முன்னர் விளக்கப்பட்ட சான்செசின் இலங்கைப் படம், யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன் வரையப்பட்டது. யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்த பின்னரும் இலங்கைப் படங்களும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தனியாகக் காட்டும் நிலப்படங்களும் வரையப்பட்டன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.
கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள இலங்கைப் படம்
போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த கொன்ஸ்டன்டைன் டி சா, 1628 ஆம் ஆண்டில், இலங்கை தொடர்பான 24 நிலப்படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருந்தார். இந்தத்தொகுப்பில் முழு இலங்கையையும் காட்டும் நிலப்படமொன்று உள்ளது. எஞ்சியவை கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, தொந்திரா, மாத்தறை, வெலிகம, அழுத்கம, களுத்துறை, சப்பிரகமுவா, மல்வானை, மெனிக்கடவர ஆகிய இடங்கள் தொடர்பான நிலப்படங்கள். மேற்படி தொகுப்பின் பிரதியொன்று நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் உள்ளது.1 உண்மையில், 1606 ஆம் ஆண்டிலேயே இவ்வாறான தொகுப்பு ஒன்றைத் தயாரித்து அனுப்பும்படி அப்போதைய போர்த்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப் இலங்கையிலிருந்த ஆளுநரைக் கேட்டிருந்தார்.2 அக்காலத்தில் மேற்படி நிலப்படங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டது பற்றிய தகவல்கள் இல்லை. இப்போது நெதர்லாந்திலுள்ள நிலப்படங்களில் ஒல்லாந்த மொழியிலும் குறிப்புகள் உள்ளன. இவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. போர்த்துக்கேயரது நிலப்படங்களை ஒல்லாந்தரும் அவர்களது ஆட்சியின் தொடக்க காலத்தில் பயன்படுத்தியதை இது காட்டுகின்றது எனலாம்.
இந்தத்தொகுப்பிலுள்ள இலங்கையின் நிலப்படத்தை வரைந்தவர் யார் என்பது தெரியவில்லை. இப்படம் கிழக்கு மேல்நோக்கி இருக்குமாறு வரையப்பட்டுள்ளது. (படம்-1) இந்தப் படத்திலும் இலங்கையின் வடிவம் உண்மையாக இருப்பதிலும் பெருமளவு வேறுபட்டே காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு தலைநிலத்துடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதுடன் அதன் வடிவமும் அடையாளம் காணத்தக்கதாக இல்லை. இடையிலுள்ள கடல்நீரேரி இந்நிலப்படத்தில் இல்லை. இலங்கையில் வட பகுதியில் யாழ்ப்பாணப் பட்டினம், பருத்தித்துறை, மன்னார் ஆகிய மூன்று இடங்களை மட்டுமே குறித்துள்ளனர். ஏனைய பகுதிகளை வெறுமனே பாலைவனங்களாகவே காட்டியுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் சில தீவுகளைக் குறித்துள்ளபோதும் அவற்றின் அளவுகளோ அமைவிடங்களோ சரியாக இல்லை. மொத்தத்தில் இந்த நிலப்படத்திலிருந்து இலங்கையின் வட பகுதியைப் பற்றிப் பெறக்கூடிய பயனுள்ள தகவல்கள் மிக மிகக் குறைவே. இந்நிலப்படத்தை, யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் தமது நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்த 1619 ஆம் ஆண்டுக்கு முன்னரே வரைந்திருக்கக்கூடும்.
கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாண நிலப்படம்
இந்த நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பகுதியைக் காட்டும் நிலப்படம் அதே தொகுப்பிலுள்ள மேற்காட்டிய இலங்கைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டதாகத் தெரியவில்லை. (படம்-2) இரண்டு படங்களிலும் உள்ள கரையோரப் பகுதிகளினதும் தீவுகளினதும் வடிவங்களும் அவற்றின் அமைவிடங்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இரண்டும் வெவ்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்தவையாக அல்லது வெவ்வேறு வரைஞர்கள் வரைந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது.
யாழ்ப்பாணத்தைக் காட்டும் நிலப்படம் யாழ்ப்பாணக் குடாநாட்டை முழுமையாகக் காட்டவில்லை. குடாநாட்டின் சிறிய பகுதியும் அதன் கரைக்கு அப்பாலுள்ள சில தீவுகளும் இப்படத்திலுள்ளன. படத்திலுள்ள குடாநாட்டின் பகுதியில், போர்த்துக்கேய மொழியில் “இராச்சியத்தின் தலை நிலம்” (Terra firme do reino) எனப் பொருள்படும் குறிப்புக் காணப்படுகிறது. பல போர்த்துக்கேய, ஒல்லாந்த எழுத்துமூல ஆவணங்களிலும் நிலப்படங்களிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் வன்னியில் அதன் வடக்கிலுள்ள சிறு பகுதியையும் குடாநாட்டுக்கு மேற்கிலுள்ள தீவுகளையுமே யாழ்ப்பாண இராச்சியமாகக் காட்டுவது வழக்கம். வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி தனித்தனிச் சிற்றரசுகளாக யாழ்ப்பாண மன்னனுக்குத் திறை செலுத்தியதாக அவ்வாவணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இங்கு “இராச்சியத்தின் தலை நிலம்” என்பது குடாநாட்டையே குறிக்கிறது என்பது தெளிவு. இப்பகுதியில் கரையோரமாக ஒரு பகுதியைத் தனியாகப் பிரித்துக் காட்டி அதற்கு “நகரத்தின் அமைவிடம்” (Sitio do cidadi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 1921 ஆம் ஆண்டுக்குப் பின்னர் போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தின் அமைவிடத்தைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.
1619 ஆம் ஆண்டில் மூன்றாவது தடவையாக நல்லூரைத் தாக்கி அதைக் கைப்பற்றிய போர்த்துக்கேயத் தளபதி ஒலிவேரா, இரண்டு ஆண்டுகள் நல்லூரையே தலைமையிடமாகக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். 1621 ஆம் ஆண்டிலேயே தனது தலைமையிடத்தைக் கடற்கரையோரத்தில் இன்றைய கோட்டை இருக்கும் பகுதிக்கு மாற்றினான். ஆனாலும், தலைமையிடத்தை ஊர்காவற்றுறைக்கு மாற்றும் எண்ணம் இருந்ததால், 1624 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்டுவதற்கும் அப்பகுதியில் தலைநகரத்தை உருவாக்குவதற்கும் முடிவு செய்யப்படவில்லை.3 எனினும், அவ்விடத்தில் 1614 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதுமை மாதா தேவாலய வளாகத்தைச் சூழவிருந்த மதிலில் இரண்டு கொத்தளங்களை அமைத்து அதைத் தற்காலிகக் கோட்டையாகப் பயன்படுத்தினர்.4 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரின் புதிய யாழ்ப்பாணக் கோட்டையின் கட்டுமான வேலைகள் தொடங்கின. இந்த நிலப்படங்கள் தொகுக்கப்பட்ட 1628 ஆம் ஆண்டில் புதிய கோட்டை பெருமளவுக்கு நிறைவடைந்திருக்கும். 1629 ஆம் ஆண்டில் கண்டிப் படைகள் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது, கோட்டைக்குள்ளிருந்த குறைந்த அளவு போர்த்துக்கேயப் படையினர் கூடுதல் படையுதவி கிடைக்கும்வரை கோட்டையைப் பாதுகாத்தனர் என்பதால், அக்காலத்தில் கோட்டை போதுமான அளவு பலம் வாய்ந்ததாக இருந்தது வெளிப்படை. எனினும், யாழ்ப்பாணத்தைக் காட்டும் இந்த நிலப்படம் யாழ்ப்பாணக் கோட்டையின் அமைவிடத்தைத் தனியாகக் காட்டவில்லை. நகரத்தின் அமைவிடம் நிலப்படத்தில் உள்ளதால், கோட்டையும் அதற்குள் அடங்கியதாக இருக்கக்கூடும்.
புதிய கோட்டை கட்டத் தொடங்கிய அதே காலப்பகுதியில் நகரின் கட்டுமான வேலைகளும் தொடங்கியிருக்கும் எனலாம். 1627 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியப் பகுதியின் கட்டளைத் தளபதியாகவும் அதன் நிர்வாகியாகவும் இருந்த ஒலிவேரா காலமானான்.5 போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரிலிருந்த முக்கியமான சில தேவாலயங்களையும் மிசரிக்கோடியா என்ற கருணை இல்லத்தையும் ஒலிவேராவே கட்டிக் கொடுத்தான் என்ற தகவல்கள் உள்ளதால், அவை 1627 ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறைவு பெற்றுவிட்டன எனலாம்.
படத்திலுள்ள தீவுகளில் இன்றைய வேலணைத் தீவுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்டியுள்ளனர். இதற்குக் “கைஸ் தீவு” (Ilha de Cais) எனப் பெயர் குறித்துள்ளனர். இங்கே “கைஸ்” என்பது “துறை” எனப் பொருள்படும். இத்தீவிலேயே அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த ஊர்காவற்றுறைத் துறைமுகம் இருந்ததால் இத்தீவுக்கு அப்பெயர் ஏற்பட்டது. “கைஸ்” என்ற இந்தச் சொல்லிலிருந்தே ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்றுறைக்குக் “கைட்ஸ்” (Kayts) என்னும் பெயர் ஏற்பட்டது. இத்தீவில் கடற்கரையை அண்டி ஒரு கோட்டையைக் குறித்துக் காட்டியுள்ளனர். இதற்குக் “கைஸ் கோட்டை” என்ற பெயர் காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத் தொடக்கத்தில் இந்துப் பெருங்கடற் பகுதியிலிருந்து வேலணைத் தீவுக்கும் காரைதீவுக்கும் இடையிலுள்ள ஒடுங்கிய நீர்வழியினூடாக யாழ்ப்பாண நகரத்துக்கு வரும் கப்பல்களைக் கண்காணிப்பதற்கு இந்தக் கோட்டை பயன்பட்டது.6 சில ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்படி நீர்வழியின் நுழைவாயிற் பகுதியில் அமைந்திருந்த சிறிய தீவில் கடற்கோட்டையை அமைத்த பின்னர் அக்கோட்டையே குறித்த நீர்வழியூடான கப்பற் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு வகித்தது. எனவே, போர்த்துக்கேயர் ஆட்சியிலிருந்தபோதே 1651 ஆம் ஆண்டில் இக்கோட்டையை இடித்துவிட்டதாகத் தெரிகின்றது.7 1658 ஆம் ஆண்டில் ஊர்காவற்றுறைக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றியபோது அது அழிவடைந்த நிலையிலேயே இருந்துள்ளது.8 இக்கோட்டையின் அழிபாடுகளை இப்போதும் காணலாம்.9
வேலணைத் தீவைத் தவிர அதற்கு அருகில் அமைந்துள்ள காரைதீவையும் (தற்போது காரைநகர்) நிலப்படத்தில் பெயர் குறித்துக் காட்டியுள்ளனர். ஆனாலும், இதில் வேறெந்த விவரங்களும் தரப்படவில்லை. முன்னர் விளக்கிய சான்செசின் நிலப்படத்தில் காரைதீவில், யானை ஏற்றுமதிக்குப் பயன்பட்ட யானைத்துறை என்னும் துறைமுகம் இருந்தது பற்றிய குறிப்பு இருந்ததைப் பார்த்தோம். இந்த நிலப்படம் காரைதீவில் அத்துறையைக் குறித்துக் காட்டவில்லை. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் காரைதீவிலிருந்த யானைத்துறையைக் கைவிட்டு ஊர்காவற்றுறையையே யானை ஏற்றுமதிக்கும் பயன்படுத்தியிருக்கக்கூடும்.
ரெசென்டேயின் யாழ்ப்பாண நிலப்படம்
மேலே குறிப்பிட்ட யாழ்ப்பாண நிலப்படத்திலுள்ள, ஏறத்தாழ அதே பகுதியைக் காட்டும் இன்னொரு போர்த்துக்கேயர் கால நிலப்படம் ரெசென்டே என்பவரால் வரையப்பட்டது. (படம்-3) இந்தப் படம் அந்தோனியோ பொக்காரோ என்பவர் 1635 ஆம் ஆண்டில் எழுதிய நூலொன்றில் உள்ளது. இந்நூல் அக்காலத்தில், போர்த்துக்கேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கீழைத்தேச நாடுகளிலிருந்த கோட்டைகளையும் நகரங்களையும் பற்றிய தகவல்களையும் வரைபடங்களையும் தருகிறது.10 இந்நூலின் உரைப்பகுதியை அக்காலத்தில் போர்த்துக்கேயரின் கீழைத்தேச அரசின் தலைமையிடமான கோவாவில் வரலாற்று எழுத்தராகப் பணியாற்றிய அந்தோனியோ பொக்காரோ எழுதினார். வரைபடங்கள் ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றிய பெட்ரோ பரேட்டே டி ரெசென்டே வரைந்தவை. இந்த நூலும் போர்த்துக்கலுக்கும் அரசராக இருந்த ஸ்பெயின் நாட்டு அரசர் மூன்றாம் பிலிப் 1633 ஆம் ஆண்டில் விடுத்த உத்தரவுக்கு அமையவே எழுதப்பட்டது.11 இந்நூலிலுள்ள பெரும்பாலான கோட்டைகளையும் நகரங்களையும் பொக்காரோவோ ரெசென்டேயோ நேரில் பார்த்ததில்லை. ஆனாலும், இவற்றைக் காட்டும் வரைபடங்கள் அல்லது நிலப்படங்கள் கற்பனையாக வரையப்பட்டனவல்ல. அரசரின் உத்தரவுக்கு அமையப் பேரரசின் தேவைக்கானவை என்பதால், இவ்வரைபடங்கள் அந்தந்த இடங்களிலிருந்து பெறப்பட்ட நம்பகமான தகவல்களையும் பருமட்டான வரைபடங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை. இந்நூலில், காணப்படும் “யாஃபனாப்பட்டம்” (Iafanapatam) எனத் தலைப்பிட்ட படமும் இவ்வாறானதே.
இந்தப் படத்தில் காணப்படும் நிலப்பகுதியினதும் தீவுகளினதும் வடிவங்கள் பெருமளவுக்கு முன்னர் குறிப்பிட்ட, கொன்ஸ்டன்டைன் டி சாவின் தொகுப்பிலுள்ள இலங்கைப் படத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. (படம்-4) இவ்வடிவங்கள் உண்மையாக இருப்பதிலும் பெருமளவு வேறுபட்டு இருப்பதை அவதானிக்கலாம். (படம்-5) இதிலிருந்து யாழ்ப்பாணத்தை நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்து 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதை அண்டியிருந்த தீவுகளினதும் சரியான வடிவங்களைக் காட்டும் நிலப்படங்கள் போர்த்துக்கேயரிடம் இருக்கவில்லை என்பதை அறியமுடிகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியும் வேலணைத் தீவும் வேறு சில தீவுகளும் ரெசென்டேயின் படத்தில் உள்ளன. இதில் அக்காலத்து யாழ்ப்பாணக் கோட்டையையும் ஊர்காவற்றுறைக் கோட்டையையும் கூடிய விவரங்களுடன் அவர் வரைந்துள்ளார். நிலப்பகுதியின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது கோட்டைகள் அளவு மீறி மிகவும் பெரிதாக வரையப்பட்டுள்ளன.
இப்படத்திலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை நான்கு கொத்தளங்களைக் கொண்ட சதுர வடிவானது. உள்ளே தேவாலயம், கட்டளைத் தளபதியின் மாளிகை, பிற படைத்துறை அலுவலர்களுடைய இல்லங்கள் முதலிய கட்டடங்கள் உள்ளன. இவற்றைப் படத்தில் பெயர் குறித்துக் காட்டாவிட்டாலும், பிற ஆவணங்களில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை அடையாளங்காண முடிகிறது. போர்த்துக்கேயரின் கோட்டையைக் காட்டும் ஒல்லாந்தர்கால வரைபடங்களுடன் ஒப்பிடும்போது சில வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, ரெசென்டே நான்கு கொத்தளங்களையும் அம்புத்தலை வடிவில் காட்டியிருக்கப் பிற்காலப் படங்கள் இரண்டு கொத்தளங்கள் வட்டமாக இருப்பதைக் காட்டுகின்றன.12 அத்துடன் கட்டளைத் தளபதியின் மாளிகையின் அமைவிடமும் வேறுபடுகின்றது. கோட்டையின் அளவோடு ஒப்பிடும்போது உள்ளேயிருக்கும் கட்டடங்கள் மிகவும் பெரிதாக வரையப்பட்டுள்ளன. இதனால், அக்கட்டடங்களுக்கிடையே இருக்கவேண்டிய வெளியிடங்கள் சுருங்கிக் காணப்படுகின்றன. கோட்டையின் நடுப்பகுதியில் தனியாக இருக்கவேண்டிய தேவாலயம் ஒரு பக்கச் சுவர் வரை விரிந்து அச்சுவருடன் ஒட்டியபடி வரையப்பட்டுள்ளது. இவ்வாறான குறைபாடுகள் இருந்தபோதும், கோட்டையின் மேலோட்டமான வடிவமும் அதற்குள்ளே அமைந்துள்ள பெரும்பாலான கட்டடங்களும் அவற்றின் ஒன்றுக்கொன்று தொடர்பான அமைவிடங்களும் ஏறத்தாழச் சரியாகவே வரையப்பட்டுள்ளன.
கோட்டைக்கு வெளியிலிருந்த போர்த்துக்கேயரின் நகரத்தைப் படம் முழுமையாகக் காட்டவில்லை. அதன் ஒரு பகுதியைக் குறிக்கும் வகையில் சில வீடுகள் மட்டுமே படத்தில் உள்ளன. இந்தப் படம் வரையப்பட்ட 1635 ஆம் ஆண்டுக்கு முன்பே பல தேவாலயங்களையும் வீடுகளையும் கொண்ட ஒரு நகரமாக யாழ்ப்பாணம் வளர்ந்துவிட்டிருந்ததை அக்காலத்து விவரங்களைத் தரும் எழுத்துமூலச் சான்றுகளிலிருந்து அறியமுடிகின்றது. இதைப் பற்றிய விவரமான தகவல்கள் கிடைக்காததால் அதன் முழு அமைப்பை ரெசென்டே வரையாமல் விட்டிருக்கக்கூடும்.
இந்நிலப்படத்தில் உள்ள தீவுகளின் அமைவிடங்கள் தொடர்பில் குளறுபடிகள் உள்ளதாகத் தெரிகின்றது. படம் தீவுகளின் பெயர்களைத் தரவில்லை. யாழ்ப்பாணக் கோட்டைக்கு எதிரில் வரையப்பட்டுள்ள நீளமான பெரிய தீவு வேலணைத் தீவே எனலாம். இத்தீவில் காட்டியுள்ள கோட்டையின் அமைவிடத்தைப் பார்க்கும்போது, அது வேலணைத் தீவுக்கும் அதற்குக் கீழே வரையப்பட்டுள்ள இன்னொரு தீவுக்கும் இடையிலுள்ள நீர்வழியைப் பாதுகாப்பதாகவே தெரிகிறது. உண்மையில் ஊர்காவற்றுறையில் இருந்த கோட்டையால் பாதுகாக்கப்பட்ட நீர்வழி வேலணைத் தீவுக்கும் காரைதீவுக்கும் இடையில் இருந்தது. இதன்படி படத்தில் வேலைணைத் தீவுக்கு எதிரில் இருக்கும் தீவு காரைதீவாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றின் அமைவிடங்கள் சரியாக இல்லை. அவை இடம் மாறி அமைந்துள்ளதாகத் தெரிகிறது. உண்மை நிலையை அறியாததால், ரெசென்டே இதைப் பிழையாக வரைந்துள்ளார் எனவே கொள்ளவேண்டும். இந்தக் குழப்பத்தினால் வேலணைத் தீவில் கோட்டையின் அமைவிடமும் பிழையாகவே உள்ளது. தற்கால நிலப்படங்களில் ஊர்காவற்றுறைக் கோட்டையுடன் ஒப்பிட்டுப் பார்த்து இதை அறிந்துகொள்ளலாம். (படம்-5) டி சாவின் 1628 ஆம் ஆண்டின் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பகுதியைக் காட்டும் நிலப்படத்தில் இவ்விரு தீவுகளுக்குமான அமைவிடத் தொடர்பு சரியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெசென்டேயின் படத்தில் வேலணைத் தீவில் உள்ள சிறிய கோட்டையும் நான்கு கொத்தளங்களைக் கொண்ட சதுர வடிவம் கொண்டதாகவே காணப்படுகிறது. 1923 ஆம் ஆண்டில் இதுபற்றி ஆய்வு செய்த ஜோசப் பியர்சன் என்பவர் இக்கோட்டை குதிரை இலாட வடிவிலானது என்று எழுதியுள்ளார்.13 தற்காலச் செய்மதிப் படங்களும் இதை உறுதிசெய்கின்றன.14 ஆனாலும், மேற்படி செய்மதிப் படங்களையும், பியர்சனின் வரைபடத்தையும் பார்க்கும்போது ஒரு காலத்தில் கோட்டை நான்கு கொத்தளங்களுடன் சதுர வடிவாக இருந்து பின்னர் இலாட வடிவத்துக்கு விரிவாக்கம் பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. (படம்-6) இது குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவை.
மேற்கோள்கள்
- Nationaal Archief, No. VEL0928
- Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 30.
- Tikiri. Abeyasinghe, Jaffna under the Portuguese (Pannipitiya: Stamford Lake, 2005), 17-18.
- Paulo Da Trinidade, Chapters on the Introduction of Christianity to Ceylon Taken from the Conquesta Spiritual Do Oriente of Friar Paulo Da Trinidade, trans. Edmund Peiris and Achilles Meersman (Colombo, 1972), 217.
- Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 652.
- W. A. Nelson, The Dutch Forts of Sri Lanka, The Military Monuments of Ceylon (with updates by R. K. de Silva) (Colombo: Sri Lanka-Netherlands Association, 2004), 101b.
- Cosme, O. M. Da Silva, Fidalgos in the Kingdom of Jafanapatam (Sri Lanka 1543 – 1658), (Colombo: Harwoods Publishers, 1994), 108.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 302.
- Nelson, The Dutch Forts of Sri Lanka, 101b.
- Antonio Bocarro, O Livro das Plantas de Todas as Fortalezas, Cidades e Povacoes do Estado da India Oriental, 1635.
- Santos, Joaquim Rodrigues dos and Mendiratta, Sidh Losa. “Goa, Daman and Diu as seen by Pedro Resende: a comparative analysis of his cityscapes.” In Oriente nr.20 (2011): 51.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon,” trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959) இல் 323 ஆம் பக்கத்துக்கு அடுத்துள்ள படத்தைப் பார்க்கவும்.
- Joseph Pearson, “Notes on the Forts of the Jaffna Islands,” The Journal of the Ceylon Branch of Royal Asiatic Society of Great Briton & Ireland 29, No. 76 (1923), 191.
- கூகிள் ஏர்த் போன்றவற்றைப் பயன்படுத்தி இதைப் பார்க்கலாம். நான் பார்த்த தேதி யூன் 25, 2023.
தொடரும்.