சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் (1900-1948) இலங்கையின் சட்டசபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் - பகுதி 2
Arts
13 நிமிட வாசிப்பு

சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் (1900-1948) இலங்கையின் சட்டசபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் – பகுதி 2

April 11, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

சர்வசன வாக்குரிமையும் கராவ சாதியினரின் வீழ்ச்சியும்

1920களில் சட்டசபை உறுப்பினர்கள், இலங்கையின் அப்போதைய சனத்தொகையின் 4 வீதத்தினரான எண்ணிக்கையுடைய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு நியமன உறுப்பினர்களும் சட்ட சபையில் அங்கம் வகித்தனர். 1920கள் உண்மையில் கராவ சாதியினரின் பொற்காலம் ஆகும். 1925 இல் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகமானதும், சட்டசபையில் அவர்களின் விகிதாசாரம் குறைந்தது. 1930களில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானதும் கராவ சாதியினரின் சட்டசபை பிரதிநிதித்துவம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. இப்போக்கு சுதந்திரத்தின் பின்னரும் நீடித்தது (குமாரசுவாமி, 1988). 1927 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வந்தனர். அரசியல் சீர்திருத்தம் பற்றி பலதரப்பினர்களுடன் அவர்கள் விவாதித்தனர். அதன் முடிவாக 50 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும், ஆளுநரால் நியமிக்கப்படும் 6 உறுப்பினர்களையும் கொண்ட சட்டசபையை ஆணைக்குழு சிபார்சு செய்தது. இலங்கைத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் சர்வசன வாக்குரிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அப்போது பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலைவரான ராம்சே மக்டொனால்ட் சர்வசன வாக்குரிமையை எதிர்க்கும் ‘முதலாளித்துவ நில உடைமையாளர்கள்’ என்று காங்கிரஸ்காரர்களைக் கண்டனம் செய்தார். ‘பணக்காரர்களான சுதேசி வர்த்தகர்களின் தேசியவாதக் கூச்சல்’ என்று தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் எலன் வில்கின்சனும் கண்டித்தார் (ஜயவர்த்தன, 1972: 275). சர்வசன வாக்குரிமையின்கீழ் நடத்தப்பட்ட முதலாவது தேர்தலில் பணக்காரக் குடும்பங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று தொழிற்கட்சி எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சிக் காலகட்டத்தில், பணக்காரக் குடும்பங்களில் இருந்து தோன்றிய நபர்கள், தாமே நாட்டின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் நிலை உருவானது. 1932 ஆம் ஆண்டின் சட்டசபை பற்றி எச்.ஏ.ஜே. குலுகல்ல என்ற எழுத்தாளர் இவ்வாறு கூறினார்:

“வயதுவந்த யாவருக்கும் வாக்குரிமை என்பதைக் கொண்டு வந்தபோதும், சட்டசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டோர் வசதி படைத்த வகுப்பினைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். நியாயதுரந்தரர்கள், மருத்துவர்கள், தோட்டத்துரைமார், வர்த்தகர்கள், பொறியியலாளர்கள், கண்டியினதும் கரைநாட்டினதும் பிரதானிகள், முன்னாள் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோர் சட்டசபை உறுப்பினர்களாய் இருந்தனர். இவர்களில் ஒருவர் சுப்பீரிம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியாக இருந்தார். இச்சட்டசபை உறுப்பினர்களில் பலர் பின்னர் ‘சேர்’ பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் (குலுகல்ல, 1975:101).”

அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னரான 1930களில் தேர்தல்களில் போட்டியிட்ட தனிநபர்கள் தம் தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வாரியிறைத்தனர். தாம் சேர்த்த பெருஞ் செல்வமும், சீதனமாகப் பெற்ற சொத்துகளும் இப்படியாகச் செலவுசெய்ய அவர்களுக்கு உதவின. கொய்கம பணக்காரக் குடும்பங்கள் சர்வசன வாக்குரிமையைப் பயன்படுத்தி 1931 முதல் 1947 வரை சட்டசபை அரசியலில் ஆதிக்கம் செலுத்தின. 1920களின் சட்ட சபை உறுப்பினர்களான நிலப்பிரபுகளும், ‘புதுப்பணக்காரர்களும்’, ‘உயர்தொழில்களில் இருந்தோருமான’ பலர் 1931 இன் சட்ட சபையையும் அலங்கரித்தனர்.5

ஏ.ஆர். வெயின்மன் என்பவர் கூறியதுபோல் “ஒவ்வொரு சட்ட சபை உறுப்பினரதும் இலக்கு தமது குடும்ப நிலையைத் தளரவிடாது பாதுகாப்பதாகவே இருந்தது (மேலது: 11, வெயின்மன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.)”

1931 இன் புதுமுகங்களில் பலர் பிரபலமான குடும்பங்களைச் சேர்ந்தோராவர். ஜி.சி.எஸ். கொறயா (சிலாபம்), சி.ஈ. கொறயா, விக்டர் கொறயா ஆகிய இருவரதும் மருமகன் ஆவார். மதேஸ் சல்காடோ, சாராயக் குத்தகையாளர்; பல பேக்கறிகளின் உரிமையாளர். சுசந்தா டி பொன்சேக (பாணந்துறை), இவரது மருமகன் ஆவார். டி.சி.ஜி. கொத்தலாவல பெரும் நில உடைமையாளர். இவரது பேரன் ஜோன்.எல். கொத்தலாவலவும் (குருணாகல), 1933 இடைத்தேர்தலில் பலாங்கொடவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரது மருமகன்களில் ஒருவருமான ரி.ஜி. ஜயவர்தனவும் சட்டசபையை அலங்கரித்தனர். காலிப் பகுதியின் முன்னோடியான முதலாளி தோமஸ் சில்வா அமரசூரியவின் பேரன் ஹென்றி டபிள்யூ. அமரசூரியவும், மஹா முதலியார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மகனும், எஸ்.சி. ஒபயசேகரவின் பேரனுமாகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் சட்டசபை உறுப்பினர்களாயினர்.

கிளர்ச்சிவாதத் தலைவர்கள் சிலரே சட்டசபைக்குள் புக முடிந்தது. சர்வசன வாக்குரிமைக்காகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தவர்களில் பலர் தேர்தலில் தோற்றுப்போயினர். உதாரணமாக 1920களில் கொழும்பு நகரத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் முன்னின்று உழைத்த இலங்கைத் தொழிளாளர் கட்சி, கொழும்பில் இரு ஆசனங்களைப் பெற்றது (கொழும்பு மத்தியில் ஏ.ஈ. குணசிங்கவும், கொழும்பு தெற்கில் எஸ்.டபிள்யூ. திஸநாயக்கவும்). மொரவாக்க தொகுதியில் இடதுசாரித் தலைவர் (தனி அங்கத்தவராக), டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க வெற்றிபெற்றார். சர்வசன வாக்குரிமை சில கிளர்ச்சிச் சிந்தனை உடையோர் சட்டசபைக்கு வருவதற்கு உதவியபோதும், கண்டியின் நிலப்பிரபுகளான பழமைவாதக் குடும்பங்களின் பிரதிநிதிகளை சட்டசபைக்குள் புகுவதற்கு இடமளித்தது. ஜே.எச். மீதெனிய (றுவான்வெல), ஜி.சி. றம்புக்பொத (பிபிலை), பி.பி. நுகவெல திசாவ (கலகெதர), ஜே.சி. ரத்வத்த (பலாங்கொட), ஆர்.எஸ். தென்னக்கோன் (கட்டுகம்பொல), ஏ.எவ். மொலமுரே (டெடிகம), ஜி.ஈ. மடவல (நாரம்மல), ரி.பி. பானபொக்க (கம்பளை) என்பவர்கள் சட்டசபையில் இடம்பெற்ற கண்டிய நிலப்பிரபுகளாவர்.

தமிழர் பிரதிநிதித்துவம் ஐந்து ஆசனங்களாகக் (மொத்த ஆசனங்களில் 10 வீதம்) குறைந்தது. டாக்டர் ஆர். சரவணமுத்து (கொழும்பு வடக்கு), என். செல்லதுரை (யாழ்ப்பாணம்), எஸ்.எம். ஆனந்தன் (மன்னார்), எம்.எம். சுப்பிரமணியம் (திருகோணமலையும் மட்டக்களப்பும்) ஆகியோர் தெரிவாகினர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸில் இருந்த தமிழர்களான தேசியவாதிகள், தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியதால் காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய மூன்று தொகுதிகளில் எவரும் போட்டியிடவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து எஸ்.பி. வைத்தியலிங்கம் (தலவாக்கலை), பெரி. சுந்தரம் (ஹட்டன்) என்போரும் ஏ. கோக்டன் பெல்லோஸ் (பண்டாரவல) என்ற பிரித்தானிய தோட்டச் சொந்தக்காரரும் தெரிவு செய்யப்பட்டனர்.

1931 இன் சட்டசபை 50 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாய் இருந்தது. இவர்களுள் 38 பேர் (76 வீதம்) சிங்களவராவர். அரசியல் வெளியின் பெரும்பான்மை இடத்தைத் தமதாக்கிக்கொள்ளும் சிங்களவர் முயற்சியின் தொடக்கம் இதுவாகும் (விக்கிரமசிங்க, 1995). 38 சிங்கள உறுப்பினர்களில் கொய்கம சாதியினர் 79 வீதத்தினராவர். இது மக்கள்தொகையில் அச்சாதியினரின் வீதாசாரத்தைவிட மிகவும் கூடியதாக இருந்தது (குமாரசுவாமி, 1988). டாக்டர் ஈ.ஏ. குரே, கென்றி டபிள்யு. அமரசூரிய, சுசந்தடி பொன்சேக, டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா என்போர் மட்டுமே கராவ சாதியைச் சேர்ந்தோராய் இருந்தனர். சிங்கள உறுப்பினர்களின் 10.5 வீதமாக இத்தொகை இருந்தது. சட்டசபை ஏழு மந்திரிகள்கொண்ட மந்திரி சபையைத் தெரிவு செய்தது.

டி.பி. ஜயதிலக – உள்நாட்டு அலுவல்கள்

சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா – கல்வி

டி.எஸ். சேனநாயக்க – விவசாயம், காணி

சி. பத்துவன்துடாவ – உள்ளூர், நிர்வாகம்

பெரி. சுந்தரம் – தொழில், கைத்தொழில், வர்த்தகம்

ஜே.பி. பானபொக்கே – சுகாதாரம்

எச்.எம். மாக்கான் மாக்கார் – தொடர்பாடல், பொதுவேலைகள்

மேலே குறித்த ஏழுபேர் கொண்ட மந்திரி சபையில் ஐந்து சிங்களவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஆண்களாயும் கொய்கம சாதியினராயும் இருந்தனர். ஒரு முஸ்லிம் மந்திரியும், மலைநாட்டின் நியாயதுரந்தரான தமிழர் ஒருவரும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள். இம்மந்திரி சபையில் கொய்கம அல்லாத சாதிகளுக்கும், யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் பகுதித் தமிழர்களுக்கும், பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. பெண்கள் முதற் தடவையாக 1931 இல் வாக்களித்தனரேனும் அவர்கள் எவரும் அவ்வாண்டுத் தேர்தலில் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்படவில்லை. ஆயினும் ஒருவருடம் கழிந்தபின் ஜே.எச். மீதெனிய என்பவர் இறந்தபடியாலும், டாக்டர் ஆர். சரவணமுத்துவின் தேர்தல் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டபடியாலும் இரண்டு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தல்களில் மேற்குறித்த உறுப்பினர்களின் இடங்களிற்கு அடலின் மொலமுரே (மீதெனியவின் மகள்), நேசம் சரவணமுத்து (டாக்டர் சரவணமுத்துவின் மனைவி) ஆகிய இரு பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1936 ஆம் ஆண்டுத் தேர்தலில் 39 சிங்கள உறுப்பினர்கள் (78 வீதம்) தெரிவு செய்யப்பட்டனர். இத்தேர்தலின் முடிவுகள் சில, ஆச்சரியம் தருவன. உயர்ச்சாதி நிலப்பிரபுகளும், பணக்காரருமான சிலர் கிளர்ச்சிச் சிந்தனை உடையோராலும், மார்க்சிஸ்ட் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டனர். இவ்விதம் தோற்கடிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கோர்:

ரி.பி. பானபொக்க – கம்பளைத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். குணவர்த்தன இவரைத் தோற்கடித்தார்.

டாக்டர் ஈ.ஏ. குரே – கொழும்பு தெற்குத் தொகுதியில் டாக்டர் ஏ.பி.டி சொய்சா இவரைத் தோற்கடித்தார்.

பொரஸ்டர் ஒபயகேசர – அவிசாவல தொகுதியில் பிலிப் குணவர்தன (சமசமாஜக்கட்சி) இவரைத் தோற்கடித்தார்.

அடெலின் மொலமுரே – றுவான்வெல தொகுதியில் டாக்டர் என்.எம். பெரேரா இவரைத் தோற்கடித்தார்.

இந்த மாற்றங்கள் இருந்தபோதும் 1931இன் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.6 டாக்டர் குரே தோற்கடிக்கப்பட்டதனால் கராவ பிரதிநிதித்துவம் மேலும் குறைவடைந்தது. ஹென்றி அமரசூரிய, டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா, சுசந்த டி பொன்சேக என்ற மூன்று பேர் கராவ சாதியின் பிரதிநிதிகளாய் எஞ்சியிருந்தனர். இக்காலத்தில் அநகாரிக தர்மபாலவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் புகுந்தனர். இக்குடும்பத்தின் பிரதிநிதிகளாக நீல் ஹேவ விதாரண (உடுகம), ராஜா ஹேவ விதாரண (மாத்தறை) என்போர் சட்டசபை உறுப்பினர்களாயினர்.7 இவர்களின் சட்டசபைப் பிரவேசத்தினால் கொய்கம சாதிக் குடும்பம் ஒன்று அரசியலில் நுழைந்தது. 

1936 இல் சட்டசபையில் இருந்த தமிழ்ப்பிரதிநிதிகள் 10 பேரில் இருவர் இராமநாதன் – அருணாசலம் வம்சத்தைச் சேர்ந்தோராவர். இக்காலத்து மந்திரி சபையின் அனைத்து மந்திரிகளும் சிங்களவர்களாயும், ஆண்களாயும் இருந்தனர். 1942இல், அம்மந்திரிசபையில் அ. மகாதேவ சேர்த்துக்கொள்ளப்படும் வரை, சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. இம்மந்திரி சபையில் ஜி.சி.எஸ். கொறயாவைத் தவிர்ந்த அனைவரும் பௌத்தர்களாக இருந்தனர். அவ்வாறே டபிள்யூ.ஏ.டி. சில்வா தவிர்ந்த பிற யாவரும் கொய்கம சாதியினராய் இருந்தனர். இதனால் மந்திரி சபை பௌத்த, கொய்கம பெரும்பான்மை உடையதாயும் இருந்தது. 1931 இன் மந்திரி சபையில் இருந்த டி.பி. ஜயதிலக்க, டி.எஸ். சேனநாயக்க, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆகியோர் 1936 இன் மந்திரி சபையிலும் தொடர்ந்து பதவி வகித்தனர்.8 புதியவர்களாகச் சேர்ந்துகொண்டவர்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க (உள்ளூராட்சி), ஜி.சி.எஸ். கொறயா (தொழில், கைத்தொழில், வர்த்தகம்), ஜே.எல். கொத்தலாவல (தொடர்பாடல், பொது வேலைகள்), டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா (சுகாதாரம்) ஆகிய நால்வராவர். டபிள்யூ.ஏ.டி. சில்வா இறந்ததனால் ஏற்பட்ட மந்திரிசபை வெற்றிடத்திற்கு ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா தெரிவு செய்யப்பட்டார். இவரும் கொய்கம அல்லாதவராவார். 1942 முதல் 1947 வரை ‘அநாமதேயமாக’ இருந்து பின்னர் புகழ்மிக்கதாகமாறிய குடும்பத்தின் டி.எஸ். சேனநாயக்க சட்டசபையின் தலைவராக இருந்தார். 1943 முதல் 1947 வரை கராவ சாதியினர் எவரும் மந்திரிசபையில் இடம்பெறவில்லை. 1947 இன் முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான மந்திரிசபையில்கூட கராவ எவரும் இடம்பெறவில்லை.

1948 இல் ஹென்றி அமரசூரிய மந்திரிசபையில் சேர்க்கப்பட்டபோது இந்நிலை மாறியது.9 இன அடிப்படையில் பாகுபாடு உடையதும், சாதிப்பிரிவினைகளைக் கொண்டதுமான இலங்கைச் சமூகத்தில் சர்வசனவாக்குரிமை புகுத்தப்பட்டபோது பெரும்பான்மை இனத்தினது மேலாதிக்கத்திற்கும், பெரும்பான்மைச்சாதியின் மேலாதிக்கத்திற்கும் அது காரணமாயிற்று. இருந்தபோதும் அரசியலின் முதன்மையான விடயம் முதலாளித்துவத்தினது ஆதிக்கம் ஆகும். சட்டசபை ஊடாக முதலாளித்துவ ஆதிக்கம் தொடரலாயிற்று.

குடும்ப சாம்ராஜ்ஜிய ஜனநாயம் கட்டமைக்கப்படுதல்

பின்காலனித்துவகட்டத்தில் நீண்டகாலமாக ‘சாம்ராஜ்ஜிய’ அரசியல் குடும்பங்கள், மக்களின் தலைவர்களாகத் தம்மைக் கருதின. இக்குடும்பங்கள் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவற்றுள் சேனநாயக்க, ஆட்டிகல, கொத்தலாவல, கொறயா, ஜயவர்த்தன, விஜயவர்த்தன ஆகிய குடும்பங்கள் ஒன்றோடுடொன்று தொடர்புடையவை. இவற்றில் இருந்து ‘அறியப்பட்டோர்’ பலர் தோன்றினர். இவர்களுள் டி.சி.ஜி. ஆட்டிகல முக்கியமானவராக இருந்தார். பணக்காரரான ஆட்டிகலவின் மூன்று புத்திரிகள் ரி.ஜி. ஜயவர்த்தன, யோன் கொத்தலாவல (மூத்தவர்) எவ்.ஆர். சேனநாயக்க ஆகியோரை விவாகம் செய்தனர்.10 ரி.ஜி. ஜயவர்த்தன, ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மாமன். அத்தோடு பத்திரிகை உடைமையாளரான டி.ஆர். விஜயவர்த்தன, ஜே.ஆர். ஜயவர்த்தனவின் தாய் மாமனாவார். டி.ஆர். விஜயவர்த்தனவின் மகன், ரஞ்சித் டி.எஸ். சேனநாயக்கவின் பேர்த்தியை விவாகம் செய்தார். கொத்தலாவலவின் மகன் யோன் கொத்தலாவல, அரசியலில் புகுந்தார். கொத்தலாவலவின் மகன், விக்டர் கொறயாவின் மகன் ஜி.சி.எஸ். கொறயாவிற்கு ஒன்றுவிட்ட சகோதரன் (கசின்) உறவுடையவர். 1947 ஆம் ஆண்டின் மந்திரிசபையில் இருந்த 14 மந்திரிகளில் டி.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, யோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்த்தன என்ற நான்கு பேரும் இந்த உறவுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இக்குடும்பங்களில் இருந்து பல பிரமுகர்கள் தோன்றினர். சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க (1948 – 52), அவரது மகன் டட்லி சேனநாயக்க (1952 -53), யோன். கொத்தலாவல (இளையவர்) (1953-56), 1977 இல் பிரதமராகவும் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாகவும் (1978-89) இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன, 1993 – 94 காலத்திலும் பின்னர் 2001 – 2004 காலத்திலும் பிரதமராக இருந்தவரும், ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மைத்துனி நளினியினது மகனும் டி.ஆர். ஜயவர்த்தனவினது பேரனுமாகிய ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இக்குடும்பங்களில் இருந்து தோன்றியோராவர்.

ஐக்கிய தேசியக்கட்சி அல்லாது பிற கட்சிகளின் அரசாங்கங்கள் பதவி வகித்தபோது பண்டாரநாயக்க குடும்பம் (இக்குடும்பம் ஆரம்ப முதலே அறியப்பட்டோர் வகையினதாய் இருந்தது) தலைமை தாங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்துசென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க (1956-58) பிரதமராக இருந்து இக்குடும்ப இராச்சியத்தை தொடக்கிவைத்தார். அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க (1960-65, 1970-77, 1994) பிரதமராக இருந்தார். அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 இல் ஜனாதிபதியானார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பேரன் பிரித்தானிய ஆட்சியினால் மகாமுதலியாராகப் பதவி நியமனம் செய்யப்பட்டுச் சரியாக 100 ஆண்டுகள் கழிந்த தருணமான 1994 இல், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, 1999 இல் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மேற்குறிப்பிட்ட இரு குடும்பங்களும் விவாக உறவுகளால் ஒன்றோடொன்று தொடர்புறும் நிலையும் எழுந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரின் புதல்வி லக்மினி றத்வத்த வியாபாரத் தொழில் அதிபரான உபாலி விஜயவர்த்தனவை (இவர் ஜே.ஆர். ஜயவர்தனவின் First Cousin என்ற உறவு முறையினர்) விவாகம் செய்தார். சந்திரிகா குமாரதுங்கவின் சகோதரர் அநுரா பண்டாரநாயக்க ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு மாறினார். 2000 ஆம் ஆண்டில் அநுரா பண்டாரநாயக்க இரு தரப்பினரின் ஆதரவோடு சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சுதந்திரத்தின் பின்னர் உள்ள காலத்தில் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்ற ‘கவர்ச்சி’மிகு தலைவர்களுக்கு பெரும் செல்வம், நில உடைமை, அந்தஸ்து, சாதி ஆகியன துணையாக இருந்துள்ளதைக் காணலாம். முதலில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையே இருந்தது. பின்னர் இது சர்வசனவாக்குரிமையாக பால், சாதி, வர்க்கம், இனம், சமயம் என்ற பேதங்களைக் கடந்து யாவருக்கும் பொதுவான உரிமை ஆகியது. ஆயினும் நாட்டின் தலைமைத்துவம் விரிவடையவில்லை. அது சலுகைபெற்ற சிறுகுழுக்கள் என்ற சிறு வட்டத்திற்குள் சுருங்கியது. 1931- 47 காலத்தின் சட்டசபை காலனித்துவ ஆட்சியை ஏற்றுக்கொண்டு ஜனநாயக முறையினை இக்காலத்தில் விரிவுபடுத்தியதைக் காணலாம். சுதந்திரத்திற்காக வெகுஜனங்களைத் திரட்டி, விடுதலைப் போராட்ட இயக்கம் வளர்க்கப்படவில்லை. முதலாளித்துவ வகுப்பின் பழமைவாதத் தலைவர்கள் தமது சொத்துகளையும் சுகபோக சலுகைகளையும் பாதுகாத்துக்கொள்வதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். இப்பின்னணியில் டொனமூர்காலச் சட்டசபை ஆண் மேலாதிக்கம், உயர் வகுப்பின் மேலாதிக்கம், உயர்சாதி மேலாதிக்கம் ஆகிய பண்புகளை உடையதாய் இருந்தது. பெரும்பான்மை இன அரசியலை முதன்மைப்படுத்தும் குடும்ப சாம்ராஜ்ஜியம் ஜனநாயகத்தலைமை உடையதாகவும் அமைந்தது.

குறிப்புகள்

5. பொரஸ்டர் ஒபயசேகர (அவிசாவல), டி.எச். கொத்தலாவல (பதுளை), எச்.எம். மாக்கான் மாக்கர் (மட்டக்களப்பு தெற்கு), ஏ.எவ். மொலமுரே (டெடிகம), ரி.பி. பானபொக்கே (கம்பளை), வி.டி.எஸ். விக்கரமநாயக்க (ஹம்பாந்தோட்டை), டாக்டர், ஈ.ஏ. குரே (கொழும்பு தெற்கு), டி.எஸ். சேனநாயக்க (மினுவாங்கொட), டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா (மொறட்டுவ), ஜி.எல். மடவெல (நாரம்மல), ஏ.ஈ. ராஜபக்ச (நீர்கொழும்பு), ஹென்றி டிமெல் (புத்தளம்), ஜே.எச். மீதெனிய (றுவான்வெல) ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர். உயர்தொழில்களில் சிறந்து விளங்கிய புதியவர்களாகவும், பிராந்தியங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுமாக பின்வருவோர் இருந்தனர்: ஜோர்ஜ் ஈ.டி. சில்வா (கண்டி), ஜி.கே.டபிள்யூ. பெரேரா (மாத்தறை). சி.டபிள்யு.டபிள்யூ. கன்னங்கரா (மத்துகம), ஈ.டபிள்யூ. பெரேரா (ஹொரணை), ஈ.ஏ.பி. விஜயரட்ண (கேகாலை), போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்ட டி.பி. ஜயதிலக்க (களனி) (De silva, 1979).

6. டி.எஸ். சேனநாயக்க, டி.பி. ஜயதிலக்க, டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா, சி. பத்துவான் துடாவ, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா, ஆர்.எஸ். தென்னக்கோன், ஏ.ஈ. ராஜபக்ச, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜி.சி.எஸ். கொறயா, ஜி.சி. றம்புக்பொத, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஏ.ஈ. குணசிங்க, சுசந்த டி பொன்சேக, டி.எச். கொத்தலாவல ஆகியோர்.

7. பிற்காலத்தில் இக்குடும்பத்தில் இருந்து அனில் முனசிங்க, சுசில் முனசிங்க, மங்கள முனசிங்க, காமினி ஜயசூரிய ஆகியோர் அரசியலுக்கு வந்தனர். ஏனைய கொய்கம குடும்பங்களாவன: ராஜபக்ச குடும்பம் (ஜோர்ஜ், லக்ஸ்மன், மகிந்த, நிருபமா ராஜபக்சவும் பிறரும்), பொறலுகொட குணவர்தன குடும்பம் (பிலிப், றொபேர்ட், கறோலின், இந்திகா, தினேஷ் குணவர்த்தன, வியன் குணவர்த்தன).

8. 1936 ஆம் ஆண்டின் சட்டசபையின் தமிழ் உறுப்பினர்களாக இருந்தோர்: ஏ. மகாதேவ (சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்); இவர் யாழ்ப்பாணம் தொகுதியில் பிரதிநிதியாக, 1934-47 காலத்தில் சட்டசபை உறுப்பினராக இருந்தார். இவரின் மைத்துனர் ஆர்.சிறி. ராமநாதன் (மன்னார், முல்லைத்தீவு), இதே காலப்பகுதியில் உறுப்பினராக இருந்தார். எஸ்.ஓ. கனகரத்தினம் (மட்டக்களப்பு தெற்கு), டபிள்யூ. துரைச்சாமி (ஊர்காவற்துறை), கே. நடேசய்யர் (ஹட்டன்), எஸ். நடேசன் (காங்கேசன்துறை), ஜி.ஜி.பொன்னம்பலம் (பருத்தித்துறை), நேசம் சரவணமுத்து (கொழும்பு – வடக்கு), ஏ.ஆர். தம்பிமுத்து (திருகோணமலை), எஸ். வைத்திலிங்கம் (தலவாக்கொல்ல) (De silva, 1979).

9. சோல்பரி அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் (1945) பின்னர், 1947 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தலின்பின் அரசாங்கத்தை அமைத்தது. 14 மந்திரிகளுள் அனைத்து உறுப்பினர்களும் ஆண்களாவர். இவர்களுள் 11 பேர் சிங்களவராவர். ஒலிவர் குணதிலக, டி.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜயவர்த்தன, ஜே.எல். கொத்தலாவல, ஏ. ரத்தினாயக்க ஆகிய 8 பேரும் கொய்கம சாதியினர். ஆர்.எஸ்.எஸ். குணவர்த்தன, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, லலிதா ராஜபக்ச ஆகிய 3 பேரும் கொய்கம அல்லாதோர். 1948 வரை கராவ சாதிப் பிரதிநிதித்துவம் மந்திரி சபையில் இருக்கவில்லை. 1947 மந்திரி சபையில் 3 தமிழர்கள் இருந்தனர் (சி. சுந்தரலிங்கம், சி. சிற்றம்பலம்). சுந்தரலிங்கம் 1948 இல் பதவி விலகிய பின்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் மந்திரியானார். மலே முஸ்லிம் ஆகிய ரி.பி. ஜயா இன்னொரு சிறுபான்மை இனத்தவரான மந்திரி ஆவார் (De silva, 1979).

10. கொத்தலாவல, ஜயவர்த்தன குடும்பங்களுக்கிடையில் பிரான்சிஸ் ஆட்டிகலவின் கொலை, ஜோன் கொத்தலாவல கைது என்ற சம்பவங்களின் பின்னர் பகைமை நிலவியது. கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் ரி.ஜி. ஜயவர்த்தன காட்டிய முயற்சி கொத்தலாவல, ஜயவர்த்தன குடும்பங்களுக்கிடையே நீண்ட நாள் பகைமையாக நிலைத்தது (டி. சில்வா, றிஜின்ஸ், 1985: 46). இருப்பினும் ஆட்டிகல சகோதரிகள் இரு குடும்பங்களையும் ஒற்றுமையாக வைத்திருக்க உதவினர் எனக் கூறப்படுகிறது (டாக்டர் காமினி கொறயா – தனிப்பட்ட தொடர்பாடல் மூலம் தெரிவித்தது).


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்