இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள் உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர் ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. எனினும் பணம் படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், இன ரீதியிலான பிரதிநிதித்துவம் என நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதன்படி, கொழும்பில் வசித்த பணம்படைத்த படித்த இலங்கையர்களுக்கும், இனரீதியாக இந்திய வம்சாவழியினருக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் அரசாங்க சபையில் அதிகாரத்துவ நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் – கமரூன் அரசியல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பின் ஆளுநரின் தனி அதிகாரம் குறைக்கப்பட்டு, கூட்டுப்பொறுப்பு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. பின் நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பிரித்தானிய அரச அதிபர்களின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அரச நிறைவேற்று சபை மற்றும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்டசபை ஆகியன ஏற்படுத்தப்பட்டன. முன்பு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக தோட்டத்துரைமார்கள் சமூகத்தை சேர்ந்த ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்ட போதும் பின்னர் படித்த ஆங்கிலேய மோகம் கொண்ட மேட்டுக்குடி வர்த்தகர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பறங்கியர் என்று இடம்பெற்றனர்.
இக்காலத்தில்தான் (1833) டொக்டர் கிறிஸ்தோபர் எலியட் (Dr. Christopher Elliott) அவர்களின் தலைமையில் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ‘தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்’ தேவை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளராகவும், மருத்துவராகவும் இருந்ததுடன் “இலங்கையின் நண்பர்கள்” என்ற இயக்கத்தையும் உருவாக்கியிருந்தார். இக்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவருக்கிடையில் நெருக்கமான ஒற்றுமை நிலவியது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களைப் பதிவு செய்வதற்காக அவர்களுக்கென என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டன. வாக்காளராக பதிய 21 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல், படித்தவராக இருத்தல், சொத்து ரூபா 6 ஆயிரத்துக்கும் மேல் கொண்டிருத்தல் அல்லது வருடாந்த வருமானமாக ரூபா 1500/= க்கும் மேல் கொண்டிருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எல்லா இந்திய வம்சாவழியினராலும் தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியாமல் போனது.
பின் வந்த காலத்தில் (1924) இலங்கையில் மொத்த இந்தியத் தமிழரின் சனத்தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரமாகவும் தோட்டத் தொழிலாளர்களின் தொகை 6 லட்சமாகவும் இருந்த போதும், இவர்களில் வாக்காளர்களாக பதிவு செய்ய 12,901 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்களும், தோட்டத்துக் கங்காணிகளும், தோட்ட உத்தியோகத்தர்களும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொண்டனர். எந்தத் தோட்டத் தொழிலாளியும் வாக்களிக்க தகுதி பெறவில்லை. இதன் பிரகாரம் 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவழியினர் சார்பில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் ஐ. எக்ஸ். பெரேரா, முகமட் சுல்தான், கோ. நடேசய்யர், எஸ். பி. ஷண்ட்ஸ், ஐ. டேவிட், ஆர். ஈஸ்வரமூர்த்தி ஆகியோராவர். இவர்களிலிருந்து ஐ. எக்ஸ். பெரேரா முதலாவதாகவும், முகமட் சுல்தான் இரண்டாவதாகவும் சட்டசபைக்கு தெரிவாகினர். எனினும் இதற்கு அடுத்த ஆண்டில் 1925 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கோ. நடேசய்யரும் தெரிவாகினார். அவர் கொழும்பு வாழ் இந்திய வர்த்தகர்கள் சார்பில் சட்டசபை அங்கத்தினராக தெரிவு செய்யப்பட்ட போதும் பெரும்பாலும் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் துன்பப்படும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றியும் அதிகமாக குரல் கொடுப்பவராக காணப்பட்டார். கோ. நடேசய்யர் 1930ஆம் ஆண்டு வரை சட்டசபையில் அங்கத்துவம் வகித்தார். அதன்பின் சட்டசபை என்ற அமைப்பு, அரசாங்க சபையாக மாற்றப்பட்டது.
1924 முதல் 1937 வரை இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய பல எழுச்சிகள் ஏற்பட்டன. பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் முன்னேற்றம், மகாத்மா காந்தியை முதன்மையாகக் கொண்டு இந்தியாவில் எழுச்சி பெற்ற “சுதேசி” இயக்கம், ரஷ்யாவில் ஏற்பட்ட 1917ஆம் ஆண்டின் ஒக்டோபர் சோசலிசப் புரட்சியை தொடர்ந்து எழுந்த சோஷலிச கம்யூனிச கருத்துமுதல்வாதம் போன்றன இலங்கையின் அரசியல் போக்கிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தின. சேர். பொன். இராமநாதன் – பொன். அருணாசலம் சகோதரர்கள், ஜி. எச். இசட். பெர்ணான்டோ, டி. பி. ஜயதிலக்க, ஜோர்ஜ். ஆர். டி சில்வா, டி சொய்சா, Dr. லிசோபோ பின்டோ, ஐ. எக்ஸ். பெரேரா, ஜேம்ஸ் பீரிஸ், விக்டர் கொரியா முதலானவர்கள் இக்காலத்தில் சமூக அரசியல் ரீதியில் அமைக்கப்பட்டிருந்த அமைப்புகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்குத் தலைமை தாங்கினார்கள். இவர்கள் புரட்சிகர தீவிரவாத சிந்தனையாளர்களாக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார்கள். பல அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தமது போராட்டங்கள் மூலம் காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து வென்றெடுப்பதில் வெற்றி கண்டார்கள். எனினும் இந்தக் காலத்தில் இலங்கையில் அதிக செறிவான தொழிலாளர் தொகையைக் கொண்டிருந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க பெரிய நன்மைகள் எதனையும் பெறவில்லை. இக்காலத்தில் இவர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாக சேர். பொன். அருணாசலமும் நடேசய்யருமே இருந்தார்கள். இவர்களின் முயற்சியால் தொழிலாளர்களை கடன் சுமைக்கு உள்ளாக்கி கங்காணிமார்களின் கொத்தடிமைகளாக வைத்திருந்த “துண்டு முறைமை”, 1921ஆம் ஆண்டின் சிவில் வழக்குகளில் போது தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் ‘சட்டமுறை’ என்பன 1909 ஆம் ஆண்டில் இல்லாது ஒழிக்கப்பட்டன.
இக்காலகட்டத்தில் இவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி, உழைப்புக்கேற்ற ஊதியமும் வழங்கப்படாமல் அந்த சொற்ப ஊதியத்தை கூட அவர்களிடம் நேரடியாக வழங்காமல் கங்காணிகளிடம் வழங்கியமையாகும். இதனால் கங்காணிமார்கள் எல்லாவிதங்களிலும் தொழிலாளர்களை சுரண்ட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அவர்கள் முறையாகச் செய்யவில்லை, தவறிழைத்தார்கள், தாமதித்து வேலைக்கு வந்தார்கள் போன்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளக் கணக்கு ஏட்டில் (Check Roll) பேர் கூட மறுக்கப்பட்டது. அல்லது அரைச்சம்பளம் போடப்பட்டது, அல்லது அவர்கள் மலைகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இல்லாவிட்டால் இருட்டும் வரை வேலை வாங்கப்பட்டனர்.
எல்லாக் காலங்களிலுமே நகர்ப்புற சாதாரணத் தொழிலாளி ஒருவரின் சம்பளத்தைவிட தோட்டத் தொழிலாளியின் நாட்கூலி மிகக் குறைந்ததாகவே இருந்தது. இதன் காரணமாக தோட்டத் தொழிலாளியின் குறைந்தபட்ச நாள் வேதனத்தை வரையறை செய்ய வேண்டிய தேவை மிகத்தீவிரமாக எழுந்தது.
1908 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அத்தகைய ஒரு காலகட்டத்திலும் கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வாழிடம் இருக்கின்றமை, குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகின்றமை, விறகு இலவசமாக கிடைக்கின்றமை, காய்கறிகள் மற்றும் கால்நடைகள் வளர்க்க காணித் துண்டுகள் வழங்கப்படுகின்றமை போன்ற காரணங்களைக் காட்டி தோட்டத்துரைமார்கள் கூலி அதிகரிப்பதை தடுத்து வந்தனர்.
இந்தக் காலத்தில் தொழிலாளரின் ஊதியம், அவர்களுக்கான சுகாதார நிலைமை, துன்பகரமான தொழில்புரியும் சூழ்நிலை, எத்தனை மணித்தியாலங்களுக்கு அவர்கள் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது பற்றியும், காட்டுமிராண்டித்தனமான தொழிலாளர் சட்டங்களைப் பயன்படுத்தி பெண் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் போன்றன தொடர்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை சேர். பொன். அருணாசலம் கடுமையாக விமர்சித்தார். அவர் இங்கிலாந்தின் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சட்ட வல்லுநராக இருந்தமை மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நண்பராக இருந்தமை, இலங்கையின் அரசியல், சமூக, தொழிற்சங்க அமைப்புகளில் பிரதான பதவிகள் வகித்தமை, இந்திய தேசிய இயக்கத் தலைவர்களான மகாத்மா காந்தி, கோகலே ஆகியோருடன் கொண்டிருந்த நட்புறவு போன்ற காரணங்களால் அவரது விமர்சனக் கருத்துக்களை பிரித்தானியாவால் புறக்கணிக்க முடியவில்லை. 1913 வரை அரச நிர்வாகத்தின் உயர் அதிகாரியாக சேவை செய்துவிட்டு ஓய்வு பெற்றபின் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக சேர். பொன். அருணாசலம் மாறினார். 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் அமைப்பின் முதலாவது தலைவராக சகல இனத்தவர்களும் இணக்கத்துடன் தெரிவுசெய்யப்பட்டு புரட்சிக்கான போராட்டத்தை சேர். பொன். அருணாசலம் தீவிரப்படுத்தினார்.
இவர் 1912 ஆம் ஆண்டு பிரித்தானியக் குடியேற்ற நாட்டு அரச செயலாளர் எல். ஹார்க்கோட்டுக்கு (L. Harcourt) எழுதிய கடிதத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிலுக்குரிய ஊதியம் கொடுக்காததால் வேலை செய்ய மறுத்த பெண் தொழிலாளர்களையும், சிறுவர் தொழிலாளர்களையும் மீண்டும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் மேற்படி தொழில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் பலமுறை வலியுறுத்தினார்.
இவரது இத்தகைய அரசியல் செயற்பாடுகள், சட்டசபைக்கூடாக கோ. நடேசய்யரின் அயரா முயற்சி மற்றும் ஐ. எக்ஸ். பெரேரா போன்றோரின் நடவடிக்கைகள் காரணமாக மேற்படி காட்டுமிராண்டித்தனமான தொழில் சட்டம் திருத்தப்பட்டு சற்று முன்னேற்றகரமான குறைந்தபட்ச வேதன சட்டம் ஒன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தொடரும்.