மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; ஆள்புலம் ஒன்றின் மன்னர் மணிமுடி சூடியவராக ஆதிக்க மனோபாவத்தை வளர்த்தெடுக்க இயலாதவர் – சொந்த மக்களைப் பிரிந்து மேலாண்மை செலுத்தாதது மட்டுமன்றி மக்களில் ஒருவராக கூடிக்குலாவித் தலைமைப் பாத்திரத்தை வகித்து, கூட்டாக உழைப்பில் ஈடுபட்டுக் கிடைத்தவற்றைப் பகுத்துண்டு வாழும் வாழ்வியலை நெறிப்படுத்துபவராக திணைகளின் அரசர் இருந்தார். திணை வாழ்முறைக்குரிய மக்களிடையே ஏற்றத்தாழ்வு பேதங்கள் ஏற்படவில்லை; ஆண் – பெண் வேலைப் பிரிவினை வலுத்து வந்தபோதிலும் உடன்போக்கில் தனக்கான வாழ்வைத் தேடும் பெண் மீது ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் வலுப்பட்டுவிடவில்லை. அந்தவகையில் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படுகிற பெரும்பான்மையினர் மீது அபகரிப்பாளர்களான சிறுபான்மையினரின் பொருட்டு அதிகாரம் செலுத்தும் கருவியாக திணைகளின் அரசு செயற்படவில்லை. நீண்ட காலத்துக்குரிய அந்த மன்னர் ஆட்சி அரை-அரசு வடிவம் கொண்டது!
பின்னரான மூன்று நூற்றாண்டுகளுக்கு (கி. மு 3 தொடக்கம் கி. பி 1ஆம் நூற்றாண்டுகள் வரை) மருதத்திணை மேலாதிக்கத்தின் வாயிலாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் மீது அதிகாரம் செலுத்திச் சுரண்டலை மேற்கொள்ளும் கிழார்களின் சார்பாக ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் (முழுமைப் பொருளிலான அரசுக்குரிய) அவசியத்துடன் தோற்றம்பெற்ற ‘முடிமன்னர்கள்’ வேறுவகைப்பட்டவர்கள்; மணிமுடி சூடிக்கொண்ட அந்த ‘வேந்தர்கள்’ புதிய ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமைக்கானவர்கள். மூவேந்தர்களது ஆட்சியின் கீழ் தமிழகத்தின் பெரும்பகுதி கொண்டுவரப்பட்டு மூன்று பேரரசுகள் ஏற்பட்டுவிட்ட பின்னரும் குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் இருந்தன; முன்னர் திணைகளின் அரசுகள் சமத்துவக் கொள்வினை கொடுப்பினையுடன் இருந்தது போலன்றி பேரரசுகளுக்குத் திறை செலுத்தி வாழ்பவர்களாக இந்தக் குறுநில மன்னர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்தாக வேண்டியிருந்தது.
அடுத்துள்ள மூன்று நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட (கி. பி 2 தொடக்கம் 5ஆம் நூற்றாண்டுகள் வரையான) காலப்பரப்பில் மூன்று பேரரசுகளின் ஆள்புல எல்லைகள் தகர்ந்துபோயின. பல நூறு சிற்றரசுகளாகச் சிதறிய ஆட்சிகள் களப்பிரர் எனப்படுகின்ற, வெளியே இருந்து வந்த மன்னர்களது அதிகாரங்களுக்கு ஆட்பட்டன. ஆதிக்கச் சாதியாக வடிவமைக்க ஏற்றதாக மேலாதிக்கத்தை வென்றெடுத்திருந்த கிழார்கள் தமது ஆட்சியதிகாரத்தை இழந்தனர்; வணிகப் பிரிவினர் சமூக மேலாதிக்கத்தைப் பெற்றனர். நிலம் சார்ந்த – வள வழிபாட்டுப் பண்பாட்டின் நீடிப்பான கடவுளரைப் போற்றும் கிழார்களுக்கான கருத்தியல் உருவாகத் தொடங்கி மேலாதிக்கம்பெற்று வளர்ச்சியை எட்டிவந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு இடையிலேயே ஒரு முறிவு இவ்வகையில் ஏற்பட்டது; மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வளமுடன் இருந்த வணிகச் சார்பான கருத்தியல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி. பி 2 – 5ஆம் நூற்றாண்டுகளில்) ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமையின் மேலாதிக்கவாத நிலைப்பட்ட ‘வணிகச் சாதிக்கான’ கருத்தியலாகப் பரிணமிப்பைப் பெறும் வரலாறு தொடர்ந்தது.
மேலாதிக்கத் திணைகளின் மதங்கள்
ஏற்றத்தாழ்வுச் சமூக அமைப்பாக்கம் ஏற்பட்ட பின்னர் ஆதிக்கம் பெற்ற சமூக சக்தியின் கருத்தியலை முழுச் சமூகமும் ஏற்று ஒழுகும்படியான படைப்புகள் வெளிப்பட்டு வந்துள்ளன; முன்னதாக, மேலாதிக்கம்பெற்ற கிழார்கள் தமக்கான கடவுளர்களை (முருகன், கொற்றவை, திருமால், வேந்தன், வருணன் போன்றோரை) முன்னிலைப்படுத்தத் தொடங்கிய போது அதிகாரத்தை இழந்தனர். பின்னர் மேலாதிக்கம் பெற்று வந்த வணிகச் சமூகத்தவரது மேலாண்மைக்குரிய கருத்தியல்களாக பௌத்தமும் சமணமும் தமிழினூடாகத் தமது கோட்பாட்டைத் தாங்கிய படைப்புகளை வெளிப்படுத்தின.
சமத்துவ நிலையுடன் திணைகள் இயங்கிய காலத்துக்குரியதாக கி. மு 6 ஆம் நூற்றாண்டு முதல் தோற்றம்பெற்று வளர்ந்து வந்த ஆசீவகம் ஏற்றத்தாழ்வான சமூக வேறுபாடுகளை நிராகரித்த அதேவேளை அதன் கருத்தியல் வணிகச் சார்பானதாக விளங்கியது. (கைத்தொழில் பேட்டைகளுக்கான தொழில் நுட்பத்திறன் வெளிப்பாட்டின் விஞ்ஞானப் பார்வை வீச்சு இணைந்ததாகவும் இருந்தது) அந்த ஆசீவகத்துக்கு என்ன நேர்ந்தது? கி. மு 3 முதல் கி. பி 1ஆம் நூற்றாண்டு வரை இயங்கிவந்த நில உடைமையாளரான கிழார்களது கருத்தியலைத் தாங்கிய இலக்கியம் , கி. பி 2ஆம் நூற்றாண்டின் பின்னரான வணிகக் கருத்தியல் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் பௌத்த – சமண இலக்கியங்கள் என்பவற்றுக்கு அப்பால் எந்தவொரு மேலாதிக்கச் சமூக சக்தியையும் சாராத படைப்பு உருவாகி இருக்க இயலாதா?
கிரேக்க – உரோம் வணிகர்கள் பருவக் காற்றுத் திசை மாற்றங்களைச் சாதகமாக்கி இயங்கும் பாய்மரக் கப்பல்களின் உதவியுடன் ஆழக் கடலில் பயணித்துத் தமிழகத்தோடான வணிகத்தை கி. பி 1ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கத் தொடங்கி இருந்தனர்; இந்த வணிக வாய்ப்புடன் மீளெழுச்சி பெற்ற தமிழக வணிகர்களது அபிலாசையின் வெளிப்பாடாகவே கி. பி 2ஆம் நூற்றாண்டில் கிழார்களது மூன்று பேரரசுகளுக்கான வம்ப வேந்தர் ஆட்சி பழங்கதை எனவாகிச் சிற்றரசுகளாகச் சிதறடித்த களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்டது. இந்த மாற்றக் கட்டத்தில் – வணிக எழுச்சி வீறுகொள்ளத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே – விவசாயத் தேவைக்கான கிழார்களையும் மதித்தபடி வணிகத்தின் மேலாதிக்கத்தையன்றி அது முன்னர் வளர்த்து வைத்திருந்த சமத்துவக் கருத்தியலை வெளிப்படுத்தியவாறே ஏற்பட்டு வருகிற வணிகப் பெருக்கத்தையும் உள்வாங்கி, மாறிவரும் சமூக நியதிகளுக்கு ஏற்ற படைப்பாக கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறள் தோற்றம்பெற்ற காலத்திலான உற்பத்தி உறவுகள் பின்னர் எவ்வகை மாற்றங்களைப் பெற்றது? மாற்றம்பெற்ற உற்பத்தி உறவுக்கான கருத்தியலாக ஆசீவகத்தால் பரிணமிக்க இயலாமல் போனது ஏன்? அந்த இடத்தை வடக்கில் இருந்து வந்த பௌத்தமும் சமணமும் எப்படி நிரப்ப இயலுமானது? முழுச் சமூக சக்திகளான கிழார்கள் – வணிக சக்தி என்பவற்றின் மேலாதிக்கங்களை நிராகரிக்கும் படைப்பாகத் திருக்குறள் விளங்குவது எவ்வகையில் சாத்தியப்பட்டது?
‘உலகப் பொது மறை’ எனத் திருக்குறள் போற்றப்படுவதை அறிவோம். பொதுவாகவே தமிழின் தனிச் சிறப்புக்குரிய அம்சங்களால் உத்வேகம்பெற்று தமிழார்வலர்கள் பலர் மிகைப் புனைவுகளில் ஈடுபட்டு ‘முதலுக்கும் சேதாரம்’ ஏற்படுத்திவிடுவதைப் போலவே, திருக்குறள் குறித்தும் ‘சொல்லப்படுவன அனைத்துமே வெறும் புனைவுகள் தாமோ’ என்ற ஐயப்பாடு எழ வழிகோலுகிறவர்களாகக் கருத்துரைக்கின்றனர். மிகச் சரியான ஆதாரங்களுடன் திருக்குறளின் தனித்துவச் சிறப்புகள் பற்றிப் பலர் நூல்கள் பலவற்றை வெளிப்படுத்தியும் உள்ளனர். திருக்குறள் தோற்றம்பெற்ற காலச் சூழலின் விசேடித்த பண்புக் கூறுகளை முழு அளவில் கவனங்கொண்டவர்களாக அதனை ஆழ்ந்து கற்கும்போது தனித்த தேசத்துக்கோ, இனத்துக்கோ, மொழிக்கோ, மதத்துக்கோ, சமூகக் குழு எதற்குமோ, ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமைக்கோ சார்பற்ற பொது நூலாகத் திருக்குறள் துலங்குவதனையும் அதற்கான சாத்தியப்பாடு எவ்வகையில் கைவரப்பெற்றது என்பதனையும் கண்டறிவோம்.
இத்தனை அம்சங்களில் எந்த ஒன்றிலும் பக்கச் சார்பைக் கொள்ளாத போதிலும் மதச் சார்பு அற்றதாக திருக்குறள் விளங்குவது குறித்து விசேட கவனம் செலுத்துவதற்குக் காரணம் உள்ளது. வர்க்கச் சமூகத்தின் (ஐரோப்பிய நாடுகளின்) இயங்கியலில் வர்க்கப் புரட்சிகள் எனும் அரசியல் செயற்பாட்டின் வாயிலாக சமூக அமைப்பு மாற்றங்கள் நடந்தேறி வந்தன; அங்கே அடிமைச் சமூக முறைமையைத் தகர்த்து நிலவுடைமைச் சமூக அமைப்பு மேலெழுந்த போது புதிய ஆளும் வர்ககத்துக்குப் பொருத்தமுடைய கிறிஸ்தவ மதம் சமூக அங்கீகாரத்தைப் பெற்றது. முதலாளித்துவப் புரட்சியின் பேறாக மூலதன எழுச்சிக்குச் சார்பான புரட்டஸ்தாந்துப் பிரிவு உதயமானது. இங்கே முழுச் சமூக சக்திகள் இடையே அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான மோதல்கள் வாயிலாக சமூக மாற்றம் நிகழ்கிறது; ஆளுகின்ற மேலாதிக்கத் திணையை (கிழார்களை) எதிர்த்துப் போராடும் திணை (வணிக சக்தி) தனக்கான புதிய மதத்தைக் கட்டமைத்து, முன்னர் ஆதிக்கத்தில் இருந்து வரும் சமூக சக்திக்கான மதத்தை (இயற்கை – வள வழிபாட்டுத் தொடர்ச்சியாகப் பரிணமித்து வந்த மதத்தை) வீழ்த்துவதன் மூலமாகவே ஆட்சி அதிகார மாற்றத்தைச் சாத்தியமாக்கும் வகையிலான இயக்கவியல் போக்கு வர்க்கப் பிளவுறாத எமக்கான (திணை மேலாதிக்கம் வாயிலாக ஏற்றத்தாழ்வுச் சமூக அமைப்பைக் கட்டமைத்த) வரலாற்று வளர்ச்சி!
வீர யுகக் காலத்தில் (கி. பி 1ஆம் நூற்றாண்டு வரை) கிழார்களின் மேலாதிக்கம் வலுப்பட்டு வந்தவாறிருக்க ஆளும் சமூக சக்தியான கிழார்களுக்கான திணை தனக்குரிய மதக் கட்டமைப்பை விருத்தி செய்யும் வகையில் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய பிராமணர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தமது நிலங்களைப் பகிர்ந்தளித்துக் கலந்தவாறு ஒன்றிணைந்த கருத்தியல் பரிணமிப்பைப் பெற்றுக்கொண்டனர். பிராமணர்களது வருகை தொடக்கம் பெறுவதற்கு முன்னரே, கி. மு 4ஆம் நூற்றாண்டில் இருந்து பௌத்த, சமணத் துறவிகள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கியிருந்தனர். ஏற்கனவே ஆசீவக மதத்தை ஆதரித்து வந்த தமிழ் வணிகர்கள் அதனோடு அதிகளவு ஒத்த பண்புகளை உடைய இவ்விரு மதங்களையும் தமக்குரியதாக வரித்துக்கண்டனர்; வட இந்தியாவில் வேறொரு வரலாற்றுச் செயலொழுங்குப் பிரகாரம் வளர்ச்சியை வந்தடைந்த இந்த இரு மதங்களும் ஆசீவகத்தினின்றும் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டிருந்த போதிலும் தமிழ் வணிகர்கள் அவற்றை ஆதரித்து ஆசீவகத் துறவிகளுக்குப் போன்று பௌத்த, சமணத் துறவிகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
புதிய பொருளுற்பத்தி உறவுகள்
வணிக மேலாதிக்கம் சாத்தியப்பட்ட கி. பி. 2ஆம் நூற்றாண்டின் பின்னர் ஆசீவகத்துக்கான ஆதரவைக் காட்டிலும் அதிக சலுகைகளைப் பௌத்தமும் சமணமும் பெறத் தொடங்கின. வீர யுகக் காலத்தின் (கி. பி 1ஆம் நூற்றாண்டுக்கு முன்னரான) ஆசீவகப் பாடல்களை எல்லாம் சமண, பௌத்தப் பாடல்கள் என மயங்கும் வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் காப்பியங்களில் இருந்து ஏராளமான படைப்புகளைப் புதிய மதங்கள் தமிழினூடாக வெளிப்படுத்தின. வேறெந்த மொழிப் பிரதேசங்களிலும் பிராகிருத, பாளி மொழிகளூடாகவே தமது மதப் பரப்புரை இலக்கியங்களை மேற்கொண்டவர்கள் தமிழில் ஏற்கனவே ஆசீவகக் கருத்தியலுக்கான பாடல்கள் இருந்த காரணத்தால் தாமும் தமிழுக்கான புதிய படைப்புகளைத் தமிழ் மொழியிலேயே வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சமண, பௌத்தத் துறவிகளுக்கு ஏற்பட்டிருந்தது; அதன் பொருட்டுத் தமிழுக்கான இலக்கணத்தை வடிவப்படுத்திக் கற்க வேண்டியவர்களாக இருந்தனர் (தமிழுக்கான இலக்கணத்தைக் கட்டமைக்கும் தேவையுடன் சமண, பௌத்தத் துறவிகள் இந்தப் பங்களிப்பைச் செய்து வளமூட்டிய காரணத்தாலும் ஆசீவகத்தை மேவிய இடத்தை அவர்களால் பெற இயலுமாயிற்று).
தமிழர்களாக வாழ்ந்தபடி இயல்பாகப் படைப்பாக்கம் செய்து வந்த ஆசீவகர்கள் இலக்கணம் கற்றுப் பாடல்கள் புனையும் அவசியமற்று இயங்கியவர்கள்; சமூகத்தில் மேலாதிக்கச் சக்திகள் ‘இயல்பென’ ஆகிவிட்ட பின்னர் இலக்கியத்தின் மீது இலக்கணம் மேலாதிக்கம் பெற்றுவிட்டது. வணிக மேலாதிக்கம் ஏற்பட்ட அறநெறிக் காலத்தின் (கி. பி 2 – 6ஆம் நூற்றாண்டுகள்) வரலாற்றுச் சூழலில், முன்னதாக ஆளுமையுடன் செயலாற்றிய ஆசீவகச் சிந்தனையாளர்களால் புதிய வணிகச் சார்பு மதங்களை மேவி இயங்க இயலாமல் போன நெருக்கடியை இந்தப் பின்னணி வாயிலாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். ஆசீவகத்தின் கருத்தியல் தளம், சமத்துவப் பரிமாற்றங்களில் ஈடுபட்ட வணிகச் சமூகத்துக்கானது; நிலவுடைமை பெற்ற பிராமண மேலாதிக்கத்தைத் தகர்த்து வணிகச் சமூக மேலாதிக்கம் சாத்தியப்பட்ட வரலாற்றுச் சூழலின் அவசியத்துடன் கி. மு 6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எழுச்சிபெற்றன, மேலாதிக்க வணிகக் கருத்தியல் தளத்துக்கு உரியவைகளான சமணமும் பௌத்தமும். அவை கி. பி 2ஆம் நூற்றாண்டின் பின்னர் சமூக மேலாதிக்கத்தைப் பெற்று ஆதிக்க சக்தியாகிவிட்ட தமிழ் வணிகர்களுக்கு ஆசீவகத்தைக் காட்டிலும் கூடுதல் பொருத்தப்பாடுடையதாக அமைந்திருந்தன.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என வணிகச் சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்திய கணியன் பூங்குன்றனாரது பாடலின் இறுதி அடிகள் இங்கு கவனிப்புக்கு உரியது; “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற அந்த வரிகள் நகர நாகரிகத்தை எட்டிய முன்-வீரயுக காலத்துக்கு உரிய ஆசீவகச் சிந்தனையை வெளிப்படுத்துவது. நகரப் பண்பாட்டை எட்டிப் ‘பெரியோர்’ என ஆகிவிட்ட வணிகச் சீமான்களுங்கூட அப்போது குறிஞ்சி, முல்லை, நெய்தல் திணைகளாகப் பரந்துகிடந்த மலை, காடு, கடல் என்பவற்றினூடே பயணப்பட்ட உழைப்பாளர் தாம். நகரின் கைத்தொழில் நுட்பத் திறன் வாய்ந்தோரிலும் மேலானவர்களாக வணிகர்கள் மேலாண்மை பெற்றுவிடவில்லை. இவர்களுக்கான வணிகப் பொருட்களை வழங்கும் திணைவாழ் உழைப்பாளர்கள் ‘சிறியோர்’ எனப் புறக்கணிக்கத் தக்கவர்களுமல்ல. அந்த வணிகர்கள், திணைவாழ் உழைப்பாளர்களது இரத்த உறவுகள்; இரு தரப்பாரிடையேயும் ஒரே இனமரபுக் குழுப் பந்தங்கள் நீடித்திருந்தன.
ஆசீவகம் எழுச்சியுடன் தோன்றி வளர்ந்த முன்-வீரயுக காலத்தில் வணிகர் – இயற்கை விளைபொருட்களை வணிகப் பண்டமாக்கி வழங்கும் திணைவாழ் உழைப்பாளர் – கைத்தொழில் நுட்ப வல்லுநர்கள் எனும் வேறுபடும் தொழிற்படைகள் தோன்றியிருந்த போதிலும் அவற்றினிடையே சமத்துவ உணர்வுடனான கொள்வினை , கொடுப்பினைகளே நிலவின; சமூகப் படையாக்கப் பேதங்கள் வாழ்வியலிலும் உணர்விலும் கருத்திலும் தோற்றம்பெற்று வலுப்பட்டிருக்கவில்லை.
மருதத் திணை மேலாதிக்கம் ஏற்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து அதன் வெற்றியாளர்கள் இடையே கிழார்கள் எனும் நிலவுரிமை பெற்றோர் தோற்றம் பெற்றனர். வெற்றிபெற்ற திணையின் ஏனைய மக்கள் பிரிவும் வேந்துக்குரிய ஆள்புலத்தில் ஆதிக்க உரிமைக்குரிய சமூக சக்தியாக விளங்கினர். அதேவேளை, முன்னதாக மன்னருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுப் பேதம் ஏதுமில்லை என்றிருந்த நிலை மாறி முடி வேந்தர்கள் சொந்த மக்களையும் பிரிந்து அரண்களை அமைத்தவர்களாக மூடுண்ட கோட்டைக்குள் கொலுவிருப்பவர்களாயினர் – அது சமூகத் தளத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுப் படையாக்கப் பேதங்களின் பேறு. சமூக சக்திகள் இடையேயான சமத்துவம் தகர்ந்து சுரண்டலுக்கு அமைவான பொருளுற்பத்தி உறவு இவ்வகையில் ஏற்படலாயிற்று!
மேலாதிக்க நிராகரிப்புப் படைப்பு
வெற்றிபெற்ற மருதத் திணைக்கான இன மரபுக்குழுவுக்கு உரியோர் அனைவரும் நிலச் சொந்தக்காரர்களல்ல என்றபோதிலும் இரத்த உறவுடைய ‘ஆளும் சமூக சக்தி’ என ஒருமுகப்பட்டவர்கள்; அவர்களை ஒட்டுமொத்தமாக ‘ஆதிக்கச் சாதி’ (வெள்ளாளர்கள்) என ஆக்குவதற்கு உரிய கருத்தியலை வழங்க ஏற்றதாக, அதற்குரிய பிராமண மதத்துடன் வடக்கிலிருந்து வந்தவர்கள் நிலம் வழங்கிக் குடியமர்த்தப்பட்டனர்.
இத்தகைய சாதியக் கருத்தியல் மேலெழுந்தபோது வணிகர்கள் ‘செட்டிச் சாதி’ என மடைமாற்றம் பெற்றனர். நிலக்கிழார்களைக் கொண்டுள்ள மேலாதிக்கம்பெற்ற சமூகசக்தியைக் கடவுள் அனுக்கிரகம் பெற்ற மேலான ‘புனிதச் சாதி’ எனக்காட்டவல்ல பிராமண மதத்தை வட இந்தியாவில் கி. மு 6ஆம் நூற்றாண்டில் இருந்து வீழ்ச்சியடையச் செய்து வந்த பௌத்தமும் சமணமும் ‘உயிர்க் கொலை புரியாத வைசியர்களான’ வணிகர்களே புனிதத் தொழில் புரிவோரென ஆதிக்க சாதி மனோபாவங்கொள்ள ஆற்றுப்படுத்தின. இத்தகைய சாதியக் கருத்தியல்கள் தமிழகத்தில் பரவத்தொடங்கின.
வென்றடக்கப்பட்ட திணைகளின் கைத்தொழில் வல்லுநர்களும் உழைக்கும் ஏனைய பிரிவு மக்களும் இடைச் சாதிகளாக்கப்பட்டதோடு, காலவோட்டத்தில் தீண்டாமைக்குரிய சாதிகள் வந்தமையும் வரலாறு தொடர்ந்தது. சாதியத்துக்கான கருத்தியலை வடிவப்படுத்தியதில் பிராமணியத்துக்கு முதல்நிலை வகிபாகம் உள்ளது; பிராமண மேலாதிக்கத்தை அவைதிக மதங்களான பௌத்தமும் சமணமும் எதிர்த்தபோதிலும் வணிக மேலாதிக்கத்துக்கு அமைவான சாதியக் கருத்தியலை இந்த மதங்களும் வெளிப்படுத்தி வந்தன. உழைக்கும் மக்கள் பிரிவினர் சாதிகளாகச் சமூகப் படையாக்கப் பிளவுக்காளாகிச் சுரண்டலுக்கு ஆட்படுகிற புதிய வகைப் பொருளுற்பத்தி உறவு வாலாயமாவதில் வைதிக – அவைதிக மதப்பிரிவினர் அனைவரது பங்கேற்பும் இடம்பெற்றுள்ளது!
பிராமணக் கருத்தியலால் (வைதிக நெறியில்) இயக்கப்படும் விவசாய சக்தி – பிராமணிய மறுப்புடன் அவைதிக மத (பௌத்தமும் சமணமும்) மேலாண்மையில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகிற வணிக சக்தி எனும் இருமுனைப்பட்ட மோதல்கள் வாயிலாகவே எமக்கான வரலாற்று இயக்கம் நடந்தேறி வந்துள்ளது. உழைப்பாளர் – வள அபகரிப்பாளர் (சுரண்டுவோர்) என்ற பேதம் வலுப்பட்டதைத் தொடர்ந்து நில உடைமையாளரா வணிக சக்தியா ஆளும் தரப்பு என்ற மோதல் வலுப்பட்டது; அந்த இரு தரப்பாரை ஆதரிப்பனவாகிய வைதிக – அவைதிக மதப் பிரிவுகளில் ஏதாவதொன்றை முன்னிறுத்திய வண்ணமாகவே பின்னரான படைப்புகள் வெளிப்பட்டன.
இரு தரப்பில் எந்தவொன்றையும் ஆதரிப்பதாக இல்லாததுடன் உழைப்பைப் போற்றுவதாக அமைந்த படைப்பொன்று வெளிப்பட ஏற்ற காலப் பின்னணி ஒன்று அமைந்த சூழலில் திருக்குறள் தோற்றம்பெற்றது. கிழார்களை விடவும் செல்வச் செழிப்பில் மேலோங்கிச் சமூக மேலாண்மையை வணிக சக்தி வெற்றிகொண்ட போது கிழார்களுக்கான பேரரசுகளைத் தகர்க்கும் அவசியம் ஏற்பட்டது. வணிகருக்கானதாகப் பாரம்பரியமாக இருந்துவந்த ஆசீவக மதத்துடன் கன்னட, ஆந்திரப் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றவாறு இருந்த மேலாதிக்கவாதக் கருத்தியலுக்குரிய சமணமும் பௌத்தமும் தமிழ் வணிகச் சமூக ஆதரவுடன் வலுப்பெற ஆரம்பித்தன; கிழார்கள் பிராமணர்களுடன் இணைந்து உருவான கூட்டு மதம் செல்வாக்கு இழந்து வரும் சூழலுடன் அவர்களுக்கான பேரரசுகளைத் தகர்க்கும் நூற்றுக்கணக்கான களப்பிர ஆட்சியாளர்கள் சமண, பௌத்தக் கொடிகளுடன் தமிழகத்தின் மூன்று பேரரசுகளைத் துண்டாடி பலநூறு அரசுகளாக ஆட்சி செலுத்தத் தொடங்கினர். மேலாதிக்கங்களை ஏற்க மறுக்கும் ஆசீவகத்தை வரித்துக்கொண்ட திருக்குறள் எந்தச் சமூக சக்தியையும் ஆதரித்தாக வேண்டிய நிர்ப்பந்தமற்ற வகையில் கிழார்கள் முழு அளவில் கீழ்நிலை அடையவும் இல்லை, வணிக சக்தி நிலைபேறான மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் கால அவகாசம் முழு அளவில் பெற்றிருக்கவும் இல்லை!
முன்னரான ஆசீவகத்தில் ஏற்கனவே வெளிப்பட்டது போலவே மேலாதிக்கத்தை நாடாத வகையிலான செயலொழுங்குடன் பொருள் தேடலை வலியுறுத்திய அதேவேளை ‘ஏரின் பின்னது உலகம்’ என்ற நிதர்சனத்தையும் எடுத்துரைக்கும் பண்பை ஆசீவகச் சிந்தனைக்குரிய திருக்குறளில் காண இயலும். எந்தவொரு உழைப்புப் பிரிவையும் மிக உயர்ந்தது (புனிதமானது) என்றோ கீழான தீட்டுக்குரியதென்றோ வகைப்படுத்தாமல் உழைத்துண்டு வாழும் அவசியத்தை எடுத்துரைப்பதாகத் திருக்குறள் அமைந்திருப்பதைக் காண இயலும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதோடு, செய்யும் தொழிலை வைத்துப் பேதம் கற்பித்தல் ஏற்கவியலாதவொன்று என்பதனை வலியுறுத்தும் படைப்புத் திருக்குறள்! (வைதிகநெறி விவசாயத்தைச் சார்ந்திருக்கும் அதேவேளை உழைப்பைக் கீழானதாகக் கருதும் பிராமணரைப் புனிதப்படுத்துவது போலவே உடலுழைப்பில் ஈடுபடாத வணிகரை அவைதிக மதங்கள் புனிதப்படுத்துவதனை மனங்கொள்வது அவசியம்).
முற்றுமுழுதாக ஆசீவகத்தை அப்படியே பரப்புரை செய்வதாகவும் திருக்குறளின் படைப்பாக்கம் அமையப்பெறவில்லை. காலமாற்றத்துடன் எழுந்த வாழ்வியல் அம்சங்களை ஏற்றாக வேண்டியிருந்த இடங்களில் பிராமண – பௌத்த – சமண மதங்களினதும் சாங்கியம், வைசேடிகம் போன்ற பல்வேறு தரிசனங்களது கருத்துகளையும் திருக்குறள் எடுத்தாண்டுள்ளது. அந்தக்காரணத்தால், ஆசீவக நூலென மட்டுப்படாமல் மதச்சார்பற்ற படைப்பென ஆகி அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களாலும் தத்தமக்கான நூலெனப் போற்றப்படும் பேற்றைப்பெற்றது; மட்டுமல்லாமல், மக்களைப் பிரிந்த முடி வேந்தர்கள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து வலுப்பட்டு வந்த கடவுள் கோட்பாடுகளை ஏற்க மறுத்து (அதிக விஞ்ஞான நோக்குகளைக் கொண்டதாக) விளங்கியதோடு ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகளுக்கு மாறவியலாத கட்டிறுக்கத்துடன் ஆசீவகம் இயங்கிய காரணத்தால் காணாமல் போனது போலவன்றி திருக்குறள் நீடிக்க இயலுமானதற்கு அவசியப்பட்ட சில மாற்றங்களை ஏற்றிருந்தமை காரணமாக அமைந்தது. அதன்பேறாக, சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க என முற்படும் வரலாறு படைப்போர்க்கு உதவும் வலிய பண்பாட்டு ஆயுதமாகத் திருக்குறள் இன்று கிடைத்துள்ளது!
திருக்குறள் ஆசீவகச் சிந்தனையின் பாற்பட்டது என்பதற்கான பலமான அடித்தளமாக அமைவது ஊழ் எனும் அதிகாரம். மேலாதிக்க நிராகரிப்புக்கு உரிய ஆசீவகத்தின் ஊழ் என்பது ஏனைய சிந்தனைப் பள்ளிகளின் கன்மக் கோட்பாட்டில் இருந்தும் வேறுபட்டது. அது குறித்த தேடலில் தொடர்ந்து பயணிப்போம்!
தொடரும்.