பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்
Arts
15 நிமிட வாசிப்பு

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்

November 9, 2023 | Ezhuna

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்
கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகு
மிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்
சர்க்கரைப் பறங்கிக்காய் தான்

– பதார்த்தகுண சிந்தாமணி-

பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும்.

‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை இலகுவில் ஊகிக்கமுடியும். இற்றைக்கு 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோருக்குப் பூசணிக்காய் என்றால் அது நீற்றுப்பூசணியையே குறிக்கும். எனினும் பறங்கிப்பூசணி வந்தபின் எமது பூசணியான நீற்றுப்பூசணி திருஷ்டி கழிக்கவும் கண்ணூறு கழிக்கவும் தீய சக்திகளை விரட்டப் புதுவீடுகளின் கூரையில் கட்டித்தூக்கவும் மட்டுமே பெரிதும் பயன்படுகின்றது.

pumpkin

இன்று எம்மால் பூசணிக்காய் என்று அழைக்கப்பெறும் பறங்கிப்பூசணியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்காவாகும்.  மனிதரால் முதன் முதலாகப் பயிரிடப்பட்ட காய்கறிகளுள் இந்தப் பூசணிக்காயும் ஒன்று. கிறித்துவுக்கு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பூசணிவிதைகள் மெக்சிக்கோவில் கண்டறியப்பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளால் பயிரிடப்பட்ட பூசணிக்காயின் விதை அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் மூலமாக ஐரோப்பாவை வந்தடைந்தது. பின்னர் போர்த்துக்கேயர் மூலமாக பூசணிக்காய் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பறங்கியரால் அறிமுகப்படுத்தப்பட்ட காய் என்பதால் இது ‘பறங்கிக்காய்’ என்று அறியப்பட்டது. பின்னர் இதுவே ‘பறங்கிப்பூசணி’ ஆயிற்று. இன்று தமிழ் மக்களின் முக்கிய காய்கறிகளுள் ஒன்றாக இந்தப் பூசணிக்காய் திகழ்கின்றது. அமாவாசை, பௌர்ணமி போன்ற விரத நாட்களின்போது சமையலிலும் திவசத்தின் போது ஐயருக்குக் காய்கறி தானம் கொடுக்கவும் பூசணிக்காய் பயன்படுகின்றது. சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுள் பூசணியும் ஒன்று. இது காய்கறிகளுள் விலை மலிவானதும் கூட. இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கும் பூசணி பயன்படுகின்றது. முழுப்பூசணிக்காய் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பழுதடையாமல் சேமித்துவைக்கக் கூடியது.

ash gourd

உலகளாவியரீதியில் மக்களால் பயன்படுத்தப்படும் முதல் பத்து காய்கறிகளுள் பூசணி ஒன்றாகும். பூசணிக்காய் உலகம் முழுவதும் 3 மில்லியன் ஹெக்டயருக்கு மேல் பயிரிடப்பட்டு 27 மில்லியன் டன்களுக்கு மேல் விளைகிறது. பூசணிக்காய் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான சீனா ஆண்டுக்கு 58% உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 45,000 ஹெக்டயர் பூசணி சாகுபடி உள்ளது. இந்தியா ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் உக்ரேன் இதில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பூசணிக்குடும்பத்தில் (Cucurbitaceae), C. maxima, C. moschata மற்றும் C. pepo என்னும் மூன்று பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூசணி இனங்கள் உள்ளன. இவை உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. இலங்கை விவசாயத் திணைக்களத்தின் தகவலின்படி, தற்போது இலங்கையில் பயிரிடப்படுகின்ற பூசணி வகைகள் C. maxima மற்றும் C. moschata ஆகிய இனங்களைச் சேர்ந்தவை. C. pepo இலங்கைக்குள் அதிகம் பிரபலமடையவில்லை.

thirusdi

அர்ஜுனா, ANK ருஹுணு, மீமினி, ராஜா, கட்டானா, பிங்கா, பத்மா, பட்டர்நட், லீலா, லங்கா, எம்கே ஸ்பாஞ்சி, சாம்சன், கோல்ட்மா, சியோன்லிமா, ஷிபா ஆகியவை இலங்கையில் பயிரிடப்படும் சில பூசணி வகைகளாகும். இந்த வகைகளில் கலப்பின வகைகள், மேம்படுத்தப்பட்ட வகைகள், இறக்குமதி செய்யப்பட்ட வகைகள் மற்றும் திறந்த மகரந்தச் சேர்க்கை வகைகள் ஆகியவை அடங்கும். பொதுவாக பயிரிடப்படும் வகைகளில், பத்மா மற்றும் ANK ருஹுணு மட்டுமே இலங்கை விவசாயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

நிலத்தோடு ஒட்டிப் பரந்து வளரும் தாவரங்களில் கனியுப்புச்சத்துக்கள் செறிந்து காணப்படுவது இயல்பு. பூசணிக்காயிலும் அதன் விதைகளிலும் பொஸ்பரஸ் (phosphorus), மக்னீசியம் (magnesium), செம்பு (copper), துத்தநாகம் (zinc), மற்றும் இரும்புச்சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. குறிப்பாக எமக்குத் தேவையான அளவு துத்தநாகத்தினை பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையாகும்.

பூசணிக்காயில் 80 – 90 % நீர் சத்து இருப்பதாலும் அதேசமயம், கலோரிகள் குறைவாக இருப்பதாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது. பூசணிக்காயின் சதைக்கு ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும் பீட்டா கரோட்டின் எமது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றம் பெறுகிறது. ஆரோக்கியமான தோல் மற்றும் கண்களுக்கு வைட்டமின் ஏ அவசியமானது. அதே நேரத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வைட்டமின் ஏ வலுப்படுத்துகிறது. பூசணிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வயதாகும்போது உடலில் பொட்டாசியம் குறைவதால் ஏற்படும் செவித்திறன் இழப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

எம்முள் பலரும் பூசணிக்காய் சமைக்கும்போது அதன் விதைகளை எறிந்துவிடுவது வழக்கம். ஆனால் பூசணி விதைகளும் பல்வேறு சத்துக்கள் உடையன என்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 1 அவுன்ஸ் (28 கிராம்) பூசணி விதை சுமார் 160 கலோரிகளைக் கொண்டுள்ளது.

பூசணி விதைகளில் உள்ள அதிக துத்தநாகம் விந்தணுக்களின் தரம் மற்றும் ஆண்களின் கருவுறுதலை (male fertility)  மேம்படுத்த உதவும். பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான மெக்னீசியம் அளவு  இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளைப் பேண உதவுவதுடன் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

பூசணி விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தீவனமாகப் பூசணி விதைகளைக் கொடுத்த போதெல்லாம் அவை வழக்கத்திலும் கூடுதலாக சிறுநீர் கழிப்பதை அவதானித்தனர். தமிழ் மருத்துவர்கள் பூசணிக் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளரி விதைகளுக்கும் இந்தக் குணம் இருப்பதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அறிந்து வைத்திருந்தனர் என்பதைப் பழந்தமிழ் மருத்துவ நூல்களின் வாயிலாக உறுதிப்படுத்தமுடியும்.

அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள் சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்குப் பூசணிவிதைகளை உண்ணக் கொடுத்தனர். இது படுக்கைக்கு போகுமுன்னரேயே சிறுநீரை முழுமையாக வெளியேற்றிவிடுவதால் படுக்கையில் சிறுநீர்போவது தவிர்க்கப்படுகிறது.

புரொஸ்ரேற் சுரப்பி (prostate gland) என்பது ஆண்களில் மாத்திரமே காணப்படும் ஒரு விந்து கூழ்ச்சுரப்பியாகும். நடுத்தர வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தசுரப்பி வீங்குவது உண்டு. அடிக்கடியும் குறைவாகவும் சிறுநீர் கழிவது அல்லது கசிவது இந்நோயின் குறிகுணங்களாகும். இதனை Benign Prostatic Hyperplasia (BPH) என்று ஆங்கில மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். பண்டைய தமிழ் மருத்துவர்கள் இந்நோயினைச் சதையடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரவில் சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் எழுந்துபோகும் ஒரு ஆண் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஊகிக்கமுடியும். இது புறொஸ்ரேற் கான்சரிலும் (prostate cancer) வேறானது.

அறுபதுகளில் ஜெர்மன் நாட்டவரால் நடாத்தப்பெற்ற ஆய்வுகள் மூலம் நாளாந்தம் 5 கிராம் தொடக்கம் 15 கிராம் வரையிலான பூசணி விதைகளை உட்கொண்டு வரும் ஒருவருக்கு சதையடைப்புக்  குறிகுணங்கள் குறைந்துவருவது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் ஆரம்ப நிலையில் உள்ள சதையடைப்புக்கு பூசணிவிதைகள் மருந்தாகலாம் என்பதை உறுதிப்படுத்துவதோடு இந்தச் சிகிச்சையினால் குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்றும் கூறுகின்றன. முறையான புரோஸ்ரேற் செயல்பாடு பொருத்தமான துத்தநாக அளவைச் சார்ந்துள்ளது.  ஒரு சில பூசணி விதைகள் வாரத்திற்கு 2-3 முறை உங்கள் புரோஸ்ரேற் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அவை புரோஸ்ரேற் வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சமீபகாலமாக பூசணி விதையில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சதையடைப்புக்கு மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் இந்த பூசணி வித்தெண்ணெயை மருந்துக்கடைகளில் வைத்தியரின் பரிந்துரை இன்றிப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 500 தொடக்கம் 1000 மில்லிகிராம் என்ற அளவில் பூசணி வித்தெண்ணெய் மூன்று மாதங்களுக்கு எடுத்துவரும் ஒருவருக்கு பகல் நேரத்திலும் இரவிலும் சிறுநீர் கழிக்கப்போகும் தடவைகள் குறைந்தமை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுநீரகக் கற்கள் தோன்றுவதைத் தவிர்க்கும் ஆற்றலும் பூசணிவிதைக்கு இருப்பதாக ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன. விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட வேறு சில ஆய்வுகள் நீரிழிவு நோயினால் சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத பாதிப்புக்களைத் தடுக்கும் குணம் பூசணிவித்துக்கள், விதைச்சாறு, விதை எண்ணெய் என்பவற்றுக்கு இருப்பதை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

குடற்பூச்சிகளை அகற்றவும் பூசணி விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. இருநூறு கிராம் தொடக்கம் 400 கிராம் வரையிலான உலர்ந்த, தோல் உரிக்கப்படாத பூசணி வித்துக்களை இடித்து எடுத்துப் பாலும் தேனும் சேர்த்துப் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழிந்தபின் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு குடிக்கவேண்டும். மறுநாள் காலையிலும் இதையே திரும்பவும் செய்யவேண்டும். குடற்பூச்சிகள் அனைத்தும் மலத்துடன் வெளியேற்றப்பட்டுவிடும்.

ஹலோவீன் பேய்நாளும் பூசணிக்காயும்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பூசணிக்காய் வேறொரு விடயத்துக்குப் பெரிதும் பயன்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முப்பத்தோராம் திகதி கொண்டாடப்படும் ஹலோவீன் (Halloween) எனப்படும் பேய் நாளில் பூசணிக்காயைக் குடைந்து அதனுள்ளே விளக்கு வைத்து வீட்டினை அலங்கரிக்கும் வழக்கம் உண்டு. ஹலோவீன் நாள் இரவில் ஊரில் பேய் பிசாசுகளின் நடமாட்டம் கூடுதலாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஹலோவீன் நாள் கொண்டாட்டத்துக்கென்றே அமெரிக்காவில் ஜூன், ஜுலை மாதங்களில் பெருமளவு பூசணி பயிரிடப்படுவதுண்டு.

lantern pumpkin

இந்த ஹலோவீன் நாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் சுவாரசியமான ஐரிஷ் நாடோடிக்கதை உண்டு. 1500 களில் அயர்லாந்தின் கிராமப்புற மக்கள் கஞ்சன் ஜாக் (stingy Jack) என்ற ஒரு மனிதனைப் பற்றி ஒரு நாட்டுப்புறக் கதையைச் சொல்லத் தொடங்கினர். எவருக்குமே எந்த உதவியும் செய்ய விரும்பாத கஞ்சன் ஜாக் பிறரை ஏமாற்றுவதில் வல்லவன். சாத்தான் கூட ஒரு முறையல்ல, மூன்று முறை கஞ்சன் ஜாக்கினால் ஏமாற்றப்பட்டுவிட்டது. ஜாக் இறந்த பின்னர் நரகத்துக்குச் சென்றபோது நரகத்தின் ஆட்சியாளனாக இருந்த சாத்தான் ஜாக்கை நரகத்துள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.

“வெளியே ஒரே இருள். இந்த இருளில் வழியொன்றும் தெரியாமல் நான் எங்கே போவேன்” என்று ஜாக் புலம்பியபோது ஒரு முள்ளங்கியை அவன் கையில் கொடுத்த சாத்தான் “இதனோடு இந்த உலகில் என்றென்றும் அலைந்து திரி” என்று கூறிவிட்டது. முள்ளங்கியின் உள்ளே எரியும் குச்சி ஒன்றை வைத்து அந்த லாந்தர் வெளிச்சத்தில் உலகில் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் கஞ்சன் ஜாக். (பிற்காலத்தில் முள்ளங்கியின் இடத்தைப் பூசணிக்காய் பிடித்துவிட்டது).

நள்ளிரவில் சுடுகாட்டுப் பக்கமாக வெளிச்சம் ஒன்று அங்கும் இங்கும் அலைவதைக் கண்டால் அது ஜாக்கின் லாந்தர் (Jack-o’-lantern) வெளிச்சம் என்பதை அறிந்துகொள்ளலாம். எங்களூர்க் கொள்ளிவாய்ப் பேய்க்கும் அயர்லாந்து நாட்டவரின் கஞ்சன் ஜக்கி சுமந்து திரியும் லாந்தர் வெளிச்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சதுப்பு நிலங்களில் தாவரப் பொருட்கள் சிதைவதால் உருவாகும் மீத்தேன் எரிவாயு நிலத்தின் ஆழத்திலிருந்து வெளியே வரும்பொழுது காற்றிலுள்ள ஒட்சிசன் வாயுவுடன் இணைந்து தன்னிச்சையாக எரிகின்றது. ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்தில் தானாகப் பற்றியெரிந்து பறக்கும் தீச்சுடரே எமது பாட்டன் பாட்டிக்குக் கொள்ளிவாய்ப் பிசாசாகவும் அயர்லாந்து கிராமவாசிகளுக்கு ஜாக்கின் லாந்தர் வெளிச்சமாகவும் தெரிந்தது.

உசாத்துணை

  1. Ekanayaka EMMM, Chandrasekara BSG, Balasooriya BANK. Evaluation of exotic pumpkin hybrids with local pumpkin varieties in the intermediate low country 1 (IL1) of Sri Lanka. Proceeding of the open university research sessions. 2019 May; 9912.
  2. Overview of Cucurbita spp. (pumpkin) and development of value-added products emphasizing its nutritional and chemical composition K.O.G. Himani Ruwanthika, M.L.A. Mayuri S. Munasinghe and R.A. Upul J. Marapana. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10244 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்