வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள் : மீள் பரிசீலனை
Arts
10 நிமிட வாசிப்பு

வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள் : மீள் பரிசீலனை

February 6, 2025 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் தாழிகள், தமிழ்ப்பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன (புஸ்பரட்ணம் 1993). இவற்றுள் சங்ககால நாணயங்கள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் கருப்பொருளாகும்.

பாண்டியர் கால நாணயங்கள்

இலங்கையில், சிறப்பாக வட இலங்கையில், இதுவரை கிடைத்த பெரும்பாலான சங்ககால நாணயங்கள் பாண்டிய வம்சத்திற்குரியதாகும். இதற்கு வடஇலங்கை பாண்டி நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பது ஒரு காரணமாகும். 1917இல் போல் பீரிஸ் என்பவர் கந்தரோடையில் சில பாண்டிய நாணயங்களைக் கண்டெடுத்தார். அப்போது அறிஞர் பலர் அதைப் பாண்டியர் கால நாயணங்களாகக் கொள்ளவில்லை. இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய ஒரு நூலில், கந்தரோடையில் கிடைத்த நாணயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது (Krishnamurthy 1997 : 36). இவை தமிழகத்தில் கிடைத்த நாணயங்களோடு ஒப்பிட்டுப் பெருவழுதி நாணயங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அண்மையில் பூநகரியில் நான்கு வகையான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மன்னன் பெயரோ, எழுத்துகளோ காணப்படவில்லை. ஆனால் நாணயங்களில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் அப்படியே கந்தரோடையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களை ஒத்துள்ளன. இவ்வொற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இங்கு கிடைத்த நான்கு வகை நாணயங்களும் பாண்டியர் வெளியிட்ட நாணயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாணயம்: 1 

இடம் :  ஈழவூர், செப்பு நாணயம், நீளம் – 2.3 செ.மீ, அகலம் – 2.1 செ.மீ, எடை – 7.7 கிராம்.

முன்புறம் : மேல் வரிசையில் இடப்புறமாக மூன்று வளைவுள்ள முகடு; நடுப் பகுதியில் கவிழ்ந்த பிறைவடிவுள்ள கூரைக்கோயில்; கூரையை ஐந்து தூண்கள் தாங்கி நிற்கின்றன. வலப்புறமாக மூன்று மலை; அதன் மேல் வேலியிடப்பட்ட மரம். கீழ்வரிசையில் இடப்புறமாகக் கொடிமரம்; நடுப்பகுதியில் வலப்புறம் நோக்கிய யானை; வலப்புறம் வேலியிடப்பட்ட மரத்தின் தொட்டி. 

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயம்: 2 

இடம் : கல்முனை, செப்பு நாணயம், நீளம் – 1.2 செ.மீ, அகலம் – 0.9 செ.மீ, எடை 1.7 கிராம்.

முன்புறம் :  இடப்புறம் நோக்கிய யானை.

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயம் : 3 

இடம் : மண்ணித்தலை, செப்பு நாணயம், நீளம் – 1.2 செ.மீ, அகலம் – 0.9 செ.மீ, எடை – 1.4 கிராம்.

முன்புறம் : இடப்பக்கம் நோக்கிய யானை.

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயம் : 4 

இடம் : மண்ணித்தலை, செப்பு நாணயம், நீளம் – 2.4 செ.மீ, அகலம் – 2.0 செ.மீ, எடை – 7.9 கிராம்.

முன்புறம் : யானை, மேற்பகுதியில் கும்பம், சக்கரம் ஆகிய பொருட்களின் உருவம், எண்மங்கலப் பொருட்களின் உருவம், யானையின் முன்பாக அங்குசம்.

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயங்களின் பின்புறத்தில் மீன் குறியீட்டுச் சின்னம் இருப்பதைக் கொண்டு இவை சங்ககாலப் பாண்டியர் வெளியிட்டவையென நிச்சயிக்க முடிகிறது. நாணயங்களின் முன்புறத்தில் உள்ள யானை, கூரைக்கோயில், அங்குசம், சக்கரம், முகடு, மலை, கும்பம் என்பன இந்திய நாணயங்களில் காணப்படுகின்ற பொதுச் சின்னமாக உள்ளமையால், இலங்கையில் கிடைத்த இவ் நாணயங்கள் சங்ககாலத் தமிழகத்தில் வெளியிடப்பட்டவை என்ற முடிவுக்கு சில ஆய்வாளர்கள் வந்துள்ளார்கள். சங்ககாலத்தில் இருந்த தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் வாணிபத் தொடர்பால், சங்க கால நாணயங்கள் இலங்கைக்கு வந்திருக்கக்கூடும். ஆயினும் இங்கு கிடைக்கின்ற சங்ககால நாணயங்கள் அனைத்தும் தமிழகத்தில் வெளியிடப்பட்டவை என்று கூறுவதிலும் சில வேறுபாடுகள் இருப்பதைக் கவனம்கொள்ள வேண்டும். குறிப்பாக இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்களின் உலோகங்கள், அளவு, வடிவமைப்பு, சில சின்னங்கள் சங்ககாலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காணப்படாது, இங்கு கிடைத்த நாணயங்களில் காணப்படுவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சங்ககால நாணயங்களில் பல சின்னங்கள், குறியீடுகள் காணப்படுகின்றன. அவ்வாறான சின்னங்கள், அங்கு உள்ளவாறு அப்படியே இலங்கையில் கிடைத்த நாணயங்களில் காணப்படவில்லை. பாண்டியர் கால நாணயங்களாக இருந்தாலென்ன, சோழர் கால நாணயங்களாக இருந்தாலென்ன, அவற்றின் அளவிலும் வடிவமைப்பிலும் நிறையிலும் இருந்து வேறுபட்ட சில நாணயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த நாணயங்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்து வந்தவையா அல்லது சங்ககால மரபைப் பின்பற்றி இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களா என்பது ஆய்வுக்குரியதாகும். அந்த ஆய்வுக்குரியவையாக 4 நாணயங்களை இங்கு எடுத்து நோக்கலாம்.

சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த மேலும் சில நாணயங்கள் பூநகரிப் பிராந்தியத்தில் கிடைத்துள்ளன. இவற்றுள் சில தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக மையமான கரூரில் அரிதாகவும், இலங்கையில் பரவலாகவும் கிடைத்துள்ளன. இவற்றுள் நான்கு வகை நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வகை நாணயங்கள் இதுவரை தமிழகத்தில் கிடைத்ததற்கு ஆதாரம் இல்லை.1 இவற்றில் இடம் பெற்றுள்ள சின்னங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அடிப்படை வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவை வருமாறு:

நாணயம்: 5

இடம் :  பள்ளிகுடா, செப்பு நாணயம், நீளம் – 1.5 செ.மீ, அகலம் – 1.3 செ.மீ, எடை – 2.3 கிராம்.

முன்புறம் : கவிழ்ந்த பிறைவடிவுள்ள ஐந்து தூண்கள் தாங்கி நிற்கும் கூரைக்கோயில்.

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயம் : 6 

இடம் : வீரபாண்டியன் முனை, செப்பு நாணயம், நீளம் – 1.6 செ.மீ, அகலம் – 1.4 செ.மீ, எடை – 2.0 கிராம்.

முன்புறம் : ஸ்ரீவத்ஸம்.

பின்புறம் : மீன் குறியீட்டுச் சின்னம்.

நாணயம் : 7 

இடம் : ஈழவூர், செப்பு வட்ட நாணயம், குறுக்களவு – 7.9 செ.மீ, எடை 2.6 கிராம்.

முன்புறம் : குதிரை வலப்புறம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் மேல் அரைவட்டம்; குதிரையின் முகத்திற்கு நேரே தூண் ஒன்றும், அதன்மேல் தொட்டி போன்ற உருவமும் உள்ளது. குதிரையின் வாற் பகுதிக்குச் சமாந்தரமாக மரக்கிளை ஒன்று.

பின்புறம் : யானை வலப்புறம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் வாற் பகுதியில் இருந்து தும்பிக்கை வரை இரட்டைக்கோடு செல்கிறது.

நாணயம் : 8

இடம் : வீரபாண்டியன் முனை, செப்பு நாணயம், நீளம் – 1.6 செ.மீ, அகலம் – 1.3 செ.மீ, எடை – 2.3 கிராம்.

முன்புறம் : இடப்புறம் நோக்கிய காளை, முகத்திற்குக் கீழே கும்பம்.

பின்புறம் : நான்கு புள்ளிகள், அதைச்சுற்றி வட்டம்; வட்டத்திற்கு வெளியே இரு சதுரக் கோடுகள், அவற்றின் நடுவே புள்ளிகள்.

5 ஆம், 6 ஆம் நாணயங்களின் பின்புறத்தில் உள்ள மீன் குறியீட்டுச்சின்னம் பாண்டிய வம்சத் தொடர்பைக் காட்டுகிறது. ஆனால் முன்புறத்தில் உள்ள கூரைக்கோயில், ஸ்ரீவத்ஸம் என்பன சங்ககால நாணயங்களில் பிற சின்னங்களுடன் இணைந்தே வருகின்றன. எந்த ஒரு நாணயத்திலும் இவை தனியொரு சின்னமாக இடம் பெற்றதற்குத் தமிழ்நாட்டில் ஆதாரம் காணப்படவில்லை.2 இதில் இடம்பெற்றுள்ள தாய்த் தெய்வ வழிபாட்டின் பழைய வடிவமான ஸ்ரீவத்ஸம், தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பண்பாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட உருவமாகவும் (சுப்பிரமணியன் 1996 : 109 – 112), இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் குறியீட்டுச் சின்னமாகவும் பெறப்பட்டுள்ளது (Paranavitana 1970 : No. 268). இதன் இன்னொரு வடிவம் தான் இலங்கையில் வெளியிடப்பட்ட லட்சுமி நாணயம் எனக் கொள்ளலாம். 7வது நாணயத்தின் முன்புறத்தில் குதிரையும், பின்புறத்தில் யானையும் முக்கியச் சின்னங்களாக இடம்பெற்றுள்ளன. இங்கு குதிரையும், வாற் பகுதிக்கு சமாந்தரமாகச் செல்லும் மரக்கிளையும் குதிரையின் முகத்திற்கு முன்னால் உள்ள தொட்டியும், தூணும் மலையமான் மன்னர் வெளியிட்ட நாணயங்களில் அப்படியே வருகின்றன (Krishnamurthy 1997). ஆனால் பின்புறத்தில் யானைக்குப் பதிலாக அவர்களின் குலக்குறியான ஆற்றுச் சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்த வேறுபாடு பூநகரியில் கிடைத்த நாணயம் தனித்துவம் வாய்ந்ததாகக் கருத இடமளிக்கிறது.

எட்டாவது நாணயத்தின் முன்பக்கத்தில் காளை உருவம் முக்கியச் சின்னமாக இடம் பெற்றுள்ளது. சங்ககால முத்திரை நாணயங்களிலும், சோழர், பாண்டியர் கால வார்ப்பு நாணயங்களிலும் இவ்வுருவம் பிற சின்னங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அண்மையில் அழகன்குள அகழ்வாய்வில் கிடைத்த சதுரமான செப்பு நாணயத்தில் பூநகரியில் கிடைத்த நாணயத்தைப் போல் காளையுருவம் முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது (காசிநாதன்: 1995 21). ஆனால் பின்பக்கத்தில் பாண்டியரின் மீன் குறியீட்டுச் சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்த அம்சம் பூநகரியில் கிடைத்த நாணயத்தில் இருந்து வேறுபடுகிறது. இலங்கையில் காளையுருவம் பொறித்த சதுர நாணயம் வேறுசில இடங்களிலும் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள காளையுருவம் பல்லவ நாணயங்களிலும் காணப்படுவதால், பல்லவத் தொடர்பால் இவை இலங்கை வந்திருக்கலாம் என்ற கருத்துண்டு (சிற்றம்பலம் 1993 : 501) இக்கருத்து பொருத்தமாகத் தெரியவில்லை. இதுவரை தமிழகத்தில் கிடைத்த பெரும்பாலான பல்லவ நாணயங்கள் வட்டவடிவில் உள்ளன. சதுரவடிவில் நாணயங்களில் வெளியிட்ட மரபு சங்க காலத்திற்கு உரியது. பல்லவ மன்னர் வெளியிட்ட நாணயத்தின் முன்புறத்தில் காளை உருவத்தோடு பகாபிடுகு, ஸ்ரீநிதி, வபு, ஸ்ரீபரமே, சங்கீத, பூழி, ஸிகோக் போன்ற மன்னர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நாணயத்தின் பின்புறத்தில் சங்கு, சக்கரம், கூட்டல்குறி, நண்டு, கப்பல், மீன், விளக்கு, சைத்தியம் போன்ற உருவங்கள் இடம் பெற்றுள்ளன (காசிநாதன் 1999 : 52-8). ஆனால் பூநகரியில் கிடைத்த 8வது நாணயத்தின் பின்புறத்தில் நான்கு புள்ளிகளைச் சுற்றி ஒரு வட்டமும், வட்டத்திற்கு வெளியே இரு நேர் கோடுகளாலான சதுரமும் காணப்படுகின்றன. இவ்வகை நாணயம் தமிழகத்தில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையில் சிங்க உருவம் பொறித்த நாணயத்தின் பின்பக்கத்தில் இச்சின்னங்கள் காணப்படுகின்றன (Codrington 1924 : 24). இவற்றை நோக்கும் போது நாணயத்தின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்கு புள்ளிகளும், அதைச் சுற்றிய வட்டமும், வட்டத்திற்கு வெளியே வரும் சதுரமும் இலங்கைக்கே உரிய மரபெனக் கூறலாம்.

சங்ககாலத்தில் இலங்கைத் தமிழ் மன்னர் வெளியிட்ட நாணயங்கள்

பூநகரியில் கிடைத்த நான்கு நாணயங்களும் மூவேந்தரும், குறுநில மன்னரும் வெளியிட்ட நாணயங்களில் இருந்து வேறுபட்டாலும், அவை சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வகை நாணயங்கள் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பாகங்களிலும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இவை இலங்கையில் வெளியிடப்பட்டவை எனக் கூற இடமுண்டு. இலங்கை, இந்தியப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தாலும் பண்பாட்டில் சுதேச அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. அவை நாணயங்களிலும் இருந்துள்ளன. இலங்கையில் பயன்படுத்தப்பட்ட காலத்தால் முற்பட்ட நாணயங்கள் பாளி இலக்கியங்களில் ‘ஹக பாணஸ்’ எனவும் (M.V. XXI : 11.3), பிராமிக் கல்வெட்டுகளில் ‘ஹகவண்’ எனவும் கூறப்பட்டுள்ளன (Paranavitana 1970 : No. 791). இவ்வகை நாணயங்கள் இலங்கையில் புராதன நகரங்கள், வர்த்தக மையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்நாணயங்களில் இடம்பெற்றுள்ள பௌத்தமதம், சிங்கள அரசவம்சம் தொடர்பான சின்னங்களைக் கொண்டு, சில நாணயங்களைக் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வசபன், கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் மகாசேனன் போன்ற மன்னர்களால் வெளியிடப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சில நாணயங்கள் அடையாளம் காணப்படவில்லை. வேறு சில நாணயங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் தமிழகம் மூவேந்தராலும் குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டபோது இலங்கையில் தமிழ் – சிங்கள மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தனர். இதில் இலங்கையின் பலமான மைய அரசான அநுராதபுரத்தை, கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது முதலான 250 ஆண்டு காலத்தை 22 மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இவர்களுள் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்தனர். அதில் சேனன், குத்திகன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்கள் மட்டும் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்தனர். பெளத்த – சிங்கள வரலாற்றை மட்டும் முதன்மைப்படுத்தும் பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாற்றுச் சாதனை பற்றி எதுவுமே கூறப்படவில்லை. இந்நூல்கள் தமிழருக்கு எதிரான இன, மத உணர்வோடு வரலாற்றைக் கூறிச் செல்வதால் அவற்றில் தமிழ் மன்னர்களின் வரலாற்றுப் பணிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் இவர்கள் ஆட்சியில் வெளிநாட்டு வர்த்தகமும் நாணயங்களின் பயன்பாடும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கைலின் முதல் தமிழ் மன்னர்களான சேனன், குத்திகன் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்ததியைச் சேர்ந்தவர்கள் என மகாவம்சம் கூறுகிறது (M.V.XXI : 10 – 3). அநுராதபுரத்தில் கிடைத்த கி.மு. 3, 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டு ஒன்று ‘சுள கணேய’ (சோழ) என்பவன் வர்த்தகத்தை மேற்பார்வை செய்பவன் எனக் கூறுகிறது (Paranavitana 1970 : No. 1128). எல்லாளன் பௌத்த சைத்தியத்திற்கு தன்னால் ஏற்பட்ட பழுதை நிவர்த்தி செய்ய 15,000 நாணயங்களை (ஹகபாணஸ்) கொடுத்தான் என மகாவம்சம் கூறுகிறது (M.V. XXI. 11 – 3). இவை அனைத்தும் தமிழ் மன்னர் ஆட்சியில் வெளிநாட்டு வர்த்தகமும், நாணயத்தின் பயன்பாடும் இருந்ததற்குச் சான்றாகும். இப்பின்னணியில் பூநகரியில் கிடைத்த நாணயங்களை இலங்கைத் தமிழ் மன்னர்கள் வெளியிட்டதாகக் கருத சில காரணங்கள் உண்டு.

5, 6 ஆம் நாணயங்களில் காணப்படும் மீன் குறியீட்டுச் சின்னம் பாண்டிய வம்சத் தொடர்புடையது. சங்க காலத்தில் பாண்டிய வம்சம் இலங்கை மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நேரடியான சான்றுகள் காணப்படவில்லை. ஆனால் சங்க காலத்திற்கு முன்பிருந்தே பாண்டிய நாட்டுடன் இலங்கைக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. இலங்கையின் முதல் மன்னனான விஜயன் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் மன்னனாக முடிசூடிய போது அவனுக்கு பாண்டிய மன்னன் தன் மகளையும் அவன் தோழர்களுக்கு பாண்டிய நாட்டுப் பெண்களையும், 18 தொழில் புரிந்த 1000 குடும்பங்களையும் அனுப்பி வைத்தான் என மகாவம்சம் கூறுகிறது (M.V.VIII). விஜயன் கதை ஒரு கட்டுக் கதையாக இருந்தாலும் மகாவம்சத்தின் இக்கூற்று பாண்டி நாட்டுடன் இலங்கைக்கு இருந்த தொடர்பைக் காட்டுகிறது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சில மன்னர்கள் பண்டுவாசுதேவன், பண்டுகாபயன் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர் (M.V. VIII). அதில்வரும் பண்டு என்ற முன்னொட்டுச் சொல் பாண்டிய வம்சத்தைக் குறிக்கிறது.

முன்புறத்தில் குதிரையும் பின்புறத்தில் யானை உருவமும் உள்ள 7ஆவது நாணயம் இலங்கைக்கேயுரிய சிறப்பம்சமாகும். இலங்கையில் குதிரை இறக்குமதிப் பொருளாகவும், யானை ஏற்றுமதிப் பொருளாகவும் இருந்துள்ளன. இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் தமிழர் முக்கிய பங்கெடுத்ததற்கு போதிய சான்றுகள் இருப்பதனால் அவ்வர்த்தகத்தில் இறக்குமதிப் பொருட்களாக இருந்த குதிரையையும் ஏற்றுமதிப் பொருளாக இருந்த யானையையும் தமிழ் மன்னர்கள் தாம் வெளியிட்ட நாணயங்களிலும் பயன்படுத்தி இருக்கலாம்.

8 ஆவது நாணயத்தில் இடம்பெற்றுள்ள காளை உருவம் இலங்கைத் தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்த சின்னமாகும். இச்சின்னம் பிற்காலத்தில் தோன்றிய தமிழரசின் கொடிகளிலும், நாணயங்களிலும் அரச சின்னமாக இடம்பெற்றுள்ளது. சோழர் ஆட்சி ஏற்படும் முன்னர் இலங்கையின் பௌத்த தலங்களில் வாசற்படியாக இருந்த சந்திர வட்டக் கல்லில் காளையுருவம் பிற சின்னங்களுடன் கலை வடிவமாகச் செதுக்கப்பட்டிருந்தது. சோழர் காளையைப் புனிதச் சின்னமாகக் கருதியதால் சந்திரவட்டக் கல்லில் இருந்து அதை நீக்கினர். சோழர் ஆட்சியின் பின்னர் சிங்கள மன்னரும் இம்முறையைப் பின்பற்றினர். நாணயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள நான்கு புள்ளிகளைச் சுற்றிய வட்டம், இலங்கை மன்னர்கள் வெளியிட்ட சிங்க உருவம் பொறித்த நாணயங்களில் காணப்படுகிறது. சிங்க உருவம் சிங்கள மன்னர்களின் முக்கிய சின்னமாக இருந்ததைப் பிற்காலச் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் காணமுடிகிறது. ஏறத்தாழ ஒரே காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களில் சிங்கமும், காளையும் வருவதைக் கொண்டு சிங்க உருவ நாணயங்களைச் சிங்கள மன்னரும், காளையுருவம் பொறித்த நாணயத்தைத் தமிழ் மன்னரும் வெளியிட்டனர் எனக் கூறலாம்.

முடிவுரை

மேற்கூறப்பட்ட நாணயங்களில் இருந்து இலங்கையில் சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களும், இலங்கை மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களும் புழகத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வரலாம். இலங்கை மன்னர்கள் நாணயங்களை வெளியிடுவதற்கு சங்ககால நாணய அச்சடிப்பு முறை முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை தமிழ்நாட்டிலிருந்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ் மன்னர்கள் வெளியிட்டார்களா? அல்லது இலங்கைத் தமிழ் மன்னர்கள் வெளியிட்டார்களா? என்பதை மேலும் ஆராய இடமுண்டு. ஆனால் இவை இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்கள் எனக் கூறுவது பெருமளவு பொருத்தமாகத் தெரிகிறது.

அடிக்குறிப்புகள்

  1. சங்ககால நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துவரும் இரா. கிருஷ்ணமூர்த்தி, ஆ. சீதாராமன் ஆகியோர் உரையாடலின் போது கூறிய கருத்து.
  2. மேற்கூறப்பட்ட இருவரும் கூறிய கருத்து.

உசாத்துணை

  1. Codrington, H.W. Ceylon Coins and Currency Memories of the Colombo Museum (Colombo – 1324)
  2. Geiger, W. Eng. Tr Mahavamsa (M.V.), London 1973.
  3. Krishnamorthy, R. Sangam Age Tamil Coins, (Madras, 1997).
  4. Mendis, G.C. “A Comprehensive History of India” Vol. II (Ed.) Nilakanta Sastri, K.A., (1957).
  5. Paranavitana, S. “Anuradhapura: Slab – inscription of Khuda – Parinda’ E.Z. Vol. IV P.P. 111-115.
  6. Paranavitana, S. Brahmi Inscriptions of Ceylon (Colombo, 1970)
  7. Shanmugam, P. “Two Coins of the Tamil origin from Thailand” Studies in South Indian Coins Vol. IV, (Ed.) Narasimhamurthy, 1999: 95-100.
  8. Sitrampalam, S.K. “The Title Parumaka found in Sri Lankan Brahmi Inscriptions – A Reappraisal” “Sri Lankan Journal of South Asian Studies”. Vol 1 (New Series) (Jaffna 1986/87), PP 13-25.
  9. காசிநாதன், நடன. தமிழர் காசு இயல், சென்னை 1995.
  10. சிற்றம்பலம், சி.க. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, திருநெல்வேலி, 1993. சீதாராமன், ஆறுமுக. தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள், தொகுதி – 1, தஞ்சாவூர் 1996.
  11. சுப்பிரமணியன் தி. “தாய்த் தெய்வ வழிபாட்டில் ஸ்ரீவத்சம்” ஆவணம், இதழ் 7, சூலை 1996, தஞ்சாவூர்.
  12. புஷ்பரட்ணம், ப. பூநகரி – தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணம், 1993.


About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்