இரசவர்க்கம் - திரிபலை
Arts
6 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம் – திரிபலை

August 19, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று மூலிகைகளையும் கூட்டாக ‘திரிபலை’ என்று ஆயுள்வேத மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இம் மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விசேடகுணங்கள் உண்டு.  

திரிபலை சூரணம்

கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும். திரிபலை சூரணம் இருதயம் ஈரல் சமிபாட்டுத்தொகுதி கண்கள் போன்ற உடல் உறுப்புக்கள் பலவற்றுக்கும் நன்மை பயப்பதுடன் உடல் நிறையைக் குறைக்கவும் உதவுகிறது.

திரிபலை சூரணம்

நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 கிராம் வரை சுடுநீருடன் படுக்கைக்குப் போகுமுன்னர் அருந்தலாம். அல்லது உணவு இடைவேளைகளில் ஒவ்வொரு கிராமாக மூன்றுதடவைகள் எடுக்கலாம். இதன் கைப்புச்சுவை பிடிக்காவிடின் வில்லைகளாக (capsule)  எடுக்கலாம். வயதையும் தேவையையும் பொறுத்து ஒன்று தொடக்கம் மூன்று வில்லைகளை எடுக்கலாம். கால் தேக்கரண்டியுடன் ஆரம்பித்துப் பின்னர் தேவையைப்பொறுத்து அளவைக்கூட்டலாம். அளவுக்கு அதிகமானால் வயிற்றோட்டம் ஏற்படும்.

கண்ணில் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தடுத்து கண்களுக்கு வலுவூட்டும் மருந்தாக திரிபலைச் சூரணம் கருதப்படுகிறது. 10 கிராம் தொடக்கம் 50 கிராம் வரையிலான தூள் ஒருநேரம் கண்களைக்கழுவத் தேவைப்படலாம். தூளின் அளவிலும் பதினாறு மடங்கு நீரில், அதனை ஒருமணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் நீரில் அரைவாசி ஆவியாகும் வரை கொதிக்க வைக்கவேண்டும். இந்தக் கஷாயத்தை ஒரு மெல்லிய சுத்தமான பருத்தித்துணிகொண்டு வடித்து எடுத்து இளஞ்சூட்டுடன் கண்களைக் கழுவ வேண்டும். திரிபலை சூரணத்தை அனைத்து ஆயுள்வேதக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளமுடியும். எனினும் நம்பகத்தன்மையுடய கடைகளில் இம்மருந்தை வாங்கவும் அல்லது நீங்களாகவே இதனைத் தயாரித்துக்கொள்ளலாம்.

கடுக்காய்

மிடுக்காக்கும் காயத்தை விந்து விளைவிக்கும்

சடக்கெனவே உந்திதனைத்தள்ளும் – கடுக்காய்க்கு

வாதபித்தசேட்டுமம்போம் வன்னிமிகுவாலிபமாம்

சாதிசிறு காலையிலே தான்  

பாடபேதம்:

மிடுக்காக்குந்தேகத்தை விந்துவையுண்டாக்குஞ்

சடக்கெனவே யுண்டியை யுட்சாடுந் – துடுக்கான

வாதபித்தவையகற்றும் வன்னியொடு தவ்விதருஞ்

சாதிவரிக்கடுக்காய்தான்    

(பதார்த்தகுண சிந்தாமணி)    

இதன் பொருள் கடுக்காய் உடலுக்குப் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தரும். விந்து உற்பத்தியைக்கூட்டும். இலகுவில் மலம் கழியச்செய்யும். வாலிபத்தை மீளக்கொண்டுவரும்.

இழையங்களுக்கு வலுவும் ஊட்டமும் கொடுப்பதன்மூலம் கடுக்காய் பெருங்குடல், ஈரல், நுரையீரல் என்பவற்றுக்கு வலு ஊட்டுகிறது. இது ஒரு பயன் தரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பான மலமிளக்கி (laxative) யாகும். சமிபாட்டுக்குடலில் சேரக்கூடிய இயற்கையான நச்சுப்பொருட்களை அகற்றிக் குடலைச்சுத்தம் செய்கிறது. எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். வயிற்றில் வாய்வு கூடுதலாக உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பெரும்பலன் அடைவர்.

காலை விளாங்கனி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் தின்பரேல்

கோலை ஊன்றிக் குறுகிநடந்தவர்

கோலை வீசிக் குலாவி நடப்பரே

என்று ஒரு பழைய பாடல் உள்ளது. காலையில் விளாம்பழம் மத்தியானத்தில் சுக்கு படுக்கைக்குப் போகும் முன்னர் கடுக்காய் என்று தொடர்ந்து 40 நாட்கள் ஒருவர் சாப்பிட்டு வருவாராயின் வயது முதிர்ந்தவருக்கும் வாலிபம் திரும்பும் என்பது இப்பாடலின் கருத்து.

கடுக்காய்

மூலிகைக் கடைகளில் கடுக்காய் அல்லது ஹரிதகி (haritaki) என்னும் பெயர்களில் தூளாகவோ வில்லை (capsule) யாகவோ பெற்றுக் கொள்ளமுடியும் அல்லது நீங்களே கடுக்காய்த்தூளைத் தயாரித்துக் கொள்ளலாம்.

உலர்ந்த கடுக்காயின் விதைகளை அகற்றிய பின்னர் அதனை நிழலில் காயவைக்கவேண்டும். பின்னர் அதனை இடித்து அல்லது கிறைன்டரில் அரைத்துத் தூளாக்கவேண்டும். பிறவுண் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கடுக்காய்த்தூளை காற்றுப் புகமுடியாத ஒரு குப்பியில் மூடி வைத்திருந்து ஆறுமாதத்துக்குள் பயன்படுத்தவேண்டும்.

பெரியவர்களுக்கு 3 முதல் 6 கிராம் வரையிலும் இலேசான சூடுள்ள நீருடன் குடிக்கக்கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தடவை அதிகாலையில் அல்லது இரவுச்சாப்பாடு உண்டதன் பின்னர்  மூன்று மணித்தியாலங்கள் சென்றபின் இம்மருந்தை எடுக்கவேண்டும். மலச்சிக்கல் உடைய சிறுவர்களுக்கு 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரையும்  கொடுக்கலாம். உடல் பலவீனமானவர்களும் கர்ப்பிணிப்பெண்களும் கடுக்காய் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும். நீரிழிவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (low blood pressure) உள்ளவர்களும் இம்மருந்தைத் தவிர்ப்பது நல்லது.

நெல்லிக்காய்

நல்லநெல்லிமுள்ளி நாவுக்குரிசைதரும்

அல்லல்தரும் பித்தம்அகலுமே-மெல்லத்

தலைமுழுகக்கண்குளிரும் தவிர்த்திடும்பித்தவாந்தி

கலைபடுமே மேகமெல்லாம் காண்.

பாடபேதம்:

நல்லநெல்லிமுள்ளி நாவுக்குரிசைதரு

மல்லல்தருபித்தமகற்றுமதை-மெல்லத்

தலைமுழுகக்கண்குளிருந் தாவுபித்தவாந்தி

இலையிழிமேகங்களும்போமெண்   

  (பதார்த்தகுண சிந்தாமணி)

இதன் பொருள்: நெல்லிக்காய் நாவுக்குச் சுவை தரும். பித்தத்தைப் போக்கும். நெல்லிக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் எண்ணெய் கண்ணுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது பித்தத்தினால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவும்.

நெல்லிக்காய்

விட்டமின் சீ (vitamin C) நிரம்பப்பெற்றது பெருநெல்லிக்காய். நூறு கிராம் (100g) நெல்லிக்காயில் 700 மில்லி கிராம் (700mg) அளவிலான விட்டமின் சீ உள்ளது. உலர்ந்த காயிலும் இந்த விட்டமின் பேணப்படுகிறது. உலர்ந்த நெல்லிக்காய்த் தூளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒருவருடத்துக்கு அதன் பலன் கெடாமல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெல்லிக்காய்த்தூளைத் தயிருடன் சேர்த்து உண்டால் சீதபேதி (dysentery) எனப்படும் வயிற்றோட்டம் குணமாகும். இந்தக்குடிநீரைச் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

வயிற்றில் மேலதிக அமிலச்சுரப்பினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் குடற்புண் என்பவற்றுக்கு நெல்லி பயன் தரக்கூடிய மருந்து என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லிக்காய்த் தூளில் குடிநீர் காய்ச்சிக்குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் அல்சர் வராமல் தடுக்கலாம்.

நெல்லிக்காய்த்தூள் சிறுவர்களுக்கு 500 மில்லிகிராம் முதல் ஒருகிராம் வரையிலும் பெரியவர்களுக்கு 3 தொடக்கம் 6 கிராம் வரையிலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வெறும் வயிற்றில் விழுங்கக்கொடுக்கலாம் அல்லது சாப்பட்டுக்குமுன் தண்ணீருடன் கொடுக்கலாம். (30 times vitamin C than in Oranges) கர்ப்பிணிப்பெண்களும் நோயாளருக்கும் தேவையான விட்டமின் C யை நெல்லிக்காயில் பெற்றுக்கொள்ளலாம்.

தான்றிக்காய்

மாணிக்காமாம் மேனி மந்தம் போம் வாதம் போம்

பேணிக்குணம் பேணுவார்பிணி போக்கும் – தாணிக்காய்

தரணியிலுள்ளோர்க்குத் தாதுபெலனுண்டாக்கும்

சீரணியு மாதே சிறந்து    

தான்றிக்காய்

இதன் பொருள்: உடலுக்கு அழகையும் ஒளியையும் கொடுக்கும். மந்தம், வாதம் என்பவற்றை போக்கும். விந்து நட்டத்தைப்போக்கி வீரியத்தைக் கொடுக்கும்.

Belleric myrobalan என்பது தான்றிக்காயின் ஆங்கிலப்பெயராகும். Bahera என்பது இதன் வர்த்தகப் பெயர் (trade name). Terminalia bellerica ROXB. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயராகும்.

தான்றிக்காயும் அதன் பருப்பும் பல்வேறு ஆயுள்வேதத் தயாரிப்புகளில் இடம்பெறுகின்றன. கண்வியாதிகள் சிலவற்றுக்குப் பயன்படுத்தப்பெறும் மருந்துத் தயாரிப்புக்களில் தான்றிக்காய் முக்கிய இடம்பெறுகின்றது. விதையில் இருந்துபெறப்படும் எண்ணெய் கூந்தலைச் செழிக்கவைக்கின்றது. மூட்டுவாதத்துக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்