தொடக்கக் குறிப்புகள்
இலங்கையர்களுக்கு மின்சாரத்தை உறுதி செய்ததில் நீர் மின்சாரத்தின் பங்கு பெரிது. சுதந்திரத்துக்குப் பிந்தைய மூன்று தசாப்தகாலத்தில் இலங்கையர்களில் பெரும்பான்மையோருக்கு மின்சாரத்தை தங்கள் வீடுகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தது. 1990 களின் நடுப்பகுதியில் இலங்கையின் மின் உற்பத்தியில் 96% நீர்மின்சாரத்தில் இருந்து பெறப்பட்டது. இலங்கை மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருந்தது. இதன்மூலம் சூழலுக்கு மாசற்ற முறையில் பெரும்பான்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்த நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருந்தது. இவ்வாறான நீர்மின் திட்டங்களும் நீர்த்தேக்கங்களும் உருவாக்கப்பட்டதன் விளைவால் 2006 ஆம் ஆண்டு முழு இலங்கையருக்கும் மின்சாரம் உறுதிசெய்யப்பட்டது. இதைச் சாத்தியமாக்கியதில் நீர் மின்சாரத்தின் பங்கு பிரதானமானது. ஆனால் இத்திட்டங்கள் மிகப்பெரிய சமூக, சூழலியல் பாதிப்புக்களை ஏற்படுத்தின. ஆனால் அவை பேசப்பட்டதில்லை. “அபிவிருத்தியின் பெயரால்” அவை இலகுவாக மறைக்கப்பட்டன.
தென்னாசியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை, நீர்மின் வளர்ச்சிக்கான அதிக சாத்தியம் மற்றும் குறைந்த கார்பனீரொக்சைட்டை உமிழும் சக்தி மூலங்களுக்கான தேவை ஆகியன காரணமாக தெற்காசியாவின் எரிசக்தி எதிர்காலத்தில் நீர் மின்சாரம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கின்றது. நீர்மின்சார வளர்ச்சியின் அளவு, மாற்று எரிசக்தி ஆதாரங்களின் விலை, நீர்மின்சாரத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமத்துவ வளர்ச்சியின் சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணிகளையும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டும். இன்று ஏனைய தென்னாசிய நாடுகள் நீர்மின்சாரத் திட்டங்களை நோக்கி நகர்கின்றன. அவற்றுக்கு இலங்கையின் அனுபவம் பயனுள்ளது.
இலங்கையின் நீர்மின்சாரத்தின் கதை
இரண்டாவது போயர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தென்னாபிரிக்கப் போர்க் கைதிகளுக்கான முகாம்கள் பிரித்தானியக் கொலனியாக இருந்த இலங்கையில் கட்டப்பட்டன. இதைக் கட்டும் பொறுப்பில் தியத்தலாவை மாவட்டப் பொறியாளராகப் பணிபுரிந்தவர் டி.டபிள்யு. விமலசுரேந்திர. இந்தப் பணிகளின் போது அவர் நெதர்லாந்து நாட்டின் பொறியியலாளர் இயன் வான் கெய்செல் என்பவரைச் சந்தித்தார். கெய்செல் போர்க்கைதியாக இலங்கையில் இருந்தார். முகாம்களைக் கட்டுவதற்கு மேலதிகமாக, இலங்கையின் கனிம வளங்களை அடையாளம் காணும் பொறுப்பும் விமலசுரேந்திரவுக்கு வழங்கப்பட்டது. அதற்கு உதவுவதற்கு பொறியியலாளராக கெய்செல்லை பயன்படுத்தும்படி கொலனி நிர்வாகம் பணித்தது.

இருவரும் பணி நிமித்தம் நாடு முழுவதும் பயணித்தனர். அப்போது மஸ்கெலி ஓயா மற்றும் கிரிவநெலிய (பின்னர் லக்சபான) நீர்வீழ்ச்சிகள் வீணாக ஓடி களனி கங்கையில் கலப்பதை கெய்செல் அவதானித்தார். அவர் இதை ஏன் நீர்மின்சாரமாக உருவாக்கக்கூடாது என்ற வினாவை விமலசுரேந்திரவிடம் தொடுத்தார். நீர் ஆற்றலைப் பயன்படுத்தி நீர்மின்சாரத்தைப் பெறலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார். அவ்வகையில் இலங்கையில் நீர் மின் உற்பத்தி பற்றிய சாத்தியத்தைக் கண்டடைந்தவர் போர்க்கைதியாக இருந்த இயன் வான் கெய்செல். உலகம் முழுவதும் பயணம் செய்து, நீர் மின்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்ற தனது தோழரான கெய்செல் தான், மின்சார உற்பத்திக்காக லக்சபானவை பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை பரிந்துரைத்தாக விமலசுரேந்திர நினைவுகூருகிறார் (Ref 56).
அபர்டீன் – லக்சபான திட்டம் என்பது நாட்டின் நான்காவது நீளமான நதியான களனி நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு நீர் மின்சார உற்பத்தித் திட்டமாகும். இது மத்திய மலைநாட்டிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி கொழும்பில் கடலை அடையும். இது கெஹல்கமு ஓயாவின் துணை நதியான அபர்டீன் நீர்வீழ்ச்சி மற்றும் மஸ்கெலி ஓயாவின் துணை நதியான லக்சபான நீர்வீழ்ச்சியின் திறனைத் பயன்படுத்தி 70,000 குதிரை வலு கூட்டுத் திறனை உருவாக்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திட்டமிடப்பட்ட போதும் முழு கொழும்பு நகரத்தின் மின்சாரத் தேவையை விட இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஆற்றல் மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. அபர்டீன் – லக்சபான திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மலிவான நீர் மின்சாரம், அப்போது பயன்படுத்தப்பட்ட விலையுயர்ந்த நிலக்கரி, டீசல் மற்றும் எரிசக்திக்கு மாற்றீடாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏதிர்பாராத தாமதங்களுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் 1924 இல் தொடங்கப்பட்டன, ஆனால் பல காரணங்களால் 1927 இல் நிறுத்தப்பட்டன. பம்பாயின் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் மூலம் 1939 ஆம் ஆண்டு மேலும் பன்னிரண்டு ஆண்டுகள் தாமதத்துடன் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக நிறுவனம் 1942 இல் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. 1945 இல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அபர்டீன் – லக்சபான நீர்மின்சாரத் திட்டம் இறுதியாக 1950 இல் செயற்பாட்டுக்கு வந்தது. அரசாங்கத்திற்குச் சொந்தமான மின் நிறுவனங்களின் திணைக்களம், கட்டுமானப் பணிகளை முடித்தது. கட்டுமானம் மற்றும் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட இந்த நீண்ட கால தாமதத்தின் போதுதான் தொழில்மயமாக்கல் பற்றிய ஒரு உரையாடல் இலங்கையில் தோன்றியது. நீர் மின்சாரத் திட்டத்தின் குறைந்த விலை மற்றும் வெகுஜன அளவிலான மின் ஆற்றல் உற்பத்தித் திறன் ஆகியன தொழில்துறையில் முன்னேறிய இலங்கையைக் கற்பனை செய்வதைச் சாத்தியமானது.
இன்று இலங்கையின் நீர்மின்சாரத்தின் தந்தை என டி.டபிள்யு. விமலசுரேந்திர அறியப்படுகிறார். ஆனால் இயன் வான் கெய்செல் வரலாற்றின் பக்கங்களில் இருந்து காணாமல் போயிருக்கிறார். இது நிகழ்ந்ததற்கு இரண்டு எதிரெதிரான கதையாடல்கள் காரணம். முதலாவது கதையாடல் பிரித்தானிய கொலனியாதிக்கக் கதையாடல். இது இலங்கையில் நீர்மின்சாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையை பிரித்தானியரான F.B. ரைலண்ட்ஸ் என்பவருக்கு வழங்குகிறது. இரண்டாவது கதையாடல் சிங்களத் தேசியவாதக் கதையாடல். இது அனைத்துப் பெருமையையும் டி.டபிள்யு. விமலசுரேந்திரவுக்கு அளிக்கிறது. ஒன்று கொலனியாதிக்கக் கதையாடலாகவும் இன்னொன்று அதற்கு எதிரான தேசியக் கதையாடலாகவும் விளங்கியது. இவ்விரண்டிலும் இயன் வான் கெய்செல் என்ற பாத்திரத்திற்கு இடமிருக்கவில்லை.
இலங்கையின் வரலாற்றில் டி.டபிள்யு. விமலசுரேந்திரவின் வகிபாகம் முக்கியமானது. குறிப்பாக இலங்கையின் சாதிய அரசியலை விளங்கிக்கொள்வதற்கும், எவ்வாறு வர்க்க அரசியலானது மக்கள் நல அரசியலை மேவியது என்பதையும் புரிந்துகொள்ள விமலசுரேந்திரவின் வாழ்க்கை அனுபங்கள் உதவும். சிங்களத் தேசியவாதத்தின் தேவைக்கான பயன்பட்ட விமலசுரேந்திர, சாதிய அடுக்கில் கீழ்நிலையில் இருந்தமையால் ஒரு தேசியக் கதாநாயகனானத் தோற்றம் பெறவில்லை.
நீர்மின் திட்டங்களும் சவால்களும்
இலங்கையின் முதலாவது நீர்மின்திட்டமான லக்சபான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட சூழலியல் இழப்புகள், இடப்பெயர்வுகள் குறித்த தகவல்கள் மிகக்குறைவு. இது குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான விக்டோரியா நீர்மின் திட்டம் தொடர்பில் விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பிரித்தானியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் சமூகச் சூழலியல் விளைவுகள் குறித்த சில முக்கிய விடயங்களை நோக்கலாம்.

விக்டோரியா திட்டம் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஒரு மின்சார மற்றும் நீர்ப்பாசனத் திட்டமாகும். ஆனால் நீர்ப்பாசனப் பகுதி விக்டோரியா அணைக்குப் பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தில் மட்டுமே நீர் சேமிப்பைக் கொண்டுள்ளது. இது ஏப்ரல் 1985 இல் இயங்கத் தொடங்கியது.
1986 இல் இந்த திட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் அயல்நாட்டு அபிவிருத்தி பணியகம் ஒரு மதிப்பீட்டை செய்ய முடிவெடுத்தது. பிரித்தானியாவின் நிதியுதவியில் விக்டோரியா நீர்த்தேக்கமும், நீர்மின்சாரத் திட்டமும் அமைக்கப்பட்டிருந்ததால் பிரித்தானிய அயலுறவு அமைச்சகம் இந்த மதிப்பீட்டை செய்தது. குறித்த மதிப்பீட்டுத் துறையின் உறுப்பினர் தலைமையில் பொருளாதார நிபுணர், பொறியாளர், சமூகவியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவினால் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்காக இக் குழு மே 1986 இல் இலங்கைக்கு மூன்று வார விஜயத்தை மேற்கொண்டது.
குறித்த மதிப்பீட்டு அறிக்கை திட்டம் முடிக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்தில், அது மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதேபோன்ற திட்டங்களை திட்டமிடுவதற்கான சில முக்கியமான பாடங்களை அல்லது எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான ஏதேனும் ஒரு பெரிய கட்டுமானத் திட்டத்தை அறிக்கை கொண்டிருந்தது. ஆய்வின் முக்கிய கவனம் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அம்சங்களில் இருந்தது. அதில் இருந்து முக்கிய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதப்பட்டது. இந்தப் பாடங்கள் கீழே சுருக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தால் சுமார் 30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும். எனவே தவறான கணிப்பீடானது பாரிய சமூவியல் நெருக்கடிகளை உருவாக்கியது. குறிப்பாக முற்கூட்டியே தயாரான நீண்ட கால மீள்குடியேற்றத் திட்டமிடலுக்குப் பாதகமாக அமைந்தது. இதற்கான கொள்கை வகுப்புகளோ நிர்வாகச் செயற்பாடுகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இருக்கவில்லை. இதனால் மக்களை இடம்பெயர்ப்பது பாரிய பிரச்சனையானது.
அதேவேளை குறித்த மக்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற உடனடிப் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியேறியவர்களின் மீது இது தேவையற்ற செலவுகளைச் சுமத்தியது.
குறித்த நீர்த்தேக்கத்திற்காக மக்களைக் இடம்பெயர்ப்பது பற்றி கொள்கையளவிலோ, அரசியல்ரீதியாகவோ தீர்க்கமான கரிசனை கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது. அரசின் கவனம் வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டமாக விக்டோரியாத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. துரித மகாவலித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தபட்ட பல்வேறு திட்டங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும்.
அணையின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் தெளிவான பார்வையை இத்திட்டம் கொண்டிருக்கவில்லை. அதேவேளை அணைக்குக் கீழே மலேரியாவைத் தடுப்பது தொடர்பிலும் கவனம் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதிகளில் மலேரியாத் தொற்று அதிகரித்தது. விக்டோரியா அணைக்கட்டின் ஏரிக்கரைக் குடியிருப்புகளில் நீரின் தரம் மிக மோசமாகக் குறைந்தது. இதனால் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இம்மக்களின் மீன்பிடி, நன்னீர் செயற்பாடுகள் ஆகியன பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிக கவனம் பெறவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
விக்டோரிய நீர்மின் நிலையத்தின் சமூகப் பாதிப்புகள் குறித்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாகச் சில தரவுகள் வெளியாகின. அவற்றின்படி, குறித்த பகுதியில் நெல், தென்னை போன்ற முக்கிய பயிர்கள் கணிசமாக குறைந்துள்ளன. 1954 ஆம் ஆண்டில், மொத்த நெற்பயிர்ச்செய்கை கிட்டத்தட்ட 1,361 ஹெக்டேராக இருந்தது, 1998 இல் இது 791 ஹெக்டேராகி, 2003 இல் 597 ஹெக்டேராக குறைந்துள்ளது. 1954 இல் கிட்டத்தட்ட 2531 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த தென்னைச் செய்கை 2003 இல் 337 ஹெக்டேராகக் குறைக்கப்பட்டது. எனினும், வீட்டுத் தோட்டங்கள் 1954 இல் 1905 ஹெக்டேரிலிருந்து 2003 இல் 5946 ஆக அதிகரித்துள்ளன. இது இப்பகுதியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை அழுத்தத்தைக் காட்டுகிறது. நெற்பயிர்கள் மற்றும் தென்னைச் செய்கைகள் குறைவது மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்திலிருந்து மாறிவருவதைக் காட்டுகிறது. இந்த முக்கிய நிலப் பயன்பாடுகளுக்கு மேலதிகமாக, காடுகள், புதர்கள், தரிசு நிலங்கள் மற்றும் பயிரிடப்படாத நிலங்கள் போன்றவற்றின் பரப்புகளும் காலப்போக்கில் மாறிவிட்டன.

விக்டோரியா நீர்த்தேக்கதை மையமாகக் கொண்ட அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின்படி, நீர்த்தேக்கக் கட்டுமானத்தினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 6,000 குடும்பங்கள் (30,000 உறுப்பினர்கள்) மற்றும் 3,098 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 5546 குடும்பங்கள் (23,209 உறுப்பினர்கள்) நீர்த்தேக்கத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன அடிப்படையில் 85% சிங்கள மக்களும் 7.61% தமிழர்களும் 7.12% முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1994 ஆம் ஆண்டு நன்கறியப்பட்ட அறிவியல் இதழான ‘New Scientist’ இலங்கையின் விக்டோரியா நீர்மின் திட்டம் தொடர்பில் முக்கியமான ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதன் சாராம்சம் இதுதான்:
“பிரித்தானியா, மூன்றாமுலக நாடுகளில், குறிப்பாக முன்னாள் கொலனிகளில் பாரிய நீர்த்தேக்கங்களையும் நீர்மின் உற்பத்தி நிலையங்களையும் உருவாக்குகிறது. அயலுறவு அபிவருத்தி அமைச்சகத்தின் அதிகாரிகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையிலான ஆட்சேபனைகளை மீறி, இதேபோன்ற திட்டமான விக்டோரியா அணைக்கான பிரித்தானியாவின் நிதியை, இலங்கை எவ்வாறு பெற்றது என்பது முக்கியமானது. அமைச்சர்கள் உள்ளூர் மக்களுக்கான நன்மைகளைக் காட்டிலும் பிரிட்டிஷ் நிறுவனங்களின் வணிக நன்மைகளில் கவனம் செலுத்தினர். இந்த நிலையில், திட்டத்தை வடிவமைத்து உருவாக்க உதவுவதற்காக பிரித்தானிய பொறியியல் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டன. இதனாலே பிரித்தானிய கொள்கை வகுப்பாளர்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டது. இலங்கையில் பெற்ற அனுபவத்தின் மூலம் உலகெங்கிலும் அதிகமான இவ்வாறான பணிகளை பிரித்தானிய நிறுவனங்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதன் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.”
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர்மின் திட்டமான கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு சுவீடன் நாட்டின் நிதியுதவி கிடைத்தது. இத்திட்டமானது 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு நிறைவடைந்து செயற்பாட்டுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இத்திட்டம் தொடர்பாக சுவீடிஸ் அபிவிருத்தி நிறுவனம் இரண்டு மதிப்பீடுகளை மேற்கொண்டது. முதலாவது மதிப்பீடு 1989 ஆம் ஆண்டில் “The Kotmale Environment – A Study of the Environmental Impact of the Kotmale hydropower Project in Sri Lanka” என்ற தலைப்பில் வெளியானது. இந்த மதிப்பீடு சில முக்கியமான அவதானிப்புகளை மேற்கொள்கிறது:
- கள ஆய்வின் போது நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் (மீன் உள்ளிட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள்) மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
- இந்த நீர்த்தேக்கக் கரைகளில் உள்ள மண்ணானது மிகவும் மலட்டுத் தன்மையுடையனவாக இருக்கின்றன.
- பல செங்குத்தான கரையோரப் பகுதிகளில் சிறிய மண் சரிவுகளின் அறிகுறிகள் ஏற்படுகின்றன.
- நீர்த்தேக்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு இருபுறமும் ஒரு அடர்ந்த மலைக்காடு ஆக்கிரமித்துள்ளது. இந்த வாழ்விடம் மிகவும் மதிப்புமிக்கது. ஏனெனில் இது கன்னி மலை காடுகள், சிறிய பாலூட்டிகள், பறவைகள், பல மலர் கூறுகளுக்கு அடைக்கலமாக உள்ளது. இவற்றின் எதிர்காலம் இத்திட்டத்தின் வழி நெருக்கடிக்குள்ளாகலாம்.
- முழு கொத்மலை பள்ளத்தாக்கிலும் 1979 – 1980 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் போது, 300 இற்கும் மேற்பட்ட தனித்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டது.
- நீர்த்தேக்கத்தின் இருப்பு அல்லது செயற்பாட்டினால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கும் நீர்த்தேக்க உருவாக்கத்திற்குமான நேரடித் தொடர்பை, அறிவியல் ரீதியாக இன்னமும் நிறுவாத நிலையில், நீர்த்தேக்கத்தின் பாதிப்பின் சாத்தியங்கள் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
- கொத்மலை நீர்த்தேக்க நீரின் திசை திருப்பலானது அணைக்குக் கீழே உள்ள பழைய ஆற்றின் போக்கை, அதன் நீர் தேக்கத்திற்கு முந்தைய பாய்ச்சலில் இருந்து பிரித்தெடுத்துள்ளது. திசை திருப்பலின் சுற்றுச்சூழல் தாக்கம் பெரிது. இது முதலில் இந்த வகை வாழ்விடத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட நீர்வாழ் உயிரினங்களுடன் மறைந்திருக்கும் நீண்ட வாழ்வியலோடு தொடர்புடையது. நீர் திசை திருப்பப்படுவதற்கு முன்பு, விலங்கினங்கள் அல்லது தாவரங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் சேகரிக்கப்படாததால், ஏதேனும் அரிய அல்லது அழிந்து வரும் உள்ளூர் இனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கூறுவது கடினம்.
- கொத்மலை அணையானது இடம்பெயரும் மீன்களின் இயற்கையான இயக்கத்திற்கு இடையூறாக உள்ளது.
இதைத் தொடர்ந்து 1991இல் சுவீடிஸ் அபிவிருத்தி நிறுவனம் கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் நீர்மின்சாரத் திட்டம் தொடர்பான முழுமையான மதிப்பீட்டை மேற்கொண்டு “ஒரு குறைபாடுள்ள வெற்றி – கொத்மலை நீர்மின் திட்டத்திற்கான சுவீடிஸ் உதவியின் மதிப்பீடு” (A Flawed Success – An Evaluation of SIDA Support to the Kotmale hydropower Project) என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. இதன் சாரம்சம் இதுதான்:
“அவசரத் திட்டமிடல் மற்றும் முறைப்படுத்தப்படாத தொடக்கம் ஆகியவற்றால் இந்தத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை முடிவு செய்கிறது. கொடுக்கப்பட்ட புவியியல் நிலைமைகளுக்கு அடிப்படை வடிவமைப்பு அம்சங்கள் உகந்ததாக இல்லை. மேலும், ஒப்பந்ததாரர் மற்றும் உபகரண வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதில் போட்டி இல்லாதது – பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலின் பேரில் – இறுதியில் தேவையற்ற விலையுயர்ந்த திட்டத்திற்கு வழிவகுத்தது. மொத்தத்தில் அக்கறையற்ற, சமூக, சூழலியல் விடயங்களைக் கணிப்பில் எடுக்காத ஒரு திட்டமாகவே இதைக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் மோசமான பலன்களை இலங்கை மக்கள் நீண்டகாலத்திற்கு அனுபவிக்க நேரும்.”
நிறைவுக் குறிப்புகள்
இலங்கை அனுபவம் சில முக்கியமான செய்திகளைச் சொல்கிறது. நீர்மின் திட்டங்கள் சிக்கலானவை. அவை பெரும்பாலும் பெரிய அளவிலானவை; அதிக ஆரம்ப முதலீடு தேவை. பல சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் சவால்களுக்கு கட்டுமானம் மற்றும் செயற்பாட்டின் போது வழிகாட்டல் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் நிலையான நீர்மின்சாரத்தை அடைவது தொடர்பாக சுற்றுச்சூழல், சமூகப் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்நுட்பக் களங்களைப் பார்க்கும்போது, இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன:
- சாத்தியமான எதிர்மறை தாக்கங்களைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா (மற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றனவா)?
- இந்த தணிப்பு நடவடிக்கைகள் செலவு குறைந்ததா?
சுற்றுச்சூழல் செலவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் சில சுற்றுச்சூழல் அபாயங்கள் காலநிலை மாற்றத்தால் மோசமடையக்கூடும். நீர்மின்சார வளர்ச்சியின் சமூக சமத்துவமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நீர்மின் திட்டங்கள், நேரடி சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகளை தாங்கும் உள்ளூர் மக்களை விட, நகரங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கும் பயனளிக்கும் என்ற கவலைகள் உள்ளன.
நீர்மின்சாரம் ஒப்பீட்டளவில் சுத்தமான ஆற்றலாக இருந்தாலும், நீர்மின் திட்டங்களின் கட்டுமானம் மற்றும் செயற்பாடுகள் பல சுற்றுச்சூழல் சவால்களை முன்வைக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அபாயங்கள், திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும். நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், ஆற்றின் ஓட்ட முறைகளை மாற்றியமைத்தல் மற்றும் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை நீர்மின் மேம்பாட்டுத் திட்டங்களில் ஏற்படும் சில பொதுவான தாக்கங்களாகும். சுற்றுச்சூழல் அபாயங்கள் காலநிலை மாற்றத்தால் மேலும் மோசமடைகின்றன. இது அதிகரித்த தீவிர வானிலை நிகழ்வுகள், வெள்ளம், நிலச்சரிவுகள், வண்டல் மற்றும் நீரியல் ஆட்சியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தலாம்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் எவ்வளவு நன்றாக அடையாளம் காணப்பட்டு குறைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை (Environmental Impact Assessment) கண்டிப்பாக கடைபிடிப்பது, சாத்தியக்கூறு ஆய்வின் போது சுற்றுச்சூழல் அபாய மதிப்பீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், திட்டங்களைத் திறம்படச் செயற்படுத்துதல், இணக்கக் கண்காணிப்பு ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முன்நிபந்தனைகள் ஆகும்.
பெரிய அளவிலான நீர் உட்கட்டமைப்பின் வளர்ச்சியில், சமூக நீதி ஒரு முக்கியமான அக்கறையாகும். நீர்மின்சாரத்தின் நன்மைகள் பெரியதாக இருந்தாலும், உள்ளூர் சமூகங்கள் – மீள்குடியேற்றம், அவர்களின் கலாசார நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், நிலச் சீரழிவு, குடிநீரீன் தரம் குறித்த பிரச்சினைகள் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் சுற்றுச்சூழல் குறித்த கவனமும், சமூகங் குறித்த கவனமும் அவசியமாகின்றன.
நீர்மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளூர் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நீர்மின்சாரத்தின் நிதி நிலைத்தன்மை பெரும்பாலும் வருவாய் ஈட்டும் அடிப்படையில் மட்டுமே கருதப்படுகிறது. சுற்றுச்சூழல், சமூக அபாயங்கள் மற்றும் அவற்றின் செலவு, தாக்கங்கள் எப்போதாவது தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஏனைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை விட தற்போது நீர்மின்சாரம் மலிவானதாக இருந்தாலும், இந்த சூழ்நிலை மாறுகிறது. சூரிய ஆற்றல், நிலக்கரியை முந்தி, உலகளவில் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. தெற்காசியாவில் மின்சாரத் தேவை அதிகரித்து வருவதால், எதிர்காலத் தேவைகளை சமரசம் செய்யாமல் தேவையைப் பூர்த்தி செய்வதே சவாலாக இருக்கும். நீர் மின்சாரம் ஒரு நம்பிக்கைக்குரிய மாற்று எரிசக்தி ஆதாரமாக இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய கவலைகள் – சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் என்பன எவ்வளவு சிறப்பாகத் தீர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. இதை புரிந்துகொள்ள இலங்கையின் நீர்மின்சாரத்தின் கதையைப் விளங்குவது பயனுள்ளது.
தொடரும்.