அறிமுகம்
வட பிராந்தியத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1230 மி.மீ. ஆயினும்கூட, ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் இது வேறுபடும் (படம் 7.1). இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வங்காள விரிகுடாவில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி வருவதால், மொத்த மழையில் 75 சதவீதம் (700மி.மீ.) வடகீழ் பருவக்காற்றின் போது பெறப்படுகிறது (Alahacoon & Edirisinghe, 2021b). மேலும், வடக்கு பிராந்தியத்தில் 60% மழை (550 மி.மீ.) நவம்பர் 15 முதல் டிசம்பர் 30 வரை பதிவாகுகின்றது. ஆய்வின் படி, கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பதிவான மொத்த மழைவீழ்ச்சியில் 70% இற்கும் அதிகமானவை இக் காலப்பகுதியில் பதிவாகியுள்ளது. முக்கியமாக, நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்குள் மொத்த மழையில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை கிடைக்கின்றது. குறைந்த காலப்பகுதியில் கிடைக்கும் கனமழையினால் குறைந்த உயரம் கொண்ட சில பகுதிகளில் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அதே சமயம், இக்காலத்தில் மழைவீழ்ச்சியினால் 70 சதவீதத்துக்கும் அதிகமான மழைநீர் எவ்வித உபயோகமும் இன்றி கடலில் கலப்பதால், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகின்றது (ADB, 2022). அயன இடை ஒருங்கல் வலயத்தின் இயக்கம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழையை ஏற்படுத்துகிறது. வடக்குப் பகுதியில் மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட ஆண்டுகளில் 100 மி.மீ.இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைப்பதற்கு அயன இடை ஒருங்கல் வலயமே காரணமாகும்.
படம் 7.1. வடக்கு மாகாணத்தின் வேறுபட்ட நிலையங்களின் ஆண்டு மொத்த மழைவீழ்ச்சிப் போக்கு
வெப்பச்சலனத்தினால் ஏற்படும் மழைவீழ்ச்சி சமீபகாலமாக அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதுடன் வட மாகாணத்தின் மழைவீழ்ச்சிப் பாங்கில் சில மாற்றங்களும் காணப்படுகின்றன. வெப்பச்சலன/மேற்காவுகை/உகைப்புச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், வெப்பச்சலன மாதங்களில், குறிப்பாக ஏப்ரல் – மே – ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெப்பச்சலனம் காரணமாக எதிர்பாராத மழைவீழ்ச்சி, காற்றின் வேக மாறுபாடு, வெப்பநிலை மற்றும் ஈரப்பத மாற்றங்கள் ஆகியன உணரப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் மொத்த மழைவீழ்ச்சியில் ஏறக்குறைய 10 % மழைவீழ்ச்சி வெப்பச்சலன செயற்பாட்டின் மூலம் கிடைக்கின்றது (Abeysingha & Rajapaksha, 2020).
இலங்கையின் வட மாகாணத்தில் மழைவீழ்ச்சியின் இடரீதியான மாறுபாடுகள்
இடரீதியாக, வட பிராந்தியத்தில் மழைவீழ்ச்சியில் சில வேறுபாடுகள் உள்ளன (அட்டவணை 7.1), (படம் 7.2). வடக்குப் பிராந்தியத்தின் மொத்த ஆண்டு மழைவீழ்ச்சி பொதுவாக 1230 மி.மீ. ஆகும். எவ்வாறாயினும், ஊர்காவற்றுறை, மாந்தை மேற்கு, நெடுந்தீவு மற்றும் மடுப் பகுதிகளில், சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 980 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே உள்ளது. பெரியமடு, உயிலங்குளம், இரணைஇலுப்பைக்குளம், மூன்றாம்பிட்டி, மருதோண்டிக்குடா, இலுப்பைக்கடவை, பெரியபண்டிவிரிச்சான், கள்ளியடி, ஆத்திமோட்டை, மாதோட்டம், விடத்தல்தீவு, பாலம்பிட்டி, எருக்கலம்பிட்டி, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், வண்டன்குளம், பண்டிவிரிச்சான், தோட்டவெளி, பேசாலை, அரிப்பு, சிலாவத்துறை, கொண்டைச்சி, மறிச்சுக்கட்டி, ஊர்காவற்துறை, பல்லவராயன்கட்டு, நாகபடுவான், கிராஞ்சி, வேரவில், மற்றும் வலைப்பாடு போன்ற பிரதேசங்கள் குறைவான மழைபெறும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை வவுனியா, கணுக்கேணி, திருநெல்வேலி, இரணைமடு, நெடுங்கேணி, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், ஈரட்டபெரியகுளம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி 1250 மில்லிமீற்றருக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது (Alahacoon & Edirisinghe, 2021a).
படம் 7.2. வடக்கு மாகாணத்தின் இடரீதியிலான மழைவீழ்ச்சிப் பாங்கு
முதலாவது இடைப்பருவத்தின்போது வடக்குப் பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளும் அயன இடை ஒருங்கல் வலய விரிவாக்கம் மற்றும் வெப்பச் சலனம் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு மழையைப் பெறுகின்றன. ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது, முல்லைத்தீவு, யாழ்ப்பாண பிரதேசம், கரையோரப் பகுதிகள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் முதலாவது இடைப்பருவத்தின் போது மழை சற்று அதிகமாகக் கிடைக்கின்றது. இப்பிரதேசங்களில் சராசரி மழைவீழ்ச்சி 160 மி.மீ. இற்கு மேல் பதிவாகியுள்ளது. முழுக் கிளிநொச்சி மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் இந்தக் காலகட்டங்களில் 160 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சூரியனின் நிலை ஏறக்குறைய நேரடியாக வடக்கு மாகாணத்திற்கு செங்குத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், உயரமான இடங்களில் இரவும் பகலும் அதிக வெப்பம் நிலவுகிறது (Dananjaya et al., 2022).
வடக்கு மாகாணம் தென்மேற்குப் பருவக்காற்றின் நிழல் பகுதியில் அமைந்திருப்பதால், வறண்ட காற்றின் உள்வருகை காரணமாக மிகக் குறைந்த அளவு மழையைப் பெறுகிறது. இரண்டாவது இடைப்பருவ காலத்தில் சராசரி மழையளவு 280 மி.மீ. ஆகும் (படம் 7.3, 7.4, 7.5, 7.6, 7.7, மற்றும் அட்டவணை 7.2) இருப்பினும், பனிக்கன்குளம், உயிலங்குளம், வவுனிக்குளம் மற்றும் மணியங்குளம் போன்ற சில பகுதிகளில் 280 மி.மீ இற்கும் அதிகமான மழை பெய்யும். வெப்பச்சலன செயல்முறை காரணமாக ஈரமான காற்றின் உள்வருகையுடன் ஈரப்பதனும் அதிகரிக்கின்றமை இதற்குக் காரணமாகும்.
படம் 7.3. பருவகால ரீதியிலான மழைவீழ்ச்சிப் போக்கு
ஏனைய பருவங்களை விட, வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் இக்காலத்தில் அதிக மழையைப் பெறுகின்றன. வடகீழ் பருவத்தின் போது வடக்குப் பிராந்தியத்தின் சராசரி மழையளவு 650 மி.மீ. ஆகும். எனினும், மடுக்கந்த, இளமருதன்குளம் ஈரற்பெரியகுளம், தண்ணிமுறிப்பு, மாமடுவ, நெளுக்குளம், தண்டுவான், ஆறுமுகத்தன் புதுக்குளம், மருதோடை, நைனாமடு, நெடுங்கேணி, புளியங்குளம், கனகராயன்குளம், வட்டக்கச்சி, கரிப்பட்ட முறிப்பு, இரணைமடு, பாவற்குளம், கணுக்கேணி, உடையார்கட்டு பகுதிகள் அதிகளவில் மழையைப் பெறுகின்றன. வடகீழ் பருவத்தின் போது இப்பகுதிகள் 700மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வங்காள விரிகுடாவின் திறந்த கடல் மேற்பரப்பின் ஈரமான காற்று மற்றும் பல்வேறு நிலைகளிலான குறைந்த அழுத்தத்தின் வளர்ச்சி ஆகியவை வடக்கு மாகாணத்திற்கு அதிக மழையை வழங்கும் முக்கிய காரணிகளாகும்.
படம் 7.4. வடக்கு மாகாணத்தில் முதலாவது இடைப்பருவகால மழைவீழ்ச்சியின் இடரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 7.5. வடக்கு மாகாணத்தில் இரண்டாவது இடைப்பருவகால மழைவீழ்ச்சியின் இடரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 7.6. வடக்கு மாகாணத்தில் தென்மேற்கு பருவகால மழைவீழ்ச்சியின் இடரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 7.7. வடக்கு மாகாணத்தில் வடகீழ்ப்பருவகால மழைவீழ்ச்சியின் இடரீதியிலான பரம்பல் பாங்கு
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சியின் பருவகால பாங்கு
வட மாகாணத்தின் பருவகால மழைவீழ்ச்சியின் அளவிலும் போக்கிலும் பல்வேறு மாறுபாடுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை, வெப்பச்சலன செயல்முறை, முகப்புச் செயல்முறை மற்றும் அயன இடை ஒருங்கல் வலயத்தின் இயக்கம் ஆகியவை மூலம் இங்கு மழை கிடைக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய மழைவீழ்ச்சி வடகீழ் பருவ காலத்திலும், இரண்டாவது இடைப்பருவ காலத்திலுமே கிடைக்கின்றது. மாகாணத்தின் மொத்த மழைவீழ்ச்சியின் 85% அளவு, மேற்கூறிய இரண்டு பருவத்திலுமே கிடைக்கின்றது (அட்டவணை 7.3 மற்றும் படம் 7.8). இவ்விரண்டு பருவங்களுமே வடக்கின் ஈரலிப்பான பருவங்கள் ஆகையால், இவை இரண்டையும் சேர்த்து மாரி காலம் என்றும் அழைக்கின்றோம் (Perera, 2021).
படம் 7.8. வடக்கு மாகாணத்தின் இடம்சார்ந்த ரீதியிலான பருவகால மழைவீழ்ச்சி மாற்றம்
இலங்கையின் வட பிராந்தியக் காலநிலை வரலாற்றின் படி, ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி போன்ற சில மாதங்கள் மழை பெய்யும் மாதங்களாகும். வரலாற்றின் படி 1897 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நெடுங்கேணியில் பதிவான 805.7 மி.மீ மழையே வடக்கு மாகாணத்தில் கிடைத்த ஒரு நாளில் கிடைத்த அதிகூடிய மழையாகும். முழு இலங்கையையும் பொறுத்த வரையிலும் இதுவே ஒரு நாளின் அதிக மழை வீழ்ச்சியாகும். பெப்ரவரி 1984 இல் முல்லைத்தீவில் அதிக மாதாந்திர மற்றும் வருடாந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 1984 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு 850 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்தது. இந்தக் கனமழைக்கு வங்கக்கடலில் உருவான சூறாவளி முக்கிய காரணமாகும் (Abeysingha & Rajapaksha, 2020).
இலங்கையின் வடபகுதி, இலங்கையின் பருவமழைக் காலநிலைச் செல்வாக்குடன் உலர் வலயத்தின் கீழ் அமைந்துள்ளது. வட இலங்கையின் மழைவீழ்ச்சி அதன் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சிறிது மாறுபடுகிறது. வங்காள விரிகுடா இலங்கையின் வடபகுதி மழைப்பொழிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட பிராந்தியத்தின் மொத்த வருடாந்த மழைவீழ்ச்சி 1240 மி.மீ ஆகும். இருப்பினும், இது பருவத்திற்கு பருவம் மற்றும் இடத்திற்கு இடம் மாறுபடும். இப்பிரதேசத்தின் முப்பது வருட வரலாற்றின் படி 60% மழைவீழ்ச்சி வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 700 மி.மீ இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
மழையின் போக்கு
வடக்கு மாகாணத்தின் மழைவீழ்ச்சியில் பருவ கால ரீதியாக, காலநிலைப் பருவங்கள் ரீதியாக, ஆண்டுகள் ரீதியாக, மாதாந்த ரீதியாக, வாராந்த ரீதியாக, இடம் சார்ந்த ரீதியாக பல்வேறு வகைப்பட்ட வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும் (படம் 7.9, 7.10, 7.11 மற்றும் 7.12). அந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியின் போக்கில் ஆண்டுச் சராசரி மழை வீழ்ச்சியினுடைய அளவு, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை. 1930 முதல் 1960 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தினுடைய மழை வீழ்ச்சி 22 மில்லி மீற்றராகவும், 1960 முதல் 1990 வரையான காலப்பகுதியில் 34 மில்லி மீற்றராகவும், 1990 இல் இருந்து 2022 வரையான காலப்பகுதியில் 54 மில்லி மீற்றராகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மழைவீழ்ச்சி அளவு அதிகரித்து வருகின்றது. எனினும் கடந்த 2000 ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையான 20 ஆண்டுகாலப் பகுதியில் வடக்கு மாகாணத்தினுடைய மழை வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்புக் காணப்படுகின்றது. இதற்கான பிரதானமான காரணமாக காலநிலை மாற்றத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் (Naveendrakumar et al., 2018).
படம் 7.9. வடக்கு மாகாணத்தின் வருடாந்த மொத்த மழைவீழ்ச்சிப் போக்கு
படம் 7.10. வடக்கு மாகாணத்தின் ஆண்டுரீதியான மாத மழைவீழ்ச்சிப் போக்கு
படம் 7.11. வடக்கு மாகாணத்தின் சராசரி ஆண்டு மொத்த மழைவீழ்ச்சிப் போக்கு
படம் 7.12. வேறுபட்ட நிலையங்களின் ஆண்டு மொத்த மழைவீழ்ச்சிப் போக்கு
பருவ கால ரீதியிலான வடக்கு மாகாண மழை வீழ்ச்சியைப் பொறுத்தவரையில் வடகீழ் பருவ காலம் தன்னுடைய அளவில் குறைந்து கொண்டு செல்வதனையும், இரண்டாவது இடைப்பருவம் தன்னுடைய சராசரி மழை அளவில் உயர்ந்து கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. அதே சமயம் மிகப்பெரிய மாற்றமாக, தென்மேற்குப் பருவக் காற்று நிலவுகின்ற காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் வெப்பச் சலனம் காரணமாக அண்மித்த இரண்டு தசாப்தங்களுக்கு 120 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோல முதலாவது இடைப்பருவக் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவு மழை கிடைத்து வருவதைக் கவனிக்கலாம். அந்த அடிப்படையில், மாரிகாலம் அல்லது வடக்கினுடைய மிக முக்கியமான மழைக்காலம் என்று அழைக்கப்படுகின்ற வடகீழ் பருவக் காற்று காலத்தில் மழையினுடைய அளவு குறைவடைந்து செல்கின்றது. குறிப்பாக டிசம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குப் பின்னர் மழையினுடைய அளவு கணிசமாகக் குறைந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு மாகாணத்தினுடைய மொத்த மழை வீழ்ச்சியில் 65% கொண்டிருக்கின்ற வடகீழ் பருவக் காற்று காலம் தற்பொழுது 58% ஆக குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் மழையினுடைய அளவு 07 வீதத்திலிருந்து 12 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முதலாவது இடைப்பருவத்தை பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக ‘சித்திரை ஒரு சிறு மாதிரி’ எனும் மக்கள் நம்பிக்கை குறைவடைந்து கொண்டு செல்கின்றது. சித்திரை மாதத்தில், அதாவது ஏப்ரல் மாதத்தில், வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியினுடைய அளவு குறைந்து கொண்டு செல்கின்றமை அதற்கான காரணமாகும்.
காலநிலைக் காலங்களில் மழை மாற்றங்கள்
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆண்டுச் சராசரி மழையளவு சுமார் 1240 மி.மீ. ஆகும். வேறுபட்ட காலநிலைக் காலங்களில் (1901-1930, 1931-1960, 1961-1990, மற்றும் 1991-2022) காணப்பட்ட மழை மாற்றங்களின் பகுப்பாய்வின்படி, ஒவ்வொரு காலநிலைக் காலங்களிலும் மழைவீழ்ச்சியில் எத்தகைய வேறுபாடுகளும் பதிவாகவில்லை. 1901 முதல் 1930 வரை, மழைவீழ்ச்சி மாற்றம் 2 மி.மீ. முதல் 5 மி.மீ. வரை இருந்தது. மேலும், நிலையங்களுக்கு இடையேயும் ஆண்டுகளுக்கு இடையேயும் அதிக வேறுபாடு காணப்பட்டது. 1901-1930 காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 1930-1960 வரையான காலத்தில் சராசரி அதிகரிப்பு 17 மி.மீ. ஆகவுள்ளது. இதுவொரு மிகப்பெரிய காலநிலை மாற்ற அம்சமாகப் பார்க்கப்படாவிட்டாலும், 1960 முதல் 1990 வரையான காலநிலைக் காலத்தில் இதன் அதிகரிப்பு 36 மி.மீ. ஆக அதிகரித்தமை, காலநிலை மாற்றத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது. 1990 முதல் 2022 வரையான காலகட்டத்தில், இது மேலும் 52 மி.மீ. ஆக அதிகரித்தது (Shelton & Lin, 2019).
இருப்பினும், நான்கு காலநிலைக் காலங்களிலும் மாதாந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியில் பல மாற்றங்களை நாம் அவதானிக்கலாம். வடக்கு மாகாணத்தில் ஜனவரி மாத மழைவீழ்ச்சியில் அதிக வித்தியாசத்தைக் காணலாம். ஒவ்வொரு காலநிலைக் காலத்திலும், ஜனவரி மாத மழை குறைந்து கொண்டே வருகிறது. எடுத்துக்காட்டாக, 1901-1930 காலப்பகுதியில் 118 மி.மீ. ஆகவும் 1931-1960 காலப்பகுதியில் 90 மி.மீ. ஆகவும், 1961-1990 காலப்பகுதியில் 60 மி.மீ. ஆகவும் குறைவடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் நெற்பயிர்ச்செய்கைக்கான மிக முக்கியமான மழை ஜனவரி மாதத்தில் பெய்கிறது. இந்த ஜனவரி மாத மழையில் ஏற்படுகின்ற குறைவு அல்லது அதிகரிப்பு நெற்செய்கையை, குறிப்பாக நெல்லின் அறுவடையை, கணிசமான அளவு பாதிக்கும். இதனால் தான் பெரும்பாலான விவசாயிகள் ஜனவரி மாதத்தில் குறிப்பாக ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான மழை வீழ்ச்சியை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கடந்த காலநிலைக் காலங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்துக்கான மழை வீழ்ச்சியின் அளவு குறைவடைந்து கொண்டு வருகின்றமையால், வடக்கு மாகாணத்தினுடைய மானாவாரியான நெற்செய்கை பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.
வடகீழ் பருவக் காற்று காலத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்து கொண்டு செல்லுகின்றது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாத காலத்தில் வடக்கு மாகாணத்தினுடைய மழை வீழ்ச்சி அளவு குறைவடைந்து கொண்டு செல்லுகின்றமை நெற்செய்கையை மட்டுமின்றி வடக்கு மாகாணத்தின் தரைக்கீழ் நீர் வளத்தையும் கணிசமான அளவு பாதிக்கின்றது. வடக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாத மழை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வட மாகாணத்தில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கும் மேலாக குறைவான மழைவீழ்ச்சியே இருக்கும் என்பதால் இது மிக முக்கியமான மழையாகும். ஆய்வின்படி, ஏப்ரல் மழையும் குறைந்துள்ளது. மே மாத மழைவீழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், ஜூன் மாத மழையின் சராசரி குறைந்து வருகிறது. சில நிலையங்களில், ஜூன் மாதம், மழை பெய்யாத மாதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாத மழையும் 18 மி.மீ. குறைந்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு காலநிலைக் காலத்திலும் இது ஒரு தெளிவற்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. 1901-1930 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1931-1960 காலப்பகுதிகளில் ஓகஸ்ட் மழைவீழ்ச்சி அதிகரித்தாலும், அனைத்துக் காலநிலை காலங்களிலும் ஏற்ற இறக்க நிலைகளை நாம் அவதானிக்கலாம். அதன் பிறகு, ஓகஸ்ட் மாதத்தின் இரண்டு காலநிலைக் காலகட்டங்களிலும் (1961-1990, 1991-2022) மழை குறைந்துள்ளது. 1901-1930 காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 1931-1960 காலப்பகுதியில் செப்டம்பர் மழை குறைந்தாலும், 1961-1990, 1991-2022 காலப்பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தின் அக்டோபர் மாத மழையில், வேறுபட்ட மழைவீழ்ச்சி அவதான நிலையங்களுக்கிடையில், ஒரு தெளிவான தன்மையைக் காண முடியவில்லை. ஒரு சீரற்ற போக்கையே ஒவ்வொரு நிலையங்களும் கொண்டிருக்கின்றன. இருப்பினும் சில பிரதேசங்களில் ஒக்டோபர் மாத மழையானது அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அம்பலப்பெருமாள்குளம், வவுனிக்குளம், இரணைமடு, தண்ணிமுறிப்பு மற்றும் கணுக்கேணி போன்ற பிரதேசங்களில் ஒக்டோபர் மாத மழை அதிகரித்துக் கொண்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்தின் அனைத்து நிலையங்களிலும் நவம்பர் மாத மழையானது அதிகரித்துக் கொண்டு வருகின்ற நிலைமையை அவதானிக்கலாம். 1931 முதல் 1960 வரையான காலநிலைக் காலத்தோடு ஒப்பிடுகின்ற பொழுது 1960 இல் இருந்து 1990 வரையான காலநிலைக் காலப்பகுதியில் நவம்பர் மாத மழை, சராசரியாக வடக்கு மாகாணத்தில் 58 மில்லி மீற்றரால் அதிகரித்துக் காணப்பட்டது. அதேபோல 1990 முதல் 2022 வரையிலான காலநிலைக் காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின நவம்பர் மாத மழை 86 மில்லி மீற்றராக அதிகரித்துக் காணப்படுகின்றது. இது காலநிலை மாற்றத்தின் ஒரு வெளிப்பாடு என ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் கருதுகின்றனர். வடகீழ் பருவக்காற்று காலம் தன்னுடைய மொத்த மழைவீழ்ச்சியின் அளவில் குறைவடைந்து சென்றாலும் கூட, நவம்பர் மாத மழையில் அதிகரிப்புக் காணப்படுகின்றமை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, மாதாந்திர சராசரிப் பகுப்பாய்வைப் பார்த்தால், இலங்கையின் அனைத்து நிலையங்களிலும் மழைவீழ்ச்சி முறை அதிகரித்து வருகிறது. இருப்பினும், இலங்கையின் வட பிராந்தியத்தில், வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி சில குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களைக் காட்டுகிறது. சில ஆண்டுகள் குறைந்த அளவு மழையையும், சில பகுதிகள், மிக அதிக அளவு மழையையும் பெற்றன. அதே நேரத்தில், அனைத்துக் காலநிலைக் காலங்களிலும் வருடாந்த மொத்த மழையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை.
1901-1930, 1931-1960, 1961-1990, மற்றும் 1991-2022 போன்ற காலநிலை காலத்திற்கான மாதாந்த சராசரி மழையின் ஏற்ற இறக்கமான முறை அக்கராயன்குளம் வவுனியா, பல்லவராயன்கட்டு, திருநெல்வேலி, இரணணைமடு போன்ற பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆண்டு மழை விலகலும் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகின்றது. அக்கராயன்குளம், பாவற்குளம், வவுனிக்குளம், மாங்குளம், இரணைமடு, கணுக்கேணி, கறுக்காய்க்குளம், தண்ணிமுறிப்பு, முருங்கன், முத்தையன்கட்டு, நயினாதீவு, அம்பலப்பெருமாள்குளம், நயினாதீவு, நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சியில் ஆண்டுதோறும் அதிக விலகல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி வகைகளில் மாற்றங்கள்
இலங்கையின் வடக்குப் பகுதி பொதுவாக பருவமழைச் செயல்முறை, சூறாவளி அல்லது முகப்புச் செயல்முறை, வெப்பச்சலன செயல்முறை மற்றும் அயன இடை ஒருங்கல் வலய விரிவாக்கம் போன்ற பல்வேறு செயல்முறைகளில் இருந்து மொத்த மழையைப் பெறுகிறது. இலங்கையின் வட பிராந்தியத்தில் மழைவீழ்ச்சிக்கு பருவமழைச் செயல்முறை முன்னணிப் பங்களிப்பை வழங்குகின்றது. மேலும் இது மொத்த மழையின் 65% பங்களிப்பாகும். எவ்வாறாயினும், வட மாகாணத்தில் கோடை மாதங்களில், குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில், மழையின் அளவு மற்றும் மழைக்காலத்தை தீர்மானிப்பதில் மேற்காவுகைச் செயல்முறை முக்கிய பங்கு வகிக்கிறது (படம் 7.13, 7.14 மற்றும் 7.15). முந்தைய காலநிலைக் காலங்களோடு ஒப்பிடும்போது, தற்போதைய காலநிலைக்காலத்தில், வெப்பச் சலனத்தினால் கிடைக்கும் மழையின் அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெப்ப காலத்தோடு ஒப்பிடும் போது, இது ஆய்வுப் பகுதியில், மொத்த மழை ஒரு குறிப்பிட்ட சதவீத அதிகரிப்பைக் கொண்டுள்ளது. உதாரணமாக, 1960 முதல் 1990 வரை, வெப்பச்சலனம் மொத்த மழையில் 12% ஆக உள்ளது. ஆனால் அதன் அளவு தற்போது 21% ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம், வெப்பச்சலனச் செயல்முறையானது நிலையற்ற மற்றும் கணிக்க முடியாத வானிலையை உருவாக்கி எதிர்பாராத மழையை உண்டாக்குகிறது (Alahacoon & Edirisinghe, 2021a).
வட இலங்கையில், வெப்பச்சலன செயல்முறை பொதுவாக மாலை மற்றும் அதிகாலையில் மார்ச், ஏப்ரல், மே, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில், சூரியனின் நிலை வட மாகாணத்தில் (இலங்கைக்கு அருகிலுள்ள அகலக்கோடுகளில்) கிட்டத்தட்ட மேலே உள்ளது. இதன் விளைவாக, மதிய நேரத்தில் வெப்பச்சலனச் செயன்முறைகள் உருவாக்கப்பட்டு, வளிமண்டலத்தின் மாறன் மண்டலத்தின் கீழ்ப் பகுதியில், நீராவியை பாரியளவில் உயர்த்துதல் மற்றும் மேல் வளிமண்டலத்தால் குளிர்ச்சியடையச் செய்தல் செயற்பாடுகள் காரணமாக வெப்பச்சலன மழை கிடைக்கின்றது. இம்மழைவீழ்ச்சியானது பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னரே ஏற்படுகிறது. சில வேளைகளில் அதிகாலையிலும் ஏற்படுகின்றது.
படம் 7.13. வடக்கு மாகாணத்தின் ஆண்டு மொத்த மழைவீழ்ச்சியில் வேறுபட்ட மழைவீழ்ச்சி வகைகளின் பங்களிப்பு
படம் 7.14. வடக்கு மாகாணத்தின் வெப்பச்சலன/மேற்காவுகை/உகைப்பு மழையின் போக்கு
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வெப்பச்சலன மழை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மழையாகும். ஏனெனில் அதிகரித்த வெயிலினால், மிகக் கடுமையான ஆவியாக்கம் ஏற்பட்டு, நீர்ப் பற்றாக்குறை அல்லது குறைந்த அளவிலான வறட்சி நிலமை நிலவுகின்ற காலப்பகுதிகளில் நிகழ்கின்ற இந்த வெப்பநிலை, வடக்கு மாகாணத்தின் தரை மேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீர் மீள் நிரப்பலுக்கு உதவுகின்ற மிக முக்கியமான மழையாகும். இந்த மழையே வடக்கு மாகாணத்தின் அதி வெப்பமான காலப் பகுதியில் சௌகரியமான வானிலை நிலைமைகள் உருவாகுவதற்கும் உதவியாக உள்ளது.
இதன் விளைவாக, இந்த மழை வட பிராந்தியத்திற்கு இன்றியமையாதது. வெப்பச்சலன செயல்முறையின் சராசரி மழைவீழ்ச்சி வடக்குப் பகுதியில் 330 மி.மீ. (தற்போது மொத்த மழையில் 29% இற்குச் சமம்) அதிகமாக உள்ளது. கடந்த 1930-1960 காலநிலைக் காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பத்தாண்டு வெப்பச்சலன மழையில் 17% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சதவீதத்தில் சில இட வேறுபாடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிற காரணங்களால் மழைப் பொழிவு ஏற்ற இறக்கங்களையும் காட்டுகிறது (Karunathilaka et al., 2017).
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 1976, 1984,1985, 1989, மற்றும் 1999 போன்ற சில ஆண்டுகள் சராசரி வெப்பச்சலன மழையை விட 40% அதிக மழையைப் பெற்றன. மேலும் 1977, 1988 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் சராசரியை விட 40% இற்கும் குறைவான மழை பெய்தது. இருப்பினும், 1971, 1984, 1988 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் இரண்டாவது இடைப்பருவத்தின் போது 175 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகமாக இருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, வெப்பச்சலன மழையின் மொத்த மழையில் 90% மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பெய்யும்; மற்றும் அதிகாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை கிடைக்கப் பெறும். இருப்பினும், வெப்பச்சலன மழையின் போது நிச்சயமற்ற சூழ்நிலையும் நிலவுகிறது. இந்த மழைவீழ்ச்சியில் பல ஏற்ற இறக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏனைய காலங்களுடன் ஒப்பிடும் போது, மார்ச் மாதத்தின் பிற்பகுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் பருவமழைக்காலத்தில் அதிக அளவு மழை கிடைக்கின்றது. இது ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெறும் மழையைவிட 50மி.மீ. அதிகம்.
முதல் மற்றும் இரண்டாம் பருவ மழைக்காலங்களின் வெப்பச்சலன மழை குறிப்பிடத்தக்கது. வறட்சியான வானிலையை எதிர்கொள்கின்ற வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள், நீரின்றிக் காணப்படும் சூழலில், நீர் நிரப்பலை மேற்கொள்கின்ற ஒரே ஒரு ஆதாரமாக இந்த வெப்பச்சலன மழை காணப்படுவதனால், வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு இன்றியமையாத வரமாகவே இது அமைகிறது. 91% இற்கும் அதிகமான மக்கள் இந்த மழைவீழ்ச்சி இன்றியமையாதது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் இது வறண்ட காலத்தில் நிகழ்கிறது. மக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் தண்ணீரைப் பெற பயன்படுத்துகிறார்கள்.
வெப்பச்சலன மழை என்பது முதல் இடைப்பருவமழை காலத்திலும் தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியிலும் நிகழ்கிறது. இந்த இரண்டு பருவங்களும் வறட்சிக் காலங்கள். பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான வறட்சிப் பாதிப்பை எதிர்கொள்கின்றன. சில பிரதேசங்கள், குறிப்பாக மாந்தை மேற்கு, மடு, பூநகரி, தீவுத் தெற்கு, தீவு வடக்கு, காரைநகர் மற்றும் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையான குடிநீர்ச் சிரமங்களை எதிர்கொள்கின்றன. எனவே, இந்தப் பருவங்களின் மழைவீழ்ச்சி மக்களுக்கு ஒரு ‘ரட்சகராக’ கருதப்படுகிறது. இந்த வெப்பச்சலன மழையானது யாழ்ப்பாண மாவட்டத்திலும் வட பிராந்தியத்தின் பிரதான நிலப்பரப்பிலும் நிலத்தடி நீரை நிரப்புவதற்கான முதன்மையான ஆதாரமாகும (Piratheeparajah, 2015).
மழைவீழ்ச்சியில் பருவகால மாற்றங்கள்
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் மழைவீழ்ச்சியில் பருவகால அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அடையாளம் காணப்படுகின்றன (அட்டவணை 7.4). தென்மேற்கு பருவ கால மழை 35 மி.மீ ஆல் குறைந்துள்ளது. மேலும் இரண்டாவது இடைப்பருவ கால மழைவீழ்ச்சி 95 மி.மீ ஆல் அதிகரித்து வருகிறது. வடகீழ் பருவ மழை 90 மி.மீ. குறைந்துள்ளது. மேலும் முதலாவது இடைப்பருவ காலத்தில், ஆய்வுப் பகுதியில் 24 மி.மீ. மழை அதிகரித்துள்ளது. பொதுவாக, தென்மேற்குப் பருவ காலம், வட மாகாணத்தில் மிகவும் வறண்ட காலமாக அடையாளம் காணப்படுகிறது.
வட பிராந்தியத்தின் மழைவீழ்ச்சி முறை மாற்றங்கள் காரணமாக விவசாயம் மற்றும் பிற பொருளாதாரத் துறைகள் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. நீர்ப் பிரச்சினை காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை அல்லது குறைந்த அளவிலான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பதே விவசாயிகளின் பிரச்சினையாகக் காணப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் குறைந்த நீர்மட்டம் காரணமாக தங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீரைப் பெறுவதில் பலர் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். வட மாகாணத்தில் அதிக மழை பெய்யும் பருவங்களில் ஒன்றாக இரண்டாவது இடைப்பருவ காலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தின் சராசரி மழைவீழ்ச்சி அதிகரித்தால், அது மேற்பரப்பு நீர்நிலைகளின் நீர் மட்டத்தைப் பாதிக்கும். மேலும் இந்த மாற்றங்கள் ஆய்வுப் பகுதியின் அறுவடை நடவடிக்கைகளையும் பாதிக்கும் (Somasundaram et al., 2020).
மழைவீழ்ச்சியின் மாதாந்த மாற்றங்கள்
வட மாகாணத்தில் மாதாந்த மழைவீழ்ச்சி முறையில் சில மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 1930 முதல் 1990 வரையிலான காலநிலைக் காலத்தில், நவம்பர் – டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகியவை வட மாகாணத்தில் கடுமையான மழைவீழ்ச்சி மாதங்களாகவும், ஏப்ரல் – ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மிதமான மழை மாதங்களாகவும் அடையாளம் காணப்பட்டன. ஏனைய மாதங்கள் வழக்கமான மழை மாதங்களாக அடையாளம் காணப்படுகின்றன. இருப்பினும், 1990 இற்குப் பிறகு இந்த மாதங்களில் வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மற்றும் ஓகஸ்ட் மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சி மாதங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச், மிதமான மழைவீழ்ச்சி மாதமாகக் கருதப்படுகிறது. அயன இடை ஒருங்கல் வலயத்தின் (ITCZ) விரிவாக்கம் மார்ச் மாதத்தில் அதிக மழை பொழிவதற்கு முதன்மைக் காரணமாகும். அதே நேரத்தில், அயன இடை ஒருங்கல் வலயத்தின் காரணமாக இந்த மாதத்தின் வளி வெப்பநிலையும் அதிகரிக்கிறது. வடக்கு மாகாணத்தில், ஒக்டோபர் – நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையால், இம் மாதங்கள் உயிர்ப் பாதுகாப்பு மாதங்களாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த மாதங்களில் பெய்யும் மழையானது நிலத்தடி நீரை நிரப்புவதற்கும், மேற்பரப்பு நீரைச் சேமித்து வைப்பதற்கும் முதன்மை ஆதாரமாகச் செயற்படுகிறது. இந்த தரைக்கீழ் மற்றும் மற்றும் மேற்பரப்பு நீர்ச் சேமிப்பு, ஆண்டு முழுவதும் உயிரினங்களின் உயிர் வாழ்விற்கு உதவுகிறது.
வட பிராந்தியத்தில், ஜனவரி மாதத்தில் மழைவீழ்ச்சி வெகுவாகக் குறைவதை அவதானிக்கலாம். அந்த வகையில், 1930 முதல் 1960 வரையிலான ஜனவரி மாதச் சராசரி மழையளவு 94.5 மி.மீ. ஆகவும் 1961 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 67.1 மி.மீ. ஆகவும் உள்ளது. மேலும், 2000 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் 93.7 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இருப்பினும், 2004 முதல் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு வடகிழக்கு பருவக்காற்று வலுவிழந்து வருவதாலும், கடலால் சூழப்பட்ட வடக்குப் பகுதியின் வெப்பநிலை மாற்றத்தினாலும் ஜனவரியில் பெறப்பட்ட மழைவீழ்ச்சி அளவு குறைந்திருப்பதைக் காணலாம்.
இருப்பினும், பிப்ரவரியில் மழைவீழ்ச்சி அதிகரித்து வருகிறது. 1931 முதல் 1960 வரை சராசரி மழையளவு 34.8 மி.மீ. ஆகவும், 1961 முதல் 1990 வரை 39 மி.மீ. ஆகவும், 1991 முதல் 2022 வரை 42.7 மி.மீ. ஆகவும் மழைவீழ்ச்சி கிடைப்பதை நாம் அவதானிக்கலாம். ஜனவரி இறுதியில் வெப்பநிலை அதிகரிப்பதால், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக வட பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளது என்றும், பிப்ரவரி இறுதியில் வெப்பச்சலன செயல்முறை காரணமாக மழைவீழ்ச்சி அதிகரித்தது என்றும் சொல்லலாம். இருப்பினும், 2000 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்த மழைவீழ்ச்சியில் நிச்சயமற்ற தன்மைகளை அவதானிக்க முடிகின்றது.
1930 முதல் 2010 வரை, மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை சராசரியாக 56.8 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கின்றது. மார்ச் மாதம் முதலாவது இடைப்பருவ காலம் என்பதனால் வட மாகாணத்தில் பருவமழை தாக்கம் இல்லை. அதன்படி, சில மார்ச் மாதங்களில் மழை கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, 1987 இல் 00 மி.மீ. மழையும், 1991 இல் 1.4 மி.மீ. மழையும், 1999 இல் 2.6 மி.மீ. மழையும், 2005 இல் 00 மி.மீ. மழையும் பெய்தது. இருப்பினும், 2008 மார்ச் 1 முதல் 23 வரை, வெப்பமண்டல ஒருங்கிணைப்புச் செயல்முறையின் காரணமாக 243.1 மி.மீ. மழை பெய்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி 471.4 மி.மீ. மழை கிடைத்தது. இதனால் கடந்த 40 ஆண்டுகளில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிக மழை கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மழை குறைவதைக் காணலாம். 1930 முதல் 1960 வரை சராசரி மழையளவு 66.2 மி.மீ. இருப்பினும், 1961 முதல் 1990 வரை 52.3 மி.மீ. மழை மட்டுமே இருந்தது. அதன்பிறகு, 2001 இல் 125.8 மில்லி மீற்றரும், 2002 இல் 140.1 மில்லி மீற்றரும் மழை கிடைக்கின்றது. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் சராசரி மழை கிடைக்கின்றது. கடந்த 60 ஆண்டுகளாக, மார்ச் மாதத்தில் மழை குறைந்தால், ஏப்ரலில் மழை அதிகமாக இருக்கும். இதன் போக்கை, 2000 – 2015 வரையான காலத்தை உதாரணமாகக் கொண்டு பார்க்கலாம். 2000 மார்ச்சில் 17.3 மில்லி மீற்றரும், ஏப்ரலில் 62.0 மில்லி மீற்றரும் மழை பெய்தது. 2001 மார்ச்சில் 00 மி.மீ. மழையும், 2002 மார்ச்சில் 14.11 மி.மீ. மழையும், 2005 ஏப்ரலில் 140.1 மி.மீ. மழையும், 2005 மார்ச்சில் 00 மி.மீ. மழையும், ஏப்ரலில் 150.1 மி.மீ. மழையும் பெய்தது. 2006 மார்ச்சில் 45.7 மி.மீ. மழையும், ஏப்ரலில் 269 மி.மீ. மழையும் பெய்தது. எனவே, மார்ச் மாதத்தில் பெய்யும் மழையின் அளவு ஏப்ரல் மாத மழையைத் தீர்மானிக்கிறது எனலாம். வடக்குப் பிராந்தியத்தில் மார்ச் மாதத்தில் வளிமண்டல வெப்பநிலையில் கடுமையான மாற்றம் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்குகிறது. இது மழையைக் கொண்டுவருகிறது (குறிப்பாக மதியம் 1 மணிக்குப் பிறகு). தென்மேற்குப் பருவக்காற்று ஏப்ரல் இறுதியில் தொடங்குவதால், பருவநிலை மாற்றங்களால், ஏப்ரலில் பெய்யும் மழையின் அளவு மாறுபடுகின்ற தன்மையை அறியமுடியும்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரை மே முதல் செப்டம்பர் வரை கிடைக்கும் மழை குறைவாகவே உள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று இந்த மாதத்தில் செல்வாக்குச் செலுத்துவதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறண்ட காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தென்மேற்குக் காற்று வீசும்போது வடக்கு மாகாணத்துக்கு குறைவான மழையே கிடைக்கின்றது. அதனால் இந்தக் காலகட்டத்தில் பெறப்பட்ட மழையின் அளவு குறைவாகவே உள்ளது. அது மட்டுமன்றி சில ஆண்டுகளில் இம்மாதத்தில் மழை கிடைக்கவில்லை. 1931 முதல் 1960 வரை சராசரியாக 164.6 மி.மீ. மழையும், 1961 முதல் 1990 வரை 189.9 மி.மீ. மழையும் கிடைத்தது. 2000 முதல் 2015 மே – செப்டம்பர் வரையிலான மழையின் தன்மையைக் கருத்தில் கொண்டால், 2004 மே மாதத்தில் 256.9 மி.மீ. மழையும், 2005 இல் 280 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 2006 மே மாதத்தில் 1.0 மி.மீ. மழையும், ஜூன் மாதத்தில் 0.0 மி.மீ. மழையும், ஜூலையில் 0.0 மி.மீ. மழையும் பதிவாகியதோடு ஆகஸ்டில் குறைந்த மழைவீழ்ச்சி இருந்தது. 2006 மே – ஆகஸ்ட் மாதத்தில் 1.0 மி.மீ. மழை பெய்தது. 2000 ஆம் ஆண்டு மிகக் குறைந்த மழையே கிடைத்தது. அதேபோல, 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் குறைவான மழையே கிடைத்துள்ளது. செப்டம்பர் மாத மழைவீழ்ச்சி முறையில் ஒரு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. 1901 முதல் 1930 வரை செப்டெம்பர் மாதத்தில் 44.88 மி.மீ. மழை சராசரியாகக் கிடைத்தது. பின்னர் 1931 – 1960 காலப்பகுதியில் 69 மி.மீ. மழை செப்டெம்பர் மாதச் சராசரியாக கிடைத்துள்ளது. இது 94.1 மி.மீ. ஆக 1960 முதல் 1990 வரை காணப்பட்டுள்ளது. ஆனால் 1991 முதல் 2022 வரையான காலத்திற்கு 99 மி.மீ. கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மழை வட பகுதி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு மிக அவசியமானது. ஏனெனில் இந்தக் காலத்திலும் ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியிலும் பெய்யும் மழை, விதைப்பு மழை என்று அழைக்கப்படுகிறது. இந்த மழை சீராகப் பெய்தால், பயிர்ச் செய்கைக்கான வாய்ப்பு, குறிப்பாக நெல் விதைப்பு நடவடிக்கை, நன்றாக அமையும். இந்த மாதத்தில் மழை குறைவாக இருக்கும் போது, வடக்குப் பகுதியின் விவசாயத்தை அது பாதிக்கிறது.
வடமாகாணத்தில் அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை கிடைக்கின்றது. வடகீழ்ப் பருவக்காற்றின் ஆரம்ப நிலை என்பதால் அதிக மழை பெய்யும். இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்கள் காரணமாகச் சில நேரங்களில் அதிக மழையும் கிடைப்பதுண்டு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மழைக்காலம் பெரும்பாலும் இந்தக் காலப்பகுதியில்தான் ஆரம்பமாகிறது. 1931 முதல் 1960 வரையான காலநிலைக் காலத்தில் ஒக்டோபர் மாதச் சராசரி மழையளவு 239.7 மி.மீ. ஆகவும், 1961 – 1990 காலப்பகுதியில் 242 மி.மீ. ஆகவும், 1990 முதல் 2022 வரையான காலப்பகுதியில் 312 மி.மீ. ஆகவும் காணப்பட்டது.
வட மாகாணத்தில் நவம்பர் மாதச் சராசரி மழைவீழ்ச்சி ஒவ்வொரு தசாப்தத்திலும் மாறுபடுகின்றது. 1960 முதல் 2022 வரையிலான காலநிலைக் காலத்தில் சராசரி மழையளவு 404.8 மி.மீ. ஆகும். இருப்பினும், 1961 முதல் 1990 வரை 336.1 மி.மீ. மழை கிடைத்துள்ளது. 2000 முதல் 2015 வரை 427.2 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மழைவீழ்ச்சியில் வித்தியாசம் அவதானிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் நவம்பர் மழைவீழ்ச்சியில் வேறுபாடு இருந்தாலும், எல்லா ஆண்டுகளிலும் வேறெந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் மழை பெய்யும். 2000 – 2015 காலகட்டத்தில், 2008 ஆண்டு அதிகபட்சமாக 830 மி.மீ. மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 2000 ஆம் ஆண்டில், 286.8 மி.மீ. குறைவான மழை கிடைத்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் கிடைக்கின்ற கனமழையின் காரணமாக வடக்குப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. டிசம்பர் மாதச் சராசரி மழையளவு, 1931 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில், 200 மி.மீ. ஆகும். 1961 முதல் 1990 வரை 278.2 மி.மீ. மழை கிடைத்துள்ளது. 2000 முதல் 2015 வரை டிசம்பர் மாதத்தில் சராசரியாக 219.4 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. 2000 முதல் 2015 வரையில் அதிகபட்சமாக 321.1 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. 2015 முதல் 2022 வரையான காலப்பகுதியில் 300 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஏனைய நாட்களுடன் ஒப்பிடும்போது டிசம்பர் மாதத்தின் 5 முதல் 20 ஆம் தேதி வரை அதிக மழை பெய்யும்.
மழை நாட்களில் அவதானிக்கப்பட்ட மாற்றங்கள்
மழை நாட்களின் எண்ணிக்கை என்பது ஒரு முக்கியமான வானிலை மூலக்கூறு ஆகும் (Kumar Guntu & Agarwal, 2020). இது எப்போதும் மழைவீழ்ச்சி மற்றும் அதன் செறிவுடன் தொடர்புடையது. ஒவ்வொரு காலநிலைக் காலத்திலும் இலங்கையின் வடக்குப் பகுதியில் சராசரி மழை நாட்களின் எண்ணிக்கைகள் குறைந்து வருகின்றன. மழைநாட்களின் எண்ணிக்கை 1901 முதல் 1930 வரையான காலப்பகுதியில் 88 ஆக இருந்தது. இது 1930 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் 83 ஆகக் குறைந்தது. 1960 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் மழை நாட்கள் 76 ஆகக் குறைந்துள்ளது. எனினும், 1990 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அது 58 ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (படம் 7.16).
படம் 7. 16. வடக்கு மாகாணத்தின் மழைநாட்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வருடாந்த மொத்த மழைவீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் இல்லாமல் மழை நாட்களில் குறைவு ஏற்படுதல் மணித்தியாலத்துக்கான அல்லது நாளுக்கான மழைச்செறிவை அதிகரிக்கும். மழை நாட்கள் குறைவது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். மழை நாட்கள் நீண்ட நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால், அது ஆய்வுப் பகுதிக்கு பயனளிக்கும். ஏனெனில் அதிக மழைநீர் நிலத்திலோ அல்லது மேற்பரப்பிலோ சேமிக்கப்படும். அதே நேரத்தில், மழைவீழ்ச்சியின் பரவலான விநியோகத்தில் நீரின் மேற்பரப்பு ஓட்டம் குறைக்கப்படும். இருப்பினும், குறுகிய காலத்திற்குள் அதிக மழையைப் பெறுகிறோம் (சராசரியில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் மழை நாட்களில் குறைவாகவுள்ளது). இதுவே வடக்கு மாகாணத்தில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதான காரணியாகும். அத்தோடு மழைநீரின் பெரும்பகுதி எந்த உபயோகமும் இல்லாமல் கடலில் கலக்கிறது. எனவே, பருவநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் வட மாகாணத்தில் மழை நாட்கள் குறைவடைவது என்பது எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நவம்பர் 20 முதல் டிசம்பர் 10 வரையான காலப்பகுதிக்குள் வடக்கு மாகாணத்தின் மொத்த மழைவீழ்ச்சியில் 70% இற்கும் அதிகமான மழை கிடைக்கின்றது. அதாவது 20 நாட்களுக்குள் இந்த 70% மழையும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலான பத்து நாட்களுக்குள் மொத்த மழையில் 55% கிடைக்கின்றது. எனவே, இந்த நாட்களில் வட மாகாணத்தில் வெள்ளப் பாதிப்பும் ஏற்படுகிறது. இலங்கையின் வடக்குப் பகுதியினது வாழ்வும் தாழ்வும் வடகிழக்குப் பருவக்காற்றுப் பருவக் காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தே அமைகின்றது. இருப்பினும், இந்தப் பருவத்தில் மழை நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அல்லது நீர் இருப்பை நேரடியாகப் பாதிக்கிறது.
தொடரும்.