தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே 1998 ஆம் ஆண்டில் தொழிலாளரின் நாளாந்த வேதனம் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின் கீழ், தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் ஊடாக நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டுவந்தது. 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி, நாளாந்தவேதனம் ரூபா 515.0 ஆகவும், தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் பின்னர் ரூபா 620.00 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலே கூறியவாறு, நாளாந்த வேதனம் உயர்த்தப்பட்டபோது ஊழியர் சேமலாபநிதியம், ஊழியர் நம்பிக்கைநிதியம், ஊழியர் சேவைக்காலக் கொடுப்பனவு என்பன தொடர்பான கொடுப்பனவுகளும் ரூபா 81.00 ஆல் அதிகரித்ததால் வேதனத்தின் மொத்தப்பெறுமதி ரூபா 701.00 ஆக அதிகரித்ததாக கூறப்படுகின்றது.
கடைசியாகக் கைச்சாத்திடப்பட்ட 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவிற்கு வந்தபோது அதனை மீளாய்வு செய்வதற்கு பல மாதங்களாக இடம் பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித தீர்க்கமான முடிவுகளையும் எட்டமுடியாத நிலையில் வேதனநிர்ணயம் இப்பொழுது இழுபறிநிலையில் உள்ளது. தொழிற்சங்கங்கள் நாளாந்தவேதனமாக ரூபா 1000 ஐக் கோரியநிலையில், தோட்டக்கம்பனிகள் தேயிலையின் ஏற்றுமதிவிலையில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சிப்போக்கினால் தாம் நட்டத்தில் செயற்படுவதாகக்கூறி வேதன அதிகரிப்பை வழங்குவதினின்றும் பின்வாங்கின. அத்துடன், எதிர்காலத்தில் வேதனஉயர்வு ஊழியத்தின் உற்பத்தித்திறனோடு பிணைக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற கருத்தையும் அவை முன்வைத்தன. இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஊழியத்தினது உற்பத்தித்திறன் என்பது எதனைக் குறிக்கின்றது, அதனை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பன பற்றி ஆராய்வது பொருத்தமானதாகும். மேற்படி விடயங்களே இச்சிறுகட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
ஊழியத்தின் உற்பத்தித்திறன் என்பது, அதன் வழமையான கருத்தில், ஊழிய உள்ளீட்டில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமலே உற்பத்தி அதிகரிப்பதைக் குறிக்கும். இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித்திறனானது அதன் போட்டி நாடுகளுடன் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருப்பதை அது தொடர்பான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இலங்கையில் தேயிலைச்செடிகளின் வயதுமுதிர்ச்சி, வினைத்திறன்கொண்ட தொழிலாளருக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தேயிலையின் உற்பத்திச்செலவு உயர்வாக உள்ளது. இது தொழிலினது இலாபத்தன்மையைப் பாதிப்பதோடு, தேயிலைத்தொழிலின் நீண்டகால நிலைத்திருக்கும் தன்மைக்கும் பாதகமாக உள்ளது. விவசாயத்தைப் போன்றே தேயிலைத்தொழிலிலும் இலாபத்தன்மையும், தொழிலின் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையும் அதில் கையாளப்படும் நிலம், ஊழியம் என்பவற்றின் உற்பத்தித்திறன், உள்ளீடுகளுக்கான செலவுகள், உற்பத்தி செய்யப்படும் இறுதிப்பொருளின் தரம் என்பவற்றிலேயே தங்கி இருக்கும். இவற்றுள் முதல் இரண்டும் உற்பத்திச்செலவை நிர்ணயிக்கும் அதேவேளையில், மூன்றாவதான இறுதிப்பொருளின் தரமானது சந்தையில் தேயிலையின் போட்டித்தன்மையையும், சந்தைவிலையையும் நிர்ணயிப்பதில் முக்கியமானபங்கு வகிக்கும். போட்டி நாடுகளோடு ஒப்பிடும்போது, தேயிலை உற்பத்தியில் இலங்கையில், ஊழியத்தினதும் நிலத்தினதும் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. நாளொன்றிற்கு ஒரு தொழிலாளி பறிக்கும் தேயிலைத் தளிரின் அளவு, போட்டிநாடுகளான கென்யா, இந்தியா, வியட்னாம் என்பவற்றோடு ஒப்பீட்டுரீதியில் குறைவாகவே உள்ளது.
கென்யாவில் 30-35 கிலோவாகவும், இந்தியாவில் 25 கிலோவாகவும், வியட்னாமில் கிலோவாகவும் இருக்கும் அது இலங்கையில் 12-20 கிலோவாக உள்ளது. அதேபோன்று, கென்யாவில் 2300 கிலோவாகவும், தென்னிந்தியாவில் 2240 கிலோவாகவும் இருக்கும் ஒரு ஹெக்டயருக்கான தேயிலை விளைச்சல் இலங்கையில் 1688 கிலோவாக குறைந்தமட்டத்தில் உள்ளது. 500 கிலோவிற்கும் குறைந்த விளைச்சலைக் கொண்ட தோட்டங்களும் இங்கு கணிசமான அளவு உள்ளமை குறிப்பிடத்தக்கது. நிலத்தினதும், ஊழியத்தினதும் குறைந்தஉற்பத்தித்திறன் காரணமாக ஒரு கிலோ தயாரித்த தேயிலைக்கான உற்பத்திச்செலவு இங்கு உயர்வாக உள்ளது. கென்யாவில் ஒரு டொலராகவும், இந்தியாவில் 1.25 டொலராகவும், வியட்னாமில் 0.75 டொலராகவும் இருக்கும் உற்பத்திச்செலவு, இலங்கையில் 1.75 டொலராக உயர்வாக உள்ளது. மேற்படிக் காரணிகளால் இலங்கையின் தேயிலைத்தொழில் ஏனைய போட்டிநாடுகளோடு ஒப்பிடும்போது இலாபத்தன்மை குறைந்த ஒன்றாக இருக்கின்றது. போட்டிநாடுகளினது போன்றே இலங்கையினது தேயிலைத் தொழிலின் இலாபத்தன்மையும் தேயிலையின் உலகசந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், உற்பத்திச்செலவு என்பவற்றில் தங்கி இருக்கும். கென்யா, இந்தியா, வியட்னாம் போன்ற குறைந்த செலவினைக் கொண்ட நாடுகளின் போட்டி காரணமாக, உயர்வானதும் கட்டுப்படுத்த முடியாததுமான மேந்தலைச் செலவுகளைக் கொண்ட எமது பெருந்தோட்டக் கம்பெனிகள் இலாபம் உழைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் ஊழியத்தின் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளரின் தரங்குன்றிய வாழ்க்கைநிலையே இதற்கான ஒரு முக்கியமான காரணி எனக்கூறலாம். தோட்டத்துறையில் ஆரம்பகாலந்தொட்டே ஊழியமானது அபிவிருத்தி செய்யப்படவேண்டிய ஒரு உற்பத்திச் சாதனமாக கருதப்படாது வெறுமனே அது ஒரு உற்பத்திச் செலவாகமட்டுமே கருதப்பட்டு ஊழியத்தின் நலனின்மீது செலவிடுவது இயன்றமட்டும் குறைக்கப்பட்டு வந்தது. மலிவானதும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், கட்டுண்டதுமான ஊழியம் வேண்டியமட்டும் கிடைக்கக்கூடியதாக இருந்தமையாலேயே அவர்களது சமூகநலனை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை எனக் கூறுவதில் உண்மை உள்ளது.
வேதனஉயர்வை மட்டுப்படுத்தி, உற்பத்திச் செலவினைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. ஊழியத்தினது நலனை உயர்த்தும் வகையான செலவுகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் கவனத்தில் எடுக்கப்படவில்லை. தோட்டத்துறையில் காலப்போக்கில் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளும் மனிதாபிமானக் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது. நோய், நொடிகள் காரணமாக ஊழியத்தின் வேலைவரவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டே அவ்வித செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே உண்மையாகும். தொழிலாளருக்கு ஆகக்குறைந்த சுகாதார-வைத்திய-வாழ்க்கை வசதிகளே செய்துகொடுக்கப்பட்டன. தோட்டத்துறையில் காணப்படும் மோசமான இருப்பிடவசதிகள், முறையான குடிநீர் வழங்குதல், சுகாதாரவசதிகள் என்பன இல்லாமை தோன்றவற்றால் தொழிலாளர் அடிக்கடி சுகயீனமுறுதல், தொழிலாளரிடையே அதிலுங்குறிப்பாக, பெண்களிடையே, போஷாக்கின்மை, மந்தபோஷணை போன்ற பிரச்சினைகள் தோன்றுவதற்கு இவையே முக்கிய காரணமாயிற்று. அடிக்கடி சுகயீனம் அடைவோரின் விகிதாசாரம் தோட்டத்துறையிலேயே உயர்வாக உள்ளதாக இது தொடர்பான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதனால் வேலை வழங்கப்படும் நாட்களில் சுகயீனம் காரணமாக வேலைக்கு சமூகமளிக்காது விடுவோரின் விகிதாசாரமும் தோட்டத்துறையிலேயே உயர்வாக உள்ளது.
உற்பத்தி நிறுவனங்களின் இலாபத்தன்மைக்கு மட்டுமன்றி, தொழிலாளரதும் அவர்களது குடும்பத்தாரதும் சுபீட்சத்திற்குங்கூட, ஊழியத்தினது உற்பத்தித்திறன் அதிகரிப்பது முக்கியமானதாகும். தொழிலாளரது உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் வேலைத்தளத்தில் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக அவர்களுக்கு செய்துகொடுக்கப்படும் வசதிகளும், ஊழியத்திற்கு செலுத்தப்படும் ஊதியமும் முக்கியமான காரணிகளாகும். அதேவேளையில், தாம் செய்யும் வேலை தொடர்பாக ஊழியர் கொண்டிருக்கும் மனப்பாங்குகளும் உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கும் என்பது இப்பொழுது உணரப்பட்டுள்ளது.
எந்த ஒரு தொழிலிலும் அதன் உரிமையாளர் (அல்லது முகாமையாளர்) தொழிலாளருக்கு பல்வேறு நலன்சார்ந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவது ஊழியர்கள் தாம் செய்யும் தொழிலைப் பற்றிய சரியான மனப்பாங்குகளை உருவாக்கிக் கொள்வதற்கு பெரிதும் உதவும் எனலாம். தொழிலாளருக்கு செலுத்தப்படும் வேதனங்களுக்குப் புறம்பாக, அவர்களது சமூகநலனையும் சேமநலைனையும் மேம்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் எல்லாவித நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
தொழிலாளர் தொழில்புரியும் களநிலைமைகளைக் கவனத்திலெடுத்து அவற்றை சீர்ப்படுத்தல், தொழிலில் சமூகநலனை உறுதிசெய்தல், தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஏற்படக்கூடிய வேலையின்மை, நோய்கள், விபத்துக்கள், என்பவற்றிற்கெதிராக காப்புறுதிகளை ஏற்படுத்தல், வேறு சமூகநலன்சார்ந்த சேவைகளை வழங்குதல் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். இவ்வித நடவடிக்கைகள் தொழிலாளரது உடல்ரீதியானதும், உளரீதியானதும், உணர்வுரீதியானதுமான நலனை மேம்படுத்தி , தாம் செய்யும் தொழிலின் மீது அவர்களது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் மேலோங்கச் செய்யும். ஊழியத்தின் உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.
கம்பெனி உரிமையாளரும் முகாமையாளரும் தமது நலனில் அக்கறை கொண்டிருப்பதாக தொழிலாளர் உணரும்போது தாம் செய்யும் தொழில் மீதான அவர்களது ஈடுபாடும், நிறுவனத்தின் மீதான அவர்களது விசுவாசமும் மேம்படுவதால் அவர்கள் முழு அக்கறையுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் வேலைசெய்வதால் உற்பத்தித்திறன் அதிகரித்து இறுதியாக, கம்பெனியின் இலாபங்கள் அதிகரிக்கும். ஊழியரது உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கம்பெனிகளுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை இது குறிக்கின்றது என்பதும் இங்கு வலியுறுத்தப்பட வேண்டும். தொழிலாளரின் சமூகநலனையும் சுகநலனையும் மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் அவர்களது உற்பத்தித்திறனுக்கும் இடையிலான தொடர்பினை அளவீடு செய்வது இலகுவானதாக இல்லாவிடினும், அவை இரண்டிற்கும் இடையே நேர்மறையான தொடர்பு இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.
தொழிலாளருக்கு நல்ல இருப்பிடவசதிகளை அமைத்துக் கொடுத்தல், கல்வி-தொழிற்பயிற்சி என்பவற்றிற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத்திட்டமிடல் சேவைகளை வழங்குதல் போன்றன இதிலடங்கும். குறிப்பாக, வளரும் நாடுகளில் இவை முக்கிய நலன்சார்ந்த நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன. இவ்வித நடவடிக்கைகளினூடாக தொழிலாளரின் உற்பத்தித்திறனை உயர்த்தமுடியும் என்பது இப்பொழுது பொதுவாக ஏற்கப்படுகின்றது.
தேயிலைத்தொழிலைப் பொறுத்தவரை, உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் பயிர்செய்யப்படும் நிலத்தின் செழிப்புத்தன்மை, முறையான பசளை உபயோகம், தேயிலைச்செடிகளின் முறையான பராமரிப்பு, தேயிலைச்செடிகளின் வயது (தேயிலையின் முறையான மறுநடுகை) என்பவற்றோடு காலநிலைத்தன்மையும் முக்கிய பங்குவகிக்கும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
குறிப்பு : 2015 இற்கு முன் எடுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு.