குறைந்த கால இலாபமா ? நீண்ட கால நம்பிக்கையா ?
Arts
9 நிமிட வாசிப்பு

குறைந்த கால இலாபமா ? நீண்ட கால நம்பிக்கையா ?

August 19, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”
-திருக்குறள் (103)-

மு. வரதராசனார் விளக்கம் : இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

“யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்துக்கும் அவுஸ்ரேலியா தமிழ் வர்த்தக சங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது”

இந்தச் செய்தியை ஈழத்தில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் நண்பர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனைப் பார்த்தபோது எனக்கு பெருமகிழ்வே ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் (வடக்கு மாகாணத்தில்) உற்பத்தி  செய்யப்படும் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக, சுலபமாக ஏற்றுமதி செய்யும் வாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனூடாக எந்தவொரு இடைத்தரகர்களினதும் தலையீடின்றி வடக்கு மாகாண உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதுடன், அதிகூடிய இலாபத்தையும் ஈட்டும் வாய்ப்பும் எட்டப்பட்டுள்ளது. இப்படியான நல்ல விடயங்களைப் பாராட்டாமல் எப்படி இருக்கமுடியும்?

சர்வதேசரீதியில் இவ்வாறான ஏற்றுமதி வியாபாரங்கள் மூலம் தொடர்ச்சியான நன்மைகளை அடையவேண்டுமாயின் சில விடயங்களில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தவேண்டியது அவசியமானதாகும்.

  1. உற்பத்தியாளருக்கும் அவர்களின் பொருட்களை வெளிநாடுகளில் கொள்வனவு செய்து விற்பனை செய்வோருக்குமிடையேயான பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
  2. ஏற்றுமதி செய்யும் பொருட்களை மூலப்பொருட்களாக அனுப்பாமல், அவற்றை பதப்படுத்தி முடிவுப்பொருட்களாக அனுப்புவதே சிறந்ததும், அதிகளவு இலாபத்தைத் தருவதுமாகும்.
  3. உற்பத்திப் பொருளை நீண்டகாலம் பழுதடையாமல் பாதுகாத்து வைப்பதற்கான இரசாயனங்களையும் உள்ளீடுகளையும் உரியவகையில் பயன்படுத்தி அவற்றைப் பதப்படுத்த வேண்டும். பொருள், இதன் மூலம் உற்பத்தித் திகதியில் இருந்து, ஏற்றுமதி செய்யப்பட்டு நுகர்வோரை அடையும் வரையான காலப்பகுதிவரை தரமானதாகவும், நுகர்வுக்குரியதாகவும் பேணப்படும்.
  4. பொருத்தமான பொதியிடல் முறைமையைக் கைக்கொள்ளல் வேண்டும். பொருளொன்றை ஏற்றுமதி செய்யும் போது விமானம், கப்பல், ரயில் போன்ற பல்வேறு வகையான வாகனங்களில் பல மாதங்கள் பயணப்பட்டே கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எனவே அவற்றை மனதிற்கொண்டு, எவ்வித ஊறும் உற்பத்திப் பொருளுக்கு நேராதவண்ணம் இந்தப் பொதியிடலை மேற்கொள்ளவேண்டும்.
  5. ஒரே பொருளை எத்தனை அலகுகள் தயாரித்தாலும் அத்தனை அலகுகளும் ஒரே தன்மையோடு, ஒரே தரத்தோடு, ஒரே சுவையோடு இருப்பதை எப்போதும் பேணுவது அவசியம். இத்தகைய தன்மைதான் வாடிக்கையாளர்களை நிரந்தரமாக நமது நுகர்வோராக வைத்திருக்க உதவும்.

மேற்குறித்த தன்மைகளூடாக, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்பி தவறான புரிதல்களைக் களைந்து, அதனூடாக  ஏற்றுமதி வியாபாரத்தின் நீட்சியை இடையறாது பேணி வெற்றிபெற, சில வழிகளை இங்கே பரிந்துரைப்பது பொருத்தமாக இருக்கும்.

வெளிப்படைத்தன்மையும் திறந்த தன்மையும் (Transparency and Openness) :

வாடிக்கையாளர்களுடன் எப்போதும் வெளிப்படைத்தன்மையானதும், திறந்த தன்மையானதுமான  உறவுநிலையை உற்பத்தியாளன் பேணவேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளல், இரு தரப்புக்குமிடயே உள்ள தவறான புரிதல்களைக் களைதல், வாடிக்கையாளரின் ஆலோசனைகளை உற்பத்தியில் உட்புகுத்தல் என்பவற்றை மேற்கொண்டு, பொருளின் தரத்தையும் நுகர்வையும் ஏற்றுமதியையும் இன்னும் அதிகரிக்க முடியும்.

உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வெவ்வேறான இடங்கள், வெவ்வேறான சூழல்கள் என்பவற்றில் இருந்தே பெறப்படும். இடம், சூழல் என்பவற்றின் மாற்றம் மூலப்பொருளின் தன்மையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இது முடிவுப்பொருள் வரை தாக்கம் செலுத்தும். எனவே இத்தகைய மாற்றங்களை முதலிலேயே திறந்த தன்மையோடு  வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாக அதற்கேற்ற மனோநிலைக்கு வாடிக்கையாளர்களைத் தயார்ப்படுத்த முடியும். அத்துடன் நமது உற்பத்திப் பொருள்கள் மீதான அவர்களின் நம்பிக்கையும் இன்னும்  உயரும்.

நிலைத்தன்மை (Consistency) :

நிலைத்தன்மையென்பது, அதிகளவிலான பொருட்களை உற்பத்தி செய்யும்போது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வெறுமனே தொழில் முயற்சிக்கு  மட்டுமல்லாது வாழ்க்கையிலும் நிலைத்தன்மையைப் பேணுவது அனைவருக்கும் பயனைத் தரக்கூடியது. ஒரு பொருளை எத்தனை தரம் உற்பத்தி செய்தாலும் அது எப்போதும் ஒரே மாதிரியாக, ஒரே தரமானதாக மாறாத் தன்மையோடு இருக்க வேண்டும். ஒரு பொருளை சிலர் ஓரிரண்டு தடவைகள் செய்வர், வேறு சிலரோ பல மில்லியன் தடவைகள் செய்வர். இப்படி ஓரிரண்டு தடவைகள் செய்யும் போதும், மில்லியன் தடவைகள் செய்யும் போதும் அந்தப் பொருள் எப்போதும் ஒரேதன்மை கொண்டதாக பிரதி செய்யப்படவேண்டும். இதுவொன்றும் மிகச் சுலபமான காரியமல்லத்தான். ஆனாலும் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நிலைத்தன்மையைப் பேணுவதே உற்பத்தியின் நிரந்தர நுகர்வுக்கு பலமாகும்.

உற்பத்தி நிகழும் ஒவ்வொரு படிமுறையின் இறுதியிலும் அதன் தன்மையைப் பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னர் அடுத்தகட்டப் படிமுறைக்கு அனுப்புவதன் மூலம் இந்த நிலைத்தன்மையைப் பேணமுடியும். சீனா, தாய்வான் போன்ற நாடுகள் நிலைத்தன்மையைச் சரிவரப் பேணுவதாலேயே அவை அதிகளவான உற்பத்திகளை மேற்கொள்வதில் முன்னணியில் திகழ்கின்றன.

நீண்டகால உறவுகளில் கவனம் :

நம்பிக்கை மூலம் கட்டியெழுப்பப்படும் உறவுகள் நிரந்தரமானவை. இருதரப்பிலும் ஏற்படும் சிறிய தவறுகளை நம்பிக்கை மூலம் மன்னிப்பதால்  பெரிய தவறுகள் உருவாகுவதைக் குறைக்க முடியும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்லாது தொழில் முயற்சியிலும் பலனைத் தரக்கூடியது. அதற்கு பரஸ்பர நம்பிக்கை இரு தரப்பிலும் தேவை. பரஸ்பர நம்பிக்கை உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உருவாகினால் அது நிரந்தரமான உறவுநிலையாக நீடிக்கும். இத்தகைய தன்மைக்கு  வெளிப்படத்தன்மையும் திறந்த தன்மையும் அவசியம்.

இறுதி வாடிக்கையாளர் மைய அணுகுமுறை :

உற்பத்தியாளனால் செய்யப்படும் எந்தப்பொருளும் அதன் இறுதி வாடிக்கையாளர்களான நுகர்வோனின் பயன்பாட்டோடு முடிவுக்கு வந்துவிடும். எனவே நுகர்வோரை மனதில் கொண்டு உற்பத்திகளை மேற்கொண்டால், நுகர்வோரின் மகிழ்வால் உண்டாகும் ஆதரவு, சந்தையில் அந்த உற்பத்திக்கு பெரும் மதிப்பைப் பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் வியாபாரத்தை இன்னும் விரிவாக்கி, புதிய பொருட்களையும் உருவாக்கமுடியும்.

எனது அனுபவத்தின்படி, வியாபாரத்தைத் தொடங்கும்போது இறுதி வாடிக்கையாளர்களின் அனுபவங்களையும் அவர்களது கருத்துக்களையும் அறிவதன் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்து, உற்பத்திகளை விரிவாக்கலாம். இதனாலேயே ஆங்கிலத்தில் “வாடிக்கையாளரே மன்னர்கள் (Customers are the Kings)” என்று கூறுவார்கள்.

மனஸ்தாபங்களை ஆக்கபூர்வமாகக் கையாள்தல் :

எத்தகைய உறவுநிலையிலும் சில சமயங்களில் முரண்பாடுகள் வருவதற்கான சந்தர்ப்பம் உண்டு. அதை இரு பகுதியினரும் எவ்வாறு எதிர் கொண்டு அனுசரித்து போகிறார்களென்பதில் தான் அவர்களது உறவுகளின் உறுதித்தன்மை தீர்மானிக்கப்படும். முரண்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை இரு தரப்புக்கும் “வெற்றி-வெற்றி” என்ற முறையில் அணுகுவதன் மூலம் வெற்றி பெறமுடியும்.

ஈழத்தின் பொருளாதாரம் மேலும் மேலும் நுகர்வோர் பொருளாதாரமாக மாறிக்கொண்டு போகின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் இதேமுறைமையைத் தொடர்ந்து தக்கவைப்பது கடினம். அப்படித் தக்கவைத்தாலும்கூட  நீண்டகால அடிப்படையில் எதிர்மறையான விளைவுகளையே உண்டுபண்ணும். ஏனைய நாடுகள் உற்பத்தித் துறையிலும், அதற்கான உட்கட்டமைப்புகளிலும் முன்னோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. எனவே அத்தகைய நாடுகளுடன் போட்டியிட்டு பொருளாதாரத்தில் முன்னிலை பெற, இந்த நுகர்வுப் பொருளாதார மனோநிலையில் இருந்து நாம் விடுபடவேண்டும். குறுங்கால இலாபத்தை முதன்மைப்படுத்தாமல் தொலைநோக்கிலான அபிவிருத்தி, வணிக உற்பத்தி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

வாடிக்கையாளர்களை மையமாக வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அப்படியான ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் எமது பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் அங்குள்ள வர்த்தகர்களும் ஈழத்தின் உற்பத்திப் பொருட்களை நோக்கி தாமாகவே வருவார்கள். அதனால் எமது வாழ்வின் தரநிலையை மேலும் உயர்த்தமுடியும். அதை எம்மக்கள் செய்வார்களென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அதனை இப்போதே தொடங்காவிட்டால் எமது பொருளாதாரம் எங்கே போகுமென்று எவருக்கும் தெரியாது. நான் ஓர் நம்பிக்கையாளன். எமது இளம் சந்ததியினர் தற்போதைய சவால்களை எதிர்த்து வெற்றிபெறுவார்கள் என்று நம்புகிறேன்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்