தமிழில் : த. சிவதாசன்
மூலம் : marumoli.com, January 22, 2025.
2021 இல் நான் திரு டேவிட் பீரிஸை முதன் முதலாகச் சந்தித்தேன். தொழில் விடயமாக வடக்கிற்கு வந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டில் நாம் சந்தித்தோம். டேவிட் பீரிஸ் மோட்டர் கொம்பனி (David Pieris Motor Company – DPMC), போர்க்காலமுட்பட, பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வியாபார முயற்சிகளுக்கும் அப்பால் வடக்கில் தனது நிறுவனம் உத்தேசித்திருக்கும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி டேவிட் உரையாடினார்.

இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டறை (engineering workshop) ஒன்றை அப்போதுதான் அவர் ஆரம்பித்திருந்தார். வடமாகாணம் முழுவதும் ஓடித் திரியும் முச்சக்கர வண்டிகளைப் பழுது பார்ப்பதற்கு உதவும் வகையில் எமது இளையோரை மோட்டர் மெக்கானிக்குகளாக DPMC பயிற்றுவித்தது. இலங்கை முழுவதிலும் 1 மில்லியனுக்கும் மேலான முச்சக்கர வண்டிகள் பாவனையில் உள்ளன. இப்பயிற்சிகளைக் கற்றுக்கொண்ட இளையோர் பின்னர் சுயமாகவே தமது சொந்த ஆட்டோ மெக்கானிக் தொழில்களை ஆரம்பிக்கலாம்.
பாஜாஜ் (Bajaj) முச்சக்கர வண்டிகளுக்கான இலங்கை ஏஜெண்ட் DPMC. இலங்கையில் ஓடும் 90% மான முச்சக்கர வண்டிகள் பாஜாஜ் ஆகவே உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு மின்சார ஆட்டோக்களை அறிமுகம் செய்தது மட்டுமல்லாது பெண்களைச் சாரதிகளாகப் பயிற்றுவித்ததும் DPMC தான். டேவிட் பீரிஸ் குழும (David Pieris Group – DPG) நிறுவனங்களுக்கு கணினி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக 2024 இல் ஒரு பயிற்சி நிலையத்தை DPG ஆரம்பித்தது. இம்முயற்சிகளுக்கு அப்பாலும் டேவிட்டின் பார்வை அகன்றது. அவரது எண்ணங்கள் இப்போதும் ஆரம்ப நிலையில் இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்துவதற்கான திண்ணமும் விருப்பமும் பலமாகவே உள்ளன.
எனக்குத் தெரிந்தவரை, தற்போது கொழும்பு – யாழ்ப்பாணம் விமானச் சேவைகளுக்கான தனியார் பயண வசதிகளைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒரே நிறுவனம் டிபி ஏவியேஷன் (DP Aviation) தான். ஏனையோர் பெரும் செலவில் முழு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்தியே பயணத்தை மேற்கொள்கிறார்கள். தெற்கு – வடக்கு இணைப்பை ஏற்படுத்துவது வியாபாரத்திற்கும் சுற்றுலாவுக்கும் மிகவும் அவசியமானது. 70 நிமிட பறப்பு இருந்தால் ஒரு நிர்வாகி ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ 7 மணித்தியாலங்கள் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை.
தனது நிபுணத்துவக் குழுவின் ஆதரவுடன் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே டேவிட்டின் நோக்கம். மக்கள் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்ள வசதிகளைச் செய்து கொடுப்பது அவரின் திட்டம். இதுவே எனது நோக்கமுமாக இருப்பதனால் 2021 இல் நான் டேவிட்டைச் சந்தித்த நாள் முதல் அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
அப்படி நான் ஆலோசனை வழங்கிவரும் திட்டங்களில் ஒன்றுதான் ‘தளிர் விதை நிதி (Thalir Seed Fund)’. இது ஒரு போட்டி நிகழ்வாக ஜனவரி 2025 இல் ஆரம்பிக்கப்படுகிறது. இதன் முதலாவது பரீட்சார்த்த நிகழ்வு வட மாகாணத்தில் ஆரம்பிக்கிறது. இப்பொறிமுறை வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கை முழுவதிலுமுள்ள சேவைகள் பின்தங்கிய மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

வடக்கில் நிகழ்த்தப்படவிருக்கும் போட்டிகளில் ‘தளிர்’ விசேடமானதல்ல. டேவிட் பீரிஸ் குழுமத்தில் ஒன்றான DPMC வடக்கிலும், இலங்கை முழுவதிலும் பிரசன்னமாகவுள்ள நிறுவனம் என்பதே இங்குள்ள வித்தியாசம். 21 நிறுவனங்களை உள்ளடக்கிய பாரிய குழுமம் DPG. மோட்டார் வாகனம் சார்ந்த பண்டங்கள் (automotive products), விநியோகம் (logistics), பண்டசாலைகள் (warehousing), நிதிச் சேவைகள் (financial services), பொழுதுபோக்கு (leisure), விமானச் சேவை (aviation), தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் ஆதன சேவைகள் (real estate) ஆகியவை சார்ந்த நிறுவனங்கள் இக்குழுமத்தில் அடங்கும். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவரை முதலீட்டுக்கும் அப்பாலும் வழிநடத்தக்கூடிய வல்லமை இக்குழுமத்திற்கு உண்டு.
பண்டங்களை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தவல்ல தொடர்புகளும் சில்லறை வர்த்தக நிலையங்களும் DPMC யிடம் இருக்கின்றன. சரியான சில பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் DPMC நிறுவனமே வாடிக்கையாளராகவும் வருகிறது. இப்பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் பணத்தை விடவும் மேலதிகமான பெறுமதியை DPMC கொடுக்கிறது. வியாபாரம் என்று வரும்போது பணம் முக்கியமென்றாலும் அது மட்டும் போதுமாகி விடாது.
இந்த உலகம் பல பிரகாசமான யோசனைகளை (ideas) வைத்திருக்கிறது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது யோசனைகளை விளக்கக்கூடியவர்களாகவும், அதற்கான ஒரு குழுவை அமைத்துக்கொண்டவர்களாவும் அதேவேளை அதைச் செயற்படுத்தக்கூடிய திட்டமொன்றை வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். சரியான குழு, தமது யோசனைகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களையும் சேவைகளையும் பெறக்கூடிய வல்லமை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும். இவ்யோசனைகள் நிறைவேற்றக்கூடியவையாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்கான பண முதலைக் கொண்டவையாகவும், உரிய காலக்கெடுவில் அவற்றை நிறைவேற்றக் கூடியவையாகவும் இருக்கவேண்டும். அதாவது, ஒரு யோசனை சாதிக்கக்கூடிய ஒன்றாகவும் அதேவேளை வளர்ச்சியுறக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். அத்தோடு இவ்யோசனைகள் மாற்றங்களை அனுசரித்து, உள்வாங்கி அதேவேளை தமது தரத்தையோ, இலாப மீட்டலையோ இழக்காது முன்னேறவல்ல தகமைகளைக் (scalable) கொண்டிருக்க வேண்டும். வியாபார முயற்சியாகப் பரிணமிக்கும் இவ்யோசனைகள் வளர்ந்து வேலை வாய்ப்புகளையும் வருமானங்களையும் வளர்ந்துவரும் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.
இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் வடக்கில் வாழ்பவர்களாக இருத்தல் வேண்டும். வயது, பின்னணி, தகைமைகள் ஆகியன பொருட்டல்ல. முன்வைக்கப்படும் யோசனைகள் பின்வரும் துறைகளில், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.
- விவசாயம்
- வாகனம்
- ஏற்றுமதி
- விநியோகம்
- தகவல்-தொழில்நுட்பம்
- சுற்றுலா
ஆரம்பத்தில் இத்துறைகளே முன்னணியில் இருந்தாலும் எதிர்காலத்தில் ‘தளிர்’ மேலதிக துறைகளை இணைத்துக்கொள்ளும். இப்போட்டி பல அங்கங்களாக நடைபெறும். அவை:
அங்கம் 1: ஆரம்ப விண்ணப்பம்: இது ஜனவரி 31, 2025 இற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
விபரமான, செயலாக்கம் பெறக்கூடிய வணிகத் திட்டம்:
- முன்வைக்கும் யோசனை: அதன் கருத்தாக்கம்; எப்படி நடைமுறைப்படுத்தப்படும்; இறுதிச் சந்தை (Target Market); உத்தேச செலவீனம்.
- குழு: (தனியார், குழுக்கள், அல்லது நிறுவனங்கள்): நீங்கள் யார்; உங்களது அனுபவங்கள் என்ன?
உங்கள் வணிகத் திட்டத்தை (business plan) thalir@dpmco.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புவது மூலமோ அல்லது www.dpg.lk/thalir என்னும் இணையத்தளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
அங்கம் 2: குறும் பட்டியல்: பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இக் குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை மதிப்பீட்டுக்குழு ஆராய்ந்து இருபது யோசனைகளை (Ideas) வரிசைப்படுத்தி குறும்பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
- இக்குறும்பட்டியலில் இடம் பிடித்தவர்கள் தமது யோசனைகளை மேலும் மெருகுபடுத்த அவகாசம் வழங்கப்படும்.
அங்கம் 3: பட்டறையும் ஆதரவும்: பெப்ரவரி இறுதிக்கு முன் நடத்தப்பட வேண்டும்.
- குறும்பட்டியலில் இடம்பெறும் குழுக்கள் தமது யோசனைகளை மெருகூட்டும் தேவை ஏற்படின் அதற்கான ஆதரவையும் ஆலோசனைகளையும் தர ஆலோசகர்கள் தயாராகவிருக்கிறார்கள். இப் பட்டறையின் போது போட்டியில் பங்குபற்றும் குழுக்கள் ஆலோசகர்களுடன் ஊடாடித் தமது யோசனைகளை மெருகூட்டிக் கொள்ள முடியும். இதில் வெற்றி சாத்தியமாகாவிட்டாலும் இதர முதலீட்டாளர்களுக்கும், பங்காளிகளுக்கும் போட்டியாளர் தமது யோசனைகளைச் சமர்ப்பிக்க இக்களம் துணை செய்யும்.
அங்கம் 4: போட்டி முடிவுகள்: மார்ச் முடிவில் எட்டப்பட வேண்டும்.
- துறைசார் வல்லுநர்களின் துணையுடன் மதிப்பீட்டுக் குழு சமர்ப்பிக்கப்பட்ட ‘இறுதி யோசனைகளைப்’ பரிசீலிக்கும்.
- தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் மதிப்பீட்டுக் குழு முன் தமது யோசனைகள் பற்றிய விளக்கங்களை முன்வைக்கலாம்.
- வெற்றி பெற்ற குழுக்கள் அறிவிக்கப்படும்.
பின்னராக: வெற்றிகரமான நிறுவனங்களும் குழுக்களும் தமது பண்டங்களையும் சேவைகளையும் அபிவிருத்தி செய்ய ஆதரவு வழங்கப்படும்.
- தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் மாதாந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.
- DPM ‘தளிர்’ சபையுடன் மாதாந்தச் சந்திப்புகள்.
- முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு மற்றும் அவற்றின் தேவைகள் குறித்த ‘தளிர்’ சபையின் மதிப்பீட்டின் அடிப்படையில் துறைசார் வல்லுநர்களின் ஆதரவும் சந்தைப்படுத்தலுக்கான உதவிகளும் வழங்கப்படும்.
‘தளிர்’ திட்டம் ஒரு அசாதாரணமான ஒன்று. அதற்குக் காரணம், இதை ஒழுங்குபடுத்துவது இலங்கையில் மிகவும் பிரபலமானதும், வெற்றிகரமானதுமான ஒரு வணிக நிறுவனம். பணமீட்டலுக்கு அப்பால், டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஆதரவு புதிய வணிக முயற்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒரு பலமான அடித்தளம் ஆகும்.
