வணிகச் செயற்பாட்டில் விழுமியங்களின் வகிபாகம்
Arts
8 நிமிட வாசிப்பு

வணிகச் செயற்பாட்டில் விழுமியங்களின் வகிபாகம்

September 25, 2024 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து”
திருக்குறள் – 738

மு. வரதராசனார் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

நான் கடந்த மாதம் இலங்கைக்குச் சென்று இரண்டு வாரங்கள் எனது வயதான தாயருடன் ஒன்றாக இருந்துவிட்டு வந்தேன். அவருக்கு தொண்ணூற்று நான்கு வயது. எமது தந்தையார் 42 வருடங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக மறைந்துவிட்டார். தந்தையார் அவரது தொழில் நுண்ணறிவு காரணமாக பல வகையான வியாபாரங்களையும், முதலீடுகளையும், தொழில்முனைவுகளையும் ஆரம்பித்திருந்தார். எனது தந்தையின் திடீர் மறைவின் பின், அந்த வியாபாரங்களை எனது சகோதரரின் உதவியுடன் எனது தாயார் தொடர்ந்து நடாத்தினார். அவர் தனது திறமையால் போர்க் காலத்திலும் வியாபாரத்தை நடாத்தி எமது ஊர் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவர் இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது சிறந்த விழுமியங்களையும் அவ் வியாபாரத்தில் கடைப்பிடித்தார். வியாபாரம் குறித்த அவரது அறிவுரைகள் இப்போதும் எனக்கு பல சந்தர்ப்பங்களில் உதவியாக அமைந்து வருகின்றன.

தமிழ்ப் பாரம்பரியத்தில் வணிகத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்குப்பின் இருந்து உதவும் பெண்களின் ஆளுமை மிக அதிகமாக உள்ளது. உலகளாவிய ரீதியிலும் பல தமிழ்ப் பெண்கள் வர்த்தகத்துறையில் சாதனை புரியத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியான ஒருவர் தான் இந்தியாவின் சென்னை மாநகரத்தில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவிலும் உலக அளவிலும் பிரபலமான பெண்மணி இந்திரா நூஜி (Indra Nooyi). அவர் பெப்சி கோ (Pepsi Co) நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவர் அந்த நிறுவனத்தில் சேர்ந்த போது, அந் நிறுவனம் சர்க்கரை அளவு கூடிய குளிர் பானங்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. இதனால், அவரது காலத்தில் பல விதமான ஆரோக்கியமான பானங்களையும் சிற்றுணவுகளையும் அவர் சந்தைக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் நிறுவனத்தின் வியாபாரத்தை பல மடங்காக உயர்த்தினார். பலர் பாராட்டும் விதமாக, ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் உலகளாவிய ரீதியில் விற்பனை செய்யப்பட வழி அமைத்துக் கொடுத்தார். அவரது தலைமைத்துவத்தால் அவர் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளுள் ஒருவராக உயர்ந்தார். அவர் ஒரு தமிழ்ப் பெண்மணி என்பதில் எமக்கும் பெருமையே. இந்திரா நூஜி தான் கற்ற விடயங்களை பல கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில புள்ளிகளை இங்கு விபரிக்கலாமென்று இருக்கிறேன்.

1. வணிக விழுமியங்களும் இலக்குகளும் (Values And Business Goals): வியாபாரத்தை அதிகரித்து பெருமளவு பணம் உழைப்பதுதான் வர்த்தக நிறுவனங்களின் ஒரே நோக்கம். வணிகத்தில் இலாபம் சம்பாதிப்பது முக்கியம் என்றாலும், அதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்புரிவது பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். இந்திரா நூஜி ஆரோக்கியமான பானங்களையும் அறிமுகப்படுத்தியதன் மூலம், பெப்சிகோவை இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனமாக அல்லாமல், நல்ல விழுமியங்களுள்ள நிறுவனமாகவும் உருவாக்கினார்.

இணையத் தொடர்புகளைப் பயன்படுத்தி தொலைபேசிக்கு சமிக்ஞைகளை அனுப்பும் செயற்பாட்டை (VOIP) எனது முதலாவது ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனம் செய்து வந்தது. இணையத் தொடர்புகள் (Internet connections) அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்ததால் அதன் ஊடாக ஒலிகளை அனுப்ப அதிகமாக பண முதலீடு செய்யவேண்டி இருக்கவில்லை. ஒலியை மலிவாக அனுப்பியதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தவர்களையும் பிறரோடு எம்மால் இணைக்க முடிந்தது. அதை நாங்கள் 25 வருடங்களுக்கு முன்பே செய்திருந்தோம். அதனால் இன்று எல்லோரும் சாதாரணமாக இதனைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. 

2. பொறுப்புடன் புதுமைப்படுத்துதல் (Innovating Responsibly): பலர் பணம் உழைப்பதை மட்டும் மனதில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள். அதனால் அவர்களுக்கு குறுகியகால இலாபங்கள் கிடைக்கச் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் நீண்டகால நோக்கத்துடன், இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல் இயங்கும் நிறுவனங்கள், பெரிதாக வளர்ந்து உலகளாவிய ரீதியில் தலை உயர்ந்து நிற்கும். அதற்கு பொறுமையும், புத்தாக்கம் மிக்க பொருட்களை அறிமுகப்படுத்துவதும் அவசியம். இந்திரா நூஜி தனது தலைமைத்துவக் காலத்தில் கலோரிகள் குறைந்த பானங்களையும், எனர்ஜி பானங்களையும், விற்றமின் தண்ணீர் போன்ற பானங்களையும் அறிமுகப்படுத்தினார். அவை அதிகமான சர்க்கரை அளவுள்ள பானங்களுக்கு மாற்றீடாக இருந்தன. அதனால் பெப்சிகோவின் வருமானம் அதிகரித்தது.

3. ஓர் நிலைபேறான மாதிரியை உருவாக்குதல் (Building a Sustainable Model): இயற்கை வளம் வரையறைக்குட்பட்டது. அதனை கவனமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவதன் மூலம் அதனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடியதாக மாற்றவேண்டும். பொருட்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அதன் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க முடியும். இதனை மனதில் கொண்டு உங்களது நிறுவனத்தையும் அதன் விநியோகச் சங்கிலியையும் (Supply chain) உருவாக்குவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரும் பூமியில் வாழ வழியேற்படுத்த முடியும். அது மட்டுமன்றி இதன் மூலம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து இலாபத்தைக் கூட்ட முடியும். 

எமது தாயகத்தின் பனை, தென்னையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அவற்றால் ஆக்கப்பட்ட பொருட்களை உண்ண மட்டுமன்றி பல தேவைகளுக்கும் பயன்படுத்தினோம். இப்போது நாகரீகமென்ற பாவனையில் அழியாத குப்பைகளான பிளாஸ்ரிக் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆரம்பத்திலேயே சிந்தித்திருந்தால் இப்படியான சூழலுக்குக் கேடான விடயங்களைத் தவிர்த்திருக்கலாம்.

4. மனிதநேயமிக்க கலாசாரத்தை உருவாக்குதல்: பெரிய நிறுவனங்களை உலகளாவிய ரீதியில் உருவாக்கி நிர்வகிப்பது இலகுவானதல்ல. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாசாரத்தைக் கொண்டிருக்கும். அவர்களது வேலைமுறை, பழக்கவழக்கங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால் இவற்றிற்கு எல்லாம் மேலே இருப்பது மனிதநேயம். நாம் மனிதநேயமிக்க கலாசாரத்தை உருவாக்க வேண்டும். மனிதநேயமிக்க கலாசாரமென்பது ஒருவர் தன்னை மற்றவரின் இடத்தில் வைத்துப் பார்த்து, அவர்களது சிரமங்களையும் யோசனைகளையும் அறிந்து அதற்கேற்ப அனுசரித்து நடப்பது. அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கை அதிகரிக்கும்; ஒற்றுமை ஏற்படும். இதனால் நிறுவனங்களின் வரவு பெருகி இலாபம் ஏற்படச் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும்.

5. இலாபத்திற்கு அப்பாற்பட்ட தாக்கத்தை அளவிடுதல்: நிறுவனங்களுக்கு நிதி அறிக்கைகள் முக்கியமானவை. நிதி அறிக்கைகளில் எண்கள் மட்டுமே தெரியும். நிறுவனத்தால் ஏற்படும் பிற விளைவுகள் நிதி அறிக்கைகளில் இருக்காது. ஆனால், இப்போதைய தலைமுறையினர் சமூக நன்மைகளை மனதில் கொண்டே தமது வாழ்க்கையை வகுத்துக் கொள்கிறார்கள். ஆகையால், நிறுவனத்தின் மதிப்பை சமூக மதிப்போடு ஒன்றுபடுத்துவதே இன்றைய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுவதற்கான ஒரே வழி. அதனை மனதில் கொண்டு இந்திரா நூஜி பல தொழில்நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். அவை பெப்சிகோ மேலும் பெரிதாக வளர்ந்து, நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்க உதவின.

ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது பெருநோக்கத்துடன் ஆரம்பிப்பது அவசியம். அதன் மூலம் மேலே திருக்குறளில் கூறியது போல் நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் எமது வாடிக்கையாளர்களுக்கும், அதனால் எமது சமூகத்திற்கும் கிடைக்கும். இப்போது, எனது இலங்கைப் பயணத்தின் போது, எனது தாயார் கூறியது நினைவு வருகின்றது. அவர் “ஊருக்கும் மற்றவைக்கும் இயலுமானதைப் பார்த்துச் செய். அது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் ஏதோ ஒரு விதமாக வந்து சேரும்.” என்றார். இலாபம் மட்டுமல்ல, சிறந்த விழுமியங்களும் வணிகத்திற்கு அவசியம்.  


ஒலிவடிவில் கேட்க

1417 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (16)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)