“நான் திருநங்கையாக இருப்பது இயற்கையானது” என்கிறார் கவிதா. இந்த சமூகத்தில் கவிதாவைப் போல பலர் தமது பால்நிலை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் எம்மத்தியில் காணப்படுகின்றன.
பால், பால்நிலை, பாலீர்ப்பு போன்ற விடயங்களின் அடிப்படையில் மனிதர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குயர் சமூகத்தினுள் தன்பாலீர்ப்பாளர்கள், திருநர்கள், இருபாலீர்ப்பு உள்ளவர்கள், பாலீர்ப்பு அற்றவர்கள் எனப் பல்வேறுவிதமான மக்கள் வாழ்கின்றனர். குயர் சமூகங்களின் அரசியலும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களும் ஒடுக்குமுறைகளும் ஏராளமானவை. பெரும்பான்மையினரின் விருப்பமின்மை என்ற விடயம் தனிப்பட்ட நபர்களின் பாலியல்பிலும் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்த முடியாது. குறிப்பாகப் படித்தவர்கள்கூடக் குயர் மக்கள் தொடர்பில் கவனத்தில் எடுப்பதில்லை என்று தான் குறிப்பிடவேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் இவ்வாறான ஒடுக்குமுறைக்குத் துணையாக மதத்தையும் பண்பாட்டையும் கையில் எடுக்கிறார்கள். ஆரம்பகாலம் தொட்டு குயர் மக்கள் பற்றிய அறிவு எங்களுடைய சமூகத்தில் காணப்பட்டாலும் அது வெறும் பாலியல் தேவையை மட்டும் கருத்தில் கொண்டதாகத்தான் இருந்திருக்கிறது.
குயர் மக்களை அங்கீகரிக்கின்ற தன்மையானது அண்மைக் காலங்களில் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதனை ஆய்வுகள் (Pew Research Center) மூலம் அறியமுடிகிறது. குயர் மக்களை அங்கீகரிக்கும் தன்மையானது வயது, கல்வி, வருமானம், மதம், பண்பாட்டு கட்டமைப்பு, பால்நிலை என்ற அடிப்படைகளில் வேறுபடுவதனை அவதானிக்க முடியும். உதாரணமாக குறிப்பிட்ட மதங்களைப் பின்பற்றுபவர்களுடன் ஒப்பிடும் போது மத நம்பிக்கை அற்றவர்கள் அதிகமாக குயர்மக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவற்றைத் தனிமனிதன் மீது சுமத்துவதான வாழ்வியலை சமூகம் கட்டமைத்திருக்கிறது. குயர் மக்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை. இலங்கையின் மதம் சார்ந்த சமூகக் கட்டமைப்பு குயர் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. சைவம், பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களை இலங்கை மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள். மனிதநேயம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்பவை மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை உணராத பலர் மதங்களின் பெயரால் குயர் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இலங்கையின் வடபுலத்திலும் கூட குயர் மக்கள் குறித்த சமூகத்தின் பார்வையானது மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இருக்கிறது. “தன்பாலீர்ப்பு எங்களுடைய சமயத்துக்கும் பண்பாட்டிற்கும் எதிரானது. மனுதர்ம சாஸ்திரம் தன்பாலீர்ப்பை எதிர்க்கிறது” என்று மதத்தை மேற்கோள்காட்டி தனது கருத்தை நிறுவ முற்படுகிறார் ஆசிரியரான சிவராஜா. மேலும் இன்னொரு ஆசிரியர் குறிப்பிடுகையில் “இப்ப தன்பாலீர்ப்பு என்பது ஒரு டிரென்ட் ஆகப் போய்விட்டது. இதனை காமம் சார்ந்ததாகவே பார்க்கத் தோன்றுகின்றது. இது கலாசார சீரழிவு. தன்பாலீர்ப்பாளர்கள் நினைத்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்” என்கிறார். வடபகுதியில் பெரும்பாலான ஆசியரியர்களின் கருத்து மேற்கூறிய கருத்தைப் போன்றதாக இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். எதிர்கால சந்ததிகளை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் குயர் மக்கள் பற்றிய புரிதல் அற்றிருக்கின்றமை, எதிர்கால மாணவ சந்ததியினரின் குயர் மக்கள் பற்றிய புரிதலிலும் பெரியளவில் தாக்கம் செலுத்தும் என்பது தவிர்க்க முடியாத விடயமாகும்.
சில பாடத்திட்டங்களுக்குள் குயர் மக்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தும் கூட குயர் மக்கள், குறிப்பாகத் தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகத்தின் பார்வை இந்த இளம் தலைமுறையினர் மத்தியிலும் கூடப் பெரியளவில் ஆரோக்கியமானதாக இல்லை. அவர்களுடைய கல்வி சமூக மாற்றத்திற்கானதாக இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. குறிப்பிட்டளவிலானோரே தாம் கற்றவற்றின் மூலம் சமூகத்தில் உள்ள குயர் மக்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.
குயர் மக்கள் சமூகத்தில் உடல்சார் வன்முறைகள், உளவியல் வன்முறைகள், பால்நிலை ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கின்றார்கள். கல்வி கற்கும் இடங்கள், தொழிலிடங்கள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் பாரபட்சம், சுரண்டல், வெறுப்புப் பேச்சு, அவமரியாதை, கேலி, கிண்டல், குற்றச்சாட்டுக்கள், இழிவான நகைச்சுவைகள், உணர்வுகளை மதிக்காது காயப்படுத்துதல் மற்றும் ஏனைய வன்முறைகளையும் எதிர்கொள்கிறார்கள். குயர் மக்கள் குறித்த அறியாமையும் இந்த மோசமான சமூகக் கண்ணோட்டத்திற்கு ஒரு காரணம் எனலாம்.
திருநங்கைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களில் ஆண் எனப் பால்நிலை குறிப்பிடப்படுவதனால் ஆண்கள் விடுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் சங்கடங்கள் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேர்ந்ததாகப் பாதிக்கப்பட்ட திருநங்கை குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் மலசலகூடப்பாவனையின் போதும் திருநர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். ஆண் மற்றும் பெண் என்பதில் எதைப் பயன்படுத்துவது என்ற கேள்வி அவர்களிடம் இருக்கிறது. திருநங்கைகள் பெண்களுக்கான மலசலகூடங்களைப் பயன்படுத்தும் போது அவர்களைச் சிலர் தவறாக எண்ணுகின்றமையையும் சித்திரிக்கின்றமையையும் சாதாரணமாக இடம்பெறுகின்றது. அண்மைய உலகில் பல நாடுகளில் பால்நிலைச் சமத்துவம் பேணக்கூடிய மலசலகூடங்கள் (Gender neutral toilets) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இது தொடர்பில் பெரிதாக கவனம் கொள்ளப்படவில்லை.
சக பணியாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாமையால், தனது வேலையை விட வேண்டி ஏற்பட்டதாக திருநங்கை ஒருவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் வேலையிடத்தில் பால்நிலை சுட்டிக்காட்டப்படுவதுடன் தமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதாகக் குயர் மக்கள் தெரிவிக்கின்றனர். வேலைத்தளங்களில் திருநங்கை என்ற காரணத்தால் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அதிக வேலைகளைச்செய்யுமாறு பணிக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் குறிப்பிட்டார். இது போன்ற பாரபட்சங்களுக்கு சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் எண்ணப்பாங்கு மிக முக்கிய காரணம் எனலாம். இலங்கையைப் பொறுத்தவரை குயர் மக்கள் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது. அதேநேரம் பெரும்பாலான குயர் மக்கள் சுயதொழில்களையும் மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
திருமணம் வரை குடும்பத்துடன் வாழும் வழக்கமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இலங்கையில் குயர் மக்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் சூழ்நிலைகளையே அதிகம் எதிர்கொண்டுள்ளனர். குயர் மக்களை அவர்களுடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமையானது குயர் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும். தம்மைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமக்கும் மற்றவர்களைப் போல பாதுகாப்பான அழகான வாழ்க்கையும் கல்வியும் கிடைக்கும் என்பது குயர் மக்களின் கருத்தாக இருக்கின்றது. பெற்றோர்களால் விரட்டப்படும் குயர் மக்கள் வாழிடம் அற்று, தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் கூடச் சவால்களை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தில் தமது பிள்ளைகள் குயர் மக்கள் என அறிந்ததும் சில பெற்றோர் வீட்டில் அடைத்தல், அச்சுறுத்தல் போன்ற வன்முறைகளைப் பிரயோகிக்கின்றனர்.
இலங்கையில் தமது பாலியல்பு குறித்துத் திறந்த மனதுடன் வெளிப்படுத்த முடியாதவர்களாகவே குயர் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு சமூகத்தின் எதிர்மறையான எண்ணப்பாங்கும் மத நம்பிக்கைகளும் அதிகம் தடையாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமது பால்நிலை குறித்த நிலைப்பாட்டை தமது குடும்பம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தாம் நிர்க்கதியாக நேரிடும் என்ற பயத்தினாலும் கூடத் தனித்து செயற்படமுடியாத மற்றும் பண ரீதியில் வலுவடையாத குயர் மக்கள் தம்மை வெளிப்படுத்தாமல் வாழத்தலைப்படுகிறார்கள். எனவே குயர் மக்கள் பாரபட்சங்களையும் சமத்துவமின்மையையும் குடும்பத்திற்குள்ளேயே எதிர்கொள்ள நேரிடுகிறது. சில பெற்றோர் தமது பிள்ளைகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் வடபகுதியை எடுத்துக்கொண்டால் தமது பிள்ளைகள் குயர் மக்கள் என அறிந்து, அவர்களை ஏற்றுக்கொள்வது என்பது மிக மிக அரிதாகவே இடம்பெறுகின்றது.
குயர் மக்களைப் பாதுகாக்கக்கூடிய வலுவான சட்டங்கள் இன்மை குயர் மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினையாகும். குயர் மக்கள் தமக்கு எதிராக இடம்பெறும் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது பொலிஸ் நிலையத்தை நாடும் சந்தர்ப்பங்களில், அவர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். பெரும்பாலான பொலிஸார் குயர் மக்கள் தொடர்பான புரிதல் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இலங்கையில் குயர் மக்கள் காரணமின்றிக் கைதுசெய்யப்படுவதாகவும் பொலிசாரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
“சமூகத்தில் உள்ளவர்களுக்கு குயர் மக்கள் பற்றிய தெளிவு இல்லை, அதேபோல அவர்களுக்கு விளக்கிச்சொல்லக்கூடியளவுக்கு ஆதாரமும் பேச்சுவன்மையும் என்னிடம் இல்லை” என்கிறார் திருநங்கை ஒருவர். இலங்கையில் குயர் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அதிலும் திருநர்களுடன் ஒப்பிடும் போது தன்பாலீர்ப்பாளர்கள் அதிகம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். தன்பாலீர்ப்புள்ள ஆண்களை விடத் தன்பாலீர்ப்புள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பாரதூரமானவை. தன்பாலீர்ப்புள்ள பெண்கள், ஆண் ஒருவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். சமூகத்தின் மோசமான எதிர்வினையாற்றல் காரணமாக குயர் மக்கள் தவறான முடிவுகளுக்கும் செல்கின்றனர். மதிப்புமிக்க ஒரு உயிரின் தவறான முடிவுக்குத் தூண்டுகோலாக இச் சமூகம் இருக்கும் எனின் சமூகம் தனிமனித சுதந்திரம் பற்றிச் சிந்திக்கவேண்டியது அவசியம். சமூக விழுமியம் மற்றும் மத விழுமியம் சார்ந்த கட்டாயப்படுத்தல்களால் பெரும்பாலான குயர் மக்கள் சமூகத்தை எதிர்கொள்ள முடியாது தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர். கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், அவர்கள் மன அழுத்தங்களால் தவறான முடிவுக்குச் சென்றதாகவும் குயர் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர்கள் குயர் மக்கள் என்பதையும், அவர்கள் விரும்பிய பால்நிலை அடையாளத்தை அவர்களால் இறுதிவரை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.
உலகின் பல்வேறு பாகங்களிலும் குயர் மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் சமூக அங்கீகாரத்திற்காகவும் மற்றும் சமூகத்தில் தமது இருப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் போராடிவருகிறார்கள். உலகில் குறிப்பிட்ட சில நாடுகள் பால்புதுமையினரைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்கின்ற அதேவேளை பெரும்பாலான நாடுகள் எதிர்க்கின்றன. பால்புதுமையினரில் சிலதரப்பினர் திருநர்களை அங்கீகரிக்கின்ற அதேவேளை தன்பாலீர்ப்பினரை எதிர்க்கிறார்கள். தன்பாலீர்ப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றைத் தடுப்பதற்கும் சமூகத்தில் சமத்துவத்தையும் தனிமனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தில் பால்புதுமையினர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். மேலும் தன்பாலீர்ப்பினர் பற்றிய சரியான விம்பத்தை வெகுஜன மற்றும் புதிய ஊடகங்கள் சித்தரிக்கின்றமையை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும். உலகில் கனடா, சுவிடன், டென்மார்க், நெதர்லாந்து போன்ற பல நாடுகள் தன்பாலீர்ப்பினைச் சட்டபூர்வமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டெம்பர் (2021) மாதம் கனடாவில் இடம்பெற்ற பெண் தன்பாலீர்ப்பாளர்களுடைய திருமணம் பற்றி இலங்கையில் அதிகம் பேசப்பட்டது. அதிலும் இது தொடர்பில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலேயே அதிகம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களைக் காணமுடிந்தது. இந்துசமய முறைப்படி நடாத்தப்பட்ட இத்திருமணத்திற்கு எதிரான மதம் சார்ந்த வெறுப்புப் பேச்சு மற்றும் கேலி, கிண்டல் போன்றவற்றையும் பல்வேறுபட்ட ஊடகங்களும் தனி நபர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். இத் திருமணத்தை ஆதரித்தவர்கள் மோசமாக விமர்சிக்கப்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.
அதேவேளை இலங்கையில் சனத்தொகைக் கணக்கெடுப்பிலும் கூட ஆண், பெண் என்ற ரீதியில் மாத்திரமே கணக்கெடுப்பு இடம்பெறுகின்றது. LGBTIQA+ சமூகத்தில் எவ்வளவுபேர் இலங்கையில் இருக்கிறார்கள் அல்லது யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்புக்கள் சரியான முறையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளை குயர் மக்களுடைய உரிமைகளுக்காகச் செயற்படும் ஈகுவல் கிரவுண்ட் (Equal Ground) நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இலங்கையில் 12 வீதமான குயர் மக்கள் வாழ்வதாகக் குறிப்பிடுகின்றது. நபர்கள் தம்மைப் பாலினப்புதுமையினர் அல்லது குயர் மக்கள் என அடையாளப்படுத்த முன்வரும்போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுக்கிறார்கள். இதன் காரணமாகப் பலர் தமது உண்மையான பால்நிலையையோ அல்லது பாலியல்பையோ வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.
அரசியல் கருத்தியல்களும் கூட மக்களுடைய பால்நிலை பற்றிய கண்ணோட்டத்தைத் தீர்மானிப்பவையாக அமைந்துவிடுகின்றன. பல நாடுகளின் அரசியல் கட்சிகளை அவதானித்தால் தன்பாலீர்பை எதிர்ப்பவையாகவே பெரும்பாலான கட்சிகள் காணப்படுகின்றன. இந்த நிலைமையே இலங்கையிலும் காணப்படுகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவாதம் ஒன்றில், அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மங்கள சமரவீர அவர்கள் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச அவர்களால் “பொன்னயா” என அழைக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த போது, அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால் சிரிசேன அவர்களால் குயர் வெறுப்பை வெளிப்படுத்தக்கூடிய சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியதால், குயர் செயற்பாட்டாளர்கள் மற்றும் குயர் சமூகத்தால் எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இவை அரசியல்வாதிகளின் எண்ணப்பாங்கையும் குயர்வெறுப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்களே. வடபுல அரசியல் தளத்தில் நின்று நோக்கும் போது பெரும்பாலான கட்சிகளும் அரசியல்வாதிகளும் இது போன்ற பெண்ணியம், குயர் அரசியல், சாதிய எதிர்ப்பு போன்ற எந்தவொரு முற்போக்கான கருத்தியலையும் பொதுவெளியில் விவாதிக்காதவர்களாக, தவிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு தமது வாக்குவங்கியைத் தக்கவைப்பதற்கான அரசியலாகவே இது இருக்கின்றது. பால்நிலைச் சமத்துவம் மற்றும் குயர் அரசியலைப் பேசும் ஒரு சில அரசியல்வாதிகளையும் கூட இவர்கள் இழிவுபடுத்தி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான தலைவர்களால் வழிநடத்தப்படுபவர்களும் பால்நிலை உணர்திறனுடன் செயற்படுவது என்பது நிச்சயமற்றதே.
நபர்களின் கல்வி அறிவு கூட குயர் மக்களினைப் பற்றிய ஏனைய மக்களின் கண்ணோட்டத்திலும் ஏற்றுக்கொள்தலிலும் தாக்கம் செலுத்தும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையின் வடபுலத்தில் படித்தவர்கள் மத்தியிலும் கூட குயர் மக்கள் பற்றிய புரிதல் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. ஆனால் இளம் தலைமுறையினர் மத்தியில் ஓரளவு புரிதல் ஏற்பட்டுவருவதனை அவதானிக்கமுடிகிறது.
இலங்கையின் வடபுலம் ,தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக இருப்பதுடன் தனித்துவமான பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட விடயங்களிலும் இறுக்கமான மத மற்றும் பண்பாட்டு ரீதியான கட்டமைப்பொன்று காணப்படுவதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணச் சமூகத்தின் சமய, கலாசார வரம்புக்குள் நின்றுகொண்டு சமத்துவம் பேசுவதென்பது மிகச் சவாலானது. இந்தச் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சமத்துவமற்ற சமய, சாதிய, பால்நிலை, பாலியல் மற்றும் பிரதேசம் சார்ந்த கருத்தியல்கள் தனிமனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இருந்தும் கூட இங்கிருந்து எழுகின்ற சமத்துவத்துக்கான குரல்களும், சுயமரியாதை நடை, விழிப்புணர்வுச் செயற்பாடுகள் போன்ற ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக ஒலித்துக்கொண்டிருக்கின்ற இந்தக் குரல்கள் சமூக மாற்றத்தின் ஒரு படியாகவே எண்ணவேண்டியிருக்கிறது.
பால்புதுமையினர் பற்றிய சமூகத்தின் பார்வை மற்றும் கண்ணோட்டம் பெரும்பாலும் ஊடகக் கற்பிதங்களாகவும் குயர் மக்கள் மீதான வெறுப்பாகவும் சமூகத்தில் புரையோடிப் போயுள்ளது. பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் பால்புதுமையினரைக் காட்சிப்பொருளாகவே சித்திரிக்கின்றன. தன்பாலீர்ப்பினர் அதாவது ’கே ஆண்கள்’ கேலிச்சித்திர கதாபாத்திரங்களாகவும் ஆண்மையற்றவர்களாகவும் சித்திரிக்கப்படுவதுடன், லெஸ்பியன்கள் ஆண்களை வெறுப்பவர்களாகவும் கவர்ச்சியற்றவர்களாகவும் ஊடகங்களில் சித்திரிக்கப்படுகிறார்கள். தன்பாலீர்ப்பு குற்றமாகவும் மிக மோசமான செயலாகவும் கூட ஊடகங்கள் சித்திரிக்கின்றன. அதிலும் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சிகளையே வடபகுதித் தமிழர்கள் அதிகம் பார்க்கின்றார்கள். இந்தக் கற்பிதங்களுடன் பால்நிலை சார்ந்த புரிதல் அற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்து வருகின்றது.
அதேவேளை இலங்கையில் திருநர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களால் ஓரளவுக்கு அவர்கள் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தன்பாலீர்ப்பினர் குறித்த முன்னெடுப்புக்கள் அண்மைக்காலங்களில் எழுச்சி பெற்று வருவதனை அவதானிக்கலாம். இந்த வகையில் யாழ்ப்பாணத்தின் முதலாவது குயர் விழா கடந்த 2021 நவம்பர் 21- 30 வரை நடாத்தப்பட்டது. இலங்கையின் வடக்கில் பால்புதுமையினரின் நிலைப்பாட்டைச் சமூகத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக இவ் விழாவைப் பார்க்கலாம். இலங்கையில் குயர் மக்களுடைய உரிமைக் குரல்களை எழுப்பும் நடைப்பயணங்கள் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பில் இடம்பெற்றுவருகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த வருடமே(2022) குயர் மக்களுடைய நடைப்பயணங்கள் முதன் முதலில் இடம்பெற்றுள்ளன.
குயர் மக்களுடைய பெற்றோருக்கும் பாலினத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிசெய்தல் முக்கியமானதாகும். ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூகம் தாம் சார்ந்த விடுதலைக்காக குரல்கொடுப்பது அவசியம். இந்த விளிம்பு நிலை மனிதர்கள் தமது வலிகளில் இருந்து மீளெழுச்சி பெற வேண்டும். அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் தளங்கள் அவசியம். காதல் என்பது இனம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது எனின் பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே. தனிநபருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குயர் மக்களின் நிலைப்பாட்டைச் சமூகத்திற்குக் கொண்டுசெல்வது அவசியமானதாகும்.
தொடரும்.