பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதற்கான காரணத்தை அறிந்து, தீர்த்து வைக்க முயற்சிக்காமல் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர்களாக வீதிகளில் அலைந்த மக்களை, நகர வீதிகளை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறி, லொரிகளில் ஏற்றிச்சென்று கிழக்குப் பிரதேசத்தின் காட்டுப்பகுதிகளில் நிராதரவாக விட்டு வந்த கொடூரமான வரலாறு கூட மலையக மக்களின் வரலாற்று ஏடுகளில் உண்டு. இத்தகைய வரலாற்றைக் கிளறும்போது அது உண்டாக்கும் வேதனையை இதனைப் படிப்பவரும் உணரலாம்.
1974 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய பஞ்ச நிலைமை தொடர்பிலும் அது எந்த அளவுக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களை பாதித்தது என்பதனையும் விபரித்து, காங்கிரஸ் செய்திப் பத்திரிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது :
“அவர்கள் உடுத்தியிருந்த நைந்து கிழிந்துபோன ஆடைகளின் ஊடாக அவர்களது விலா எலும்புகள் துருத்திக்கொண்டு வெளியே தெரிந்தன. கண்கள் குழி விழுந்து பஞ்சடைந்து போய் முகத்தில் இரு புண்களாக காணப்பட்டன. நீண்டகாலமாக தண்ணீரையே கண்டிராத தூசி படிந்த பரட்டை முடியுடனான தலைகள். அவர்கள் எலும்புக்கு மேல் தோலை போர்த்திய நடைபிணங்களாக இருந்தார்கள். அந்த உடம்புக்குள் சதையும் ரத்தமும் இருந்ததா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே தெரிந்தது. அவர்கள் மரணப் படுகுழியை நோக்கி மெல்ல நடந்து செல்பவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்கள் நடை பாதைகளை அணி செய்பவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை. பார்ப்பவர்களின் கண்களை உறுத்துபவர்களாகவே காணப்பட்டனர். அவர்களுக்குத் தேவைப்பட்டது எல்லாம் கொஞ்சம் சத்துள்ள உணவு மட்டும் தான். நீண்ட காலமாக அது அவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.”
சகிப்புத் தன்மையை இழந்த மலையகத் தொழிற்சங்கங்கள் மலையகத் தொழிற்சங்கங்களுக்கான கூட்டு கமிட்டியின் தலைமையின் கீழ் சுமார் 6 லட்சம் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, 1974 டிசம்பர் 14 ஆம் திகதி ஒரு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்தனர். முதல் நாள் போராட்டத்தின் போது ஐக்கிய தோட்டத் தொழிலாளர் யூனியன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த யூனியன்களும் இவர்களுடன் சேர்ந்து பங்குபற்றினர். இவர்களைத் தவிர சிலோன் மேற்கண்டைல் யூனியன், தபால்தந்தி உத்தியோகத்தர்கள் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. தபால் தந்தி யூனியன் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் அவர்கள் பின்வருமாறு தெரிவித்திருந்தனர் :
“இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே. அவர்கள் உழைக்காது விட்டால் இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற முடியாது. அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களது தனி மனிதத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவர்களது இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்து தெரிவித்த அவர்கள் ” இங்கே சர்வதேச மனித உரிமைச் சாசனத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் மனிதநேயம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை என்பன முற்றிலும் அற்றுப் போய்விட்டதா?” என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அப்போது விவசாய கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவிடம் இவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் அவர் கவனிப்பதாக உறுதியளித்த போதும் அது காப்பாற்றப்படவில்லை. டிசம்பர் 28 ஆம் திகதி இவ் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. ஆயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் அறிவித்தார்கள்.
இவ்விதம் எல்லா போராட்டங்களுமே தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் வியர்த்தத்தை நோக்கியே இட்டுச்சென்றன. இந்த விடயம் 1974 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது உரை நிகழ்த்திய மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரிய திலக்க தனது தொகுதியில் மாத்திரம் பல பேர் உணவு பற்றாக்குறையால் பட்டினி கிடந்து இறந்து போய்விட்டனர் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஏ. அசீஸ், தொடர்ச்சியான பசியும் பட்டினியும் தோட்டத் தொழிலாளர்களை தொழிலாளர்கள் என்ற அந்தஸ்தில் இருந்து பிச்சைக்காரர்கள் என்ற நிலைமைக்கு தரம் தாழ்த்தி உள்ளதாகவும், பெண்கள் விபசாரம் செய்து பிழைக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விதம் தொழிலாளர்கள் வறுமை என்ற கிடுக்குப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்த போது மற்றுமொரு பாரிய பிரச்சனையாக அவர்களின் தோட்ட நிலங்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்தன. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் என்ற போர்வையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கே நிலங்களை வழங்குவதை அரசு கொள்கையாகக் கொண்டிருந்ததால் பலரும் தத்தமது வாழ்விடங்களையும் செய்த தொழிலையும் கூட இழந்தனர். அவர்களது வாழ்க்கையின் பாதுகாப்பு அவர்கள் கையில் இருந்து பறிக்கப்பட்டது. படிப்படியான இந்த அடாவடித்தனங்கள் மலையக மக்களின் இருப்பை மலையகத்திலிருந்து இல்லாமல் செய்து, சனத்தொகைச் செறிவைக் குறைத்து, அவர்களுக்கு எந்த விதத்திலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துவிடாமல் பார்த்துக்கொண்டன.
இவற்றுக்கெல்லாம் சமாந்தரமாக மற்றுமொரு சதித்திட்டமும் நடத்தப்பட்டது. தனியார் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டதால் இனிமேல் தோட்டங்களில் தொழிற்சங்கள் செயல்படத் தேவையில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தோட்டங்கள் எல்லாமே அரசாங்கச் சொத்துக்களாக இருக்கின்றபடியால் இனி அரசாங்கமே தொழிலாளரின் நலனை கவனித்துக் கொள்ளும் என அவர்கள் கூறினார்கள். ஆனால் அது ஒரு சாத்தியப்பாட்டுடனான அறிவித்தலாக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு நிறைவேறாத கனவாகவே இருந்துவிட்டு போய்விட்டது.
தொடரும்.