எம்.ஜி.ஆர் குறித்த ரோகண விஜேவீரவின் அச்சம்
Arts
10 நிமிட வாசிப்பு

எம்.ஜி.ஆர் குறித்த ரோகண விஜேவீரவின் அச்சம்

September 11, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எந்த ஒரு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் பற்றியோ, அவர்களது உரிமை மறுக்கப்படுவது தொடர்பிலோ, அவர்களுக்கும் ஒரு துண்டு நிலம் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலோ ஒருபோதும் குரல் குரல் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. இறுதியாக அவர்கள் நிகழ்த்திய 1000 ரூபா நாட்சம்பளப் போராட்டத்தின் போது மாத்திரம் அதற்குச் சாதகமாக முற்போக்குச் சிந்தனை கொண்ட சிங்கள அரசியல்வாதிகள், ஊடகங்கள் என்பவற்றிலிருந்து அடக்கி வாசிக்கப்பட்ட சிலகுரல்கள் ஒலித்தன என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அவை அழுத்தங்களைக் கொண்டுவரும் அளவிற்கு சக்தி வாய்ந்தவைகளாக இருக்கவில்லை.

இப்போது இயங்கிவரும் ‘ஜே.வி.பி.’ கட்சியிலும் அதன் தலைமைப்பீடத்திலும் இனவாதப் போக்கினை காண முடியவில்லை என்று கூறப்பட்ட போதும் அதனை நிரூபிப்பதற்கான போதுமான சாட்சிகள் இல்லை. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளைப் பொறுத்தவரையில் அவை இடதுசாரிக் கட்சிகளா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரைகல்லை ‘அவர்கள் சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்கின்றனரா, இல்லையா’ என்பதை வைத்து தீர்மானிக்கலாம். ஏனென்றால் இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றில் சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாலேயே அவர்கள் போலி இடதுசாரிகள் என்று அம்பலப்பட்டு போனார்கள்.

MGR with Periyaar

மறுபுறத்தில் இலங்கையில் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்புக்கள் கூட இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளுக்கு சமாந்தரமானதாகவே இடம்பெற்றன. மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்திற்கு இலங்கையிலும் ஆதரவு இருந்தது. அதற்கு அமைவாகவே மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்களது புகைப்படங்களை தத்தமது வீடுகளில் சட்டகமிட்டு சுவர்களில் மாட்டி இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டங்கள், ஈ . வே. ரா. பெரியாரின் பகுத்தறிவுவாத இயக்கம் போன்றவற்றை மலைநாட்டிலும் கிளைகள் அமைத்து பரப்பி வந்தனர். உற்சவங்களின் போதும் போராட்டங்களின் போதும் மகாத்மா காந்தியின் கதர் ஆடை அணிவதை இலங்கையில் உள்ள மக்கள் தலைவர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம் காலமாக இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர்களும் மதத்தலைவர்களும் கலை கலாசாரத் துறைகளில் முன்னணி வகித்த கலைஞர்களும் இலங்கை வந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனாலெல்லாம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு விசுவாசிகளாக இருந்தனர் என்று கூற முடியுமா என்பது அப்படிக் கூறியவர்களுக்குத்தான் வெளிச்சம்.

Rohana Vijayaweera

ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கள் சிங்கள இளைஞர்களை இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கு எதிராகத் திசை திருப்புவதற்காகவே அன்றி அவற்றில் உண்மைகள் இருந்ததற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அவர் தனது புகழ்பெற்ற ‘கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து பாடங்கள்’ என்ற விரிவுரைகளில் பின்வரும் விஷக்கருத்துக்களை சிங்கள இளைஞர்கள் மனதில் மிக ஆழமாகப் பதித்தார்.

1.தென்னிந்தியாவின் ‘திராவிட முன்னேற்ற கழகமும்’ ‘நாம் தமிழர் இயக்கமும்’ தென்னிந்தியாவை தமிழர்களின் தாய்நாடு எனக்கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றுவார்களாயின் அவர்கள் உள்ளூர் இந்திய வம்சாவழித் தமிழர்களின் உதவியைக் கொண்டு இலங்கையையும் கைப்பற்றுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Adimai Penn Poster

2.ஆரம்பத்தில் இருந்து இலங்கையின் சினிமாப் படத் தயாரிப்பில் இந்தியத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஈடுபட்டு வந்திருப்பதுடன் இவர்கள் அந்தப் படங்களில் சிங்கள கலாசாரத்தை மூடிமறைத்து தமிழ் கலாசாரத்தையும் கொச்சையான மொழி நடையையும் பயன்படுத்தி வந்தனர். அத்துடன் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல சினிமாப் படத் தயாரிப்புகளையும் மறைமுகமாகத் தடுத்தனர். இலங்கையின் அனேகமான சினிமா தியேட்டர்கள் தமிழ் முதலாளிகளுக்கே சொந்தமாக இருந்தன. அவற்றிலெல்லாம் சிங்களப் படங்கள் ஓடுவதற்கு பதிலாக ‘எம்.ஜி.ஆர்’ நடித்த சினிமாப் படங்களே ஓடின. அவை இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மட்டுமல்லாது இலங்கையின் எல்லாக் கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும், எட்டுத் திக்குகளிலும் ஓடி சிங்கள இளைஞர்களின் மனதைக் கெடுத்தன. மறுபுறத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ‘யுத்த களங்கள்’ நிறைந்த சினிமாக்கள் காட்டப்பட்டு, அவர்களை வன்மம் நிறைந்த போராளிகளாக ஆக்க முனைந்ததுடன், சிங்களப் பிரதேசங்களில் காதல் காட்சிகள் நிறைந்த சினிமாக்கள் வக்கிரத்தனமான உள்நோக்கத்துடன் காட்டப்பட்டு, சிங்கள இளைஞர்களின் மனதை பலவீனமானதாக்கும் முயற்சி நடந்துள்ளது. குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்து இலங்கையில் பிரபலமாக ஓடிய ‘அரசகட்டளை’ மற்றும் ‘அடிமைப்பெண்’ போன்ற படங்களை குறிப்பிடலாம். அரசகட்டளை என்ற சினிமாப் படத்தில், இலங்கை போன்ற ஒரு நாட்டை எம்.ஜி.ஆர் வெற்றி கொண்டு வாகை சூடுவது போலவும், அடிமைப் பெண் என்ற படத்தில் ஒரு தீவு நாடு, பெண் ஒருத்தியால் ஆளப்படுகின்றது என்பது போலவும் அவளை அடிமைப்படுத்தி, நாட்டை எம்.ஜி.ஆர். கைப்பற்றுவது போலவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது.

3.1969 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த  இந்துமதப் பிரசங்கியான குன்றக்குடி அடிகளார் உரை நிகழ்த்தும் போது “ஒரு காலத்தில் இலங்கை நாடு தமிழ் மன்னர்கள் ஆட்சி செலுத்திய ஒரு தீவாகவே இருந்தது. அந்தநிலை எதிர்காலத்திலும் அப்படியே திரும்பி வரவேண்டும். இந்த நாடு மீண்டும் தமிழர்களால் வெல்லப்பட வேண்டும்” என்று பேசினார்.

4.எம்.ஜி.ஆர் என்ற மிக பிரபல்யம் வாய்ந்த நடிகர், தான் இலங்கை மீது படையெடுத்து வந்து, இங்குள்ள ஒரு ராஜகுமாரியை மணந்து கொண்டு, அவளை ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏற்றி வைத்து, கொழும்பு நகரமெங்கும் வீதிகளில் சுற்றி வலம்வர வேண்டுமென்றும், அது தனக்குஅடிக்கடி வரும் ஒரு கனவு என்றும், அது நிறைவேறாவிட்டால் தனக்கு தூக்கம் வராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

MGR

5.இந்த விதத்தில் அவர்கள் சினிமா என்ற ஊடகத்தைப் பயன்படுத்தி அவர்களின் ஏகாதிபத்திய இலட்சியங்களை அடைவதற்காக சிங்களம் மக்களின் மனதைச் சலவை செய்து தயார்படுத்தினார்கள். இந்த நோக்கங்களுக்காகவே தமிழ்நாட்டிலிருந்து அவர்கள் தமிழ்ப் படங்களை இறக்குமதி செய்தார்கள். எம்.ஜி.ஆர் நடித்த அநேகமான தமிழ்ப் படங்களில் இறுதியில் வெற்றிகொள்வது அவராகத்தான் இருக்கும். இந்த விதத்திலேயே அவர் தமிழ் மக்களின் மனதை வென்றார். அது மாத்திரமல்லாமல் இலங்கையின் கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்களும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் பழக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் எம்.ஜி.ஆர் படங்களின் பரம ரசிகர்களாகி, எம்.ஜி.ஆர் திரையில் தோன்றும் போதெல்லாம் கைகொட்டி ஆரவாரம் செய்து, விசில் அடித்தார்கள். அந்தளவிற்கு எங்களது தேசியத் தலைவர்களான டி. எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா போன்றதலைவர்களை விட எம்.ஜி.ஆர் பிரபல்யம் பெற்றிருந்தார்.

இவ்விதம் இந்த நாட்டுக்கே தம் உழைப்பையும் வியர்வையையும் சதையையும் எலும்பையும் அர்ப்பணித்த இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களை, இந்த நாட்டை சுரண்டி பிழைக்க வந்த அந்நியர்களாகச் சித்தரித்துக் காட்டி, இன்று வரை அம் மக்களை, தம் வாழ்க்கையை அவலம் நிறைந்த வாழ்க்கையாகவே வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11973 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)