இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக துல்லியமான காலநிலைத் தரவுகளைப் பெறுவது பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. 1985 இற்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வானிலை மூலக்கூறுகளை அவதானித்து அளவிடும் பல வானிலை மற்றும் மழை அளவீட்டு நிலையங்கள் இருந்தன. ஆனால் முப்பது வருட உள்நாட்டு மோதல் காரணமாக அவற்றில் பல இன்று செயற்படவில்லை. 13 மழைவீழ்ச்சி நிலையங்கள் மட்டுமே வட பிராந்தியத்தின் 1992 முதல் 2022 வரையிலான தொடர் மழைவீழ்ச்சித் தரவுகளைக் கொண்டுள்ளன. காலநிலை ஆய்வுகளுக்கு குறைந்தபட்சம் முப்பது வருடங்கள் தொடர்ச்சியான வானிலைத் தரவுகள் தேவை. இந்த நிலையங்களின் தரவுகளும் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் செறிவான காலநிலைமாற்ற ஆய்வுகளை மேற்கொள்ளப் போதுமானதாக இல்லை. எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் புதிய மழை, வானிலை நிலையங்களை நிறுவ வேண்டும் அல்லது பழைய நிலையங்களை மீண்டும் செயற்பட வைக்க வேண்டும். வடமாகாணத்தில் 10 சதுர கிலோமீற்றருக்கு ஒரு வானிலை அவதான நிலையம் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 2 விவசாய வானிலை அவதான நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.
சமுத்திர மேற்பரப்பு வளிமண்டல நிலைமைகளைக் கண்காணிக்கும் எந்த அமைப்பும் இங்கு இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியானது கடலால் சூழப்பட்டது. வளர்ந்த நாடுகளில், பல வானிலைக் கண்காணிப்பு நிலையங்கள் கடல்களின் மேற்பரப்பில் அமைந்துள்ளன. எனவே வடக்குப் பிராந்தியத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குக் கடற் பரப்பில் குறைந்தது 3 சமுத்திர வானிலைக் கண்காணிப்பு மையம் (Ocean Weather Observation Centre – OWOC) நிறுவப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் மத்திய பகுதியில் தனியான பிராந்திய வானிலை ஆய்வுத் திணைக்களம் நிறுவப்பட வேண்டும். பாலசுந்தரம்பிள்ளை (1980) அவர்களின் கருத்துப்படி, மாங்குளம் வட பிராந்தியத்தின் மையப் பகுதியாகும். எனவே மாங்குளத்தில் பிராந்திய வானிலை ஆய்வு மையம் (Regional Meteorology Department – RMD) நிறுவப்பட வேண்டும். இந்தத் திணைக்களம் ஏனைய வானிலை நிலையங்கள், மழைப் பொழிவு நிலையங்கள் மற்றும் விவசாய வானிலை நிலையங்களுடன் ஒருங்கிணைந்து வடக்குப் பிராந்தியத்திற்கு தனியான வானிலை முன்னறிவிப்பை வழங்கலாம்.
வட மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அபாயங்களைக் கணிக்க முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் எதுவும் இல்லை. இரண்டாவது இடைப்பருவ மற்றும் வடகீழ் பருவக் காற்றுக்கால வெள்ளப்பெருக்கு மற்றும் தென்மேற்கு பருவக் காற்றுக்கால வறட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, பாதிக்கப்படக்கூடிய பகுதி மக்களுக்கு இது தொடர்பாக முன்னறிவிக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வு மழைவீழ்ச்சிப் பகுப்பாய்வு, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வறட்சி மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றைக் கணிக்க உதவுவதோடு, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் ஏற்படும் வெள்ளத்தைக் கணிக்கவும் உதவும். மேலும், இலங்கையின் வடபகுதியில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றை முன்னறிவிப்பதற்காக வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமைகளைப் பின்பற்ற வேண்டும்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் கடுமையான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, வடகீழ் பருவக்காற்றுக் காலம் (டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி) மற்றும் இரண்டாவது இடைப்பருவம் (அக்டோபர் மற்றும் நவம்பர்) ஆகியவற்றின் போது, இலங்கையின் வடக்குப் பகுதி மக்களுக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் வட மாகாணத்தில் மேற்படி பருவங்களில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகாலமைப்புகள் உள்ளன. முப்பது வருடகால உள்நாட்டுப் போர் காரணமாக அவற்றில் பெரும்பாலானவை சேறும் சகதியுமாக மாறியுள்ளன. திட்டமிடப்படாத கட்டிட அமைப்பு, சாலைகள் அமைப்பு, காடழிப்பு மற்றும் தோட்டம் அமைத்தல் ஆகியவை வட மாகாணத்தில் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகாலமைப்புச் சேதமடைவதற்கு முக்கிய காரணமாகும். வடிகாலமைப்பு சீர்குலைவதால் நகரப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பண்ணை வயல்களில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. புதிய வடிகால்களை அமைத்தல் மற்றும் பழைய வடிகாலமைப்புகளை புதுப்பித்தல் ஆகியன வடக்கு மாகாணத்தின் மேற்குறிப்பிட்ட இடங்களில் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.
ஒவ்வொரு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் வட மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியைத் தவிர்க்க சிறப்புத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, வடிகால் அமைப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது, அனர்த்தங்களுக்கு எதிராக விரைவான மற்றும் பயனுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்துவது, கிராமப்புற அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கு பயிற்சித் திட்டங்களை வழங்குவது அவசியம். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய ஆராய்ச்சிகளுக்கான நிதியை ஒதுக்குவது, வட மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிப் பாதிப்புகளைக் குறைக்க உதவும். மேற்கூறிய சில நிகழ்ச்சிகள் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களால் நடத்தப்படுகின்றன; ஆனால் அவை முறைப்படுத்தப்படவில்லை.
வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணுவதோடு, அவசர காலத்தில் அதிகாரிகளுக்கு உதவவும் வேண்டும். புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் தொலையுணர்வு நுட்பங்கள் இந்த விஷயத்தில் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் திணைக்களங்களுக்கு இடையில் அவசரகால ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியின் போது இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அனர்த்த பாதிப்பைக் குறைப்பதற்காக திணைக்களங்கள் எந்த ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த கால பதிவுகளின்படி மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் உத்தியோகத்தர்கள் அபாயம் ஏற்பட்ட பின்னரே அனர்த்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். மீட்பு காலங்களில் ஏனைய துறைகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இதுபோன்ற அனர்த்த காலங்களில் களத்தில் செயற்படும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அத்தகைய ஒருங்கிணைப்பை ஏற்பாடு செய்வது அரசாங்கத்தின் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இலங்கையின் வட பிராந்தியத்தில் உண்டாகும் அனர்த்தங்கள் பல வகையான சேதங்களை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் வடக்குப் பகுதி யுத்தம் மற்றும் இயற்கை இடர்களினால் பல தடவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களைக் கணிக்கவும், வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியினால் ஏற்படும் அனரத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அத்தகைய அனர்த்தங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும், அவற்றைத் தணிக்கவும் ஆய்வு ஆராய்ச்சிகள் உதவ வேண்டும். இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), சமூக நிறுவனங்கள் (CBO), மற்றும் மக்கள் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்குத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டாகப் பங்களிக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கு இயைபான தணிக்கும் நடவடிக்கைகள், மேற்பரப்பு நீர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடமாகாணத்தின் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் சேர்க்க வேண்டும். அபிவிருத்தியை அனுமதிக்கும் போது, எதிர்பாராத காலநிலைமாற்ற விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும். வெப்பநிலை மாற்றத்தை உந்துகின்ற அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள், மழை மற்றும் வெப்பநிலையில் தங்கியுள்ளன. எனவே, இதனைப் பாதிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது.
பகிரப்பட்ட சமூகப் பொருளாதார பாதைகளான 4.5 மற்றும் 8.5 என்பவற்றின் அடிப்படையில், எதிர்கால மழைவீழ்ச்சி முறையில் மாறுபாடுகள் உள்ளன. சில பகுதிகள் ஏனைய பகுதிகளை விட அதிக மழையைப் பெறவுள்ளன. ஏற்கனவே அதிகளவு நீரை கடலுக்கு அனுப்பும் பகுதிகள், எதிர்காலத்தில் இன்னும் அதிகளவான நீரை கடலுக்கு அனுப்பவுள்ளன. தற்போது, பல ஆறுகள் 2443 மில்லியன் கன மீற்றருக்கும் அதிகமான நீரை கழுவு நீரோட்டமாகவும், 2910 மில்லியன் கன மீற்றருக்கும் அதிகமான நீரை மேற்பரப்பு நீரோட்டமாகவும் கடலுக்கு அனுப்புகின்றன. வட மாகாணத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளின் நீர்ப்பிடிப்புகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 30% மழை நீர் கடலில் சேருகின்றது. எனவே, புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதும், தற்போதுள்ள நீர்த்தேக்கங்களை புனரமைப்பதும், நீர் தேக்கும் திறனை மேம்படுத்துவதும் தற்போதைய மற்றும் வருங்கால வெள்ளச் சேதம், வறட்சியைக் குறைக்கும். ஓடும் நீராதாரங்களைப் பயன்படுத்தவும், நீர்ப் பற்றாக்குறை, வறட்சி மற்றும் வெள்ளத்தை நிர்வகிக்கவும் வட மாகாணத்தில் புதிய நீர்த்தேக்கங்களை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆற்றுப் படுகைகளின் மேல் மற்றும் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட பல வாய்ப்புகள் உள்ளன. எனவே, புவியியல் நிலப்பரப்பு பகுதிகள், நீருக்கான இயற்கை ஈர்ப்பு, போதுமான இடம், மழைவீழ்ச்சி, ஆற்றுப்படுகைகளில் இருந்து பெருகிவரும் நீரோட்டம் மற்றும் மண் காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுகையின் கீழ் அல்லது நடுத்தர நீர்ப்பிடிப்புப் பகுதி, அக்கராயன் ஆற்றுப்படுகையின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதி, தேராவில் ஆறு ஆற்றுப்படுகையின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதி, பறங்கியாற்றின் மேல் அல்லது நடுத்தர அல்லது கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகிய இடங்களில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது (படம் 15.3, 15.4, 15.5, 15.6,15.7 மற்றும் 15.8). அருவி ஆற்றுப் படுகை, பேராறு ஆற்றுப் படுகையின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதி, பாலி ஆறு ஆற்றுப் படுகையின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் மா ஓயா ஆற்றுப் படுகையின் கீழ் நீர்ப்பிடிப்புப் பகுதியில் புதிய நீர்த்தேக்கங்களை அமைப்பதும் எதிர்காலத்தில் வடக்கு மாகாண வறட்சி மற்றும் வெள்ள முகாமைத்துவத்திற்கு உதவியாக அமையும்.
படம் 15.1. பகிர்ப்பட்ட சமூக பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில், 4.5 இன் கீழ், மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால வடக்கு மாகாண மழைவீழ்ச்சியின் இடம்சார் பாங்கு
படம் 15.2. பகிரப்பட்ட சமூக பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில், 8.5 இன் கீழ், மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால வடக்கு மாகாண மழைவீழ்ச்சியின் இடம்சார் பாங்கு
படம் 15.3. பரிந்துரைக்கப்பட்ட வட மாகாணத்தின் புதிய நீர்த்தேக்க அமைவிடங்கள்
படம் 15.4 பரிந்துரைக்கப்பட்ட அருவியாற்றின் புதிய நீர்த்தேக்க புவியியல் அமைவிடம்
படம் 15.5 பரிந்துரைக்கப்பட்ட பாலியாற்றின் புதிய நீர்த்தேக்க புவியியல் அமைவிடம்
படம் 15.6 பரிந்துரைக்கப்பட்ட பேராற்றின் புதிய நீர்த்தேக்க புவியியல் அமைவிடம்
படம் 15.7 பரிந்துரைக்கப்பட்ட மண்டைக்கல்லாற்றின் புதிய நீர்த்தேக்க புவியியல் அமைவிடம்
படம் 15.8 பரிந்துரைக்கப்பட்ட பறங்கியாற்றின் புதிய நீர்த்தேக்க புவியியல் அமைவிடம்
வட மாகாணத்தில் மேற்பரப்பு நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத வளர்ச்சி நடவடிக்கைகள் பல, ஆற்றுப்படுகைகளை அழிக்கின்றன. எனவே, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட முகாமைகள், காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மேற்பரப்பு நீர் குறித்த புதிய கொள்கைகளை வகுத்து, மேற்பரப்பு நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க புதிய கட்டமைப்புகளை வடிவமைப்பது அவசியம்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் நீண்ட காலமாக தட்பவெப்பநிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து வருகின்றனர். தமிழர்களின் பண்டிகைகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் ஆறு மாதங்களை வறண்ட பருவம் என்றும், இரண்டாவது ஆறு மாதங்களை மழைக்காலம் என்றும் தமிழர்கள் பிரித்துள்ளனர். அவர்கள் முதல் ஆறு மாதங்களில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையையும் அடுத்த ஆறு மாதங்களில் மற்றொரு வாழ்க்கை முறையையும் வாழ்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் உணவுமுறைகளையும் மாற்றி வந்துள்ளனர்.
வட மாகாணத்தில் 90% மத, கலாசாரத் திருவிழாக்கள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பே முடிவடைகின்றன. ஏனெனில் ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு மழை வரும். மழையால் கோவில் திருவிழாக்கள் பாதிக்கப்படலாம். பெரும்பாலான இந்துக் கோவில்கள் வருடாந்த திருவிழாவின் முடிவில் ‘தீர்த்தம்’ எனும் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றன. கோவில்களின் குளங்கள் (சிறிய அளவிலான நீர்த்தேக்கம்) சுத்தம் செய்யப்படுகின்றன. இக் குளங்களில் தேங்கும் மழை நீர், நிலத்தடி நீரை நிரப்புகிறது. வடக்கு மாகாணத்தில் 85% இற்கும் அதிகமான மழை ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெறப்படுகிறது. கோவில் குளங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, மழைநீரை அதில் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீர் நிரம்புகிறது. நிலத்தடி நீரைச் சேமிப்பதில் கோவில் குளங்கள் முதன்மையான பங்களிப்பை வழங்குகின்றன.
இயற்கைத் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் புதிய தாவரங்களை நடுதல் ஆகியன ஊக்குவிக்கப்பட வேண்டும். இலங்கையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் இல்லாவிட்டால் வெப்பநிலை அதிகரிக்கும். இலங்கையின் வடக்குப் பகுதி மொத்த நிலப்பரப்பில் 43% காடுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, ஆய்வுப் பகுதியில் இயற்கையான தாவரப் பரப்பை அதிகரிப்பதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பைத் தணிக்கலாம்.
காலநிலை மாற்றம் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது; பல வகையான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. கடுமையான உள்நாட்டுப் போர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக காலநிலை மாற்றத்தால் வடக்கு மாகாணம் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்தச் சூழலில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அவற்றைத் தணிப்பதற்கும் இந்த ஆய்வு நூல் உதவக்கூடும்.