இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியக் கலாசாரம் என்பது தென் இந்தியத் தமிழ்க் கலாசாரமேயாகும். இது ஒரு வகையில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் தனித்துவமிக்க தமிழ் இனமாக அடையாளப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவர்கள் பேசுகின்ற மொழி, உறவுமுறைகள், தெய்வ வழிபாடுகள், திருமணம் போன்ற சடங்கு முறைகள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற பூர்வீகக்குடிகளான இலங்கை தமிழர்களில் இருந்து வேறுபட்டே இருக்கின்றன. அவ்வாறு இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியத் தமிழர்களில் ஒருசாரார் மிக வேகமாக மாற்றுக் கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டு செல்வதையும் அவதானிக்கமுடிகின்றது. மாற்றமடைந்துவரும் இந்தியத் தமிழர்களை ஒரு வகைப்படுத்தி அதற்கான பின்புலத்தை தொட்டுக்காட்டுவதே இந்தக்கட்டுரையின் இலக்காகும்.
இந்தியத் தமிழர்களின் பண்பாடுகள் தொடர்பாக பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்களால் 1990 களில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை யாவரும் அறிவோம். அவரது ஆய்வின் பின்னர் ஆங்காங்கே பல கட்டுரைகள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இதைவிட எழுத்தாளர் சாரல்நாடன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள ‘மலையகம் வளர்த்த தமிழ் (1997)’ என்ற நூலில் மலையகத்தின் பண்பாட்டு மாற்றங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை மிகப் பயனுள்ள தகவல்களைக் கொண்டதாக உள்ளது.
இந்தியத் தமிழர்கள் பற்றிய வரலாற்றினை எழுதியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தமது ‘இலங்கை இந்தியர் வரலாறு’ என்ற நூலில் இவர்களின் வரலாறு பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். இதற்கு அடுத்த நிலையில் Asoka Bandarage எழுதிய ‘Colonize in Sri Lanka’ என்ற நூலிலும் இவர்களது வரலாற்றின் முக்கிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியத் தமிழர்களின் பண்பாடுகள் பற்றி ஆராய்ந்த R. Jayaraman தமது நூலான ‘Caste Continuity in Ceylon’ இல் கணிசமான ஆதாரங்களுடன் தென்னிந்திய சாதி முறைகளும் ஏனைய பண்பாடுகளும் குடிபெயர்ந்து வந்த இந்தியத் தமிழர்களிடம் எவ்வாறு வேரூன்றிக் காணப்பட்டது என்பதைப் பதிவு செய்துள்ளார்.
இந்தக்கட்டுரையில் எடுத்தாளப்படும் விடயங்கள் கள ஆய்வின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களைப் பின்னணியாகக் கொண்டதாக இல்லை. மாறாகக் கட்டுரையாளரின் நீண்டகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த கருத்தாடல்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய முரண்பட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் போன்றவற்றை வாசகர்கள் முன்வைக்கும் போது இத்துறைசார்ந்த நேர்த்தியான ஆய்விற்கு இந்தக்கருப்பொருளை இட்டுச்செல்லாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் தனது தனித்துவமான பண்பாட்டை தக்கவைத்துக் கொள்ளும் அளவில் வாழ்கின்றவர்களை ஒரு குழுவினராகவும், தவிர்க்கமுடியாதவாறு சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் வாழவேண்டிய சூழ்நிலை காரணமாக தமது பண்பாட்டினைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான கல்வி, வருமானம், வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களை மற்றுமொரு வகையினாராகவும், குடிபெயர்ந்து சென்று வேறு இடங்களில் வாழ்கின்ற இந்தியத்தமிழர்களை இன்னுமொரு பிரிவாகவும் அவதானிக்கும் நிலையில் இவர்களின் பரம்பலை பின்வருமாறு வகைப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்:
- மலையகத்திலும் கொழும்பிலும் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
- பெரும்பான்மை சிங்கள மக்களுடன் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
- இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
1. மலையகத்திலும் கொழும்பிலும் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
மலையகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள பெருந்தோட்டங்களிலும் நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத் தமிழர்களும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள கம்பஹா மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுகளான வத்தளை, மாபோல, பேலியகொடை போன்ற இடங்களில் வசித்து வருகின்ற தமிழர்களில் பெரும்பாலானோரும் இந்தியத் தமிழர்கள் என்ற வகைப்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
மலையகப் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது இன அடையாளம் என்பது ‘இந்திய தமிழர்கள்’ என்றவாறே கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட (1971, 1981, 2001 மற்றும் 2011) குடித்தொகை மதிப்பீடுகளின்போது பதிவு செய்துள்ளனர். அது மட்டுமன்றி தமது அன்றாட வாழ்க்கையிலும் தென்னிந்தியத் தமிழ் மரபுகளையே பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். பெருந்தோட்டங்களில் இவ்வாறு வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கையானது இந்நாட்டில் வாழ்கின்ற மொத்த இந்திய தமிழர்களில் 69.2 வீதத்தினராகும். இவர்களில் அநேகர் தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்களில் நாளாந்த வேதனத்திற்கு தொழில் புரிபவர்களாவர்.
இந்நாட்டிலேயே குறைந்த வருமானம் பெறும் மக்களாக மட்டுமன்றி இன்றுவரை தாம் வாழ்கின்ற வீட்டிற்கு உரிமைப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும், இலங்கையில் ஏனைய கிராம மக்களுக்கு கிடைத்துவரும், அரசாங்கத்தின் எவ்விதமான பொது நிர்வாக சேவைகளையும் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் இவர்கள் கொண்டு வந்த தென்னிந்தியப் பண்பாடுகளை விட்டுவிடவில்லை. ஒருவகையில் தென்னந்தியாவில் அவதானிக்கக்கூடிய கலை அம்சங்கள், ஆடல், பாடல்கள், கோவில் திருவிழாக்கள், உறவுமுறைகள் இன்றுவரையும் மலையகமக்களின் நாளாந்த் வாழ்கையில் ஊன்றி இருக்கின்றன. இது அவர்களின் தனித்துவத்தை தக்கவைத்துள்ளதாகவும் கருதலாம்.
இதைவிட, ஆரம்ப காலத்தில் இருந்தே வர்த்தகம், துறைமுகத்தொழில், புகையிரதம், போக்குவரத்து போன்ற இன்னோரன்ன தொழில்களுக்கு நேரடியாக தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியத் தமிழர்கள் மேற்குறிப்பிட்டது போல கொழும்பு மற்றும் உபநகரங்களில் குடியேறி, நாளடைவில் நிரந்தரகுடிகளாகினர். இவர்களில் கணிசமானோர் மேல்மட்ட குடிகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். இது பற்றிய விபரங்களை பேராசிரியர் Michael Roberts (1997) அவர்களால் தொகுக்கப்பட்ட ‘Sri Lanka Collective Identities Revisited’ என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘Elite Formation and Elite, 1832-1931’ என்ற கட்டுரையில் விபரமாக ஆராயப்பட்டுள்ளது. மலையகப் பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் போலவே கொழும்பு மற்றும் உபநகரங்களில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் இன்று வரையும் தங்களது இந்தியப் பாரம்பரியத்தை தொடர்ச்சியாகப் பின்பற்றுகின்றனர். இது இவர்களுடைய இறுக்கமான தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிகின்றது. சுருக்கமாகக் கூறுவோமாயின் இலங்கையில் இந்தியத்தமிழர்கள் என்ற பண்பாட்டினைத் தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ளக்கூடிய சாதமான சூழல் மலையகத்திலும் கொழும்பு நகர்ப் பகுதியிலும் வாழ்ந்து வருகின்ற இந்தியத் தமிழர்களிடமே காணப்படுவதாகக் கருதலாம்.
2. பெரும்பான்மை சிங்கள மக்களுடன் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
இரண்டாவதாக அடையாளப்படுத்தப்படுபவர்கள் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களாவர். இவர்கள் பெரும்பாலும் மலைநாட்டின் எல்லைப்புறங்களில் உள்ள தேயிலை, இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும், தேயிலைச் சிற்றுடமைகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்பவர்களாவர். களுத்துறை (46,252), மாத்தளை (30,512), காலி (20,099), மாத்தறை (20,894), குருநாகல் (20,635), மொனராகல (13,207) போன்ற மாவட்டங்களில் வாழும் இவர்களின் மொத்த எண்ணிக்கை 149,599 ஆகும்.
இந்தப்பிரதேசங்களில் உள்ள தோட்டங்களை காணி சீர்திருத்தத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டு சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட போது அவர்கள் நில உரிமையுடன் வாழ்கின்ற விவசாயிகள் என்ற உயரிய அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டனர். தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களோ நிலமற்ற விவசாயிகளாக வாழத் தலைப்பட்டனர். இவ்வாறான ஏற்றத்தாழ்வு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இங்குள்ள பெருந்தோட்டங்கள் பிரிக்கப்பட்டு அவை சிற்றுடைமையாக்கப்பட்டபோது அங்கு நிரந்தரமாக வேலை செய்த இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களையும் பங்குபோட்டு கொண்டனர். தமது தோட்டங்களில் சராசரியாக 200 முதல் 300 குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் சிறுதோட்டங்களாக பிரிந்தபோது 10 முதல் 15 குடும்பங்கள் என்றவாறு பிரிந்து தமது கூட்டுவாழ்க்கையை இழந்தனர். அதுமட்டுமன்றி தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களாக உருவாகிய சிங்கள விவசாயிகளின் கீழ் தமது வாழ்வாதாரத்தை நம்பியிருக்கவேண்டியவர்களாகவும் மாறினர்.
பெருந்தோட்டம் என்ற கட்டமைப்பிலிருந்து விடுபட்ட இவர்கள், தொழிற்சங்க அங்கத்துவத்தையும் அதனுடனான பாதுகாப்பையும் இழந்தனர். அதேவேளை இவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாது போனது. பெருந்தோட்டங்களில் காணப்பட்ட தோட்டப் பாடசாலைகளை நிர்வகித்த பெருந்தோட்ட முகாமைத்துவமும் இல்லாத நிலையில் தமிழ் மொழிமூலமான தோட்டப் பாடசாலைகள் செயலிழந்தன. கோவில்களும் அவர்களது பொது நலன்களும் நலிவுற்றுப்போயின. இதற்கு மேலாக அப்போதைய நிலையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவந்த போரில் சிங்கள இராணுவ வீரர்கள் இறக்கநேரிடும் சந்தர்ப்பங்களின் போது தெற்கே தமிழர்களை பழிவாங்குவது சகஜமான நிகழ்வாக இருந்தது. இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள மக்களுடன் வாழ்ந்து வந்த இந்தியத்தமிழர்களேயாவர்.
இந்நிலையில் இவர்கள் தாம் தமிழர் என்ற அடையாளத்துடன் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களில் பலர் சிங்களவர்களைப் போன்று நடமாடினால்தான் உயிர் வாழலாம் என்ற நிலை உருவாகியது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவந்த இந்த வழக்கத்திலிருந்து மீள முடியாதவாறு பெரும்பாலான நேரங்களில் சிங்கள மொழியிலேயே பேசிக்கொள்பவர்களாகவும், சிங்களப் பாடசாலைகளிலேயே கற்கவேண்டியவர்களாகவும் மாறினர். சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்ற பெரும்பாலானோர் தமிழை பொது இடங்களில் பேசுவதற்கு தயங்கினர். அவ்வாறு தமிழில் பேச முடியாத பல தமிழ் இளைஞர்கள் இங்கு இருப்பதைக் காணமுடிகிறது.
இவ்வாறு சிங்கள மொழியை உள்வாங்கி, சிங்களக் கலாசாரத்தை முதன்மைப்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பலர் சிங்களப் பெண்களை திருமணமும் செய்துள்ளனர். இதுபோல சிங்களப் பெண்களும் கல்வி கற்ற தமிழ் இளைஞர்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பொதுவாக தென்மாவட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களில் கணிசமானோர் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்துகொண்ட ஒரு புதிய சமூகமாக இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து இன்னுமொரு சிங்களச் சமூகமாக மாறுகின்ற நிலைமை வெகுதூரத்தில் இல்லை.
3. வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள்
மூன்றாவதாக வகைப்படுத்தும் இந்தியத் தமிழர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று குடியேறியவர்களாவர். இவ்வாறு குடியேறியவர்களில் கணிசமானோர் மலையகப் பெருந்தோட்டங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர். இவர்களின் குடிபெயர்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் பேராசிரியர் M. S மூக்கையா, பேராசிரியர். சூரியநாராயணன் போன்றவர்கள் எழுதியுள்ளனர். அங்கு குடியேறிய பலரும் தங்களின் அனுபவங்கள் பற்றி அண்மைக்காலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். ஆனால் இவ்வெளியீடுகள் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இல்லை. இங்கு குடியேறிய பலர் இறுதிக்கட்டப் போரில் வீர மரணம் அடைந்துள்ள பதிவுகளை கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இவர்கள் பெரும்பாலும் மன்னார் (692), வவுனியா (1979), கிளிநொச்சி (1020), முல்லைத்தீவு (2281) போன்ற மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்றதை அவதானிக்கலாம். அது மட்டுமன்றி இறுதியாக எடுக்கப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டின் போது தங்களின் இன அடையாளத்தை தெளிவாக இந்தியத் தமிழர் என்றவாறு இவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். ஒருபுறம் அங்கு வாழ்கின்ற இலங்கை தமிழரின் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்து வாழுகின்ற சூழ்நிலை இவர்களிடம் அதிகமாகவே தென்படுகின்றது. இன ரீதியாக இந்தியத் தமிழர் என்றாலும் அவர்களுடைய பேச்சு வழக்கு, பண்பாடு என்பன மிக வேகமாக இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் மறைந்து போய் விடலாம்.
பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியமர்த்தப்பட்ட இந்தியத் தமிழர்களின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதற்கு பெருந்தோட்டக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரதான காரணங்கள். பல மாற்றங்களிலும் மலையகம் கொழும்பு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் ‘தமிழர்’களாக வாழக்கூடியதாக இருப்பினும் பெரும்பாலான சிங்களவர்களின் மத்தியில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் தமது இன அடையாளத்தை விரைவில் இழக்க நேரிடலாம். அரசியல் ரீதியாக பெரும்பான்மையினர் மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் இந்தியத் தமிழர்கள் தன் அடையாளத்தை இழக்கும் அபாயத்தைத் தடுக்கலாம்.
தொடரும்.