“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை”
-திருக்குறள் (758)-
மு. கருணாநிதி விளக்கம் : தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.
பகிர்வுப் பொருளாதாரம் என்பது பொருட்கள், வளங்கள் போன்றன தனிநபர்கள், குழுக்களால் ஒரு கூட்டு வழியில் பகிர்ந்து கொள்ளப்படுவது. எமது மூதாதையர் பல காரணங்களுக்காக, பகிர்வுப் பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி, ஈழத்திலும் இந்தியாவிலும் சந்தோசமாகவும், கூட்டாகவும் முன்னேற்றமடைந்து வந்தார்கள். நான் வளர்ந்த கிராமம் யாழ். நகரத்திலிருந்து இருபது மைல்களுக்கும் மேல் தூரமாக இருந்ததால், நகரத்திற்கு பஸ்ஸில் சென்று பொருட்கள் வாங்கி வர முழு நாளே எடுக்கும்; போய் வரும் செலவும் அதிகமாக இருக்கும். அதைத் தவிர்க்க, ஐந்தாறு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை யாழ்ப்பாணச் சந்தைக்கு அனுப்புவார்கள். போகிறவர் எல்லோருக்கும் தேவையான பொருட்களின் விபரத்தை பட்டியலாகப் போட்டு, சந்தைக்குப் போய் பொருட்களை வாங்கி கிராமத்துக்குக் கொண்டுவந்து, ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுப்பார். யாழ். போய் வருபவருக்கான பயணச் செலவுகளை ஏனையவர்கள் சேர்ந்து பிரித்துக் கொடுப்பார்கள். அது மட்டுமன்றி, ஒரே வயதில் பல பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள், ஒரே வகையான துணிகளைக் கூடுதலான அளவில் வாங்கும்போது, பொருட்களை மொத்த விற்பனை விலையில் பேரம் பேசி வாங்கக் கூடியதாக இருக்கும். அதனால் செலவைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். அனைவரும் நகரத்திற்குப் போகத் தேவையில்லாததால், கிராமத்தில் அவர்களது தொழில்களில் நேரம் செலவழிப்பதால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
இப்படியான நடவடிக்கைகளை எமது சமூகத்தினர் பல விடயங்களிலும் அனுசரித்து வந்தார்கள். சீட்டு வைப்பது அவற்றுள் ஒன்று. பலர் சேர்ந்து தமது பணத்தை வைத்து, மாதம் மாதம் கூட்டுப்பணத்தை தள்ளுபடி செய்து, அவசரமாகத் தேவையானவர்களுக்கு ஆரம்பத்தில் கூடிய தள்ளுபடியுடனும், ஏனையவர்களுக்கு பின்பு தள்ளுபடியின்றியும் குடுப்பார்கள். விவசாயிகள் தமது உபகரணங்களை பகிர்வதன் மூலம், தனித்தனியாக ஒவ்வொரு விவசாயியும் அனைத்து உபகரணங்களையும் வாங்கத் தேவை ஏற்படாது. ஆனால் அந்த உபகரணங்களைப் பயன்படுத்த, உபகரணங்களின் உரிமையாளர்களுக்கு ஓர் கட்டணம் கொடுப்பார்கள். அந்தக் கட்டணம், உபகரணங்களைச் சொந்தமாக வாங்கும் பணத்திலும் மிகக் குறைவாகவே இருக்கும். இதேபோல் பல உதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் பௌதீகச் சொத்துக்கள் சேவைகளாக மாறும் விதத்தில், பகிர்வுப் பொருளாதாரத்திற்கும் எமது பகிர்வு முறைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. வலைத்தளங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மூலம் பகிர்வுப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எளிதாக்கப்பட்டுள்ளது. இப்படியான வலைத்தளங்கள் நடுவர்களாக இருந்து ஒரு பக்கம் பொருட்களை வைத்திருப்பவர்களையும், மற்றைய பக்கம் அந்தப் பொருட்கள் தேவையானவர்களையும் இணைப்பார்கள். நடுவர்கள் இப்படியான பகிர்வுகளைக் கவனிப்பதால், இந்த இரு பகுதியினருக்கும் ஒருவரை ஒருவருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த வணிபம் பெரிதாக விரிவது சுலபமாக இருக்கும். பகிர்வுப் பொருளாதாரத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:
- பொருட்களின் மறுசுழற்சி : எமது வீடுகளிலும் அல்லது தொழில் செய்யும் வியாபார இடங்களிலும், எமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றின் பாவனை பத்து வீதம் முதல் அதி கூடியது ஐம்பது வீதத்திற்கும் குறைவாக இருக்கும். அப்படிப் பாவிக்காமல் இருக்கும் போது, அதற்குச் செலவு செய்த முதல் விரயமாக்கப்படும். இக் குறையைத் தீர்க்க பொருட்களை மறுபயன்பாடு செய்யலாம். அதன் மூலம் வியாபாரத்தை தொடங்குவது பகிர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. அது மட்டுமன்றி இப் பொருட்களை பலரும் வாங்குவதால் உலகின் இயற்கை வளங்கள் விரயமாக்கப்படாது அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
- நீடித்த சொத்துகளின் பயன்பாடு: மேலே கூறியது போல் சில பொருட்களை பாவிப்பதற்கு வாங்கி விட்டு, அதனைச் சில முறைக்கு மேல் பயன்படுத்தாது விட்டிருப்போம். ஆனால் அப்பொருட்கள் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய நிலமையில் இருக்கும். அவற்றை வீணாக எறியாமல் தேவையானவர்களுக்குக் கொடுத்து, அந்தப் பொருட்களின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதுடன் அதன் மூலம் சிறிதளவு பணமும் உழைக்க முடியும்.
- சேவைகளின் பரிமாற்றம்: உலகின் தொழில் முறையானது மாறிக்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் வேலை புரிபவர்கள் ஓர் தொழில் நிறுவனத்திலோ அல்லது அரசாங்க நிறுவனத்திலோ முழு நேர வேலையில் இருந்தார்கள். தற்போது தொழில் நிறுவனங்கள், தமது நிரந்தரச் செலவைக் குறைப்பதற்காகவோ தற்காலிக வேலையாளர்களைத் தேடுகின்றன. அப்படியான வேலையாட்களை ‘Gig workers’ என்று கூறுவர். இப்படியான வேலைகளை தூர இடங்களில் இருந்து செய்யக் கூடியதாக இருப்பதால் செலவுகளைக் குறைப்பதுடன், தகுதியான ஆட்களை வேலைக்கும் வைக்க முடியும்.
- மற்றும் உற்பத்திச் சொத்துகளைப் பகிர்தல்: சமீப காலங்களில் ஓர் உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களைப் பகிர்வது அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதன் மூலம் தொழிற்சாலைகள் தாம் பயன்படுத்தாத உபகரணங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். இதனால் தொழிற்சாலையின் செயற்திறன் அதிகரிப்பதுடன் அதன் செலவுகளை மற்றவர்களுடன் பகிரவும் முடிகிறது. அதேபோல் முதலீட்டுப் பணம் இல்லாத புதிய தொழில்முனைவோருக்கு, இலகுவான வழியில் தொழிலைத் தொடங்க இது உதவியாக இருக்கிறது.
மேலே கூறியது போல் பலவிதமான தொழில்கள் இப்போது பகிர்வுத் தொழிலாக மாறி அதன் இலாபம் கோடிக்கணக்காகப் பெருகிவிட்டது. ஊபர் (Uber), நான் தற்போது வாழும் ஊரான ‘சிலிக்கன் வலி’ தொடங்கி உலகெல்லாம் பரவி ஈழத்தின் மூலைமுடுக்கெங்கும் வந்துவிட்டது. அதற்குப் போட்டியாக சில சிறிய நிறுவனங்கள் உள்ளூர்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் பிக்மீ (Pick Me) போன்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் வீட்டை அல்லது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த நாட்களுக்கு வாடகைக்குக் கொடுக்க ‘AirBnB’ போன்ற நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் இயங்குகின்றன. இதன் மூலம் பாவிக்கப்படாத அறைகளை மற்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடிகிறது.
இப்படியான நடுநிலை நிறுவனங்கள் ஓர் பொருளையோ அல்லது வேலையாளர்களையோ சொந்தமாக வைத்துக்கொள்வதில்லை. அவர்களது வேலை, தற்காலிகமாக பொருட்கள், சேவைகளைக் கொடுப்பவர்களையும் அவை தேவைப்படுபவர்களையும் இணைப்பதாகும்; அதற்கான நடைமேடையை சுலபமாகவும், நம்பகரமாகவும் இணத்து வைப்பதாகும். அதற்கு அவர்கள், குறிப்பிட்டளவு வீதமான பணத்தைச் சேவைக் கட்டணமாக வசூலிப்பார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் கட்டணம் சிறிதாக இருந்தாலும், அவர்கள் கோடிக்கணக்கில் இவ்வியாபரத்தைச் செய்வதால் பல கோடி பணம் உழைப்பார்கள்.
பகிர்வுப் பொருளாதாரத்தின் நன்மைகள் சில:
- நெகிழ்வுத்தன்மை (Flexibility): தற்போதைய சந்ததியினர் தமது வேலைக்கும் வேலைக்கு வெளியான செயல்களுக்கும் வாழ்வில் ஓர் சமநிலையைத் தேடுகிறார்கள். அதனால் பெரிய நிறுவனங்களில் நிரந்தர வேலையின் பழுவைத் தவிர்க்க நெகிழ்வுத் தன்மையுள்ள வேலைகளைத் தேடுகிறார்கள். அதற்கு பகிர்வுப் பொருளாதாரம் உதவி செய்கின்றது. இதன் மூலம் தொழிலாளர்கள் தமக்கு விருப்பமான நேரங்களில் அதிகமாகவோ குறைவாகவோ வேலை புரிய முடியும்.
- பொருட்களின் திறமையான பயன்பாடு (Efficient Use of goods and services): பகிர்வுப் பொருளாதாரத்தின் மூலம் பொருட்களின் பாவனை அதிகரிக்கப்படுவதுடன், அதன் மூலம் சிறிதளவு பணமும் ஈட்டப்படுகின்றது. அப்படி உழைக்கும் பணத்தின் மூலம், மேலும் வியாபரத்தை மேம்படுத்துவதுடன் அதன் வருமானத்தில் வேறு விருப்பமான செயல்களையும் செய்ய முடியும்.
- சொத்துக்களைப் பயன்படுத்தல்: தமது வீடுகளில் பாவிக்காத அறைகளையோ அல்லது வாகனங்களையோ வாடகைக்குக் கொடுத்து பணம் உழைக்க முடியும். அதனால் அவர்கள் மேலும் பணம் முதலீடு செய்யாமல், இருக்கும் பொருட்களைப் பாவித்து பணம் உழைப்பதன் மூலம் தமது வாழ்க்கைத் தரத்தைக் கூட்டமுடியும்.
- சுற்றுச்சூழல் நன்மை: பகிர்வுப் பொருளாதாரத்தின் முக்கிய நன்மை சுற்றுச் சூழலாகும். பொருட்களை உருவாக்குவதற்கு இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். பகிர்வுப் பொருளாதாரத்தின் மூலம் இருக்கும் பொருட்களையே அதிக காலம் பாவிப்பதன் மூலம் இயற்கைப் பொருட்கள் விரயமாவதைக் குறைக்கலாம்.
இப்படியான பல நன்மைகள் இருக்கும் பகிர்வுப் பொருளாதாரத்தில் சில சவால்களும் உண்டு:
- தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கவலைகள்: பொருட்கள் அல்லது சேவைகள் ஒருவரின் உரிமையென்றாலும் அதனைப் பலர் பாவிப்பார்கள். அதனால் யார், யார் அப்பொருட்களை எப்படிப் பாவிப்பார்கள் என்பதைக் கவனிப்பது கடினம். அதனால் பாதுகாப்புப் பிரச்சினைகள் உருவாக சந்தர்ப்பம் உண்டு. அப்படியான பிரச்சினைகளைத் தடுப்பதற்கு நடுநிலை நிறுவனங்கள் பல வழிகளை உருவாக்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து வருகிறார்கள்.
- ஒழுக்கப் பிரச்சினை: பகிர்வுப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த பல தரப்புகளை இணைத்துவைக்க வேண்டும். அதில் சிலர் ஒழுக்கமன்றிப் பங்கு கொண்டால், ஏனைய வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து விடும். அதனைத் தடுக்க, நடுநிலை நிறுவனங்கள் ‘ranking and rating’ என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. இரண்டு தரப்பினரையும் தமது வலைத்தளத்தில் வெளிப்படையாக வைப்பதன் மூலம் எதிர்மறையான உணர்வுகளை அவை குறைக்கின்றன.
- அரச அல்லது தொழில்முறை விதிமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமை: மக்களைச் சட்டவிரோதமாக உபயோகிக்காமல், அவர்களைச் சட்டரீதியாக வேலை வாங்கி அதற்கேற்ப வருமானமும் கொடுக்கப்பட வேண்டும். விதிகளை அனுசரிக்காமல் இப்படியான நடுநிலை நிறுவனங்கள் தமது இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு தொழில் செய்யச் சந்தர்ப்பம் உண்டு. அதைத் தவிர்ப்பது அவசியம். இப்போது பல நாடுகள் இவற்றைத் தவிர்க்கச் சட்டங்கள் கொண்டு வந்துள்ளன.
ஆரம்ப காலத்தில் பகிர்வுப் பொருளாதாரம் நிலை பெறுமா என பல கேள்விகள் இருந்தன. அவற்றையெல்லாம் தாண்டி இப்போது ‘ஊபர்’, ‘எயர் பி என் பி’ போன்ற நிறுவனங்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதற்கேற்ப சட்டவிதிகளும் உருவாக, நடுநிலை நிறுவனங்களும் பாதுகாப்பு வழிகளை உருவாக்கி பகிர்வுப் பொருளாதாரத்தை இயல்பாக்கிவிட்டன. அதனால் ஈழத்தில் இருப்பவர்களும் வெளிநாடுகளிலிருந்து வேலைகளை எடுத்து பணம் சம்பாதிக்க முடிகிறது.
என்னைப் பொறுத்தவரை பகிர்வுப் பொருளாதாரத்தின் நன்மைகள் அதன் தீமைகளிலும் அதிகம். எமது முன்னைய பரம்பரை வாழ்ந்தது போல் பகிர்வுப் பொருளாதாரத்தின் மூலம் செலவுகளைக் குறைத்து, பலருடைய நேரங்களை வீணாக்காமல், இயற்கை வளங்களை மீளப் பயன்படுத்துவதால் தனிமனிதருக்கு மட்டுமன்றி, முழு உலகிற்குமே நன்மை உண்டாகும். ஆகையால், நாம் அனைவருமே அதில் எவ்வாறு பங்குபெறலாமென்று யோசிப்பது முக்கியமாகும்.
தொடரும்.