பொலநறுவை பண்டைய நகரில் உள்ள ரங்கொத் விகாரையின் அருகில் 1905 ஆம் ஆண்டு இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போது இதன் அடியில் உள்ள பீடப்பகுதி உடைந்த நிலையில் இரண்டு தூண்டுகளாகக் காணப்பட்டது. பின்பு இக்கல்வெட்டு பொருத்தப்பட்டு, அனுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது.
இக்கல்வெட்டு பொ.ஆ. 914-923 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த 5 ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பிதர்வட்டு குழிய எனும் கிராமத்திற்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது மற்றும் அதைக் கண்காணிப்பதற்கு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான செய்தியைக் கூறுகிறது.
5 1/2 அடி 11 அங்குலம் உயரமும், 9 அங்குல சதுரமும் கொண்ட கற்தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களின் கீழே கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டுக்கும், அடுத்த கோட்டுக்கும் இடையில் 3 அங்குலம் இடைவெளி விடப்பட்டுள்ளது.
தூணின் மூன்று பக்கங்களில் எழுத்துக்களும், ஒரு பக்கத்தில் சில உருவங்களும் காணப்படுகின்றன. பக்கம் A யில் 17 வரிகளிலும், B யில் 21 வரிகளிலும், C யில் 16 வரிகளிலும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. பக்கம் D யில் சூரியன், பிறைச்சந்திரன், ஆலவட்டம், காகம் ஆகியற்றின் வடிவமும், காகத்தின் கீழே சிதைந்த நிலையில் நாயின் வடிவமும் காணப்படுகின்றது.
கல்வெட்டின் A பக்கத்தில் 10 ஆம், 11 ஆம் வரிகளில் தமிழர் பற்றிய குறிப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின் வருமாறு,
“தெமெலின் பஹ துன் பதும் ..”
இதன் விபரம் ஆங்கில மொழியில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது. “Ranagama situated in Bidervatu-kuliya of the Eastern Quarter, which had been set apart out of the Demala (land) for the Senevirath Privena..”
இதன் பொருள், “குறித்த ஒரு பெளத்த பிரிவெனா பள்ளிக்குரிய ரணகம எனும் பெயருடைய நிலம் தமிழரின் நிலத்திலிருந்து தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது” என்பதாகும். இதன்படி இப்பகுதியில் இரு ந்த ஒரு பெரிய நிலப்பகுதி தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. இதிலிருந்து ஒரு பகுதியை பெளத்தப் பள்ளிக்காக பிரித்து எடுத்துள்ளனர். பிற்காலத்தில் இது தொடர்பான பிணக்குகள் ஏதாவது ஏற்படாமல் இருக்க இவ்விடயத்தைக் கல்வெட்டில் பொறித்துள்ளனர்.
தமிழ் கிராமங்களில் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில கிராமங்களுக்கு வரக்கூடாது எனக் கூறும் பொலநறுவை அரசமாளிகை கல்வெட்டு
பண்டைய பொலநறுவை நகரில் பராக்கிரமபாகு மன்னனின் அரண்மனை என அடையாளம் காணப்பட்ட கட்டடத்தின் அருகில் இத் தூண் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தற்போது இக்கல்வெட்டு அநுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் உள்ளது. இக்கல் வெட்டு பொ.ஆ 956-972 வரை ஆட்சி செய்த 4 ஆம் மஹிந்தன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிட்ட சில கிராமங்களுக்கு மானியங்கள் வழங்கும் பொருட்டு சில அதிகாரிகளுக்கு அந்தப்பணியை நிறைவேற்ற அரசனால் விடுக்கப்பட்ட கட்டளை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
6 அடி உயரமும், 9.5×8 அங்குல சதுரமும் கொண்ட தூணின் மூன்று பக்கங்களில் எழுத்துக்களும், ஒரு பக்கத்தில் சில அடையாள உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்கம் A யில் 40 வரிகளிலும், B யில் 42 வரிகளிலும், C யில் 36 வரிகளிலும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. D பக்கத்தில் சூரியன், பிறைச்சந்திரன், ஆலவட்டம், அரிவாள், காகம், நாய் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டின் B பக்கத்தில் 27 ஆம் வரியில் தமிழரின் கிராமங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வரி பின்வருமாறு,
“தெமெழ் கினிகம் லத் பிரலக்கம் மே கமத் வெட குலி..”
கல்வெட்டில் தமிழ்க் கிராமங்களில் உள்ளவர்கள் மானியங்கள் வழங்கப்பட்ட கிராமங்களுக்கு வரக் கூடாது எனவும் அங்குள்ள கூலிகளைக் கூட்டிக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழர் பற்றிக் குறிப்பிடும் பொலநறுவை மேற்கு தலைவாசல் தூண் கல்வெட்டு
பண்டைய பொலநறுவை நகரில் மேற்கு தலைவாசல் அருகில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இத்தூண் கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டது. இக்கல்வெட்டு பொ.ஆ 898-914 வரை ஆட்சி செய்த 4ஆம் காசியப்பன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
1901 ஆம் ஆண்டு எச்.சி.பி. பெல் இக்கல்வெட்டைப் பிரதி செய்தார். 6 அடி உயரம் கொண்ட கற்தூணின் மூன்று பக்கங்களில் எழுத்துக்களும், ஒரு பக்கத்தில் வழக்கமாகப் பொறிக்கப்படும் வடிவங்களும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டும் இப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு மானியங்கள் வழங்குவது தொடர்பான விபரங்களைப் பதிவு செய்கிறது.
கல்வெட்டின் A பக்கத்தில் 29 வரிகள் உள்ளன. இவற்றில் 1 முதல் 13 ஆம் வரி வரையும், 19 முதல் 21 ஆம் வரி வரையும் உள்ள எழுத்துக்களும், 29 ஆம் வரியில் உள்ள எழுத்துக்களும் முற்றிலும் சிதைந்து போய் வாசிக்க முடியாத அளவிற்கு அழிந்து விட்டன. B பக்கத்தில் 31 வரிகள் உள்ளன. இவற்றில் 2 முதல் 7 வரையான வரிகளில் உள்ள எழுத்துக்கள் முற்றாக அழிந்து விட்டன. 19 முதல் 26 வரையான வரிகளில் உள்ள எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில உள்ளன. C பக்கத்தில் மொத்தமாக உள்ள 29 வரிகளில் உள்ள எல்லா எழுத்துக்களும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. D பக்கத்தில் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை. மாறாக சூரியன், பிறைச்சந்திரன், ஆலவட்டம், அரிவாள், காகம், நாய் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டின் A பக்கத்தில் 25 ஆம் வரியில் “தெமழ்” எனும் சொல் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.
“மெஹி மே ஆவு தெமெழ்..”
இதன் பொருள் ’இங்கு வந்த தமிழர்கள் ’என்பதாகும்.
தமிழ் எதிரிகள் பற்றிக் கூறும் பொலநறுவை கிரி விகாரை தூண் கல்வெட்டு
பொலநறுவை பண்டைய நகரில் அமைந்துள்ள கிரி விகாரைப் பகுதியில் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. பொ.ஆ. 956-972 வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த 5 ஆம் மகிந்தன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னனின் ஆட்சிக் காலத்தின் போது தான் சோழர் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, மகிந்தனையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
இக்கல்வெட்டு சதுர வடிவமுள்ள உயரமான கற்தூணில் எழுதப்பட்டுள்ளது.தூணின் மூன்று பக்கங்களில் மட்டுமே எழுத்துக்கள் காணப்படுகின்றன. நான்காவது பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் மற்றும் உருவங்கள் முற்றாக அழிந்து விட்டன. கல்வெட்டில் குறிப்பிட்ட சில கிராமங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவது தொடர்பான செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
முதலாவது பக்கத்தில் மொத்தமாக 39 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 1 முதல் 8ஆவது வரி வரையான எழுத்துக்கள் முற்றாக அழிந்து விட்டன. 10, 20, 21, 22, 36, 37, 38, 39 ஆகிய வரிகளின் முற்பகுதியில் உள்ள எழுத்துக்களும் சிதைந்து விட்டன. இரண்டாவது பக்கத்தில் மொத்தமாக 37 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் 1 முதல் 7 ஆம் வரிகளிலும், 37 ஆம் வரியிலும் உள்ள எழுத்துக்கள் முற்றாக அழிந்து விட்டன. 8 முதல் 19 வரையும், 26 முதல் 37 வரையும் உள்ள வரிகளின் பிற்பகுதியில் உள்ள எழுத்துக்களும் சிதைந்து விட்டன. மூன்றாவது பக்கத்தில் 38 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் 1 முதல் 7 வரையான வரிகளில் உள்ள எழுத்துக்கள் முற்றாக அழிந்து விட்டன. 8, 9, 12, 13, 14, 25, 26, ஆகிய வரிகளில் சில சொற்கள் சிதைந்துள்ளன.
கல்வெட்டின் முதலாவது பக்கத்தில் 18 ஆம், 19 ஆம் வரிகளில் தமிழர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதன் விபரம் பின்வருமாறு,
“லக் அம்புரென் தெமெழ் ருபு அந்துர ஹெர ச..”
இதன் பொருள், ’தமிழ் எதிரிகளால் இருள் மாயமாகி இருந்த இலங்கையை ஒளி பெறச்செய்த மன்னன்’ என்பதாகும். மேலும் மூன்றாவது பக்கத்தில் 23 ஆம் வரியில் “தெமெழ் குலி” எனும் பதமும் காணப்படுகிறது. இது ’தமிழர் கூலி’ எனப் பொருள்படுகிறது.
தமிழர் பகுதியின் தலைமை அதிகாரி பற்றிக் குறிப்பிடும் மழுவேயாய கல்வெட்டு
தம்புள்ள நகரின் தென்கிழக்குப் பக்கமாக நக்கிள்ஸ் மலைத் தொடருக்கும், வஸ்கமுவ காட்டுக்கும் இடையில் ஹெட்டிப்பொல ஊடாக மகியங்கனைக்கு ஒரு பாதை செல்கிறது. இப்பாதையில் சுமார் 30 கி. மீ தூரத்தில் மழுவேயாய என்னுமிடம் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் 1911 ஆம் ஆண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பலகை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 பெரிய துண்டுகளாகவும், பல சிறிய துண்டுகளாகவும் உடைந்த நிலையில் இது காணப்பட்டது. இவற்றை ஒன்றாகப் பொருத்தியபோது 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்பலகை கிடைத்தது. இதில் அடிக்கோடிடப்பட்ட 30 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இதன் எழுத்துக்கள் பல இடங்களில் சிதைந்து காணப்பட்டன.
இக்கல்வெட்டு பொ.ஆ. 946-984 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் வேவல் கெட்டிய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், குறிப்பிட்ட ஒரு ஊருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு பற்றியும், இங்கு வழிப்பறிக் கொள்ளையர்கள், திருடர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடுக்க வேண்டிய தண்டனை பற்றியும், எந்தெந்த அதிகாரிகள் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் மன்னன் இட்ட கட்டளை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் தமிழர் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் 4 ஆம் வரியிலும், 28 ஆம் வரியிலும் இந்தக் குறிப்புகள் உள்ளன. இவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு,
4 ஆம் வரியில் உள்ள வாசகங்கள்,
“தெமெழ் வெகர் பமனியன் தசகமத் எஹெகி நாயக..”
இதில் ’தமிழர் மடாலயத்தில் பரம்பரை சொத்துக்களும், நிரந்தர மானியங்களும், பத்து ஊர்களுக்கு வழங்கப்படும் மானியங்களும் அந்த ஊர் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
28 ஆம் வரியில் உள்ள வாசகங்கள்,
“மாதபியன் இசா மெஹி ம தெமெழ் அதிகார கிரா மாதபியன் மெகாப்பர் வடகாமி..”
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்து ஊர்களைப் பாதுகாக்கும்படி அரசனால் கட்டளையிடப்பட்ட 6 உயர் அதிகாரிகளில் ஒருவரான தமிழர் பகுதியின் தலைமைஅதிகாரி பற்றி இவ்வரியில் கூறப்பட்டுள்ளது.
தொடரும்.