ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் - பகுதி 2
Arts
24 நிமிட வாசிப்பு

ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் – பகுதி 2

June 6, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம

அரச அதிகாரத்தை கைப்பற்றுதல்

அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் (YENAN) பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றார். அவர் மார்க்சிய அரசியல் சிந்தனை வரலாற்றில் விவசாய வர்க்கத்திற்கு முதன்மையளிக்கும் அரசியல் தத்துவத்தை அறிமுகம் செய்தார். மா ஓ, சீனாவின் கிராமப் புறங்களின் சமூக அமைப்பைச் சீர்திருத்தியவர் (AGRARIAN REFORMER) என்ற பெயரைப் பெற்றார். அவரின் புரட்சி ‘கீழிருந்து மேல் (FROM BELOW)’ உபாயமாக இருந்தது (பக். 213). விஜயவீரவின் புரட்சிக் கோட்பாடு மேற்குறித்த விவாதங்களின் பின்புலத்திலேயே பரிசீலிக்கப்பட வேண்டும்.

maoh

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் சமூகப் பின்புலம்

1974 ஆம் ஆண்டு கணநாத் ஒபயசேகர ‘இலங்கையின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் சமூகப் பின்புலம் : சில குறிப்புகள் (SOME COMMENTS ON THE SOCIAL BACKGROUND OF THE APRIL 1971 INSURGENCY IN SRI LANKA)’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அக்கட்டுரை கிளர்ச்சியில் பங்குபற்றிய இளைஞர்கள் பற்றிய புள்ளிவிபரப் பகுப்பாய்வை வழங்குவதாக அமைந்தது. அவர் தரும் புள்ளி விபரங்களின்படி கிளர்ச்சியின் பின்னர் 10,192 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களுள் 4492 பேர் கைது செய்யப்பட்டவர்கள். 5700 பேர் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்கள். இவ்விளைஞர்களின் சமூகப் பின்புலம் பற்றிக் கணநாத் ஒபயசேகர கூறியவற்றை சரத் அமுனுகம மேற்கோளாகத் தந்துள்ளார் (பக் 215 – 216).

arrested
  1. ஜே.வி.பி கிளர்ச்சி இளைஞர் கிளர்ச்சியாகவே இருந்தது. இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இக்கிளர்ச்சி ஆண்களான இளைஞர்களின் கிளர்ச்சியுமாகும். சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டோரில் 92.8% பேர் 16-32 வயதுக்கு இடைப்பட்டோராய் இருந்தனர். இவர்களுள் 77% பேர் 16-26 வயதுக்கு இடைப்பட்டோராக இருந்தனர்.
  2. பெண்களில் சிறுதொகையினரைக் கூட சேர்த்துக் கொள்ளலாம் என்ற கருத்து புதுமையானதாக, ஏற்க முடியாததாக இருந்த காலத்தில், ஆண்கள் மட்டுமே இவ்விளைஞர் கிளர்ச்சியில் பங்கு கொண்டனர்.
  3. சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களில் சிங்கள பௌத்தர்கள் 94% ஆகவும், மிகப்பெரும்பான்மையினராகவும் இருந்தனர். சிங்கள பௌத்தர்களுக்கு அடுத்த நிலையில், சிங்கள கத்தோலிக்கர் 3.4% ஆக இருந்தனர்.
  4. சில ஆய்வாளர்கள் 1971 இன் ஜே.வி.யை ‘தாழ்த்தப்பட்ட சாதி இயக்கம்’ (LOW CASTE MOVEMENT) என விளக்கம் கூறியுள்ளனர். ஒபயசேகரவின் அபிப்பிராயம் வேறுபட்டது. புள்ளி விபரங்களை உற்று நோக்கின் சாதி என்ற காரணியின் பங்கு இருப்பதைக் காண முடியும். ஆனால் இவ்வியக்கம் சாதிகளை ஊடறுத்த ஒன்றாக எல்லாச் சாதியினரையும் உட்படுத்திய பொதுமையுடைய இயக்கமாக இருந்ததென்பதே உண்மை.
  5. கரைநாட்டுச் சிங்களவர் பகுதிகளில் வகும்புர சாதியினரும் கண்டிப் பகுதிகளில் பத்கம சாதியினரும் கூடிய எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
  6. சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டோரில் உயர் தொழில்களில் இருந்தோர்கள் சிலரும் இருந்தனர். இவர்களின் வீதாசாரம் 0.25% ஆகும். நிருவாகத்துறையின் மத்திய மட்டத்தினர், 6.1% ஆக இருந்தனர். (இப்பிரிவில் ஏனைய ‘STABLE’ ஆன பதவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.) சம்பளம் பெறாத சுயதொழிலில் ஈடுபட்டோர் 21.4% பேர் இருந்தனர். விவசாயத் துறையில் கூலி வேலையாளர்களாக 39.6% பேர் காணப்பட்டனர். இக் கூலியாட்கள் குறை வேலையுடமை (UNEMPLOYMENT) காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது வெளிப்படை. புள்ளிவிபரப் பகுப்பாய்வின் படி 6.3% பேர் நிரந்தர வருமானம் உடைய தொழில்களில் இருந்ததையும் அவர்களின் சம்பளம் நியாயமான அளவினதாயும் இருப்பதை அறிய முடிகிறது. மிகுதி ஆட்கள் குறைந்த வருமானம், குறை வேலையுடமை, வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களாய் காணப்பட்டனர்.
  7. கிளர்ச்சியாளர்களின் கல்வித் தகைமைகளை ஆராயும் போது 80% பேர் மகா வித்தியாலயங்களிலும் 64% பேர் மத்திய மகா வித்தியாலயங்களிலும் 2% பேர் பல்கலைக் கழகங்களிலும் கற்றவர்களாக இருந்ததைக் காண முடிந்தது. பெரும்பான்மையினர் கிராமப்புறத்து உயர்குழு சாராத (NON-ELITE) சமூகப் பின்புலம் உடையவர்களாய் இருந்தனர்.
  8. 90% இளைஞர்கள் ‘படித்தவர்கள்’ எனக் கூறக் கூடியவர்கள். அவர்களது கல்வித் தரம் குறைவுடையதன்று. இவ்விளைஞர்களை இலவசக் கல்வித்திட்டமும் சமூக நலத்திட்டங்களும் (WELFARE SCHEMES) உருவாக்கியிருந்தன.

மேற்குறித்த புள்ளி விபரப் பகுப்பாய்வு ஜே.வி.பி இன் ஆட்சேர்ப்பு முறையின் இயல்புகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஜே.வி.பி ஆண்களின் இயக்கம்; உயர்குழு சாராத இயக்கம்; சிங்கள – பௌத்த இளைஞர்களின் இயக்கம் (MALE ORIENTED, NON-ELITE, AND SINHALA – BUDDHIST) என்று கூறலாம். அவ்வியக்கத்தில் சிங்களக் கிராமங்களின் எல்லாச் சாதி இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர். ஆயினும் வகும்புர, பத்கம என்னும் இரு சாதி இளைஞர்கள், கூடிய வீதத்தில் ஜே.வி.பி இயக்கத்தில் இணைந்திருந்தனர். ஒபயசேகரவின் இந்த விளக்கங்கள் பிந்தி வந்த ஆய்வுகள் சிலவற்றால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன (பக். 216).

கணநாத் ஒபயசேகர அவர்களின் பகுப்பாய்வு ஜே.வி.பி இயக்கத்தின் பிரதான குண இயல்பை எடுத்துக் காட்டுகிறது. அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ‘ANTI – ELITE’ உணர்வுடையவர்கள். அதாவது, ‘மேட்டுக்குடி’ எதிர்ப்பாளர்கள் என சரத் அமுனுகம குறிப்பிடுகிறார் (பக். 216). ஜே.வி.பி இளைஞர்களின் வேறு சில குணப் பண்புகளும் கவனிப்புக்குரியவை.

“இலங்கையின் சனத்தொகை வேகமாக வளர்ச்சியுற்றது. சமூக நலத் திட்டங்களாலும், இலவச கல்வித் திட்டத்தாலும் இளம் தலைமுறை நன்மைகளைப் பெற்றது. ஆனால் இவற்றின் ஒன்றிணைந்த விளைவாக சமூகக் கொந்தளிப்பு நிலை (AN EXPLOSIVE SOCIAL SITUATION) உருவானது (பக். 217).

jvp

டேனியல் லேர்னர் (DANIEL LERNER) என்னும் மானிடவியலாளர் ‘மரபு வழிச் சமூகத்தைக் கடந்து செல்லுதல்’ (THE PASSING OF THE TRADITIONAL SOCIETY) என்றொரு நூலை (1958) எழுதினார். அந்நூலில் அவர் ‘TRANSITIONALS’ என்ற சொல்லை உபயோகித்தார். ‘மரபுச் சமூகம் நவீன சமூகமாக மாறும் பொழுது அம்மாற்றத்தின் ஊடாகப் பயணிப்பவர்’ என்ற பொருளில் ஜே.வி.பி இளைஞர்களை டேனியல் லேர்னரின் மேற்படி சொல்லால் குறிப்பிடலாம். “கல்வியும், சமூகநல வசதிகளும் இவ்விளைஞர்களிடம் உயர் எதிர்பார்ப்புக்களை உருவாக்கியிருந்தன. ஆனால் பொருளாதாரம் அதற்கேற்ற வேகத்தில் வளர்ச்சியடையவில்லை (பக். 217).” இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் மழுங்கடிக்கப்பட்டன. இதனால் அவர்களிடம் விரக்தி உணர்வு மேலோங்கியது. தமது ஆசைகள் நிராசைகளாக, கானல் நீராக ஆகியதை அவர்கள் உணர்ந்தனர். லேர்னர் இப்பயணிகளான இளைஞர்களை ‘அழகாக உடையுடுத்தி ஆயத்தமாக வந்தவர்களுக்கு போகுமிடம் எதுவெனத் தெரியவில்லை’ என்று திகைத்து நின்றவர்களாகக் குறிப்பிடுகிறார். 1971 இல் கிளர்ச்சி நடைபெற்ற காலத்தின் இலங்கையின் வேலையின்மைப் பிரச்சனை பற்றி ஆராய்ந்த டட்லி சியர்ஸ், லேர்னர் குறிப்பிடுவதைப் போன்ற  ஒரு இக்கட்டான நிலை (DILEMMA) உருவாகியிருந்ததைக் குறிப்பிட்டார். இலங்கையின் வேலையின்மைப் பிரச்சனை, தேவைகளை எதிர்பார்ப்புகளுடன் சமன்படுத்த முடியாத இக்கட்டான சிக்கலாக உள்ளது என்றார் டட்லி சியர்ஸ்.

புதிய சமூக சக்திகளின் தோற்றம்

1971 ஏப்ரல் கிளர்ச்சிக்கும் விஜயவீரவின் 1987 – 89 காலத்து இரண்டாவது கிளர்ச்சிக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தன என சரத் அமுனுகம குறிப்பிடுகின்றார். புதிய சமூக சக்திகளின் தோற்றம் (THE EMERGENCE OF NEW SOCIAL FORCES) என்னும் தலைப்பில் 5 பக்கங்களில் (218-223) இவ்வேறுபாடுகளின் சமூகப் பின்புலத்தை அவர் ஆராய்கிறார். அவர் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம். இவ்விடயம் குறித்து விக்டர் ஐவனின் கூற்று மேற்கோளாக சரத் அமுனுகம அவர்களால் தரப்பட்டுள்ளது. அது வருமாறு .

விஜயவீரவின் 1971 இளைஞர் கிளர்ச்சி மனோரதியமானது; கிராமத்து இளைஞர்களின் அப்பாவித்தனம் இதில் வெளிப்பட்டது. எனவே வரலாற்றில் இக்கிளர்ச்சி பதிவு பெறும். ஆனால் 1987 – 89 ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் கொடுமையான அழிவுப் போராட்டமாகவே வரலாற்றில் பதிவு பெறும். இரண்டாவது போராட்டத்தில் விஜயவீர, படித்த கிராமத்து இளைஞர்களை மட்டுமல்லாமல் லும்பன் பாட்டாளிகளையும் (LUMPEN-PROLETARIAT) பயன்படுத்தினார். மார்க்ஸ், லும்பன்கள் பற்றி வன்முறையாளர் சமூகக்குழு (A SOCIAL FORMATION PRONE TO VIOLENCE) என்றே குறிப்பிட்டிருந்தார் (பக். 218). தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள், தனிநபர்களைக் குறிவைத்துச் செய்யப்பட்ட படுகொலைகள் என்பன மூலம் 1987-89 காலத்தில் அரச இயந்திரந்தைச் செயலிழக்கச் செய்யும் தந்திரம் கையாளப்பட்டது. விஜயவீரவின் இத் தந்திரத்தின் தோற்ற மூலத்தை, இலங்கைச் சமூகத்தில் படிப்படியாக எவ்வாறு வன்முறை அதிகரித்து வந்தது என்பதை, சமூகவியலாளர்களின் எழுத்துக்கள் ஊடாக கண்டுணரலாம் என சரத் அமுனுகம  குறிப்பிடுகிறார் (பக் 220)

  1. சிங்கள சமூகத்தை அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒழுக்கமுடைய இலட்சிய பௌத்த சிங்கள சமூகமாக சித்தரித்த சமூகவியலாளர்கள் சிலர், அச்சமூகத்தில் வெளித்தெரியாது மறைந்திருந்த வன்முறையை எடுத்துக் காட்டத்தவறினர். இத்தகைய எழுத்தாளர்களின் இலட்சிய சமூகச் சித்தரிப்புக்கு மாறாக றையன், லீச், ஒபயசேகர, செனிவிரத்தின, தம்பையா ஆகியோர் சூனியம், சடங்குகள், நாட்டார் கதைகள், நாடகங்கள் ஆகியவற்றில் வெளிப்பட்ட வன்முறையைத் தமது ஆய்வுகளில் வெளிக்கொணர்ந்தனர். இவ் ஆரம்ப கட்ட எழுத்துக்கள் கிராம மட்டத்தில் பகையுணர்வு, வன்முறை என்பன குறித்த வெளிப்பாடுகளை எடுத்துக் காட்டின.
  2. இலங்கையில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டபின் கிராமப் புறங்களில் அரசியல் வன்முறை (POLITICAL VIOLENCE) தோற்றம் பெற்றது. தேர்தல் சமயங்களில் இவ்வன்முறை குறிப்பாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்த சாதிகளுக்கு எதிரான வன்முறையாக இருந்தது. ஜே.வி.பியும் கிராம மட்டத்தில் உள்ள சாதிப் பிரிவுகளை தனது பிரசாரத்திற்கு உபயோகித்தது. ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சாதிகளின் அதிருப்தியை தனது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்தியது.
  3. 1956 இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தமிழர்கள் மீது வன்முறை பியோகிக்கப்பட்டது. தமிழர் மீதான வன்முறைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், அத்தலைவர்களது ஆதரவாளர்களும் உதவினர். 1970 இல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் மீது, வன்முறை முன்னர் எப்போதும் இல்லாத அளவு தீவிரத்துடன் பிரயோகிக்கப்பட்டது. இக்காலப் பகுதியின் சனத்தொகைப் புள்ளி விபரங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தால், சிறுவர்கள், குழந்தைகள் இறப்பு வீதமும் முதியோர் இறப்பு வீதமும் தோட்டத் தொழிலாளர்களிடையே திடீரென அதிகரித்தது என்பதை அறிந்து கொள்ளலாம். காரணம் இச்சாவுகள் பட்டினியால் நிகழ்ந்தமையாகும். தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முதிய தொழிலாளர்கள் வீதிகளில் கிடந்து பட்டினியால் இறந்தனர். குழந்தைகளும் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் இறந்தன (பக். 221).
  4. 1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் ஜே.வி.பி இன் மீதான ஒடுக்கு முறையும் அடுத்த பெரிய வன்முறையாகும்.
  5. 1971-1994 கால ஐக்கிய  தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தை (STATE TERROR) அரசாட்சி உபாயமாக நடைமுறைப்படுத்தியது. இக்கால வன்முறை பற்றி கணநாத் ஒபயசேகர ‘POLITICAL VIOLENCE AND THE FUTURE OF DEMOCRACY IN SRI LANKA’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விபரித்துள்ளார். இக்கட்டுரை 1984 இல் எழுதப்பட்டது. தொழிற்சங்கவாதிகள், பிக்குகள், எதிர்க் கருத்துக்களைக் கொண்டவர்களான அறிவாளிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் எதிரிகள் எனப் பல்வகையினரும் குறிவைக்கப்பட்டு வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வன்முறைகளின் உச்சமாக 1983 பேரழிவு (HOLOCAUST) அமைந்தது.
  6. 1977 இற்கு முற்பட்ட காலத்தில் இருந்து வடபகுதியில் தோன்றிய வன்முறை, தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகளை அடுத்து, கட்டுமீறிச் சென்றது. 1983-1989 காலத்தில் சிவில் யுத்தமாக அது மாற்றம் பெற்றது.
  7. 1970-77 காலத்திய கூட்டணி அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி “சண்டியர்களை“ தெரிந்தெடுத்து 1977 தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியது. 1977 இற்குப் பிற்பட்ட காலத்தில் இச்சண்டியர்கள் தமது தொகுதிகளில் ’WAR LORDS’ ஆக சுயமாக இயங்கும் இராணுவ கமாண்டர்கள் போன்று இயங்கினர். இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கம் வன்முறையைப் பிரயோகித்தது. இதனைச் சாட்டாக வைத்து ஜே.வி.பி தனது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது.

மேற்கூறியவாறு இலங்கை படிப்படியாக வெளிப்படையான வன்முறைச் சமூகமாக மாறியதை விபரிக்கும் சரத் அமுனுகம வன்முறையை ஒரு அரசியல் முறையாகவும் தந்திரமாகவும் (STRATEGY) கையாள்வதன் பின் விளைவுகளை எடுத்துக் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி

அரசின் தந்திரோபாயம் ஜே.வி.பி விடயத்தில் எவ்வாறு இருந்தது என்பதை சரத் அமுனுகம எடுத்துக் கூறுகிறார். 1971-77 காலத்தில் கூட்டணி அரசாங்கம் ஜே.வி.பி மீது ஒடுக்கு முறையைக் கையாண்டது. 1977 இல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஜே.வி.பி வெளிப்படையாக அரசியலில் செயற்படக்கூடிய விதமாக ஜனநாயக ‘வெளியை’ (DEMOCRATIC SPACE) திறந்து விட்டது. மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை (DDC ELECTIONS) எதிர்க் கட்சிகள் பகிஷ்ரிப்புச் செய்தன. ஆனால் ஜே.வி.பி அத் தேர்தலில் போட்டியிட்டது. 1982 இல் ஜே.வி.பி இன் வேட்பாளராக விஜயவீர விளங்கினார். ஜே.வி.பி இற்கு ஜனநாயக வெளியைத் திறந்துவிட்ட ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசுக்கு எதிராக, ஜே.வி.பி 1987-89 காலத்தில் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தது. இந்தியாவின் கைப்பொம்மையாக ஜே.ஆர். ஜயவர்த்தனவைச் சித்தரித்த ஜே.வி.பி, இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு (INDIAN EXPANSIONISM) எதிரான போராட்டத்தை ஆரம்பித்தது. தேசபக்த முன்னணி (PATRIOTIC FRONT) என்னும் தந்திரோபாயத்தைக் கையாண்டது.

வியட்நாமும் இலங்கையும்

இலங்கை-இந்திய உடன்படிக்கைக்கு பிந்திய காலத்தின் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி, அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமிய போராட்டம் என்ற மாதிரியில் வடிவமைக்கப்பட்டது.  

  • வியட்நாமிய போராட்டத்தில் அமெரிக்கா அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதப்பட்டது போல், இலங்கையில் இந்தியாவை ஜே.வி.பி அந்நிய ஆக்கிரமிப்பாளராகச் சித்தரித்தது.
  • வியட்நாமின் ‘டியெம்’ ஆட்சி என்ற பொம்மை அரசுக்கு ஜே.ஆரின் ஆட்சி ஒப்பிடப்பட்டது.
  • வியட்நாமின் என்.எல்.எவ் (N.L.F), தேச பக்தப் போராளிகளான ஜே.வி.பி இற்கு ஒப்பிடப்பட்டது. 

பெண்கள், பிக்குகள் மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தேசப்பற்றாளர் முன்னணியை (PATRIOTIC FRONT) ஜே.வி.பி உருவாக்கியது. அரசுக்கு எதிராக, தேசப்பற்றுள்ள அறிவாளிகளை (PATRIOTIC INTELLECTUALS) ஒன்றிணைத்தது. ஆளும் கட்சியின் பிரதிநிதிகளான கிராமமட்ட உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டனர். வியட்நாமில் என்.எல்.எவ் (NATIONAL LIBERATION FRONT – NLF) கையாண்ட தந்திரங்கள் அனைத்தையும் ஜே.வி.பி கையாண்டது. மேற்தோற்றத்தில் தெரியும் இம்மாதிரி ஒப்புமை தவறானது. சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிட் நாடுகளும், சீனாவும் பேரளவு இராணுவ உதவியை வியட்நாமிற்கு வழங்கின. வியட்நாமின் சைகோன் நகரை நோக்கி மத்திய உயர் நிலப்பகுதிகளில் இருந்து முன்னேறிய இராணுவ டாங்கிகளும் பயிற்றப்பட்ட இராணுவமும் சைகோனின் வீழ்ச்சியை நிர்ணயித்தன. வியட்நாமை ஜே.வி.பி உடன் ஒப்பிட முடியாது என விளக்குவதோடு வேறு சில காரணிகளையும் சரத் அமுனுகம எடுத்துக் காட்டுகிறார் (பக்.223).

புத்த துறவிகளும் ஜே.வி.பியும்

வியட்நாமில் எவ்வாறு புத்ததுறவிகள், கத்தோலிக்க உயர்குழாமைப் பிரதிநிதித்துவப்படுத்திய “டியெம்“ ஆட்சிக்கு எதிராக அணி திரட்டப்பட்டனரோ, அவ்விதமே இலங்கையின் புத்த துறவிகளை, குறிப்பாக இளம் துறவிகளை அரசுக்கு எதிராக அணி திரட்டுவதில் ஜே.வி.பி வெற்றி கண்டது என சரத் அமுனுகம குறிப்பிடுகிறார். சைகோன் நகரின் குவொன்றி பகோடா (QUONTRI PAGODA) என்னும் புத்த கோவில் பெற்ற வகிபாகத்தை, ஜே.வி.பி இன் இரண்டாம் கிளர்ச்சிக் காலத்தில் நாரஹன்பிட்ட கோவில் பெற்றது. கொழும்பு நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்த பிரபல கோவில்கள் கூட ஐக்கிய தேசிய தேசியக் கட்சி அரசுக்கு எதிராகத் திரும்பின. இந்திய-இலங்கை உடன்படிக்கையை பௌத்த துறவிகளின் அமைப்புக்கள் ஒரே குரலில் எதிர்த்தன. ஜே.வி.பி ஆதரவாளர்களான இளம் பிக்குகள் கோவில்களினதும் மடாலயங்களினதும் முகாமைத்துவத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் (பக்.224)

224-225 ஆம் பக்கங்களில் ஒரு பந்தியில் புதிய தலைமுறை இளந்துறவிகளின் கருத்தியல் சார்பை சமூகவியல் நோக்கில் சுருக்கமாகவும் தெளிவாகவும் சரத் அமுனுகம விளக்கியுள்ளார்.

“இன்று “சங்க“ வலையமைப்பு கிராமங்களின் வறிய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளிற்கு சமூகத்தில் மேல்நோக்கிய உயர்ச்சிக்கு (UPWARD SOCIAL MOBILITY) ஒரு சாதனமாக அமைந்துள்ளது. முந்திய நாட்களில் கிராமத்தின் பிரபுக் குலத்தைச் (ARISTOCRACY) சேர்ந்த சிறுவர்கள் “சங்க“வில் இளம் துறவிகளாகச் சேர்த்து விடப்படுவார்கள். குறிப்பாக சியாம் நிகாய பிக்குகள், மரபுவழி உயர் குடியைச் சேர்ந்தோராய் இருந்து வந்தனர். இந்த வழக்கம் இப்பொழுது குறைந்து வருகின்றது. தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து வளர்ப்பதற்கு இயலாத ஏழைப் பெற்றோர்கள் அவர்களை துறவிகளாகச் சேர்த்து விடுகின்றனர். “சங்க“ அமைப்பில் இளம் துறவியாக சேரும் ஒரு சிறுவன் தனது “பிரக்ன (அறிவுத் திறன்)”, “சீலம் (துறவு ஒழுக்கம்) அல்லது சமாதி (தியானம் செய்யும் திறன்கள்)” ஆகியவற்றால் “சங்க“ படியமைப்பில் உயர்ந்து மதிப்புக்குரிய ஆளுமையாக உருவாக்கம் பெற முடியும். அவ்வுயர்ச்சி அத்துறவிக்கு பௌத்த சமூகம் முழுவதினதும் மதிப்பைத் தேடித் தரும். சமூகத்தில் அவர் மதிக்கப்படும் ஆளுமையாகவும் உயர்ச்சி பெறுகிறார் (பக். 225) மரபுவழிச் சமூகத்தை விட இன்று கிராமத்து இளம் துறவிக்கு கல்வி வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. அவர் பல்கலைக்கழகம் வரை சென்று தன் சுய முயற்சியால் முன்னேறலாம். மரபுவழிச் சமூகத்தில் சங்க அமைப்பின் உயர் நிலையில் உள்ள பிக்குகளுக்குப் பணிந்து சேவை செய்து தான், ஒருவர் உயர்ச்சியைப் பெற முடியும். இக்காலத்து இளம் துறவிகள் பல்கலைக்கழகங்களின் சமயசார்பற்ற ஒழுக்க மரபுகளை (SECULAR TRADITIONS) உள்ளீர்த்துக் கொள்கிறார்கள். அதிகார வரன்முறை அமைப்பை விமர்சன நோக்கில் பார்க்கும் மனப்பாங்கை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர் (பக்.225).”

“இளம் பிக்குகளிற்கு விரிந்த அறிவு உலகத்தின் (INTELLECTUAL WORLD) அறிமுகம் கிடைக்கிறது. இவ்வுலகம் “தம்ம (DHAMMA)” வழங்கும் அற நிச்சயத்தன்மைகள் (MORAL CERTAINTIES) இல்லாத உலகம். இதனால் இளம் பிக்குகள் பண்பாட்டு அதிர்ச்சிக்கு (CULTURAL SHOCK) உள்ளாகின்றனர். இவர்கள் கிளர்ச்சி வாதத்தை (RADICALISM) ஏற்கும் மனப்பாங்கைப் பெறுகின்றனர். இலங்கையின் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, மகாபோதி சங்கம், இளம் பௌத்தர் கழகம் (YMBA) என்பனவற்றின் கருத்தியலையும், சமூக முன்னேற்றத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வையும் இளம் துறவிகள் பெறுகின்றனர். புதிய கிளர்ச்சிக் கருத்தியல், பௌத்தத்தின் சமூக, சமத்துவ செயற்பாடுகளுக்கு (SOCIAL AND EGALITARIAN FUNCTION) அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது (பக்.225). ஜே.வி.பி இன் கிளர்ச்சிவாதம் இளம்பிக்குகளை ஆட்கொண்டதில் வியப்பேதும் இல்லை.”

இந்திய மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு

இந்தியா, இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றது. அதனை எதிர்க்க வேண்டும் என்பது விஜயவீர புகுத்திய இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற சொல்லாடலின் சாராம்சமாகும். ஜே. வி.பியை  அவர் நிறுவிய போது அவர் முன்வைத்த ஐந்து பிரதான வாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியா சோவியத் யூனியனின் நட்பு நாடாகியது. சீனாவின் கலாசாரப் புரட்சிக் கால கட்டத்தில் சீன-இந்திய உறவு மேலும் மோசமடைந்தது. சீன-இந்திய எல்லைப் பிரச்சனையில் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் யூனியன் சீனாவை  ஆதரிக்கவில்லை என்ற மனக்கசப்பு சீனாவிடம் இருந்து வந்துள்ளது. சீனாவின் பக்கம் சார்ந்து  நின்ற விஜயவீரவின் ”இந்திய விஸ்தரிப்பு வாதம்” அக்காலத்தின் சீன-இந்தியக் கண்டனப் போரின் சொல்லாடலின் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டது. சிங்கள மத்திய தர வர்க்கத்தையும், கிராமப் புறத்து இளைஞர்களையும் விஜயவீரவின் இந்திய விஸ்தரிப்பு வாதம் கவர்ந்தது. இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தினை தொடக்கி வைத்தவர்களே ஐக்கிய தேசியக் கட்சியினர் தாம் என்பது இவ்விடத்தில் கவனிப்புக்குரிய நகை முரணாகும்.

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்று எதிர்ப்புணர்வை வளர்த்து, ‘போர்க்களத்தில் தேசம் (A NATION AT WAR)’ என்ற உளவியலை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஜே.வி.பி இன் இந்திய எதிர்ப்புக்கு அடித்தளம் இட்டது. இந்திய எதிர்ப்பு, தேசப்பற்றாளர் அணி, உயர்குடி எதிர்ப்பு (ANTI- ELITISM), வன்முறைச் செயற்பாடுகள், பிக்குகளை அணிதிரட்டல் போன்ற பல விடயங்களின் கலவையாக  ஜே.வி.பியின் சுதேசிக் கருத்தியல் (NATIVIST IDEOLOGY)  அமைந்தது. மத்தியதர வர்க்க பௌத்த இளைஞர்களை இக் கருத்தியல் ஜே.வி.பியின் பக்கம் கவர்ந்திழுத்தது (பக்.227).

சீன-சோவியத் முரண்பாடுகளும் விவாதங்களும் உலகின் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இடதுசாரிகளையும் பிளவுபடுத்தி இரு முகாம்களை உருவாக்கின. இதனை விட கியுபாவின் புரட்சியாளர்களான பிடல் கஸ்ரோவும் சேகுவேராவும் மார்க்சிஸ்ட் கோட்பாட்டிற்கு புதிய கூறுகளைத் தம் பங்களிப்பாக வழங்கி, இடதுசாரிகளிடையே பல உட்பிரிவுகள் உருவாகக் காரணமாக இருந்தார்கள்.  மார்க்கசிய-லெனினிசக் கோட்பாடு பற்றிய விவாதங்களில் பங்கெடுத்த இளம் தலைமுறையினர் இலங்கையில் பல குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டனர். பிரேமலால் குமார சிறியின் ஆதரவாளராகி அவர் மூலமாகச் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழைந்த விஜயவீர, அக்கட்சிக்குள் தனக்கு ஒரு ஆதரவாளர் குழாமை உருவாக்கினார். பின்னர் பிரேமலால் குமாரசிறியைக் கைவிட்டு அக்கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகளில் இருந்து பிரிந்து சென்ற வேறு குழுக்களும் சமகாலத்தில் செயற்பட்டன. களுத்துறையிலும், வித்தியாலங்காரவிலும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்த தர்மசேகரவின் குழு, காமினி யாப்பாவின் ‘பெரதிக சுலங்க குழு’ (கீழைக்காற்றுக் குழு), ரொட்ஸ்கிசவாத ‘NLSSP’ எனப் பல குழுக்கள் இயங்கி வந்தன. மகிந்த விஜயசேகர என்ற கவர்ச்சி ஆளுமை கொண்ட மாணவத் தலைவர் மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார். விஜயவீர, தமக்குப் போட்டியாளர்களாக விளங்கிய மகிந்த விஜயசேகர போன்ற தலைவர்களை ஓரங்கட்டினார். விஜயவீர பிற தலைவர்களை விடச் செல்வாக்கு மிக்கவராக வளர்ச்சியுற்ற போது, அவர் பக்கம் பெருந்தொகையான இளைஞர்கள் சேர்ந்து கொண்டனர்.

விக்டர் ஐவன் உட்பட பலர் விஜயவீரவிற்கு மார்க்சிய தத்துவத்தில் போதிய அறிவு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர் (பக்.230). சீனச் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து வெளியேறிய விஜயவீர, ஏறக்குறைய நா. சண்முகதாசனின் கோட்பாட்டு விளக்கங்களைப் பின்பற்றியே தனது கருத்துக்களை வடிவமைத்தார்.

நா. சண்முகதாசன் மார்க்சியக் கோட்பாட்டை விளக்கும் பல கட்டுரைகளையும் நுல்களையும் எழுதியுள்ளார். ‘A MARXIST LOOKS AT THE HISTORY OF CEYLON – 1972 (ஒரு மார்க்சிஸ்டின் பார்வையில் இலங்கை வரலாறு), MEMOIRS OF AN UNREPENTANT COMMUNIST (ஒரு கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கை நினைவுக் குறிப்புகள்) என்னும் இரு நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்நுல்களில் இருந்து அவருடைய அரசியல் கோட்பாட்டின் முக்கிய வாதங்களைத் தெரிந்து  கொள்ள முடியும்.

  1. இலங்கையின் ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியச் சார்புடையது. கொம்பரடோர் (comprador) முதலாளித்துவத்தின் இயல்புகளை உடைய இவ் ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பதாக இருந்து வந்துள்ளது.
  2. இலங்கையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என ஒரு வர்க்கம் இருக்கவில்லை. இதனால் இந்தியாவைப் போன்ற தேசிய விடுதலை இயக்கம் இலங்கையில் தோன்றவில்லை. பிரித்தானியாவில் இருந்து இலங்கை பெற்ற அரசியல் சுதந்திரம் எவ்வித அடிப்படை வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
  3. காலனியம் (COLONIALISM ), நவகாலனியம் (NEO- COLONIALISM) என்ற வடிவில் தொடர்ந்தது. நவகாலனியக் கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டதால் இலங்கை பொருளாதார, சமூக, பண்பாட்டு நெருக்கடிக்குள் சிக்கியது.
  4. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்  அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா தலைமையில் உருவான புதிய தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாதிபத்தியச் சார்புடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
  5. ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் தனி நபர்களுக்கிடையிலான குரோதமும் போட்டியும் (PERSONAL RIVALRY)  காரணமாக எழுந்தவை.
  6. அரசியல் சந்தர்ப்ப வாதம் (POLITICAL OPPORTUNISM), பொப்பியுலிசம் (POPULISM) ஆகியவற்றால் தூண்டப் பெற்று இன்றைய ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.
  7. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இடதுசாரிகள் இனவாதக் கொள்கைகளை பின்பற்றுவதோடு பாராளுமன்ற அரசியல் என்ற பாதையில் பயணிக்கின்றனர்.                                                                                                                       

நா. சண்முகதாசன் அவர்களின் மேற்கூறிய கருத்துக்களையே விஜயவீரவும் தன் கொள்கையிலும் நடைமுறைகளிலும் உள்ளீர்த்துக் கொண்டார்.  விஜயவீரவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வேறுபாடுகள் இல்லை என்றே முடிவு செய்தார். ஆயினும் விஜயவீர தேவைக்கேற்ற முறையில் இரு கட்சிகளையும் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டார். நா. சண்முகதாசன் தோட்டத் தொழிலாளர்களை புரட்சிகரச் சக்தியாகக் கருதியதோடு ”செங்கொடிச் சங்கம்” என்ற பெயரில் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். விஜயவீர சண்முகதாசனின் கொள்கைகளில் இருந்து தோட்டத் தொழிலாளர் விடயத்தில் தம்மை தெளிவாக வேறுபடுத்திக் கொண்டார். தோட்டத் தொழிலாளர்களை சிங்கள மக்களின் எதிரியாகவே அவர் சித்தரித்தார். 

முடிவுரை   

கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் கட்டுரை ஜே.வி.பி பற்றியும் விஜயவீரவும் ஏனைய தலைவர்கள் பற்றியும் பல கோணங்களில் விரிவாக ஆராய்கிறது. இவ்வாய்வு விஜயவீரவின் ஆளுமை பற்றிய வேறுபட்ட சித்திரம் ஒன்றை எமக்கு வழங்குகிறது. இருபதாண்டு கால எல்லைக்குள் அவர் நாட்டை உலுக்கிய இரண்டு கிளர்ச்சிகளை நடாத்தினார். 1971 இன் கிளர்ச்சி 1987-1989 இன் கிளர்ச்சியில் இருந்து பல அம்சங்களில் வேறுபட்டது. இருபதாண்டு இடைக்காலத்தில் அவர் கொள்கையிலும் நடைமுறைகளிலும் சில மாறுதல்களைப் புகுத்தினார். ஜே.வி.பி இன் இரண்டாவது கிளர்ச்சி நடைபெற்று ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய நிலையில் இவ்வியக்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் வேர்களைப் பரிசீலனை செய்வதற்கு உதவக்கூடிய உயர்தரமான ஆய்வுகளில் ஒன்றாக சரத் அமுனுகம அவர்களின் ஆய்வு  விளங்குகிறது.  அவரது ஆய்வினைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆதாரம்

கலாநிதி சரத் அமுனுகமவின் DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT (2018) என்ற நுலின் ஆறாவது அத்தியாயமாக அமையும் WIJEWEERA AND THE LEADERSHIP OF JVB : A SOCIOLOGICAL PERSPECTIVE (பக். 184-242).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8398 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்