அறிமுகம்
காலநிலை மாற்றம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் (Mihailovic & Jovanovic, 2022) மற்றும் உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் தாக்கங்கள் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் அனைத்து முதன்மை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கைத் துறைகளிலும் பரவலாக உணரப்படுகின்றன. பூகோள காலநிலை மாற்றம் காரணமாக வரட்சி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள், கடுமையான மழைப்பொழிவு, குளிர் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் நிகழ்வெண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மை ஆகியன அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசியாவின் பல பகுதிகளில் அதிகமாக நிகழ்வதாக கணிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆசிய நாடுகளின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் 2030 ஆம் ஆண்டு 2-4 °C வெப்பநிலை அதிகரிப்பையும், 2022 முதல் 2050 வரை வெப்பமண்டல சூறாவளியின் தீவிரத்தில் 20% அதிகரிப்பையும் எதிர்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்க பல நாடுகளும் அதிக முன்னுரிமைகளை வழங்குகின்றன. அந்தந்த நாடுகளில் ஏற்படும் காலநிலை மாற்றத் தாக்கங்களை மாற்றியமைக்க அல்லது குறைக்க அவர்கள் மற்ற நாடுகளுக்கு தங்கள் மதிப்புமிக்க ஆதரவை வழங்கியுள்ளனர்(Timmons & Lunn, 2022).
காலநிலை மாற்றத்தால் கடுமையாக அச்சுறுத்தப்பட்ட முதல் வளம் நீர். எனவே, இயற்கை வளங்களில் காலநிலை மாற்ற பாதிப்புக்களை எதிர்கொள்ளும் முக்கியமான துறையான நீர் வளங்களை நிர்வகிப்பதில் பல நாடுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நீரைப் பாதுகாக்க சில நாடுகள் புதிய கொள்கைகளை உருவாக்கியுள்ளன அல்லது ஏற்கனவே உள்ள அமைப்பை மறுசீரமைக்கின்றன. மேலும் அவை காலநிலை மாற்றம் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றன. உலகளாவிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்குள் எதிர்வுகூறப்பட்ட எதிர்கால காலநிலை மாற்ற எதிர்வு கூறல்கள் சராசரி காலநிலை நிலையை விட தற்போதைய காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது (Liu et al., 2021).

உலகெங்கிலும் உள்ள பல வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தால் கடுமையான நீர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இலங்கை, இந்தியப் பெருங்கடலில் உள்ள வெப்பமண்டல மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு வளரும் நாடு. முப்பது வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அரசாங்கம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்பது வருடகால உள்நாட்டு முரண்பாட்டின் பின்னர், இலங்கையில் பல தரப்புக்களால் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் பல மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. எவ்வாறாயினும், இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு, குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான தடையாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்து வரும் கணிக்க முடியாத தீவிர காலநிலை மாற்ற பாதிப்புக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரே காலப்பகுதிகளில் வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் வழங்குகின்ற அளவுக்கு 2023 ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் மேற்கு, தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான வரட்சியும் நிலவியதை குறிப்பிடலாம்(Qu & Motha, 2022).

இலங்கையின் வடக்குப் பிராந்தியம் நாட்டின் உலர் வலய வகைப்பாட்டில் அமைந்துள்ளதால் அப்பகுதியின் உயிர்வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கியமான வளங்களாக தரைமேல் மற்றும் தரைக்கீழ் நீர் வளங்கள் கருதப்படுகின்றன. காலநிலை மாற்றம் இலங்கையின் மேற்பரப்பு நீர் வளங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பகுதியில் வடகிழக்கு பருவ மழைக்காலம், தென்மேற்கு பருவக்காற்று பருவம், முதல் பருவ மழைக்காலம், மற்றும் இரண்டாவது இடை பருவ மழைக்காலம் என நான்கு காலநிலை பருவங்கள் நிலவுகின்றன. இருப்பினும், மழைப்பொழிவு நான்கு பருவங்களிலும் சமமாக அமையவில்லை. ஏனெனில் இரண்டாவது இடைப் பருவக்காற்று காலம் மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலம் ஆகிய இரண்டு பருவங்கள் மட்டுமே போதுமான மழைப்பொழிவைக் கொண்டுள்ளன. வடகீழ் பருவமழை காலத்தில், குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை, இப்பகுதியில் பெய்யும் மழை, ஆண்டு முழுவதும் குடிநீர், உள்நாட்டு விவசாயம் மற்றும் உற்பத்தித் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது. சமீபத்திய காலநிலை மாற்றம் மழைப்பொழிவில் கணிசமான மாறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பருவத்தில் வரட்சியையும் மற்றொரு பருவத்தில் வெள்ளத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, நீர் ஆதாரங்கள், குறிப்பாக வடக்கு பிராந்தியத்தின் மேற்பரப்பு நீர் ஆதாரங்கள், காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன (Facts, 2022). தென்மேற்கு பருவக்காற்று பருவ காலத்தின் போது கடுமையான நீர் பற்றாக்குறை, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தின் திடீர் வீழ்ச்சியைத் தூண்டுதல், ஆற்றுப்படுகைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் கிடைக்காமை, நீருக்கான தேவை அதிகரித்தல், நீர்த்தேக்கங்களில் நீர் கிடைக்காமையால் நீர் வழங்கல் தடைப்படுதல் மற்றும் வரட்சி நிகழ்வுகளின் நிகழ்வு எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற பல பிரச்சினைகள் காலநிலை மாற்றத்தால் வட இலங்கையில் உருவாக்கப்படும் அனர்த்தங்களாகும்.
சமீபத்திய தசாப்தங்களில், உலர் வலய பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஒரு கடுமையான பிரச்சினையாக மாறி வருகிறது. நீர் தட்டுப்பாடு இலங்கை அரசுக்கு தேவையற்ற பொருளாதார சுமையை உருவாக்குகிறது. கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையினால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இதேவேளை, தென் மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணங்கள் போன்ற சில பிரதேசங்கள் அடிக்கடி வெள்ளப்பெருக்குகளை எதிர்கொள்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், வட மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை சந்தித்துள்ளன. அதேநேரம், ஏனைய பிரதேசங்கள் மேலதிக நீர் பிரச்சினைகளை (வெள்ளப்பெருக்கு) எதிர்கொண்டன. காலநிலை மாற்றத்தினால் இந்தப் பிரச்சினைகள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன, ஆனால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை (ADB, 2022).

வரலாற்று ரீதியாக சமீப காலம் வரை, இலங்கையின் வடக்கு மாகாணம் ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரை அனுபவித்தது. 2017 ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபையின் கூற்றுப்படி, இறுதி யுத்தத்தின் போது மட்டும் 115,000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்; 60,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; 500,000 இற்கும் அதிகமான மக்கள் தங்கள் நிலத்திலிருந்து இடம்பெயர்ந்தனர். இதன் விளைவாக, எந்த துறைகள் குறித்தும் எந்தவிதமான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் உட்பட மக்கள் உயிருடன் வாழ்வதையே தம்முடைய பிரதான இலக்காக கருதினர். இலங்கையின் வட பிராந்தியத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றி சில ஆரம்ப ஆய்வுகள் இருந்தாலும், இவை முதன்மையாக வெப்பநிலை மற்றும் மழை மாற்றங்களுடன் தொடர்புடையவையாக மட்டுமே இருந்தன. பிற நாடுகள் தங்களது எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை அந்தந்த நாடுகளில் எதிர்வுகூறப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பொருத்தமான உத்திகளுடன் செயல்படுத்தியுள்ளன அத்தோடு அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக இதுபோன்ற திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறைவாகவே உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இந்த பகுதிகளில் காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை வகுப்பதற்கு அல்லது வடிவமைக்க எதிர்கால காலநிலை மாற்ற வடிவத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது. எனவே, இந்த ஆய்வு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நீர் வளங்கள் மற்றும் அவற்றின் மேலாண்மையில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இடைவெளிகளை பூர்த்தி செய்யும் (Rahman & Rahman, 2022).
இலங்கையின் மேற்பரப்பு நீர்வள நிர்வாகம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் நிர்வாக ரீதியாக இரண்டு பிரிவுகள் உள்ளன. முக்கியமாக நீர் நிர்வாக அதிகாரங்கள் மாகாண அரசாங்கத்தின் கீழ் வருவதுடன் அவை மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏதேனும் ஆறு அல்லது நீர்த்தேக்கம் இரண்டு மாகாணங்களுடன் தொடர்புடையதாக அமைவு பெற்றால் அதன் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் அதன் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் நீர்ப்பாசனத்துறைக்குரியதாக நிர்வாகமாக அமைகின்றது. இருப்பினும், இந்த இரண்டு திணைக்கள அதிகாரிகளும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நெருக்கடிகளின் கீழ் நீர் பகிர்வை நிர்வகிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் காலநிலை மாற்ற அவசரநிலைகளின் கீழ் நீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் எதுவும் மத்திய மாகாண நீர்ப்பாசன திணைக்களங்களிடம் இல்லை. தற்போதைய நீர் முகாமைத்துவ அமைப்பு இரண்டு நிர்வாகங்களிலும் காலநிலை மாற்ற நிலைமைகளுக்கு ஏற்றதாக இல்லை.
தொடரும்.