இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், பத்தாவது பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 8821 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 396 வேட்பாளர்களும் வன்னித் தேர்தல் தொகுதியில் 423 வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
இலங்கை அரசியலானது பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வருகிறது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது குறைந்தளவிலேயே உள்ளது. இந் நிலையில் இலங்கையின் 16 ஆவது பிரதமராகப் பதவியேற்ற கலாநிதி ஹரிணி அமரசூரிய அரசியல் பின்புலம் அற்று அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றமை 2024 இல் நம்பிக்கை தரும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடும் திருநங்கையாக சானு நிமேசா திகழ்கிறார். இவர் இலங்கைச் சோசலிச கட்சியில் கேகாலை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. LGBTQIA+ சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் இதை முக்கிய மைல் கல்லாகக் குறிப்பிட முடியும். அதேவேளை இலங்கை அரசியலிலும் இது முக்கியமான தருணமாகவே கருதமுடியும்.
அதேவேளை, இலங்கையில் நீண்ட காலமாகவே குயர் மக்களுடைய உரிமைகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. கொலனித்துவ காலச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டக் கோவையின் 365 மற்றும் 365A பிரிவுகளின் அடிப்படையில், தன்பாலீர்ப்பானது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குற்றத்திற்காகப் பத்து ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தச் சட்டங்களை திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாற்றம் மெதுவாகவே நடைபெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. 2022 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் டி. டோலவட்தே தன்பால் ஈர்ப்பைக் குற்றமாக்குவதை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமூலத்தைத் தாக்கல் செய்தார். இவ்விடயம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் வர்த்தமானியில் வெளியானது. இந்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்தாலும், நாட்டின் நலன் மற்றும் சமுதாய மதிப்புகள் பாதிக்கப்படும் என்பதாக எதிர்ப்புத் தொடர்கிறது. இதுவரை, LGBTQIA+ சமூகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய சட்டங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானதல்ல எனத் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தலைமைத்துவ தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவான முன்னெடுப்பாகும். இது சட்டமாக மாறுமா என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, வடபுல அரசியல் சூழலில் எத்தனை அரசியல்வாதிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்? வடபுல அரசியல் களத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பால்நிலைச் சமத்துவம் பற்றியோ LGBTQIA+ உரிமைகளை ஆதரித்தோ தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவில்லை. அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூடப் பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. கடந்த காலங்களில் இது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர்கள்கூட கட்சி சார்ந்தும் தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலும் மௌனித்திருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகள் தொடர்பில் ஆதரவான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போது குயர் வெறுப்பும் தந்தையாதிக்கக் கருத்தியலும் ஆழமாக வேரூன்றிய பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியாமல் போகலாம் என்ற பயம் பல அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.
“LGBTQIA+ சமூகமும் சமீப அரசியல் நிலைமையும் என்ற கருத்தியலை நான் ஒரு எட்டாக் கனியாகவே பார்கின்றேன். குறிப்பிட்டு சொல்லப் போனால் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அரசியல் தலைமைகள் மற்றும் பிரதிநிதிகள் குயர் சமூகத்தைப் பார்க்கின்ற விதத்திற்கும் தமிழ் அரசியல் தலைமைகள் பார்க்கின்ற விதத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் காணப்படுகின்றது. ஆட்சியமைத்திருக்கும் அரசு குயர் சமூகத்தை ஆதரிக்கின்ற ஒரு அரசாக இருந்தாலும் இங்கும் பெரும்பான்மைச் சிக்கல்கள் உள்ளதை உணரமுடிகிறது. LGBTQIA+ சமூகத்தின் அடிப்படை விடயங்களில் கூட தங்கள் கடைக்கண் பார்வையேனும் செலுத்தாத அரசியல்வாதிகளால் எவ்வாறான மாற்றத்தைக் கொடுக்க முடியும். ஒரு தரப்பின் மீது குற்றம்சாட்டுவது பிழையானது. நாங்களும் அவர்களை நாடி எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முயலவில்லை என்பதை விட, முடியவில்லை என்பது தான் நிதர்சனம். எது எவ்வாறாயினும் ஒரு அரசியல் ஆதரவற்ற சமூகமாகவே தமிழ் குயர் சமூகம் இருக்கின்றது.” என்கிறார் சமத்துவத்திற்கான குரல் அமைப்பின் நிர்வாக இயக்குனரும் மனித உரிமை மற்றும் குயர் சமூக செயற்பாட்டாளருமான புனிதா ஜெயக்குமார் (she/her).
உலக நாடுகளில் பால்நிலைக் கற்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் ஏராளமான முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெற்றுவருகின்ற சூழலில் குயர் மக்கள் தொடர்பில் அடிப்படை அறிவற்ற அல்லது புரிந்துகொள்ள முயலாத ஏராளமான அரசியல் பிரதிநிதிகளை வடபுலத்திலே காணமுடிகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் (வன்னித் தேர்தல் தொகுதி) தேர்தல் விஞ்ஞாபனத்தில் “மூன்றாம் பால்நிலை வர்க்கத்தினருக்கான சமூக அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எது முதலாம் பால்நிலை, எது இரண்டாம் பால்நிலை, எது மூன்றாம் பால்நிலை என்ற விவாதங்களுக்குப் போகும் முன் அவர்கள் திருநர்களின் உரிமை சார்ந்து சிறிதேனும் சிந்திக்க முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இருந்தாலும் கூட எல்லாப் பால்நிலையினரையும் தங்கள் பிரகடனங்களில் உள்ளீர்ப்பதும் பால்நிலை உணர்திறன் மிக்க மொழியைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியமான முன்னெடுப்பாக அமையும்.
மேலும் “இப்போது தான் எங்களை பற்றிய தேடல்கள் தமிழ் அரசியல் புலத்தில் புள்ளி வைக்கபட்ட கோலங்களாக இருக்கின்றன. குயர் செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல் தலைமைகளுக்குமான பேச்சுவார்த்தைகள் அரும்புவிடத் தொடங்கியிருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள் குயர் மக்கள் பற்றிய எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதைப் பொதுவெளியில் தெரிவித்திருந்தார்கள். அத்தகைய தவறை இந்த முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள் செய்யக் கூடாது என்பது எனது வேண்டுகோளாக இருக்கின்றது” எனவும் புனிதா குறிப்பிட்டார்.
“அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு. ஆனால், அந்த வெளி இன்னமும் பாரபட்சமாகவே காணப்படுகிறது. பெண்களை உள்வாங்குவதில் இன்றளவும் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இது எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற சிந்தனை முறையும் கூட, இவற்றில் பெரியளவிலான மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பால் பல்வகைமையினரும் அரசியலில் உள்வாங்கப்படுவதில்லை. அரசியல் என்பதைத் தாண்டி எங்கள் மதிப்பிற்குரிய தமிழ்பேசும் வேட்பாளர்களால் அவர்கள் மனிதர்களாகக் கூட கணக்கிலெடுக்கப்படுவதில்லை. வடக்கில் குயர் சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றார்கள். இம்முறை கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற அனைவருக்கும் இவ்விடயம் புதிதல்ல; ஆனால், யாரும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியோ, அவர்களது உரிமைகள் பற்றியோ, அவர்களோடு சேர்ந்து கதைப்பதற்குத் தயாராக இல்லை. ஆனால், திட்டங்களில் மட்டும் இரகசியமாக அவர்களை உள்வாங்குவதை அவதானிக்க முடிகிறது” என்கிறார் திசா திருச்செல்வம்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் “பொதுவெளியில் அவர்களது உரிமைகளைப் பற்றி பேசினால் யாழ் மையவாத சமூகம் வாக்கு வங்கியில் கைவைத்துவிடுவார்களென்ற பயத்தில் தனிப்பட்ட ரீதியாகவும் உள்வீட்டிலும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான நிலைமைகளை குயர் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துகின்ற, அவற்றைக் கேள்விக்குட்படுத்த இயலுமையுடையவர்கள் பொதுவெளியில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அல்லது இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வடக்கில் வாழ்கின்ற குயர் சமூகத்தைச் சேர்ந்த எவரும் மைய நீரோட்ட அரசியல் தொடர்பான எவ்வித நிலைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை; தங்களுடைய உரிமைகள் மற்றும் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், சட்டங்கள் தொடர்பான எவ்வித கோரிக்கைகளையும் வேட்பாளர்களிடம் பொதுவெளியில் முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலைமைகள் தான் அரசியலில் அவர்களுக்கிருக்கக் கூடிய உரிமைகளையும் பங்குபற்றலையும் மழுங்கடிக்கிறது. இன்னும் பெண், ஆண் என்று பேசிக் கொண்டு சமத்துவத்தையும், பன்மைத்துவத்தையும் வரையறை செய்கிறார்கள். இவ்வாறான விடயங்களை ஆழமாக சிந்திக்காதவிடத்து ஒடுக்குமுறைகளற்ற சமூக மாற்றம் சாத்தியம் இல்லை.” என்கிறார் திசா.
“LGBTQIA+ சமூகம் பற்றிய விடயங்களை ஒரு சாதாரண விடயமாகக் கூட அரசியல்வாதிகள் யாரும் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம் வடபுலப் பண்பாடும் பாரம்பரியங்களும் தான். தாம் குயர் மக்களைப் பற்றிப் பேசும் போது மரியாதையையும் வாக்குகளையும் இழக்க நேரிடும் எனப் பெரும்பாலான அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். இவர்களுடைய ஒரே நோக்கம் குறைந்த அளவில் இருக்கும் குயர் சமூகத்தைவிட ஏனைய மக்களின் வாக்குகளைப் பெறுவதே ஆகும். யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் அரசியல்வாதி ஒருவரிடம் குயர் மக்களுடைய உரிமைகள் பற்றி ஏன் பேசுவதில்லை எனக் கேட்டபோது, இவ்வாறான சமூகங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் குயர் சமூகத்தால் பலவகையான முன்னெடுப்புகள் நடந்துவரும் நிலையில் சமூக ஊடகங்களிலும் குயர் மக்கள் பற்றிப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த அரசியல்வாதியின் கேள்வி அபத்தமானதாக இருக்கின்றது” என United Vision Network இன் நிறுவுநரான அனுசன் சத்தியசீலன் குறிப்பிட்டார்.
ஒருவர் அரசியல்வாதியாகப் பொதுவெளியில் நுழையும் போது தன்னை எல்லா வகையிலும் முன்மாதிரியாகப் புடம்போட்டுக் கொண்டு வருதல் அவசியம்; அரசியலில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் சிறந்த தலைமைத்துவம் மிக்கவர்களாகவும் பன்மைத்துவம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்; இச்சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவர் பற்றியும் மனித நேயத்தோடு சிந்திக்க வேண்டும்.
பெண்களின் அரசியல் உரிமை சார்ந்து தற்போதைய தேர்தல் காலத்தில் ‘அவளுக்கென்றொரு வாக்கு’ எனும் கருத்தியல் சமூக வலைத்தளங்களில் ஓரளவிற்குப் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வந்துகொண்டிருந்தாலும் குயர் சமூகத்தைச் சார்ந்து அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தவும் முன்நிலைப்படுத்தவும் கருத்துகளை விதைக்கவும் எவரும் ஆர்வம் காட்டவில்லை என்றுதான் குறிப்பிடவேண்டும். இதில் பெண்கள் மற்றும் குயர் என்ற பிரிவினைவாதத்தை விதைக்காமல் பன்மைத்துவம் மிக்க பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம்” என்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா.
“இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில், சில வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரங்களிலும் விஞ்ஞாபனங்களிலும் குயர் மக்களுடைய உரிமைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். வடபுலத்தில் இன்றைய சூழலில் குயர் உரிமைகளைப் பேசுகின்ற சிலர், இதுவரை காலமும் குயர் உரிமைகளைக் கண்டுகொள்ளாது இருந்துவிட்டு இப்போது பேசுவது ஒரு அரசியல் உத்தியாகக் கூட இருக்கலாம். கடந்தகால அனுபவங்கள் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தினாலும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கின்றது” என United Vision Network இன் இணை – நிறுவுநரான கௌசிகன் சந்திரசேகரம் குறிப்பிடுகிறார்.
வடபுல அரசியலில் LGBTQIA+ சமூகத்தினை உள்ளீர்ப்பதில் பின்நிற்கின்ற சூழலை அவதானிக்க முடிகின்ற அதேவேளை தென்னிலங்கை அரசியலில் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
அந்தவகையில், இலங்கை அரசியலில் LGBTQIA+ மக்களை இணைப்பதில் அரசியல் அடிப்படையில் அரகலய போராட்டத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக, LGBTQIA+ மக்கள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் உரிமைகளைப் பெற்றிட பல பிரசாரங்களிலும், அரசியல் செயற்பாடுகளிலும் கலந்து கொள்கிறார்கள். அரகலய போராட்டம் இலங்கை அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இதில் LGBTQIA+ சமூகத்தினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இணைந்துள்ளனர். இந்த போராட்டத்தின் வாயிலாக அவர்கள் தங்களது அடையாளம் மற்றும் உரிமைகள் மீதான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தனர் எனலாம்.
மேலும், அனுர குமார திஸாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் LGBTQIA+ சமூகத்தை உள்வாங்கிச் செயற்படுவதில் முன்னேற்றகரமான மாற்றங்களை உள்வாங்கியிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அனுர குமார திஸாநாயக்கா தனது ஜனாதிபதி வேட்புமனுவில் பாலின பக்கச்சார்பற்ற அனைவருக்கும் சமத்துவமான ஒரு நாட்டை உருவாக்குவேன் என உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இலங்கையின் முதன்மை ஜனாதிபதி வேட்பாளராக இருந்து LGBTQIA+ உரிமைகளை வெளிப்படையாக ஆதரித்த ஒருவராக அனுர குமார திஸாநாயக்காவைக் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலின் போது அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் LGBTQIA+ சமூகம் சுகாதாரம் – சட்டம் உதவிகள் – சமூகப் பாதுகாப்பு – நீதி உள்ளிட்ட அரச சேவைகளைப் பயன்படுத்துவதை அதிகரித்தல் என்பதை ஒரு முக்கிய விடயமாக உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி LGBTQIA+ சமூகத்துடனான தொடர்புகளில் ஓரளவு ஈடுபாடுகளைக் காட்டினாலும், இது அவர்கள் கொள்கையில் முக்கியத்துவம் பெறவில்லை. தன்பாலீர்ப்பைக் குற்றமாக்குவதை நிறுத்துவதற்கான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த உரிமைகளை முதன்மைக் கொள்கையாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
இலங்கை அரசியலில், LGBTQIA+ உரிமைகளை ஆதரிக்கும் பல கட்சிகளை அவதானிக்க முடிகிறது. LGBTQIA+ சமூகம் உரிமைகளை பெறுவதில் பண்பாட்டு மற்றும் அரசியல் ரீதியான ஏராளமான சவால்கள் உள்ளன. ரணில் விக்கிரமசிங்க பொதுவெளியில் LGBTQIA+ உரிமைகளை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் அவற்றுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சமத்துவம் மற்றும் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் கவனத்துடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பொருளாதார மற்றும் ஆட்சி சீரமைப்புகளையே முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
ஹரிணி அமரசூரிய இலங்கை அரசியலில் பால்நிலைச் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான அரசியல்வாதி. குறிப்பாக LGBTQIA+ உரிமைகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னேற்றமான நிலைப்பாட்டுக்காக அறியப்பட்டவர். தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் உறுப்பினராக, அவர் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் மற்றும் உள்ளடக்குதல் என்ற கொள்கையை ஆதரிக்கிறார். ஹரிணி அமரசூரிய LGBTQIA+ சமூகத்துடன் இணைந்து செயற்படுவது இலங்கை அரசியலில் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான முக்கியமான ஒரு மைல்கல் எனலாம். அவரது ஆதரவு, LGBTQIA+ உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மட்டுமல்லாமல், நாட்டில் அனைத்துவிதமான மனித உரிமைகள் தொடர்பான உரையாடலை ஊக்குவிக்கவும் வழிகோலும்.
சஜித் பிரேமதாச LGBTQIA+ உரிமைகளை ஆதரித்து உறுதியான பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், SJB உறுப்பினர்கள் LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவான சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சஜித் பிரேமதாசவும், பொருளாதார நலன்கள் மற்றும் ஆட்சி மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றார்.
டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, (NPP) இல் ஒரு முக்கியமான ஒருவர். முந்தைய காலங்களில் தன்பாலீர்ப்பு எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் LGBTQIA+ சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இடதுசாரி அரசியல்வாதியாக அவர் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இந்தக் கருத்துகள் அவரது கட்சிக்கு விமர்சனத்தை உருவாக்கியது.
மக்கள் போராட்ட முன்னணி, இலங்கையில் LGBTQIA+ மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனலாம். மக்கள் போராட்ட முன்னணி சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கமாகச் செயற்படுவதால், அடக்குமுறைக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்துகிறது. ஆனால், LGBTQIA+ சமூகத்தின் உரிமைகள் குறித்து அவர்களுடைய நேரடி நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இல்லாமல் இருந்த போதிலும், சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களை ஆதரித்து வருகின்றனர்.
மனித உரிமை ஆர்வலரான சுவஸ்திகா அருளிங்கம் LGBTQIA+ மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதுடன் பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளை நிலைநிறுத்த பங்களிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அவர் தேர்தலில் களமிறங்கியிருந்தாலும், இது வடபுல குயர் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் வேலுசாமி வீரசிங்கம் போன்ற செயற்பாட்டாளர்களின் அரசியல் பிரவேசம் கொழும்பை மையமாகக் கொண்டு அமைந்தாலும், பால்நிலைச் சமத்துவம் நோக்கிய முன்னகர்வில் இவர்களது ஆரோக்கியமான செயற்பாடுகள் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
LGBTQIA+ சமூகத்தினர் பற்றிய வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் அரசியல்வாதிகள் இருக்கின்ற போதிலும் LGBTQIA+ சமூகம் பற்றிப் பேசக்கூடிய வெளி உருவாகியிருக்கின்றமையை ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கமுடியும். மேலும் தமிழ்பேசும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளுக்காகப் பேசும் அரசியல் பிரதிநிதித்துவமும் அவசியமானதாகும்.