சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம்
Arts
15 நிமிட வாசிப்பு

சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம்

June 11, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

“தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பார்கள். வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது. தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் பெற்றுத்தரும் வேலைகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே சிவனருள் இல்லம். இப்போது அது ஐரோப்பா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு பண்டங்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகப் பரிணமித்திருக்கிறது. இது சிவனருள் இல்லத்தின் கதை.

சுரேனின் கதை : சிவன் அருள் இல்லத்தின் பிறப்பு

டிசம்பர் 2004 இல் சுரேன் சொர்ணலிங்கம் கொழும்பில் தன் நண்பர், உறவினர்களுடன் நத்தார் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். இலண்டனில் பிரபல பாதணி நிறுவனமான ‘நைக்கி’ இன் நிர்வாகப் பணியில் கடுமையாக உழைத்து வந்த அவருக்கு தன் மூதாதையர் நாட்டில் விடுமுறைக்காலப் பொழுதுகளைக் குதூகலமாகக் கழிப்பதில் அலாதிப் பிரியம். ஜொலிக்கும் கொழும்பின் நடன மாளிகைகளிலும் உணவகங்களிலும் தன் நண்பர்களோடு நாலு பணத்தைச் செலவு செய்து நாட்டின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பது ஒன்றும் அவருக்குச் சிரமமான காரியமில்லை. கொழும்பில் நண்பர்களுடன் சேர்ந்து வயிறுகளைக் குளிர வைத்தபின் இன்னும் தெற்கே சென்று பெந்தோட்டைக் கடலில் சில நாட்களுக்கு சுழியோடிக் கழிப்பது என்பது அவரது திட்டம். ஆனால் கடவுள் அவருக்கு வேறுவிதமான திட்டத்தை வைத்திருந்தார். கொழும்பிலுள்ள அவரது நண்பரான மோகன் பாலேந்திரா நத்தார் பண்டிகையைத் தன்னுடன் தான் கழிக்கவேண்டுமென சுரேனை அழுங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டார். இதனால் பெந்தோட்டைக் கடலுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

கொழும்பில் இருந்த சுரேனிற்கு இலங்கையின் கடலோரப் பகுதிகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) சீற்றத்திற்குள்ளாகின்றன என்ற சேதி வந்துகொண்டிருந்தது. தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த சுரேனுக்கும் மோகனுக்கும் பீதி பிடித்துக்கொண்டது. பெந்தோட்டைக்குப் போன அவர்களது நண்பர்களுடன் தொடர்புகொள்ள முயற்சித்தார்கள். அவர்கள் அனைவரும் இன்னும் படகில் களிப்புடன் மிதந்துகொண்டிருந்தார்கள். அவ்வப்போது எழும் பேரலைகளின் தாலாட்டு அவர்களுக்கு மேலும் இன்பத்தைத் தந்தது. ஆனால் கரையை அடைந்த அவ்வலைகள் உயிர்களைச் சப்பித் துப்பிய கதையை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஆழிப்பேரலையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டதை அறிந்த சுரேனும் மோகனும் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகளில் தமது சொந்தப்பணத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டனர். அவர்களது நண்பர் ஒருவரின் பொதி வண்டியில் தமது பொருட்களை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு விநியோகித்தார்கள்.

முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு வரையுள்ள, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகள் அரசாங்கத்தின் ஆதரவுக் கண்களுக்குப் படவேயில்லை. எனவே இப்பிரதேசங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தன. பண்டங்களை வாங்குவது, பண்டகசாலைகளில் வைத்துப் பராமரிப்பது, நகர்த்துவது, விற்பது போன்ற விநியோகத் தொழிலில் சுரேன் மகா கெட்டிக்காரர் என்ற காரணத்தால் நிவாரணம் வழங்குதல் அவருக்கு மிகவும் இலகுவாகப் போய்விட்டது. தனியாரிடமிருந்து பண உதவிகளைப் பெறுவதற்கும் நிவாரணத்தை விநியோகிப்பதற்கும் அவர் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தியிருந்தார்.

கொழும்பில் கிடைக்கக்கூடிய அனைத்துப் பாரவண்டிகளையும் சுரேனும் மோகனும் தமது சேவைக்கென அமர்த்திவிட்டார்கள். தேவையானால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவர்கள் இருவரும் நேரடியாகவே சென்றார்கள். தேவைகளைப் பொறுத்து வண்டிகளில் அவர்களே பொதிகளையும் ஏற்றினார்கள். முதலில் அவர்கள் அனுப்பியது குழந்தைகளுக்கான பாலுணவு, குடிநீர், மருந்துகள் ஆகியனவாகும். பின்னர் கம்பளிகளும், கூடாரங்களும் இதர அத்தியாவசியப் பொருட்களும் ஏற்றப்பட்டன.

சுரேனின் இந்த நிவாரண சேவையில் தொண்டர்களும் படிப்படியாக இணைந்துகொண்டனர். இவர்களில் சிலர் உள்நாட்டுக்காரராகவும் சிலர் விடுமுறையைக் கழிக்க இலங்கை வந்தவர்களாவும் இருந்தார்கள். அடுத்த சில வாரங்களில் தேவைகள் பன்மடங்காகின. தொண்டர்கள் நீண்ட பட்டியல்களுடன் கொழும்புக் கடைத்தெருக்களிலும் சந்தைகளிலும் ஏறி இறங்கினார்கள். இவ்வேளை மோகனின் நண்பியும் இலண்டனில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் நிதிமுகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தவருமான குலா விக்னராஜா விடுமுறைக்காக, ஆழிப்பேரலை நாளன்று, கொழும்பு வந்திறங்கியிருந்தார். மோசமான நிலைமை அவரையும் சுரேனுடன் இணைத்துவிட்டது. விமான நிலையத்தினூடு வந்திறங்கும் நிவாரணப் பொருட்கள் தாமதமாவது ஒரு பிரச்சினையாக இருந்தது. அவற்றை விரைவாக வெளியிலெடுக்கும் பணி குலாவுக்குக் கொடுக்கப்பட்டது. சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் இனிக்கப் பேசி அத்தியாவசியப் பொருட்களை உடனுக்குடன் விடுவித்துக்கொள்ளும் கலை குலாவுக்குக் கைகொடுத்தது.

உலகம் முழுவதுமிருந்து வந்த கொடையாளர்களும், தொண்டர்களும் பல இனக்குழுமங்களிலும் இருந்தார்கள். மனிதரால் உருவாக்கப்பட்ட போரினால் துன்பத்தில் உழன்றுகொண்டிருந்த சாதாரண பிரஜைகளுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனையச் சகிக்க முடியாத சாதாரணப் பிரஜைகளான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்துத் தரப்பினரும் நிவாரணப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர். நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் பாரவண்டிகளின் சாரதிகள், ஏறத்தாழ அனைவருமே சிங்களவர்கள். மிகவும் ஆபத்தான பயணங்களாக இருந்தும் மிகுந்த விருப்போடு அதில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தாலும் பின்னர் இலங்கைப் பாதுகாப்பு படையினர் இப்பாரவண்டிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கி அவர்களது பயணங்களுக்கு இடையூறுகள் வராமல் பார்த்துக்கொண்டனர்.

ஏப்ரல் 20024 இல் சுரேன் இலண்டனுக்குத் திரும்பியதும் அவரது சகோதரி மஞ்சுவும் கணவன் ஜயேந்திரன் (ஜயா) நமசிவாயமும் இலங்கை வந்தார்கள். மன்னாரில் பிரபல ஆலயமான திருக்கேதீஸ்வரம் கோவில் காணியில் ஒரு பகுதியை எடுத்து அதில் ஆழிப்பேரலையால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு இல்லமொன்றை ஆரம்பித்தனர்.

ஜயாவின் கதை : சிவன் அருள் இல்லத்தின் வளர்ச்சி

சிவனருள் இல்லத்தில் தஞ்சமடைந்த முதல் 35 குழந்தைகளும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் அனாதைகள்; சிலர் தம்மைத் தாமே பார்த்துக்கொள்ள முடியாத, ஒற்றைப் பெற்றோர்களது அல்லது தாத்தா பாட்டிகளினது பொறுப்பில் விடப்பட்டவர்கள். இக்குடும்பங்கள் ஓரளவு சுயவாழ்வுக்குத் திரும்பியதும் அவர்களது குழந்தைகள் திருப்பியனுப்பப்பட்டனர். எஞ்சியோர் சிவனருள் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டனர்.

கோவிலின் மடம் இக்குழந்தைகளின் வீடாகியது. உணவும் உறைவிடமும் இங்கு வழங்கப்பட்டது. சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட மூன்று பேர் இவர்களது நல்வாழ்வைப் பராமரித்தார்கள். உள்ளூர்ப் பாடசாலையில் இவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. மூன்று தகரங்களினால் சூழப்பட்ட ஒரு கொட்டகையே அப்போது இந்தப் பள்ளிக்கூடம். புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்னரே இப்பாடசாலை வசதியற்றதாகவிருந்தது. 6 முதல் 15 வயது வரையிலான 40 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் இக்கொட்டகை நிழல் தந்தது. எதிர்பாராத தருணத்தில் புதிய மாணவர்கள் இதன் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கினார்கள். றோட்டரி கிளப், இலண்டன் கிங்ஸ் கொலிஜ் மருத்துவப் பள்ளி ஆகியவற்றின் உதவியுடன் சிவனருள் இல்லம் மேலும் மூன்று அறைகள், அடிப்படை வசதிகள், விஞ்ஞானக்கூடம், இசைக்கூடம், கணனிக்கூடம் ஆகியவற்றை நிர்மாணித்துக் கொடுத்தது.

ஆழிப்பேரலை அனாதைக் குழந்தைகளின் முதலாவது குழு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் ஜயாவும் மஞ்சுவும் இலண்டன் திரும்பினார்கள். இப்போது அவர்களது அடுத்த பணி நிதி திரட்டுவது. ஜயா இலண்டனில் ஒரு மருத்துவ (radiologist) ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். மஞ்சு ஒரு ஆசிரியர். அடுத்த 3 வருடங்களுக்கு, 2007 வரை சுரேனுடன் இணைந்து அவர்கள் நிதியைத் திரட்டினார்கள். 2006 இல் சிவனருள் இல்லத்திற்கு அருகாமையில், ஊஞ்சல்கள், வழுக்கிகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பூங்காவை அவர்கள் நிர்மாணித்தார்கள். 2007 இல் 100 குழந்தைகள் தங்கக்கூடிய விடுதி ஒன்றை நிர்மாணித்தார்கள். பெண்களுக்கு இப் புதிய விடுதி உறைவிடமாக மாற, ஆண்கள் தொடர்ந்தும் மடத்திலேயே தங்கவைக்கப்பட்டனர்.

2007 இல், இரண்டு மாதக் குழந்தை உட்பட, சிவனருள் இல்லத்தில் 70 குழந்தைகள் இருந்தார்கள். இப்போது அது, இலங்கையின் சமூக சேவைகள் திணைக்களத்தில் பதியப்பட்ட ஒரு நிறுவனம். சமூக சேவைகள் திணைக்களத்தினால் பாதுகாப்பற்றவர்களென அடையாளப்படுத்தப்பட்ட குழந்தைகளும் பராமரிப்பிற்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

2009 இல் போர் முடிவுக்கு வந்ததும் உள்ளக இடம்பெயர்க்கப்பட்ட குழந்தைகள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இப்பொழுது இங்குள்ள குழந்தைகளின் தொகை இரட்டிப்பாகி 150 இனை எட்டியது. உலகம் முழுவதும் மேலும் திரட்டிய நிதியைக் கொண்டு இன்னுமொரு, 100 படுக்கைகளைக் கொண்ட ஆண்கள் விடுதியொன்றையும் சிவனருள் இல்லம் கட்டிக்கொண்டது. 2010 இல் இவ்வில்லத்தில் 200 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தார்கள்.

போர் முடிவுற்று அடுத்த சில வருடங்களில் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள், வாழ்வாதாரம் காரணமாக இடைத்தங்கல் நோக்குடன் இவ்வில்லத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 5,000 குடும்பங்கள் தமது சிறு தொழில்களையும் வியாபாரங்களையும் கோழிப்பண்ணைகளையும் ஆரம்பிக்க சிவனருள் இல்லம் உதவிகளைச் செய்தது. ஆனால் சிறு தொழில்களில் நூறில் ஒன்று தான் வெற்றியளித்தது. இதை மனதில் கொண்டு வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வேலைகளை வழங்கும் வகையில் ஆலையொன்றை அமைக்க சிவனருள் இல்லம் முடிவு செய்தது. அனாதைக் குழந்தைகள் வளர்ந்து சுயவாழ்வில் ஈடுபடும் வரை எப்படிப் பராமரிப்பு வழங்கப்பட்டதோ அதே போலவே வறுமைப்பட்ட குடும்பங்களும் தமது சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்கும் வரையான உதவியை சிவனருள் இல்லம் வழங்கியது. குழந்தைகளுக்கு வேலைகளைப் பெற்றுக்கொடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை. அனாதைகளும் ஆதரவற்றோரும் சமூகத்தால் ஈனப்பிறவிகளாகப் பார்க்கப்பட்டார்கள். முதலாளிகள் இவர்களுக்கு வேலைகளை வழங்கப் பின்னின்றார்கள். இதனால் இவ்விளைஞர்களுக்கு வேலை கொடுக்கவென சிவனருள் இல்லம் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தது. இல்லத்திற்கு அருகாமையில் அது ஒரு வெதுப்பகத்தை ஆரம்பித்தது. நிலங்களை வாங்கி அதில் தென்னைகளைப் பயிரிட்டது. பாலும், தயிரும் தரும் பண்ணைகளை ஆரம்பித்தது.

பண்ணை மூலம் 2012 இல் அது ஆரம்பித்த சமையல் நறுமணத் (spices) தயாரிப்பே சிவனருள் இல்லத்தின் முயற்சிக்கு உண்மையான வெற்றியைத் தந்தது. ஆரம்பத்தில் இம்முயற்சி பாதுகாப்புப் படையினருக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்தது. இதன் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தபடியால் அவர்கள் அடிக்கடி பண்ணைக்கு வந்துபோக ஆரம்பித்தார்கள். இறுதியில் இப்பண்ணை உள்ளூர் வறிய மக்களுக்கு வாழ்வாதரத்தை வழங்குகிறது என அறிந்ததும் அவர்கள் கண்காணிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். 2012 முதல் 2014 வரை தொழில் நட்டத்தில் இயங்கியது. புதிய எந்திரங்களை வாங்குமளவுக்கு வருமானம் இடம் கொடுக்கவில்லை. 2014 இல் இல்லம் ‘யூஎஸெயிட்’ (USAID) மற்றும் ‘ILO’ ஆகிய உதவி அமைப்புகளின் உதவியை நாடியது. இந்த இரு நிறுவனங்களும் கொடுத்த தலா, ரூ. 20 மில்லியன் நிதியைக் கொண்டு இல்லம் புதிய கட்டிடங்களிலும் எந்திரங்களிலும் முதலீடு செய்தது. யூஎஸெயிட் அமைப்பின் மேலதிக நன்கொடையுடனும், தனியார் ஒருவரின் 50,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ் நன்கொடையுடனும், ஆலையை 2.5 ஏக்கருக்கு விஸ்தரித்ததுடன், அருகாமையில் பெண் பணியாளர்கள் வேலை நாட்களில் தங்க வசதியான ஒரு விடுதியையும் நிர்மாணித்தது.

சிவனருள் இல்லத்தின் அரிசி மாவு, மிளகாய்த்தூள் மற்றும் நறுமணப் பொடிகளுக்கு பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பெரும் கிராக்கி இருக்கிறது. எளிமையான ஆரம்பத்திலிருந்து சிவனருள் இல்லம் இப்போது கிளிநொச்சி நகரில் பாரிய ஆலையொன்றையும் நிர்மாணித்திருக்கிறது. இங்கு பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் அங்கவியக்கமற்றவர்களும், அனாதைகளும், போரினால் பாதிக்கப்பட்டவர்களும், துஷ்பிரயோகத்திற்காளாக்கப்பட்டவர்களும், பெண் தலைமைத்துவக் குடும்பத்தினருமாவர். தேவை ஏற்படின் விசேட தகமைகளுள்ள முகாமைத்துவ மற்றும் அலுவலகப் பணியாளர்களை இல்லம் சேவைக்கு அமர்த்திக்கொள்கிறது. “போரினால் சிதறடிக்கப்பட்ட திறமைகளுடன் கூடிய பலரைத் தேடிப்பிடிப்பதில் எங்களுக்குச் சிரமமிருப்பதில்லை” என்கிறார் சுரேன்.

சிவனருள் இல்லம் தற்போது திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு அருகாமையில் ஒரு சைவ உணவகத்தையும், புதுக்குடியிருப்பில் தனது இரண்டாவது வெதுப்பகத்தையும் ஆரம்பித்துள்ளதுடன் பாற் பண்ணை, கோழிப்பண்ணை, மூலிகைத் தோட்டம் ஆகிய முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. கிழக்கிலும் மலையகத்திலும் இலவசக் கல்வி நிலையங்களை ஆரம்பித்து அங்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தகவற் தொழில்நுட்பம், நிர்வாகம் போன்ற கற்கை நெறிகளை வழங்கி வருகிறது. அத்தோடு மேலும் பல முயற்சிகள் திட்ட வரைவு நிலையில் இருக்கின்றன என்கிறார் ஜயா.

முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அனாதை இல்லம் பற்றிக் குறிப்பிடும்போது “எங்களது 16 குழந்தைகள் இப்போது பல்கலைக்கழகங்களில் கற்று வருகிறார்கள். 14 பேர் எங்கள் ஆலைகள், வெதுப்பகங்கள், உணவகம், பாற்பண்ணை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை ஆகியவற்றில் பணியாற்றுகின்றனர். இன்னும் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் தமது வெற்றிக் கதைகளைக் கூறுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் விளையாட்டிலும், இசையிலும், கலை, நடனம் ஆகியவற்றிலும் மிளிர்வதோடு மாவட்ட, தேசிய மட்டங்களில் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவிக்கிறார்கள்” என்கிறார் ஜயா பெருமையுடன்.

சிவனருள் இல்லத்தின் ஜயாவைத் தொடர்பு கொள்ள : sivanarulillamuk@gmail.com

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4212 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)