தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு
Arts
4 நிமிட வாசிப்பு

தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு

November 28, 2022 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே சேருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது.

பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என அழைக்கப்பட்டது. இது ஒரு நாக இராச்சியமாகும். தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி செய்த பொது ஆண்டுக்கு முன் (பொ. ஆ. மு) 307 – 267 வரையான காலப்பகுதியில் அவனது தம்பியான மகாநாகன் தெற்கில் இருந்த மாகமை இராச்சியத்தை ஆட்சி செய்து வந்தான். நாகவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவன் சேருநகர இராச்சியத்திலும் நாகவழிபாட்டை நிலை நாட்டினான்.  

காட்டில் காணப்படும் கற்குகைகளில் ஒன்று சேருவில கல்வெட்டு

பொ. ஆ. மு. 205 – 161 வரை இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் காலத்தில் இப்பகுதி ஒரு சிற்றரசாக விளங்கியது. அப்போது தெற்கில் இருந்த மாகமை எனும் இராச்சியத்தை காக்கவண்ணதீசனும், மேற்கில் இருந்த களனி இராச்சியத்தை களனி தீசனும் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். இதேகாலத்தில் கிழக்கில் இருந்த சேறுநகர இராச்சியத்தை சிவன் எனும் சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான் என தாதுவம்சம் கூறுகிறது.

எல்லாளன் காலத்தில் சேருவில பகுதியை ஆட்சிசெய்த தமிழ் சிற்றரசனான சிவன் மாகமையை ஆண்ட காக்கவண்ண தீசனின் மைத்துனனான அபயன் என்பவனின் நண்பனாவான். இக்காலப்பகுதியில் இவ்விடத்தில் “மணிநாக ஈஸ்வரம்” எனும் சிவாலயம் இங்கு அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது “மணிபுர ஈஸ்வரம்” எனவும் அழைக்கப்பட்டது. இச்சிவாலயம் பொ.ஆ 276-303 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்த மகாசேனனால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட காலத்தில் மணிபுர ஈஸ்வரமும் அழிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

அந்த வகையில் பொ. ஆ. மு 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  தமிழர் மற்றும் நாக, சிவ வழிபாடு ஆகியவை சேருவிலவுடன் தொடர்புபட்டுக் காணப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் சேருவில வில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டு ஒன்றும் ஆங்கிலேயர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு கற்புருவம் வெட்டப்பட்ட இரண்டு கற்குகைகளில் இரண்டு பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்பட்டதாகவும், இவை இரண்டும் 1973ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தினால் பிரதி செய்யப்பட்டதாகவும் இக்கல்வெட்டைப் பதிவு செய்துள்ள கல்வெட்டாய்வாளர் மாலினி டயஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ள மலைப்பாறைக் குகைகள் சேருவிலவில் எந்த இடத்தில் உள்ளன என்பதை இவர் தனது நூலில் குறிப்பிடவில்லை.

சேருவிலவில் உள்ள மேலும் இரண்டு பிராமிக் கல்வெட்டுக்களை பேராசிரியர் பரணவிதான தனது நூலில் பதிவு செய்துள்ளார். அக்கல்வெட்டுக்கள் திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் உள்ள 59 ஆம் மைல் கல்லின் கிழக்குப் பக்கமாக இரண்டு மைல் தூரத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் ஒன்று பாலன் எனும் சுவாமியைப் பற்றிய கல்வெட்டாகும். அடுத்தது யாகதத்தன் என்பவனின் மகனான வசபன் பற்றிய கல்வெட்டாகும்.

சேருவில ரஜமகா விகாரையின் தெற்குப்பகுதியில் சுமார் 10 சதுர கி. மீ பரப்பளவில் ஆங்காங்கே மலைப் பாறைகள் நிறைந்த ஒரு காடு காணப்படுகிறது. இக்காட்டின் கிழக்குப்பக்கம் உள்ளக்கழி களப்பு அமைந்துள்ளது.

காட்டில் காணப்படும்  நாகக் கற்கள்  சேருவில கல்வெட்டு

காட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி குளங் கல்லு மலை என அழைக்கப்படுகிறது. இம்மலைப்பகுதியிலும் இரண்டு பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் தாதன், புஸ்ஸ குத்தன், தீசன், அசோகன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மாலனி டயஸ் பதிவு செய்த தமிழர் பற்றிய கல்வெட்டும் இக் காட்டுப் பகுதியில் உள்ள மலைப்பாறை ஒன்றில் உள்ள கற்குகைகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.  

 இக்கல்வெட்டில்  “பத மகாதிசஹ கபதி தமெத குடஹக லேன” என பொறிக்கப்பட்டுள்ளது. இதை “The cave of Lord Mahatisa and the Tamil house holder Cuda” என கல்வெட்டாய்வாளர் மாலினி டயஸ் மொழி பெயர்த்துள்ளார். இது “சுவாமி மஹதிசவினதும் தமிழ் குடும்பத் தலைவன் குட்டவினதும் குகை” எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Epigraphical Notes 1-18. எனும் நூலில் 2886ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இக் கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் நூலில் காணப்படவில்லை.

சேருவில காட்டுப்பகுதியில் பல இடங்களில் கற்குகைகளும், கற்பாறைகளும், கற்சுனைகளும், கற்தூண்களுடன் சிதைந்த நிலையில் வழிபாட்டிடங்களும், நாகக்கற்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்