இரசவர்க்கம்: பழவகைகள்
Arts
10 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம்: பழவகைகள்

January 10, 2023 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

பலாப்பழம்

தித்திக்கும் வாதபித்த சேட்டுமங்கள் உண்டாக்கும்
மெத்தக்கரப்பன் விளைவிக்கும்-சத்தியமே
சேராப் பிணியெல்லாம் சேரும்மானிடர்க்குப்
பாராய் பலாவின் பழம்

இதன் பொருள்: பலாப்பழம் இனிப்பான சுவையை உடையது. வாதம் பித்தம் சிலேத்துமம் என்பவற்றின் சமநிலை கெடுவதால் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தோற்றுவிக்கும். பலாப்பழத்தால் எல்லாவிதமான வியாதிகளும் வந்துசேரும்.

பலாப்பழம்

மேலதிகவிபரம்: முக்கனிகளுள் ஒன்றாகக் கூறப்படினும் தமிழ் மருத்துவர்களைப் பொறுத்தவரையில் இதன்மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. காரணம் தெரியவில்லை.

பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறைபிடிக்கப்பட்டு, பத்தொன்பது வருடங்கள் கண்டியிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர் ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர். இவர் அக்காலப்பகுதியில் பொதுமக்களின் உணவில் பலாக்காயின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கியுள்ளார். பண்டைய நாட்களில் சிங்கள மக்களின் உணவில் அரிசிக்கு அடுத்த பெரும்பங்கு வகித்தவை பலாக்காய், பலாவித்து, பலாப்பழம் ஆகியவையே என்பதை இவர் எழுதிவைத்துள்ள நூலின் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது. குறிப்பாக ஏழைமக்களுக்கு இவையே பிரதான உணவாக இருந்தன. நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்வோர் தமது அன்றாட உணவுக்காக வறுத்தெடுத்த பலாக்கொட்டைகளைத் தம்முடன் எடுத்துச்சென்றதாக இவர் எழுதிவைத்துள்ளார்.

சிங்களவர்களைப்போல் பலாக்காயை வெறுமனே அவித்தோ கறியாகச் சமைத்தோ உண்ணும் வழக்கம் தமிழரிடம் இல்லை. ஆனால் பலாக்கொட்டையை ஒடியல்கூழில் சேர்க்கும் வழக்கம் உள்ளது.

பசிக்கு வயிற்றை நிரப்பும் உணவாக மட்டுமல்லாமல் உடலுழைப்புக்குத் தேவையான சக்தியைத் தரக்கூடிய மாச்சத்து பலாக்கொட்டையில் நிறையவே உண்டு. நூறு கிராம் விதைகளில் 38.4 கிராம் மாச்சத்து உள்ளது. புரதமும் ஓரளவு (6.6 கிராம்) உண்டு. அதேசமயம் உடலுக்குத் தேவைப்படும் பொட்டாசியம் நிறைந்த அளவில் உள்ளது. பொட்டாசியம் குறைந்த அளவில் உள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது உதவும். ஒரு கோப்பை அளவிலான பலாப்பழச் சுளைகளில் மிகக்குறைந்த அளவிலிலேயே கொழுப்புச்சத்து உள்ளது. அதேசமயம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C, A, B6 என்பன அதிக அளவில் உள்ளன.

பலாப்பழம் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. மகரந்தமணிகளால் ஆஸ்துமா தூண்டப்பெறுபவர்களுள் ஒரு சிலருக்கு பலாப்பழம் சாப்பிட்டவுடன் ஆஸ்துமா குறி குணங்கள் தோன்றக்கூடும். பலாமரத்தின் வேர் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஒரே மரம் உணவையும் அந்த உணவினால் ஏற்படக்கூடிய வியாதிக்கான மருந்தையும் தரும் இயற்கையின் விசித்திரத்தை இங்கு காணமுடிகிறது.

அதிக மதுபோதைக்குள்ளானவர்களின் போதையைச் சற்று இறக்கிவிடும் குணம் பலாப்பழத்துக்கு உண்டு என்பது சீனர்களின் நம்பிக்கை. மிகுந்த இனிப்புச்சுவை உடையதாயினும் நீரிழிவு நோயாளர் அளவுடன் சாப்பிடக்கூடிய பழங்களுள் பலாப்பழமும் ஒன்று என்பதை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில சமயங்களில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தக் கூடுமாகையால் கர்ப்பிணிப்பெண்கள் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

பலாக்காயை அல்லது பழத்தை வெட்டும்போது அதில் வடியும் பால் கத்தியிலும் கைகளிலும் ஒட்டிக்கொள்ளும். இதனைத்தவிர்க்க கத்தியிலும் கைகளிலும் தேங்காய் எண்ணெயைப்பூசிக்கொண்டு வெட்டுவது வழக்கம். Jack fruit என்பது பலாப்பழத்தின் ஆங்கிலப்பெயர். Artocarpus heterophyllus LAM.  என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

விளாம்பழம்

எப்போதும் தின்ன இதங்கொடுக்கும் தீவனமாம்
தப்பாது நோய் தணிக்கும் தாகமறும்-வெப்பமுடன்
ஏதுகனி யானாலும் ஈடு இதற்கில்லை
தீதகலும் விளாங்கனியைத் தின்

இதன் பொருள்: விளாம்பழம் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு சுகம்தரும் சத்துணவாகும். தவறாமல் நோயின் கடுமையைக் குறைக்கும். உடல்சூடு தாகம் என்பவற்றைப் போக்கும். எந்தப்பழமானாலும் இந்தப்பழத்துக்கு ஈடாகாது. பிணிக்குற்றம் போக்கும் விளாம்பழத்தை உண்பாயாக.

பாடபேதம்:

எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிருமல்கபமும்
வெப்பாகும் தாகமும்போ மெய்ப்பசியாம்-இப்புவியில்
என்றாகிலும் கனிமேல் இச்சைவைத்துத் தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின்

(பதார்த்த குணசிந்தாமணி)

மேலதிகவிபரம்: விளாம்பழத்தில் உள்ள beta-carotene என்னும் இரசாயனம் ஈரலுக்கு நல்லது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் விளாம்பழம் நல்லது என்று கூறப்படுகிறது. இவர்கள் இதனைத்தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். வைட்டமின் C யும் இந்தப்பழத்தில் நிறையவே உண்டு. பொதுவாகப் பலவகைச் சத்துக்களையும் உடைய விளாங்கனி ஓர் ஆரோக்கியமான உணவு என்பது உண்மை.

விளாம்பழம்

‘விளாம்பழத்தின் ஓட்டோடு விட்டதடி உன் ஆசை’ என்று ஒரு பழைய மருத்துவப்பழமொழி உள்ளது. இதன் முழுமையான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் ஆண்களின் பாலுணர்வுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை ஊகிக்கமுடிகிறது. 2012 ஆம் ஆண்டுக்குரிய “Asian Pacific Journal of Tropical Biomedicine” என்ற மருத்துவ விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றில் விளாம்பழத்தை உண்ணுவதால் விந்து எண்ணிக்கை, அவற்றின் அசைவு, உயிர்ப்பு என்பவை குறைந்து ஆண்களில் கருத்தடைசெய்யும் குணம் இதற்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்கம் தற்காலிகமானதே. விளாம்பழம் சாப்பிடுவதை நிறுத்தியதும் விந்து எண்ணிக்கை மீண்டும் கூடிவிடும்.

நுளம்புக்கடியில் இருந்து தப்புவதற்குத் தோலில் பூசப்படும் மருந்துடன் விளாம்பழச்சதையைக் கலந்துபூசுவது நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது. விளாம்பழத்தின் ஓட்டுக்கு பூஞ்சண எதிர்ப்புக் குணம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Wood apple அல்லது Elephant apple என்பது விளாம்பழத்தின் ஆங்கிலப் பெயர். Feronia elephantum என்பது இதன் முந்தைய இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

இந்த இடத்தில் ‘யானை உண்ட விளாங்கனி’ என்ற சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. இதற்கும் Elephant apple, Feronia elephantum  ஆகிய பெயர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

யானைக்குப் பிடித்த பழம் விளாம்பழம் என்கிறார்கள். காட்டுப்பகுதிகளில் தரையில் வீழ்ந்து கிடக்கும் விளாம்பழங்களின் ஓடு முழுமையாகவும் உள்ளே ஒன்றுமில்லாமலும் இருப்பதைக் கண்டவர்கள் விளாம்பழத்தை முழுசாக யானை விழுங்கும்போது யானையின் உணவுக்குடலில் இருக்கும் நொதியங்கள் விளாம்பழத்தின் ஓட்டைத்தாக்காமல் உள்ளே இருக்கும் சதையை மாத்திரம் சமிபாடு அடையவைப்பதாகவும் பின்னர் வெறும் ஓடு மாத்திரம் முழுசாக யானையின் மலத்துடன் வெளிவந்துவிடுவதாகவும் நம்பினர். இதற்கு மாறாக ஒருவகைப் பூஞ்சணங்கள் விளாம்பழத்தின் ஓட்டினுள்ளே புகுந்து சென்று உட்சதையை மாத்திரம் அழித்துவிடுகின்றன என்ற கருத்தும் உண்டு. Limonia acidissima L. என்பது இதன் புதிய இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

மாம்பழம்

தின்றால் தினவெடுக்கும் தீபனம் போய் நெஞ்செரிக்கும்
அன்றாடம் தாது அணுகுமே – நன்றாக
வாதக்கரப்பனுடன் வன்பித்தம் உண்டாகும்
சூதக் கனியின் சுவை

இதன் பொருள்: மாம்பழம் உருசியாக இருப்பதன் காரணமாக அதனை மிகுதியாக உண்டால் உடம்பில் அரிப்பு, சொறி என்பன ஏற்படும். நெஞ்செரிவு ஏற்படும். வாதக்கரப்பனும் பித்தமும் உண்டாகும்.

பாடபேதம்:

தின்றாற் தினவெடுக்குந் தீபனம் போ நெஞ்செரிவா
மற்றே விழிநோயடருங்காண்- துன்றிமிக
வாதக்கரப்பனும் வன்கிரந்தியும் பெருகுஞ்
சூதக்கனியின் சுகம்

(பதார்த்த குண சிந்தாமணி)

மேலதிகவிபரம்: பலராலும் விரும்பப்படும் சுவை மிக்க ஒரு பழமாக இருந்தாலும் மாம்பழத்துக்கு தமிழ் மருத்துவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடையாது. இதற்கு ஒரு விளக்கத்தைத் தந்துள்ளார் ஹென்றி வான் ரீட் (Henry Van Reede) என்ற டச்சுக்காரர்.  கி.பி.1670 ஆம் ஆண்டளவில் இன்றைய கேரளாவின் கொச்சின் பிரதேசத்தின் கவர்னராக இருந்தவர். கேரளாவின் மூலிகைகள் பற்றி 12 பாகங்கள் கொண்ட பெரு நூலை எழுதிவெளியிட்டவர். மாமரங்கள் பூத்துக்காய்த்து தாராளமாகக் கிடைக்கும் காலம் வெப்பமிகுந்த கோடைகாலமாகும். இக்காலத்தில் தோல் வியாதிகள், கிரந்தி, பித்தக்காய்ச்சல், சிரங்கு என்பவை மாம்பழம் சாப்பிடாதவர்களுக்கும் வரக்கூடியன. ஆனாலும் இந்த நோய்கள் ஏற்படுவதற்கான பழியை இந்நாட்டு வைத்தியர்கள் மாங்காயின் மேல் போட்டுவிடுகிறார்கள் என்று எழுதிவைத்துள்ளார் இந்த டச்சுக்காரர்.

மாம்பழம்

மாம்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு என்பதை மறுப்பதற்கில்லை. சீனிச்சத்து கூடுதலாக இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதற்கு நீரிழிவு நோயாளர் தயங்குவர். எனினும் வாழைப்பழம் உருளைக்கிழங்கு என்பவற்றுடன் ஒப்பிடுகையில் மாம்பழம் இவர்களுக்கு அதிக பிரச்சினையை ஏற்படுத்தாது. மாம்பழத்துடன் சேர்த்து பருப்பு வகைகள் கொழுப்புக் குறைந்த பால், தயிர், கிழங்குகள் தவிர்ந்த காய்கறிகள் என்பவற்றை உண்பதன்மூலம் நீரிழிவு நோயாளர் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளமுடியும். மாம்பழம் சாப்பிடும்போது சோறு, பாண் என்பவற்றின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

Mango என்பது மாம்பழத்தின் ஆங்கிலப்பெயர். Mangifera indica L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

மாதளம்பழம் /மாதுளம்பழம்

பித்தம்போம் வாந்தி நிற்கும் பேருலகில் மானிடர்க்கு
சித்தமிக வறுமை தீருமே – மெத்தவே
மாதளம்பழத்தால் தாகம்போம் மெய்யாம்
…………………………… மேனியரே கூறு

மாதுளம்பழம் பற்றிய பாடல் இரசவர்க்க ஏட்டுப்பிரதியில் முழுமையாகக் காணப்படவில்லை. எனவே பதார்த்தகுணசிந்தாமணியில் மாதுளம்பழம் பற்றிய பாடல் ஒன்றை இங்கு தந்துள்ளேன். பதார்த்தகுணசிந்தாமணியில் காணப்படும் இப்பாடல்கள் சற்றுவித்தியாசமாகவும் சுவையாகவும் இருப்பதைக் கவனிக்கலாம்.

சங்கையறச் சொற்றவிர்க்கும் சன்னியாசஞ் சத்தி
யங்கையதிதாக நமைச் சாருமோ- கங்கை
விருந்தாடி மக்கட் கிரந்தழச் செய் நோய்போ
மிருந்தாடிமக்கனிகட்கெண்

(பதார்த்த குண சிந்தாமணி)    

இதன் பொருள்: மாதுளம்பழம் சந்தேகம் நீங்க நினைப்பையும் பேச்சையும் ஒழிக்கின்ற சந்நியாச ரோகம் வராது. வாந்தி தாகம் என்பன தீரும். கங்கை நீராடி பிள்ளைகள் வேண்டி யாசகம் செய்ய வைக்கும் மலட்டு வியாதி போகும். (மாதுளங்கனி அருந்துவதால் தாம்பத்திய உறவில் ஆர்வம் கூடும்; மலட்டுத்தன்மை குணமாகும் என்பதே இப்பாடலில் கூறப்படுகின்றது.)

வெடித்துவீழ் பழத்தை வாங்கி மெல்லிய சீலைகட்டிக்
கடுக்கெனப் பிழிந்துகொண்டு கண்டதற்கிணங்கக்கூட்டிக்
குடித்திட வெப்புமாறுங் குளிர்ந்திடு மங்கமெல்லாம்
வடித்தநன் மொழியினாளே மாதுளம் பழத்தின் சாறே.

(பதார்த்தகுணசிந்தாமணி)          

இதன் பொருள்: நன்றாக முற்றிய மாதுளங்கனியை எடுத்து உடனடியாக சீலையில் பிழிந்தெடுத்த சாறுடன் கற்கண்டு சேர்த்துக் குடித்துவர உடற்சூடு தணிந்து உடம்புக்குக் குளிர்ச்சி உண்டாகும்.

மேலதிகவிபரம்: ஆரோக்கியத்தைத்தரும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக மாதுளம்பழம் பலராலும் அறியப்பட்டு வந்துள்ளது.

ஒட்சியெதிரிகள் நிறைந்த மாதுளம் பழம் இருதய வியாதிகளால் தோன்றும் அபாயத்தைக் குறைப்பதாக நம்பப்படுகிறது. மூளை முதிர்ச்சியடைவதைக் குறைக்க உதவும் வைட்டமின் E மற்றும் வைட்டமின் A, C, இரும்புச்சத்து என்பன செறிவாக உள்ளன.

மாதுளம்பழம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சிறந்த உணவாகும். இரத்த அழுத்தத்தை மாதுளம்பழம் குறைக்கின்றது.

சமீபகாலத்தில் மற்றுமொரு விடயத்துக்காகவும் மாதுளம்பழம் பிரசித்தி பெற்றுள்ளது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டுவரும் ஒரு ஆண்மகனுக்கு வயாக்ரா என்பது தேவைப்படாது என்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள குயீன் மார்கிரெட் பல்கலைக்கழகத்தை (Queen Margaret University, Edinburgh) சேர்ந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு இது. ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மாதுளம்பழச்சாறு என்ற அளவில் இரண்டுகிழமைகள் தொடர்ந்து குடித்துவந்தவர்களின் உடலில் ரெஸ்ரோஸ்ரெறோன் (Testosterone) என்னும் ஹார்மோனின் (hormone) அளவு 16 தொடக்கம் 30 சதவீதம் வரை அதிகரித்ததுடன் இரத்த அழுத்தமும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்பது இவர்களின் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது.

தாம்பத்திய உறவு கணவன் மனைவி இருவருக்குமே திருப்தியளிப்பதாக அமைய மாதுளம்பழம் உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Pomegranate என்பது மாதுளம்பழத்தின் ஆங்கிலப்பெயர். Punica granatum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10049 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)