இரசவர்க்கம்: தாவரநெய்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம்: தாவரநெய்கள்

February 15, 2023 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

வேப்பெண்ணெய்

வாதம்போம் பித்தமிகும் மாறாக்கிரந்திபோ
மோதுங்கரப்பன் சிரங்கோடிப்போம்-போதவே
வேப்பெண்ணெய் கொண்டால் விசம்மீழும் சன்னிபோம்
காப்புடைய கையாளே காண்

இதன் பொருள்: காப்பு அணிந்த கைகளை உடையவளே காண்பாயாக. வேப்பெண்ணெயால் வாதம் போகும். பித்தம் கூடும். மாறாத கிரந்தி மாறும். கரப்பனும் சிரங்கும் மாறும். கடிவிஷம் இறங்கும். சன்னிநோய் குணமாகும்.

வேப்பெண்ணெய்

மேலதிக விபரம்: வேப்பிலைத்தூளை வேப்பெண்ணெயுடன் கலந்து பெறப்பட்ட தைலத்தை, வலிப்பு, சன்னி  என்பவற்றால் பாதிக்கப்பட்ட பாகங்களுக்குப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையில் வேப்பெண்ணெய் தடவி, அதனைத் தணலில் வாட்டி, இலேசான சூட்டுடன் உடலில் வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக்கட்ட வீக்கம் குறையும் என்று தமிழ் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வெப்பமும் புழுக்கமும் கூடிய கோடைகாலத்தில் தோன்றும் தேமல் எனப்படும் தோல் நிறமாற்றங்கள் தோலில் வாழும் ஒரு பங்கசுவால் (Tinea versicolor) தோற்றுவிக்கப்படுகின்றன. வேப்பிலைகளை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெயும் தேன்மெழுகும் சேர்த்து ஒருபசையாகத் தயாரித்துத் தேமல் உள்ள இடத்தில் நான்கு இரவுகள் பூசிவர தேமல் மறையும்.

சொறி, சிரங்கு, எக்சிமா, புண் போன்ற தோல் வியாதிகளுக்கு 1 மேசைக்கரண்டி வேப்பெண்ணெயை 8 மேசைக்கரண்டி திராட்சைவிதை எண்ணெய் (grape seed oil) அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து ஒரு நாளைக்கு இரு தடவை தோலில் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவும். தோலில் அரிப்பு ஏற்பட்டால் இந்தக்கலவையில் வேப்பெண்ணெயின் அளவைக் குறைக்கவும்.

தலையில் பொடுகுப்பிரச்சினை இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் ‘ஷம்பூ’ வுடன் சிலதுளி வேப்பெண்ணெய் சேர்த்துப்பயன்படுத்தவும். வேப்பம்பூக்களை நல்லெண்ணெயில் கொதிக்கவைத்து வடித்து எடுத்த எண்ணெயைத் தலையில் தேய்த்து வந்தாலும் பொடுகு இல்லாமல் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. தலையில் பேன்களை அகற்ற வேப்பெண்ணெயும் நல்லெண்ணெயும் சரிசமமாகக்கலந்து தலைக்கு வைத்து தேய்த்து ஒரு மணி நேரம் கடந்தபின் ஷம்பூவால் கழுவிவிடவும். கிழமைக்கு ஒரு தடவையாக தொடர்ந்து மூன்று கிழமைகள் அல்லது பேன் தொல்லை தீரும்வரை இவ்வாறுசெய்யவும்.

நுளம்பு (கொசு)த் தொல்லையைத் தவிர்க்க வேப்பெண்ணெயுடன் 5 மடங்கு வசலின் (Vaseline) அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து தோலில் பூசிவிடவும். விளக்கு எரிக்கப்பயன்படும் எண்ணெயுடன் 5% தொடக்கம் 10% வேப்பெண்ணெய் கலந்து எரித்தால் நுளம்புகளை அண்டவிடாமல் தவிர்க்கலாம். வேப்பெண்ணெய் பாதுகாப்பான பூச்சிகொல்லி மருந்தாகும். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் நீங்கள் வளர்க்கும் செடிகொடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க வேப்பெண்ணெய் பயன்படும்

ஒரு லீற்றர் தண்ணீரில் 30 மில்லிலீற்றர் அல்லது 2 மேசைக்கரண்டி வேப்பெண்ணெயைக் கலக்கவேண்டும். இதனுடன் 1 மில்லி லீற்றர் டிஷ் வாஷிங் திரவத்தையும் (Dish washing liquid) சேர்க்கவும். (வேப்பெண்ணெய் தண்ணீருடன் சீராகக் கலப்பதற்கு டிஷ்வாஷிங் திரவம் உதவுகிறது) நன்றாகக் கலக்கியபின் உடனடியாக இந்தக் கலவையை இலைகளின் மேற்புறத்திலும் பூச்சிகள் வழக்கமாக ஒளிந்திருக்கும் கீழ்ப்புறத்திலும் விசிறிவிடவும். வேர்களைச் சுற்றியும் விசிறி விடலாம். இந்தக்கலவையைத் தயாரித்து வைத்திருக்கக்கூடாது.

வீட்டுச் செல்லப்பிராணிகளில் தொற்றியிருக்கும் பேன், மூட்டைப்பூச்சி போன்றவற்றை ஒழிக்க பேபி ஷம்பூவுடன் (baby shampoo) எட்டில் ஒரு பங்கு வேப்பெண்ணெய் கலந்து தேய்த்துக்கழுவிவிடவும். வேப்பெண்ணெய்க்குரிய வாசம் பலருக்கும் பிடிப்பதில்லை. இதனைத்தவிர்க்க லவென்டர் (lavender) எண்ணெய் போன்ற உங்களுக்குப்பிடித்த வாசனை எண்ணெய் ஒன்றின் சிலதுளிகளை வேப்பெண்ணெயுடன் கலந்துவிடுவதன் மூலம் வேப்பெண்ணெய் வாசத்தை மறைத்துவிடலாம்.

வேம்பின் சகல பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிரம்பப் பெற்றவை என்ற உண்மை இன்று விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. Neem oil (நீம் ஒயில்) என்பது வேப்பெண்ணெயின் வர்த்தகப்பெயர். Azadirachta indica A. JUSS. என்பது வேம்பின் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

புங்கெண்ணெய்

அங்கமழகிடுமே ஆன புங்கெண்ணெய்க்கு
தங்கம்போல் மேனி தணியுமே – திங்கள்நுதல்
மானே கரப்பன்போம் வன்சொறியும் சிரங்கும்
தானே விலகுமெனச் சாற்று

இதன்பொருள்: இளம்பிறையை ஒத்த நெற்றியை உடையவளே! புங்கம்விதையில் இருந்து பெறப்படும் புங்கெண்ணெய் மேனிக்குப் பளபளப்பைக் கொடுக்கும். கரப்பன் ,சொறி ,சிரங்கு என்னும் தோல் வியாதிகளைக் குணமாக்கும்.

புங்கெண்ணெய்

மேலதிகவிபரம்: இது  தொற்று நீக்கும் குணங்களைக்  கொண்டுள்ளது, முக்கியமாக உலர்ந்த, சேதமடைந்த, பிளவடைந்த தோல் படைகளைக் குணப்படுத்தவும் முதிர்ச்சியடைந்த சருமத்தைப் பேணவும் உதவுகின்றது. ‘எக்ஸிமா’ எனப்படும் கிரந்தி, இலேசான சொறியுடன் கூடிய தோற்செதில், தோற்புண்கள் என்பவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

சொறி ,சிரங்கு, கரப்பன் போன்ற தோல்வியாதிகளுக்குப் புங்கெண்ணெய் மேற்பூச்சாய்ப் பயன்படும். இந்த எண்ணெயைத் துத்தநாகத்துடன் (zinc oxide) கலந்து பூச எக்ஸிமா (eczema) குணமாகும் என்று கூறப்படுகிறது.

புங்கெண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு சம அளவில் சேர்த்து மூட்டு வாதம், மூட்டு நோவு, தசைநார் பிடிப்பு என்பவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கவும் பயன்படுகிறது. Karanja என்பது புங்கின் சம்ஸ்கிருதப்பெயர். இப்பெயரே இதன் வர்த்தகப்பெயர். புங்கெண்ணெய் கரஞ்சா எண்ணெய் என்னும் பெயராலும் அறியப்படுகின்றது. Pongamia pinnata VENT. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

இலுப்பை எண்ணெய்

இலுப்பெண்ணெய் கொண்டால் எடுக்கும் கரப்பன்
வலிப்பாம் இடுப்புவலி தீரும்-மலைப்பாம்
செய்யபெலனும் உண்டாம் செங்கனிவாய் மொழியே
மெய்யப்படி அழகாம் என்று

இதன்பொருள்: கனிமொழி மாதே! இலுப்பெண்ணெயால் கரப்பன், இடுப்புவலி என்பன தீரும். உடலுக்குப் பலத்தையும் அழகையும் கொடுக்கும்.

இலுப்பை-எண்ணெய்-1

தோல்வரட்சியைப் போக்கி இதம் அளிக்கும் இலுப்பெண்ணெய், பல்வேறு தோல்வியாதிகளுக்கும் வாதம், தலைவலி என்பவற்றுக்கும் மருந்தாகப் பயன்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து மலச்சிக்கலால்  (constipation) அவதிப்படுவோருக்கு இது ஒரு மலமிளக்கியாக (laxative) பயன்படும். மூலவியாதி உள்ளவர்களுக்கும் பயன்படும்.

மேலதிகவிபரம்: ‘சனிநீராடு’ என்றார் ஔவையார். சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் நம்மவர் மத்தியில் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு சனிநீராடும்போது கூந்தலில் மேலதிகமாக உள்ள எண்ணெயைப் போக்குவதற்கு சிகைக்காய் அல்லது அரப்பு வைத்து முழுகுவது வழக்கம். இலுப்பை விதைகளில் இருந்து எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் இலுப்பைப் புண்ணாக்கே ‘அரப்பு’ எனப்படும்.

மரணக்கிரியையின்போது இறந்தவரது உடலைக் குளிப்பாட்டும்முன்னர் அவரது தலையில் அரப்பு வைப்பதற்கு இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்படுவது இன்றும் இருந்துவரும் ஒரு வழக்கமாகும். Mahua oil என்பது இலுப்பெண்ணெயின் வர்த்தகப்பெயர். Butternut tree என்பது இலுப்பையின் ஆங்கிலப்பெயர். Madhuca longifolia (KOEN.) MACLER என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

அஞ்செண்ணெய்

அஞ்செண்ணெய்க் குணத்தை அறிய உரை செய்வேன்
தஞ்சமென வாதம் தணியுமே-பஞ்சாய்ப்
பறக்குமே சன்னியெல்லாம் பாரில் மனிதருக்குச்
சிறக்குமே நோய்தீரும் செப்பு

இதன் பொருள்: அஞ்செண்ணெயின் குணத்தைக்கூறுகிறேன் கேட்பாயாக. வாதம் அடங்கிப்போகும். சன்னிரோகம் எல்லாம் பஞ்சாய்ப்பறந்துபோகும்.

மேலதிகவிபரம்: விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், புன்னை எண்ணெய், மற்றும் புங்கெண்ணெய் சேர்ந்த கலவையே அஞ்செண்ணெய் என ஒருசிலர் கருதுவர். வேறுசிலரோ ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் என்பவற்றுடன் தேங்காயெண்ணெய், இலுப்பெண்ணெய் மற்றும் பசுநெய் சேர்ந்ததே அஞ்செண்ணெய் என்று கூறுவர்.

ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் ஒவ்வொன்றும் சம அளவில் கலந்து ஒருநாள் வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுத்தநாள்முதல் பூசிவர மூட்டுவலி, அடிபட்ட வீக்கம், சுளுக்கு என்பன குணமாகும் என்று கூறப்படுகிறது.

நல்லெண்ணெய்

எள்+நெய், இதுவே நல்லெண்ணெய்

ஆங்கிலத்தில் “ஒயில்” (oil) என்பதற்கு “நெய்” என்பதுதான் சரியான தமிழ்ப்பதம். எனினும் இப்போது நெய் என்றால் எமது நினைவுக்கு வருவது பசுநெய்தான். உண்மையில் எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் ‘எண்ணெய்’ (எள்நெய்) என்னும் பெயருக்கு உரியது. எனினும் இன்று எண்ணெய் என்பது எல்லா ஒயில்களுக்கும் பொதுவான பெயராகிவிட்டது. மண்ணில் இருந்து பெறப்பட்ட மண்நெய்கூட (kerosene) மண்ணெண்ணெய் ஆகிவிட்டது. எனவேதான் உண்மையான எள்நெய்க்கு ‘நல்ல’ என்னும் அடைமொழிகொடுத்து அதனை நல்லெண்ணெய் (நல்+எள்+நெய்) ஆக்கிவிட்டோம்.

நல்லெண்ணெய் பற்றிய இரசவர்க்கப்பாடல் எனக்குக் கிடைத்த ஏட்டுச்சுவடியில் விடுபட்டுப்போயிற்று. அதற்காக தமிழ்மக்களின் அடையாளங்களுள் ஒன்றான நல்லெண்ணெயை விட்டுவிடமுடியுமா? எனவேதான் தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியிட்ட அகத்தியர் இரண்டாயிரம் பாகம் 3 என்னும் நூலில் காணப்படும் நல்லெண்ணெய் பற்றிய பாடல் ஒன்றையும் சி. கண்ணுசாமிப்பிள்ளை என்பவர் தொகுத்த சித்தவைத்திய பதார்த்த குணவிளக்கம் என்னும் நூலில் ‘எள்ளின் நெய்’ என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ள பாடலையும் இங்கு தரத் தீர்மானித்தேன்.

இந்தியாவில் அகத்தியர் இரண்டாயிரம் என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள நூலில் காணப்படும் பாடல்களுள் மிகப் பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற செகராசசேகரம் என்னும் நூலுக்குரியவையே என்பதை ஏட்டுச்சுவடி ஆதாரங்களுடன் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன் (மணற்கேணி இதழ் 49 பக்கம் 40 பெப்ரவரி-மார்ச் 2020). அதுபோன்றே இரசவர்க்கத்தில் உள்ள சில பாடல்கள் கண்ணுசாமிப் பிள்ளையின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன.

எண்ணெயிற் குணம் ஏதென்னில் இளமையும் ஒளிவு முண்டாம்
கண்ணினில் விழியும் நோயுங் காசமும் கனிவுமற்றும்
புண்ணினில் நோவும் போக்கும் புணிற் தடற் பொறிவுமாறுந்
திண்ணிய கயமுங் காத்துச் சிரசினில் ரத்தம் போமே

(அகத்தியர் 2000)

இதன் பொருள்: நல்லெண்ணெயின் குணம் என்னவென்று கேட்பீராகில் உடலுக்கு இளமையும் பளபளப்பும் தரும். கண்ணிலே ஏற்படக்கூடிய விழிநோய்கள், படலம், சுருக்கம் மற்றும் புண்ணில் ஏற்படும் நோவு என்பவற்றைப் போக்குவிக்கும். புண்ணினால் தோலில் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் கயரோகத்தையும் குணப்படுத்தும்.

புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புளகம்
சத்துவங் காந்தி தனியிளமை – மெத்தவுண்டாம்
கண்ணோய் செவிநோய் கபால அழல் காசநோய்
புண்ணோய்போம் எண்ணெய்யாற் போற்று

(பதார்த்தகுண விளக்கம்)

இதன் பொருள்: தெளிவான சிந்தனை, கண்குளிர்ச்சி, மகிழ்ச்சி, உடல்பூரிப்பு, சாந்தகுணம், அழகு, இளமை என்பவற்றைப் பேணி வளர்க்கும் குணம் கொண்டது நல்லெண்ணெய். மேலும் கண்ணோய், காது நோய், தலைச்சூடு, காசநோய், புண்கள் என்பவற்றுக்கும் மருந்தாகப் பயன்படும் எள்நெய்யைப் போற்றுவாயாக.

மேலதிகவிபரம்: நல்லெண்ணெயின் நல்ல பயன்பாடுகள் குறித்து எமது மூதாதையர் கூறிவைத்துள்ள பலவிடயங்கள் இன்று விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றன. சிறுகுழந்தைகளின் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து இளவெயிலில் கிடத்துவது; பருவம் அடைந்த இளம்பெண்களுக்கு நல்லெண்ணெய் குடிக்கக் கொடுப்பது; ஒவ்வொருநாளும் சிறிதளவு எண்ணெய் எடுத்துத் தலையில் தேய்த்துக் கொள்வது; சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவது போன்ற எம்மவர் வழக்கங்கள் உடல்நலத்தையும் உளநலத்தையும் ஒருங்கே பேணுபவை என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

நிறைவுறாக் கொழுப்புகள் (unsaturated fats) அதிக அளவில் உள்ள உணவு இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது. நல்லெண்ணெயில் 82% நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. குறிப்பாக, இதில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா 3 அமிலம் ஆகியன இருதயநோய்த் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) அதிகம் உள்ள எண்ணெய்களுக்குப் பதிலாக நல்லெண்ணெய் பயன்படுத்துவது இரத்தத்தில் கொலெஸ்ரெறோலின் (cholesterol) அளவைக் குறைக்க உதவும்.

தினமும் 4 தேக்கரண்டி நல்லெண்ணெயை உட்கொள்பவர்கள், ஆலிவ் எண்ணெயை உட்கொள்பவர்களிலும் பார்க்கக்  குறைந்த அளவில் கெட்ட கொலெஸ்ரெறோலையும் ட்ரைகிளிசரைட்டுகளையும் (triglycerides) கொண்டிருப்பது ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டது. ஆரோக்கியம் உடையவர்கள் நல்லெண்ணெயை உட்கொள்வதன்மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும் என்பதும் அறியப்பட்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் அல்ரா வயலெட் (Ultra Violet) சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க நல்லெண்ணெய் உதவுகின்றது. நல்லெண்ணெயுடன் மசாஜ் செய்வது கை மற்றும் கால் வலியைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்லெண்ணெயில் உள்ள இரசாயனப்பொருள்கள் தலைமுடியின் பளபளப்பையும் வலிமையையும் கூட்டி கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இரசவர்க்கம் என்னும் நூலின் ஏட்டுப்பிரதிகள் ஈழத்தில் வேறு எவரிடம் இருந்தாலும் அவற்றை வெளிக்கொண்டுவருவது தமிழுக்குச் செய்யும் ஒரு நற்பணியாக இருக்கும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10959 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)