மக்களுக்கு இந்த வல்லரசுகள் தேவை என்ற நிலை மாறி வல்லரசுகளுக்கு தமிழ் மக்கள் தேவையாக உள்ளார்கள்.
ஐந்தாவது தமிழ்த்தேசிய அரசியலுக்குள் சமூகமாற்ற அரசியலையும் உள்ளடக்குவதாகும். சமூகமாற்ற அரசியலை உள்ளடக்காத தமிழ்த் தேசியம் ஒரு முற்போக்கான தமிழ்த்தேசியம் அல்ல. சமூக மாற்ற அரசியலை முன்னெடுக்காததால் நான்கு நெருக்கடிகள் உருவாகின்றன
1. இது ஒரு மனித உரிமை மீறல் விவகாரம். ஒரு மக்கள் பிரிவை அந்த மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒடுக்குவது மனித உரிமை மீறலே. தமிழர்களே தங்களுக்குள் ஒடுக்கு முறைகளை மேற்கொண்டிருக்கும் போது பேரினவாதம் ஒடுக்குகின்றது எனக் கூற முடியாது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய டாக்டர் அம்பேத்கார் காந்தியிடம் “இந்தியர்களினாலேயே நாம் ஒடுக்கப்படும் போது ஆங்கிலேயர்களினால் ஒடுக்கப்படுகின்றோம் என்ற உணர்வு வரவில்லை” எனக் கூறியிருந்தார்.
2. தேசம் என்பது மக்கள் திரளாகும். தேசியம் என்பது மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞையாகும். எனவே மக்கள் ஒன்றாகத் திரள்வதற்கு தடையாக இருப்பவையெல்லாம் தேசியத்திற்கு எதிரானவையாகும். அக முரண்பாடுகள் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதற்கு தடையாக உள்ளன. இவற்றை அகற்றாமல் தேசமாகத் திரள்வது சாத்தியமல்ல .
3. அக முரண்பாடுகள் தமிழ் மக்கள். மத்தியில் இடைவெளிகளை உருவாக்கும். அந்த இடைவெளிகளை எதிரிகள் பயன்படுத்த முனைவர். இன்று சாதி முரண்பாடும், பிரதேச முரண்பாடும் ,மத முரண்பாடும், பால் முரண்பாடும் தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் நுழைவதற்கான பல களங்களைத் திறந்து விட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மட்டக்களப்பிலும் அதனைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
4. அக முரண்பாடுகள் சர்வதேச அபிப்பிராயங்களை எமக்கு சார்பானதக உருவாக்குவதில் பல தடைகளை ஏற்படுத்தும். சர்வதேச அபிப்பிராயங்கள் புரட்சிகர நீதிக் கோட்பாட்டினால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக ஜனநாயக நீதிக் கோட்பாட்டினாலேயே வழிநடத்தப்படுகின்றது. இந்த ஜனநாயக விழுமியங்களை அரசைவிட அதிகளவில் நாம் பின்பற்றுவதாகக் காட்டவேண்டும். எமக்குள்ளே ஒரு பிரிவினரை ஒடுக்கிக்கொண்டு சர்வதேச அபிப்பிராயத்தை நாம் பெற முடியாது.
சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் அரசுகள் மட்டும் பங்குபெறுவதில்லை. சர்வதேச சிவில் சமூகமும் பங்கு பெறுகின்றது. அரசுகள் தங்களுடைய நலன்களிலிருந்து செயற்பட்டாலும் சர்வதேச சிவில் சமூகம் சர்வதேச ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலேயே செயற்படும். அவை அரசுகளுக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய வல்லமையைக் கொண்டது. இன்று சர்வதேச சிவில் சமூகத்தின் அபிப்பிராயம் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ளது. பெரும் தேசியவாத ஒடுக்கு முறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அக முரண்பாடுகள் பெரிதாக வளரின் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச அபிப்பிராயங்களுக்கு சர்வதேச சிவில் சமூகம் ஒத்துழைக்காது. சர்வதேச சிவில் சமூகத்தில் ஜனநாயக முற் போக்கு சக்திகள், மனித உரிமைவாதிகள், ஊடகத்துறையினர் ஆன்மீகத்துறையினர் என்போர் அங்கம் வகிக்கின்றனர்.
தமிழ்த்தேசியம் ஒரு வாழ்வு முறையாக மாறும்போதே அக முரண்பாடுகளை எம்மால் கடக்கமுடியும். முன்னர் கூறியது போல அக முரண்பாடுகளில் சாதி முரண்பாட்டையும் பிரதேச முரண்பாட்டையும் இல்லாமல் செய்யவேண்டும். மத முரண்பாட்டிலும் பால் முரண்பாட்டிலும் சமத்துவத்தைப் பேணுதல் வேண்டும். எமது நிலம், எமது மொழி, எமது கலாசாரம், எமது பொருளாதாரம், எமது மக்கள் என்ற நிலை மேல்நிலைக்கு வரும் போது தமிழ்த்தேசியம் ஒரு வாழ்வு முறையாக பரிணமிக்கத்தொடங்கும். சீனத்தேசியம், யூதத் தேசியம், முஸ்லீம் தேசியம் என்பன ஒரு வாழ்வு முறையாக பரிணமிக்கும் போது தமிழ்த் தேசியம் மட்டும் ஏன் அவ்வாறு பரிணமிக்க முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அக முரண்பாடுகளைக் களையும் ஆற்றல் தமிழ்த்தேசியத்திற்கு மட்டுமே உண்டு. மக்களைத் திரளாக்கல் என்ற பெருந்தேவை அதற்குள்ளது.
ஆறாவது சர்வசே அரசியலை எமக்கு சார்பாக திருப்புவதாகும். தமிழ் மக்களின் அரசியல் வெற்றியை சர்வதேச அரசியலே தீர்மானிப்பதாக இருப்பதால் இது மிக மிக அவசியமாகும். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் “தேசிய போராட்டத்தினால் தான் தேசிய அரசியல் உருவாகும். தேசிய போராட்டத்தினால் தான் அது வளர்ச்சியடையும். ஆனால் தேசிய போராட்டத்தின் வெற்றியை சர்வதேச அரசியலே தீர்மானிக்கும்” எனக் கூறியமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இன்று சர்வதேச சிவில் சமூகத்தின் அபிப்பிராயம் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ளது. பெரும் தேசியவாத ஒடுக்கு முறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேச சிவில் சமூகத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகள், மனித உரிமைவாதிகள், ஊடகத்துறையினர் ஆன்மீகத்துறையினர் என்போர் அங்கம் வகிக்கின்றனர்.
ஏழாவது மக்கள் பங்கேற்பு அரசியலை தொடக்கி வைப்பதாகும். துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் வரலாற்றில் மக்கள் பங்கேற்பு அரசியல் தோல்வி அடைந்துள்ளது. அரசியலில் மக்கள் பங்கேற்பதோ அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதோ இடம்பெறவில்லை. மாறாக தொண்டர்களும் வீரர்களுமே பங்கேற்றனர். தமிழரசுக்கட்சிக்காலத்தில் தொண்டர்கள் பங்கேற்றனர். மக்கள் வாக்களிப்பதுடனும் அவ்வப்போது போராட்டங்களில் பங்குபற்றுவதுடனும் தமது கடமைகளை நிறுத்திக் கொண்டனர். ஆயுதப் போராட்ட காலத்தில் போராளிகள் பங்கேற்றனர். மக்கள் பணமும், நகையும் கொடுப்பதுடனும் அவ்வப்போது போராட்டங்களில் பங்குபற்றுவதனுடனும் தமது கடமைகளை நிறுத்திக் கொண்டனர். ஜனநாயக அரசியல் தளத்தினூடாக எமது இலக்கினை அடைவதற்கு இம் மக்கள் பங்கேற்பு அரசியல் மிகமிக அவசியமானதாகும். அரசியல் தலைமைகளின் குத்துக்கரணங்களை தடுத்து நிறுத்துவதற்கும் மக்கள் பங்கேற்பு மிகமிக அவசியமானதாகும். இங்கு மக்கள் பங்கேற்பு என்பது மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்குவதாகும்
எட்டாவது சிறீலங்கா அரசின் பச்சை ஆக்கிரமிப்புத் தொடர்பாக சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குவதாகும். ஆயுதப் போராட்டம் இந்த ஆக்கிரமிப்புக்களைக் குறிப்பிட்டளவு தடுத்து வைத்திருந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பச்சை ஆக்கிரமிப்புத் தொடர்கின்றது. மன்னராட்சிக் காலத்தில் போரில் வெற்றிபெற்ற அரசுகள், தோல்வியடைந்த அரசுகளின் பிரதேசங்களை பச்சையாகச் சூறையாடும். அதுபோன்ற சூறையாடல்களே இப்போதும் இடம்பெறுகின்றன. இச் சூறையாடல்களினால் தமிழ்த் தேசத்தைத் தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என நான்கும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதைச் சிதைப்பதே இந்த ஆக்கிரமிப்பின் நோக்கமாகும். இத்தகைய ஆக்கிரமிப்புக்களுக்கு மகாவலி அதிகார சபை, வன பரிபாலனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன அமைச்சு என்பன கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆக்கிரமிப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உள்நாட்டு முயற்சிகள் இது விடயத்தில் பெரிய பயன்களைத் தராது. சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையே அவசியமாகும்.
ஒன்பதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு உத்தியோக பூர்வமற்ற அதிகாரக்கட்டமைப்பை உருவாக்குவதாகும். தமிழ் மக்களை அரசியல் விழிப்புணர்வோடு வைத்திருப்பதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், போராளிகளின் நலன்களைப் பேணுவதற்கும், தமிழ் மக்களின் அடிப்படைப் பொருளாதாரத்தை தக்க வைப்பதற்கும், நிலம், மொழி, கலாசாரம் என்பவற்றை பாதுகாப்பதற்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தேசியத்தை ஒரு வாழ்வு முறையாக மாற்றுவதற்கும் இவ்வதிகாரக்கட்டமைப்பு அவசியமானதாகும்.
பத்தாவது கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான மூலோபாயத் திட்டங்களும் தந்திரோபாயத்திட்டங்களும் வகுக்கப்படல் வேண்டும். கிழக்கைக் பாதுகாப்பதில் தமிழ் அரசியல் வரலாற்று ரீதியாகவே தோல்வியடைந்திருக்கின்றது. அதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, கிழக்கில் தமிழ் – முஸ்லீம் முரண்பாடு இருக்கின்றது என்பதைக் கவனத்தில் எடுக்காமையாகும். இது விடயத்தில் “தமிழ் பேசும் மக்கள்” என்ற தமிழரசுக் கட்சிக்கால கொள்கை படுதோல்வியடைந்திருக்கன்றது. முஸ்லீம்கள் இந்தப் பொது அடையாளத்திற்குள் வருவதற்குத் தயாராக இல்லை. மறுபக்கத்தில் கிழக்குத் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான கருவியாக பெரும்தேசியவாதம் முஸ்லீம்மக்களையும் பயன்படுத்துகின்றது. இந்நிலையில் இவ்விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக மூலோபாயங்களும் தந்திரோபாயங்களும் வகுக்கப்படல் வேண்டும். இவ்விவகாரத்தை நிலவிரிப்புக்குள் தள்ளி ஒழித்துவிட முடியாது.
இரண்டாவது ,வடக்கின் அதிகாரத்தை கிழக்கில் திணிக்க முற்படுவதாகும். இதன் விளைவு பிரதேசவாதம் தலைதூக்கியதோடு கிழக்கில் சுயாதீனமான உள்ளூர்த் தலைமை வளரமுடியாத நிலைமை ஏற்பட்டமையாகும். இது விடயத்தில் கிழக்கு விவகாரங்களை கிழக்குத் தலைமை கையாளக்கூடியதாகவும், வடக்கு விவகாரத்தை வடக்கு தலைமை கையாளக் கூடியதாகவும் மொத்தத் தேசியவிவகாரத்தை வடக்கும் கிழக்கும் கூட்டாகக் கையாளக்கூடியதுமான பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும். கிழக்கை உலகிற்குக் கொண்டுபோவதும் உலகத்தை கிழக்கிற்கு கொண்டுவருவதும் இன்று மிகமிக அவசியமானதாகும்.
இவ்வழி வரைபடத்திலுள்ள பத்து அம்சங்களும் போதுமானவை எனக்கூற முடியாது. மேலும் மேலும் தேவையானவற்றை கண்டு பிடிக்க வேண்டும். தமிழ் அரசியல் நடைமுறையில் செயற்படுகின்ற போது தேவையான மேலதிக விடயங்கள் கண்ணுக்கு தெரியத் தொடங்கும்.