கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யால வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்துள்பவ்வ அமைந்துள்ளது. இங்கு கோரவக்கல, சித்துள் பவ்வ, தெகுந்தரவெவ எனும் மூன்று மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. இம் மூன்று இடங்களிலும் நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன.
இக்குகைகளில் பண்டைய காலம் முதல் கதிர்காமத்திற்கு தல யாத்திரை வந்த சித்தர்களும், முனிவர்களும் அதிகளவில் தங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக இம்மலை சித்தர் மலை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே சிங்கள மொழியில் சித்தர பப்பத்த என அழைக்கப்பட்டு, பின்பு சித்தல பப்பத்த என மருவியுள்ளது. பப்பத்த என்பது மலை எனப் பொருள்படும். இப்படி காலத்துக்குக் காலம் மருவி வந்து தற்போது சித்துள்பவ்வ என அழைக்கப்படுகின்றது.
சித்தர் மலைப் பகுதியிலுள்ள குகைகளிலும், பாறையிலும் 64 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 11 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளுமாக மொத்தமாக 75 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சித்துள்பவ்வ எனும் சித்தர் மலையில் மட்டும் 31 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 15 கல்வெட்டுகளில் இந்து சமயம் மற்றும் தமிழர் பற்றிய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சித்தர் மலைப் பகுதியில் சிவ வழிபாடு நிலவிய முக்கிய நகரமொன்று பண்டைய காலத்தில் இருந்துள்ளது. இது சிவநகரம் என அழைக்கப்பட்டுள்ளது. இச் சிவநகரம் பற்றிய பிராமிக் கல்வெட்டு ஒன்று சித்தர் மலையில், பிரதான தூபியின் தெற்குவாசல் படிக்கட்டின் இடது பக்கம் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பொ.ஆ. 35 – 44 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த ஈழநாகன் எனும் மன்னன் பொறித்த கல்வெட்டாகும்.
கல்வெட்டு ஆய்வாளர் C.W. நிக்கலஸ் இக்கல்வெட்டை ஆய்வு செய்து அதன் விபரங்களை ரோயல் ஆசியா கழக அறிக்கையில் வெளியிட்டார். அதன்பின் பேராசிரியர் எஸ். பரணவிதான இவ் விபரங்களை ‘Inscription of Ceylon’ எனும் நூலின் இரண்டாவது தொகுதியில் பதிவு செய்தார். இக்கல்வெட்டு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 9 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் A பகுதியில் 15 வரிகளிலும், B பகுதியில் 15 வரிகளிலும் எழுத்துகள் காணப்படுகின்றன. இதில் B பகுதியில் 12 ஆம், 13 ஆம் வரிகளில் சிவநகரம் எனும் பெயரும், 14 ஆவது வரியில் நாகராஜா எனும் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டில் சித்தர் மலையில் உள்ள வழிபாட்டுத் தலத்திற்கு நிவந்தமாக வழங்கப்பட்ட இடங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 5 வயல்வெளிகளும், 2 குளங்களும், ஒரு கால்வாயும், 3 ஊர்களும் அடங்குகின்றன. தக்ககாமம், (Dakagama) கன்னிக்கரைப்பள்ளி, (Kanikarapali) சிவநகரம் (Sivanakaraya) எனும் ஊர்களே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டின் A பகுதியில் மருமகன் எனும் தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில், அதாவது 1 ஆம், 2 ஆம் வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் காக்கைவண்ணன் எனும் தமிழ்ப் பெயர் 1 ஆம் வரியில் காணப்படுகிறது. இவற்றைத் தவிர நாகராஜன் எனும் சொல் B பகுதியில் 14 ஆம் வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
“12. [சஹி த] க-பக லபனக சிவ நகரக அசனக பூமி க.. சிவ
13. [நகரக அசன] ஹி மேவ எக ஹசஹி தக பக லபனக பூமி
14. .. .. .. .. நாக ராஜஹ தின பூமி க .. .. க .. ..”
இதே பாறையில் மேலும் இரண்டு பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கல்வெட்டில் மகாராஜன் வசபனின் மகனான மகாராஜன் தீசனின் மகனான மகாராஜன் காமினி அபயன் சித்தல பப்பத விகாரைக்கு வழங்கிய மானியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது கல்வெட்டில் ‘நாக மகாராஜன்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை எட்வர்ட் முல்லர் முதன் முதலாக வாசிக்க முயற்சி செய்தார். இருப்பினும் இவருக்குப் பின் C.W. நிக்கலஸ் இக் கல்வெட்டை வாசித்தார். இக் கல்வெட்டில் மொத்தமாக 5 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“1. சித்தம் நாக மஹாரஜஹ புத பாதிய திச மஹாரஜஹ மலி திச
2. மஹாரஜ அட சட தெ திச கஹவன தரிய சிதல பவத அடனி சிமிய தகன தி
3. ச அவிய வாவி அ[கட] கொட்டு கணவய நாக மஹாரஜஹ சடஹி சட்ட முத[வே] தியட க
4. பொஹொடகர தொரஹி துமஹ அகட்ட கொட்டு கறித்த கொஜர ஹலத்தய ச தச பஹததயி ச ஜின ப[டி]
5. சட்டரி (ய நவாகம) கரண கொட்டு தினி தக்கபடி சகல சமட்ட தினி”
இக்கல்வெட்டில், நாக மகாராஜனின் மகனான, மகாராஜன் பாதிய தீசனின் தம்பி, மகாராஜன் தீசன் தக்கிண்ண, தீச வாபி எனும் குளத்தை விலை கொடுத்து வாங்கி சித்தல பப்பத எனும் விகாரைக்கு நிரந்தரமாக வழங்கி அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு இங்குள்ள தூபியின் உச்சிப் பகுதியை அமைப்பது தொடர்பாகவும், மேலும் இங்குள்ள உபோசத மாளிகையின் வாசலில் யானை மண்டபம் அமைத்தல், பத்துக் கட்டிடங்களைத் திருத்தி அமைத்தல், தரையில் கம்பளம் விரித்து அழகு படுத்தல் ஆகிய பணிகளுக்கு குளத்து நீர் மூலம் கிடைக்கும் வரியை முழுமையாக வழங்குதல் தொடர்பாகவும் நாக மகாராஜன் இட்ட ஆணை பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாக மகாராஜன் பொ.ஆ. 136 முதல் 143 வரையான 7 ஆண்டுகள் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த மகாலக்க நாகன் எனும் மன்னனாவான். இவன் முதலாம் கஜபாகு மன்னனின் மாமனாவான். கஜபாகு மன்னனுக்குப் பின் இலங்கையை ஆட்சி செய்ய இவனுக்கு மகனோ, மகளோ, அல்லது சகோதரர்களோ இல்லாதபடியால், கஜபாகுவின் வயோதிப மாமனான மகாலக்க நாகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இலங்கையை ஆட்சி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டுகள் கூறும் தகவல்கள் மூலம் மிகப்பண்டைய காலத்தில் இப்பகுதியில் சிவ வழிபாடும், நாக வழிபாடும் சிறப்புடன் வழிபடப்பட்டது எனக் கொள்ள முடிகிறது.
பெருமகன் நாகன் பற்றிக் கூறும் சித்துள்பவ்வ – கொரவக்கல கல்வெட்டு
சித்துள்பவ்வ மலையின் மேற்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் கொரவக்கல மலை அமைந்துள்ளது. கதிர்காமத்திற்கு தீர்த்த யாத்திரை வந்த கோரக்க முனிவர் இம்மலையில் உள்ள குகையில் தங்கிச் சென்றதால் இது கோரக்கர் மலை எனப் பெயர் பெற்றதாகவும், இதுவே சிங்கள மொழியில் கோரக்ககல என அழைக்கப்பட்டு, பின்பு கொரவக்கல என மருவியதாகவும் கூறப்படுகின்றது. இம் மலையின் அருகில் உள்ள குளம் கோரக்கர் குளம் எனவும், மலைக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கையின் துறையடி கோரக்கர் துறை எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கோரக்கர் குளம் தற்போது கொரவக்க வெவ எனவும், கோரக்கர் துறை தற்போது கொரவக்க தொட்ட எனவும் மாற்றம் பெற்றுள்ளது. தொட்ட என்பது துறையடி எனப் பொருள்படும்.
கொரவக்கல மலையில் உள்ள கற்குகைகளில் 27 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 17 கல்வெட்டுகளில் இந்து சமயம் மற்றும் தமிழ் தொடர்பான சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை சிவன், நாகம், சுவாமி, பெருமகன், மருமகன் ஆகிய சொற்களாகும். இவற்றில் நாகர் பற்றிய ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே காணப்படுகிறது. அக் கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“பருமக நாக புத்த பருமக மிலக புசஹ லேன சகச”
இதன் பொருள், “பெருமகன் நாகனின் புத்திரன் பெருமகன் மிலக்க புஷ்ஷனின் குகை சங்கத்ததிற்கு..” என்பதாகும்.
பெருமகன் நாகன் பற்றிக் கூறும் சித்துள்பவ்வ – தெகுந்தரவெவ கல்வெட்டு
சித்துள்பவ்வ மலையின் கிழக்குப் பக்கத்தில் 1 கி.மீ தூரத்தில் தெகுந்தரவெவ மலை அமைந்துள்ளது. இங்கு 20 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 17 கல்வெட்டுகளில் சிவன், நாகம், வேலன், கண்ணன், சுவாமி, பெருமகன் ஆகிய சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்கு இந்து தெய்வ வழிபாடு நிலவியதோடு, தமிழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் ஒன்று அகத்திய முனிவர் பற்றிய செய்தியொன்றைத் தருகிறது. இக்கல்வெட்டின் இல. 660c என்பதாகும். இக்கல்வெட்டில் “பத்த அகிதேவச நொசப லேன நம” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது “சுவாமி அக்கிதேவனின் நொசப லேன எனும் குகை” எனப் பொருள்படும். அக்கிதேவன் என்பது அகத்திய முனிவரைக் குறிக்கும் பெயராகும். அகிட, அகி ஆகிய சொற்கள் அகத்தியரைக் குறிப்பவையாகும். ‘அபித்த ஜாதக’ எனும் நூலில் அகத்தியரை ‘பிராமண முனிவர் அகித்த’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அகத்தியர் நாகதீபத்திற்கு வந்தது பற்றி இந்நூல் கூறுகிறது.
“பருமக மகதத்த புத்த பருமக மனவன நாகஹ லேன”
பொருள்: பெருமகன் மகாதத்தனின் புத்திரன், பெருமகன் மனவன நாகனின் குகை.
பெருமகன் நாகன், அவனின் மகன் நாகன் பற்றிக் கூறும் மகுள் மகா விகாரைக் கல்வெட்டு
திஸ்ஸமகாராமையின் தெற்கில் உள்ள யோதகண்டிய என்னுமிடத்தில் இருந்து கிழக்குப் பக்கமாக யால சரணாலயத்திற்குச் செல்லும் காட்டுப் பாதையில் 13 கி.மீ தூரத்தில், பாதையின் இரு மருங்கிலும் தெனியஹேன மலைப்பகுதி அமைந்துள்ளது. யால சரணாலயத்தின் தென் எல்லையில் உள்ள பலத்துபான என்னுமிடத்தின் வடக்கில் சுமார் 7 கி.மீ பயணம் செய்தும் இவ்விடத்தை அடையலாம். இங்கு பாதையின் இடது பக்கம் உள்ள மலைப்பகுதியில் மகுள் மகா விகாரை காணப்படுகிறது.
காவந்தீசன் எனும் காக்கைவண்ணன் விகாரமகாதேவியை திருமணம் முடித்தபின் தனது மாகம இராச்சியத்திற்கு வந்து கொண்டிருந்த போது இங்கு ஒரு நாள் தங்கி இருந்ததால் இவ்விடம் மகுள் மகா விகாரை எனப் பெயர் பெற்றதாக இப்பகுதி மக்களால் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள மலைக்குகைகளில் 11 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 5 கல்வெட்டுகளில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிவன், மகேசன் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும், நாகம் எனப் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டும், சுவாமி எனும் பதம் பொறிக்கப்பட்ட 2 கல்வெட்டுகளும், பெருமகன் எனும் தமிழ்த் தலைவன் பற்றிய இரண்டு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் மூலம் இங்கு சிவன் மற்றும் நாக வழிபாடு நிலவியமையும், முனிவர்கள் மற்றும் தமிழ்ப் பிரதானிகள் வாழ்ந்துள்ளமையும் உறுதியாகத் தெரிகின்றது.
மகுள் மகாவிகாரைப் பகுதியில் பரவலாக மலைப்பாறைகள் அமைந்துள்ளன. பாதையின் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் சுமார் ஒரு கி.மீற்றர் தூரம் வரை மலைப்பாறைகள் காணப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் கற்புருவங்கள் வெட்டப்பட்ட ஏராளமான கற் குகைகள் காணப்படுகின்றன.
“பருமக திசஹ புத்த பருமக நாகச புத்த நாகச”
பொருள் : பெருமகன் தீசனின் புத்திரன், பெருமகன் நாகனின் புத்திரன், நாகன்.. (இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை)
நாக குத்தன் பற்றிக் குறிப்பிடும் அவகட்டியாவ கல்வெட்டுகள்
- IOC V.11-11 – இல.164
ஆகாச சைத்திய என்றழைக்கப்படும் யானை மலையின் அருகில் உள்ள மலையே அவகட்டியாவ மலைப் பகுதியாகும். இங்குள்ள கற்குகைகளில் 2 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் குமர என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. குமரன் என்பது முருகனைக் குறிக்கும் பெயராகும். இதன்படி இம்மலைப்பகுதியில் பண்டைய காலத்தில் முருகவழிபாடு நிலவியிருக்கலாம் எனக் கூறக்கூடியதாக உள்ளது.
இக்கல்வெட்டில் உள்ள ‘குமர தேரஹ’ எனும் பதம், குமார என்ற பெளத்த துறவி பற்றிக் கூறுவதால் இவர் பெளத்த துறவியாக மாறுமுன் குமார வழிபாட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என பேராசிரியர் சிற்றம்பலம் கூறியுள்ளார்.
அவகட்டியாவ மலையில் குகைக் கல்வெட்டுகள் மட்டுமன்றி பாறைக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது. நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு பொ.ஆ 1 – 2 ஆம் நூற்றாண்டுக்குரியதாகும். இக் கல்வெட்டில் நாககுத்தன் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் முருகவழிபாடு மட்டுமன்றி நாக வழிபாடும் இப்பகுதியில் இருந்திருக்க வேண்டும்.
- IOC V.11-11 – இல.164 – நாககுத்தன்
“சித்தம் குதவிய வசிக்க நாகுட ஜெதஹ புத்த புஸ துமஹ குதவிய வவிய மஹா பட்டி அத்தட விஹரகி பிக்கு ச கஹதய தினி.”
பொருள் : ஜேட்டகனின் மகனும், குத்தவிய என்னுமிடத்தில் வசிப்பவனுமான நாககுத்தன், குத்தவிய குளத்தின் வரியை அத்தட விஹாரையின் பிக்குகளுக்கு வழங்கினான்.
தொடரும்.