இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் சங்ககால வேள்
Arts
16 நிமிட வாசிப்பு

இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் சங்ககால வேள்

January 2, 2025 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கையின் பண்பாட்டு வரலாற்றைத் தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் குறிப்பாகத் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதற்குத் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாட்டலைகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதே காரணமாகும். இதை இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது. இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எழுத்து, மொழி, பண்பாடு என்பனவற்றை அறியப் பெரிதும் உதவுகின்றன. வரலாற்றாசிரியர்களில் பலர் இக்கல்வெட்டுகளில் வரும் வடபிராமி எழுத்து, வடமொழிச் சொற்கள் ஆகியன சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவில் இருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்தமைக்கு ஒரு சான்று எனக் காட்டியுள்ளனர். ஆனால், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இவை பௌத்தமதத்துடன் அறிமுகமாவதற்கு முன்னரே, தமிழகத்தில் இருந்து பரவிய எழுத்தும், மொழியும் இலங்கையில் புழக்கத்தில் இருந்ததற்கு இக்கல்வெட்டுக்களே சான்றாகும். இதில் தமிழ்மொழிக்கேயுரிய பட்டப்பெயர்கள், வம்சப் பெயர்கள், ஆட்பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் சங்க இலக்கியத்திலும், தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளிலும் வரும் பெயர்களோடு பெருமளவு ஒற்றுமை உடையன. அவற்றுள் ‘வேள்’ என்ற பெயர் பற்றி ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழி பற்றிய ஆய்வில் அறிஞர்கள் கவனத்தை ஈர்த்த ஒரு சொல்லாக வேள் காணப்படுகிறது. 1880 இல் வடஇலங்கையில் பெரியபுளியங்குளக் கல்வெட்டில் இச்சொல்லை அவதானித்த எச். பாக்கர் இதை ‘வேளா’ என வாசித்து, இரண்டாவதாக வரும் தமிழுக்குரிய ‘எ’ இனை தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்ததற்குரிய சான்றாகக் காட்டினர் (Parkar 1909:43.6). இவரின் வாசிப்போடு உடன்படாத கோல்சிமித், முல்லர், எச்.சி. பெல் போன்றோர் இவ்வெழுத்தை அசோக பிராமிக்குரிய ‘லு’ எனக் கூறி இச்சொல்லை ‘வேலு’ என வாசித்தனர். இவர்களின் வாசிப்பே பொருத்தம் எனக் கூறும் எஸ். பரணவிதான கல்வெட்டுகளில் வரும் இச்சொல்லும், பாளி இலக்கியங்களில் வரும் ‘வேளு’ என்ற சொல்லும் ஒன்றெனக் கூறினார். ஆனால் இலங்கையில் ‘எ’ எழுத்துப் பயன்படுத்தும் இலக்கியங்களில் ‘லு’ இற்குப் பதிலாக ‘ளு’ பயன்படுத்தப்பட்டது தவறு என்றார் (Paranavitana 1970:XXV). இதற்குச் சான்றாக தொடக்க கால கட்வெட்டுகளில் உள்ள ‘கட’ (Kada), ‘அடி’ (Adi) போன்ற சொற்கள் கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் பின் ‘அளி’ (Ali), ‘களி’ (Kali) என மாற்றமடைந்ததைச் சான்று காட்டினார். ஆனால் தொடக்ககாலக் கல்வெட்டுகளில் இரு எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் பரணவிதானவால் ‘வேலு’ என வாசிக்கப்பட்டதை ‘வேள்’ அல்லது ‘வேளா’ என வாசிப்பதே பொருத்தமாகும். இலங்கையில் அசோக பிராமிக்கு முன் தென் பிராமி எழுத்து புழக்கத்தில் இருந்ததாகக் கருதும் எஸ். கருணாரத்தின கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் ‘ள’ என்ற எழுத்து பயன்பாட்டில் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது (Karunarathna 1984:32).

தமிழ் நாட்டில் ‘வேள்’ என்ற சொல் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து மாங்குளம், மேட்டுப்பட்டி, கரூர், மறுகால்தலை ஆகிய இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டதைக் காணலாம் (Mahadevan 1966:61). இச்சொல் சங்க இலக்கியத்தில் ‘வேள்’, ‘வேளிர்’ எனப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் உள்ள ‘வேள்’ என்ற தமிழ்ச் சொல்லின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சங்ககாலப் பின்னணியில் நோக்குவதும் அவசியமாகிறது.

தென்னிந்திய அரச தோற்றம் பற்றிய ஆய்வில் பிற குறுநில மன்னர்கள் பெறாத முக்கியத்துவத்தை வேளிர் பெறுகின்றனர். மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்களுள் இவர்கள் அரசியலிலும், சமூகத்திலும் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியதைச் சங்க இலக்கியத்தில் வரும் இளங்கோவேள், மாவேள் எவ்வி, நெடுவேள் ஆவி, வேந்தரும் வேளிரும், இருபெரும் வேந்தரோடு வேளிர் போன்ற சொற்றொடர்கள் உணர்த்துகின்றன. வேளிர் என்பது வேள் என்பதன் பன்மை. சங்க இலக்கியத்தில் நன்னன்கங்கள், கட்டி, பரணன் போன்ற வேளிர்த் தலைவர்கள் பேசப்படுகின்றனர் (அகநானூறு செய்யுள் 44, 113, 325). ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேள் தலைவனாக இருந்திருக்க வேண்டும். அவனின் கீழ் வாழ்ந்த குடிகள் இரத்த உறவினால் பிணைக்கப்பட்ட ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். தமிழ் நாட்டிலுள்ள வேளாபுரம், வேள்கலிநாடு, வேள் நாடு, வேளூர் என்பன வேள் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக, ஊராக இருந்திருக்க வேண்டும். வேள் நாடு என்பது வேள் ஆட்சிக்குட்பட்ட நாடு என எ. சுப்பராயலு கூறியிருப்பது இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும் (Subbarayalu. Chapter 1).

சங்க இலக்கியத்தில் வரும் தொன்முதிர் வேளிர் (புறம் 201: 11, 12), தொன்று முதிர் வேளிர் (புறம் 24: 21) பற்றிய சான்றுகள் தமிழகத்தின் மிகத் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்றாக வேளிரைக் கருத இடமளிக்கிறது. சிந்துவெளியில் இருந்து கி.மு 800 அளவில் தென்னகம் வந்து குடியேறியவர்களே வேளிர் என்பது என். சுப்பிரமணியத்தின் கருத்தாகும் (Subramaniam 1961 : 258). இவர்களின் வழி வந்தவர்களே பிற்கால வேளார் என எ.மு ஆரோக்கியசாமி கருதுகிறார். தக்காணத்தில் அறுநூறு ஆண்டுகள் சிறப்புற்று விளங்கிய சாளுக்கியரை வேளிர் என்று பிங்கலநிகண்டும், வேள்புல அரசர் எனத் திவாகரமும், வேள் குலச் சாளுக்கியர் எனச் சோழக் கல்வெட்டும் கூறுகின்றன. இதற்குத் தமிழ்நாட்டிற்குரிய வேளிர் தமிழகத்திற்கு வெளியேயும் பரவியதே காரணம் என கிருஷ்ணசாமி ஐயங்கார் விளக்கம் கூறுகிறார் (Aiyangar, 1941: 11). தமிழகத்தில் இருந்தே இலங்கைக்குப் பெருங்கற்காலப் பண்பாடு பரவியதென்ற கருத்துடைய செண்பகலட்சுமி வேளிரின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறார். இப்பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் தமிழ் நாட்டிற்குரிய சிறப்பம்சம் எனக்கூறும் இவர், வேளாண்மையுடன் தொடர்புடையவர்களே இப்பண்பாட்டை உருவாக்கியவர்கள் எனக் கூறி வேளிர் வாழ்ந்த இடங்களுக்கும், இப்பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களுக்கும் இடையிலான ஒற்றுமையைத் தொடர்புபடுத்தலாம் என்றார் (Champakalakshmi 1978 : 52). எஸ். செனிவிரட்ன வேளிர் வாழ்ந்த இடங்களுக்கும் பெருங்கற்கால ஈமத்தாழிகள் காணப்படும் இடங்களுக்கும் இடையிலான ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியுள்ளார் (Seneviratne 1993 : 70). கா. இராஜன் பெருங்கற்கால நடுகற்களுக்கும் வேளிர் தோற்றத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்பதற்குச் செங்கம், தருமபுரி நடுகற்களைச் சான்றாதாரம் காட்டுகிறார் (Rajan, 1996: 220).

சங்க இலக்கியத்தில் வேளிர் வேளாண்மையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறுவதற்குச் சான்றுகள் மிகக்குறைவு. மாறாகக் கால்நடை வளர்ப்பிலும் பெருமளவு போர் நடவடிக்கையிலும் ஈடுபட்டதற்கே சான்றுகள் அதிகம். போர்க் காலங்களில் பங்கெடுத்த வேளிர் பற்றிச் சங்க இலக்கியம் கூறும்போது ஐம்பெரும் வேளிர், பதினொரு வேளிர் எனக் கூறுவதைக் காண்கிறோம் (அகநானூறு 36, 135). கரிகாற் சோழன் பதினொரு வேளிர்களுடன் போரிட்டான் என அகநானூறு கூறும். எனவே பெருங்கற்காலப் பண்பாட்டில் வேளாண்மையில் ஈடுபட்ட மக்களை வேளிருடன் தொடர்புபடுத்துவது பெருமளவு பொருத்தமாகத் தெரியவில்லை. றோமிலாதபார் வேளாண்மை மக்களும், போர் மறவரும் இருபிரிவினராக இருப்பினும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்தனர் என்றார். இதில் வேளாண்மையில் ஈடுபட்ட மக்களைப் பாதுகாக்கும் போர் மறவராக வேளிர் இருந்திருக்கலாம் (Thapar 1954:32).

‘வேள்’, ‘வேளிர்’ என்ற சொல் குலம் குறித்து வந்த பெயர்கள் அல்ல, ஒரு பட்டப் பெயர் என்ற கருத்துண்டு. சங்க இலக்கியத்தில் வேள் என்ற சொல் குறிப்பிட்ட ஒரு குலத்தைக் குறிக்காது ஆய், மலையமான், போசானியர் குலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சான்றாகக் காட்டப்படுகிறது (பூங்குன்றன் 1989 : 220). ‘ஆநிரை கவர்தல்’, மக்களிடையே ஏற்பட்ட போட்டி, பூசல்களிடையே தலைமை தாங்கி நடத்திய தலைவன் காலப்போக்கில் குலத்தலைவனாக நிலைபெற்றான். இதில் தெளிந்த சிந்தனையும், வலிமையும், வீரமும் உள்ள தலைவன் பெற்ற பெயர்களில் ஒன்றே வேள் எனக் கருதப்படுகிறது. ஆநிரை கவர்தல், ஆபிரிக்கக் கால்நடை வளர்ப்பாளரிடையேயும், வேதகாலக் கால்நடை மேய்ப்பாளரிடையேயும் காணப்பட்ட பொதுவான அம்சம் எனக்கூறும் றோமிலாதபார், வடமொழியில் ராஜ என்பவன் ஆகோள்பூசல் தலைவனாகக் கூறப்படுகின்றான் என்றார் (Thapar 1984: 24). மூலத் திராவிட மொழியில் ‘வேள்’ என்பதற்கு விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள்கள் உண்டு. ஏறத்தாழ இதே கருத்தை வடமொழி ராஜாவும் கொண்டிருப்பதால் இரண்டும் தலைவன் என்ற கருத்தைக் கொண்டது எனக் கருதலாம். ஏறத்தாழ இதே கருத்தை வடமொழி ராஜாவும் கொண்டிருப்பதால் இனக்குழு வாழ்க்கையில் இருந்து அரசு உருவாகும் போது இடைக்கட்டமாக வேள் இருந்ததென்றார் ஆர். எல்மன் (Elman. 1975: 37). தொடக்க காலத்தில் சமூகத்தை தலைமை தாங்கியவனை வேள் குறித்து நின்றாலும் காலப்போக்கில் வேள் வழி வந்தவர்கள் தம்மை வேள் குலமாகக் கருதியிருக்க இடமுண்டு. இதையே சங்க இலக்கியத்தில் வரும் வேள் குலம், வேள்குடி போன்ற சொற்கள் உணர்த்துகின்றன. இது முதலியார் பட்டம் பெற்ற ஒருவரின் வழி வந்தவர்கள் பிற்காலத்தில் தம்மை முதலியார் குலம் எனக் கூறிக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

இலங்கையில் வேள் என்ற சொல் 21 கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆ. வேலுப்பிள்ளை மேலும் 5 கல்வெட்டுகளில் இச்சொல் தவறாகச் சுலு (Sulu) என வாசிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார் (Veluppillai 1980:12). இச்சொல் வடமொழி ‘Vailva’ என்ற சொல்லின் அடியாகத் தோன்றியதெனக் கூறும் பரணவிதான இது தனிநபர் (Personal name) பெயரைச் சுட்டுகின்றதென்றார். இதையொரு திராவிடச் சொல் எனக்கூறும் செனிவிரட்ன இதற்குச் சார்பாகத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளிலும் சங்க இலக்கியத்திலும் வரும் பெயரைச் சான்றாகக் காட்டுகிறார் (Seneviratna 1985 : 59). எச்.டபிள்யு. எல்லாவலா, தமிழில் ‘வேல்’ என்பது முருகனோடு தொடர்புடையதால் கல்வெட்டுகளில் வரும் ‘வேலு’, ‘வேலுஸ’ போன்ற பெயர்கள் முருகனைக் குறிப்பதாகவும், இவை சிங்கள மக்கள் சைவ மதத்தைப் பின்பற்றியதற்குச் சான்று எனவும் கூறுகிறார். சங்க கால ‘வேள்’, ‘வேளி’ரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் வேளும் ஒன்றெனக் கூறும் சி.க. சிற்றம்பலம் இது வேள் குலத்தைக் குறிப்பதாகவும், இதன் அடியொற்றித் தோன்றியதே பிற்கால வேளாளர் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார் (சிற்றம்பலம் 1993 : 546). சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த ‘வேள்’ என்ற தமிழ்ச் சொல்லே சமகாலத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது எனக் கூறலாம். ஆனால் தமிழ் நாட்டில் முதலில் தலைவனைக் குறித்த ‘வேள்’ என்ற சொல் வேள்குலம், வேள்குடி என அழைக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதுபோல இலங்கையில் இதுவரை கிடைக்கவில்லை. குலம், குடி போன்ற சொற்கள் கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் அவை ‘வேள்’ என்ற சொல்லுடன் இணைந்து வந்ததற்குச் சான்றில்லை. கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில் வரும் இச்சொல் பிற்பட்ட கல்வெட்டுகளில் படிப்படையாக மறைந்து போகிறது. இதனால் ‘வேள்’ என்ற சொல்லுக்கும் பிற்பட்ட கால வேளாளருக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை.

சங்க இலக்கியத்தில் குறுநில மன்னர் பெயரின் பின்னொட்டுச் சொல்லாக வரும் இச்சொல் சில குறுநில மன்னர் பெயரில் முன்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டதற்கு வேள் எவ்வி, வேள் பேகன், வேள் ஆய், வேள் பாரி, நெடு வேள், ஆதன் போன்ற மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம் (புறம் 24 : 18, அகம் 61: 15, புறம் 105 : 815 : 12). இச்சொல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் பெரும்பாலும் பின்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டொன்றில் ‘சுமண’ என்ற பெயரின் முன்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (Paranavitana, 1970 : 647). இவ்விரு சொற்களும் (வேள், சுமண) தனியாகவும் இணைந்தும் கல்வெட்டுகளில் வருவதுபோல் மகாவம்சம், மனோரதபுரானி (Manorathapurani), சபஸ்ஸவன்டு (Sabassavanhu), ராஜவாகினி (Rajavahini) முதலான பாளி நூல்களிலும் வருகின்றன (Ellawala 1969 : 61, 112, 115). மன்னர்களினதும், அரச தலைவர்களினதும் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்களில் வேளுசுமண படைத் தளபதியாக, வணிகத் தலைவனாக, அரச வருவாய் பெறும் அதிகாரியாக, மன்னனாக வரக்கூடிய தலைவனாகக் கூறப்படுகின்றான். இதனால் சுமண என்ற பெயரில் முன்னொட்டுச் சொல்லாக வரும் வேள் என்ற சொல் ஒரு பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டதெனக் கருத இடமுண்டு.

மகாவம்சம், கிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளுசுமண சிறந்த குதிரை ஓட்டியெனக் கூறுகிறது. ராஜாவாகினி என்ற நூல் வெளிநாட்டில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்பவனாக வேளு சுமணவைக் குறிப்பிடுகிறது (Ellawala 1969: 61, 115). பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட போட்டி இரு குழுக்களிடையே தலைவர்கள் தோன்றவும், அவை அரசு உருவாகவும் காரணமாக இருந்தன. இலங்கையின் தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கையில் வெளிநாட்டு வர்த்தகமும் முக்கியப் பங்கு வகித்தது. இலங்கையின் தொடக்க கால நகரமயமாக்கத்திற்குத் தென்னிந்தியா ஊடான மேற்காசிய வர்த்தகமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவ்வர்த்தகத்தில் முத்து ஏற்றுமதிப் பொருளாகவும், குதிரை முக்கிய இறக்குமதிப் பொருளாகவும் திகழ்ந்தன. அநுராதபுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ‘பதவேள்’ என்ற சொல் காணப்படுகிறது (Paranavitana 1970: 121). இது பரதவ குலத்துக்குரிய வேள் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பரதவ குலம் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதற்குத் தெளிவான சான்று உண்டு. இக்கல்வெட்டு இக்குலத்துக்குரிய வர்த்தகத் தலைவன் ‘வேள்’ என அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

சங்க இலக்கியத்தில் வேள், வேளிர் ஆகியோர் போர் மறவர்களாகப் பல இடங்களில் வருணிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ‘கொடயவேள்’ என்ற சொல் காணப்படுகிறது. கொடய என்பதைக் கோட்டை என மொழிபெயர்த்த பரணவிதான இச்சொல்லின் மூலம் வடமொழி ‘கொஸ்டிகா’ எனக் கூறிக் ‘கொடயவேள்’ என்ற சொல்லுக்குக் கோட்டையின் படைத் தளபதி வேலு என விளக்கம் கொடுத்துள்ளார் (Paranavitana 1970 : 778). ‘வேலு’ என்பதைத் தமிழ்ச் சொல்லான ‘வேள்’ எனக் கூறும் வேலுப்பிள்ளை ‘கொடய’ என்ற பிராகிருதச் சொல், தமிழில் ‘கோட்டை’ என விளக்கம் கொடுக்கிறார் (Veluppillai 1981:13). எல்லாளன் – துட்டகாமினி போராட்டத்தில் துட்டகாமினி படையில் இருந்த தளபதியாக ‘வேளுசுமண` குறிப்பிடப்படுகிறான். இவ்வாறான தளபதிகள், தலைவர்கள் எல்லாளன் படையிலும் இருந்ததாகத் தெரிகிறது. துட்டகாமினி எல்லாளனை வெற்றி கொள்ளுமுன் அவனுக்குச் சார்பான 32 தமிழ்ச் சிற்றரசுகளை (தலைவர்களை) வெற்றிகொள்ள நேரிட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இச்சிற்றரசுகளில் ‘வேள்’ சிற்றரசும் இருந்திருக்க இடமுண்டு. ராஜவாகினி என்ற நூல் ‘வேளுசுமண’ என்ற ஒற்றன் காக்க வண்ணதிஸனைச் சிறைப்பிடித்து அடிமையாக்குவதாக எல்லாள மன்னனிடம் உறுதி கூறியதாகக் கூறுகிறது (Ellawala 1969 : 61). இங்கே வேள், வேளுசுமண என்ற பெயர்கள் படைத்தளபதியாகக் கூறப்படுவது சங்க இலக்கியத்தில் வேள், வேளிர் போர் மறவர்களாக வருணிக்கப்படுவதை அப்படியே நினைவுபடுத்துகின்றன.

எனவே மேற்கூறப்பட்டவற்றில் இருந்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் ‘வேள்’ என்ற சொல்லைத் தனி நபர் பெயராகவோ, இனக்கு குழு சார்ந்த பெயராகவோ கொள்வதிலும் பார்க்க ஒரு பட்டப் பெயராகக் கருதுவதற்கே சான்றுகள் சார்பாக உள்ளன. கல்வெட்டுகளில் ‘சுமண’ என்ற பெயரின் முன்னொட்டுச் சொல்லாகக் கமணி, பருமக, கபதி போன்ற பட்டப் பெயர்கள் வருவது போல், வேள் என்பதையும் ஒரு பட்டப் பெயராகக் கருதலாம். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் ‘பருமக வேள் சுமணனின் மகன் பருமக வேள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (Paranavitana 1970 : 647). இங்கே வேள் என்பது வம்சப் பெயராகப் பயன்படுத்தப்பட்டதெனக் கருத இடமளிக்கிறது. இதை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை.

தமிழ் நாட்டில் ஆநிரை கவர்தல் அல்லது பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட போட்டி, இனக் குழுக்களிடையே ‘வேள்’ தோன்றக் காரணமாகும். தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட இச்சொல் சமகாலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்டமைக்கு முதலில் வெளிநாட்டு வர்த்தகம் காரணமாக இருக்கலாம். இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நெருக்கமான வர்த்தகத் தொடர்புக்கான சான்றுகளை பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து தெளிவாகக் காணமுடிகிறது. இவ்வர்த்தகத்தைத் தலைமையேற்று நடத்திய தலைவர்கள் தமிழ்நாட்டுத் தொடர்பால் ‘வேள்’ என்ற பட்டப்பெயரைப் பெற்றிருக்கலாம். தமிழ் நாட்டில் புகளூர்க் கல்வெட்டில் ‘ஆதன்’ என்ற வணிகன் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக ‘வேள்’ குறிப்பிடப்பட்டுள்ளது (வேங்கடசாமி 1983:58 – 59). இப்பெயர்கள் குலம், கடவுளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதைப் பட்டமாகக் கருதவும் இடமுண்டு. காலப்போக்கில் இப்பெயர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களையும், குறுநில மன்னர்களையும், படைத் தளபதிகளையும் அரசு அதிகாரிகளையும் குறித்திருக்க இடமுண்டு. மகாவம்சம் தமிழ்நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த வணிகத் தலைவனின் பிள்ளைகளான சேனன், குத்திகன் என்ற தமிழர்களே இலங்கையில் ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்கள் எனக் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உசாத்துணை

  1. சுப்பராயலு, எ. 1991. ‘ஆள் பெயர்கள் காட்டும் சமுதாயம்’, தமிழகக் கல்வெட்டியலும் வரலாறும்.
  2. சிற்றம்பலம், சி. க. 1993, யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு பாகம் 1, கி.பி. 500 வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
  3. பூங்குன்றன். ஆர். 1989, ‘செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடிகள், அரசியல்’. ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு. பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
  4. வேங்கடசாமி, மயிலை. சீனி. 1983, ‘அடிப்படைச் சான்றுகள் 2’, தமிழ் நாட்டு வரலாறு, சங்க கால அரசியல். தமிழ் நாட்டு வரலாற்றுக் குழு. தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை : 37 – 91.
  5. Aiyanagar, S. K. (1941). Ancient Indian and South Indian History and Culture. Central Book Depot, Poona.
  6. Champakalakshmi, R. (1975). Archaeology and Tamil Literary Tradition. Puratattva, 8, 110–122.
  7. Champakalakshmi, R., & Gopal, S. (1996). (Eds.). Tradition, Dissent & Ideology: Essays in Honour of Romila Thapar. Oxford University Press, Delhi.
  8. Ellawala, H. (1969). Social History of Early Ceylon. The Department of Cultural Affairs, Ceylon, Colombo.
  9. Elman, R. (1975). Origins of the State and Civilization. W. W. Northern and Company, New York.
  10. Gunawardana, R. A. L. H. (1977). Prelude to the State: An Early Phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka. The Sri Lanka Journal of the Humanities, University of Peradeniya, VIII(1 & 2).
  11. Mahadevan, I. (1966). Corpus of Tamil Brahmi Inscriptions. Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology, Government of Tamil Nadu, Madras.
  12. Paranavitana, S. (1970). Inscription of Ceylon: Early Brahmi Inscriptions. The Department of Archaeology, Ceylon, Colombo, Vol. I
  13. Rajan, K. (1996). Archaeological Exploration in the South Arcot Region. Project Report submitted to Tamil University, Thanjavur (Unpublished).
  14. Seneviratne, S. (1985). The Baratas: A Case of Community Integration in Early Historic Sri Lanka. In A. R. B. Amerasinghe (Ed.), Festschrift 1985 James Thevathasan Ratnam (pp. 49–56). Colombo.
  15. Seneviratne, S. (1993). From Kudi to Nadu: A Suggested Framework for Studying Pre-State Political Formations in Early Iron Age South India. The Sri Lanka Journal of the Humanities, XIX(1 & 2).
  16. Subbarayalu, Y. (1973). Political Geography of the Chola Country. State Department of Archaeology, Madras.
  17. Subramanian, N. (1966). Sangam Polity. Asian Publishing House, Bombay.
  18. Thapar, Romila. (1984). From Lineage to State. Oxford University Press, New Delhi.
  19. Velluppillai, A. (1980). Tamil Influence in Ancient Sri Lanka with Special Reference to Early Brahmi Inscriptions. Journal of Tamil Studies.

ஒலிவடிவில் கேட்க

3107 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்